திங்கள், 29 ஏப்ரல், 2013

மழை நம் அனைவருக்குமான வரம்!

ஆவியாக்கி எடுத்தது அனைத்தையும் அமுதமாக திருப்பி தரும் மழையைப்  பிடிக்காதவர்களைத் தேட தான் வேண்டும்.

எந்த ஒரு கடின சூழலையும், லேசாக்கி  தரும் சக்தி  மழைக்கு உண்டு. கடந்து  வந்ததில், வருத்தமானவற்றை ஓடவிட்டாலும், அதிலும், மனதிற்கு இதம் தருவதையே திரும்பிப்  பார்க்க செய்யும் மழை. ஓர் மழைக்கால காட்சியைப்
பின்னணியாகக் கொண்டு நினைத்துப் பார்க்கப்படுபவை அனைத்தும் சுகராகம் எழுப்புபவையாகவே  இருக்கின்றன. சோகமாக ஓரிரு வரிகள் வந்தாலும், மழைநீர் தேற்றி, ஆற்றுப்படுத்துகிறது.

அழுக்கும், தூசியும் படிந்துள்ள இடங்களை எல்லாம் சுத்தப்படுத்தி, ஊரையே ஒட்டு மொத்தமாக கழுவி விட்டது போல பளிச்சென்று இருக்கும் காட்சி மழை நின்ற பிறகு நம் கண்களுக்கு கிடைப்பது.
ஊர் மொத்தத்திற்குமான இலவச வாட்டர் சர்வீஸ் - மழை!

இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், தாங்காத மோசமான சாலைகளை வைத்துள்ளதால், விவசாயத்திற்கு, தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து பெய்யட்டும் என எண்ணினாலும், ஏதோ ஒரு இடைவெளியில், சொட்டு சொட்டாக, சீரான சாரலாக, அடர்த்தியான மழையாக, பொழிவதைக் காண மனது ஏங்குகிறது. மனதையும் சுத்தப்படுத்தும் வல்லமையும் மழைக்கு உண்டு என்பதாலும் இருக்கலாம்.

வீட்டின் உள்ளேயோ, பேருந்திலோ பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது வரும் மழையை, சாளரங்களின் வழியாக சில துளிகளையாவது கைகளில் பெற்றுகொள்வதை, என்னுடைய பதில் மரியாதையாக நினைத்துக் கொள்வேன்.

பகல், இரண்டு மூன்று மணிக்கெல்லாம், மாலை ஆறு மணி போல் இருக்கும் குறைந்த ஒளியில், அன்னாந்துப் பார்த்தால், மேலே திரண்டிருக்கும் கரிய மேகங்கள், மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தும். கொட்டப்போகும் மழையை அப்பொழுதே கற்பனை பார்க்கத் தொடங்கும் மனது.

வீடுகளில், மழை நீரை மாடியில் இருந்து வடியும் குழாய் வழியாக பிடித்து, தேவைப்படுபவற்றைக்குப் பயன்படுத்தும் பொழுது, நிலத்தடி நீரை உபயோகித்து கிடைப்பதை விட, சிறந்த பலனை எப்பொழுதும்  தரும்.

சாதாரண மனிதனின் சாவின் அன்று பொழியும் மழை, அவனுக்காக அழுகிறது என்று மக்களைப்  பேச வைக்கிறது.


 பாறைகளிலும்,  தரையிலும் செடி கொடிகளின் வழியாகவும் வந்து இறங்கும் அருவியில் மனம்போல் நிற்பதற்கு  ஒப்பானது மழையில் நனைவது என்றாலும், முகத்தை வானத்தை நோக்கி நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் மழைத்துளிகள் அருவியை விடக் கூடுதல் நிறைவைத் தருகின்றன.

 மிக சாதாரணமாக ஒரு கோப்பை தேநீர்க்  குடிப்பதையும், பிடித்தவரோடு நடப்பதையும், சும்மா வேடிக்கைப் பார்ப்பதையும் கூட அழகுபடுத்தி விடும், திறன் வாய்ந்தவை மழை பெய்யும் கணங்கள்.வெளியில் உள்ள வெக்கையை மட்டுமில்லாமல், மனதில் உள்ள வெக்கையையும் குளிர்விக்கின்ற மழை நம் அனைவருக்குமான வரம்.

