வியாழன், 27 பிப்ரவரி, 2014

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை...

கடந்த சில நாட்கள் மட்டும் காலை உணவாக பழங்கள் எடுத்துக் கொண்டதில், மூன்று நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் பழங்கள் சாப்பிட்டேன். முதல் பழத்தை சாப்பிட்டு முடித்திருக்கையில் இடது கடைவாய்ப் பற்களுக்கு இடையே சிறிய அளவிலான சக்கை சிக்கித் துன்புறுத்திக் கொண்டிருந்தது. விரல் நகத்தாலேயே எடுத்துப் போட்டு விட்டு, மீண்டும் பழங்களை சாப்பிட்ட பொழுது ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது. நாவால் துளாவியும், கைவிரல் நகங்களாலும் எடுத்துப் போட்டுக் கொண்டே கடமையை முடித்தேன். அதற்கடுத்த நாளும், இடது தாடை சற்று வலி கொடுத்ததால் தவிர்க்கலாம் என்று எண்ணியதை தவிர்த்து, மீண்டும் ஆரஞ்சுப் பழங்களை உரித்து சாப்பிட, சாப்பிட வலியின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. காபி அருந்தும் பொழுது மட்டும், அதன் வெப்பம் பட்டு மட்டுப்பட்ட வலிக்காக, வழக்கத்தை விட கூடுதல் காபி அருந்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை வேளையில் வலி உச்சத்தை நெருங்கி இருந்தது. எங்கேயோ படித்த குறிப்பு நினைவுக்கு வர, சமையலறையில் கிராம்பை தேடி கடவாய்ப் பற்களுக்கு இடையே வைத்து அதக்கிக் கொண்டேன். மெதுவாக அழுத்திக் கடிக்கையில் இறங்கிய சாறு, எளிறுகளில் பரவ, வலி கண நேரத்தில் மறைந்து போனது. பரவாயில்லை என்று என்னையே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது, கிராம்பின் சாறு காலியாகி, அதன் உருவமும் தூளாகி இருந்தது. மீண்டும் அதே வலி. வரிசையாக ஏழு கிராம்புகள், அரைமணி நேரம் வலியை தாக்குப்பிடிக்க, பழையபடி அதே வலி, கூடுதலாக நாக்கின் ஓரங்கள், கடவாய்ப் பற்களின் எளிறும் பொத்துப் போய் இருந்தன. அரைகுறை தூக்கத்துடன் வலியை சுமந்து, நேற்று காலையில் கிரீன் வாக், மற்றும் கூழாங்கற்கள் கூட்டத்திற்கு தொடர்ந்து வருகை தரும் பல் மருத்துவர் ராஜண்ணாவை மொபைலில் தொடர்பு கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டே விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிளினிக்கிற்கு, நேரில் வந்தால் தான், சரியாக சொல்ல முடியும் என்றார்.


விரட்டிய வலியால் காலை ஒன்பதே முக்காலுக்கு எல்லாம், கிளினிக் உள்ளே நுழைந்தேன்.
" முகம்  ஒரு பக்கம் வீங்கி இருக்க மாதிரி இருக்கே?"
" நீங்க போலி டாக்டர் இல்லைல, ஏன்னா, பொதுவா வீக்கம் இருக்குனு சொன்னாலும், அப்படியெல்லாம் இல்லையேனு தானே சொல்லணும்"

என்ற பதிலில் டென்சன் ஆன டாக்டர் முகத்தைப் பார்த்து, சற்று உள்ளே மிரண்டு, கடவாய்ப் பல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பதறி,
"என்னை எப்படியாவது காப்பாத்திருங்க டாக்டர் , நெறைய வேலை பாக்கி இருக்கு, ப்ளீஸ் ... " என்றதும், சிரித்துக் கொண்டே பிரத்யேக இருக்கையில் அமர சொன்னார். ( நின்று கொண்டே வேலை பார்க்கும் மருத்துவர் - பல் மருத்துவர் :P )


விதவிதமாக, பற்களின் குறைபாட்டை கண்டறிய, சரி செய்யவென, ஏகப்பட்ட கருவிகளை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஆ காட்ட சொல்ல, வாயின் உள்ளே சிறிய கண்ணாடி மாதிரி தெரியும் கருவியை வைத்து, சிறிய ஊசி முனையைக் கொண்ட மற்றொரு கருவியால், இரண்டு பற்களுக்கு இடையே இருந்த ஆரஞ்சு துணுக்குகளை எடுத்த பின், அதை விட இன்னும் மெல்லிய ஊசியால் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, " உலகம் அழியப்போகுதுனு ஊர்ல இருக்கிற ஆரஞ்சை எல்லாம் சாப்பிட்டீங்களா?", என்று கேள்வி கேட்டார்.
(வாய் பேச முடியாத நிலையில் இது போன்ற கேள்வியைக் கேட்டவரிடம், சைகையில் பதில் சொல்ல முயற்சிக்கவில்லை. :P )


முதலில் சிக்கிய மெல்லிய துணுக்கு உள்ளே மாட்டிக் கொள்ள, தொடர்ச்சியாக சில துணுக்குகள் அடைத்துக் கொள்ள, நகத்தை உபயோகிக்கும் பொழுதெல்லாம், அது எளிறை அழுத்தி அழுத்தி உண்டாக்கிய வலியை, வழக்கம் போல, பட்டது போதாது இன்னும் வேண்டும் எனக்கு என்பது போல கிராம்பின் உதவியால் பொத்துப் போக செய்திருக்கிறேன். இறுதியில் ஸ்கேலிங் என்று பற்களை சுத்தம் செய்த பிறகு, முக்கால் வாசி வலி குறைந்திருந்தது.

எஞ்சி இருந்த பொத்துப் போனதால் ஏற்பட்ட வலியும் கூட இரண்டு  நாட்களுக்குள் சரியாகும் என்றவாறு மாத்திரை, மருந்து எழுதி கொடுத்தார். இது போன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, மாறுபட்ட அளவுகளில் அமைந்த மேற்பரப்பைக் கொண்ட ப்ரஷ் உபயோகிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.

"சரி, இந்த மாத்திரை எல்லாம் எங்க கிடைக்கும்?"
"எந்த மெடிக்கல் ஷாப் லயும் வாங்கலாம்."
"அய்யே, இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கீழே விளம்பரம் கொடுத்திருக்கிற கடைல தான் வாங்க சொல்லணும், அப்போ தான், அவங்க திரும்பவும் உங்களுக்கு இது மாதிரி நோட்டு அடிச்சுக் கொடுப்பாங்க', "
என்றதும்,
'"வீட்டில தேட போறாங்க, கிளம்புங்க "
"இருபது நிமிஷத்தில வந்திருவேன்னு சொல்லியிருக்கேன். சரி எவ்ளோ பீஸ்?"
அதெல்லாம் வேணாம், ரத்னவேல் அப்பா, உங்களை மகள்னு சொன்னா, என்னை மகன்னு சொல்றார். அப்புறமென்ன... பீஸ், எல்லாம் வேணாம். மாத்திரை மறக்காம சாப்பிடுங்க"
" எல்லாம் சரிதான், ஆனா, பேஸ்புக் ல, இலவசமா வைத்தியம் பார்க்கிற டாக்டர்னு வால்ல ஹாஸ்பிடல் அட்ரஸ் போட்டுருவேன், ஒ.கே?".
"பீஸ் கொடுத்திட்டுக் கிளம்புங்க".
"குட்...  :)

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை - இந்தப் பழமொழி செயல்முறையில் நான் தெரிந்து கொண்ட நாள். எப்படியோ இப்பொழுது இரண்டாவது வலியும் சரியாகிவிட்டது. :)

திங்கள், 24 பிப்ரவரி, 2014

கறுப்பு ரிப்பன்...


