வெள்ளி, 29 டிசம்பர், 2017

2017

2017... எழுத்து மட்டுமல்ல, நட்பு வட்டத்தில் பேச்சும் கூட மிகக் குறைந்து போனது. மறுபுறம் புத்தகங்களைப் போலவே மனிதர்களைப் பற்றிய வாசிப்பும் கூடுதலானது.
இந்த வருட சுதந்திரதின விழாவில், நெஸ்ட் மழலையர் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்வில் முதன்முறையாகக் கொடியேற்றியது தித்திப்பான அனுபவம். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி மெல்லியக் கூச்சத்துடன் புன்னகைத்தேன் .
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் சிறுநீரகப் பிரச்சனையால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அம்மாவுடன் பத்து நாட்கள் இருந்ததை, இந்த வருடத்தின் உருப்படியான செயல்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்.
அதே மாத இறுதியில், மலேஷியா, சிங்கப்பூர் சுற்றுலா. கிளம்புவதற்கு சில நாட்கள் முன் சைனஸ் தொந்தரவிற்காக எடுத்துக் கொண்ட மருந்து கிளம்பும் நாளின் காலையிலிருந்து மூக்கின் வழியாக நீராக வெளியேறத் துவங்கியது. மாலை ஏர்போர்ட்டில் சளியை நிறுத்துவதற்காக மாத்திரையை விழுங்கிப், போர்த்திக் கொண்டு விமானத்தில் ஏறியாகி விட்டது. மூன்றரை மணி நேரப் பயணம். உள்ளே கடும் குளிரால் நடுங்கிக் கொண்டே, நாவறட்சியால் அவ்வப்போது குடித்த குடிநீரை விட, வெளியேறிய நீர் இரண்டு மடங்கானது. ஒரு கட்டத்தில் ஓய்வறைக்கு சென்று திரும்பிய என்னால் நிற்க முடியாமல் சரிய, பதறி ஓடி வந்த விமானப் பணிப்பெண்கள் முதலுதவி செய்தனர். வானத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் தனியாகப் போகப் போகிறோம் என்றெல்லாம் அந்த கணத்தில் தோன்றியது. உடனடியாகக் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் விரைவில் சுய உணர்வு வந்தது. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குப் போறது வாஸ்தவம் தான். இதுக்காக நாமம் இங்கு சிகிச்சைப் பெறத்தான் வரணுமா என எனக்குள்ளே சுய பகடி செய்தேன். ஓய்வுக்கு இடையே ஊர் சுற்றியும் பார்த்தேன்.
இது வரை எட்டு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. புத்தகம் வெளியிட்டே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அவசரமும் இல்லை. இன்னும் இன்னும் எழுத்து நடை மேம்பட்டு எனக்கே திருப்தி தரும் ஒரு நாளில், புத்தக வெளியீடு இருக்கும்.
வாசிப்பிற்கு நிகராக படங்கள் பார்ப்பதும் வழக்கம். இவ்வருட மத்தியில் அகிரா குரசேவா படங்களை பார்க்கத் துவங்கினேன். ஆனால் ஈர்த்தது Toshiro mifune. முகம், தோற்றம், பார்வை, நடை, நடிப்பு என எல்லாமே தனித்துவம் நிரம்பியது. சோர்வுறும் போதெல்லாம் இன்றும் அவர் நடித்தப் பாடங்களை பார்க்கிறேன்.
மறைந்த என் தாத்தாவை விட மூன்று வயது இளையவரான Mifune 1997இல் காலமானார். என் குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர இது வரை நேசமுடன் பழகிய, பழகிக் கொண்டிருக்கிற
மனிதர்களின் சாயல்களால் நிரம்பி வழிகிறார் என் பிரிய Toshiro mifune,
தரமான மனிதர்கள் நம் நிறைகளை பிறரிடம் சொல்லி, குறைகளை நம்மிடம் சொல்வர். அத்தகைய அபூர்வ மனிதர்களின் நட்பு எனக்குக் கிடைத்தப் பொக்கிஷம்.
என்னளவில் அப்படித்தான் நானும் இருக்கிறேன்.
அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த வெகு சில வெண்ணிலாக்களைக் கொண்டிருக்கிறது என் வானம்.
ராகுல் சங்கிருத்தியாயன் காட்டிய வழியில் தனியாக சென்ற வாரம் மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணம் பெரும் ஆசுவாசத்தை அளித்தது.
யாரையும் பொய்யாக குளிர்விக்கவோ, மெய்யாக நோகடிக்கவோ செய்யாத சூழலை அமைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
இருப்பைக் காட்டிக் கொள்ள, மதிக்காத மனிதர்களிடம் பற்களைக் காட்டாதப் பழக்கம் இடுகாடு வரைத் தொடரும்.
ஓங்கி வளர்ந்த பனை மரத்தைப் போல, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பழகும் சிலராலே இங்கு மழை பொழிகிறது.
எனக்குள்ளே இப்போது பெய்து கொண்டிருப்பதைப் போல!
2018 ... வேறெப்படி எல்லாம் செதுக்கப்போகிறது என்கிற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஞாயிறு, 31 ஜூலை, 2016