இடி, மின்னல் இல்லாத மாலை நேர மழையில் நனைதல் சுகம். அப்படி ஒரு நனைதலின் ஈரம் இன்னும் உலராமலேயே இந்த வரிகளைப் பகிர்கிறேன்!  :)

வியாழன், 25 ஏப்ரல், 2013

எங்க ஊர் திருவிழா!மண்டூகமகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காகவோ அல்லது, மீனாட்சியின் திருமணம் தான் வருவதற்குள் நடந்து முடிந்து விட்டது என்பதை தெரிந்து கோபத்தில் திரும்புவதற்காகவோ , இன்னும் அறியப்படாத ஏதேதோ  காரணங்களுக்காக வருடந்தோறும், சித்திரை மாத பௌர்ணமி அன்று, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா, மதுரையில் நடக்கிறது.

திருமலை நாயக்கர், ஆட்சிகாலத்தில் தான், வெவ்வேறு மாதங்களில் நடைபெற்ற, மீனாட்சிக் கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குவதும், சித்திரை மாதத்தில் மாற்றப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

சிவனும், அரியும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு', என்று , சாஸ்திரங்கள் நன்கு கற்று தேர்ந்தவர்கள் சொல்லலாம். சைவ, வைணவ மதங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த விழா என்று சொன்னாலும், இதை எல்லாம் பெரிதாக அறிந்திராத எங்கள் மக்களுக்கு தெரிந்ததெல்லாம், 'சாமி, வந்துச்சு, சாமி அங்க இருக்கு... சாமிய பார்த்தோம், சாமி, அம்புட்டு அழகா இருக்கு', அவ்வளவு தான்.

அழகர் கோவிலிலிருந்து இறங்கி ஆற்றில் கால் வைப்பதற்கு முன்பு, வழியில் உள்ள பல கோவில்களுக்கும், மண்டபங்களுக்கும் செல்வார். அப்படி அவர் உள்ளே வரும் பொழுதும், மீண்டும் செல்லும் பொழுதும், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலில், வருகையை பதிவு செய்வார்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அம்மாவோ, பாட்டியோ, எங்களை அழைத்து செல்வார்கள். செல்லும், வழியிலேயே, 'சாமி, வந்திருச்சா, சாமி எங்க இருக்கு', என்று கேட்டுக் கொண்டே செல்வோம். இரண்டு கிலோமீட்டர் தூரமே இருந்தாலும், கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு, கோவிலின் பின்னால் உள்ள மிகப்பெரிய மைதானத்தில், கொண்டு சென்ற விரிப்பை விரித்து அமர்ந்து கொள்வோம். அங்கு அமர்ந்து உண்பது என்பது அன்றைய நாட்களில் அளவிலடங்கா மகிழ்ச்சியை அளித்த ஒன்றாக இருந்தது. மொத்த இடமும் வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

சற்று நேரம் கழித்து, அப்படியே, நடந்து, சுற்றி உள்ள கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, பந்தல் வைத்து, ஊற்றிக் கொண்டிருக்கும், நீர், மோர், சர்பத், பானக்கரம் போன்றவற்றை ருசிப்பார்த்துகொண்டே செல்வோம். அங்கங்கே இலவசமாக விசிறிகளை விநியோகித்துக் கொண்டு இருப்பர். சிலர் மண்டகப்படி அமைத்து, புளியோதரையை தொன்னைகளில் அடைத்துக் கொடுப்பர். அது, என்ன மாயமோ, மந்திரமோ, இங்கு தரப்படும் புளியோதரையின் சுவை, வீட்டில் பார்த்து பார்த்து தயாரித்தாலும் வருவதில்லை.

வெடி சத்தம் கேட்கத் தொடங்கும் பொழுது, அனைவரும் இடங்களை தேர்வு செய்து, நின்று கொள்வர். கோவிலின், முன் கூடுதல் நேரம் பார்க்கலாம் என்பதால், எங்கள் அம்மா, அங்குதான், இருக்கிற கூட்டத்தில் இடத்தை தேடி, நிற்க வைப்பார்.


முதலில் உண்டியல் ஒரு தள்ளு வண்டியில் வரும், அதன் பின்னே, மெதுவாக அழகர் வருவார். சுற்றிலும் இருப்பவர்கள், கன்னத்தில் போட்டுக்கொண்டும், கையை தலைக்கு மேல், தூக்கி கும்பிடு போட்டுக்கொண்டும், அழகரின் பெயரை சத்தமாக சொல்லிக்கொண்டு வழிபடுவார்கள். 
 'அங்க பாரு, அங்க பாரு சாமி, கும்பிடு ', என்று சிறிய குழந்தைகளை பெண்கள் இடுப்பிலும், பல ஆண்கள் இருபக்கமும் தோள்களில் கால்களை சரிய விட்டுக்கொண்டும், சொல்வதை நிறைய பார்க்கலாம்.

இருபது, இருபத்தைந்து  பேருக்கு ஒருத்தர் பெரிய செம்பில், சுக்கு, ஏலம் கலந்த சர்க்கரையை நிரப்பி, அதன் மேல் வாழை இலையில் கற்பூரம் ஏற்றி , இருக்கும் இடத்திலேயே கும்பிடுவார்கள். அழகர், சென்றதும், அந்த செம்பிலிருந்து சர்க்கரையை சுற்றி இருப்பவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள்.

நான்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கால கட்டத்தில், பலரிடம் இருந்து சர்க்கரையைப் பெற்று, பாதியை வாயில் போடவும், மீதியை இடது கையில் சிந்த சிந்த, சேகரிப்பதுமாக இருந்திருக்கிறேன். அழகரின் முகம், ஓரிரு வருடங்களிலே பழகி போனதாலோ, என்னவோ, அவரின் எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரியும் முகத்தையே பல வருடங்கள் பார்த்திருக்கிறேன். அத்தனை அலங்காரம், பார்த்து பார்த்து செய்யப்பட்டு இருப்பதை, ரசித்துக்கொண்டும், சுற்றிலும் உள்ளவற்றை பதிவு செய்வதுமாகவே, என்னுடைய சாமி தரிசனம் இருந்து வந்துள்ளது. 'நான் நல்லா இருக்கணும், வீட்டில எல்லாரும்  நல்லா இருக்கணும், நல்ல படிப்பை கொடு', என்பதெல்லாம், ஆறு, ஏழு வகுப்போடு நின்று போன வேண்டுதல்கள். கடைசியாக, பனிரெண்டாம் வகுப்பு,முடித்திருந்த பொழுது, வம்பாக  அழைத்ததால் மட்டுமே சென்றேன். கூட்டத்தின் அளவு, கூடுதலாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும்  கூடிக்கொண்டும் இருக்கிறது.


இதில், இந்த ஐந்து நாட்களுமே, அழகர் ஏதேனும், ஒரு பெருமாள் கோவிலில், அல்லது மண்டபத்தில் தங்கி இருப்பார். அந்ததந்தப்  பகுதி மக்கள் அங்கு சென்று பார்ப்பதும், தொலைவில் இருப்பவர்களும், தங்கள் பகுதியைக் கடக்கும் பொழுது  பார்க்க தவறியவர்களும் சென்று பார்ப்பர். வழியிலேயே, வேகவேகமாக நடக்கும் குடும்பத்தைப் பார்த்து, 'மெதுவா போங்க, சாமி இன்னும், அரை மணி நேரம், இங்க தான் இருக்கும்', என்கிற தகவல்களை, சற்று முன் பார்த்தவர் தருவார்.


