வெள்ளி, 28 ஜூன், 2013

பேனாவை பின்னுக்கு தள்ளும் பென்சில்! :)

வாசித்துக் கொண்டிருக்கின்ற புத்தகத் தாளின் மூலையில், கூர்மையாக சீவிய பென்சிலால், இதுவரை அதிக அளவில் எழுதப்பட்ட என் பெயரை எத்தனையாவது முறையாகவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். முக்கிய வரிகள் என்று கருதுபவற்றை அடிக்கோடு இடுவது, அப்படியே ஓரங்களில் ஏதாவது சிறிய படங்களை மனம் போல வரைந்து கொண்டே இருப்பது, என்னையும் அறியாமல் அவ்வப்பொழுது நிகழும் செயல்.

முனை மழுங்கிய பென்சிலை ஷார்ப்னர் துணையுடன் கூர்மையாக்கி, மீண்டும் வாசிப்பைத் தொடரும் முன்னர், வழக்கம் போல வழி மறிக்கும் சிந்தனைகளில் ஒன்று பென்சிலில் வந்து நின்றது. பாதை மாறாமல் அதன் போக்கில் பயணித்ததில், அடிக்கோடிடப்பட்டவை கீழே உள்ளவை! :)

பள்ளியில், மூன்று, நான்காம் வகுப்புப் படிக்கும் காலங்களில், ஷார்ப்னர் என்பது மிக அரிதான பொருட்களில் ஒன்று, மேலும், அப்படிக் கிடைப்பவையும் கூட, ஒரு சில முறைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்கும்.

அன்றைய நாட்களில் வீட்டில் சவரம் செய்து ஒதுக்கப்பட்டிருக்கும் ப்ளேட்களில்(Blade)   ஒன்று உறையுடன்  டப்பாவில் எப்பொழுதும் இருக்கும்.  பெருவிரல், ஆட்காட்டி விரல்களுக்கிடையே ப்ளேடைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பிடித்துக் கொண்டிருக்கிற பென்சிலை, மரத்தூள்களை நீக்கி, உள்ளே இருக்கிற உக்கை கொண்டு வருவதென்பதை பெரிய சாதனையாகவே எண்ணி இருக்கிறேன்.

சிறிய அளவில் வெளியேறிய கருப்புக் குச்சியை,  தரையில் தலை கீழாய் வைத்து அதன் முனையை ப்ளேடின் துணையால், மிகக் கூர்மையாக்குவேன். பொதுவாக அந்த நேரங்களில், இரண்டு முறைக்கு ஒரு முறை சீவுகின்ற ஆள்காட்டி விரல் அல்லது பெருவிரலில் ஏற்படும் கீறல்களால் வெளியேறும் சில துளிகள் ரத்தத்தை, வீட்டில் வழங்கப்பட்ட ஆலோசனையின் பேரில் விரலை வாயில் வைத்து தடுத்து நிறுத்துவேன்.

வீட்டில் சாப்பிடும் பொழுது காயத்தில் படும் காரத்தால் எழுப்பும் உஸ்,உஸ் என்ற சத்தத்தை தடுப்பதற்காகவே, பள்ளிக் கிளம்பும் பொழுதே, அவர்களே பென்சிலை கூர்மையாக்கி கொடுத்து விடுவர். அது போக, முடிந்த அளவு, அதிகம் மழுங்கிய முனைகளை உடைய ப்ளேட்களை மட்டும் உபயோகிக்க சொல்வர். இதற்கு தேவைப்படும் அதிக அழுத்தத்தை கொடுத்து சீவும் பொழுது, உறுதியாக ரத்ததுளிகள் ஆர்வத்துடன் வந்து என்னை எட்டிப் பார்க்கும். :P




ஒரு கட்டத்தில், பென்சிலை இரண்டாக ஒடித்து, அதன், இரண்டு + இரண்டு நான்கு முனைகளையும் வீட்டிலேயே தாத்தாவின் மேற்பார்வையின் கீழே குடும்பமே, கூர்மையாக்கி டப்பாவிற்குள் வைத்து விடும்.
என் பாட்டியோ, இன்னும் ஒரு படி மேலே போய், 
' உக்கு இருக்கிற வரை எழுது, அம்புட்டு படிச்சா போதும்', என்று ஆலோசனை வழங்குவார்.