மழையோடும் பசுமையோடும் ஒரு பயணம்!




என் பள்ளிக்கூட சுற்றுலா நாட்களில் குருவாயூர் வந்த போது பெண்கள் சேலை
அல்லது தாவணி மட்டுமே உடுத்த வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. அதன்
காரணமாக மறக்காமல் இந்த முறை சேலையை எடுத்து சென்றிருந்தேன். தூறலில்
நனைந்தபடி கோவிலுக்குள் நுழைந்தோம். வரிசையில் சிலர் சுரிதார்
அணிந்திருப்பதைப் பார்த்து விசாரித்த போது, 2009 இல் இருந்து முழங்கால்
வரை நீண்ட சுரிதாருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்றனர். ஏமாற்றத்தில்
வாடிப் போனது மனம். அரைமணி நேரம் கடந்த பிறகு நின்று கொண்டே தொடரும்
வரிசையில் நீள பலகைகள் சில போடப்பட்டிருக்கின்றன. தேவைப்படுவோர்கள்
அமரலாம். குடிப்பதற்கு சூடான தண்ணீரை குவளையில் ஊற்றித் தருகிறார்கள்.
யாரும் யாரோடும் பேசிக்கொள்ளாமல், அமைதியாகவே நகர்ந்தது வரிசை. நான்கு
முறை நிறுத்திவைத்தே, கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர். அதன் உள்ளே சென்ற
பிறகு ஊர்தலை விட மிகக் குறைவான வேகத்தில் இடம் பெயர்ந்து , தூண்களின்
அமைப்பையும், அழகையும் ரசித்தபடி சுத்தமான பிரகாரத்தை பார்த்தபடி உள்ளே
சென்றோம். இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின், நொடிக்கும் குறைவான
நேரத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை விளக்கொளியில் பார்த்தோம்.
வழங்கப்பட்ட அரைத்த மணமான சந்தனம் நெற்றியில் ஏறியது.

கோவிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆனைக்கோட்டா என்ற இடம்
உள்ளது. குருவாயூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கு
பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் மூலம் கோவில் யானைகளை
பராமரிக்கின்றனர். நாங்கள் சென்ற போது  ஆனைக்கோட்டா உள்ளும் மழை தூறிக்
கொண்டே இருந்தது. தற்சமயம் அங்கு 54 யானைகள் இருந்தன. ஒவ்வொரு யானையும்
நன்கு இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருந்தது. காட்டிற்கு நிகரான சூழலில்
மரங்கள் சூழ்ந்திருக்க, ஒவ்வொரு யானையும் இரும்பு சங்கிலியால்
பிணைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் உள்ள சிமெண்ட் தொட்டியில் நீர்
நிரம்பியிருந்தது. முன்னால் இருந்த தண்ணீரை தும்பிக்கையில் எடுத்து
பீய்ச்சவோ, அந்த இலைதழைகளை உண்ணவோ, ஈரமான மண்ணை அள்ளி தலையில் போட்டுக்
கொள்ளவோ என பரபரப்பாக இருந்தன யானைகள். குழந்தைகள் உற்சாகத்துடன்
பார்த்து மகிழ்கின்றனர். அழகழகான தந்தங்கள், பெரிய உருவம் என கம்பீரமாகக்
காட்சி தந்தாலும் அவைகளை பிணைத்திருந்த இரும்புச் சங்கிலி மெலிதான
பரிதாபத்தை வரவழைத்தது.