தினந்தோறும் காலை வேளையில், தலையில் எண்ணை வைத்து, சிக்கெடுத்து, கோணலாக வகிடெடுத்து இரண்டாகப் பிரித்து பின்னிய ஜடையின் நுனியில் கறுப்பு ரிப்பனை வைத்து மீண்டும் பின்னி முடிச்சு இட்டு, மடக்கிய ஜடையை மேலே ஏற்றி, ஒரு சுற்று சுற்றி இறுக்கக் கட்டி,  விரிந்த பூ போல நான்கு இதழ்களுடன் சிரிக்கும் கறுப்பு ரிப்பன் பள்ளி நாட்களில் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் மட்டுமல்ல, கல்லூரி சென்ற பிறகும் கூட வீட்டில் இருக்கையில் எல்லாம், கறுப்பு ரிப்பன் கொண்டு இரட்டைப் பின்னல் பின்னுவது வாடிக்கை. அப்பொழுதெல்லாம், எங்கள் பகுதியில் உள்ள, பேன்சி கடைக்கு சென்றாலே, எதுவும் நான் கேட்காமலேயே கறுப்பு நெற்றிப் பொட்டு, ரிப்பன் இரண்டையும் கவரில் போட்டு கொடுத்து விடுவர். வேறு எந்த வண்ணத்தையும் விட, கறுப்பு தலையில் இருப்பது தனியாகத் தெரியாது என்பதால் பிடித்த வண்ணமாகி இருக்கலாம். ரிப்பன் கட்டிய இரட்டைப் பின்னல் காலத்தைத் தொலைத்து பனிரெண்டு  வருடங்களுக்கு மேலாகி விட்டது. அடுத்த மாதம் வரப்போகும் வருணின் பள்ளி ஆண்டு விழாவில், அவன் நடிக்கின்ற கதாப்பாத்திரத்திற்கு தேவையானப் பொருட்களில் இந்த கறுப்பு ரிப்பனும் ஒன்று. இனிதான் கடைக்கு போய் வாங்க வேண்டும். ஆண்டு விழா முடியவும், ஏதாவது ஒருநாளைத் தேர்ந்தெடுத்து, இரட்டைப் பின்னலுடன் வீட்டிற்கு உள்ளேயே இருக்கப் போகும் மணித்துளிகளுக்காகக் காத்திருக்கிறேன். ரிப்பனின் வழியாக பள்ளிநாட்களை அப்படியே கையில் தூக்கி பரிசளித்து விடாது காலம் என்பது தெரியும். ஆனால், அந்த நாட்களில் பொங்கிய மகிழ்ச்சியின் சில துளிகளாவது, புதிய ரிப்பனை கட்டிக் கொள்கையில், ஒட்டிக் கொள்ளும் என்று நம்புகிறேன். :)

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

My mother, The mermaid - கொரிய திரைப்படம்அப்பாவை குற்றம் சொல்லிக்கொண்டே, எதற்கெடுத்தாலும் கத்தும், பணத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் அம்மா யான் சூன், ஏதேனும் தவறாக செய்துவிட்டு திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பாவப்பட்ட அப்பா, இவர்களின் மகள் நா யங். ஒரு நாள் அப்பா காணாமல் போகிறார்... தன்  காதலனிடம்  தாங்களும் திருமணம் செய்துகொண்டால் இப்படிதான் சண்டையிட்டுக் கொள்வோம், நான் தனியாகவே இருக்கப் போகிறேன் என்று கோபத்தில்  நா யங் கத்த, இடத்தை விட்டு நகர்கிறான் அவன். வேலை விஷயமாக நியூசிலாந்து செல்ல வேண்டிய தினத்தில், காணாமல் போன தந்தையைத் தேடி, தனது பெற்றோர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு செல்கிறாள் நா யங்.

யா கிராமம் - கடல் அருகில், வித்தியாசமான மலைப் பாதைகள், சுவற்றிற்கு பதிலாக நேர்த்தியாக அடுக்கப்பட்ட கருங்கற்கள், தள்ளித்தள்ளி அமைந்துள்ள வீடுகள், மரம், செடி கொடிகள் என்று பளிச்சென இருக்கிறது. இவள் அம்மா வசித்த வீட்டின் முன்னே வந்து அம்மாவின் பெயரை சொல்லவும், திருமணத்திற்கு முன்பு இருந்த, கிட்டத்தட்ட இவள் வயதை ஒத்த அம்மா வந்து நிற்கிறாள்.  (குறிப்பு: இளம் வயது அம்மாவாகவும் நடித்திருப்பது நா யங் பாத்திரத்தில் நடித்திருப்பவரே.. டபுள் ஆக்ட்... )


டைரெக்டர், அவர் படம், அவர் உரிமை... பிடித்திருந்தால் ரசித்து செல்ல வேண்டியது தான்... ஆனாலும், எந்த கால இயந்திரத்திலும் ஏறாமல், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து சென்று, அந்த கால மனிதர்களுடன் வாழ்ந்து விட்டு திரும்புதலை, எதிர் கேள்வி கேட்க முடியாமல், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம்மையும் கிராமத்திற்குள் உலவ விடுகிறார்.... :) 

