செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வெறுமையும் பரிசே!


கல்லூரிப்  படிப்பை முடித்தவுடன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் கற்றுக் கொள்வதற்காக சென்ற வகுப்பில் பரிச்சயமான தோழிகளில், சம வயதில் இருந்ததாலோ என்னவோ,சுதாவிடம் மட்டும், தொடர்ந்தது நட்பு. அன்றைய நாட்களில், அதிகம் அரட்டை அடித்துப் பொழுது போக்கிய இடங்களில் அவள் வீட்டு மொட்டை மாடியும் ஒன்று. இருவருக்கும் ஏதேனும் வாக்குவாதம் வரும் நேரங்களில் எல்லாம், விஷயத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு எனக்கு மட்டுமே ஆதரவளிக்கும், சுதாவின் அக்கா ராதாவை, பார்க்கும் எவருக்கும் பிடித்துப் போகும். களையான முகத்துடன், பார்க்கும் எல்லா நேரங்களிலும் புன்னகை பூத்து இருப்பாள். இதில், பிடித்த இனிப்பென்றால், அவளுக்கு உரிய பங்கினை எடுத்து வைத்து, சுதாவிடம் எனக்கு கொடுத்தனுப்புவாள்.

ஒரு நாள் திருமணப்பத்திரிக்கையை கொடுப்பதற்காக மாலை வேளையில் அவள் வீட்டிற்கு சென்று இருந்தேன். சுதாவின் அப்பா சற்று கூடுதலாகவே வெகுளி. அவர், ' பரவாயில்லயே, பொண்ணுகளே கல்யாணப் பத்திரிக்கை எல்லாம் கொடுக்கிற அளவு முன்னேறிட்டீங்க', என்று சொன்ன நொடியில் தாள முடியாமல் நான் சிரித்ததன் காரணம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். பக்கத்திலிருந்து என்னைக் கிள்ளிய சுதாவிற்கு தெரியும். ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன்பே, வீட்டிற்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்தவள். அவளின் அக்காவின் திருமணம் முடிந்த உடன் வீட்டில் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அந்த ஆண்டிலேயே நடைபெற்ற ராதாவின் திருமணத்திற்கு சென்னையில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு ஓரிரு முறை ஊருக்கு வந்தும், சுதா வீட்டிற்கு செல்ல முடியவில்லை. பல மாதங்கள் கழிந்த நிலையில், மதுரை வந்த அன்றே, சுதா வலுக்கட்டாயமாக அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றாள். வழியிலேயே தெரிவித்ததன் சாராம்சம், ராதா கருவுற்று ஏழு மாதங்கள் சென்ற பிறகே, அவளுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தாமதமாக தெரிய வந்தும், விடாப்பிடியாக அதற்கடுத்த மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் பின் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே.

எதுவுமே செய்ய இயலாமல் போகும் இதுமாதிரி நேரங்களைக் கடப்பது என்பது, அந்த நோயின் தீவிரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

வீட்டிற்குள் சென்ற பொழுது, ராதாவின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற அவரின் அம்மா, வலிந்து உருவாக்கினப் புன்னகையுடன் வரவேற்றாள். வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையில் திரைச்சீலையை ஒதுக்கி விட்டு உள்ளே சென்ற பொழுது மொட்டைத் தலையுடன், வித்யாசமான தோற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ராதாவைக் கண்டதும், உள்ளே ஏதேதோ ஓட, திரள துவங்கியது கண்ணீர்.

'வீட்டில இருக்கவங்க தான் இப்படி இருக்காங்கன்னா, நீயாவது வழக்கம் போல பேசு', என்றாள்

சரியாக சொன்னால், இந்த வார்த்தைகளை குழறிக் குழறி துப்பினாள். சரளமாக, சிரமில்லாமல் அவள் பேசுவது போல இருந்தாலும், சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது உச்சரிப்பு.

'சரியாகிடும் க்கா', என்ற என்னை, சிரித்துக் கொண்டே, 'உங்க யாருக்கும் தெரியாது எப்போ, என்னன்னு........ எனக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி, அதுக்குள்ள உன்னிஷ்டபடி இருனு ஆண்டவன் சொல்லி இருக்கப்போ, சந்தோஷமா இருக்கேன். பையனுக்கு என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு முடிச்சிட்டேன். அம்மா, சுதா எல்லாம் என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க......... அப்புறம் சொல்லு சென்னை எப்படி இருக்கு', என்று தொடர்ந்தவளிடம், துயரத்தை முழுக்க சுமந்து கொண்டிருந்த அந்த நொடியில் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

என்ன பேசுவது என்று தெரியாமலேயே, அவளின் பரிதாபா தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் நொடிகள், யுகங்கள் போல கடந்து கொண்டிருந்தன.

