வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஏதோ ஓரிடத்தில் விதைத்த அன்பை, வேறொரு இடத்தில் அறுவடை செய்கிறோம்...!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மையப்படுத்தியே பேசும் தோழர் Kumaresan Asak இங்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை மாறாத ஒரே அன்பினை எங்கள் மீது செலுத்துகிறார்.

ஸ்டேடஸ் சரி இல்லாம இருக்கே, என்ன ஆச்சு என்று அக்கறையுடன் விசாரிக்கும் Shah Jahan சார், என் தம்பியின் இரண்டாவது குழந்தையும் இறந்து துயரத்தில் இருந்த நேரத்தில், அது தொடர்பான அவரது குடும்பத்தில் நிகழ்ந்தவற்றை கூறி, பெரும் ஆறுதலாய் இருந்திருக்கிறார்.
அதே காலத்தில் மருத்துவமனைக்கும் வந்து நேரில் பார்த்து, அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்லிய Dr. Nallini Arulக்காவின் அருகாமை என்றும் மறக்க முடியாது.

மிக அபூர்வமாக சரியானது என்று தெரியும் பட்சத்தில், சரியான இடங்களில், சரியான நபர்களிடம் நிதி உதவி செய்ய சொல்வது வழக்கம். அது மாதிரி நேரங்களில் சொன்னவுடன் செய்த Shaji Chellan Lawyer, Rama Subramaniaraja , தவிர, இப்பொழுது வரை, தவறாமல் உதவி செய்கின்ற Harishkumar Pandian இவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மதிக்கிறேன்.

காலில் காயம் என்று இங்கு எழுதியதை வாசித்துவிட்டு வீட்டுக்கு மாத்திரை வாங்கிகொண்டு வந்த Palani Kumar, காயத்தை பார்த்து விட்டு, இது சுளுக்குக்கு தான் போடணும் என்று சொல்லியபடி கொடுத்தவனிடம், இதுக்காக எல்லாம் சுளுக்கு வேற தனியா வரணுமா , நீயே வச்சுக்கோ என்றதை வழக்கம் போல எளிதாக எடுத்து கொண்டான். (நண்பேன்டா..! :P)

வழக்கம் போல இல்லியே முகம், என்னாச்சு, டல்லா இருக்க, என்று மிக சரியாக கூட்டங்களில் கலந்து கொள்ளும்பொழுது கேட்கும் Swathi Sa Muhil க்காவிடம், கொஞ்ச நேரத்தில சரியாகிட்றேன் என்று சொல்லியபடி, அது ஏன் எனக்கு மட்டும் நடிக்க தெரியல என்று நினைத்துள்ளேன்.

அம்மா என்று அழைக்கும் Shanmuga Vadivu, Isha Mala இருவரும் கொங்கு தமிழில் அன்பாக கொஞ்சப்படுவதற்காகவே , சமயங்களில் நானே அழைப்பு விடுப்பேன். இருமலுக்கு கொள்ளு ரசம் வைத்துக்குடி என்று அவ்வப்பொழுது ஆலோசனைகளும் தவறாமல் வரும்.

மிட்டாயாக இருந்தாலும், எளிதில் வாங்கி விட மாட்டேன். என்றோ கேட்டதற்காக அம்மாவுடன் நேரில் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு, கொடுத்த பொழுது மறுக்க முடியாத அன்பு Damodar Chandruஅப்பாவினுடையது.

எந்த நல்ல நாளாக இருந்தாலும், முதலில் அழைத்து வாழ்த்து சொல்லி, ப்ளாக் எழுத காரணமாக இருந்த N.Rathna Vel அப்பா, அம்மா இருவருமே எங்கள் மீது எப்பொழுதும்  பேரன்பை செலுத்துபவர்கள்.

'அந்த போட்டோல டிரஸ் கலர் நல்லா இல்ல', என்று சொன்னால் எனக்கு கோவம் வரும். ஆனால் செல்வி, 'அடுத்து மதுரைக்கு வர்றேன் நீ தான் செலக்ட் பண்ற', என்று சொல்லி, சொன்னபடி செய்ததோடு.......... ஒரே மாதிரி இரண்டு பேரும் எடுப்போம் என்றவுடன் சரி என்று, செந்தாமரை, கிளிப்பச்சை வண்ணங்களின் கலவையில் எடுத்ததில், எனக்குப் பிடித்த பூக்கள் எம்ப்ராய்டிரி செய்யப்பட்டிருந்த ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 'உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க', என்று விட்டுக் கொடுத்து ரசித்த Sakthi Selviான் நான் தடுத்தும் கேளாமல், அதற்கும் சேர்த்து பில் கொடுத்தது. ( அந்த உடை தான் பிறந்த நாளுக்கு செல்வி :)  )

மதுரை வந்த பொழுது நேரில் சந்தித்து, அவ்வப்பொழுது நலம் விசாரித்தபடி, தன்னை ஓட்டுவதற்கு சிறிய அளவில் கூட எதிர்ப்பு காட்டாத நட்பு தம்புசாமி ஞானராஜ் ......... உடையது.

இன்று கல்யாண நாள், பிறந்த நாள், கொலு வைத்திருக்கிறோம் என்று தகவலுடன், வாழ்த்துகளை மட்டும் பெற்றுக்கொண்டு ட்ரீட் வைக்கும் ரேவதி அண்ணாதுரை அக்கா... ( உங்களுக்கு ஒரு ட்ரீட் சீக்கிரம் வைகறேன் :)  )
எப்பொழுதும் என் எழுத்தை கொண்டாடிப் பேசும் Geeta Ilangovan க்கா, நேரிலும் அதே உற்சாக மனநிலையோடு பேசுவார்.

வீட்டிற்கு வந்து சென்ற பிறகு பேசும் பொழுதெல்லாம, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் நலத்தையும் விசாரிக்கும் காயத்ரி, Magudapathi Govindaraj ,  எப்பொழுது சென்னை க்கு வருவீங்க என்று கேட்டு முடிப்பதே bye க்கு முந்தைய கேள்வியாக இருக்கும்.

சும்மா போன என்னை, கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில், நீ தான் நிகழ்ச்சி தொகுக்கனும் என்று சொல்லி, என்றோ மண் மூடி சென்ற செடி துளிர் விட காரணமான Muthu Krishnan நம்பிக்கை அபாரமானது.

மல்லிகை புக் சென்டர் ல, பட்டு னு ஒரு மொழி பெயர்ப்பு புத்தகம் வந்திருக்கு பட்டுனு வாங்கிப் படிங்க, G . N , ல இந்த கதை நல்லா இருக்கும் என்று ஆலோசனை சொல்லும் Ernesto Guvera, வார்த்தைகளில்,புத்தகத்தை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்ற அக்கறை இருக்கும்.
வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க என்று ஆரம்பித்து, பல தகவல்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் கடங்கநேரி யான் னின் நட்பு ஆழமானது.

சின்ன அளவில் கூட மனம் கோணி விடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளை அடுக்கும் Parimelazhakan Pariின் நட்பு இலக்கிய சந்திப்புக் கூட்டங்களில் என்றும் என்னை உற்சாகப்படுத்தும்.
கடந்த மாதம் நேரில் வந்த Kani Mozhi G' இதெல்லாம் கண்டுக்காத', என்று அங்கு அப்பொழுதே வாடிய முகத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லும் கனிவுக்கு உரியவர் கனி மொழி. அன்று மதிய உணவிற்கு பின், வீட்டிற்கு செல்ல கிளம்பிய என்னிடம் அங்கு இருந்த, வேறு ஒரு பெண்மணி என் கண்ணைப் பார்த்து, 'உங்க கண் ரொம்ப பவர்புல்', என்றதும், விழித்த நொடிகளில் வேகமா Yazhi Giridharan,  'இன்னைக்கு ட்ரீட் பில் கொடுத்தது இவங்க இல்ல கனி', என்று கலாய்த்ததை இப்பொழுது வரை நினைக்கும் பொழுதெல்லாம் சிரிக்கிறேன்.
இரண்டு, மூன்று முறைகள் மட்டுமே பேசி இருந்தாலும், உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கும் நேரில் சந்தித்த நந்தன் ஸ்ரீதரன் னின் நட்பு மரியாதைக்கு உரியது.

சீரான இடைவேளைகளில் அழைத்து நலம் விசாரிக்கும் Selvi Shankar அக்காவின் அன்பு, வம்பு இல்லாத அன்பு.
சமீபத்தில் அறிமுகமானாலும், பிரியமுடன் பேசும் தங்கை ஸ்ரீதேவி செல்வராஜன், நேரில் ஒரு திருமண விழாவில் சந்தித்த பொழுது அத்தனை மனம் திறந்து பேசியவை, எளிதில் எல்லோராலும்   முடியாதது.

வீட்டிற்கு வருகை தந்து வருணுடன் வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு இறக்கி சென்ற Guru Ji யின் அன்பை வருண் இன்றும்  தேடுகிறான்.
கிரீன் வாக், கூழாங்கற்கள் என்று தொடர் சந்திப்புகளில் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதுடன், எவ்வளவு கலாய்த்தலும் சிரிப்புடன் மட்டுமே எதிர் கொள்ளும் Selvam Ramaswamy அண்ணன்.

நீங்க, வர்ரீங்களா சேர்ந்து போவோமா என்று புத்தகத் திருவிழாவிலிருந்து, உள்ளூர் சுற்றலா வரை கேட்கும் பிரியத்திற்கு உரிய ரேவா பக்கங்கள்...
ஓரிரு முறைகள் புத்தக திருவிழாவின் போது மட்டும் நேரில் சந்தித்தாலும்,'பேசிக்கிட்டே இருந்ததில இங்க நிறுத்தி இருக்கோம், அடுத்த சந்திப்பில் இதில இருந்து ஆரம்பிப்போம்', என்று நிறுத்திய தலைப்பின் கீழ் உள்ள வரியை SMS அனுப்பும் Sam Raj உடைய நட்பு எளிமையானது.

