திங்கள், 25 ஏப்ரல், 2016

பன்னீர்ப்பூவும் கந்தசாமியும்... (சிறுகதை)

கொட்டிக் கிடந்தப்  பன்னீர்ப் பூக்களை பார்வையால் சில நிமிடங்கள் ரசித்தாள் கயல்விழி.  குத்துக்காலிட்டு அமர்ந்தவள், கீழே கிடந்தவற்றில் ஒவ்வொன்றாக பதவிசாக எடுத்து, தனது நாசியில் வைத்து முகர்ந்த பின் இடது கையில் அடுக்க ஆரம்பித்தாள். பளீரென்ற வெண்மையிலும், அழகான தோற்றத்திலும் எண்ணற்ற பூக்கள் மயக்கும் வாசனையுடன் பூத்திருந்தாலும்,  கயலை எப்போதும் ஈர்க்கும் பூ பன்னீர்ப்பூ தான். நீண்ட வெளிறியப் பச்சை நிறக் காம்பும் உச்சியில் இதழ்களை விரித்து எளிமையான தோற்றத்துடன் இருக்கும் பன்னீர்ப்பூவின் வாசனை எப்போதுமே அவளை மயக்கி சொக்க வைக்கும். இந்தக் கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக, மரத்தின் அடியில் பரந்து கிடப்பவற்றில் சில பூக்களை சேகரித்து, அவளது புத்தகப் பையில் போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது. நாள் முழுவதும் வகுப்பில், தேவைப்படும்போதெல்லாம், பையைத் திறந்து, கண்களை மூடி முகர்ந்த வாசனையை, சில நொடிகள் தன்னுள்ளே வைத்துக் கொள்ள பிரயத்தனம் செய்வாள். வீட்டிற்கு சென்ற பின்,  தனது மேஜையில் பையைக் கவிழ்த்து  எஞ்சியிருக்கும் பூக்களின் வாசனையை தனது அறை முழுமைக்கும் அனுபவிக்கத் தருவாள். அவளது வீட்டின் அருகிலோ அல்லது கல்லூரியிலோ இந்த மரம் இருந்திருந்தால் கொண்டாட்டமாக இருந்திருக்கும் கயலுக்கு. இந்தக் கல்லூரியில், மதுரையில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும்,  நாடகத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு, வீதி நாடகம் குறித்த பயிலரங்கத்தை ஒரு வார காலத்திற்கு பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றி இருபது மாணவர்களுள் ஒருத்தியாக கயலும் இருந்தாள்.

பிரத்யேக வாசனைப் பூக்களுடன் கயல்  இருந்த மரத்தடியில், மிக அருகே பேன்ட் அணிந்த செருப்புக் கால்கள் வந்து நின்றன. அவற்றை கண்டு துணுக்குற்று, தலையை உயர்த்தினாள். இதே வகுப்பிற்காக வேறொரு கல்லூரியில் இருந்து வந்திருந்த கந்தசாமி புன்னகையுடன் நின்றிருந்தான். இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கலந்து கொண்ட வகுப்புகள் உட்பட, எந்த வகுப்பிலும் கந்தசாமி எந்தப் பெண்ணுடனும்  பேசிப் பார்த்தது கிடையாது இவள். அப்படிப்பட்டவன் எதற்காக தன்னருகே வந்து நின்று புன்னகைக்கிறான் என பலத்த யோசனையுடன்  பதிலுக்கு முகத்தை அளவாக மலர்த்தினாள். 
' எனக்கும் பன்னீர்ப்பூ பிடிக்கும் கயல்விழி', எனஅவன் புன்னகைத்தபடி சொன்னதும்,
' உங்க வீட்டில மரம் இருக்கா?"
' இருந்துச்சு, வீட்டை பெரிசா கட்டுறப்போ மரத்தை வெட்டிட்டாங்க, மரத்தையும், பூவையும் பார்க்கறப்போ எல்லாம் எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வரும்', என்றான். ஒரு பூ மாத்திரம் அவன் இரு விரல்களுக்கு மத்தியில் நின்றபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது.  சில நிமிடங்கள் நீண்ட அவன் பேச்சு அத்தனையும் குவிந்திருந்த பால்ய நினைவுகளில் இருந்து சிலவற்றை உருவி எடுத்து வரிசைப்படுத்தியது. 'மலைல வளர்ற மரம் மாதிரி ரொம்ப உசரமா இருக்கிறதும் இந்த மரத்துக்கு கொள்ளை அழகு', என சொன்னவள்,  ' நேரமாச்சு, க்ளாஸ் ஆரம்பிக்க போது, போலாம்', என்றாள். இருவரும் சேர்ந்து வந்ததை வகுப்பில் இருந்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்த உணர்வு கயல்விழிக்கு. 

பெண்கள் படிக்கும் பள்ளியில் படித்தவள். இப்போது கல்லூரியும் கூட அப்படியே.  இது மாதிரி முகாம்களின் போது, தன்னுடன் பேசும் சக ஆண்களிடம், பயிலரங்கம் குறித்த  உணர்வுகளைப்  பகிர்தல், அறிந்து கொள்ளல், என சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இவள் பேச்சு. ஓரளவு நன்றாகப் படித்தாலும், நாடகத்தில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குவதிலும் பெரும் பிரியம் உண்டு என்பதால், வீதி நாடகங்கள் குறித்த இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறாள்.  இது, அருகில் உள்ள கிராமங்களில் பத்து நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாமிடும் போது, விழிப்புணர்வுக்கான நாடகம் போடுவதற்கு உதவும். ஆதலால், இவளைப் போன்றே பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். செய்வன திருந்தச் செய், என்பதற்கேற்ப இங்கு தான் கற்றுக் கொண்டதை, திருப்தித் தரும் வரை வீட்டில் செயல்படுத்திப் பார்ப்பாள்.  வகுப்பு குறித்து எழும் சந்தேகத்தை வகுப்பிலேயே வினவுதல், திறம்பட கற்றுக் கொள்பவரை ஓரிரு வார்த்தைகளில் பாராட்டுதல், இவற்றை தாண்டி, ஆண்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்கிற எண்ணம் உள்ளவள். 

தன்னிடம் வந்து ஒருவன் தனியாகப் பேசுவதையே அனுமதிக்காத கயலுக்கு, யாருடனும் இல்லையில்லை எவளுடனும் பேசாத கந்தசாமி தன்னிடம் பேசியதில் உண்டான பெருமிதத்துடன் அன்றைய வகுப்பில் அமர்ந்திருந்தாள். தான் உண்டு தன் படிப்பு, குடும்பம்,நாடகம் உண்டு என்றிருந்தவளுக்கு, புத்தம் புதிதாக, சின்ன பயம் கலந்த, ஆர்ப்பரிப்பான ஆனந்த அலை மனம் முழுவதும் அடித்துக் கொண்டிருந்தது. இவற்றின் மத்தியில் வகுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்த உணர்வு சரியா, தவறா என்றெல்லாம் உள்ளே தாறுமாறாக ஆடிக் கொண்டிருந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு, வித்தியாசமாகப் பொங்கிக் கொண்டிருக்கும் களிப்பை, விருப்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம்.

அன்றைய தினத்தின் மதிய உணவு இடைவேளை. அடுக்கி வைக்கப்பட்டத் தட்டுகளிலிருந்து தங்களுக்குரிய ஒன்றை எடுத்து சோறு, குழம்பு, பொரியல் போன்றவற்றை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றனர் மாணவர்கள். சற்று தொலைவில் இருந்த ஒலிப்பெருக்கியிலிருந்து, ' 
'என்னைத் தாலாட்ட வருவாளா', என்ற பாடல் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் வந்த படங்களில் 'காதலுக்கு மரியாதை', சிறப்பான ஒன்றெனவும், விரைவில் தியேட்டருக்கு சென்று இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என்றும் சிலர் சிலாகித்துப்  பேசிக் கொண்டிருந்தனர். தேவைக்கு ஏற்ப பெற்ற உணவை மரநிழலைத் தேடி அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.  வலிய வந்து அவள் அருகில் உணவுத் தட்டுடன் அமர்ந்தான் கந்தசாமி. அப்பளத்தைக் கடித்தபடி  ' உங்க வீட்டில பன்னீர்ப் பூ மரம் வைக்கலாமே', என்றான். ' ம்ம்... மொதல வீடு வாங்கிட்டு ரெண்டாவது மரத்தை நடுற வேலைதான்', சொன்ன கயல் தண்ணீரைக் குடித்தாள். ' இவன் ஏன் வந்து எங்கிட்டயே பேசறான், இத்தனைக்கும் நாமளும் அப்படி ஒன்னும் இழுக்கிற அழகில்லையே' என்றெல்லாம் தனக்குள் குழம்பினாலும், அவன் தேடி வந்து பேசுவதை அவள் மிகவும் விரும்பத் தொடங்கினாள். அழகான உயரத்தில், வசீகரமான தோற்றத்தில் இருப்பவன், வகுப்பில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் சொல்பவனுக்கு தன்னைப் பிடித்திருப்பதை பாக்கியமாக எண்ணினாள். ஆனாலும் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் பேச வரும்போது சில நேரங்களில் பிகு செய்து கொள்வதின் மூலம் தானும் உசத்தி என்பதை வெளிப்படுத்துவதாக நினைத்தாள்.