கடலில் முங்கி அடியில் கிடைப்பவற்றை சேகரிக்கும் பணியை செய்து வருகிறாள் யான் சூன். பதினைந்து வயது பெண்ணாக, இரட்டை ஜடையுடன், எளிமையான ஆடைகள் அணிந்து, துறுதுறுவென வீட்டு வேலைகளை செய்வது, தம்பிக்கு வேண்டியதை செய்து கொடுப்பது, தான் படித்திருக்காவிட்டாலும், அவனை படிக்க வைப்பது, அதே நேரம் அவனுடன் சண்டையிடுவது, மின்னல் வேகத்தில் தெருக்களில் ஓடி செல்வது என்று புன்னகையுடன் அத்தனை பாந்தமாக இருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் மகள் நா யங்.

அந்த ஊருக்கு கடிதங்களைக் கொண்டு வரும் போஸ்ட்மேன் , தினந்தோறும் அம்மாவுக்கு கடிதத்தை தருகிறார். தனக்கும் கடிதம் வரவேண்டும் என்று தன் சகோதரனால் தினந்தோறும் அனுப்ப சொல்லி, அதன் படி வந்து சேரும் கடிதம் அது.


ஒரு நாள், அருகில் இருக்கும் பெண்மணிக்காக தந்தி அடிக்க வேண்டிய அவசர சூழலில், முகவரியையும், தந்தியில் இருக்க வேண்டிய தகவலையும் மறக்காமல் இருப்பதற்காக வழி எல்லாம் சிறு குழந்தை போல சொல்லிக் கொண்டே செல்கிறாள். ஆனால், தந்தி அடிக்க நிரப்ப வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்பொழுது அந்த போஸ்ட்மேன் உதவுகிறார். பிறகு, தன் சைக்கிளின் பின்னால் அமர சொல்லி, அவளின் கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, அவள் பெயர் எழுதக் கற்று கொள்ளும் வரை தான் கற்பிப்பதாக சொல்கிறார்.

நோட்டுகள், புத்தகங்கள், பென்சில்,ரப்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து தினந்தோறும் எழுத பயிற்றுவிக்கிறார். யான் சூன், கடலுக்குள் மூழ்கி கிடைப்பவற்றை சேகரிப்பதோடு, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அத்தனை ஆர்வத்துடன் எழுதிப் பழகுகிறாள். இளம் வயது அப்பாவாக உள்ள போஸ்ட்மேன்  தேர்வு என்று சொல்லும் பொழுதெல்லாம், எப்படியும் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்று அவள் செலுத்தும் உழைப்பு, ஒரு கட்டத்தில் கண்ணில் தட்டுப்படுகின்ற எழுத்துகளை எல்லாம் பிழையின்றி வாசிக்க செய்கிறது.

கண்களிலும், முகத்திலும் உடனுக்குடன் யான் சூன் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள், நம் பிரியத்துக்கு உரியவளாக, மனதிற்கு நெருக்கமானவளாக அவளை காட்டுகின்றன.

ஒரு நாள் தேர்வில், வாக்கியத்தை அவன் சொல்ல சொல்ல மலர்ச்சியுடன் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, ' நான், உன்னை மிஸ் பண்ண போறேன், வேற ஊருக்கு மாத்திட்டாங்க', என்று சொல்வதை கேட்டவுடன் எழுதியதை பாதியில் நிறுத்தி, ' உடனே கிளம்படுவீங்ளா ?', என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பவளை, மெளனமாக தலை அசைத்து ஆம் என்கிறான்.


அவள் வயதை ஒத்திருந்த அம்மாவுடன் இருக்கும் பொழுது, அம்மாவின் எதிர்பார்ப்பு, வருத்தங்கள், விருப்பங்கள், கொண்டாட்ட மனநிலை, என்று சகலத்தையும் புரிந்து கொண்டு, நிகழ் காலத்திற்கு திரும்புகிறாள் நா யங்.