இதில், தொடர்ந்து, ஐந்து நாட்களுமே, விரட்டி விரட்டி சென்று அழகரைப் பார்த்து, தங்கள் எண்ணற்ற வருகைகளை  சாமிக்கு பதிவு செய்பவர்களும் இருக்கிறார்கள். அழகர் கோவிலுக்கு திரும்பும் பொழுதும், மீண்டும் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு வரும் கள்ளழகரை, அநேகமாக அங்கு இருக்கும் அத்தனைக் கூட்டமும், கடந்த சில நாட்களில் பார்த்து இருப்பதால், வரும் பொழுது இருக்கும் தள்ளுமுள்ளு குறைவாக இருக்கும். எனக்கு தெரிந்து சிலர் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு, 'சாமி கிளம்பிடுச்சு',  என்று சொல்லிக் கொண்டே, வழி அனுப்பி அனுப்பி வைத்தக் களைப்பில், தாங்கள் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்.

தற்பொழுது, சுற்றிலும் உள்ள பல ஊர்களிலும் இருந்து மக்கள் திரள்வதால், வழக்கம் போல ஊரே திருவிழாக் கோலத்தில் இருக்கிறது.  சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, கூட்டத்தில் செல்ல விருப்பமின்மை போன்றவற்றால் மண்ணின் மைந்தர்கள் அநேகம் பேர், தொலைக்காட்சிகளின் உபயத்தில், வீட்டிலேயே, தரிசித்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள், சர்க்கரையின் தித்திப்பின்றி.
இப்பொழுது, 'சாமியை, அந்த சேனலில் பார்த்தேன்', என்று முடித்துக் கொள்கிறார்கள் தரிசனத்தை.

மனதில் இருக்கும் குறைகளை  தற்காலிகமாக, தள்ளி வைக்கவும், இருப்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம், அவர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் அடுத்தடுத்து அடி எடுத்து செல்லவும், திருவிழா என்ற களிப்பு, ஒரு தரப்பினருக்கு தேவைப்படுகிறது. அப்படி அனுபவிப்பவர்கள், ஒரு வகையில் பாக்கியவான்கள் தான்!

இந்த பதிவு, சரி, தவறு சென்று எதையும் சொல்வதற்காக இல்லை. திருவிழா எப்படி இருந்தது என்பதை, பின்னோக்கி சென்று, நினைவில் மேலேழுந்தவற்றை, பகிர்தல் மட்டுமே நோக்கம்!வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சைக்கிள் ஓட்டப் பழகிய நாள்...


மூன்றாம் வகுப்பு, முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமான நாளிலேயே சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. பெற்றோரிடம், தெரிவித்த பொழுது, மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம், என்று சொன்னதைக் கேட்காமல், பாட்டியின் சுருக்குப் பையை உருவி, ஐம்பது பைசாவை மட்டும் எடுத்துக் கொண்டு, காதில் விழுந்த திட்டுக்களைப் பொருட்படுத்தாமல் வெளியே ஓடினேன். உதவிக்கு, என்னை விட பெரியப்  பிள்ளைகள் இரண்டு பேரை, அழைத்துக் கொண்டு வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் கடைக்கு சென்றோம். ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது பைசா, என்று எழுதப்பட்ட சுவரை வாசித்துக்கொண்டே, அங்கு இருந்த நோட்டில், சைக்கிள் எடுக்கும் நேரத்தை பதிவு செய்ததும், இரண்டு பக்கமும் கால் எட்டும் படி உள்ள குட்டி சைக்கிளை உருட்டிக் கொண்டே வெளியே வந்தேன். ஒரு மணி நேரம், உடன் இருக்க போகிற வண்டி என்ற மகிழ்ச்சியுடன் இருக்கையில் உட்கார்ந்தேன்.

ஒரு காலால் பெடலை மிதிக்க, மறு கால் தரையில் ஊன்ற என்று, இருக்கிற தெருவை எல்லாம் இருவருடனும் சுற்றி வந்ததில், ஒரு மணி நேரம் ஓடிப் போய் இருந்தது. மீண்டும், வீட்டுக்கு ஓடி வந்ததும், சுருக்குப் பையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த பாட்டியிடம், கெஞ்சி, கொஞ்சிக் கூத்தாடி ஒரு ரூபாயை வெற்றி கரமாக பெற்றுக் கொண்டு, ஓடினேன்.

