செவ்வாய், 11 ஜூன், 2013

காயமும், மருந்தும்...

நினைவுப் பரப்பில், கடந்து வந்த இன்பம், துன்பம் யாவுமே பெரிய வேறுபாடு எதுவுமின்றி அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன சிறிய அடிக்குறிப்புகளோடு.......  இப்போது நம்முடன் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தம், அவஸ்தை என புத்தியில் பொதிந்திருப்பதெல்லாம் நாளை ஒரு சிறிய குறிப்போடு முடிந்து போக கூடியவைகளே.

இந்தக் கணத்தை இந்த நிமிடத்தை நாம் எதிர்கொள்வதாலேயே அளவில் சிறிய காயம் கூட காலத்தால் மிகப் பெரிய வலியைத் தருகிறது. இயற்கையாகவே  ஏற்கனவே இருக்கின்ற காயத்தின் வீரியத்தை குறைக்கும் திறன், புதிதாக வந்த மற்றொரு காயத்திற்கு உண்டு. காயங்களின் அளவுகள் வேறுபட்டதாக இருப்பினும் அவைகள் பண்பிலும் தன்மையிலும் ஒன்று போலவே உள்ளன.  அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை எல்லாம் கடந்த காலத்துக்கு மாற்ற முடிந்தால், எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணுவது போய் சேர இயலாத ஊருக்கான வழியாய் இருந்தாலும், குறுக்குத்தனமாக இப்படி யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை.

மாற்றம் என்று எதையும் செய்ய முடியாத, கடந்த கணம், எத்தகைய கனமானதாய் இருந்தாலும், எப்படியோ எதிர்கொண்டோம்   என்ற உணர்வு இருக்கிறது. அதை மகிழ்ச்சியாய்க் கடந்த நிமிடத்தை அலை வந்து கால் நனைக்கும் சிலிர்ப்பாகவே ரசிக்கிறோம்.  அதே நேரம் துயரத்தின்  பொழுதுகளில், உச்சி வெயிலில் தார் சாலையில் வெறும் கால்களால் நிற்பது போலான இம்சையை அனுபவிக்கிறோம். 

தேய தேய ஓட விட்டு பார்க்கும் கடந்தகாலத்தில், என்றோ மகிழ்ச்சி தந்த ஒன்றே நம்மை துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வுகளே அதிக நேரம், நிகழ் காலத்தை ஆக்கிரமிக்கின்றன. அதே நேரத்தில் சம்பந்தமில்லாதவர்களால் பட்ட வேதனைகளை, விரைவில் மறந்து போகிறோம்...

பெரும்பாலும்,  நம் காயத்தை ஆற்றும் முனைப்பில்,
நாம் உண்டாக்கிய காயங்களை, உணர இயலாத பரபரப்பில் இருக்கிறோம் என்பதை அடிக்கோடிட்டே சொல்ல வேண்டும்.

ஹ்ம்ம்...

ஒவ்வொரு காயமும் உருவாகும் பொழுதே, அதற்கான மருந்தும் தயாராகிவிடுகிறது.

சரி செய்பவர் என்று எண்ணிய மருத்துவர் பெரும்பாலும் கைவிட்டாலும், எத்தகைய கொடூரமான குணமுடையவர்களாக இருந்தாலும், அவர்களையும் மீட்க, நீளுகின்ற ஓரிரு கைகள் எப்பொழுதும் இருக்கின்றன.

குதறிய புண், குணமாகி ஒரு வடுவை விட்டு செல்லும்  வரையான காலத்தை, சுற்றி இருப்பவர்களை பொறுத்து, ஊர்ந்தோ, நடந்தோ, ஓடியோ, பறந்தோ கடக்கிறோம்.

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்... ஏதோ ஒரு கால கட்டத்தில் எல்லா ரணமும் ஆறி விடுகின்றன.

சமயங்களில், அறிமுகமே இல்லாமல் இருந்தும், வாடிய மனதிற்கு நீர் தெளித்து செல்லும் நல்லவர்களாலும் நிறைந்தது தான் இந்த உலகம்.

எனக்கு நான் சொல்லிக்கொள்வது, மருந்தாக இல்லாவிட்டாலும், யாரையும் காயமாக்காமல் இருப்பதற்காகவாவது முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: