வெள்ளி, 15 நவம்பர், 2013

பெயர் வரலாறு!

அம்மா அப்பாவின் கைகளைப் பிடித்தபடி ஆடிக்கொண்டே மலர்ச்சியுடன் பள்ளிக்கு முதல் நாளில் அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு தெரியாது தன் பெயர் மாற்றப்போகும் சம்பவம் நிகழப் போகின்ற நாள் அது என்று. பிறந்த ஆறு மாதம் வரை, ஜாதகப் படி வைத்தப் பெயர் என்று சர்மிளாவாக பல் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அம்மாவிற்கு அந்தப் பெயர் அவ்வளவாக ஒட்டாமலே இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் புகழ் பெறத் தொடங்கியிருந்த ஒரு நடிகையின் பெயர் பிடித்துப் போய் அதையே, தன் மகளுக்கு புதிதாக சூட்டி அழைக்கத்தொடங்கி இருக்கிறார். நான்கு வயது வரை வெறும் தீபா வாகவே இருந்த அந்த குழந்தையே நான் தான். :P

இப்போது, மீண்டும் நர்சரி பள்ளி, 1981,ஜூன்.....
விண்ணப்பம் நிரப்புபவரிடம் தீபா என்று அப்பா சொல்ல, ஒரு நிமிடம் என்று சொல்லி அப்பாவிடம், 'நம்ம குடும்பத்தில மூத்தப் பிள்ளைகளுக்கு எல்லாம் குல தெய்வம் பேரை சேர்த்து வைக்கணும், இவளுக்கும் அது மாதிரி பேரை வைக்கணும்', என்று சொல்வதை கேட்கிறேன், அவ்வளவு விவரம் இல்லாததால், எதிர்க்காமல் வேடிக்கைப் பார்க்கிறேன். நாக என்று ஆரம்பித்து ஏழு, எட்டுப் பெயர்கள் வரை ஆலோசித்து, இந்த ராணி மட்டும் பிற்சேர்க்கையாக சேர்த்து உள்ள பெயர் கொஞ்சம் தள்ளி உள்ள சொந்தத்தில் உள்ளதால், இதுவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, என்னிடம், இனி உன் பெயர் ஸ்கூல் ல இது தான் என்பதை,'ஐ எனக்கு ரெண்டு பெயர்', என்று சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டேன்.
 
 
 


 
உயர்நிலைப் பள்ளிக்கு சென்று ஓரிரு வருடங்களிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை. வெளியே யார் பெயர் கேட்டாலும், வீட்டில், சொந்தத்தில், அக்கம்பக்கம் அழைக்கும் பெயரை சொல்வதா அல்லது, பள்ளியில் கூப்பிடும் பெயரை சொல்வதா என்று. இதில் நாளாக ஆக, உடன் படிப்போர் கிண்டல் செய்ய, நான் என்ன பாம்புக்கு எல்லாம் ராணியா எதுக்கு இந்த பேர் வச்சீங்க என்று அவ்வப்பொழுது சண்டை போடுவேன். தம்பியிடம், 'டேய், நீ முதல பிறந்து இருந்தா நீ மாட்டிருப்ப', என்று சொல்லிக்கொண்டே, 'தெரிஞ்சுக்கோ, குடும்பத்தில மூத்தப் பிள்ளைக்குனு எல்லாம் பண்றாங்கன்னா, இது மாதிரி தியாகம் எல்லாம் நாங்க செய்றோம்', என்று புலம்பித் தள்ளி இருக்கிறேன்.

ஏதேனும் பத்திரிக்கையில் அல்லது தொலைக்காட்சியில் ஒரு பெயரைப் பார்த்தவுடன், 'இந்த பேர் நல்லா இருக்குல', என்று என் அம்மா சொல்லும் பொழுது, 'அப்புறம் உங்களை மாதிரி எனக்கென்னான்னு பேர் வைப்பாங்க', என்று எகிறுவேன். 'ஏம்மா, உங்க பேர்ல தம்பிப் பேர் வரை எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு மட்டும் ஏன் இப்படி பேர் வச்சீங்க', என்று கேட்டால், 'விரலை சூப்பிட்டு வேடிக்கை பார்த்த நீ இப்படியெல்லாம் பேசுவேன்னு தெரியாம வச்சிட்டேன். இப்போ கூட மாத்து', என்று சொல்லும் பொழுது மேல்நிலைப்பள்ளி வகுப்பை முடித்திருந்தேன்.
கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதில் இருந்து, வீட்டில் இருப்பவர்கள் தப்பித்தனர். :P

கல்லூரி முடித்தப் பிறகு, எப்படியும் வேறு எந்தப் பெயரையும் முன்னாலோ, பின்னாலோ சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. எனவே நீளப் பெயராக இருக்கட்டும் என்று இரண்டு பெயர்களையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கிவிட்டேன்.


நாம், அதிகம் உபயோகிக்காமல் இருந்தாலும், ஒருவரின்  பெயர் அவரின் குணம் அறியப்படாத வரை, அவர்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது என்பது ஓரளவு உண்மையே. சில நேரம், சிலரால்,  நம் பெயர் அழைக்கப்படும் விதமே, கடினமான சூழலையும் இலகுவாக்கும். பெயர் என்பது பெயரளவிற்கு நிச்சயமாக இல்லை......... பிறருக்கு அறிமுகமாகி, வாழ்ந்து, மறைகையில் விட்டு செல்லும் உயிரை சுமந்திருக்கும் உடலுக்கு இணையாகவே பெயர் இருக்கிறது!


2 கருத்துகள்:

thambu சொன்னது…

நூற்றுக்குப் பத்துபேர் தன பெயர் பற்றிய வருத்தத்தைக் கடந்து வந்தவர்கள்தாம் .வருத்தம் எனக்கென்னவோ அது உச்சரிக்கப்படும் விதத்தில் தானே அன்றி பெயரால் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் செயல் அவர்கள் பெயர் உச்சரிக்கப்படும் விதத்தை மாற்றியமைக்கும்போது அந்த குறை மனதை விட்டு அகன்று விடும் . நம் தரத்தை நாம் நிரூபிக்கும் பொழுது நம் பெயரே நம் அடையாளமுமாகும் . அழகான ,கோர்வையான ,அசைபோட வைக்கும் பதிவு.

Rathnavel Natarajan சொன்னது…

கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதில் இருந்து, வீட்டில் இருப்பவர்கள் தப்பித்தனர்.
= அருமை. வாழ்த்துகள்.