வியாழன், 28 மார்ச், 2013

பங்கி ஜம்பிங் ஆப் தெயர் ஓன் ( Bungee jumping of their own - 2001) கொரியா திரைப்படம்.



கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் குடையைப் பிடித்தப்படி வரும் இன் வூ..., எதிர்பாராத தருணத்தில் ஓடோடி வந்து, குடைக்குள் புகும் தே ஹீ... பஸ் ஸ்டாப் வரை, குடையைப்  பகிர்ந்து கொள்ளலாமா  என்று கேட்டதைக் கண்டு வியந்து, தயங்கி, குடையின் பெரும் பகுதி அவளுக்கு வருமாறு பிடித்துக்கொண்டு, இவன் சற்று இடைவெளி விட்டு 1940 ஆம் ஆண்டு கதாநாயகன் போல பாதி நனைந்து கொண்டிருக்கிறான்.

அவளுக்கான பஸ் வரவும், சென்றுவிடும் கதாநாயகிக்காக, தினமும் குடையுடன் வந்து காத்திருக்கிறான் அதே இடத்தில். அப்புறம், அதெப்படி, இதெப்படி, இப்படின்னு எல்லாம் ஆராய விடாமல், படத்தோட நமக்கு ஏற்படும் சுவாரசியமான ஈடுபாடு, அடுத்தடுத்து  ரசிக்கவும், அசை போடவும் மட்டும் வைக்கும். எனக்கு அப்படிதான் இருந்தது.


பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தில் வரும் வகுப்பறை, பள்ளிக்கூடம், சாலைகள், உடைகள், பல விஷயங்களில் நாம் இன்னும் கூட சில வருடங்கள் அவர்களை விட பின் தங்கி, இப்பொழுதும் இருப்பதைக் காட்டுகிறது...


கல்லூரியில் நண்பர்களிடம், தனக்குப் பிடித்தப் போன பெண்ணை பேசிக்கொண்டே இருக்கும் பொழுதே, நாம் பார்த்து  பழகிப்போன சினிமா விதிகளின் படி, உள்ளே வருகிறாள் குடையில் நுழைந்த தே ஹீ. ஒரேக்கல்லூரி, ஆனால்  வெவ்வேறு வகுப்பு. அவளுடைய வகுப்பில்,  ஏதோ உருவம் செய்வதற்காக மரக்கட்டையை உடைப்பது, நடக்கையில் அவள் ஷூ லேஸ் கட்டிவிடுவது போன்ற உதவிகளை செய்து கொண்டே, அவள் உள்ளத்தில் நுழைகிறான். வழக்கம் போல இருவரும் காதலர்களாக ஆக, அவர்களுக்கான சண்டை, சமாதானத்துடன் சுற்றி வரும் ஒரு நாளில், வரும் வரை காத்திரு என்று சொல்லி ஊருக்கு கிளம்பியவள், மீண்டும் வரும் நாளில், வரவேற்பதற்காக ரயில்வே  ஸ்டேஷன் செல்லும் ஹீரோ, அவள் வராமல் போக ஏமாற்றத்துடன் திரும்புகிறான்.

அதன் பிறகு கதை நிகழ்காலத்திற்கு வருகிறது...

இன் வூ, அந்த வகுப்பிற்கு வருகை தந்துள்ள மாணவர்களை வரவேற்று ஆசிரியராக நட்போடு  பேசிக்கொண்டிருக்கிறான். அதே வகுப்பில் இம் ஹ்யுன் பின், சேட்டைக்கார மாணவன். அவனுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் ஆக ஹே ஜூ அதேப் பள்ளியில் படிக்கும் ஜூனியர் மாணவி. அவளை வம்பிழுப்பதும், வகுப்பில் குறும்பு செய்வதுமாக சிரித்த முகத்துடன் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

முதல் நாள் வகுப்பில் ஆசிரியருக்கு இவன் கொடுக்கும் விளக்கம், இன்னொரு நாள், இடக்காக சொல்லும் ஒரு வார்த்தை இன் வூ விற்கு, அவரின் தோழி, பயன்படுத்திய அதே வார்த்தைகளை மீண்டும் கேட்பது போல இருக்கிறது. நாள் ஆக ஆக, இது போன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேப்  போகிறது. கூர்ந்து அவனை கவனிக்க, வராமல் இருந்த அன்று விபத்தில் மரணித்த, காதலி  மீண்டும் பிறந்து வந்தது போல குழம்புகிறான்.

 பரிவானப் பார்வை, அன்பான பேச்சு, கொடுக்கும் முக்கியத்துவம் என்று சகல விதத்திலும், அவனை செல்லமாக வைத்துக்கொள்கிறான்.

