வியாழன், 12 ஜூன், 2014

"அரிதானது - அபாரமானது" - கிடைக்கும் வரையில் மட்டுமே!



எல்லா காலங்களிலும் ஒரு பொருள் தன் மீதான ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதென்பது கடினமே. நேற்றைக்குப் பிடித்தது, இன்றைக்குப் பிடிக்காமல் போகிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஏதேதோ காரணங்களால் கொண்டாடிய மனிதர்களை எளிதில் புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது, பொருட்கள் முக்கியத்துவம் இழந்து போதல் தேவலை என்றே தோன்றுகிறது. கண்களை அகல விரித்து காட்டிய ஆச்சர்யம், வேறொரு பொருளால் ஈர்க்கப்பட்ட பிறகு, அங்கு தாவுகிறது. கிடைப்பதற்கு அரிதாய் இருக்கும் வரையில் மட்டுமே பிரமிப்புகள், பிரமிக்க வைக்கின்றன.

ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், தமிழில் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது என்ற செய்தியே எங்கள் பகுதியில் இருந்தவர்களுக்குப் பெரிய அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனினும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை.

ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்து பார்த்தப் படங்களின் வரிசை இன்னும் நினைவில் உள்ளது. முதலில் ஒளிபரப்பானப்படம் "ஆயிரத்தில் ஒருவன்", அடுத்து, "நான், சாந்தா சக்குபாய்", போன்ற படங்கள் என நினைக்கிறேன். அப்படியே வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியும், கொஞ்சம் கொஞ்சமாக நாடகங்கள், வயலும் வாழ்வும், காண்போம் கற்போம், சிறுவர் பூங்கா என்று நம் கண் முன்னே வளரத்தொடங்கியக் குழந்தையைப் போல வளர்ச்சியடைந்தது சென்னைத் தொலைகாட்சி நிலையம். ஞாயிற்றுக் கிழமை மதியவேளைகளில் ஒளிபரப்பப்படும் விருதுபெற்றத் திரைப்படங்களே, மற்ற மாநிலத்தின் திரைப்படங்களை முதன்முதலில் கண்களுக்கு அறிமுகப்படுத்தியது. சனிக்கிழமை மாலை நேரத்தில் ஹிந்தித் திரைப்படத்திற்கு முன்பே தமிழில் கதைச் சுருக்கம் சொல்லியது எல்லாம் ஏதோ பழங்கதை போல நினைவில் தங்கி உள்ளது.

 எங்கள் தெருவில், முதன் முதலாக தொலைக்காட்சி வாங்கிய வரலாற்றில் இடம் பெற்றவர் எதிர் வீட்டு லக்ஷ்மி அம்மா. ஆரம்ப நாட்களில், ஞாயிற்றுக் கிழமை படத்தின் இடையே செய்திகளும் இடம் பெற்றன. அவரோடு இணக்கமாக இருக்கும், யாருக்கும், வாரம் ஒரு முறை ஒரு திரைப்படம் முழுவதும்  காண  இவர் வீட்டில் இடம் உண்டு. இந்தக் காரணத்திற்காகவே எங்கள் தெருவில் உள்ள பலரும், அந்த அம்மா என்ன சொன்னாலும் ஆமோதிப்பர். திரைப்படத்தில் வருகின்ற வில்லன்களை, கதாநாயகிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ஏசுகின்றனரோ  இல்லையோ இந்த அம்மாவின் வாயில் இருந்து சகட்டுமேனிக்கு திட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். செய்திக்குப் பின் திரைப்படம் தொடரும் என்று போட்ட நொடியில், 'டிவி ய அமத்து, டிவிய அமத்து  கரண்ட் பில் கூட வந்துடும்',  என்று கத்துவார். அதன் பின், நான்கு மாதங்கள் கழித்து எங்கள் வீட்டிலும் தொலைக்காட்சி வந்த பிறகு தான், "செய்தி", என்ற ஒன்றை முதன்முதலில் முழுவதுமாக பார்த்துக் கேட்டேன்.
நாட்கள் செல்லச் செல்ல, தொலைக்காட்சி என்பதே அந்தஸ்தோட தொடர்பு படுத்தி பார்க்கப்பட்ட அவசியமான ஒரு சாதனமாக பெரும்பாலானோருக்கு பட ஆரம்பித்தது. அம்மா பிறந்த அனுப்பானடியில் எங்கள் மாமா வசித்த தெருவில், அங்கு முதன் முதலில் தொலைக்காட்சி வாங்கியப் பெருமையை, மாமா வீட்டினர் பெற்றனர். நல்ல நீள, அகலத்தில் அமைந்திருந்த முற்றம் உட்பட்ட வராண்டாவில் உட்கார்ந்து,  ஞாயிறு காலையில் " யஹ் ஹை மஹாபாரத் கதா" என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் மகாபாரதத்தையும், ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படத்தையும், ரசித்து விட்டு வெளியேறும் சொந்த பந்தங்களைப் பார்ப்பது ஏதோ தியேட்டரில் இருந்து வெளியேறும் கூட்டத்தைப் பார்ப்பது போல இருக்கும்.


அன்றெல்லாம், ஆன்டெனா இல்லாத கூரை அழகில்லாதக் கூரையாகவே பார்க்கப்பட்டது. நிறுத்தப்பட்டிருக்கும் கம்பியின் உச்சியில் வரிசையாக உள்ள ஏழெட்டு கம்பிகளில் இரண்டாவது உள்ள ஒரு கம்பி மட்டும் சற்று வளைந்து நீண்டிருக்கும். அத்தனைத் துல்லியமாகப் படங்களை வாங்கிய  இந்தக் கம்பி, கருப்பு நிற பட்டையான வயரால், பெட்டிக்கு பத்திரமாகக் கடத்தி, அதை எப்படி நம்மால்  பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்துடனே இருந்திருக்கிறேன். சில நேரங்களில் அக்கம் பக்கம் வீடுகளில் சரியாக தொலைக்காட்சி தெரியவில்லை என்றால், இந்த ஆன்டெனாவை பிடித்து ஆட்டி, திருப்பி ஏதேதோ செய்து, கீழே டிவி தெரியுதா என்று கேட்பதை அந்த நாட்களில் அடிக்கடிக் கேட்டு இருப்போம். சமயங்களில் காகம் இந்தக் கம்பிகளில் அமரும் பொழுது, கம்பிகளில் ஏற்படும் அதிர்வால் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்கள் கூட சரியாக தொலைக்காட்சித் தெரியாமல் போக காரணமாக இருக்கலாம் என்று ஒவ்வொரு வீட்டிலும் இருந்த யாராவது ஒரு விஞ்ஞானி சொல்வர். ஒரு வேளை காகங்களிடம் கேட்டு இருந்தால், இருக்கிற மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறவர்கள், அவற்றைப் போன்ற பறவைகள் வந்து அமர ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் வைத்த இயந்திர மரம் என்று எண்ணினோம், என்று அவைகள் சொல்லியிருக்குமோ?!. :)

அப்பொழுதெல்லாம், திரைப்படமும், ஒளியும் ஒலியும் ஒளிபரப்பாகும் நேரங்களில் சாலைகளில் போக்குவரத்துக் குறைவாக இருக்கும். கடைகளில் கூட்டமில்லாமல் இருக்கும். முடிந்த அளவு அந்த நேரங்களில் தங்களுக்கென்று எந்த ஒரு வேலையும் வைத்துக் கொள்ளாமல், முழு மனதுடன் தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருக்க அனைவருமே பிரியப்படுவார்கள்.
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கியப் புதிதில், பாட்டிக்கு ஆர்வம் அதிகம்.
பகலிலேயே
 ' தீவா....டிவியை போடு', என்பார். '
' இந்தில யாராச்சும் பேசுவாங்க, உனக்கென்ன புரியப்போவுது, நீ சாயங்காலம் பாரு',
' பரவாயில்ல, டிவி போடு', என்று விடாப்பிடியாக கேட்பார்.

தொலைக்காட்சியை இயக்கி எதுவும் வராமல் வெள்ளைப் பின்னணியில், கறுப்புப் புள்ளிகள் ஒரு வித இரைச்சலுடன் தெரியும்.
'இதென்ன புள்ளிபுள்ளியா ஆயுது'
' நாந்தேன் சொன்னேன்ல அவ்வா, கேட்டியா நீ ',
'ஹ்ம்ம்.. இருக்கட்டும் கொஞ்ச நேரம் பொறு', என்று தளராத உறுதியுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கையில், சில,பல நிமிடங்கள் கழித்து, கறுப்பு வெள்ளைக் கட்டங்கள் சூழ நடுவில் வண்ண,வண்ணக்கட்டங்கள், "ங்", என்ற ஒரே வித சத்தத்தோடு மாறும் சின்னத்திரை ஒளிரும்.
'சொன்னேன்ல, வந்திருச்சு, பார்த்தியா', என்று வெற்றிப் புன்னகையோடு காத்திருப்பார். அதன் பிறகு, அரைமணி நேரம் கழித்து ஒளிபரப்பாகும் UGC நிகழ்ச்சியை ஹிந்தியில் பார்க்க ஆரம்பித்த உடனேயே கண்கள் சொருக அப்படியே தூங்கி விடுவார் பாட்டி.
புரிகிறது, புரியவில்லை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நம் வீட்டில் இருந்தபடியே , எங்கேயோ நடப்பதை எளிதில் பார்க்க முடிகிறது என்பதே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும், என நினைக்கிறேன்.

போட்டிப் போட்டுக் கொண்டு மாறி மாறி செய்தி வாசிப்பவர்கள் தரும் செய்திகள், ரயில் சிநேகம் போன்ற மறக்க முடியாத நாடகங்கள் என பலவற்றைத் தந்திருக்கிறது சென்னைத் தொலைக்காட்சி நிலையம். சற்று பின்னர் ஒளிபரப்பான சன் சேனலில் வாரமொரு முறை ஒளிபரப்பான மர்மதேசம் போன்ற தொடர்கள், ஒலிக்கின்ற தொலைபேசியை கூட எடுக்கவிடாமல் செய்திருக்கின்றன. அடுத்த நாள் பள்ளி/கல்லூரி/அக்கம்பக்கம் ரசித்து பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்களில் மெதுமெதுவாக முக்கியமான இடத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடித்தன. செய்தித்தாள்களும் இவற்றின் நிகழ்ச்சிநிரலை வெளியிடுவதற்காக தனிப் பகுதியை ஒதுக்க ஆரம்பித்தன. பத்திரிக்கைகள் கூடுதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி விமர்சனமும் எழுத ஆரம்பித்தன.
தொலைக்காட்சிப் பார்ப்பதால் படிப்பில் கவனம் சிதறுகிறது என்று திட்டு வாங்கிய முதல் தலைமுறை நாங்கள் தான் என நினைக்கிறேன்.
கிரிக்கெட் என்ற விளையாட்டை பட்டித்தொட்டிக்கெல்லாம் கொண்டு சேர்த்து, பெரிய அளவிலான ரசிகர்களை பெற்று தந்ததில் மிக முக்கிய இடத்தைப் பெற்ற தொலைக்காட்சியை இந்த விளையாட்டு விஷயத்தில் வரம்,என்பதா சாபம் என்பதா, எனத் தெரியவில்லை.

பலவருடங்கள் அசைக்க முடியாத தூர்தர்ஷனை, படிப்படியாக வந்த தமிழ் சேனல்கள், பிற மொழி சேனல்கள், அதிலும் இன்று எண்ணிக்கைக்குள் எளிதில் அடக்க முடியாத அளவு உள்ள விதவிதமான சேனல்கள் பின்னுக்கு தள்ளிவிட்டன. திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை, விளையாட்டு, செய்தி, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், ஆன்மீகம், விலங்குகள், என்று கிட்டத்தட்ட எல்லாவற்றையும், ரசனைக்கேற்றபடித் தனித்தனியாகப் பார்ப்பதற்கென்று பல்வேறுபட்ட மொழிகளில், வரிசையாக பல சேனல்கள் உள்ளன. இவை அனைத்தையுமே கைக்குள் கட்டுப்படுத்திப் பார்க்க இருக்கும் ரிமோட், என தொலைக்காட்சி விஸ்வரூப வளர்ச்சியடைந்து இருந்தாலும்  தொடர்ச்சியாக அரை மணி நேரம் ஒதுக்கி ஒரே சேனலைப் பார்க்கும் பொறுமை நம்மிடம் குறைந்து வருவது உண்மையே.

குட்டிக்குட்டிக் கதைகளை அடக்கிய விளம்பரங்களை ஆவலுடன் ரசித்துப் பார்த்த காலம் நினைவில் மங்கியிருக்கையில், விளம்பரம் வந்த நொடியில் சேனலை மாற்றிக் கொண்டிருக்கின்றன விரல்கள். பேஸ்புக் கில், விளையாட்டாக ஒரு முறை நிலைத்தகவலாக நான் பதிந்தது, "தொலைக்காட்சியில்  சுவாரசியமான நிகழ்ச்சிகளின் பொழுது அடிக்கடி வரும் ஒரே விளம்பரத்தைக் கண்டால்,  இந்தப் பொருளை, எக்காலத்திலும் வாங்கவே கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்".  :P
உலகின் பல் வேறு மூலைகளில் நடை பெறும் விளையாட்டு நிகழ்சிகளை நேரடியாக கண்டு களிக்க, அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை  உடனுக்குடன் கூர்ந்து கவனிக்க, பொழுதை போக்க பாடல், திரைப்படம் பார்க்க, சமைத்தும் பார்க்க, என நம்மில் பலரும் சும்மாவே இருக்க இயலாத கட்டை விரலால் சில நிமிட இடைவெளியில் அழுத்தி, அழுத்தி கண்ணாடித் திரையைப் பார்க்கிறோம் . குட்டித்திரையிலிருந்து, LCD, LED, என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளை உபயோகிக்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், தொலைக்காட்சி சரியாக தெரியாவிட்டால் ஆன்டெனாவிற்கு பதிலாக இப்பொழுது  ரிமோட் அடி வாங்குகிறது.

ஒருவர் பார்க்கும் நிகழ்ச்சியையே இன்னொருவரும் பார்க்கும் பொறுமை குறைந்து வருவதால், இன்று சில இடங்களில் ஒரு வீட்டிலேயே ஒன்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.

புகைப்பிடிப்பது, மது அருந்தும் காட்சிகளின் பொழுது உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரித்து கீழே வாசகங்கள் ஓட, திரையில் ஏதேனும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளின் பொழுது இது போல ஒரு ஆலோசனை, அறிவுரை வாசகம் வருவதில்லை என்று நினைப்பேன். அட்டையின் மேற்புறத்தில் அறிவுறுத்தி இருந்தாலும், அதனை சட்டை செய்யாமல், புகைக்கும், மது அருந்தும் கூட்டம், இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று பெண்கள் விஷயத்தில் சொல்வதை மட்டும் கேட்டு விடுமா என்ன என்று எனக்குள்ளேயே பதில் சொல்லிக் கொள்வேன்.

கேபிள் டிவி, DTH, ஏதாவது ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, சின்னத்திரை, வரிசையாக, வகைவகையாக கொண்டு வந்து கொட்டும் நிகழ்சிகளை நாம் பார்க்கிறோமோ, இல்லையோ, அமைதியாகவாவது நம் உடன் இருந்தே ஆக வேண்டிய பொருட்களில் ஒன்றாகி விட்டது தொலைக்காட்சி .

அரிதான ஒன்று, கொண்டாடப்பட்ட ஒன்று, மலிந்து கிடைக்கும் நிலையில், முக்கியத்துவம் குறைந்து போவது தவிர்க்க முடியாதது. விரும்பிக் கிடைப்பவற்றை சிறிது சிறிதாக அனுபவிப்பதின் மூலமாக சுவாரசியத்தை நீட்டிக்கலாம்.

 (  மே 16 - 31 ... குங்குமம் தோழியில் வெளியானது )

3 கருத்துகள்:

Stalin சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்

thambu சொன்னது…

ஒரு தலைமுறை கண்ட தொலைக்காட்சி ஊடக வளர்ச்சியினை மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறீர்கள்( சிலோன் ரூபவாஹினி என் ஆரம்பம்). இணையம், பேசுவது மட்டுமல்லாது பலவற்றை கையளவில் கொண்டு வந்த அலைபேசி என்ற மாற்றுகள் வரும்வரை தனி ராஜாங்கம் நடத்தி வந்தது தொலைகாட்சி என்றால் அது மிகை இல்லை .சரளமான நடையில் ஒரு இருபதாண்டு கால நிகழ்வை,அதன் தாக்கத்தை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் .
//மலிந்து கிடைக்கும் நிலையில், முக்கியத்துவம் குறைந்து போவது தவிர்க்க முடியாதது. விரும்பிக் கிடைப்பவற்றை சிறிது சிறிதாக அனுபவிப்பதின் மூலமாக சுவாரசியத்தை நீட்டிக்கலாம்.// தன்னை புதுப்பித்து நம் மனம் கவரும் வகையினில் செயல் படும் வரையினில் நமக்கு சலிப்பதேயில்லை .நம்மை மகிழ்விக்கக் கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் என்பது என் கருத்து .

ராமலக்ஷ்மி சொன்னது…

தூர்தர்ஷன் காலத்தை அப்படியே மனக்கண்ணால் பார்க்க வைத்து விட்டீர்கள். .
/அரிதானது - அபாரமானது - கிடைக்கும் வரையில் மட்டுமே!/ உண்மைதான். அருமையான கட்டுரை.