திங்கள், 2 டிசம்பர், 2013

எங்க ஊரு ஆறு! :(

நவம்பர் 24, பசுமை நடைக்காக சோழவந்தான்க்கு அருகில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் கோவிலுக்கும், அதன் இன்னொரு புறத்தில் வைகை ஓடிய ஆற்றுமணலுக்கும் சென்றோம். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோவிலை விரிவாக்கமும், புனரமைப்பும் செய்தார்கள். இக்கோவிலில் உள்ள 13 கல்வெட்டுகள் பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை.  அதில் ஒன்று விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலத்தது. திருஞான சம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு, அவர் "வன்னியும்மத்தமும்", என்னும் பதிகம் பாடியவுடன் ஏடு எதிரேறி ஒதுங்கி நின்றத்தலம். (சமணர்களுக்கும், சைவர்களுக்கும் தங்கள் மதமே சிறந்தது என்று எழுந்த சர்ச்சையில் ஏட்டில் தாங்கள் எழுதியப் பாடல்களை ஆற்றில் விட்டு, திரும்பி வரும் ஏட்டிற்கு உரிய மதமே சிறந்தது என்ற முடிவிற்கு வருவராம். இதன் பெயர் புனல்வாதம். அனல்வாதம் என்பது நெருப்பில் இட்டு முடிவு செய்வது.)

மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் வைகை, இந்த ஊரின் அருகிலே வடதெற்காக திரும்பி மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இதன் காரணமாக இறந்து போனவர்களுக்காக செய்கின்ற காரியங்கள், காசியில் செய்ததற்கு ஒப்பான பலனை அளிப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். சரி நாம் ஆற்றுக்கு வருவோம்.

இலக்கியங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற வைகை, நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் இருந்த ஆறு இந்த நவம்பர் மாதத்திலும் வெறும் மணலாகவே காட்சி அளிக்கிறது. இத்தனைக்கும், சித்திரைத் திருவிழாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வைகை, அந்த மாதத்தின் குறிப்பிட்ட அழகர் ஆற்றில் இறங்கும் நாட்களை ஒட்டி சுத்தப்படுத்தப்படுவதோடு, வேலை முடிந்ததாக நினைக்கும் மக்களையும் அரசையும் கொண்டே இருக்கிறது மதுரை.

ஆற்றின் ஓரங்களில் போடப்பட்டுள்ள தார்சாலைகளை உபயோகப்படுத்தி எளிதாகக் குப்பைகளை கொட்டிச்செல்லும் பல்வேறு வாகனங்கள். ஊருக்குள்ளேயே PTR, ஆல்பர்ட் விக்டர் போன்ற முக்கியப் பாலங்களில் ஏறி இறங்கும் பொழுதே இரண்டு பக்கங்களும் சிறிய குட்டையாகத் தேங்கிய கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், நிறைய செடிகளும், கூடவே மண் தரையையுமே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு, ஊருக்கு சற்று முன்பே உள்ள இடத்திலாவது, பாடல்கள் பலவற்றிலும் கண்ட வைகையை நீருடன் கண்டுவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் சென்றது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

ஆற்றின் கரையில் அமரலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு, ஆற்றின் உள்ளேயே மணல் தான் உள்ளது என்று வரவேற்ற வைகையின் ஓரங்களில் இருந்த பசுமையான மரங்களே சற்று ஆறுதல் அளித்தன.

என்ன ஒரு வேறுபாடு என்றால், நகரின் உள்பக்கத்தில் ஆற்றின் உள்ளே கொட்டப்படும், கலக்கும் கழிவுகளுடன் ஒப்பிடுகையில், கிராமங்களின் பங்கு கொஞ்சமே கொஞ்சம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, எளிதில் மட்கிப்போகும், நிலத்தை மாசுபடுத்தாதக் கழிவுகளை மட்டுமே ஆற்றிற்கு அளிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு ஆற்றை மாசுபடுத்தி, கிட்டத்தட்ட தொலைத்துவிட்டு திருவிழாக் காலங்களில் மட்டும் மெனக்கெட்டு நீரை வரவழைக்கும் குற்றவுணர்வு அற்றவர்களாகவே இருக்கின்றோம்.