ஹ்யுன் பின் அதிக நேரம் பழகுவது தெரிந்து, அவன்  கேர்ள் ப்ரெண்ட் ஆன ஹே ஜூ வகுப்பிற்கு செல்லும் பொழுது, வேண்டுமென்றே, தவறாக உச்சரிப்பதாக சொல்லி அவளை திரும்ப திரும்ப வாசிக்க சொல்வதன் மூலம், தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முயல்கிறான். அவள் இந்த விஷயத்தை ஹ்யுன் பின், இடம் சொல்லும் பொழுது, இவளைத் திட்டிவிட்டு, ஆசிரியர் பணி தவறை சரி செய்வது தான் என்று சொல்லி இன் வூ விற்கு வக்காலத்து வாங்குகிறான்.

ஒரு நாள் வகுப்பில், ஒரு லைட்டரில் இருந்தப் பெண்ணின்  படத்தை ஹ்யுன் பின் வரைந்து கொண்டிருப்பதை இன் வூ பார்க்கிறான். ( ஆசிரியரை தொந்தரவு செய்யாமல், அவனவன் அவனவனுக்குப் பிரியப் பட்டதை செய்கிறார்கள் எல்லா ஊர்  மாணவர்களையும் போல) அதே போல ஒரு லைட்டர் தே ஹீ யால் பரிசாக கொடுக்கப்பட்டது. அச்சு அசல் அதே உருவத்தைப் பார்த்து, என்ன செய்கிறோம் என்று கூட புரியாமல்,
ஹ்யுன் பின் சட்டையைப்  பிடித்து
'நீ யார் நீ யார் இம் ஹ்யுன் பின்?' என்று கத்திக்  கேட்டு கண் கலங்கிப்  பின் சட்டையை விடுவிக்கிறான்

உடன் படிக்கும் நண்பன் ஒருவனே, ஆசிரியர் உன்னை, 'ஆசிரியர் மாதிரியா பார்க்கிறார்', என்கிற பொழுது, வித்தியாசத்தை கவனிக்கும் ஹ்யுன் பின், அடுத்த நாள் விளையாட்டு மைதானத்தில் ஆசிரியரான இன் வூ மேல் வம்பாக பந்தை மீண்டும் மீண்டும் வீசி எறிகிறான். வகுப்பிற்கு செல்லும் பொழுது, அவன் புத்தகப்பை மட்டும் இருக்கிறது. இரவானதும், வகுப்பறைக்கு செல்லும் ஹ்யுன் பின், ஆசிரியர் தன் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். புத்தகங்களை எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது, எங்க போன, என்று கேட்பவரை, ' நீ ஓரினச்சேர்க்கை விரும்புபவன்னு ஸ்கூல் முழுசும் பேசறாங்க, என்று தடித்த வார்த்தைகளை பிரயோகிக்க, விம்மி வெடிக்கும் அழுகையுடன்,
'என்னை இன்னும் தெரியலையா தேஹீ', என்பதைக் கேட்டதும், சற்று அமைதி ஆகிறான் ஹ்யுன் பின்.

அடுத்த நாள், பிரின்சிபால் அழைப்பதாக செல்லும் இன் வூ, பள்ளியை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறார்.


வேறு ஊருக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷனில் சலனமற்ற முகத்துடன் அமர்ந்து இருக்கிறார்.
உள்ளே ஏதேதோ வரிசையாகத் தோன்ற ஆரம்பிக்கிறது ஹ்யுன் பின்னிற்கு. வகுப்பில் ஆசிரியர் அழைப்பதையும் பொருட்படுத்தாமல், வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் ஹ்யுன் பின், வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு  இன் வூ வைப் பார்க்க கிளம்புகிறான். பூர்வ ஜென்மத்து ஞாபகங்கள் ஒன்றொன்றாய் வருகின்றன.... அமர்ந்து பேசிய இடங்கள், பேச்சுகள், கொடுத்த வாக்குறுதிகள் என்று நீள்கிறது.
அதிகமாக ஆசிரியரை துன்பப்படுத்திவிட்டோம் என்று இன்னும் வேகமாக அழுத்துகிறான். ஸ்டேஷனில் உள்ளே நுழைந்து அருகில் வரும் அவனைப் பார்த்து எழுந்து நிற்கும் இன் வூ வின் முகத்தில் மகிழ்ச்ச மெலிதாகப் படர ஆரம்பிக்கிறது.
"இத்தனை நாளா  ஆனது, என் கிட்ட வர...?"
 என்று கேட்கிறார்.... அதன் பிறகு வேறு ஒரு தளத்தில் இருவரும் சேர்ந்து பயணிக்கின்றனர்.


பங்கி ஜம்பிங் ஆப் தெயர் ஒன் ... (குஷிப்  படத்தில், விஜய் பாலத்து மேலே
இருந்து கீழே குதிப்பார் ல, அதுக்குப் பேர் தான் )

இதில, ஹீரோயின் உயரமான இடத்தை எல்லாம் பார்த்து தைரியமா அதோட விளிம்பில நின்று கீழேப் பார்ப்பாள். அப்படி பார்க்கும் ஒரு நாளில், நியூசிலாந்துப் போய் ஒரு நாள், பங்கி ஜம்பிங் செய்ய வேண்டும் என்று சொல்வாள்.

