வெள்ளி, 29 நவம்பர், 2013

தேங்காய் பப்ஸ் கூடவே என்னோட தோழியும்!

நேற்றையப் பதிவின் நீட்சியாக தொடர்ந்த எண்ணங்களை வரிசைப்படுத்தி உள்ளேன். ஓரளவு என்னைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட ஓரிருவரில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பள்ளிவகுப்பு வரை உடன் வந்த நட்பு தமிழரசி. ( அதன் பிறகு லதா....... லதா பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுத வேண்டும்) நான் வாங்கினேன் என்பதற்காக அதே மெரூன் வண்ணத்தில் BSA SLR சைக்கிள் வாங்கியவள்.


93 - 95, மேல்நிலை வகுப்பு படிக்கும் காலங்களில், பள்ளிக்கு செல்கையில், தினமும் ஐம்பது பைசா கிடைக்கும். இதை சேர்த்து வைத்து, அதற்குள் சஞ்சாயிகா சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து, சைக்கிள்க்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்தோடு, எங்கள் சத்துக்கு நாங்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளுக்கும் இதிலிருந்தே செலவு செய்ய வேண்டும். கொஞ்சம் பெரிய அளவில் தேவை என்றால் மட்டுமே பாட்டியிடம் செல்வது, மற்றபடி, வீட்டில் கூடுதலாக கேட்பது கிடையாது.


இப்படி மிச்சம் பிடித்து மிச்சம் பிடித்து மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை பள்ளியில் உள்ள கேண்டீனில் தேங்காய் பப்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இந்த பப்ஸ், சின்ன வட்டமாக, உள்ளே அளவான தேங்காய்த் துருவலுடன், சுட்டெடுக்கப்பட்டு ஆங்காங்கே மெலிதாகக் கருகி, உச்சியில் ட்யூட்டி ப்ரூட்டியில் உள்ள சின்ன சிவப்பு சதுரம் பதிக்கப்பட்டு இருக்கும். அன்றைய விலை எழுபத்தைந்து காசு. இன்றைக்கும் மதுரையில் பல டீ கடைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேக்கரி வகையறாக்களில் இதுவும் இருக்கும். இதே பப்ஸ் பெரிய பேக்கரிகளில் கூடுதல் தேங்காயுடன், எந்த கருகலும் இல்லாமல், உச்சியில் செர்ரிப் பழத்தை தாங்கிக்கொண்டு கிடைக்கும், ஆனால் சுவை அதில் பாதி கூட இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலும் திகட்டி விடும். சரி மேட்டர்க்கு வருகிறேன்.


வகுப்புகள் மூன்றரை மணிக்கு முடிந்தாலும், ஐந்து மணி வரை ஸ்டடி என்று எல்லோரும் வகுப்பில் உட்கார்ந்திருக்க, விளையாட்டில் இருப்பவர்கள் மட்டும் மைதானத்திற்கு சென்று விடுவோம். ஐந்தரை மணி வரை பயிற்சி எடுத்தப் பிறகு வீட்டிற்கு கிளம்புவோம். தமிழரசி ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்து எனக்காக மைதானத்தின் அருகே காத்திருப்பாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வாங்கி சாப்பிடுவதற்கு, முதல் நாளே திட்டமிடுவோம். சமயங்களில் பழச்சாறும் சேர்த்து வாங்குவோம்.



ஐந்தரை மணிக்கு மேல் மிகமிகக் குறைவான மாணவியரே இருப்பர். தேங்காய் பப்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு, வழக்கம் போல உட்காரும் மரத்தடியில் அமர்ந்து, பல கதைகளை பேசிக்கொண்டே இருப்பது எங்களுக்கு அடுத்த பல நாட்களுக்கான உற்சாகத்தை தருவதாக எண்ணியிருக்கிறேன். இதில் மற்றைய உணவுகளைப் போலவே, ருசியை உணர்ந்து கொண்டே, வேகவேகமாக காலி செய்துவிடுவேன் பப்ஸை, அவளோ எலிக் கருமுவது போல, மிக மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். ' அங்க பாரு ஹாஸ்டல் பிள்ளைக வர்றாங்க, அவங்களுக்காக தான் இம்புட்டு மெதுவா சாப்பிடறியா,' என்றால், 'என்னதை தரமாட்டேன், நாம ஷேர் பண்ணி இன்னொன்னு வாங்கிக் கொடுக்கலாம்', என்பாள்.


இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சண்டை என்று சில நாட்கள் பேசாமல் இருப்போம். அப்பொழுதும் சேர்ந்து சைக்கிளில் செல்வதற்காக காத்திருப்பாள். எனது வீட்டிற்கான திருப்பத்தில் வளைவது வரை எதுவும் பேசிக்கொள்ளாமலே சேர்ந்தே ஓட்டிக் கொண்டு வருவோம். :P

இன்னொன்று..... பாட்டு. சில விருப்பமான பாடல்களை பாடுகிறேன் பேர்வழி என்று வாசிப்பும் இல்லாமல், பாட்டாகவும் இல்லாமல் என்னுடன் போட்டிப்போடும் அளவிற்கு கத்திக் குவிப்பாள். சில நேரங்களில், 'ப்ளீஸ் இது என் பேவ்ரட் பாட்டு, கொலை பண்ணாதே, நானும் உனக்குப் பிடிச்சப் பாட்டை கொலை பண்ணல', என்ற டீலிங் பரஸ்பரம் எங்கள் காதுகளை காப்பாற்றி இருக்கிறது. :P


இன்று காவல் துறை அதிகாரியின் மனைவியாக, சராசரி குடும்பத்தலைவியாக இருக்கும் தமிழரசி, தேங்காய் பப்ஸை பேக்கரி செல்லும் நேரங்களில் எல்லாம்  கேட்டு வாங்குவதாக சொன்னாள், அடுத்த தடவை டீ கடைகளில் தேடு. அதே சுவையோடு கிடைக்கும் என்றேன்.



அன்றைய நாட்களில், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் தரப்படாமல், எளிதில் காசு கிடைத்ததில்லை. கல்லூரி சென்றவுடன் வீட்டில் ட்யூசன் எடுக்க ஆரம்பித்தப் பிறகு ஓரளவு மாதவருமானம் வந்து கொண்டிருந்தது. ஐந்தரை வருடங்களில் அந்தப் பணத்தை சேமிப்பது போக, மனது சரி என்று சொல்பவைக்கு கொடுத்தது போக, தனிப்பட்ட முறையில் எனக்கென்று எதுவும் சிறப்பாக வாங்கிக்கொண்டது இல்லை. அப்படி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, அனாவசியம் என்று நினைப்பதற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனது வருவதில்லை.


எதுவும் அபூர்வமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு கூடுதல். காணும் இடங்களில் எல்லாம் தாராளமாகக் கிடைத்தாலும், எப்பொழுதேனும் வாங்கிக் கொள்ளும் நேரங்களில், அதன் மதிப்பை தொடர செய்யலாம். எல்லாவற்றையும் எளிதாக கிடைக்கும் என்ற அட்டவணையின் கீழ் உட்படுத்தும் பொழுது, அலுப்பும் சலிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றன. ஒன்றிரண்டையாவது, கொண்டாடுவதற்கு என்று விட்டு வைக்கும் மனநிலை, என்னை கூடுதல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.




வெள்ளி, 15 நவம்பர், 2013

பெயர் வரலாறு!

அம்மா அப்பாவின் கைகளைப் பிடித்தபடி ஆடிக்கொண்டே மலர்ச்சியுடன் பள்ளிக்கு முதல் நாளில் அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு தெரியாது தன் பெயர் மாற்றப்போகும் சம்பவம் நிகழப் போகின்ற நாள் அது என்று. பிறந்த ஆறு மாதம் வரை, ஜாதகப் படி வைத்தப் பெயர் என்று சர்மிளாவாக பல் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அம்மாவிற்கு அந்தப் பெயர் அவ்வளவாக ஒட்டாமலே இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் புகழ் பெறத் தொடங்கியிருந்த ஒரு நடிகையின் பெயர் பிடித்துப் போய் அதையே, தன் மகளுக்கு புதிதாக சூட்டி அழைக்கத்தொடங்கி இருக்கிறார். நான்கு வயது வரை வெறும் தீபா வாகவே இருந்த அந்த குழந்தையே நான் தான். :P

