ஞாயிறு, 14 ஜூன், 2015

பல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்

நேற்று மாலைப் பொழுதில், ஊஞ்சலில் அமர்ந்தபடி பார்த்த வானம் இருட்டவே, பார்வை, சீலிங்கிற்கு சென்றது. மேலே பொருத்தியிருந்த விளக்கிற்கு அருகே மிளகு அளவிலான பூச்சிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அவை எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் அந்த சீலிங்கில் தலை கீழாய் அமர்ந்திருப்பதால் அவற்றிற்கு ஏதோ சுகம் கிடைத்திருக்கலாம் என மட்டும் யூகிக்க முடிகிறது. மெதுவாக பதுங்கியபடி வந்த மூன்று பல்லிகள், வேக வேகமாக பூச்சிகளை விழுங்க ஆரம்பித்தன. நொடிக்கும் குறைவான நேரத்தில் தலையை உயர்த்தி ஒவ்வொரு பூச்சியையும் தின்றன. பூச்சிகளை எப்படி விரட்டலாம் என யோசனை ஒரு புறம், இன்னொரு புறம் பல்லிகளின் ஆகாரம் வேறென்ன என சிந்திக்கையிலேயே பாதி பூச்சிகளின் ஆயுள் முடிந்திருந்தது. சும்மாவாவது பறந்து பறந்து இடம் மாற்றிக் கொண்டிருந்த பூச்சிகள், தப்பிக்க எந்த ஒரு எத்தனமும் இன்றி பல்லியிடம் தங்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது போல பரிதாபமாக இருந்தது அக்காட்சி. அடுத்த சில நிமிடங்களில் பூச்சிகள் இருந்த சுவடே இல்லை. 


இன்று உள் அறையில் கதவை ஒட்டி இருந்த சுவரில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சில எறும்புகள் ஏதோ பூச்சியை உணவாக சுமந்து செல்ல, வரிசையின் முன்னேயும், பின்னேயும் பாதுகாப்பாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. ஓரடித் தொலைவிலிருந்து பார்த்த பல்லி ஒன்று மிக மெதுவாக நகர்ந்து வந்தது. ஒரு சில சென்டிமீட்டர் இடைவெளியில் தன் உடலை எக்கி, கண்களால் இரையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பூச்சியை பறித்து செல்ல முயற்சித்து தோற்று, ஓரடி பின் வாங்கி சென்று மீண்டும் பார்த்தது. எறும்பு கடித்ததோ என்னவோ தெரியவில்லை. வரிசையிலிருந்து பிரிந்த சில எறும்புகள், இரண்டு பக்கங்களிலும் சில சென்டிமீட்டர் தூரம் ஊர்ந்தது பல்லியைத் தேடியா எனத் தெரியவில்லை. சில நிமிடங்களில் அவற்றின் இரையைப் பாதுகாத்தபடி மறைந்து போனது அந்த எறும்புக் கூட்டம். 
# ஏதேதோ சிந்தனையைக் கிளறியபடி இருக்கின்றன இவ்விரு காட்சிகளும்.

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

வாழ்க்கை இப்படித்தான் நடக்குதுப்பா. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தேவை!

எங்கூரில் பல்லி கிடையாது.

மகளுக்கு முதல் பல்லியை சென்னையில் காமிச்சேன்.

There is a dragon on the wall என்றாள்:-)

Unknown சொன்னது…

அடுத்த முறை சிக்கன் மட்டன் சாப்பிடும் போது இதே கட்டுரை ஞாபகம் வைத்து கொள்ளுங்க உங்களுக்கே சிரிப்பு தானே வரும்

thambu சொன்னது…

ஏதேதோ யோசித்தாலும், உறுதியாய் ஒன்று தோன்றுகிறது வளர்ச்சி,பாதுகாப்பு இது எல்லாம் ஒரு குழுவாய்,ஒற்றுமையாய்,ஒத்து வாழும் உயிரனத்திற்கு அதிகம் சாத்தியப்படுகிறது. இல்லாத உயிரினம் கதி அதோகதிதான் பெரும்பாலும்.
சில மனித மனங்களின் ஒப்பீடாகவும் இதனை கருதமுடியும். அதுமட்டுமல்லாது காண்பவரின் மனநிலையும் புரிதலை வித்தியாசப்படுத்தும்.இப்படி இன்னும் யோசித்துக்கெண்டே போகலாம். அதிகமாய் யோசிக்கத்தூண்டிய பதிவினை இன்னும் சில நாடகள்கூட அசைபோடலாம் அல்லது ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்றும் தோனறலாம்.
சீரிய சின்னப் பதிவு :)