வியாழன், 25 ஏப்ரல், 2013

எங்க ஊர் திருவிழா!மண்டூகமகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காகவோ அல்லது, மீனாட்சியின் திருமணம் தான் வருவதற்குள் நடந்து முடிந்து விட்டது என்பதை தெரிந்து கோபத்தில் திரும்புவதற்காகவோ , இன்னும் அறியப்படாத ஏதேதோ  காரணங்களுக்காக வருடந்தோறும், சித்திரை மாத பௌர்ணமி அன்று, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா, மதுரையில் நடக்கிறது.

திருமலை நாயக்கர், ஆட்சிகாலத்தில் தான், வெவ்வேறு மாதங்களில் நடைபெற்ற, மீனாட்சிக் கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குவதும், சித்திரை மாதத்தில் மாற்றப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

சிவனும், அரியும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு', என்று , சாஸ்திரங்கள் நன்கு கற்று தேர்ந்தவர்கள் சொல்லலாம். சைவ, வைணவ மதங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த விழா என்று சொன்னாலும், இதை எல்லாம் பெரிதாக அறிந்திராத எங்கள் மக்களுக்கு தெரிந்ததெல்லாம், 'சாமி, வந்துச்சு, சாமி அங்க இருக்கு... சாமிய பார்த்தோம், சாமி, அம்புட்டு அழகா இருக்கு', அவ்வளவு தான்.

அழகர் கோவிலிலிருந்து இறங்கி ஆற்றில் கால் வைப்பதற்கு முன்பு, வழியில் உள்ள பல கோவில்களுக்கும், மண்டபங்களுக்கும் செல்வார். அப்படி அவர் உள்ளே வரும் பொழுதும், மீண்டும் செல்லும் பொழுதும், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலில், வருகையை பதிவு செய்வார்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அம்மாவோ, பாட்டியோ, எங்களை அழைத்து செல்வார்கள். செல்லும், வழியிலேயே, 'சாமி, வந்திருச்சா, சாமி எங்க இருக்கு', என்று கேட்டுக் கொண்டே செல்வோம். இரண்டு கிலோமீட்டர் தூரமே இருந்தாலும், கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு, கோவிலின் பின்னால் உள்ள மிகப்பெரிய மைதானத்தில், கொண்டு சென்ற விரிப்பை விரித்து அமர்ந்து கொள்வோம். அங்கு அமர்ந்து உண்பது என்பது அன்றைய நாட்களில் அளவிலடங்கா மகிழ்ச்சியை அளித்த ஒன்றாக இருந்தது. மொத்த இடமும் வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

சற்று நேரம் கழித்து, அப்படியே, நடந்து, சுற்றி உள்ள கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, பந்தல் வைத்து, ஊற்றிக் கொண்டிருக்கும், நீர், மோர், சர்பத், பானக்கரம் போன்றவற்றை ருசிப்பார்த்துகொண்டே செல்வோம். அங்கங்கே இலவசமாக விசிறிகளை விநியோகித்துக் கொண்டு இருப்பர். சிலர் மண்டகப்படி அமைத்து, புளியோதரையை தொன்னைகளில் அடைத்துக் கொடுப்பர். அது, என்ன மாயமோ, மந்திரமோ, இங்கு தரப்படும் புளியோதரையின் சுவை, வீட்டில் பார்த்து பார்த்து தயாரித்தாலும் வருவதில்லை.

வெடி சத்தம் கேட்கத் தொடங்கும் பொழுது, அனைவரும் இடங்களை தேர்வு செய்து, நின்று கொள்வர். கோவிலின், முன் கூடுதல் நேரம் பார்க்கலாம் என்பதால், எங்கள் அம்மா, அங்குதான், இருக்கிற கூட்டத்தில் இடத்தை தேடி, நிற்க வைப்பார்.


முதலில் உண்டியல் ஒரு தள்ளு வண்டியில் வரும், அதன் பின்னே, மெதுவாக அழகர் வருவார். சுற்றிலும் இருப்பவர்கள், கன்னத்தில் போட்டுக்கொண்டும், கையை தலைக்கு மேல், தூக்கி கும்பிடு போட்டுக்கொண்டும், அழகரின் பெயரை சத்தமாக சொல்லிக்கொண்டு வழிபடுவார்கள். 
 'அங்க பாரு, அங்க பாரு சாமி, கும்பிடு ', என்று சிறிய குழந்தைகளை பெண்கள் இடுப்பிலும், பல ஆண்கள் இருபக்கமும் தோள்களில் கால்களை சரிய விட்டுக்கொண்டும், சொல்வதை நிறைய பார்க்கலாம்.

இருபது, இருபத்தைந்து  பேருக்கு ஒருத்தர் பெரிய செம்பில், சுக்கு, ஏலம் கலந்த சர்க்கரையை நிரப்பி, அதன் மேல் வாழை இலையில் கற்பூரம் ஏற்றி , இருக்கும் இடத்திலேயே கும்பிடுவார்கள். அழகர், சென்றதும், அந்த செம்பிலிருந்து சர்க்கரையை சுற்றி இருப்பவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள்.