எனக்கோ, எப்பொழுது ஐந்தாவது போவோம், அங்கு போனால் பென்சில்க்கு பதில் பேனா. சீவும் தொல்லை எல்லாம் இருக்காதே என்ற எண்ணம். ஆனால் எந்நேரமும் விரல்களில் மையின் கறை படிந்திருக்க உதவி செய்யும் கசிந்து கொண்டே இருக்கும் பேனாவின் கழுத்து, சமயங்களில் மூடியின் ஓட்டையில் வழிந்து மொத்தப் பையையும், நீல வண்ணமாக்கும் அபாயம், எழுத திமிறும் நேரங்களில், மீண்டும் ப்ளேடை எடுத்து அதன் நிப்பின் மத்தியில் உள்ள பிளவில் அழுத்திக் கீறி, சரியான முறையில் மை இறங்க வழி செய்து கொடுப்பது, எழுதும் நேரத்தில் காலியாகும் மாணவர்களுக்கு பேனாவின் கழுத்தைத் திருகி மையை ஊற்றுவது, தேவைப்படும் பொழுது, இதே ரீதியில் கொடுத்தக் கடனைப் பெற்றுக்கொள்வது, நிப் உடையும் நேரங்களில் எல்லாம் மனதும் உடைந்து போனது, ஹீரோ பென் என்று வாங்கி, அதன் குறைந்த கொள்ளளவு மையை ஏற்ற, போராடியது..........  என்று பல வகைகளிலும் பென்சிலுடன் ஒப்பிடும் பொழுது, பேனா சற்று  பின் தங்கிவிடுகிறது.

இன்றும், என் கைப்பையில் ஒரு பென்சில் இருக்கும்.
பயணக்காலங்களில் தோன்றுபவற்றை, கேட்பவற்றை குறிப்பெடுக்க உதவும்.

எத்தனையோ வகைவகையான பேனாக்கள் இருந்தாலும், ஒரு பென்சிலின் இடத்தை அவற்றால் பறிக்க முடியவில்லை.

கருப்பு, சிவப்புக் கூட்டணியில் செங்குத்துக் கோடுகள் வரையப்பட்ட நடராஜ் பென்சில், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே விருப்பத்திற்குரிய பென்சில் ஆக இன்று வரை இருக்கிறது!

எழுதியதில் தவறானவற்றை அழிப்பது எளிது. தேவையற்ற தடயத்தை விட்டு செல்லாது என்பதாலும் கூட.........  பென்சில், விரல்களுக்கு கூடுதல் நேசமாகிப்போனது.


வெள்ளி, 21 ஜூன், 2013

கொசு

என்னை, எப்பொழுதும் புருவம் உயர்த்த வைக்கும் உயிரினங்களில் முக்கியமான ஒன்று கொசு. சிறு வயதில், பார்த்த கொசுவின் உருவம், மிக பரிதாபமாக இருக்கும், லேசாக தட்டினாலே, பொசுக்கென்று போய் விடும். சமீப காலமாக, உருவத்தையே மாற்றி அமைத்துக் கொண்டதோ என்று எண்ணும் அளவு, வலிமையான, திடகாத்திரமான கொசுவாக மாறிவிட்டது. ஓங்கி அடித்தால் தான், உயிரை விடும். இன்னொரு விஷயம், ஆரம்ப காலத்தில் கொசுக் கடி, தாங்கிக் கொள்ளக் கூடிய அளவு சாதாரண அளவிலேயே இருக்கும். ஆனால், இப்பொழுது கடிக்கும் கொசுக்களின் வலியை, ஒரு திட்டோ, முகச்சுழிப்போ இல்லாமல் தாங்கிக் கொள்வது என்பது நம்ப முடியாத செயலாகவே இருக்கிறது.

நாங்களும் கொசுவை ஒழிக்கிறோம் என்று, வரும் மாநகராட்சி வண்டி கசிய விடும், மண்ணெண்ணெய் நெடிக் கலந்தப் புகைக்கு, மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டும் தங்கள் இன்னுயிரை இழந்து, பெரும்பான்மையானவை பாதுகாப்பான, இடங்களுக்கு சென்று திரும்புமோ என்று யோசிக்க வைக்கும் அளவு, சிறிது நேரத்திலேயே தங்கள் பணிகளை சீரிய முறையில் செய்ய ஆரம்பிக்கும். எந்த, கொசுவர்த்தி சுருளோ, திரவமோ, எதுவும் வால் ஆட்ட முடியாது. என்ன, இந்த கொசு மட்டை வைத்து, ஆத்திரம் தீர, எத்தனை நூறு கொசுக்களை நீங்கள், நிமிடக்கணக்கில் கொன்றாலும், அதனை விட, பல மடங்கு அதனின் இனம், பறந்து வந்து, அதற்கான உணவுத் தேவையை தீர்த்துக் கொண்டே தான் இருக்கும். இவ்வளவு ஏன், கொளுத்தும் வெயிலிலும், தன் நுண்ணிய உடலை மிகப் பாதுகாப்பாக வைத்து, மெலிதாக இனப்பெருக்கம் செய்து, இதோ, காற்றடிக்கும் காலத்தில் மெது மெதுவாக விட்ட வேலைகளை தொடர ஆரம்பித்து விட்டன.

ஒளிந்து கொள்ள முடியாத அளவு, நாம் மரம் செடி கொடிகளை நாசப்படுத்தினாலும், சுற்றிலும் தண்ணீர் வாசம் இல்லாத அளவு, கட்டாந்தரையாக  இருந்தாலும், நாம், கண்டுபிடிக்க முடியாத அளவு, தனக்கான இடத்தை தேர்வு செய்யும் திறமைசாலி. நெருக்கமாக உற்று நோக்க வேண்டும் என்ற ஆவலில், வலது புறங்கையின் மேல் அமர்ந்த கொசுவை கவனிக்க ஆரம்பித்தேன். மெதுவாக தோலின் மேற்பரப்பில் வலிக்காமல் உள்ளே நுழைய, நுழைய அதன் கை(!?) , (அதன் சாமர்த்தியத்தை ரசித்துக் கொண்டிருந்த பொழுதே), மெது மெதுவாக  குறைந்து, முழு கையும் மறைந்தது. வெடுக்கென்று உள்ளே ஒன்று பிடுங்கி எறியப்பட்டது போன்ற வலியை தாங்க முடியாமல், கையை ஓங்கி அடிக்கும்  பொழுது, அடடா, என்ன இருந்தாலும், இது என் ரத்தத்தின் ரத்தமல்லவா என்று, கையை உதறினேன். நொடிகளில் மாயமானது அது. மறைந்த கொசு, எப்பொழுது தாக்கும், தன் படைகளையும் அழைத்து வரும் என்று திக் திக் என்று பரபரப்பாக இருக்க வைக்கும்.

எனக்கு ஒரு யோசனை, ஏன் கொசுப்படை என்ற ஒன்றை அரசு ஆரம்பிக்கக் கூடாது? :P

இந்த வெயிலையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழும், கொசு, கடும் பனியிலும் போராடும் என்றே தோன்றுகிறது. :P

செவ்வாய், 18 ஜூன், 2013

எழுத்து!

நம் எழுத்து, மொழி, சிந்தனை எல்லாமே முன்னோர்களிடம் இருந்து வழி வழியாக வந்து தற்பொழுது மேம்பட்ட நிலையில் இருப்பவை. அவற்றிலிருந்து வார்த்தைகளை, சிந்தனைகளை சற்று மாற்றி  உபயோகிப்பவர்களே நாம்.