அன்று மதியமே  குருவாயூரில் இருந்து 45கிமீ தூரத்தில் உள்ள சாலக்குடிக்கு
ரயிலில் பயணித்தோம். இரண்டு  வழிப்பாதைகளாவே காட்சி அளிக்கின்ற கேரள
ரயில் தடங்கள், தாமதமின்றி மக்களை உரிய இடத்திற்கு கொண்டு போய்
சேர்க்கின்றன. சாலக்குடியிலிருந்து 30கிமீ தூரத்தில் அதிரப்பள்ளி அருவி
உள்ளது. பேருந்து வசதியும் உண்டு. நேரத்தை மிச்சப்படுத்த, ஒரு வாகனத்தை
வாடகைக்கு அமர்த்திப் பயணித்தோம். அதிரப்பள்ளி அருவிக்கு மிக அருகிலேயே
தங்குமிடத்தை பதிவு செய்திருந்தோம். அங்கு கொண்டு சென்ற பைகளை
விட்டுவிட்டு கிளம்பினோம்.

மாலை நான்கு மணி அளவில் அருவியை நெருங்கிவிட்டோம். விடாமல் தூறல்களை தூவி
வரவேற்றுக் கொண்டிருந்த மேகம், ஒரு கட்டத்தில் அன்பு அதிகமாகி சாரலாகக்
கொட்டத்தொடங்கியது. செவ்வகவடிவில் அழகிய சீரான இடைவெளி விட்டு
நேர்த்தியாகப் பதிக்கப்பட்டிருந்தக் கற்களின் வழியாக மேலேறினால் சற்று
நேரத்தில் , இரண்டு பாதை வரும். நேராக கொஞ்சம் சரிவாக உள்ள பாதையில் கீழே
சென்றால்,  அருவி விழுவதற்கு முன் ஓடி வரும் தண்ணீரைப் பார்க்கலாம். அதன்
ஓரங்களில் அமர்ந்து குளித்துக்  கொண்டிருப்பவர்களும் இருந்தனர்.
எங்கெங்கிருந்தோ சேகரமாகி வந்து கொண்டிருந்த தண்ணீர், பாறைகளின் முன்
சேர்ந்து அதி வேகத்துடன் கீழே விழுந்து கொண்டிருக்கும். இன்னொரு பாதையில்
ஏறி, பின் இறங்க ஆரம்பித்தால், சுற்றி  சுற்றி, வளைந்து வளைந்து கீழ்
நோக்கி சென்று கொண்டிருந்தது கற்கள் பாவிய பாதை. மழையில் நனைந்தவாறே
சுற்றிலும் உள்ள மரம் செடிகளை வேடிக்கை பார்த்தபடி கீழே இறங்கினோம்.
மூச்சு ஒரு புறம் வாங்கிக் கொண்டிருந்தது. சில, பல வளைவுகளைக் கடக்க
வேண்டும். அடர்ந்து தெரியும் கானகமும், அருவியைக் காணப் போகும் ஆர்வமும்
தான் நம் நடைக்கான முதன்மைத் துணை. கீழே இறங்கியதும் சில அடிகள்
எட்டுவைத்த பின் கிடக்கின்ற பாறைகளில் ஏறி நின்றால், அருவி தண்ணீர் நம்
மேல் பூப்பூவாய் சிதற, மழைத் தூறல் மற்றொரு புறம் நனைக்க பொங்குகிறது
குதூகலம். மேலே ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்த அருவியின்
பேரிரைச்சலால் உண்டான இசை அந்தப் பகுதி எங்கும் வியாபித்திருக்க
இயற்கையின் மீதான நன்றியுணர்வால் நிரம்பிக் கொண்டிருந்தது  மனம்.
விழுகின்ற அருவித் தண்ணீரில் குளிக்காமல், அதன் நீர் சிதறி நனைக்க, மழை
ஒரு பக்கம் குளிப்பாட்ட என புது அனுபவத்தைப்  பெற்றோம். ( தண்ணீர் விழும்
இடத்தில் அதன் வேகம் காரணமாக, விபத்தைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட தூரம்
வரை கம்பி கட்டப்பட்டிருக்கும் )



