ஞாயிறு, 14 ஜூன், 2015

பல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்

நேற்று மாலைப் பொழுதில், ஊஞ்சலில் அமர்ந்தபடி பார்த்த வானம் இருட்டவே, பார்வை, சீலிங்கிற்கு சென்றது. மேலே பொருத்தியிருந்த விளக்கிற்கு அருகே மிளகு அளவிலான பூச்சிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அவை எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் அந்த சீலிங்கில் தலை கீழாய் அமர்ந்திருப்பதால் அவற்றிற்கு ஏதோ சுகம் கிடைத்திருக்கலாம் என மட்டும் யூகிக்க முடிகிறது. மெதுவாக பதுங்கியபடி வந்த மூன்று பல்லிகள், வேக வேகமாக பூச்சிகளை விழுங்க ஆரம்பித்தன. நொடிக்கும் குறைவான நேரத்தில் தலையை உயர்த்தி ஒவ்வொரு பூச்சியையும் தின்றன. பூச்சிகளை எப்படி விரட்டலாம் என யோசனை ஒரு புறம், இன்னொரு புறம் பல்லிகளின் ஆகாரம் வேறென்ன என சிந்திக்கையிலேயே பாதி பூச்சிகளின் ஆயுள் முடிந்திருந்தது. சும்மாவாவது பறந்து பறந்து இடம் மாற்றிக் கொண்டிருந்த பூச்சிகள், தப்பிக்க எந்த ஒரு எத்தனமும் இன்றி பல்லியிடம் தங்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது போல பரிதாபமாக இருந்தது அக்காட்சி. அடுத்த சில நிமிடங்களில் பூச்சிகள் இருந்த சுவடே இல்லை. 


இன்று உள் அறையில் கதவை ஒட்டி இருந்த சுவரில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சில எறும்புகள் ஏதோ பூச்சியை உணவாக சுமந்து செல்ல, வரிசையின் முன்னேயும், பின்னேயும் பாதுகாப்பாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. ஓரடித் தொலைவிலிருந்து பார்த்த பல்லி ஒன்று மிக மெதுவாக நகர்ந்து வந்தது. ஒரு சில சென்டிமீட்டர் இடைவெளியில் தன் உடலை எக்கி, கண்களால் இரையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பூச்சியை பறித்து செல்ல முயற்சித்து தோற்று, ஓரடி பின் வாங்கி சென்று மீண்டும் பார்த்தது. எறும்பு கடித்ததோ என்னவோ தெரியவில்லை. வரிசையிலிருந்து பிரிந்த சில எறும்புகள், இரண்டு பக்கங்களிலும் சில சென்டிமீட்டர் தூரம் ஊர்ந்தது பல்லியைத் தேடியா எனத் தெரியவில்லை. சில நிமிடங்களில் அவற்றின் இரையைப் பாதுகாத்தபடி மறைந்து போனது அந்த எறும்புக் கூட்டம். 
# ஏதேதோ சிந்தனையைக் கிளறியபடி இருக்கின்றன இவ்விரு காட்சிகளும்.

வியாழன், 4 ஜூன், 2015

கடல்ல்ல்...

அருவி, குளம், ஏரி என நீர்நிலைகள் அனைத்துமே ஈர்க்கும் இயல்புடையன. குறிப்பாக கொட்டும் அருவியில், நேரம் போவதே தெரியாமல் நிற்கையில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையில்லை. ஆனால், இந்த கடல் ஏனோ என்  மனதிற்கு அத்தனை நெருக்கமாக இருந்தது  இல்லை. இன்னும் தெளிவாக சொன்னால், ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தோம். சுற்றுலாவில் உடன் வந்தவர்களிடம் இருந்து விடுபட்டு, மிக வேகமாக நான் மட்டும் கடலை நோக்கி  முன்னோக்கி சென்றேன்.வெளிறிய நீலவானத்தை ஒட்டி இருந்த பிரம்மாண்டமான கடல், அலையோசையுடன் வரவேற்று கொண்டிருந்தது. சந்தோஷத்துடன் தொற்றிக்கொண்ட ஆர்வம் வேகமாக கடலை நோக்கி ஓட செய்தது. பக்கத்தில் செல்ல செல்ல, வெளிறிய நீலத்தில் இருந்த கடலின் இரைச்சல்  மனதை என்னவோ செய்தது. சற்று தொலைவில் கரையை ஒட்டியபடி சிலர் கடலில் விளையாடிக் கொண்டிருக்க, நான் சென்ற பகுதியில் கிட்டத்தட்ட எவருமே இல்லை. உடன் வந்தவர்கள் மிகத் தொலைவில் பின்னால்  வந்து கொண்டிருந்தனர். ஏதோ ஒரு வேகத்தில், ஓடி வந்து கொண்டிருந்த அலைகளில் கால் நனைத்தபடி, ஒரே வண்ணத்திலிருந்த வானையும், கடலையும் உற்று பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், வேகமாக பின்னோக்கியவாறே  மணலில் ஏறினேன். எல்லையில்லாமல் நீண்டிருந்த அதன் விரிந்த பரப்பு, சொல்லவியலாத பயத்தை ஏற்படுத்தியது. என்னை உள் இழுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், சட்டென கடல் திகிலூட்டியது போல உணர்ந்தேன். அன்றிலிருந்து கடலும், கடற்கரையும் மனதிலிருந்து தூரம் போயின. இத்தனை வருடங்களில் சில கடற்கரைகளில் அமர்ந்திருந்தாலும் உடன் சிலர் இருக்கும் போது மட்டும் அலைகளில் பெயருக்கு காலை நனைப்பேன். மிக குறைவான நொடிகளில் கடலின் மீதுள்ள பார்வையைத் திருப்பும்படியும் பார்த்துக் கொண்டுள்ளேன். இதுதான் காரணம் என்று தெரியாமல் இன்றுவரை விலகி, தூர நின்று, குறைவான நேரத்தில் மட்டுமே இருக்க விரும்பும், கடல் மீதான எனது பார்வை, இனி மாறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!