வகுப்பு முடிந்து சான்றிதழ் வழங்கும் தினத்தில், அவளின் முகவரியைக் கேட்டுப் பெற்றான் .
மாதம் இரண்டு, மூன்று முறையாவது கல்லூரி செல்லும் வழியில் வீட்டின் அருகே என தரிசனம் தந்தும்  பெற்றும் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான் கந்தசாமி. ஒருநாள், அவனது வீட்டிற்கு விண்ணப்பத்திருந்த தொலைபேசி இணைப்பு கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்தாலும், தன் வீட்டிற்கான இணைப்பிற்கு விண்ணப்பிக்காத குடும்ப சூழல் அவளை வருத்தியது. தன் வீட்டிலும் இணைப்பு கிடைத்த நாளில் கந்தசாமியின் தொடர்பு எண்ணை பெற்றுக் கொள்வதாக சொன்னாள்.

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள்,  தீபாவளி முடிந்து, கல்லூரி செல்லும் வழியில் எதிரில் வந்தவன், ஒரு சிறிய பை நிறைய பன்னீர்ப் பூக்களைப் பரிசளித்தான். மறுக்க யோசிக்க செய்யாத அன்பளிப்பாக இருந்தப் பூக்களை ஆசை தீர முகர்ந்து பார்த்த கயல், ' தீபாவளி டிரஸ் போடலையா? ' , 
' மழை பேஞ்சு ரோடெல்லாம் சகதியா இருக்கு, புதுசு போட்டுட்டு வெளில வந்தா எப்படியும்  
அழுக்காகும், தெரிஞ்சே எதுக்கு புதுசு போட்டு சகதியை பூசிக்கனும்?' , என்ற போது இத்தனை மென்மையான மனதா இவனுக்கு என யோசித்தக் கயல், தன்னையும் கூட எதிர் காலத்தில் எப்படி பாதுகாப்பான் என திடமாக தெரிந்து விட்டதாக பூரித்தாள். சமயங்களில் அவனின் முட்டாள்த்தனமான செயல்களுக்கும் கூட, தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்ட பதில்களால் திருப்தியுற்றாள். இருவரிடமும் சாதாரண நட்பைத் தாண்டி நிரம்பி ததும்பிக் கொண்டிருந்தது அன்பு, பன்னீர்ப் பூக்களின் வாசனையுடன், என நம்பினாள். ஒற்றை ரோஜா வேண்டாம் ஒற்றைப் பன்னீர்ப் பூவுடன் தன்னுடைய நேசத்தை கந்தசாமி உரக்க சொல்லும் நாளுக்காக காத்திருந்தாள். 