இப்போது, மீண்டும் நர்சரி பள்ளி, 1981,ஜூன்.....
விண்ணப்பம் நிரப்புபவரிடம் தீபா என்று அப்பா சொல்ல, ஒரு நிமிடம் என்று சொல்லி அப்பாவிடம், 'நம்ம குடும்பத்தில மூத்தப் பிள்ளைகளுக்கு எல்லாம் குல தெய்வம் பேரை சேர்த்து வைக்கணும், இவளுக்கும் அது மாதிரி பேரை வைக்கணும்', என்று சொல்வதை கேட்கிறேன், அவ்வளவு விவரம் இல்லாததால், எதிர்க்காமல் வேடிக்கைப் பார்க்கிறேன். நாக என்று ஆரம்பித்து ஏழு, எட்டுப் பெயர்கள் வரை ஆலோசித்து, இந்த ராணி மட்டும் பிற்சேர்க்கையாக சேர்த்து உள்ள பெயர் கொஞ்சம் தள்ளி உள்ள சொந்தத்தில் உள்ளதால், இதுவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, என்னிடம், இனி உன் பெயர் ஸ்கூல் ல இது தான் என்பதை,'ஐ எனக்கு ரெண்டு பெயர்', என்று சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டேன்.
 
 
 


 
உயர்நிலைப் பள்ளிக்கு சென்று ஓரிரு வருடங்களிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை. வெளியே யார் பெயர் கேட்டாலும், வீட்டில், சொந்தத்தில், அக்கம்பக்கம் அழைக்கும் பெயரை சொல்வதா அல்லது, பள்ளியில் கூப்பிடும் பெயரை சொல்வதா என்று. இதில் நாளாக ஆக, உடன் படிப்போர் கிண்டல் செய்ய, நான் என்ன பாம்புக்கு எல்லாம் ராணியா எதுக்கு இந்த பேர் வச்சீங்க என்று அவ்வப்பொழுது சண்டை போடுவேன். தம்பியிடம், 'டேய், நீ முதல பிறந்து இருந்தா நீ மாட்டிருப்ப', என்று சொல்லிக்கொண்டே, 'தெரிஞ்சுக்கோ, குடும்பத்தில மூத்தப் பிள்ளைக்குனு எல்லாம் பண்றாங்கன்னா, இது மாதிரி தியாகம் எல்லாம் நாங்க செய்றோம்', என்று புலம்பித் தள்ளி இருக்கிறேன்.

ஏதேனும் பத்திரிக்கையில் அல்லது தொலைக்காட்சியில் ஒரு பெயரைப் பார்த்தவுடன், 'இந்த பேர் நல்லா இருக்குல', என்று என் அம்மா சொல்லும் பொழுது, 'அப்புறம் உங்களை மாதிரி எனக்கென்னான்னு பேர் வைப்பாங்க', என்று எகிறுவேன். 'ஏம்மா, உங்க பேர்ல தம்பிப் பேர் வரை எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு மட்டும் ஏன் இப்படி பேர் வச்சீங்க', என்று கேட்டால், 'விரலை சூப்பிட்டு வேடிக்கை பார்த்த நீ இப்படியெல்லாம் பேசுவேன்னு தெரியாம வச்சிட்டேன். இப்போ கூட மாத்து', என்று சொல்லும் பொழுது மேல்நிலைப்பள்ளி வகுப்பை முடித்திருந்தேன்.
கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதில் இருந்து, வீட்டில் இருப்பவர்கள் தப்பித்தனர். :P

கல்லூரி முடித்தப் பிறகு, எப்படியும் வேறு எந்தப் பெயரையும் முன்னாலோ, பின்னாலோ சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. எனவே நீளப் பெயராக இருக்கட்டும் என்று இரண்டு பெயர்களையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கிவிட்டேன்.


நாம், அதிகம் உபயோகிக்காமல் இருந்தாலும், ஒருவரின்  பெயர் அவரின் குணம் அறியப்படாத வரை, அவர்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது என்பது ஓரளவு உண்மையே. சில நேரம், சிலரால்,  நம் பெயர் அழைக்கப்படும் விதமே, கடினமான சூழலையும் இலகுவாக்கும். பெயர் என்பது பெயரளவிற்கு நிச்சயமாக இல்லை......... பிறருக்கு அறிமுகமாகி, வாழ்ந்து, மறைகையில் விட்டு செல்லும் உயிரை சுமந்திருக்கும் உடலுக்கு இணையாகவே பெயர் இருக்கிறது!


