வெள்ளி, 29 நவம்பர், 2013

தேங்காய் பப்ஸ் கூடவே என்னோட தோழியும்!

நேற்றையப் பதிவின் நீட்சியாக தொடர்ந்த எண்ணங்களை வரிசைப்படுத்தி உள்ளேன். ஓரளவு என்னைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட ஓரிருவரில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பள்ளிவகுப்பு வரை உடன் வந்த நட்பு தமிழரசி. ( அதன் பிறகு லதா....... லதா பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுத வேண்டும்) நான் வாங்கினேன் என்பதற்காக அதே மெரூன் வண்ணத்தில் BSA SLR சைக்கிள் வாங்கியவள்.


93 - 95, மேல்நிலை வகுப்பு படிக்கும் காலங்களில், பள்ளிக்கு செல்கையில், தினமும் ஐம்பது பைசா கிடைக்கும். இதை சேர்த்து வைத்து, அதற்குள் சஞ்சாயிகா சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து, சைக்கிள்க்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்தோடு, எங்கள் சத்துக்கு நாங்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளுக்கும் இதிலிருந்தே செலவு செய்ய வேண்டும். கொஞ்சம் பெரிய அளவில் தேவை என்றால் மட்டுமே பாட்டியிடம் செல்வது, மற்றபடி, வீட்டில் கூடுதலாக கேட்பது கிடையாது.


இப்படி மிச்சம் பிடித்து மிச்சம் பிடித்து மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை பள்ளியில் உள்ள கேண்டீனில் தேங்காய் பப்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இந்த பப்ஸ், சின்ன வட்டமாக, உள்ளே அளவான தேங்காய்த் துருவலுடன், சுட்டெடுக்கப்பட்டு ஆங்காங்கே மெலிதாகக் கருகி, உச்சியில் ட்யூட்டி ப்ரூட்டியில் உள்ள சின்ன சிவப்பு சதுரம் பதிக்கப்பட்டு இருக்கும். அன்றைய விலை எழுபத்தைந்து காசு. இன்றைக்கும் மதுரையில் பல டீ கடைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேக்கரி வகையறாக்களில் இதுவும் இருக்கும். இதே பப்ஸ் பெரிய பேக்கரிகளில் கூடுதல் தேங்காயுடன், எந்த கருகலும் இல்லாமல், உச்சியில் செர்ரிப் பழத்தை தாங்கிக்கொண்டு கிடைக்கும், ஆனால் சுவை அதில் பாதி கூட இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலும் திகட்டி விடும். சரி மேட்டர்க்கு வருகிறேன்.


வகுப்புகள் மூன்றரை மணிக்கு முடிந்தாலும், ஐந்து மணி வரை ஸ்டடி என்று எல்லோரும் வகுப்பில் உட்கார்ந்திருக்க, விளையாட்டில் இருப்பவர்கள் மட்டும் மைதானத்திற்கு சென்று விடுவோம். ஐந்தரை மணி வரை பயிற்சி எடுத்தப் பிறகு வீட்டிற்கு கிளம்புவோம். தமிழரசி ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்து எனக்காக மைதானத்தின் அருகே காத்திருப்பாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வாங்கி சாப்பிடுவதற்கு, முதல் நாளே திட்டமிடுவோம். சமயங்களில் பழச்சாறும் சேர்த்து வாங்குவோம்.ஐந்தரை மணிக்கு மேல் மிகமிகக் குறைவான மாணவியரே இருப்பர். தேங்காய் பப்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு, வழக்கம் போல உட்காரும் மரத்தடியில் அமர்ந்து, பல கதைகளை பேசிக்கொண்டே இருப்பது எங்களுக்கு அடுத்த பல நாட்களுக்கான உற்சாகத்தை தருவதாக எண்ணியிருக்கிறேன். இதில் மற்றைய உணவுகளைப் போலவே, ருசியை உணர்ந்து கொண்டே, வேகவேகமாக காலி செய்துவிடுவேன் பப்ஸை, அவளோ எலிக் கருமுவது போல, மிக மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். ' அங்க பாரு ஹாஸ்டல் பிள்ளைக வர்றாங்க, அவங்களுக்காக தான் இம்புட்டு மெதுவா சாப்பிடறியா,' என்றால், 'என்னதை தரமாட்டேன், நாம ஷேர் பண்ணி இன்னொன்னு வாங்கிக் கொடுக்கலாம்', என்பாள்.


இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சண்டை என்று சில நாட்கள் பேசாமல் இருப்போம். அப்பொழுதும் சேர்ந்து சைக்கிளில் செல்வதற்காக காத்திருப்பாள். எனது வீட்டிற்கான திருப்பத்தில் வளைவது வரை எதுவும் பேசிக்கொள்ளாமலே சேர்ந்தே ஓட்டிக் கொண்டு வருவோம். :P

இன்னொன்று..... பாட்டு. சில விருப்பமான பாடல்களை பாடுகிறேன் பேர்வழி என்று வாசிப்பும் இல்லாமல், பாட்டாகவும் இல்லாமல் என்னுடன் போட்டிப்போடும் அளவிற்கு கத்திக் குவிப்பாள். சில நேரங்களில், 'ப்ளீஸ் இது என் பேவ்ரட் பாட்டு, கொலை பண்ணாதே, நானும் உனக்குப் பிடிச்சப் பாட்டை கொலை பண்ணல', என்ற டீலிங் பரஸ்பரம் எங்கள் காதுகளை காப்பாற்றி இருக்கிறது. :P


இன்று காவல் துறை அதிகாரியின் மனைவியாக, சராசரி குடும்பத்தலைவியாக இருக்கும் தமிழரசி, தேங்காய் பப்ஸை பேக்கரி செல்லும் நேரங்களில் எல்லாம்  கேட்டு வாங்குவதாக சொன்னாள், அடுத்த தடவை டீ கடைகளில் தேடு. அதே சுவையோடு கிடைக்கும் என்றேன்.அன்றைய நாட்களில், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் தரப்படாமல், எளிதில் காசு கிடைத்ததில்லை. கல்லூரி சென்றவுடன் வீட்டில் ட்யூசன் எடுக்க ஆரம்பித்தப் பிறகு ஓரளவு மாதவருமானம் வந்து கொண்டிருந்தது. ஐந்தரை வருடங்களில் அந்தப் பணத்தை சேமிப்பது போக, மனது சரி என்று சொல்பவைக்கு கொடுத்தது போக, தனிப்பட்ட முறையில் எனக்கென்று எதுவும் சிறப்பாக வாங்கிக்கொண்டது இல்லை. அப்படி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, அனாவசியம் என்று நினைப்பதற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனது வருவதில்லை.


எதுவும் அபூர்வமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு கூடுதல். காணும் இடங்களில் எல்லாம் தாராளமாகக் கிடைத்தாலும், எப்பொழுதேனும் வாங்கிக் கொள்ளும் நேரங்களில், அதன் மதிப்பை தொடர செய்யலாம். எல்லாவற்றையும் எளிதாக கிடைக்கும் என்ற அட்டவணையின் கீழ் உட்படுத்தும் பொழுது, அலுப்பும் சலிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றன. ஒன்றிரண்டையாவது, கொண்டாடுவதற்கு என்று விட்டு வைக்கும் மனநிலை, என்னை கூடுதல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.
4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// எதுவும் அபூர்வமாக கிடைக்கும் //

உண்மை தான்... தொடர்கிறேன்...பட்சத்தில் அதன் மதிப்பு கூடுதல்...

thambu சொன்னது…

வளரும் பருவத்து நினைவுகள். அசை போட வைக்கும் பொழுதுகள். மீண்டும் அதனை வாழ்ந்து பார்க்க உதவும் சந்திப்புகள் .இப்படிப்பட்ட நினைவுகளை எழுத்தில் வடிக்கும் பொழுது எதை சொல்ல எதை விட எனத் தவித்து விழும் வார்த்தைகள். அருமையான பதிவு தீபா :)

Rathnavel Natarajan சொன்னது…

இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சண்டை என்று சில நாட்கள் பேசாமல் இருப்போம். அப்பொழுதும் சேர்ந்து சைக்கிளில் செல்வதற்காக காத்திருப்பாள். எனது வீட்டிற்கான திருப்பத்தில் வளைவது வரை எதுவும் பேசிக்கொள்ளாமலே சேர்ந்தே ஓட்டிக் கொண்டு வருவோம். = அருமையான நினைவலைகள்; அற்புதமான எழுத்தாற்றல். அருமை மகள் Deepa Nagarani க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ரசிக்கவைத்த எழுத்து நடை.... என் பழைய நினைவுகளையும் அசைபோடவைத்தது அக்கா... அக்கா என்று அழைப்பதற்குக் காரணம், நான் 94ஆம் ஆண்டில் தான் பத்தாம் வகுப்பு முடித்தேன்...