மீண்டும் ராதாவே, ' எவ்ளோ நேரமாச்சு தீபா வந்து, காபி கொடுக்க முடியாது?' என்று அதட்டலுடன் தங்கையைப் பார்த்து சொன்னாள்.

ராதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மெலிதாகத் தட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது என்னால். அவளோ என் தலையைத் தடவிக் கொண்டே, 'வர்றப்போ, போறப்போ, என் பையனை ஒரு பார்வை பார்த்துக்கோ', என்றதும், கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் தளும்பியது எனக்கு. வெகு இயல்பாக என்னைத் தேற்றிக் கொண்டே, 'காபியைக் குடி', என்றாள்.

இது மாதிரியான சமயத்தில் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுக் குடித்த காபியின் ஒவ்வொரு சொட்டும், நாக்கின் நுனியிலிருந்து வயிற்றின் உள்ளே கொடிய விஷம் இறங்குவது போல இருந்தது.

கடந்த நாட்களில் நாங்கள் மூவரும் பேசி மகிழ்ந்த ஓரிரு சம்பவங்களை மிகவும் ரசனையுடன் நினைவு படுத்தினாள். கனத்த அமைதி சில நிமிடங்கள் தொடர்ந்தது. 'கிளம்புறேன்', என்று மீண்டும் அவளின் கைகளைப் பற்றி விடுவித்தேன். புன்னகையுடன் கை அசைத்தாள்.

வலிமையைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டாத ராதாவின் வார்த்தைகளைப் போலவே, உள்ளேயும் அதே வலிமை இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அந்த நொடிப் பிரார்த்தனையாக இருந்தது.

வெறுமையால் நிரம்பிய வித்யாசமான மனநிலையோடு வீடு வந்தடைந்தேன்.

அதன் பிறகு சில மாதங்களில் ராதா இறந்த பொழுது சென்னையில் இருந்தேன். எட்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. தற்பொழுது அந்த குடும்பம் மதுரையில் இல்லை.

இன்றும் வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகளின் பொழுது, சிரித்துக் கொண்டிருக்கும் ராதாவின் முகம் மனதில் வந்து சொல்லும் செய்திகள் பலவற்றை மொழி பெயர்க்கத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.

அபூர்வமாக என்னை பாதிக்கும் ஏதேனும் சம்பவத்தின் பொழுது சூன்யத்தின் மத்தியில் இருப்பதாகவே தோன்றும். அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலாகவே இருந்தாலும், வெற்றி பெறப்போவது நான் தான் என்ற நினைப்பில் எதிர் கொள்வதால், போராட்டம் பழக்கப்பட்டதுடன் மோதுவது போல் இருக்கும். சமயங்களில், 'வெறுமை', மற்றைய உணர்வுகளை விட தொடர்ந்து நீடித்தால், எதையுமே கண்டு கொள்ளாமல் எளிதாகப் பயணிக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு.

வெறுமையை நமக்குப் பரிசளிப்பவர்கள் பெரும்பாலும், நம் பிரியத்துக்கு உரியவர்களாகவே இருக்கிறார்கள்.
( ஏப்ரல் 16 - 30...குங்குமம் தோழியில் வெளியானது)

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நெகிழ வைக்கும், அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani

thambu சொன்னது…

//உங்க யாருக்கும் தெரியாது எப்போ, என்னன்னு........ எனக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி, அதுக்குள்ள உன்னிஷ்டபடி இருனு ஆண்டவன் சொல்லி இருக்கப்போ, சந்தோஷமா இருக்கேன். பையனுக்கு என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு முடிச்சிட்டேன். அம்மா, சுதா எல்லாம் என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க....// மனதில் இருக்கோ இல்லையோ வார்த்தைகளில் இப்படிப்பட்ட வலிமை உள்ளவர்கள் நமக்கு இருந்து கற்ப்பிக்கும் பாடம் நமக்கு கர்ணன் கற்ற வித்தை போல் இல்லாது உண்மையிலேயே நாம் உபயோக்கிக்க வேண்டிய நேரத்தில் உபயோகப்படுத்தினால் அதுவே நாம் ராதா போன்றவர்களுக்கு செய்யும் மரியாதை. மனது கனக்கிறது நடந்ததை எண்ணி,உள்ளம் வணங்குகிறது ஆசானை,மூளை இடிக்கிறது பிரச்சனை என்று கலங்குவது உண்மையில் இப்படிப்பட்ட நிகழ்வுகுக்கு முன் தூசு என்று. இயன்றதை எடுத்துக் கொண்டேன் கொண்டேன்,நன்றி தீபா .