வெள்ளி, 28 ஜூன், 2013

பேனாவை பின்னுக்கு தள்ளும் பென்சில்! :)

வாசித்துக் கொண்டிருக்கின்ற புத்தகத் தாளின் மூலையில், கூர்மையாக சீவிய பென்சிலால், இதுவரை அதிக அளவில் எழுதப்பட்ட என் பெயரை எத்தனையாவது முறையாகவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். முக்கிய வரிகள் என்று கருதுபவற்றை அடிக்கோடு இடுவது, அப்படியே ஓரங்களில் ஏதாவது சிறிய படங்களை மனம் போல வரைந்து கொண்டே இருப்பது, என்னையும் அறியாமல் அவ்வப்பொழுது நிகழும் செயல்.

முனை மழுங்கிய பென்சிலை ஷார்ப்னர் துணையுடன் கூர்மையாக்கி, மீண்டும் வாசிப்பைத் தொடரும் முன்னர், வழக்கம் போல வழி மறிக்கும் சிந்தனைகளில் ஒன்று பென்சிலில் வந்து நின்றது. பாதை மாறாமல் அதன் போக்கில் பயணித்ததில், அடிக்கோடிடப்பட்டவை கீழே உள்ளவை! :)

பள்ளியில், மூன்று, நான்காம் வகுப்புப் படிக்கும் காலங்களில், ஷார்ப்னர் என்பது மிக அரிதான பொருட்களில் ஒன்று, மேலும், அப்படிக் கிடைப்பவையும் கூட, ஒரு சில முறைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்கும்.

அன்றைய நாட்களில் வீட்டில் சவரம் செய்து ஒதுக்கப்பட்டிருக்கும் ப்ளேட்களில்(Blade)   ஒன்று உறையுடன்  டப்பாவில் எப்பொழுதும் இருக்கும்.  பெருவிரல், ஆட்காட்டி விரல்களுக்கிடையே ப்ளேடைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பிடித்துக் கொண்டிருக்கிற பென்சிலை, மரத்தூள்களை நீக்கி, உள்ளே இருக்கிற உக்கை கொண்டு வருவதென்பதை பெரிய சாதனையாகவே எண்ணி இருக்கிறேன்.

சிறிய அளவில் வெளியேறிய கருப்புக் குச்சியை,  தரையில் தலை கீழாய் வைத்து அதன் முனையை ப்ளேடின் துணையால், மிகக் கூர்மையாக்குவேன். பொதுவாக அந்த நேரங்களில், இரண்டு முறைக்கு ஒரு முறை சீவுகின்ற ஆள்காட்டி விரல் அல்லது பெருவிரலில் ஏற்படும் கீறல்களால் வெளியேறும் சில துளிகள் ரத்தத்தை, வீட்டில் வழங்கப்பட்ட ஆலோசனையின் பேரில் விரலை வாயில் வைத்து தடுத்து நிறுத்துவேன்.

வீட்டில் சாப்பிடும் பொழுது காயத்தில் படும் காரத்தால் எழுப்பும் உஸ்,உஸ் என்ற சத்தத்தை தடுப்பதற்காகவே, பள்ளிக் கிளம்பும் பொழுதே, அவர்களே பென்சிலை கூர்மையாக்கி கொடுத்து விடுவர். அது போக, முடிந்த அளவு, அதிகம் மழுங்கிய முனைகளை உடைய ப்ளேட்களை மட்டும் உபயோகிக்க சொல்வர். இதற்கு தேவைப்படும் அதிக அழுத்தத்தை கொடுத்து சீவும் பொழுது, உறுதியாக ரத்ததுளிகள் ஆர்வத்துடன் வந்து என்னை எட்டிப் பார்க்கும். :P




ஒரு கட்டத்தில், பென்சிலை இரண்டாக ஒடித்து, அதன், இரண்டு + இரண்டு நான்கு முனைகளையும் வீட்டிலேயே தாத்தாவின் மேற்பார்வையின் கீழே குடும்பமே, கூர்மையாக்கி டப்பாவிற்குள் வைத்து விடும்.
என் பாட்டியோ, இன்னும் ஒரு படி மேலே போய், 
' உக்கு இருக்கிற வரை எழுது, அம்புட்டு படிச்சா போதும்', என்று ஆலோசனை வழங்குவார்.


எனக்கோ, எப்பொழுது ஐந்தாவது போவோம், அங்கு போனால் பென்சில்க்கு பதில் பேனா. சீவும் தொல்லை எல்லாம் இருக்காதே என்ற எண்ணம். ஆனால் எந்நேரமும் விரல்களில் மையின் கறை படிந்திருக்க உதவி செய்யும் கசிந்து கொண்டே இருக்கும் பேனாவின் கழுத்து, சமயங்களில் மூடியின் ஓட்டையில் வழிந்து மொத்தப் பையையும், நீல வண்ணமாக்கும் அபாயம், எழுத திமிறும் நேரங்களில், மீண்டும் ப்ளேடை எடுத்து அதன் நிப்பின் மத்தியில் உள்ள பிளவில் அழுத்திக் கீறி, சரியான முறையில் மை இறங்க வழி செய்து கொடுப்பது, எழுதும் நேரத்தில் காலியாகும் மாணவர்களுக்கு பேனாவின் கழுத்தைத் திருகி மையை ஊற்றுவது, தேவைப்படும் பொழுது, இதே ரீதியில் கொடுத்தக் கடனைப் பெற்றுக்கொள்வது, நிப் உடையும் நேரங்களில் எல்லாம் மனதும் உடைந்து போனது, ஹீரோ பென் என்று வாங்கி, அதன் குறைந்த கொள்ளளவு மையை ஏற்ற, போராடியது..........  என்று பல வகைகளிலும் பென்சிலுடன் ஒப்பிடும் பொழுது, பேனா சற்று  பின் தங்கிவிடுகிறது.

இன்றும், என் கைப்பையில் ஒரு பென்சில் இருக்கும்.
பயணக்காலங்களில் தோன்றுபவற்றை, கேட்பவற்றை குறிப்பெடுக்க உதவும்.

எத்தனையோ வகைவகையான பேனாக்கள் இருந்தாலும், ஒரு பென்சிலின் இடத்தை அவற்றால் பறிக்க முடியவில்லை.

கருப்பு, சிவப்புக் கூட்டணியில் செங்குத்துக் கோடுகள் வரையப்பட்ட நடராஜ் பென்சில், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே விருப்பத்திற்குரிய பென்சில் ஆக இன்று வரை இருக்கிறது!

எழுதியதில் தவறானவற்றை அழிப்பது எளிது. தேவையற்ற தடயத்தை விட்டு செல்லாது என்பதாலும் கூட.........  பென்சில், விரல்களுக்கு கூடுதல் நேசமாகிப்போனது.


1 கருத்து:

Admin சொன்னது…

மீண்டும் நான் பென்சில் சீவிய தருணங்களில் இருக்கும் உணர்வைக் கொடுத்தது.