-- இதற்கு அடுத்த காட்சியில், நிகழ்காலத்தில், வேறொரு நண்பர், நா யங் - கின் அம்மா, காதலன் உடன் கிராமத்திற்கு வருகிறார். அங்கு கோபித்துக் கொள்ளும் அம்மாவை சமாதானப்படுத்தி, உடல் நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் அப்பாவிடம் அழைத்து செல்கிறாள்.


இறுதிக் காட்சியில் இவள் குழந்தைக்கு புகைப்பட ஆல்பத்தை காட்டி, ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வரும்பொழுது, அந்த கிராமத்தில் முதன் முறையாக பேருந்து விடப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், அப்பா தான் என உறுதி படுத்திக் கொள்வதற்காக, அம்மாவை மொபைலில் அழைக்கிறாள். வழக்கம் போல சிடுசிடுப்புடன் பதிலளிக்கிறாள் அம்மா, புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறாள் மகள்.

கிராமத்தில் இளம் வயதில், ஒருவரை ஒருவர் சந்திப்பதில் கூட அளவில்லாத மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த அம்மாவும், அப்பாவும், அப்படியே இருந்திருக்கலாம் என்று பேராசை எழுகிறது.

பார்த்து பார்த்து வரையப்பட்ட கோலம் போல, உருவாக்கப்பட்டப் பாத்திரம் இளம் வயது அம்மா பாத்திரம்..........
பட்டாம்பூச்சியாகப் பறந்து திரிகின்ற பருவம் - நாம் அனைவரும் கடக்கின்ற ஒன்றே.
அந்தப் பருவத்தின் இயல்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிலர், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.


இயக்குனர் :  Park Heung-shik


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திருப்பரங்குன்றம் சென்ற சுய வரலாறு + 31வது பசுமை நடை!வழக்கம் போல இன்று காலை அலாரம் வைத்து, அது அடிப்பதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் ஐந்து நிமிடங்கள் முன்னதாக எழுந்து, அலாரத்தை அணைத்து, இருந்த ஓரிரு வேலைகளை முடித்துவிட்டு, பசுமை நடையின் 31வது நடைக்காக, வண்டியைத் திருப்பரங்குன்றம் நோக்கித் திருப்புகையில், ஆறுமணியைத் தாண்டி விட்டது.

அந்த நேரத்திலும் உலாப் போகின்றவர்களை தரிசிப்பதற்காக மேல் எழும்பியத் தூசியை கண்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு குளிர் கண்ணாடியை அணிந்திருந்தது, இரவு வேளையில் பயணிப்பது போல இருந்தது. செல்லூர் செல்லும் வரையில் ஓரிரு வண்டிகள் மட்டுமே சென்று கொண்டிருந்தன. செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள திருமண மண்டபங்களின் ஒலிப்பெருக்கியில் அந்த நேரத்திலேயே திரைப்படப் பாடல்கள் அலறிக் கொண்டிருந்தன.

அடுத்து வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து இறங்கியதும், பாதி மோசமான சாலையாகவும், மீதி சுமாரான சாலையாகவும் இருக்கும் ராஜா மில் ரோடில், எதிரில் அவ்வளவாக வண்டிகள் வராததால், எதிரில் சுமாரான சாலையில் ஏறி செல்ல முடிந்தது. இதே ரீதியிலான சாலையே  வடக்குவெளி வீதி, கீழ வெளிவீதி சந்திக்கும் இடம் வரை பரிதாபத்துடன் பார்க்கும். அப்படியே ரயில்வே ஸ்டேஷன் ஐ நெருங்கும் பொழுது, எங்கெங்கோ கிளம்பிய வாகனங்கள் நெருக்கி அடிக்க ஆரம்பித்தன. ஒரு பேருந்தை ஓவர் டேக் செய்து, முன்னேறும் ஒரு வாகனத்தின் பின்னாலேயே நூல் பிடித்தது போல செல்லும் பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் மனதிற்குள் தாங்கள் ஏதோ பெரிய திறமை சாலி என்ற நினைப்பிருக்கலாம். :)

அங்கிருந்த கட்டபொம்மன் சிலை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஐ சுற்றி, மதுரைக் கல்லூரி அருகில் உள்ள பாலம், மதுரையில் வேறு எங்கும் பார்க்க முடியாத சிறப்பு பெற்றது. அத்தனை வாகனங்கள் கடக்கின்ற பரபரப்பான முக்கியமான பாலம், குண்டும் குழியுமாக பாதி இருந்தால், மீதி குழியும், குண்டுமாக இருக்கும். (ஒரே ஒரு டோல் கேட்டில் வசூலிப்பதில், ஒரு நாள் வருவாயை ஒதுக்கினால் என்ன? கேட்டால், அது வேறு துறையாம், இது வேறு துறையாம்? )

காலை வேளையில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்ததால், விரைவாக திருப்பரங்குன்றம் சென்று, வண்டியைப் பூட்டி விட்டு, கூட்டத்தினரோடு கலந்தேன்.