நான்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கால கட்டத்தில், பலரிடம் இருந்து சர்க்கரையைப் பெற்று, பாதியை வாயில் போடவும், மீதியை இடது கையில் சிந்த சிந்த, சேகரிப்பதுமாக இருந்திருக்கிறேன். அழகரின் முகம், ஓரிரு வருடங்களிலே பழகி போனதாலோ, என்னவோ, அவரின் எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரியும் முகத்தையே பல வருடங்கள் பார்த்திருக்கிறேன். அத்தனை அலங்காரம், பார்த்து பார்த்து செய்யப்பட்டு இருப்பதை, ரசித்துக்கொண்டும், சுற்றிலும் உள்ளவற்றை பதிவு செய்வதுமாகவே, என்னுடைய சாமி தரிசனம் இருந்து வந்துள்ளது. 'நான் நல்லா இருக்கணும், வீட்டில எல்லாரும்  நல்லா இருக்கணும், நல்ல படிப்பை கொடு', என்பதெல்லாம், ஆறு, ஏழு வகுப்போடு நின்று போன வேண்டுதல்கள். கடைசியாக, பனிரெண்டாம் வகுப்பு,முடித்திருந்த பொழுது, வம்பாக  அழைத்ததால் மட்டுமே சென்றேன். கூட்டத்தின் அளவு, கூடுதலாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும்  கூடிக்கொண்டும் இருக்கிறது.


இதில், இந்த ஐந்து நாட்களுமே, அழகர் ஏதேனும், ஒரு பெருமாள் கோவிலில், அல்லது மண்டபத்தில் தங்கி இருப்பார். அந்ததந்தப்  பகுதி மக்கள் அங்கு சென்று பார்ப்பதும், தொலைவில் இருப்பவர்களும், தங்கள் பகுதியைக் கடக்கும் பொழுது  பார்க்க தவறியவர்களும் சென்று பார்ப்பர். வழியிலேயே, வேகவேகமாக நடக்கும் குடும்பத்தைப் பார்த்து, 'மெதுவா போங்க, சாமி இன்னும், அரை மணி நேரம், இங்க தான் இருக்கும்', என்கிற தகவல்களை, சற்று முன் பார்த்தவர் தருவார்.


இதில், தொடர்ந்து, ஐந்து நாட்களுமே, விரட்டி விரட்டி சென்று அழகரைப் பார்த்து, தங்கள் எண்ணற்ற வருகைகளை  சாமிக்கு பதிவு செய்பவர்களும் இருக்கிறார்கள். அழகர் கோவிலுக்கு திரும்பும் பொழுதும், மீண்டும் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு வரும் கள்ளழகரை, அநேகமாக அங்கு இருக்கும் அத்தனைக் கூட்டமும், கடந்த சில நாட்களில் பார்த்து இருப்பதால், வரும் பொழுது இருக்கும் தள்ளுமுள்ளு குறைவாக இருக்கும். எனக்கு தெரிந்து சிலர் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு, 'சாமி கிளம்பிடுச்சு',  என்று சொல்லிக் கொண்டே, வழி அனுப்பி அனுப்பி வைத்தக் களைப்பில், தாங்கள் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்.

தற்பொழுது, சுற்றிலும் உள்ள பல ஊர்களிலும் இருந்து மக்கள் திரள்வதால், வழக்கம் போல ஊரே திருவிழாக் கோலத்தில் இருக்கிறது.  சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, கூட்டத்தில் செல்ல விருப்பமின்மை போன்றவற்றால் மண்ணின் மைந்தர்கள் அநேகம் பேர், தொலைக்காட்சிகளின் உபயத்தில், வீட்டிலேயே, தரிசித்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள், சர்க்கரையின் தித்திப்பின்றி.
இப்பொழுது, 'சாமியை, அந்த சேனலில் பார்த்தேன்', என்று முடித்துக் கொள்கிறார்கள் தரிசனத்தை.

மனதில் இருக்கும் குறைகளை  தற்காலிகமாக, தள்ளி வைக்கவும், இருப்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம், அவர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் அடுத்தடுத்து அடி எடுத்து செல்லவும், திருவிழா என்ற களிப்பு, ஒரு தரப்பினருக்கு தேவைப்படுகிறது. அப்படி அனுபவிப்பவர்கள், ஒரு வகையில் பாக்கியவான்கள் தான்!

இந்த பதிவு, சரி, தவறு சென்று எதையும் சொல்வதற்காக இல்லை. திருவிழா எப்படி இருந்தது என்பதை, பின்னோக்கி சென்று, நினைவில் மேலேழுந்தவற்றை, பகிர்தல் மட்டுமே நோக்கம்!6 கருத்துகள்:

selvishankar2617@gmail.com சொன்னது…

ஒரு பெரிய ஊரும் அதைச் சார்ந்த பலப்பல கிராமத்து மக்களும் கொண்டாடித் தீர்க்கும் அருமையானதொரு விழாவாகவே கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவை நான் பார்த்தேன்.