தாமிரபரணியோ, காவிரியோ அவ்வூர் மக்களின் தெய்வமாக கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் பாலங்களை கடக்கையில் இத்தனை கழிவுகளைத்  தாங்கிய அவலக் காட்சியைக் கண்டதில்லை. நம்மூரிலும், அழகர் இறங்குகிறார் என்கிற போது, அந்தக் காரணத்திற்காகவாவது, சுத்தமாக வைத்திருக்கலாம். ஊர் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், நம் வைகைக்காக என்ன செய்தோம்? குறைந்தபட்சம் கழிவுகளைக் கலக்க விடாமல் செய்யக்கூட இயலவில்லை.

என் வீடு சுத்தமாக இருக்கிறது. போதுமான அளவில் நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கிறது, என்பதனையே  போதுமானதாக எண்ணுகிறோம். பாடங்களில் படித்த நம் ஆறு, மழை அதிகமாகப் பெய்கையில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து, மறுபடி குப்பைகள், கழிவுகள் என்று வழக்கமான முகத்திற்கு திரும்புகிறது.

என்னென்னவோ புயல்கள் வந்து போனதென்று சொன்னாலும், கடந்த சில நாட்களாக மழை வருவதற்கான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு சொட்டு மழையையும் காணோம் எங்கள் ஊரில். மழை தொடர்ச்சியாகப் பெய்து ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடாவிட்டாலும், ஆறு என்றால் இது தான் என்கின்ற அளவிலாவது தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அதைப்போலவே ஆற்றை அசுத்தப்படுத்துதல், தன் வீட்டை அசிங்கப் படுத்துவதற்கு சமம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்ற ஆசை  எழுகிறது........

எதனையும் தீர்வாக சொல்ல முடியவில்லை....
என்ன செய்யலாம் இதற்கு என்பதே கேள்விக்குறியாக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.....
எங்கேயாவது, யாராவது இதற்கான பதிலை செயலாகவே நடைமுறைப்படுத்தலாம் என்ற பேராவலின் ஊடே......... இந்தக் கேள்வியை இந்த சின்னஞ்சிறியப்பதிவில் அடக்கி இருக்கிறேன்.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதனையும் தீர்வாக சொல்ல முடியவில்லை.... என்னமோ போங்க...

thambu சொன்னது…

//எங்கேயாவது, யாராவது இதற்கான பதிலை செயலாகவே நடைமுறைப்படுத்தலாம் என்ற பேராவலின் ஊடே.......// செயல்படக் கூடியவர்கள் என்று நம்பித்தான் தேர்ந்தெடுக்கிறோம்.இதில் ஒரு முரண், இந்தக் கொடுமையினால் கடைசியாகப் பாதிக்கப் படுபவர்கள் இதனை தடுக்கக் கூடிய கனவான்களே.ஒருவேளை அதனால் தான் இதற்க்கு இன்னும் விடிவில்லையோ.
ஒருவேளை அதனால் தான் இதற்க்கு இன்னும் விடிவில்லையோ.

மண்டை கொதிக்குது .பதிவின் நோக்கம் இதுவெனில் வென்று விட்டீர்கள் தீபா.

Rathnavel Natarajan சொன்னது…

சரி நாம் ஆற்றுக்கு வருவோம். = என் வீடு சுத்தமாக இருக்கிறது. போதுமான அளவில் நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கிறது, என்பதனையே போதுமானதாக எண்ணுகிறோம். பாடங்களில் படித்த நம் ஆறு, மழை அதிகமாகப் பெய்கையில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து, மறுபடி குப்பைகள், கழிவுகள் என்று வழக்கமான முகத்திற்கு திரும்புகிறது. = அருமையான எழுத்து நடை - Commanding performance - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani