வெள்ளி, 25 அக்டோபர், 2013

நமக்கு சரின்னு பட்டா சரி தான்!


வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பலசரக்குக் கடைக்கு தோழியுடன் நடந்து சென்றேன். அவள் கடையின் உள்ளே சாமான்களை வாங்கிக்கொண்டு இருந்தாள். அந்த சாலையின் அருகிலேயே இடது ஓரத்தில் ஒரு கரும்பு சாறு கடை இருந்தது. கரும்புகளை இரண்டாக, மூன்றாக ஒடித்து, அதன் உள்ளேயே இஞ்சி, எலுமிச்சைத் துண்டுகளை வைத்து சாறு பிழியும் இயந்திரத்தின் உள்ளே கொடுத்து விட்டு, வலது புறம் சுழற்றுவதற்காக இருந்த கைப்பிடியை அழுத்திப் பிடித்து சுற்ற சுற்ற, சாறு முதலில் ஐஸ் கட்டிகள் சிதறிக் கிடந்த ஒரு தட்டில் வந்து விழுந்து, அதன் பின்னர் ஒரு குடுவையில் சேகரமானது. மீண்டும், மீண்டும் உருளை வடிவ சக்கரங்களுக்கு இடையே கரும்பைக்கொடுத்து, ஒரு துளி கூட வீணாகி விடக்கூடாது என்ற நோக்கில் கர்ம சிரத்தையாக பிழிந்து எடுத்தப் பின், வடி கட்டியில் வடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, எதிரில் நின்று இருந்த இரு பெண்களுக்கும் கொடுத்தார் கடைக்காரர்.

மழைக்காலம், ஆனாலும், குடிக்க வேண்டும் என்ற உந்துதல், உள்ளே இருக்கும் தோழியோ இதெல்லாம் விரும்ப மாட்டாள்.  'எனக்கு ஒரு கரும்புச்சாறு ஐஸ் இல்லாம கொடுங்க',  என்று சொன்னதும், தட்டில் இருந்த ஐஸ் கட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் பிழிந்து நேரடியாக டம்ளரில் விழும்படி செய்து, வேறொரு டம்ளரில் வடிகட்டிக் கொடுத்தார். திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவை யோசித்துக்கொண்டே, கேட்ட காசைக் கொடுத்தேன்.


அங்கிருந்து  நகர எத்தனிக்கையில், வாழை இலையின் மேல் ஓரிரு உதிரிப் பூக்கள் சிதறிக் கிடக்கும் மூங்கில் கூடையை இடுப்பில் சுமந்து கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி தத்தளிக்கும் கண்ணீருடன் என் முன் வந்து நின்றார். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற பொழுதே, ' பூவெல்லாம் வித்த காசு சுருக்குப் பையில இருந்துச்சு, பஸ் ஏறுறதுக்காக நின்னுகிட்டு இருக்கிறப்போ தான் பார்க்கிறேன், சுருக்குப் பையைக் காணோம், இப்ப வீட்டுக்கு போவனும், காசு வேணும்' என்றார். முற்றிலும் வெண்மைக்கு மாறி இருந்த தலை முடியை இழுத்து உச்சியில் கொண்டை போட்டு இருந்தார். பெயரளவில் கூட எந்த ஒரு அணிகலனும் அணிந்திருக்கவில்லை. ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்பட்ட சேலைகளில் ஒன்றை சுற்றி, அதற்கு சற்றும் பொருத்தமில்லாத சட்டையுடன் இருந்தார். மனதிற்கு சரி என்று படாவிட்டால், ஐந்து பைசா கூட எடுத்துக்கொடுக்கும் பழக்கமில்லை. பெரிதாக இழந்த துக்கம் மட்டுமே கண்கள் உட்பட அந்தப் பெண்ணின் முழு முகத்திலும் அப்பி இருந்தது. கைப்பையின் ஜிப்பைத் திறந்து கொஞ்சம் கூடுதலான பணத்தைஎடுத்து, அவரின் கைகளில் கொடுத்தேன். பதிலுக்கு எதுவுமே சொல்லாமல் அப்படியே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே, இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அருகில் இருந்த பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பி இருந்த என் தோழி,
' பூவெல்லாம் வாங்குற போல, அதான் மழை பெய்யுது', என்றவாறே பூவாசம் கூட இல்லாத என் கைப்பையை பார்த்து விட்டு,
'கையில பூவைக் காணோம், பூக்கார அம்மா கிட்ட பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு,' என்றாள். அவள் கையில் இருந்த இரண்டு பைகளில் எடை குறைவான பையாக தேர்ந்தெடுத்து, வலது கையின் விரல்களுக்கு கொடுத்து விட்டு, நடந்து கொண்டே, விவரத்தை சுருக்கமாக கூறினேன்.



'அதெப்படி நம்பி பணம் எடுத்துக் கொடுத்த? ஏமாத்தி இருக்கவும் வாய்ப்பிருக்கு ', என்றாள்.

'ம்ம்........ அந்தப் பார்வை உள்ளே எதோ செஞ்சது......... அப்படியே ஏமாத்தி இருந்தாலும், அது அந்த அம்மாவோட தேர்ந்த நடிப்புக்கான பரிசா இருந்திட்டு போகட்டும்', என்றேன்.

அதற்கு பிறகு எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.



திங்கள், 14 அக்டோபர், 2013

1 1/4 மணி நேரப்பயணம்!

நேற்று காலை ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் செல்லவேண்டி இருந்தது. பண்டிக்கைக்காலமாக இருப்பதால், நிரம்பி வழியும் பஸ், ரயிலில் பயணிக்க மலைப்பாக இருந்தது. 55 கிலோமீட்டர் தூரம். விரும்பியே இரு சக்கர வாகனத்தை கிளப்பினேன். வாங்கிக் கொள்ளவேண்டிய சில பொருட்களை பெரியார் பேருந்து நிலையம் அருகிலேயே வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்த பொழுது மணி காலை பத்து. என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அதிகாலை ஆறுமணிக்கே உரிய வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும் வழி எங்கும் நிரப்பி இருந்தது. திருப்பரங்குன்றம் அருகில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, மிதமான வேகத்தில் தொடர்ந்தேன்.

திருநகர் தாண்டியபின், வீடுகள், கடைகளின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே செல்லும். பின், திருமங்கலத்தில் மட்டும் நெருக்கமாக இருக்கும்.

இந்த டோல் கேட் ஐ, பாராட்டியே ஆகணும். கப்பம் எல்லாம் கட்டாமலேயே, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கின்றன. (இந்த பயம் இருக்கட்டும்!  :P )

நான்கு வழிச்சாலையில், நடுவில் வம்படியாக நட்டு வைக்கப்பட்டதில் ஆங்காங்கே பூத்திருந்த அரளிப் பூக்களை விட, வழியில் எருக்கம் பூக்களும், ஆவாரம் பூக்களும் கண்களுக்கு இதம் அளித்தன.


விருதுநகர் நோக்கி செல்லும் சாலையின் ஓரங்களில் ஆரம்பத்தில் இருபுறங்களிலும் மரங்களும் அதன் பிறகு வெட்ட வெளியுமாக தொடர்ந்து சென்றது பாதை. அபூர்வமாக பசுமை தொடர்ச்சியாக கண்ணை நிறைக்க, மற்றபடி காலி இடமுமாக இருந்தது. சீமைக்கருவேல மரங்கள் தான் அதிகமாக தட்டுப்பட்டன.


மின்சாரத்தை எடுத்து செல்லும் உயர் மின் அழுத்த கோபுரங்கள், தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ராட்சத பொம்மைகள் இடுப்பில் கைகளை  வைத்தபடி இருப்பது போல தெரிந்தன. 
 

நீண்டு கொண்டே செல்லும் சாலையின் எதிரே நோக்கினால், முடிவாக வானம் உள்ளது போல தெரிந்தது. அதிக வெள்ளை நிறத்தில் குறைவான நீலம் கலந்து வேக வேகமாக அடிக்கப்பட்ட வண்ணப்படத்தை விட, வலது புறத்தில் நீலம் அதிகமாக, வெள்ளை குறைவாகவும் தெரிந்த வானம் வசீகரித்தது.

நான்கு வழிச்சாலைகளின் ஓரத்தில் இரண்டரை அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோட்டிற்குள் வண்டியை நிதானமான வேகத்தில், முந்தி செல்லக்கூட யாருமில்லாமல், ஆக்சிலேட்டரை மாற்றாமல், பிரேக் பிடிக்க வேண்டிய அவசியமுமின்றி, தொடர்ச்சியாக சற்று பலமாக உடலின் பல பாகங்களின் வழியாகவும் பேசிக்கொண்டிருந்த காற்றுடன் மட்டும் பயணிப்பது சுகானுபவம்.

சில இடங்களில் கோட்டின் மேலேயே எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடிகிறது என்று சென்று பார்த்து, அப்படி செல்ல முடிந்த தூரத்தை முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கி மகிழ்வது என்று சிறு சிறு விளையாட்டுடன் தொடர்ந்தது பயணம்.


மனிதர்கள் தான் குறைந்து போனார்கள் என்று, ஒவ்வொரு ஊரின் உள்ளே நுழைகையிலும், வெளியேறுகையிலும் வரவேற்று, நன்றி சொல்லி வழி அனுப்பும் பலகைகள், ஊரின் எல்லையை அறிந்து கொள்ள உதவுவதற்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். :)


விரும்பிய நேரங்களில் சர்வீஸ் ரோட் ஐ பயன்படுத்தியும், மற்றபடி இரண்டரை அடி சாலையிலும் தொடர்ந்தது பயணம்.
சரியாக ஒன்னேகால் மணி நேரத்தில், விருதுநகர் உள்ளே நுழைந்தாயிற்று!  

மிகக் குறைவான வாகனங்கள் பயணிக்கும் நேரத்தில், விரைந்து செல்லும் வாகனங்களை கொஞ்சம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டே, மனம் போல ஓட்டிச் செல்ல ஒரு வாகனத்தில் ரசித்து பயணிக்கையில் கிடைக்கும் புத்துணர்விற்கான ஆயுள் சற்று கூடுதல்! :)




செவ்வாய், 8 அக்டோபர், 2013

மாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று!



பொதுவாக அதிக ரசாயனம் கலந்த சோப்புக்கட்டி பயன் படுத்தும் பொழுது, தோலின் வெளிப்புறத்தில், வெடிப்புகள் ஏற்படும் நிரந்தரப் பிரச்சனையை வைத்துக் கொண்டடே, அவசரம் என்று கையில் கிடைத்த சோப்பினைப் பயன்படுத்தி ஓரிரு துணிகளைத் துவைத்தேன். சிறிது நேரத்தில் வலது கை விரல்களின் இடுக்குகளிலும், மோதிர விரல் மற்றும் நடு விரல்களிலும் சின்ன சின்ன வெடிப்புகள் தோன்றின. விரல்களை எளிதாக மடக்கவோ, விரிக்கவோ முடியவில்லை. இலேசாக நீர் வேறு கசிந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பொறுத்துக் கொள்ளக் கூடிய வலி தான் என்றாலும், சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை ஒரு அளவுக்கு தான், உடன் குப்பை கொட்டுபவருக்கு பகிர்ந்து அளிக்க முடியும். நேற்று முன்தினம் எனக்கு சமைத்து அளிக்கப்பட்ட உணவு, அன்று மாலையே மருத்துவரை நோக்கி ஓட வைத்தது. ( பின்னர் தான் தெரிந்து கொண்டேன், மருத்துவமனைக்கு செல்ல வைப்பதற்காகவே குடும்பமே சேர்ந்து செய்த தந்திரம் என்று)


அப்படி என்ன ஆஸ்பத்திரி பிடிக்காமல் போனது என்றால்......எத்தனை நவீன வசதி செய்யப்பட்டு இருந்தாலும்,  அறைகளில், ஏதோ ஒரு வாசனை சுற்றி சுற்றி வந்து இம்சிப்பதாலேயே, கூடிய வரையில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடுவேன். அதிலும், ஊசி, கூட பரவாயில்லை,  பிடித்த பல வண்ணங்களில் இருந்தாலும், இந்த மாத்திரையை விழுங்குவது எளிது தான், ஆனால் குறைந்தது, இரண்டு நாட்களாவது தேவையே இல்லாமல் ஒரு கசப்பு சுவையுடன், தடித்துப் போனது போல இருக்கும் நாக்கை எப்பொழுதும் பிடிப்பதில்லை. எதற்காக மாத்திரை சாப்பிடுகிறோமோ அந்த வலி மறைந்தாலும், பாடாய்ப்படுத்தும் வாய்க்காகவே மாத்திரை சாப்பிடாமல் வலியைப் பொறுத்துக் கொள்வேன்.
ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு, துணிச்சலைத் திரட்டி கிளம்பினேன்.
ஞாயிற்றுக் கிழமையில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்த எளிய ஒரு மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு தோல் சிகிச்சை மருத்துவரை சந்திக்க வந்தாயிற்று. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்று இருந்தேன் அங்கு. நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. ஒரே மாதிரி வண்ணமயமான சீருடை அணிந்தப் பெண்களில், சிலர், வரிசையாக இருந்த கணினிகளின் முன்னால் அமர்ந்தவாறே, என்னைப்பற்றிய விவரங்களை ஒருத்தி பதிவு செய்ய, இன்னொருத்தி,'ஸ்பெஷல் ஆ, ஆர்டினரி யா', என்று கேட்டாள். 'என்ன வித்யாசம்', என்றேன். 'ஸ்பெஷல் ன்னா , கன்சல்டிங் பீஸ் 250 ரூபாய் ஒரு மணி நேரத்தில டாக்டரை பாக்கலாம் . ஆர்டினரி ன்னா, 100 ரூபாய் கட்டணத்தில் மருத்துவரை பாக்க மூணு மணி நேரம் கூட ஆகும் ', என்றார். இடத்தை விட்டு கிளம்புவதே முதன்மை நோக்கமாக இருந்ததால், 250 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். 'ரொம்பதான், நம்ம ஊரு முன்னேறிடுச்சு', என்று மனதுக்குள் நினைத்தவாறே, மருத்துவரை சந்திப்பதற்காக காத்திருப்போருக்கு மத்தியில் அமர்ந்தேன்.

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் முன்னால், சற்றே உயரத்தில் முன்பு பாட்டாக பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் திரையில், ரயில்வே ஜங்கஷனில் பார்ப்பது போல, நோயாளிகளை  இரண்டு குழுக்களாகப் பிரித்து எண்களின் வரிசை இருந்தது. முதல் வரிசையில் இருந்தது எனது பெயர். அதன் பிரகாரம்,  நான் மூன்றாவதாக உள்ளே செல்ல வேண்டும். பக்கத்தில் உள்ள வரிசையில் வெறும் பத்து பேர்கள் தான் இருந்தனர். அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும், புதிதாக ஆட்கள் வரவர பத்து இருபதாகலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சீருடையில் இருந்தவர்களில் ஒருவர், என்னை அழைத்து எடையையும், இரத்த அழுத்தத்தையும் சோதித்து குறித்துக் கொண்டார் ... எடை தான் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்குமே தவிர, இந்த BP எப்பொழுதும் 110/80...
கடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. கோபப்படுவதற்கும் இரத்தஅழுத்தத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது என் அனுபவம்....

பத்து நிமிடங்களில், பெயரை சொல்லி அழைத்ததும் உள்ளே சென்றேன். இருக்கையில் அமர்ந்ததும் ஒரு பெரிய, பளிச் வெள்ளை விளக்கிற்குப் பின்னால் கொஞ்சம் டல்லாக தெரிந்த மருத்துவரிடம், வரிசையாக நடந்ததை எல்லாம் சொன்னேன். விரல்களைப் பார்த்தார். அப்போ, 'அந்த சோப் தான் எல்லாத்துக்கும் காரணம்', என்றார். (அந்த நேரத்தில் சோப்பை எதுவுமே செய்ய முடியாத என் மனநிலையை கஷடப்பட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன் ) ' நீங்க இனி ரெண்டு வாரத்துக்கு கெமிக்கல் கலந்ததை யூஸ் பண்ணாதீங்க' என்றாவாறே யோசித்து சில மருந்து வகைகளின் பெயரை சொல்ல சொல்ல, குறித்துக் கொண்டே வந்தார் ஒரு நர்ஸ். காலமெல்லாம் நான் அப்படி தான் இருந்துவருவதாக கூறியவாறே எழுந்த என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவரிடம், ' தேங்க் யூ டாக்டர்', என்றவாறே நகர்ந்தேன். 




















வெளியே வந்து மருந்துக் கடையில் கேட்டால், ப்ரிஸ்க்ரிப்சன் சீட்டில் இரண்டு வாரத்திற்கு மாத்திரைகள் எழுதப்பட்டு உள்ளன என்றனர். ஒரு வாரத்திற்கு தேவையானதை மட்டும்  தரும்படி கேட்டு வாங்கிய பின், பார்த்தால், அதுவே 300ரூபாயைத் தாண்டி இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு, இரண்டு மாத்திரைகளை விழுங்கியதும், மின்னல் வேகத்தில் ஒட்டிக்கொண்டது கசப்பு. தூக்கம் கண்களை அழுத்த, மீதி மாத்திரைகளைப் பார்த்தேன். பைசா போனாலும், பரவாயில்லை என்று தள்ளி வைக்க இது வரை என்னால் முடிந்த ஒன்றே ஒன்று இந்த மாத்திரைகள். நாளைக்கு என்னை விட்டு போயிடனும் என்று அவற்றிடம் பேசிவிட்டு, கொடுத்த ஆயின்மெண்ட் ஐ விரல்களில் தடவியவாறே, தூங்கி விட்டேன். நேற்று காலையில் வெடிப்புகள் ஓரளவு மறைந்து இருந்தன, தொடர்ந்து ஆயின்மெண்ட் மட்டும் தடவி வர, மாலையில் முற்றிலும் காணாமல் போய் பழையபடி விரல்களை எளிதில் விரிக்க மடக்க முடிந்தது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்ட மாத்திரைக் கசப்போ, சற்று முன் தான் வெளியேறியது. இப்போ... நலம்! :)