திரும்பவும், அதே சைக்கிள், தோழியர்கள், இரண்டு பக்கமும் சைக்கிளை பிடித்துக் கொண்டு ஓடி வர, நான் மெது மெதுவாக, ஒரு காலை தரையில் ஊன்றும், நேரத்தை குறைத்துக் கொண்டு, சில நொடிகள் வரை பெடலிலே கால்களை வைக்கப் பழகி இருந்தேன். பக்கத்திலே ஓடி வந்ததை தவிர, அவர்கள் இருவரும் செய்த முக்கியமான வேலை, மாறி, மாறி, என் முதுகில் அடித்து, 'இடுப்பை வளைக்காத, இடுப்பை வளைக்காத', என்று திரும்ப திரும்ப மந்திரம் போல சொல்லிக் கொண்டே ஓடி வந்தது.

ஓடி வந்தக் களைப்பில், அவர்கள் இளைப்பாற அமரும் நேரத்தில், சைக்கிளை சில நொடிகள் வரை பெடலில் இருந்து கால் எடுக்காமல் ஓட்டப்  பழகி இருந்தேன். ஆனால், இந்த ஹாண்டில் பார், மட்டும், எப்படி வளைத்தும், கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் ஒரு வீட்டு வாசலில் வளைந்து போய் என்னை கொண்டு போய் நிறுத்தும். மீண்டும், அவர்கள் பக்கவாட்டில் ஓடிவர, வீதியில் ஓட்டுவதும், யார் வீட்டின் வாசலிலாவது போய் நிற்பதும் என்று மாற்றி மாற்றி தொடர்ந்து நடக்க, இரண்டு சக்கரங்களும் கொஞ்சம், கொஞ்சமாக சொல்பேச்சு கேட்க ஆரம்பித்தன.

இரண்டாவது மணி நேர முடிவில், இவர்கள் இருவரின் உதவியின்றி, நிமிடக் கணக்கில், ஓரளவு தெருவிலேயே சரியாக ஓட்ட முடிந்திருந்தது. அப்படியே, வீட்டிற்கு சென்று, மூன்று மணி நேரத்தில் கற்று கொண்ட சாதனையை, சைக்கிளை ஓட்டிக் கொண்டே பகிர்ந்த நொடி, நினைவில் கணீர் என்ற மணி சத்தத்துடன் தெளிவாக உள்ளது.

அதன் பிறகு வந்த நாட்கள், அதை விடப்  பெரிய சைக்கிள் எடுப்பதும், சுற்றுவதும், சில முறை கீழே விழுந்து, பெற்ற காயங்களுமாகப்  போனது. அடுத்து, நான், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, தம்பிக்கு பழகிக் கொடு என்று, வீட்டில் சொன்ன பொழுது, இன்னும் பெருமிதம். எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட அதே விதி முறைகளின் படி, அவன் இடுப்பிலே, இருக்கிற கடுப்பை எல்லாம் காட்டி,  'இடுப்பை வளைக்காத, வளைக்காத', என்று கத்திக் கொண்டே, ஓடி ஓடிக் கற்றுக் கொடுத்தேன்.

விருப்பப்பட்டு கற்றுக் கொள்ளும் நேரங்களும், பாடங்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.

புதன், 17 ஏப்ரல், 2013

வாழ்க்கை - இம்சையான மகிழ்ச்சி, மகிழ்ச்சியான இம்சை!
முகநூலில் அதிகமாக கண்களில் தட்டுப்படுவது பொன்மொழிகள். சொன்னவர்கள், எவரும் பின்பற்றி இருப்பார்களோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கடினமாகவும் அதே நேரம் அருமையாக இருக்கும், வார்த்தைகளின் தொகுப்பு.

ஏதோ, வாசித்த, மறு நொடியில் நாம் அனைவரும் மாறிப்போவதை போல, நாமும் தொடர்ந்து அவற்றை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் பார்த்த வரையில், அந்த நொடியில் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனைக்கு, அந்த நிமிடத்து மயிலிறகு வருடலாக, அந்தப் பொன்மொழி இருக்கிறது, அவ்வளவே.