ஞாயிறு, 10 நவம்பர், 2013

கொஞ்சம் வெளியில் வலியும் + கொஞ்சம் உள்ளுக்குள் வலியும் ........

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே இது வரை காரணம் அறியப்படாமல் உள்ள முன்னங்காலில் ஏற்பட்ட ரத்தக்கட்டிற்கு தினமும் இரண்டு முறை வெந்நீர் ஒத்தடம் வைத்ததில், வலி கொஞ்சம் குறைந்து, கட்டியின் அளவும் சற்று குறைந்தது போல இருக்கவே, விரைவில் குணமாகும் ஆவலில் மூன்றாவது நாளில், நான்குமுறை ஒத்தடம் கொடுக்க திட்டமிட்டேன். நான்காவது முறை பொறுக்கும் சூட்டில் சிறிய துணியில் வெந்நீரை வைத்து ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டே இருக்கும் பொழுதே கூடுதலாக அழுத்தம் கொடுத்து அழுத்தினேன். உள்ளே இருக்கும் ரத்தக்கட்டு கரைந்து மாயமாகும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு அழுத்தியதில், ஐம்பது காசு அளவிற்கு உஷ்ணம் தாங்காமல் உரிந்து வந்தது தோலின் மேல் பகுதி. போட்ட சத்தத்தில் சில்வெரெக்ஸ் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதை மெதுவாக நானே சுட்டுக் கொண்ட புண்ணில் தடவும் பொழுது எல்லாம் நாங்க சாதாரண காயமில்லை தீக்காயம் என்று உதார் விட்டுக்கொண்டு வந்த எரிச்சல், இரண்டு நாள் இருந்தே மறைந்தது. ஐந்தாம் நாள் புண் ஆறி விட்டது. ஒன்று(ரத்தக் கட்டு) வெறும் வலி, மற்றொன்று(தீக்காயம்) எரிச்சல். எரிச்சலை வலி என்று சொல்லலாமா? அல்லது வலியை தான் எரிச்சல் என்று சொல்வது சரியா என்றெல்லாம் தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தால், இன்னும் இரண்டு நாளில் தீபாவளி.


கொஞ்சம் கால்களுக்கு ஓய்வு கொடுக்க விருதுநகர்க்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என்று குடும்பமே கேட்டுக் கொண்டதால், திருமங்கலம் வரை உள்ளூர் பஸ், அங்கிருந்து விருதுநகர் க்கு இன்னொரு பேருந்து, உட்கார்ந்து செல்வதில் பிரச்சனை ஏற்படாவண்ணம், டெர்மினஸ் சென்று ஏறி, பண்டிகைக்கு முடிந்த அளவு ஒத்தாசை செய்து, கொண்டாடிவிட்டு தீபாவளிக்கு மறுநாள் விருதுநகரில் இருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

