வியாழன், 20 நவம்பர், 2014

மழை வருவதற்கு சற்று முன் ஓர் அரிசிக்கடையில்...

நேற்று மாலை அரிசிக்கடையில் கூட்டம் குறையாமல் இருந்தது. ஏழெட்டு பேர் வாங்கிய பிறகே என் முறை வரும். ஏதேதோ யோசனையுடன் காத்துக் கொண்டிருந்தேன். இருபதுக்கு பத்து என உள்ள அறையில், சொருகி வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளுடன் அரிசி மூடைகள், பிரித்து வைக்கப்பட்டிருந்தன. உள்ளே தெரிந்த அறையிலும் பல மூடைகள் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்தன. கடையின் முகப்பில் ஐந்தாறு பேர்கள் தான் நிற்க முடியும். கேட்கும் ரகங்களை சின்னக் கிண்ணத்தில் அள்ளிக்கொண்டு வந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே கடை எங்கும் தூசியுடன் சிந்தி சிதறிக் கிடக்கும் இரண்டு கிலோவிற்கு மேற்பட்ட அரிசியில் எல்லாம் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தேன். 

ஆரம்ப காலத்தில் 25 கிலோ எடையை தாங்கிய அரிசிப்பை தான் வாங்கிக்கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களை நெருங்குகிற போதே அரிசியில் வண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பழைய அரிசி என கேட்டே வாங்கியும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வண்டின் வருகை தவிர்க்க முடியாததாய் இருக்கும். இதைத்தவிர்க்கவே, பத்துகிலோ அரிசி தீரத்தீர வாங்குவது வழக்கம் . 

சில நிபுணர்கள் காண்பிக்கப்படும் அரிசி வகைகளை உள்ளங்கையில் அள்ளி வாயில் போட்டு, தேர்ந்தெடுப்பதை பார்த்தேன் . வெறுமனே மெல்கின்ற அரிசியில் என்ன வேறுபாடு தெரியப்போகிறது, சும்மா வாய் அரவை போட அரிசியை மெல்பவர்கள் பால்யத்தில் தாங்கள் அரிசி தின்ற காலத்தை மீட்டெடுப்பதற்காக இருக்குலாம். :P 

வெளியே மழை வரும் போல இருந்தது. பத்திரமாக அரிசியை கொண்டு போக வேண்டும் என யோசித்தப்படி அரிசியைத் தேர்ந்தெடுத்தேன்.கொண்டு போன கட்டைப்பையைக் கொடுத்து கர்நாடகா பொன்னி அரிசியை போட சொல்லிவிட்டு, தனியாக பச்சரிசி வெண்பொங்கல் வைக்க வாங்கலாமா இல்லை பழைய அரிசியே போதுமா என யோசித்துக் கொண்டிருக்கையில், 'யம்மா, கொஞ்சம் தள்ளுங்க', என்ற குரல். அவ்வளவு நேரம் இருந்த பொறுமை காணாமல் போக சற்று குரலை உயர்த்தி, ' எவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா?  நான் வாங்கிட்டு போனப்புறம் நீங்க இங்கிட்டு வந்து வாங்குங்க', என்றேன். அந்த நபரோ பொறுமையாக, ' நான் இந்த கடை ஓனர்ம்மா', என்றார். அப்பொழுது தான் கவனித்தேன், கழுத்திலும், கைகளிலும் கூடுதல் எடையில் மினுமினுத்துக் கொண்டிருந்த தங்கத்தை. கல்லாவில் இருந்தப் பையனை கவனித்த பொழுது, ' என் பையன் தான்', என்றார் புன்னகையுடன். ' இன்னைக்கு தான் இந்த கடைக்கு வர்றேன், ஆனாலும் நீங்க மொதலயே ஓனர்னு சொல்லியிருக்கலாம்', என்றதும், ' இனி சொல்றேன்', என்றார் அதே புன்னகை மாறாமல். அரிசிக்கு உரிய பணத்தை கொடுத்து, கட்டைப்பையை வண்டியின் முன்னால் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்தேன். சில துளிகள் கைகளை நனைக்க அண்ணாந்து பார்த்தேன். முகத்திலும் இரண்டு துளிகள் விழுந்தன. கண்களை மூடி ஓரிரு நொடி அனுபவித்து விட்டு, ' இந்த அரிசிக்கடை அண்ணனுக்கு தானே இது, கொஞ்சம் பொறு, அஞ்சே நிமிஷம் எங்க பேர் எழுதின அரிசியை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போயிருவேன்,  அதுக்கப்புறம் ஆரம்பி', என்று என் குறுகிய ஒப்பந்தத்தை மதித்த மழை வீட்டை அடையும் வரை அமைதி காத்தது. :) 

1 கருத்து:

thambu சொன்னது…

இதில் இரண்டு விஷயங்கள் கவர்ந்தது. ஒரு எழுத்தாளனின் பார்வையில் பதியப்படும் இயல்பான நிகழ்வும் சுவாரசியமாகிறது. மற்றது ஒரு கடை நடத்தும் உரிமையாளரின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிறு நிகழ்வு. சூட்டினைக் குறைக்க குளிர்ச்சி தேவை, குளிர்ந்த மனதின் தாக்கம் //இந்த அரிசிக்கடை அண்ணனுக்கு தானே இது// அருமையான வரிகள் :)