 1056 அடி உயரத்தைக் கடக்க வேண்டும். கீழே இருந்து ஏற ஆரம்பிக்கையிலேயே, ஒவ்வொரு மலைப்படிகளின் உருவமும், கண் காணும் வரைத் தெரியும் பாதையும் சற்று அச்சத்தைக் கொடுத்தன. மற்ற மலைகளைப் போல் இல்லாமல் மேலே செல்லும் வரை, சீரான இடைவெளிகளில், மரங்களும், செடிகளும், தங்கள் இலைகளை அசைத்து, நம்மைக் குளிர்வித்து மேலே ஏற்றின. இளைப்பாறுவதற்கு என்று தனி இடம் தேவையே இல்லை. பாறையின் எந்தப்பகுதியிலும் சற்று கவனத்துடன் அமர்ந்து கொள்ளலாம்.


மேலே செல்ல செல்ல, வித விதமான வடிவங்களில், பெரிய அளவில் நம்மைத் தாங்கிக் கொள்ளப் பாறைகள் இருந்தன. செங்குத்தாக இருந்த பாறைகளில்,  பாறையை பெரிதாக சேதப்படுத்தாமல் ஒருவர் மட்டுமே நடக்கும் அளவிற்கு, மெலிதாக செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் இருந்தாலும், பழக்கமின்மையால் கூடுதல் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டி இருந்தது.


அரைமணி நேர நடைக்குப் பின் வரும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் கொஞ்சம் சமதளமானத் தரை நம்மை அமர அழைக்கும். அப்படியே உட்கார்ந்து விட்டால், வந்த வேலை என்ன ஆகும் என்று, சில நிமிடங்களிலேயே எழுந்து, அப்பா, அம்மா என்று வெளிப்படையாக வாய்விட்டு சிலரும், உள்ளுக்குள் உச்சரித்துக் கொண்டே பெருமூச்சை விட்டுக் கொண்டே பலரும் ஏறினோம்.


வளைந்து, நெளிந்து ரகரகமாக, எத்தனையோ வகையான மனிதர்களின் பாதங்களை தீண்டி இருந்தப் பாறைகள், எங்களையும் குறித்துக் கொள்ளும் என்று தோன்றியது.
வழக்கம் போல அங்கங்கே தங்கள் ஜோடிகளின் பெயர்களையும் சேர்த்து
 செதுக்கி இருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நிஜமாகவே அவர்கள் இணைந்து வாழ்கின்றார்களா என்று வினவத் தோன்றியது.


அந்தக் குன்றின் மேல், மாறுபட்ட உயரங்களில் உள்ளப் படிகளும், சில சரிவுகளுமே சற்றே எளிதாக்கின நடையை. அங்கங்கே நம் பாதங்களை தாங்கி உதவிய அத்தனைப் படிக்கட்டுகளையும் செதுக்கியவர்களின் முகம் தெரியாத கைகளைத் தொழுதேன்.


அழகர்கோவிலுக்கு அடுத்தப் படியாக இங்கு அதிக குரங்குகள் உள்ளன. எந்தத் தொந்தரவும் இல்லை. நாம் அவற்றைப் பார்ப்பது போல, அவைகளும், 'இவங்கல்லாம் வந்திருக்காங்க போல', என்பது போல பார்த்தன.
வியர்க்க விறுவிறுக்க உச்சியில் அமைந்திருந்த சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவை அடைந்தோம்.
பள்ளிவாசலுக்கும், தர்ஹாவிற்கும் உள்ள வேறுபாடு பற்றி, அங்கு உள்ள பெரியவர் விளக்கினார்.