படத்தின் இறுதிகாட்சியில் இன் வூவும், ஹ்யுன் பின்னும் நியூசிலாந்தில் பங்கி ஜம்ப் செய்யும் பொழுது, பேசிக்கொள்ளும் உணர்வுப்பூர்வமான வரிகளுடன் படம்  முடிவடைகிறது....

உணர்வுகளை இசைக்கருவிகளின்  வழியே ஊடுருவி உணரச்செய்யும் இசை, சிறப்பான எடிட்டிங்...
கூர்மையான வசனங்கள், அற்புதமான இயக்கம்... கொரியாவில், பிடித்துப் போகிற மாதிரி கதாபாத்திரங்களின் முகங்கள், அழகாய் காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு என்று எல்லாமே நிறைவாகவே இருக்கிறது.

இங்க, லாஜிக் இடிக்குது, இது சரியில்லை என்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் : டைரக்டர் பெயர், Kim Dae Seung - கொரியா....


நமக்கும் கூட சிலரை முன்னமே பார்த்த ஞாபகம் வரும். அதனாலே மிகப் பிடித்துப் போனது இந்தப்படம். 

இதில் மிகச்சிறப்பான நடிப்பு என்றால்.... ஹீரோ தான்...
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கி, அபூர்வமாக காட்டுகின்ற கோபத்திலும் கூட மீறித் தெரிகிற, அவரின் கருணைப் பார்வை. என்ன செய்வதென்று அறியாத நேரங்களில், கொட்டும் கண்ணீர், எங்கேயும், எதனையும் வற்புறுத்தாமல், இருப்பவற்றோடு, எதிர்ப்பைக் காட்டாமல் போராடும் சராசரிக்கு அப்பாற் பட்ட முகத்தை நினைவு கூறும் நடிப்பு. ஒரு பக்கம், ஹ்யுன் பின் ஐ நேசமுடன் பார்ப்பது, அது தவறோ என்று தோன்றும் கட்டத்தில் குழந்தைக்கு உணவை  ஊட்டிக்கொண்டே, தான் ஆண் தானே என்று மனைவியிடம் கேட்பது, தொடர்ச்சியாகக் குழம்பி, மருத்துவரை சந்தித்து, உடல் ரீதியாக எதுவும் பிரச்சனையும் இல்லை என்று உறுதி செய்து கொள்வது, தனது தவிப்பை வெளிப்படுத்தமுடியாமல், கட்டுப்படுத்தும் நேரங்களில், பார்க்கின்ற நம்மை அவர் செய்வது எல்லாமே சரி எனும்படி எண்ண வைக்கின்றார்.

ஆக மொத்தம் பிடித்துப் போனதால், எந்த ஒருக் குறையும் சொல்லத் தோன்றாத அழகானப்படம்!



















9 கருத்துகள்:

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) சொன்னது…

அருமை...அருமை....

அற்புதமான விமர்சனம் மூலம்
படத்தை பார்த்த ரசித்த சுகம் / பார்க்க தூண்டும் விதத்தில் விமர்சனம் ...

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நீங்க கொரியமொழி படமெல்லாம் பார்பீங்களா???.. படம் நல்லாருக்கோ இல்லியோ... உங்க விமர்சனம் நல்லா இருக்குது.. காதலி, நண்பன், வாத்தியார், திரும்பவும் காதலி, இவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிபூர்வ வாக்குவாதங்கள் மையப்படுத்தி இருப்பது உங்கள் விமர்சனம் தெளிவாக விளக்குகிறது... உங்கள் விமர்சன எழுத்துநடைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் தீபா..:)

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான விமர்சனம்.
வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

2 வருடம் முன்பு படத்தை பார்த்திருக்கிறேன்.நீங்கள் கதை சொன்னபிறகுதான் உண்ம்மைக்கதையே புரிந்தது.காமிரா இந்த படத்தில் அற்புதம்.அந்த பெண்ணும் பையனும் ஆஹா!கதை சொல்லல் முறை உங்களுக்கு நன்றக வருகிறது.
---வா.மு.கோமு---

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தீபா நாகராணி - நீண்டதொரு விமர்சனம் - கொரியப் படத்தினைப் பற்றிய விமர்சனம் - விமர்சனம் நன்று - மழை - குடை - தானாக குடியினுள் வருவது - பழகுவது- என சிறு சிறு செயல்களைக் கூட விம்ர்சனத்தில் எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

அருமையான விமர்சனம் தீபா..
தொடர்ந்து எழுதவும்..

பெயரில்லா சொன்னது…

hmm superb :)

Satpap சொன்னது…

அருமையான விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது நன்றி வாழ்த்துகள்

Sathish Kumar.N சொன்னது…

அருமையான விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது நன்றி வாழ்த்துகள் ...