மனதை ஆள்வதை விட எழுத்தை ஆள்வது எளிமையானது. :)

வாசிக்கும், எழுதும், அனைவரையுமே இணைக்கும் பாலமாக (சமூக வலைதளங்களில்) எழுத்து உள்ளது .

எல்லா எழுத்துக்களுக்குமே  வர்ணம் பூசுகிறவர்கள்,
வர்ணத்திற்கு அப்பால் சிந்திக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்!

இதில், பாராட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்படும் எழுத்து தனி ரகம் .

ஒவ்வொருவரின் அனுபவத்துடன், அவர் கற்ற அறிவு, பதிவுகளில் மிளிர்கிறது.

எழுதுவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய ஒன்றே. சோம்பேறித்தனத்தின் தலையில் நறுக்கென்று  நாலு கொட்டு வைத்து விட்டு, உள்ளத்தில் உள்ளதை விசைப்பலகையின் மூலமாக இறக்கி, திரையில் தோன்றுவதைப் பார்க்கும் பொழுது, நம் மனசாட்சி உயிர் பெற்றது போல இருக்கும்.

எழுத்து, தொடர் பயிற்சியின் மூலம் செம்மைப்படும்.

ஒருவரின் எழுத்தை வாசிக்கும் பொழுது, கடந்து செல்லும் பாதையின் ஓரத்து செடியில் உள்ள தலையை ஆட்டும் பூ, சில நொடிகள் நம் மனதில் அமர்வதைப் போல உணர்வு வந்தாலே அந்த எழுத்து வெற்றி பெற்ற ஒன்றாகிறது.

போதிக்கின்ற எழுத்துக்களை விட மகிழ்ச்சியைத் தரக்கூடிய, கனமில்லாத, எளிமையான எழுத்துக்களையே இங்கு விரும்பி வாசிக்கின்றோம். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே போதனையையும், ஜனரஞ்சகமாக தரத் தெரிகிறது.

பெரிய அளவில், நீண்ட கால மாற்றத்தை, வெறும் எழுத்து மட்டுமே கொண்டு வந்து விடாது, என்பது என் தனிப்பட்ட கருத்து.

எதையும் சீர் செய்ய முனைவதை விட, பகிர்தலும், இறக்கி வைத்தலுமே அதிகம் இருக்கிறது எழுத்துகளில்.

ஒரு நண்பனிடம் பகிர்வதை விடவும், எழுத்தில் இறக்கி வைத்தலில் சோகம், பாதியாவதும், இன்பம் இரட்டிப்பாவதும் இயல்பாய் நடக்கிறது, குறிப்பாக வேறு எந்த பக்க விளைவுகளுமின்றி...  :)

ஒரு சிலர், எப்பொழுதாவது எனக்காக எழுதியது போல உள்ளது, ஆறுதலாக உள்ளது என்று செல்லும் பொழுது, அட, இந்த மாதிரி கூடுதல் வேலைகளை எல்லாம் எழுத்து செய்யுமா என்று ஆனந்தப் பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து வாசிக்கின்ற ஒவ்வொரு எழுத்திலும் தெரிவது அவர்களின் அகம்.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி எழுதுவது என்பது கடினமே.
மேலும், அப்படி ஒருத்தர், உலகத்திலே இல்லை, இருக்கவும் முடியாது. :P
ஆதலால், நேரம் ஒதுக்கி, உற்சாகமாக எழுதத் துவங்குங்கள்!  :)

செவ்வாய், 11 ஜூன், 2013

காயமும், மருந்தும்...

நினைவுப் பரப்பில், கடந்து வந்த இன்பம், துன்பம் யாவுமே பெரிய வேறுபாடு எதுவுமின்றி அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன சிறிய அடிக்குறிப்புகளோடு.......  இப்போது நம்முடன் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தம், அவஸ்தை என புத்தியில் பொதிந்திருப்பதெல்லாம் நாளை ஒரு சிறிய குறிப்போடு முடிந்து போக கூடியவைகளே.

