தேனியிலிருந்து நண்பர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட
வாழைக்கன்றின் கிழங்குகள் இரண்டு ராம் & வருணால், அம்மா வீட்டுக்கும்
எங்கள் வீட்டுக்கும் நடுவே காய்கறிக்கழிவு கொட்டப்படும் இடத்தில் ஊன்றி
வைக்கப்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக நல்ல இடைவெளியில் வைக்கப்பட்டிருந்த
வாழைக்கன்று ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில்
குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை
கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும் ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை
விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின்
குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால்
நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து
கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான
கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது
தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
வீட்டின் நேர் பின்னால் வைத்த வாழை, முன்னதை விட படு வேகத்தில்
உயரம் அதிகரிக்க அதன் வளர்ச்சியை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதற்குள், அதை சுற்றி நான்கைந்து கன்றுகள் பாதுகாப்பாக வளர
ஆரம்பித்திருந்தன. ஒரு மாதத்திற்கு முன்பு கிழக்கு திசையில் குலை
தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த
நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே
விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை
வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. பூக்களைப் பார்த்த மாத்திரத்தில்
நேந்திரம் பழமாக இருந்தால் நன்றாக
இருக்கும் என்று ஆசை இருந்தாலும், ஒட்டுக்காச்சியாக இல்லாமல் கற்பூரவல்லி,
பூவன், ரஸ்தாளி என்று எதுவாக இருந்தாலும் சரிதான் என்று எண்ணிக்கொண்டேன்.
வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு
உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன்
காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
முதல் மூன்று, நான்கு சீப்புகள் வந்திருந்த நிலையில்,
இப்பொழுது பூவை வெட்டி எடுக்காவிட்டால் காய் பெருக்காது என்று ராம்,
அரிவாளைத் தேடிக்கொண்டிருக்கையில், 'பெருக்காட்டியும் பரவாயில்ல, கொஞ்ச
நாள் இப்படியே இருக்கட்டும்', என்று சொல்லித் தடுத்தேன். பத்து சீப்புகள்
எண்ணிக்கையில் கூடிய பிறகு, நான் பார்க்காத ஒரு நாளில் வேகமாக ஏறி பூவை
வெட்டி கையில் கொடுத்த பொழுது, ' இத்தனை வருஷம் கழிச்சு இந்த பூ
தான் கொடுக்கத் தோனுச்சா,' என்று வம்பிழுத்தபடி, வெட்டியது
வெட்டியாகிவிட்டது இனி பேசி என்ன செய்ய என்று அம்மாவிடம் கொடுத்து சமைக்க
சொன்னேன். காலை, மாலை என இருவேளைகளில் தவறாது மரத்தைப் பார்வையிடும் என்
அப்பா, யார் பூவை வெட்டியது என்று சிறிது வருத்தம் கலந்த கோபத்துடன்
என்னிடம் கேட்டு பதிலைப் பெற்ற பிறகு, ' இன்னும் 3,4 சீப்புகள்
வந்திருக்கும், அது போக சரியாக வெட்டததால் கடைசி 2,3 சீப்புகள் இப்பொழுதே
கருக்க ஆரம்பிச்சிடுச்சு,' என்றார்.
இது வரை மாமனாரும், மருமகனும் நேருக்குநேராக இரண்டு வரிகள்
பேசியது கூட இல்லை (இதற்கு பின்னால் அப்படி எந்த ஒரு வரி பிளாஷ் பேக் கூட
இல்லை). இதை சாக்காக வைத்தாவது பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணி, 'நீங்களே நேரா
கேளுங்க,' என்றேன் அப்பாவிடம். நேரில் கேட்பதை மட்டும் தவிர்த்து
பார்க்கும் நேரங்களில் எல்லாம் இரண்டு நாட்களாக அம்மாவும் சேர்ந்து கொண்டு
'அவசரப்பட்டுட்டீங்க,' என்கிற ரீதியில் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.
எப்படியும் இரண்டு பேரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்த
பிறகு, அப்பாவை சமாதானப்படுத்த, 'எத்தனை சீப்பு வந்தாலும், வீட்டுக்கு
அளவா வச்சிட்டு சுத்தி இருக்கவங்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும்
பிரிச்சுக் கொடுக்கப் போறீங்க, அதில எண்ணிக்கை கொஞ்சம் குறையப் போகுது,
போயிட்டுப் போகுதுனு இதோட விடுங்க, அடுத்த வாழை குலை தள்ளுறப்போ கடைசிவரை
பூவோடவே இருக்கட்டும், அதுக்கு நான் பொறுப்பு,' என்றேன். அம்மாவும்,
அப்பாவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். எப்படியோ நான்கைந்து நாட்களாக,
வாழைப்பூவை தவிர்த்த இயல்பான பேச்சிற்கு திரும்பி விட்டோம். வாழை
மரங்களும் தங்களைப் பற்றிய ஒரே கதையை கேட்டுக் கொண்டிருந்ததில் தங்கள்
இலைகளை தாங்களே மனம் போல கிழித்துக் கொண்டே இருப்பதை குறைத்து,
சுற்றியிருந்த கன்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
:)
7 கருத்துகள்:
ம்ம்... வாழ்த்துக்கள்...
மக்கும் கழிவே உரமாய் ,மௌன சாட்சியாய்,தன் கடமையே கண்ணாக இருக்கும் வாழை மரமும் ,தன் மனம்போல் செயல் புரியும் மனித மனங்களும் ,இவை எல்லாவற்றையும் உள் வாங்கி வெளிப்படுத்தும் படைப்பாளிகளின் குணமும்.சில எழுத்துகள் நம் மன நிலைக்கேற்ப அர்த்தம் கொடுக்கும் , அருமை தீபா :)
அனுபவங்களை வார்த்தைகளாக்கி விதை நெல் போல நாற்றங்கால் எங்கும் பாவி விட்டீர்கள் சகோ.
மனம் தொட்டு பேசிப் போகும்
அற்புதமான பதிவு
தங்கள் இல்லத்து வாழை போலவும்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வாழைமரம் வளர்ந்து குலைதள்ளியதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள், அருமை தீபா.
வாழைமரத்துடனான வாழ்க்கையின் நாட்களை அழகுற எழுதியுள்ளீர்கள். அற்புதம்!
kkjana.blogspot.com
கருத்துரையிடுக