கி.பி.1182 இல், மதுரை சுல்தானாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்தான் இந்த சிக்கந்தர் பாஷா. இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்த தர்ஹாவிற்கு வருகை தரும் கேரள மக்களின் பின்னணி என்று விளக்கிய எழுத்தாளர் அர்ஷியாவின் உரை தெளிவானப் பல தகவல்களைத் தந்தது. இது வரை பல நூறு தடவைகளுக்கு மேலே கடந்தும், உச்சியில் தெரியும் தர்ஹா பற்றி தெரியாத தகவல்கள், நேரில் சென்று, அமர்ந்து உள் வாங்கிய இன்றைய நொடிகள்..... இனி கடக்கும் பொழுதெல்லாம், எனக்கும் இதைப் பற்றி தெரியுமே என்ற பெருமையுடன் மின்னி மறையும்.

திருப்பரங்குன்றத்தின் கீழே கந்தர்... மேலே சிக்கந்தர்...
பக்கவாட்டில் சமணர் சிலைகள்...... இவை எல்லாம் சமய நல்லிணக்க சின்னமாக திருப்பரங்குன்றத்தைக் காட்டுகின்றன.
நீண்ட உரைக்குப் பின், கீழே இறங்க ஆரம்பிக்கையில், மதுரையில் இருந்து கொண்டே, இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை இங்கு என்பது போல, தகிக்க ஆரம்பித்த சூரியனை, வழக்கம் போல செடிகளும், மரங்களும் தாங்கிக் கொண்டு, அவற்றின் பாதுகாப்பில் எங்களை இறக்கின. :)புதன், 5 பிப்ரவரி, 2014

குட்டிக் கதை முயற்சி...!'ப்ளீஸ்', என்று கேட்டும் செல்பேசி எண்ணைத் தரவில்லை அவள். பொதுவான கேள்விகளுக்கு மட்டும் மையமாக பதில் சொல்வாள். தொடர்ச்சியாக கேட்டும், அவனது எண்ணைக் கொடுத்தும் தொடர்பு கொள்ளாத காரணத்தாலேயே அதிசயப் பிறவியாக தெரிந்தாள். அடுத்தடுத்து வந்த நாட்களில் நேரடியாகவே எண்ணைத் தரவேண்டும் என்று மிரட்டலாகவே கேட்டான். அப்பொழுதும் கூட அவள் வெகு சாதாரணமாக பூனைக்குட்டிப் படத்தைப்போட்டு காலை வணக்கத்தை சுவற்றில் தெரிவித்திருந்தாள். எரிச்சலுற்ற அவன் மதிய நேரத்தில், உள்பெட்டியில், ' நம்பர் வராட்டி, ஸ்யூசைட் செய்துக்குவேன்', என்று அனுப்பிய செய்திக்கு கீழ் seen என்று மட்டுமிருந்தது. அவளோ வழக்கம் போல நகைச்சுவை என்ற பெயரில் எதையோ சுவற்றில் இரவு வேளையில் பதிவு செய்திருந்தாள். உச்சிக்கு ஏறிய கோபத்தில் ' ஏண்டி, திமிர் பிடிச்சவளே, என் உயிர் உனக்கு வெளையாட்டாப் போச்சா?' என்று ஆரம்பித்து ஏழெட்டு வரிகளில் கோபத்தைக் கொட்டிய வேகத்தில் பேஸ்புக்கை விட்டு வெளியேறினான். காலையில் உள்ளுணர்வு ஏதோ சொல்ல,  பேஸ்புக் உள்ளே நுழைந்ததும், தகவல் பெட்டியில் சிவப்பு வண்ணத்துடன் ஒன்று என இருந்ததை, ஆர்வமாக அழுத்திய பொழுது அவளிடம் இருந்து பத்திலக்க எண் நடுநிசியில் வந்திருந்தது. உற்சாகத்துடன் எண்களை அழுத்தி, எதிர் முனையில் கேட்ட குரலிடம், அவள் பெயரை சொன்னான். அந்தக் குரல், ' நேத்து நைட் ஸ்யூசைட் செய்துட்டா, கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல  இப்போ வச்சு இருக்காங்க. அவங்க அம்மா, அப்பா ஊரில இருந்து வந்துகிட்டு இருக்காங்க. நீங்க? ' ....

# குட்டிக் கதை முயற்சி!