மனதை அழுத்துகின்ற எந்த ஒரு விஷயத்திலிருந்தும் எளிதில் விடுபட கொஞ்சம்
தனிமையும், கொஞ்சம் பசுமையும் உதவும் என்பது என் நம்பிக்கை.
ஒவ்வொரு விதையும், அதன் தன்மைக்கு ஏற்றபடி விதவிதமான இலை, கிளை, பூ, காய், பழங்கள் என அத்தனையையும் தன்னுள்ளே அடக்கி உறங்கிக் கொண்டு இருப்பது இயற்கையின் பிரமிப்புகளில் ஒன்று. உறக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, விதை செழிப்பாக வளர தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி, என அனைத்துமே நமக்கும் அடிப்படைத் தேவை.
உயிர்ப்புள்ள அனைத்திற்கும் தேவைகள் பொதுவானவையே... :)
விளையாட, ஓய்வெடுக்க என்று ஊஞ்சல் கட்டிய
ஒரு வேப்ப மரம், ஒரு புங்கமரம், நிழலுக்காக எங்கள் வீட்டின் முன்
நின்றிருந்தன பல வருடங்கள். உதிர்கின்ற வேப்பம் பூக்கள், காய், பழங்கள்,
இலைகள் என்று அத்தனையும் சிறு வயதில் கடை விளையாட்டு விளையாடும் பொழுது
உபயோகித்து இருக்கிறோம். உதிர்ந்த வேப்பம் பூக்கள், வேப்பிலை வாசம் கலந்து
நாசியின்
வழியாக மனதை அடைந்துள்ள நாட்களில் உணர்ந்த குளிர்ச்சி, இன்றும்
மாசுபடாமல், நினைவடுக்கில் சுகமாக அமர்ந்துள்ளது. ஏதேனும் வேப்பமரத்தை
கடக்கின்ற பொழுதெல்லாம், ' இது நம்ம மரம்', என்று மகிழ்ச்சி எப்பொழுதும்
எட்டிப்பார்க்கும்.ஒவ்வொரு விதையும், அதன் தன்மைக்கு ஏற்றபடி விதவிதமான இலை, கிளை, பூ, காய், பழங்கள் என அத்தனையையும் தன்னுள்ளே அடக்கி உறங்கிக் கொண்டு இருப்பது இயற்கையின் பிரமிப்புகளில் ஒன்று. உறக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, விதை செழிப்பாக வளர தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி, என அனைத்துமே நமக்கும் அடிப்படைத் தேவை.
உயிர்ப்புள்ள அனைத்திற்கும் தேவைகள் பொதுவானவையே... :)
நெருக்கமான இலைகள் கொண்ட புங்கைமரத்திலிருந்து கிடைக்கும் நிழலில் நிற்க, உட்கார அத்தனை குளிர்ச்சியாக, இதமாக இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை பூத்து, காய்த்து, இலைகள் அத்தனையும் உதிர்த்து நிற்கும் பொழுது சில நாட்கள் பார்க்க பரிதாபமாக இருக்கும். குறுகிய நாட்களிலேயே சிவப்பாக துளிர்க்கின்ற இலைகளின் உள்ளே இரத்தம் இருக்குமோ என்று சிறுவயதில் சந்தேகப்பட்டிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக, மரம் முழுவதிலும் உள்ள இலைகள் மெது மெதுவாக வெளிறிய பச்சையிலிருந்து, குளுமையானப் பச்சை வண்ணத்துக்கு மாறும் நாட்களில் பார்க்க அத்தனை அழகாய் இருக்கும். பூத்து, காய்த்து, இலைகளின் வண்ணம் மாறி, உதிர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி நம்மை சிந்திக்க வைப்பதற்கோ என்று பின்னால் யோசித்திருக்கிறேன்.
சில காரணங்களால் வீட்டை சுற்றி சுற்றுசுவர் எடுக்கப்படாமல் இருந்தது .
காலி இடத்தின் அளவு அதிகமாக இருந்தும், இரண்டு தெருக்கள் இணையும்
இடத்தில் வீடு இருந்ததால், அந்த நாட்களில் காலை நேரங்களில், வீட்டின்
முன்பாக ஓட்டி செல்லப்படும் ஆடுகளுக்காக, இரண்டு மரங்களும் மட்டும், வேறு
மரங்களின் துணையின்றி இருந்தன. தரையில் மழை பெய்தால் முளைக்கும் செடிகள்
மட்டும் ஆடு,மாடு மேய்ந்தது போக அங்கங்கே இருக்கும்.