அழகாக சென்று கொண்டிருந்த கயலின் ஆரவார அத்தியாயத்தில், தொடர்ந்து பல நாட்களாக அவன் பார்க்க வரவில்லை. கடைசி செமஸ்டர் தேர்வு, விடுமுறை என சில வாரங்கள் தொடர்ந்து அவனைப் பார்க்காததில், இவளுக்குப் பித்துப் பிடித்து விட்டது. மூன்றாவது வருடப் படிப்பு முடிந்த பிறகு மேற்படிப்பிற்காக சென்னை செல்வதாக பேச்சின் ஊடே அவன் சொல்லியிருந்ததும் நினைவில் வந்தது.அவனது முகவரியைத் தான் பெற்றுக் கொள்ளாததற்கு தன்னையே நொந்து கொண்டாள். தன்னைப் பார்க்கவராமைக்கு செமஸ்டர் மட்டுமே உண்மையானக் காரணமா எனக் கேள்வி எழுப்பியவள், ' 
' இல்ல,  இல்ல, அவன் பச்சைக் குழந்தை, என்னைத் தவிர இந்த ஒலகத்தில  எந்தப் பொண்ணும் அவன் கண்ணுக்குத் தெரியாது', என சொல்லிக் கொண்டவள், அவனை தவறாக ஒரு நொடி யோசித்தமைக்கு தன் தலையிலேயே தானே ஓங்கி ஒரு கொட்டு வைத்தாள். வீட்டில் இருக்கும் பூஜை அறையிலும், அருகில் இருக்கும் கோவிலிலும் அவளது ஒரே பிரார்த்தனை   தன்னை நேரில் கந்தசாமி வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே. கொஞ்சம் கூடுதலாக அவன் நினைவு துன்புறுத்தும் தினத்தில் உண்ணாவிரதம் இருந்து தொழுதாள். சில கிலோ எடை இழந்திருக்க, பார்ப்பவர்கள் எல்லாம் ' உடம்புக்கு என்ன?' என விசாரிக்க, நாட்கள் சீராக போய்க் கொண்டே இருந்தன. 

'இவ்ளோ பூ கெடக்கு, எடுத்து மோந்து பாக்காம எனக்கென்னனு போற', என கயலின் தங்கை சொன்ன போது தான் தெரிந்தது, உறவினரின் வீட்டு விழா நடந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த அத்தனை பெரிய பன்னீர்ப்பூ மரம். ' எப்படி தவறவிட்டேன், இந்தப் பூவையே பின்னுக்குத் தள்ளிடுச்சே அவனோட ஞாபகம்', என வருந்தியபடி திரும்பி மரத்தின் அருகே சென்றாள். ஒன்றிரண்டுப் பூக்களை எடுத்தவளுக்கு முகரத் தோன்றவில்லை. ' கந்தசாமி எப்படி இருக்கானோ, என்ன செய்கிறானோ, என யோசனையுடன் பார்த்தவள், ' ரொம்ப முக்கியம், இப்போ இந்தப் பூவோட வாசனை என எண்ணியவளாக அப்படியே கீழே போட்டுவிட்டு, மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவளது கைகளிலிருந்து விழுந்தப் பூக்கள்,  கீழேக் கிடந்த மற்ற பூக்களுடன் இணைந்து, வழக்கம் போல மண் தரையில் சுகமாக மல்லாந்தவாறே மரக்கிளைகளின் இடையேத் தெரியும் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தன. 



சில நாட்கள் ஏனோதானோவென சென்றன.
தேர்வு முடிவு வெளியான தினத்தில் கல்லூரி செல்லும் வழியில் பேரானந்தத்தின் மொத்த உருவமாக எதிரில் நடந்து வந்தான் கந்தசாமி. சற்று எடை கூடி, பளிச்செனப் புன்னகைத்தபடி அவன் வந்த போது,  உலகத்தையே வெற்றிபெற்ற புன்னகையுடன் எதிர் கொண்டாள். அவனின் திக் விஜயம், சோர்ந்து போயிருந்த உடலின் ஒவ்வொரு அணுவையும் உற்சாகம் கொள்ள செய்தது. பெருகிய நிம்மதியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ' எப்படி இருக்க? எங்க போன?', என வார்த்தைகள் பெருமூச்சின் சத்தத்துக்கு இடையில் கயலிடமிருந்து வந்து விழுந்தன. ' என்னோட நட்பு வட்டம் பெரிசு கயல். மனசுக்குப் பிடிச்ச எல்லார் கிட்டயும் அவங்க அட்ரஸ், கூடவே அவங்க என்னைப்பத்தி என்ன நெனைக்கறாங்கனு எழுத்து வடிவத்தில என்கிட்டே இருக்க ஆசைப் பட்டேன். தூரத்தில இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் தேடிப் போய் அவங்க கிட்ட எல்லாம் ஆட்டோக்ராப் வாங்க சில நாட்கள் ஆச்சு, நீ எப்படியும் ரிசல்ட் பார்க்க தான் வருவே, அப்போ பார்க்கலாம்னு தான் வரல,  அப்புறம்  சென்னை ல தான் பிஜி பண்ணப் போறேன், அதுக்கும் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வர்றேன்', என்றபடி ஒரு நோட்டை நீட்டினான். ' என்னைப் பத்தி நினைக்கிறதெல்லாம் நீயும் எழுதிக் கொடு, மதியம், இத வாங்கிக்கிறேன்', என விடைபெற்றான். 


