அப்பாவை குற்றம் சொல்லிக்கொண்டே, எதற்கெடுத்தாலும் கத்தும், பணத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் அம்மா யான் சூன், ஏதேனும் தவறாக செய்துவிட்டு திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பாவப்பட்ட அப்பா, இவர்களின் மகள் நா யங். ஒரு நாள் அப்பா காணாமல் போகிறார்... தன் காதலனிடம் தாங்களும் திருமணம் செய்துகொண்டால் இப்படிதான் சண்டையிட்டுக் கொள்வோம், நான் தனியாகவே இருக்கப் போகிறேன் என்று கோபத்தில் நா யங் கத்த, இடத்தை விட்டு நகர்கிறான் அவன். வேலை விஷயமாக நியூசிலாந்து செல்ல வேண்டிய தினத்தில், காணாமல் போன தந்தையைத் தேடி, தனது பெற்றோர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு செல்கிறாள் நா யங்.
டைரெக்டர், அவர் படம், அவர் உரிமை... பிடித்திருந்தால் ரசித்து செல்ல வேண்டியது தான்... ஆனாலும், எந்த கால இயந்திரத்திலும் ஏறாமல், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து சென்று, அந்த கால மனிதர்களுடன் வாழ்ந்து விட்டு திரும்புதலை, எதிர் கேள்வி கேட்க முடியாமல், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம்மையும் கிராமத்திற்குள் உலவ விடுகிறார்.... :)
அவள் வயதை ஒத்திருந்த அம்மாவுடன் இருக்கும் பொழுது, அம்மாவின் எதிர்பார்ப்பு, வருத்தங்கள், விருப்பங்கள், கொண்டாட்ட மனநிலை, என்று சகலத்தையும் புரிந்து கொண்டு, நிகழ் காலத்திற்கு திரும்புகிறாள் நா யங்.
இறுதிக் காட்சியில் இவள் குழந்தைக்கு புகைப்பட ஆல்பத்தை காட்டி, ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வரும்பொழுது, அந்த கிராமத்தில் முதன் முறையாக பேருந்து விடப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், அப்பா தான் என உறுதி படுத்திக் கொள்வதற்காக, அம்மாவை மொபைலில் அழைக்கிறாள். வழக்கம் போல சிடுசிடுப்புடன் பதிலளிக்கிறாள் அம்மா, புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறாள் மகள்.