அடுத்த நாள் - ஆலப்புழாவில் உள்ள படகு வீடு. கிம் கி டுக் - இயக்கிய
கொரியப் படமான தி போ ( The Bow ) ... ஞாபகத்திற்கு வருகிறது. கடலில்
நிற்கும் கப்பல், அதிலிருந்து சிறு படகு மூலம் அவ்வப்போது நகரத்திற்கு
சென்று திரும்பும் அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர், கப்பலில் இருக்கும்
பதினாறு வயது சிறுமி. அவள் ஆறு வயதில் பெற்றோரிடம் இருந்து காணாமல் போன
போது கண்டெடுத்தப் பெரியவர் இவளை வளர்க்க ஆரம்பிக்கிறார். அவளது
பதினேழாவது பிறந்தநாளில் இருவரும் திருமணம் செய்வதாக திட்டம்
தீட்டியிருப்பார். அந்தப்  படகில் வரையப்பட்டிருக்கும் புத்தர்
படத்திற்கு முன் பக்கவாட்டில்  உள்ள ஊஞ்சலில் இந்த சிறுமி ஆடிக்
கொண்டிருப்பாள். சற்று தொலைவிலிருந்து புத்தரின் படத்தில் மூன்று
அம்புகள்  எய்வார் அந்த மனிதர். அபாயகரமான இந்த அம்பெய்தலின் முடிவில்,
பலன் கேட்டு வந்து நிற்பவர்களுக்கு ஜோசியம் சொல்வார். இப்படி ஆரம்பமாகும்
கதையில் வேறு யார் யார் வருகிறார்கள், இறுதியில் என்ன நடக்கிறது என்பது
மீதிக் கதை. படம் முழுவதுமே படகில் தான் பயணிக்கும்.


அடுத்த நாள் காலையில் சாலக்குடியிலிருந்து ஆலப்புழாவிற்கு தொடர்வண்டிப்
பயணம். பேக் வாட்டர் எனப்படும் கடல் தண்ணீரால் உருவான நீர்நிலைகள் இங்கு
நிறைய உள்ளன. ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து பத்து கிமீ தொலைவில் உள்ள
 போட்ஜெட்டி என்ற இடம் வரை நாம் செல்ல வேண்டும். ( இணையம் வாயிலாக இந்த
நாளுக்கு, ஒரு படகு வீட்டைப் பதிவு செய்திருந்தோம்) அங்கிருந்து  நம்மை
ஒரு படகில் வைத்து அழைத்து செல்கின்றனர். சில நிமிட பயணத்திற்கு பிறகு
பெரிய அளவில் மூடப்பட்டு இருக்கும் படகு வீடுகள் நிறைந்த  வேப்பநாடு
ஏரியில் எங்களை கொண்டு போய் விட்டனர்.( இங்கு மட்டும் தோராயமாக
இரண்டாயிரம் படகுவீடுகள் இருக்கலாம்)  படகு வீட்டில் ஏறிக்கொண்டோம். படகை
ஓட்ட, சமைக்க, உதவி செய்ய என மொத்தம் மூன்று பேர் அதனுள் இருந்தனர். ஒரு
வரவேற்பறை, மூன்று படுக்கை அறைகள், ஒரு சமையலறை, ஒரு உணவு பரிமாறும் அறை
என நீண்டு சென்ற அந்தப் படகின் உட்புறம் நட்சத்திர உணவகங்களுக்கு நிகராக
இருந்தது. முதல் நாள் மதியம் 12 மணியிலிருந்து அடுத்த நாள் காலை ஒன்பது
மணி வரை அது தான் எங்கள் வசிப்பிடம். ( மிக நிதானமான இருபத்தைந்து கிமீ
படகுப் பயணம் - ஓய்வு )  முதலில் ஒரு தீவுக்கு அழைத்து சென்றனர். அதன்
பெயர் குப்பப்புரா. அங்கு உயிருடன் வைக்கப்பட்டிருந்த நண்டு, இறால், மீன்
போன்றவற்றை நம் தேவைக்கேற்ப வாங்கி உள்ளே கொடுத்து சமைக்க சொல்லலாம்.
(விலை சற்று அதிகம் தான்) படகு செல்லும் வழியில் இரு புறங்களும்
வீடுகளைக் காணலாம். ஏரியிலிருந்து கிளம்பினாலும், ஒரு கட்டத்தில் பம்பா
ஆற்று நீரில் செல்லத் தொடங்குகிறது படகு (சராசரியாக இதன் ஆழம்
முப்பத்தைந்து அடி ) மிக மெதுவாக செல்வதால், கூர்மையாக
தண்ணீரையும், சுற்றி உள்ள சூழலையும் அவதானிக்கலாம். அதிசயமாக
தட்டுப்படும் பருந்து உள்ளிட்ட பல பறவைகளை கூடுதல் எண்ணிக்கையில் பார்க்க
முடிந்தது.