அழகரை தெய்வமாக நினைப்பதை விட மக்கள் தங்களில் ஒருவராக, தங்களுக்கு எது நேர்ந்தாலும் அவர் காப்பார் என்ற நம்பிக்கையான பாதுகாவலராக உணர்ந்திருக்கிறார்கள். ஒரு முதியபெண்மணி, போன வருடம் அழகர் உண்டியலில் காசு சேர்த்தவில்லை , இந்த வருடம் கட்டாயம் சேர்த்தியே ஆகவேண்டும என்று மெனக்கெட்டு தேடி , உண்டியலில் காசு சேர்த்தியபின் அப்பாடா என்று ஆசுவாசப்பட்டபோது, கடனை செலுததிய நிம்மதி தெரியவில்லை...அழகருக்கு நம்மாலியன்றதை தந்தோம்...தங்கை திருமணத்துக்கு கையில இருந்ததெல்லாம் செலவழிச்சுட்டார். அழகர் மலை போறதுககு வழிச்செலவுக்கு வேணும்ல....? என்று சொல்லும்போது தெரிகிறது அழகருக்கும் அவருக்கும் உள்ள பந்தமும் சொந்தமும்..

அருமை தீபா..நம் அனுபவங்களை எழுதும் போது சரியா தப்பா என்ற யோசனை எதுக்குப்பா...???

vivasayee சொன்னது…

சித்திரை திருவிழா வரும்போது இந்த புளியோதரைக்கும் அன்னதான சாப்பாடுக்காக்கவுமே அழகர் பின்னாலையே சில ஆண்டுகள் முன்பு வரை சுற்றியது இப்போதும் இனிக்கும் விஷயம் !
இப்போது அப்படி போகமுடியவில்லை என்றாலும்..எனது தம்பி புண்ணியத்தால் கிடைத்தது தயிர் சாத பொட்டணம்!புளியோதரைக்கு இந்த தயிரும் இளைப்பில்லை.

kumaresan சொன்னது…

கட்டுரை கூட அறிவுப்பூர்வமான ரசனையோடு அமைந்திருக்கிறது. கட்டுரையில் எங்கேயும் கள்ளழகரின் மகிமையோ, புராணக்கதைகள் சார்ந்த வியப்புகளோ இல்லை. நீங்கள் பார்த்ததை, ரசித்ததை, படிப்படியாக நிறுத்திக்கொண்டதை அனுபவித்தபடி எழுதியிருக்கிறீர்கள். இரு வேறு காலங்களில் நடந்த விழாக்களை மன்னர் திருமலை நாயக்கர் ஒரே மாதத்திற்கு மாற்றினார் என்ற நிர்வாக ஏற்பாட்டையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மன்னராட்சி வேரூன்றிய காலத்தில், அழகர் என்ற மன்னன் தான் ஆட்சி செலுத்திய கிராமப்பகுதிகளுக்கு ஆண்டில் ஒரு நாள் நேரடிப் பயணம் மேற்கொண்டான், மக்களைச் சந்தித்தான், அவர்களுடைய குறைகளைக் கேட்டான், குறைகள் களைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டான். அவனுடைய நோக்கம் என்னவோ தன் ஆட்சி எல்லையைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதுதான். இருந்தாலும் அவனுடைய அந்த அணுகுமுறை காரணமாக அவன் மீது மக்களுக்கு அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் பெருகியது. பின்னர் வந்தவர்கள், மக்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வைப்பதற்காக, அதைச் வழிபாட்டுச் சடங்காக மாற்றினார்கள். கல்வியோ, அறிவியல் பார்வைகளோ பரவியிராத அக்காலத்தில் இப்படி சடங்குமயமாக்குவது எளிதாக நடந்திருக்கும்.

இன்றளவும் இது தொடர்வது இரண்டு உண்மைகளைக் காட்டுகிறது. 1) பண்பாட்டு அடையாளங்கள் அவ்வளவு எளிதில் உலர்ந்துவிடுவதில்லை. 2) செல்போன், டிவி என அறிவியல் கண்டுபிடிப்புகள் புழக்கத்திற்கு வந்த அளவுக்கு, அறிவியல்பூர்வமான புரிதல்கள் இன்னும் பரவலாகவில்லை.

மூன்றாவதாகவும் ஒரு உண்மை இருக்கிறது. பொதுப்பிரச்சனைகளுக்காக பேரலையாகத் திரண்டு தெருவுக்கு வரவேண்டிய மக்கள் இப்படி வழிபாட்டுக்காக மட்டும் திரண்டு பின்னர் தத்தம் சொந்த வேலைகளில் மூழ்கிப்போகிறார்கள். மக்கள் இப்படி இருப்பதில் சுரண்டல் சக்திகளுககுப் பெருத்த ஆதாயம் இருக்கிறது. எனவே இந்த விழா தொடரும்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு. அற்புதமான எழுத்து நடை; நிறைய எழுத வேண்டும். உங்களைச் சுற்றியே எழுத நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
அருமை மகளுக்கு வாழ்த்துகள்.

foreveruall சொன்னது…

migavum nandri thangal karuthugalukku

foreveruall சொன்னது…

many many thanks to you for this Shri Alagar festival