இந்தக் கணத்தை இந்த நிமிடத்தை நாம் எதிர்கொள்வதாலேயே அளவில் சிறிய காயம் கூட காலத்தால் மிகப் பெரிய வலியைத் தருகிறது. இயற்கையாகவே  ஏற்கனவே இருக்கின்ற காயத்தின் வீரியத்தை குறைக்கும் திறன், புதிதாக வந்த மற்றொரு காயத்திற்கு உண்டு. காயங்களின் அளவுகள் வேறுபட்டதாக இருப்பினும் அவைகள் பண்பிலும் தன்மையிலும் ஒன்று போலவே உள்ளன.  அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை எல்லாம் கடந்த காலத்துக்கு மாற்ற முடிந்தால், எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணுவது போய் சேர இயலாத ஊருக்கான வழியாய் இருந்தாலும், குறுக்குத்தனமாக இப்படி யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை.

மாற்றம் என்று எதையும் செய்ய முடியாத, கடந்த கணம், எத்தகைய கனமானதாய் இருந்தாலும், எப்படியோ எதிர்கொண்டோம்   என்ற உணர்வு இருக்கிறது. அதை மகிழ்ச்சியாய்க் கடந்த நிமிடத்தை அலை வந்து கால் நனைக்கும் சிலிர்ப்பாகவே ரசிக்கிறோம்.  அதே நேரம் துயரத்தின்  பொழுதுகளில், உச்சி வெயிலில் தார் சாலையில் வெறும் கால்களால் நிற்பது போலான இம்சையை அனுபவிக்கிறோம். 

தேய தேய ஓட விட்டு பார்க்கும் கடந்தகாலத்தில், என்றோ மகிழ்ச்சி தந்த ஒன்றே நம்மை துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வுகளே அதிக நேரம், நிகழ் காலத்தை ஆக்கிரமிக்கின்றன. அதே நேரத்தில் சம்பந்தமில்லாதவர்களால் பட்ட வேதனைகளை, விரைவில் மறந்து போகிறோம்...

பெரும்பாலும்,  நம் காயத்தை ஆற்றும் முனைப்பில்,
நாம் உண்டாக்கிய காயங்களை, உணர இயலாத பரபரப்பில் இருக்கிறோம் என்பதை அடிக்கோடிட்டே சொல்ல வேண்டும்.

ஹ்ம்ம்...

ஒவ்வொரு காயமும் உருவாகும் பொழுதே, அதற்கான மருந்தும் தயாராகிவிடுகிறது.

சரி செய்பவர் என்று எண்ணிய மருத்துவர் பெரும்பாலும் கைவிட்டாலும், எத்தகைய கொடூரமான குணமுடையவர்களாக இருந்தாலும், அவர்களையும் மீட்க, நீளுகின்ற ஓரிரு கைகள் எப்பொழுதும் இருக்கின்றன.

குதறிய புண், குணமாகி ஒரு வடுவை விட்டு செல்லும்  வரையான காலத்தை, சுற்றி இருப்பவர்களை பொறுத்து, ஊர்ந்தோ, நடந்தோ, ஓடியோ, பறந்தோ கடக்கிறோம்.

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்... ஏதோ ஒரு கால கட்டத்தில் எல்லா ரணமும் ஆறி விடுகின்றன.

சமயங்களில், அறிமுகமே இல்லாமல் இருந்தும், வாடிய மனதிற்கு நீர் தெளித்து செல்லும் நல்லவர்களாலும் நிறைந்தது தான் இந்த உலகம்.

எனக்கு நான் சொல்லிக்கொள்வது, மருந்தாக இல்லாவிட்டாலும், யாரையும் காயமாக்காமல் இருப்பதற்காகவாவது முயற்சிக்க வேண்டும்.