திங்கள், 13 மே, 2013

Good day!

எப்படித் தொத்திக் கொண்டது எனத் தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு காலையில் நல்ல நாளாக இருக்கட்டும் என்று வாழ்த்தி எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம். வாழ்த்துவதால் அந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு, தினமும் பழகியதால், அனுப்பாமல் இருக்க முடியவில்லை என்பதே முதன்மை காரணமாக அமைந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்..

இதில் காலையில் வாழ்த்துவது போலவே இரவில் goodnight என்று அனுப்ப மனது வருவதில்லை.
ஒரு நாளின் துவக்கத்தில், நல்ல ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொண்டு, அழகாக இருக்கட்டும் அந்த நாள் என்று வாழ்த்துவதில் உள்ள நிறைவு, தூங்குவதற்கு முன் எங்கும் போய் இருப்பைக் காட்டிக் கொள்ளத்  தோன்றியதில்லை. ( என்னவோ, இப்படி சிக்கலாக தான் இதில் என் சிந்தனை இன்று வரை இருக்கிறது )

ஒவ்வொரு நாளின் விடியலிலும் உள்ள வேலைகளை எல்லாம் ஓரளவு முடித்து விட்டு, இணையத்தில் நுழைந்து, புதிதாக ஒரு வாசகத்தைத் தேடுவேன். தேர்ந்தெடுத்த சில பக்கங்களில் மேய்ந்து, பின்  அதன் உள்ளேயே ஒருப் பக்கத்திலிருந்து, வேறொரு பக்கத்திற்கு தாவி, புத்தம்புதியப் பக்கத்தை கண்டடைந்து, பிறகு அதில் இருந்துப் பலப் பக்கங்களை விரித்து, அன்றைய மனநிலைக்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்து, அத்துடன் goodday என்று சேர்த்து அனுப்புவது வழக்கம். ஒரு சில நேரங்களில் பத்து நிமிடத்திற்குள் முடிந்து விடும் இந்த வேட்டை, சில நாட்கள் அரை மணி நேரம் செலவு செய்தும், கிடைத்தத் திமிங்கலம் பிடிக்காமல், மத்தி மீனுக்காக காத்திருந்து கவர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சரியான வாசகம் எதுவும் கிடைக்காத நாட்களில், ஏதேனும் கணித சூத்திரங்கள் அல்லது வணிக நிறுவனங்களின் சலுகைகளோடு, தங்கு தடையின்றி குட் டே sms செல்லும். ஏனென்றால் நமக்கு நோக்கம், காலையில் அலைபேசியின் வழியே நுழைந்து வணக்கம் சொல்லி, தினமும் நூறு sms அனுப்பப் பிடித்தத் தொகைக்கு, இருபதையாவது காலி செய்ய வேண்டும் என்பதே. :P

மனது சரி இல்லை என்றால், பெரும்பாலும் முன்னறிவிப்போடும், எப்பொழுதேனும் எந்த தகவலின்றியும் சேவை நிறுத்தப்படும்.

எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கும் நாட்களில், மிகவும் மகிழ்ந்து போய், ' நாட்டில பொன்மொழி தீர்ந்து போயிடுச்சா' என்று கேள்வியோடு வரும் குறுந்தகவல்கள்,
'போன வருஷம் இரண்டு மாசம் லீவ் விட்ட, இப்போ இன்னும் எங்கயும் கிளம்பி போகலையா' என்று உள்குத்தோடு வரும்  sms கள், மெனக்கெட்டு அழைப்பு விடுத்து, 'காலையில உனக்கு பதில் அனுப்பிற வேலை இல்லாம நிம்மதியா போயிட்டு இருக்கு நாள்', என்று கலாய்க்கும் நட்புகள், என்று எதுவும் என்னைத் தடுக்காமல், பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறது அனுப்பி, அனுப்பி அடிமையாகிப் போய் கிடக்கும் மனது.

சில நாட்கள் முன்னர் இந்த மாதிரி ஒரு 20 பேருக்கு தினமும் குறுந்தகவல் அனுப்புகிறேன் என்று இங்கு பகிர்ந்த ஒரு தகவலைப் பார்த்து, மிக அருமையாக எழுதும் ஒரு  தோழர், இன்று, துணிந்து, என்னையும் சேர்த்துக்கோங்க உங்க sms லிஸ்ட் ல என்றவரை நினைத்த மாத்திரத்தில்......
உள்ளே எழுந்தப் பாடல்.......

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.........
.
.
.
...................... மீதிப் பாட்டு சரியா தெரியல நீங்களே பாடி  முடிச்சிடுங்க :P

4 கருத்துகள்:

விச்சு சொன்னது…

குறுந்தகவலில் பெரும் மகிழ்ச்சி.. “ இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது..” இது அடுத்த வரி..

perumal karur சொன்னது…

அருமை

என்னை கூட சேர்த்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்

Unknown சொன்னது…

நடைமுறை நிகழ்வுகளை இவ்வளவு சுவாரசியப்படுத்த உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே முடிகிறது. வாழ்த்துக்கள்!

harishkumar pandian சொன்னது…

மனித மனம் எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது, எனவே சமீப காலமாக இந்த குறுந்தகவல்கள் மனித மனத்திற்கு இனிமையான ஒன்று எனவே இனிமேல் நல்ல இரவையும் சேர்த்து சொல்லுங்கள் பல மனங்களாவது மகிழ்வுடன் தூங்க செல்லட்டும்