சுற்றிலும் 25 தீவுகள் வரை இருப்பதாக படகு ஓட்டுநர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தீவிலிலும் 100,150 வீடுகள் வரை இருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒரு
பெயர் உண்டு. ஒவ்வொரு வீட்டிற்கும் என தனி படகு இருக்கும். துடுப்பு
போட்டு ஓட்டுவதை நாங்கள் பார்த்தோம். சற்று வசதி உள்ளவர்கள் மோட்டார்
படகு வைத்திருக்கின்றனர். படகு செல்லும் வழியில் தென்படும் வீட்டின்
எதிரே ஓடும் தண்ணீரை ஓட்டி ஒரு சில படிகள் இருக்கின்றன. அந்தப் படிகளில்
உட்கார்ந்து குளிப்பதற்கும், துவைப்பதற்கும் அடர் பச்சை நிறத்தில்
இருக்கும்  தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.  மொத்தத் தீவுகளுக்கும்
செல்வதற்கு அரசின் படகு சேவை தனியாக உள்ளது. பெரும்பாலும் அங்கு உள்ள
மக்கள் விவசாயத்தையும் (அரிசி, வாழை) மீன்பிடித்தலையும் தொழிலாக
கொண்டிருக்கின்றனர். மாலை ஆறு மணி அளவில், பெரிய நெல்வயலின் அருகே இருந்த
 C பிளாக் என்ற இடத்தின் அருகே படகு நிறுத்தப்பட்டது. அங்கே ஏற்கனவே சில
படகுகள் நின்று கொண்டிருந்தன. இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் நிரம்பி
இருக்க, ஆறடி அகலத்தில் நடுவில் சென்ற பாதையில் நடக்கத் தொடங்கினோம்.
களிமண் அதிகமாக இருக்க, தட்டுப்படும் செடிகள் எல்லாம் உபயோகமான கீரை
வகைகள், தென்னைக்கு நிகராக வாழை என இருந்தன. தேவையற்ற செடி என ஒன்றையும்
சொல்ல முடியவில்லை.

நடந்து சென்ற வழியில் வேறு படகுகளில் வந்தவர்களில் சிலர் தூண்டிலில் மீன்
பிடித்துக் கொண்டிருந்தனர். சப்பாத்திக்குப் பிசைந்த மாவிலிருந்து சிறிய
உருண்டையை எடுத்து தூண்டில் கம்பியில் வைத்து அழுத்தி தண்ணீருக்குள்
தூக்கி எறிந்தார் ஒருவர், சில நொடிகளில் இழுத்த அந்த கம்பியின் முனையில்
விரல் நீளத்தில் மீன் சிக்கி இருந்தது. அதை மிக சிறிய மீன் என சொல்லி
கையில் எடுத்து தண்ணீருக்குள் விட்டார். இதைப்பார்த்து வருண் ஆசைப்பட
எங்கள் படகில் கேட்டோம். தூண்டிலும், நிறைய சப்பாத்தி மாவும்
கொடுக்கப்பட்டது. மாவு தீர்ந்த பிறகு தான் தெரிந்தது, அந்தப்பகுதியில்
மீன்களுக்கான உணவை தூண்டில் வழியாக வழங்கி இருக்கிறோம் என.
பிறகு சில மீட்டர் நடைக்குப்பின் மீண்டும் படகிற்கு வந்து ஓய்வெடுத்தோம்.
தொலைக்காட்சியைப் பார்க்க விருப்பமில்லாததால்,கண்ணாடி சுவர்களின் வழியே
தெரிந்த இரவை பார்த்துக் கொண்டிருந்தேன். மனமெங்கும் அமைதி ஆளத்
தொடங்கியது.


குருவாயூரோ, ஆலப்புழாவோ கடற்கரை இல்லாத ஊர் பொதுவாகவே  கேரளத்தில் இல்லை
போல. அதற்கடுத்த நாள், கிடைத்த நேரத்தில் ஆலப்புழா கடற்கரைக்கு சென்றோம்.
சாலையிலிருந்து மிக அருகிலேயே ஆரம்பமாகும் கரையில் நடந்தால் சில அடி
எடுத்து வைத்தால் கடல் அலையில் கால் நனைக்கலாம். கடலின் அடி
ஆழத்திலுருந்து வருவது போல, கருப்பு நிற மண் துகள்களை அதிகமாக சுமந்து
ஆக்ரோஷமாக சேர்ப்பித்திக் கொண்டிருந்தன அலைகள். அலையின் வேகம் கணிக்க
முடியாத அளவில் கூடியும், மிகக் குறைந்தும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.
கூடுதல் கவனமாகவே ரசிக்க வேண்டிய இடம். நடந்து கொண்டே இருக்கையில்
சடச்சடவென மழை கொட்டத் தொடங்கியது. நனைந்தபடி சாலைக்கு வந்தோம். சில
நிமிடங்களில் மழை நின்றாலும் தூறல் சில மணி நேரம் தொடர்ந்தது. தூறலோ,
சாரலோ, மழையோ... இடியோசை இன்றி மனதிற்கு நெருக்கமாகவே பெய்தது வியப்பு.