உயர்நிலை வகுப்பில் நாமும் செடி வளர்க்க வேண்டும் என மிக ஆசைப்பட்டு, வீட்டின் முன்புறம் மண்ணைத் தோண்டி
பல வண்ணங்களில் டேபிள் ரோஸ் செடிகளை நட்டு வைத்தேன். மொட்டுக்களோடு
வைக்கப்பட்டதால் இரண்டே நாட்களில் பூத்ததில் மனதும் மகிழ்ச்சியில் பூத்தது.
ஐந்தாவது நாள் பள்ளி விட்டு வந்து பார்த்தால், செடி இருந்ததற்கான
அறிகுறிகளே இல்லை. விசாரித்ததில் யாரோ ஒரு புண்ணியவதி பூ வாசத்திற்கு
பாம்பு வந்துவிடும் என்று அம்மாவை பயமுறுத்தி சென்றிருக்கிறாள் என்பது
தெரிந்தது. அந்த டேபிள் ரோஸ் வாசத்திற்கா பாம்பு வரும் என்று
ஆர்ப்பாட்டம் செய்து தாழம்பூவை தேடிக் கொண்டு வந்து நட்டு வைப்பதாக எடுத்த
உறுதி இன்று வரை நிறைவேறவில்லை. :P
புது வீடு சுற்று சுவருடன் கட்டியபிறகு நிறைய செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்று பாட்டி சமாதானப்படுத்தினார்.
நிழல்
தர இருக்கின்ற இரு மரங்கள் போக, ஒரே ஒரு முருங்கை மரம் அவசியமாக
தேவைப்பட்டது. முக்கிய காரணம் என்னவென்றால், சாம்பார், புளிக்குழம்பு,
கறிக்குழம்பு என்று அத்தனையிலும் எங்கள் வீட்டில் முருங்கைக்காய்
மிதக்கும். அருகில் மரம் உள்ளவர்களின் வீடுகளில் சென்று காய் வாங்கி வரும்
வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு முருங்கை மரம் இருந்தால் நல்லது என்று
நினைத்தேன். ஒரு நாள், எதிர் வீட்டில் பெரிதாகிக் கொண்டே சென்ற முருங்கை
மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். காய்கள் மட்டும் காசு கொடுத்து பெற்ற
கைகள், அதை விட மதிப்பு மிக்க முருங்கைக் கட்டையை இனாமாக பெற்று வந்தன. :)
வீட்டின் முன்னே இரண்டு மரங்கள் உட்பட காலி இடம் இருந்தாலும், பக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு
போடப்பட்டு இருந்த பேஸ்மென்ட் நடுவில் இருந்த இடத்தில் குழியைத்
தோண்டி,மூன்றடி உயரமான குச்சியை ஊன்றி வைத்த பொழுது, வீட்டில் குடியிருந்த
மாமி, பக்கத்திலிருந்த மண்ணை அவர் பங்கிற்கு பேசிக்கொண்டே தள்ளிவிட்டார். கடந்து செல்லும்
ஆடுமாடுகளிடமிருந்து தப்பித்து காய் வந்தால், உடல் நிலை சரியில்லாத என்
பாட்டி, அந்தக் காய்களை நறுக்கி குழம்பு வைத்து கொடுப்பார் என்று
வேடிக்கைப் பார்த்த என் தாத்தா கிண்டல் செய்தார்.
அது வரை எங்கெங்கோ ஊன்றி வைக்கப்பட்ட கட்டைகளை பார்த்த
அறிவின் படி, நட்டு வைத்த முருங்கைக் கட்டையின் நுனிகளில், பசு சாணத்தை
அப்பி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி ஆராய்ச்சி செய்ததில் சில நாட்களிலேயே
நான்கைந்து இடங்களில் இலைகளை இளம் பச்சை நிறத்தில் நீட்டத் தொடங்கி
இருந்தது முருங்கை. ஆனாலும், எங்கள் கண்காணிப்பையும் மீறி, அதிகாலையில்
நடந்து போகும் ஆடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு தொடர்ந்து இரையாகிக் கொண்டே
வந்தது முருங்கையின் இலைகள். மரத்தை சுற்றி சாக்கு, கம்பு என்று ஏதேதோ
பாதுகாப்புக்கு வைத்தாலும், கூட்டணி அமைத்தாவது, இலைகள் வளர வளர
மொட்டையாக்கிக் கொண்டே இருந்தன ஆடுகள். அவ்வப்பொழுது ஏமாந்து கொண்டிருந்த
என் நிலைமையை பார்த்த அப்பா, எங்கிருந்தோ கருவேல முள்களை வெட்டி, வண்டியில்
வைத்துக் கொண்டு வந்து, முருங்கை கட்டையை சுற்றி ஆள் உயரத்திற்கு ஊன்றி
வைத்தார். அத்தோடு அடங்கிப் போயின ஆடுகள். எனக்கு முன்பாகவே தினந்தோறும்
தாத்தாவும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரே வளர்ச்சி மயம் தான்.