பயணங்களில் அரசு பேருந்தை தேர்வு செய்யக் காரணம், ஏதேனும் ஆகிவிட்டால் நஷ்ட ஈடு கிடைக்கும் என்பதற்காக அல்ல, பலரும் நேரத்தை மிச்சப்படுத்தி தங்கள் சாதனை கோட்டை தொட்டு, பதக்கம் பெறப் போவதற்காக தனியார் பேருந்துகளையே அதிகம் பயணிக்க பயன்படுத்துவதால், அரசு பேருந்துகளில் காற்றாட உட்கார்ந்து போகலாம். பத்து, இருபது  நிமிடங்கள் தாமதமாக சென்றாலும் குறைவான அலுப்பை மட்டுமே பெற்று கொண்டு இறங்கலாம் என்பதாலேயே அரசு பேருந்துகளே முதல் தேர்வாக இருக்கும்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பேருந்தில் ஏறிய பிறகு பதினைந்தாவது நிமிடத்தில் வண்டி புறப்பட்டது. வலது புறத்தில் ஓட்டுனரின் இருக்கைக்குப் பின்னால், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தோம். அதற்கு பின்னால், நான்கு வரிசைகள் தாண்டி, நேரடியாக டாஸ்மாக்கில் இருந்து வந்து அமர்ந்து இருந்தனர் இருவர். முகம் சுளித்தபடி, முந்தைய இருக்கையில் வந்து அமர்ந்த பெண்ணாலேயே, அந்த இருவர் கவனத்திற்கு வந்தனர். இருபது பேர் வரை இருந்தும், எவரும் அதை பொருட்படுத்தவில்லை. வழியில் இருந்த PRC டெப்போவில் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த  பொழுதே ஒருவன் வெளியே தலையை நீட்டி, வாந்தி எடுத்தான். டீசல் நிரப்பியவர் திட்டியதை, அவன் பொருட்படுத்தவே இல்லை. பக்கத்தில் இருந்தவன் மட்டும் சாரி கேட்டான். நான்கு வழிச்சாலையில் பயணத்தை ஆரம்பித்தது பஸ். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஒரு சத்தம் மீண்டும் அவனே கீழே குனிந்து இருக்கைக்கு முன்பு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். டீசல் நிரப்புகையில், அது வேறு இடம், நிதானமாக தலையை வெளியே நீட்டியும், இப்பொழுது தலையை நீட்டினால் முந்தி செல்லும் ஏதேனும் பேருந்து அடித்து விடலாம் என்று சர்வஜாக்கிரதையாக உள்ளேயும் அசிங்கப்படுத்தியவனின் அறிவு, இந்த நேரத்தில் பயணிக்காமலும் இருக்க சொல்லி இருக்கலாம். நடத்துனர் சாதாரண முகபாவத்தில், ' கீழே இறங்கினதும் மண்ண அள்ளி போட்டுட்டு போங்க' என்று சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை. அருகில் வந்த நடத்துனரிடம், ஓட்டுனர், ' என்ன பஸ் குள்ளேயும் எடுத்திட்டானா?' என்று மிக சாதாரணமாக விசாரித்ததில், எப்படியோ தன் அருகில் அசுத்தம் செய்யவில்லை என்று தப்பித்த உணர்வே மேலோங்கி இருந்தது.

பதினைந்தாவது நிமிடத்தில் கள்ளிக்குடி வந்துவிட்டது. ஏறிய ஐவரில் இருவர் உளறிக் கொண்டேயும், ஒருவர் தடுமாறியபடி உள்ளே ஏறியும், மிகவும் கஷ்டப்பட்டு இமைகளை திறந்து எங்கே நிற்பது என்று இடத்தை தேடிக்கொண்டு இருந்தார். மட்டமான நாற்றம் சில நிமிடங்களில் கடந்து பேருந்தின் கடைசி இருக்கைகளை அடைந்து இருந்தது.
விரைவாக கடந்து செல்ல விரும்பிய மணித்துளிகள் மெதுவாகவே கரையத்தொடங்கின.

அதற்கடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் திருமங்கலம் வர, பெரிய விடுதலை உணர்வுடன் இறங்கி, வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.


அரைமணி நேரம் நரகத்தின் வாசலில் கொஞ்சம் உலாத்திய உணர்வு, அங்கங்கே ஒட்டி இருந்த சின்ன சின்ன சந்தோஷங்களையும் துடைத்து விட்டிருந்தது.

அந்த நேரத்தில் பல எண்ணங்கள்...........
1. யாரிடம் போய் இதை முறையிடுவது? இது மாதிரி எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆட்களிடம் வாங்கிக்கட்டி கொள்ளாமல் தப்பிக்கும் ஓட்டுனர், நடத்துனர்களை எப்படி குறை சொல்வது?
2. கால் குணமாகாமல் இருந்திருந்தால், இந்த பிரயாணத்தையே தவிர்த்திருந்திருக்கலாம்.
3. அமைதியான பயணத்தை கெடுத்தவர்களின் மேலிருந்த கோபத்திற்கு சமமான கோபம் பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் அரசின் மீதும் வந்தது.
4. ஒரு வகையில் பார்த்தால், கேடு என்று தெரிந்தும் விற்பவனின் பேருந்திலேயே பயணம் செய்தால், இது மாதிரி இம்சைகளை அனுபவிக்க வேண்டும் போல.