சிவப்பு ரோஜாப் பூக்களால் நிரம்பிய நோட்டின் அட்டை இழுத்தாலும், கல்லூரியில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பினாள். இந்த நோட்டு எனக்காக மட்டும் வாங்கி இருப்பானோ?  என்னைப் பற்றி எதுவும் உள்ளே எழுதி இருப்பானோ? என நினைத்ததே பரவசப்படுத்தியது. என்னவெல்லாம் தான் எழுதலாம் என யோசித்தபடி இருந்தவளுக்கு ஏகப்பட்ட கவிதைகள் கொட்டியது. பன்னீர்ப்பூக்களை தேடி எடுத்து அவன் பெயரை  எழுதி, பூக்கள் மீது பசை தடவி ஓட்ட  வேண்டும் என தோன்றியது. வெள்ளைக் காகிதத்தில் எடுப்பாக இருக்காதோ என நினைத்தவள், சரி அடர் நீல நிறத்தில் கரைக்  கட்டி விடலாம் என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். தேர்வு முடிவைப் பார்க்கும் முன்பே குதூகலத்துடன் உள்ளே சென்றவள் இவள் ஒருத்தியாக  மட்டுமே இருக்கும். கல்லூரியில் தகவல் பலகையை சுற்றிக் கூட்டம். அதில், ஓட்டப்பட்டிருந்த மதிப்பெண்களுடன் வெளியாகி இருந்த தேர்வு முடிவுகளை மாணவிகள் கூட்டம்  முண்டியடித்து பார்த்துக் கொண்டிருந்தது. தன் வகுப்பு மாணவிகள் அக்கூட்டத்தில்  இருந்தும், நேர் எதிர் திசையில் சென்றாள். சற்று மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தபடி, வேகமாக ரோஜாக்கள் நிரம்பிய அட்டையைப்  புரட்டினாள். முதல் பக்கத்தில், ' கடந்த சில வருடங்களில் என்னுடன் பயணித்த பெண் தோழியர்களான நீங்கள், என்னைப் பற்றிய உங்கள் நினைவுகளை இங்கேப் பகிருங்கள், வாழ்நாள் முழுமைக்கும் பயணிக்கும் இந்தப் புத்தகம் என்னுடன்'. எனத் துவங்கிய புத்தகத்தின் அடுத்தடுத்து என நீண்ட பக்கங்களில் மொத்தம் முப்பத்தி நான்கு பெண்கள் தங்கள் முகவரியுடன், இவனைப் பற்றி ஆகா,ஓகோவென புகழ்ந்து தள்ளி இருந்தனர். கொட்ட ஆரம்பித்தக் கண்ணீரை, சற்று தள்ளி நின்றிருந்த பெண்கள் தேர்வு முடிவிற்காக வந்திருக்கலாம் என நினைத்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். மொத்த மகிழ்ச்சியும் தொலைந்து போய் நின்ற வெறுமையில் கோபமும் கவலையும் கைக் கோர்த்து பிரம்மாண்டமாக நின்றன. தனக்குப் பன்னீர்ப்பூ போல, மீதி உள்ளவர்களுக்கு என்ன செய்தான் என உள்ளே முளைத்தக் கேள்வி வேகமாக வளர்ந்து, படபடவென கிளை பரப்பி பெரும் விருட்சமாக விஸ்வரூபமெடுத்தது,  மிக மோசமாக ஏமாந்துவிட்டோமென எனப் பொங்கிய அழுகையைக் கட்டுப் படுத்தியபடி தேர்வு முடிவுகளை கூட பார்க்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினாள். அருகில் இருந்த தபால் நிலையத்திலிருந்து,  புத்தகத்தை முதல் பக்கத்தின் ஓரத்தில்   எழுதப்பட்டு இருந்த   கந்தசாமியின் முகவரிக்கு அனுப்பி வைத்தாள்... அனுப்புவதற்கு முன்... கடைசிப் பக்கத்தில்... ' விதவிதமான  பூக்களுக்கு மத்தியில் பன்னீர்ப்பூ இருக்காது',  எனக் கொட்டை எழுத்தில் எழுதியவள் கையெழுத்திட்டிருக்கவில்லை...

