குதிகாலைத் தாண்டி மேல் எழும்பிய வெடிப்புகள் நிறைந்த பாதங்கள், தார்
சாலையில் கொதித்துக் கொண்டிருந்த வெயிலைப் பொருட்படுத்தாமல் நிதானமாக
நின்று கொண்டிருந்தன. மேல மாசி வீதியில் உள்ள ஒரு கடையின் முன்பாக காபி
குடித்துக் கொண்டிருந்த பொழுது அவரைப் பார்த்தேன். மிக சாதாரண ஒரு
லுங்கியும், சற்று தொளதொளத்த சட்டையும் அணிந்து கொண்டிருந்தவரின் முகத்தில்
நெற்றியை நிறைத்து விபூதி அப்பி இருந்தது. அந்த முகத்தில் அவர் ஒரு ஆழ்ந்த
தியான நிலைக்கு சென்றது போன்ற அமைதி இருந்தது போல எனக்கு பட்டது.
நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியின் பின்புறத்தில் சாமான்கள் வைத்துக்
கட்டுவதற்காக அகலமாக பொருத்தப்பட்டிருந்த ஒரு பெரிய தகரப் பெட்டி சீட்டின்
அடிப்பகுதியுடன் இணைத்து நைலான் கயிறால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது.
திறந்திருந்த மேல் புறத்தின் வழியே ஒவ்வொரு துண்டு கேக் ஆக எடுத்து இடது
கையில், தன் உடலோடு ஒட்டியாவாறு பிடித்திருந்த கண்ணாடி பாட்டிலில்
நேர்த்தியாக அடுக்கிக் கொண்டிருந்தார். எண்ணிக்கொண்டே இருப்பது அவரது
உதட்டின் முணுமுணுப்பில் தெரிந்தாலும், கைகள், பாட்டிலின் வெளிப்புறம்
அழகாக தெரிவதற்காக ஒன்று விட்டு விட்டு அடுக்கி, மேல்புறம் வரை வந்ததும்,
சுற்றி பாதுகாப்பாக வைத்த கேக்குகளின் உட்புறத்தில் பாதி வரும் வரை அடுக்கி
விட்டு, பெட்டியின் இன்னொரு புறத்தில் இருந்த மூடியால் நன்றாக மூடிவிட்டு,
இந்தப் பெட்டியையும் அடைத்து விட்டு பாட்டிலை டீக்கடையில் கொடுத்தார்.
எண்ணிக்கையை மேலோட்டமாக சரி பார்த்தக் கடைக்காரர் இரண்டு நோட்டுகளை மட்டும்
நீட்டினார். எதுவும் பதில் பேசாமல், வாங்கியவற்றை சட்டைப் பையில் நிதானமாக
திணித்து விட்டு, அங்கிருந்து எடுத்த ஒரு சின்ன குறிப்பேட்டில் ஏதோ எழுதி
மீண்டும் பையில் போட்டுக்கொண்டார். ஸ்டாண்டை எடுத்துவிட்டு, இடது காலால்
இரண்டு முறை பெடலை அழுத்தி, முன் புறம் நோக்கி வலதுகாலை தூக்கிப்போட்டு
மெதுவாக அழுத்தத் துவங்கிய மிதி வண்டியுடன் எண்ணிக்கையற்ற வண்டிகள்
பயணிக்கும் சாலையில் கலந்து நிமிடங்களில் பார்வையில் இருந்து மறைந்தும்
போனார்.
அலுத்தும் சலித்தும் கொள்ள எதுவுமற்றது போல அமைதியின் உருவமாக இருந்த அவரின் முகம், செயல்கள் ஏதேதோ சொல்லி செல்வது போல இருந்தன.
மிக சாதாரண வேலையை அத்தனை நிறைவாக செய்து முடித்து, குறை என்று எதையும் அலுத்துக் கொள்ளாத அல்லது முகத்தில் காட்டிக் கொள்ளாத அந்த மனதுடன் பேசி இருந்தாலும், நிச்சயம் பணி சார்ந்து எந்த சலிப்பும் சொல்லாமல் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
வீட்டில் தன்னை சார்ந்து உள்ளவர்களின் தேவை, அவற்றை நிறைவேற்ற
வேண்டிய பெரும் பொறுப்பு, அதன் காரணமாக சீராக ஏதேனும் ஒரு வருவாயின்
தேவையே இவரை அத்தனை ஈடுபாட்டோடு ரசித்து இந்தப் பணியை செய்ய
வைத்திருக்கலாம். அதற்கு அடுத்து என்று வாழ்க்கையில் பெரிதாக முன்னேறாமல்,
தேங்கிப் போய் விடுகிறார்களோ என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்,
குறைந்தபட்ச தேவைகளைக் கூட சரிவர பெற்றுக் கொள்ளாதவர்களாக கவலையுடன்
பார்க்கத் தோன்றினாலும், எத்தனைக் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதி இல்லை
என்று சலித்துக் கொள்பவர்களுக்கு இடையில் கைகூப்பித் தொழ தோன்றும்
மனிதர்களாகவே இவர் போன்றவர்கள் தெரிகிறார்கள்.