வேகவேகமாக கிளைகளைப் பரப்பி பூக்கள் பூத்து காய்க்கத் தொடங்கிய பொழுது,
குடியிருந்த மாமி, தாத்தா என்று சகலரும் தங்களால் தான் அந்த முருங்கை மரம்
காய்க்கத் தொடங்கியதாக சொல்லியது என்னை சீண்டுவதற்காக இருந்திருக்கலாம்.
கசப்புத் தன்மையற்ற சுவையான முருங்கை இலை, மெலிதானத் தோலை
கொண்ட பருத்தக் காயின்
சுவையான உட்பகுதி என்று அபூர்வ ரகமாக இருந்தது அந்த முருங்கை. பூக்கின்ற
காய்கள் எல்லாம் காய்க்குமோ என்று சந்தேகம் கொள்ளும்படி, அத்தனை காய்கள்
தொங்கும். இலை உதிர் காலத்தில் ஒரு பக்கம் உதிர்ந்து கொண்டிருந்தாலும்,
சமையலுக்கு இல்லை என்றில்லாமல் ஏதேனும் ஒரு பக்கத்தில் சில காய்கள்
இருந்து
கொண்டே இருக்கும். சுற்றமும், நட்பும் ஆசையுடன் கேட்டு வாங்கிச் சென்று
சமைக்கும். தற்பொழுது இருக்கும் வீடு கட்டப்படுவதற்காக அந்த மரம் சில
வருடங்கள் முன்பு வெட்டப்பட்டுவிட்டது. :(
ஒரே ஒரு பிடிக்காத விஷயம் முருங்கை மரத்தில் என்னவென்றால், குளிர் காலத்தில்
புழுக்கள் அதிகமாக மரத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் மொத்தமாக வசிப்பதும்,
சமயங்களில் வீட்டிற்கு உள்ளே ஊர்வதும் மட்டுமே.
தற்பொழுது
வீட்டை சுற்றி வளர்ந்த வாழை, பப்பாளி, கொய்யா மரங்களுடன், புதிதாய்
வைக்கப்பட்ட நெல்லிக்காய், மருதாணியும் வளர்கின்றன. துணைக்கு பசலை,
முடக்கத்தான், துளசி, கற்றாழை போன்றவை மீதி இடத்தை நிறைத்து
பசுமையாக்கும் பணியை அழகாக செய்கின்றன. :)
சில மாதங்கள் முன்பு ஊன்றி வைக்கப்பட்ட வாழைக்கிழங்கு ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று, மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும் ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மரத்தை சுற்றி நான்கைந்து கன்றுகள் மரத்திற்கு பாதுகாப்பாக(?!) வளர ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு நாள் கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
சில மாதங்கள் முன்பு ஊன்றி வைக்கப்பட்ட வாழைக்கிழங்கு ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று, மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும் ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மரத்தை சுற்றி நான்கைந்து கன்றுகள் மரத்திற்கு பாதுகாப்பாக(?!) வளர ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு நாள் கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
சக மனிதர்களிடம் எழும் கோபம்,
வருத்தம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்த, உயிர்ப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் தாவரங்களே என் தேர்வு.
தன் வண்ணம், அசைவு, வளர்ச்சி, ஸ்பரிசம் மூலமாக எளிதில் தேற்றி, அமைதி, மகிழ்ச்சி போன்ற
நேர்மறை எண்ணங்களை எத்தனையோ முறை புகுத்தியிருக்கிறது.
தான் பூத்து, நம் மனதை பூக்க செய்யும் ஒவ்வொரு செடியும் நமக்கான இலவச மருத்துவர்...!
(குங்குமம் தோழி : ஆகஸ்ட் 1- 15)