வாழ்வைப்  பற்றி வித விதமான, வாக்கியங்களை பார்க்கும் நேரங்களில் எல்லாம் தோன்றுவது, மிகுந்த அழுத்தத்துடன் மனிதன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான் என்பதே. எத்தனை மணி நேரம் மின்சாரம் கூடுதலாக இருந்தாலும், எவ்வளவு தண்ணீர் கூடுதலாக சேமித்து வைத்திருந்தாலும், மன ரீதியில் நிம்மதியற்ற வாழ்க்கையில், எதையோ  துரத்திக் கொண்டிருக்கின்றோம் என்ற வகையில் மட்டும் நாம் எல்லோரும் பொதுவான மனிதர்களே.

எளிதில், எதற்கும் திருப்தி அடையாத மனநிலை. கொட்டிகிடக்கும் நிறைகளை தவிர்த்து குறைகளை பட்டியலிடும் மனது. ஒப்பிட்டுப் பார்த்தே கடத்தப்படும் காலம். மகிழ்ச்சி என்பதை, ஒன்றிரண்டில் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றை மட்டுமே வளையவரும் மனது, என்று கழிகின்றன நாட்கள்.

சரி, இது தான் வேண்டும் என்றால், பிடி என்று விரும்புவதைக் கையில் கொடுத்தாலும், உரியது என்றான பின், சீக்கிரமாகவோ அல்லது மிக சீக்கிரமாகவோ, சுலபமாக தாவி வந்தமரும் தவிர்க்க முடியாத சலிப்பு.

பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்துபவர்கள், எது ஒன்றை மையப்படுத்துவது என்ற எண்ணத்தில், வெளியில் மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள், நாள்பட, நடிப்பு அழகாக வசப்படுகிறது. ஒன்றோ, இரண்டோ மட்டும் பிரச்சனைகள் உள்ளவர்கள், உலகத்தையே தூக்கி சுமப்பது போல, கால நேரம் பார்க்காமல், சோக ராகம் இசைக்கின்றனர்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும், என்று தங்களை காக்கும், குறிப்பிட்ட அந்த ஒரே பிரச்சனையிலிருந்து  வெளிக்கொண்டு வரும் சக்தியைத் தேடி அலைந்து, இது தான் என்று முடிவு செய்து பின்பற்றுகின்றனர். சிறிது நாட்களிலேயே, திருப்தியுறாமல், அது சரியில்லை என்று மீண்டும் தேடுதலை தொடங்குகின்றனர்.

வசதி, தேவை அனைத்தையும் தாண்டி, அகம் அணையாத கங்காக, ஏதேனும் ஒரு கவலையை உள்ளே வைத்து, கனன்று கொண்டிருக்கிறது.

துரத்துதலும், தேடலுமாக தொடரும் வாழ்க்கையில், எது கைக்கு வந்தாலும், எதன் மடியில் நாம்  இருந்தாலும் ......... விரைவிலேயே 'என்ன வாழ்க்கை டா', என்று அலுத்துக் கொள்கிறோம்!


ஏதோ ஒரு நொடியில் துயரத்தை கொடுத்தக் காலம்
வேறு எதோ ஒரு நொடியில் மகிழ்ச்சியையும் பரிசளிக்கும் ...
சுழற்சி முறையில், காலத்தால் தரப்படுகிற மகிழ்ச்சியில் அதிக நேரம் திளைக்க முடியாத நம்மால், கஷ்டத்தை மட்டும் கால நேரமின்றி, அசை போட முடிகிறது...
(நம்மை விட, நம்மை இம்சிப்பவர் யாருமில்லை என்பது மட்டும் உறுதி)

உயிர்ப்பான வாழ்க்கைக்கு இறுதி மூச்சு வரை நம்முடன் இருக்கும் சலிப்பையும், அலுப்பையும் சோர்ந்து போகாமல் அனுபவிக்கப் பழகுவோம். எரிச்சலாவதைக் குறைத்து, பதிலாக குழந்தையின் குறும்பை ரசிப்பது போல ரசித்து, இன்னும் என்னென்ன விளையாட்டு அடுத்து, அடுத்து என்று எதிர் நோக்க முயற்சி செய்தால், அதே, வாழ்க்கை, அதே விளையாட்டு தான், எனினும் சற்று மேம்பட்டு ஆடலாம்.

புதன், 10 ஏப்ரல், 2013

சின்னசாமி ஐயா!
சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ராம் மாற்றலானதால், நான்கு வருடங்கள் திண்டுக்கல்லில் இருந்தோம். திண்டுக்கல் உழவர் சந்தை ஓரளவு சுமாரானப் பரப்பளவில் அமைந்து இருக்கும். மிக எளிதாகக் குறைவான நேரத்திலேயே அனைத்துக் கடைகளையும் ஒரு சுற்று சுற்றி விடலாம். பல விதமான, காய்கறிகள், பழங்களுக்கு மத்தியில், சப்போட்டாப் பழங்கள் மட்டும் வைத்துக் கொண்டு இருப்பார் சுமார் 65 வயது மதிக்கத்தக்கப் பெரியவர் ஒருவர். சப்போட்டாப் பழங்கள் அளவில் சற்றுப் பெரியதாகவும், தித்திப்பு கூடுதலாகவும் இருப்பதால், வழக்கமாக அவரிடமே வாங்குவோம்.

நான், செல்லாத நாட்களில், ராமிடம்,
 'பாப்பா வரலையா, நல்லா இருக்குல்ல', என்று விசாரித்ததாக இவர் என்னிடம் சொல்வார்.
வருண் வீட்டில் தொலைக்காட்சியை விட்டுப் பிரிந்து வர மறுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில், காய்கறி வாங்கப் போகும் பொழுது, எங்கள் இருவரையும் பார்த்து,
 ' பேரன் எங்க? ஏன் கூட்டிட்டு வரல', என்பதோடு  'கண்ணுக்குள்ளேயே இருக்கான், அடுத்த வாரம் வர்றப்போ கூட்டிட்டு வாங்க', என்று உரிமையோடு சொல்வார்.

ஒருமுறை  என்னிடம், 'சார் எவ்ளோ எளிமையா இருக்கார் பாரும்மா, இப்படி எல்லாம் ஆளைப் பார்க்கிறது கஷ்டம்', என்றதும்,

'சார் அங்க வேலை தான் பார்க்கிறார், ஆனா, அந்த காலேஜ் அவருது இல்லை', என்றேன் வம்புக்கு.

'அப்படி சொல்லாதம்மா, நெறைய பேரை நான் பார்த்திருக்கேன், சரியாதான் சொல்றேன் சார் பத்தி', என்று ராம்க்கு ஆதரவாகப் பேசுவார். நான் திரும்பி,
 'காலேஜ் பக்கத்தில தான் இவர் ஊர், தனியா போய் எதுவும் கவனிப்பு நடந்திருக்குமோ',
என்று ராமை சீண்டுவேன்.

எத்தனையோ பேர்களிடம், காய்கறி வாங்கினாலும், எத்தனையோ பேர் தினமும் அங்கு வந்து போனாலும், எங்களுக்கும், அன்பை மட்டுமே காட்டத்தெரிந்த அவருக்கும் ஒரு நல்ல அலைவரிசை அமைந்திருந்தது.

'எம்மா, ஒரு நாள் எல்லாரும் வாங்க, எங்க கிராமத்துக்கு, எங்க தோப்புக்கு கூட்டிட்டு போறேன். வீட்டில அம்மா, நல்லா சமைக்கும். சாப்பிட்டு, சாய்ங்காலம் போங்க', என்றார்.

பல வாரங்கள் கடந்த நிலையில், ஒரு விடுமுறைக்குப் பின், வழக்கம் போல, வாரத்திற்கு ஒரு முறை சந்தைக்கு சென்று கொண்டிருந்தோம். தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும், உழவர் சந்தையில் அவர் கடையில் வேறு ஒருவர் இருந்ததைப்  பார்த்து, சின்னசாமி ஐயா எங்கே என்று கேட்டோம். அவர் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றார் மிக சாதாரணமாக. தூக்கி வாரிப் போட்டது, எங்களுக்கு. அழைத்ததிற்கு ஒரு நாளாவது போய், அவரின் சப்போட்டா மரங்கள், தென்னை மரங்கள், நிறைந்தத் தோப்பை பார்த்திருக்கலாமோ, தவற விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு இப்பொழுது வரை, இருந்து கொண்டு தான் இருக்கிறது. விடுமுறை நாளில் ஓய்வெடுப்பதிலே நேரம் சென்று விடுவதால், எங்களால் போக முடியவில்லை என்பதை விடவும், நியாயமானக் காரணம் சோம்பேறித்தனமே.

மிகக் குறைவான எண்ணெயில், மிகப்பெரிய அறைக்குத் தேவையான வெளிச்சத்தை தரும் விளக்கு போல, மிகக் குறைவான காலங்களில், விஸ்தாரமான அன்பை எங்களுக்குள் விட்டு சென்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடை பெற்ற என் தம்பியின் திருமணத்திற்கு, மூன்று பேருந்துகள் ஏறி இறங்கி வந்து கலந்து கொண்டார். மதுரை வரும் பொழுது, மண்டபம் கண்டுபிடிக்க வசதியாக இருக்குமே என்று பகிர்ந்த அவரின் அலைபேசி எண்ணைப், பாதுகாத்து வருகிறேன். C, வரிசையில் உள்ள ஏதாவது ஒரு பெயரை அழைக்க மொபைலில் தேடும் நேரங்களில் எல்லாம், சின்னசாமி என்ற பெயரைப் பார்க்கிறேன்.அந்த சில நொடிகளில் அவரின் வாஞ்சையான முகம் வந்துப் போகும்.

மாற்றும், எந்த ஒரு புதிய அலைபேசியிலும் அவரின் எண்ணை சேமித்துக் கொள்கிறேன். நான் இருக்கிற காலம் வரை, அவரின் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாத அன்பிற்கு அளிக்கப்படும் மரியாதையின் அடையாளமாக, எனக்குத் தெரிந்த முறையில், அவரின் பெயருடன் ஆன எண்ணைப், பாதுகாத்து வருகிறேன்.

நிரந்தரப் பிரிவு ஏற்படப் போகும் ஒரு சில நாட்களுக்கு முன்பாக, காலம், ஒரு சின்னக் குறிப்பை கொடுத்திருந்திருக்கலாம்.......
.....................

இப்பொழுது என்னவோ சப்போட்டப் பழங்களைப் பார்க்கும் நேரங்களில், வாங்கவோ, சாப்பிடவோ தோன்றுவதில்லை.


திங்கள், 1 ஏப்ரல், 2013

a s d f g
வருண், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்காக, கம்ப்யூட்டர் ல, பெயிண்ட் டூல் பாக்ஸ் வச்சு, அவன் படிச்சதை எல்லாம் ஒன்னொன்னா செய்து பார்த்திட்டு இருந்தான். நான் கொஞ்சம் தள்ளி உக்கார்ந்து, பேப்பர் வாசிச்சிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே,
'அம்மா இங்க இருக்கிற டெக்ஸ்ட் யூஸ் பண்ணி, உங்க பேர் அடிக்கணும்,
d ஐக் காணோம்னு சொன்னான். எனக்கோ, எடுத்ததும் என் பேரை அடிக்கிறானேன்னு அவ்ளோ சந்தோசம்... பெருமையோட  சொன்னேன்,

's பக்கத்தில பாருடா

's எங்க இருக்கு ம்மா ?'

' a பக்கத்தில இருக்கும் '

' a வும் இல்ல', என்று கவலையுடன் சொல்வதைக் கேட்டு
பதட்டமான  நான், பேப்பரை மடித்துவிட்டு எழுந்து போய் கீ போர்டு ஐ, பார்த்தா,
ஆங்கில எழுத்துக்களை அடிச்சு அடிச்சு தமிழை இங்க வளர்த்ததில(?!), காணாமப்  போன சில எழுத்துல, இந்த asd ம் இருக்கு. சங்கடமா போயிடுச்சு, 'சாரி டா', சீக்கிரம் கீ போர்டு மாத்துவோம்னு சொன்னேன்.