கேரளாவில் மூன்று நாட்களுமே ... கிட்டத்தட்ட ...
மழையோடு உறவாடி
மழையோடு விளையாடி
மழையோடு மல்லுக்கட்டி
ஊர் சுற்றினோம்...!

இங்கு தமிழ் பேசியே சமாளிக்க முடிகிறது. கூடுமான வரையில் நாம் பேசுவதை
பலரும் புரிந்து கொள்கின்றனர். அவர்களின் மலையாளத்தையும் ஓரளவு
அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பார்த்த வரையில் பாலித்தீன் உபயோகம் மிகக் குறைவு. சென்ற வழிகளில் பெரிய
விளம்பரப் பலகைகளை அவ்வளவாக பார்க்க முடியவில்லை, மீண்டும் மீண்டும்,
இரண்டு, மூன்று நகைக்கடை,  துணிக்கடை விளம்பரங்கள் மட்டுமே இருந்தன. சில
சினிமா சுவரொட்டிகளையும் பார்க்க முடிந்தது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ்
கட்சி சார்பில் ஒரு சில இடங்களில் காணப்பட்ட பதாகைகளுடன் பாரதிய ஜனதா
கட்சியின் சார்பிலும் ஒன்றிரண்டை காண முடிந்தது. மற்றபடி எங்கெங்கும்
பசுமையே படர்ந்திருந்தது. கேரள மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட அங்குள்ள
தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

சாதாரணமாக உணவகங்களில் கோழி, ஆட்டிற்கு இணையாக மாட்டிறைச்சி
பரிமாறப்படுகிறது. காரம் சற்று குறைவாக இருந்தாலும் நாக்கிற்கு,
வயிற்றிற்கும் இணக்கமான உணவுகளே கிடைப்பது சிறப்பு. ( சீரகம், சுக்கு,
மிளகு போன்றவை உணவில் மிகுதியாக காணப்படுவது முக்கியக் காரணம் )

மீண்டும் ஆலப்புழாவிலிருந்து திருவனந்தபுரம் வந்து மதுரை பயணம்.

ரயில் பயணத்தில் இரண்டு புறங்களிலும் உள்ள கம்பிகளை பற்றியபடி வாசலின்
அருகே நின்று ஒரு சில மணி நேரங்களாவது பயணம் செய்வது தவறவிடாத வாடிக்கை.
கேரளாவைப் பொறுத்தவரை இப்படி நிற்பது கூடுதல் கொடுப்பினை. இலேசாக சிரசை
நீட்டி முன்னால்  செல்லும் ரயிலின் தலையையும் பின்னால் வரும் வாலையும்
ஒரே நேரத்தில் பார்த்தால் அது ஒரு ஆனந்தம். தூறலை, சாரலை முகத்தில்
வாங்கியபடி கண்களை திறக்காமல் இருப்பது ஒரு தவம். இண்டு இடுக்கு விடாமல்
பரப்பி நிற்கும் செடிகளும், மரங்களும் விட்டுக் கொடுத்த சில  இடங்களை
தண்ணீர் ஆட்சி செய்கிற நிலம் . இவற்றை பார்த்து வாழப் பிறப்பெடுத்தவர்கள்
அங்கங்கே வீடுகளைக் கட்டிக் கொண்டு வசிக்கின்றனர். நம்மைப் போன்றோருக்கு
பயணத்தில் வாய்க்கிறது. வேகமாக செல்லும் ரயிலில் ஒரு சில இடங்களின்
ஓரத்தில் இது வரையில் பார்த்திராத அரிய மலர்கள், திறன் இருந்தும் அறியப்
படாத நபர்களை நினைவுபடுத்தியது. உச்சி முதல் பாதம் வரை ஏறிக்கொண்டிருந்த
குளிர்ச்சியில் என்றோ உண்டான காயங்களின் தழும்புகள் கூட மறைந்தன.

கோவில் வளாகத்தின் குளிர்ச்சி, அருவியின் இசை, படகு வீட்டின் அமைதி என
அத்தனையையும் எங்களுடன் மதுரைக்கு எடுத்து வந்திருந்தோம்.

( 31.07.16 தீக்கதிர்-வண்ணக்கதிர் இணைப்பில் வெளிவந்தது.  )