("தமிழின் அமுதம்" மார்ச் மாத இதழில் வெளிவந்தது...)

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

பன்னீர்ப்பூவும் கந்தசாமியும்...- அருமையான எழுத்தாற்றல் - அனுப்புவதற்கு முன்... கடைசிப் பக்கத்தில்... ' விதவிதமான பூக்களுக்கு மத்தியில் பன்னீர்ப்பூ இருக்காது', எனக் கொட்டை எழுத்தில் எழுதியவள் கையெழுத்திட்டிருக்கவில்லை..- அருமை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani

thambu சொன்னது…

படித்தவுடன் தோன்றியதை முதலில் பதிந்து விட்டேன். இனி :
ஒரு பெண்ணின் பார்வையில் அவள் மனதில் எழும் சலனத்தை இவ்வளவு நேர்த்தியாய் பதிய ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். எவ்வளவு தான் இறுகிய மனதுடன் கூடிய பெண்ணானாலும் ( குடும்ப சூழல், வளர்ந்த சூழல், இயற்கையாய் அமைந்த குணம் ) அவள் நேசிக்கும் ஒரு விஷயத்தை நேசிக்கும் ஆணைக் கண்டதும் மனம் மெல்ல அவன்பால் அசையும். அதிலும் அவளை மட்டுமே அவன் தேடுகிறான் என்று அவள் நம்பத்தொடங்கும் வேளையில் அவனை அரியாசனம் ஏற்றுகிறாள் மனதில்..இது எல்லாமே தன்னை மட்டும் என அவள் நம்பும் வரை தான் என்பதை அழுத்தமாய் இறுதியில் பதிந்த விதம் ஆஹா. .

ஒரு ஆணின் மனம் எத்தகைய என்பதை விட எத்தனை என்பதில் தான் குறியாய் இருக்கும் அவனாக இது மட்டுமே எனது என எண்ணும் வரை இது தொடரும் . இது அவனின் இயற்கை . பெண்ணோடு முடிந்த கதை ஆண் வரை வளர்ந்திருதால் இவள் எழுதிய பக்கமே அவன் ஆயுள் முழுதும் அவன் மனதில் இருக்கும் பக்கமாய் இருந்திருக்கும்.

ஒரு புனைவை, கருத்தை, நெறியை, முறையை, கால நிகழ்வை என பலதையும் வலியுறுத்தும் கதைகள் உண்டு ஆனால் மனித மனம் தாண்டி வரும் காலகட்டத்தை இயல்பாய் எடுத்துச் சொன்ன கதைகள் அதிகமில்லை. அந்த வயதில் படிக்கும் வசதியின்றி வேலைக்கு செல்லும் ஜனங்கள் மத்தியிலும் இது நடக்கும். துணிந்து இந்தக் கருவை எடுத்ததற்கு நன்றி. சரியான வயதில் இந்தக் கதையினைப் படிக்கும் இரு பாலாருக்கும் எதிர் பாலாரைப் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என்பது என் எண்ணம்

ஒரு குறிப்பிட்ட வயதில் பெரும்பாலான ஆணும் பெண்ணும் கடந்து வரும் உணர்வு பற்றிய கதை( சொந்த அனுபவம் இல்லாதவர்களுக்குக் கூட சுற்றி நடந்ததை கேட்ட, பார்த்த அனுபவமாவது இருக்கும்) என்பதால்
இதில் உங்கள் மெல்லிய இழையோடும் நகைச்சுவை இல்லை. அது என்னவோ குறையாய் இல்லை என்றாலும், இல்லை என்று தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.