நேற்றைய மழையில் நனைந்து மண்டபத்திற்குள் சென்றவுடன் , வேகமாக கைப்பையில் இருந்த துண்டை எடுத்து துடைத்து விட்ட சுபா வள்ளிஅக்காவின் அன்பு வலிமையானது.

அத்தனை தொலைவில் இருந்தாலும் பண்டிகை நாட்களில் தவறாமல் அழைத்து வாழ்த்தும்  Vaduvur Rama க்கா, நான் மதுரையில் இல்லாமல் இருந்தும் அம்மா, அப்பாவை சந்தித்து இனிப்பை கொடுத்து விட்டு ஏதோ அடுத்த ஊருக்கு வருவது போல, மலேசியா வர்றப்போ வாங்க என்று அழைத்த Sriviji Vijaya, Santhy Shanஇரண்டு வரிகளுக்கு மேல் வாசிக்க சோம்பேறித்தனம் அதிகரிக்கும் காலகட்டத்தில், அதே மாதிரி எழுது, இதே மாதிரி எழுது என்று பக்கம் பக்கமாக எழுத சொல்லி கேட்கும் தைரியம் உடைய Kayal Mira ஸ்டேடஸ் பார்த்தேன், நல்லா இருக்கல என்று அழைத்துப் பேசும் Kalpana Shriஅக்கா, தேனியை கடக்கும் பொழுது வீட்டில மாப்பிளைக்கு கொடு என்று சொல்லி இனிப்பை வாங்கி பையில் திணித்த ஆனந்தன் அமிர்தன்அண்ணன், என்ன ஆச்சு? எங்க போனீங்க என்று ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் விசாரிப்பதுடன் போகாதீங்க என்று சொல்லும் Sabeeram Sabeera கொட்டாவி விட்ட சத்தத்தை கேட்ட பிறகு, 'தூக்கம் வர்ற அளவு பேசிட்டேன் போல', என்று சொல்லும் Rajsiva Sundar அண்ணன், நம்ம ட்வின்ஸ் என்று சொல்லி, அவ்வப்பொழுது காணாமல் போய் திரும்பும் பெரும் பிரியத்துடன் இருக்கும் Charan Shiva Shiva வின் குடும்பம், குற்றாலம் தானே கூட்டமா இருந்தா என்ன,தனியார் அருவி எல்லாம் இருக்கு நானாச்சு கூட்டிட்டு போறதுக்கு என்று சொல்லும் Ram Kumar அண்ணன், இல்ல, இல்ல, இது கவிதை தான் என்று சான்றளித்து பெருமைப்படுத்தும் Gauthaman DS Karisalkulaththaan, ரேஷன் கார்ட் தானே நான் பார்த்துகிறேன் என்று சொல்லி அதற்கான வேலைகளை செய்த Ananth Madurai Ananth சென்ற முறை பாபநாசம் வந்த பொழுது உடன் வந்த Shiva, சதுரகிரிக்கு உன்னோட போகணும் என்று நேரில் சந்தித்த பொழுது சொன்னதை  கடந்த மாதம் மொபைலில் பேசும் பொழுதும் சொல்லும் Jeya Anand அக்கா, deactivate செய்து மீண்டும் வரும் பொழுதெல்லாம், அக்கறையுடன் விசாரித்து விட்டு ஆன்மீக கேள்விபதில்களில் அவ்வப்பொழுது விளக்கும் அளிக்கும் NC Ravindra Kumar .......... எழுத்தை பாராட்டியே விமர்சிக்கும் Venpura Saravanan, இந்த வாரத்துக்கு எழுதலையா என்று, என்னை, ஏதோ பெரிய அளவில் எண்ணிக்கொண்டு கேட்கும் கார்த்திகை நிலவன் அறிவு, இன்னும், இன்னும் இந்த நேரத்தில் நினைவில் கொண்டு வர மறந்த, விடுபட்ட பலரையும் அறிமுகப்படுத்தியது பேஸ்புக்...!

இது கனவுலகம், என்று உள்ளுக்குள் எங்கேயோ சொல்லிக்கொண்டே இருக்கும். என்னுடைய நிலைத்தகவல்களின் மூலமாக என்னை அறிந்தவர்கள் நீங்கள். மிக சிலருக்கு கூடுதலாக ஓரிரு பக்கங்கள் தெரிந்திருக்கலாம். ஆனாலும், எதிர் பார்ப்பின்றி அன்புடன் பழகுகின்ற உங்கள் அனைவரின் அன்பும், கடந்து வந்த பாதையில் கூடுதல் வலிமையை எனக்கு அளித்தது என்பது உண்மை. என்னவோ, இன்று பகிர தோன்றியது!

என் மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இத்தனை அன்பும் எங்கேயோ, எப்பொழுதோ நான் விதைத்ததுக்காக இன்று அறுவடை செய்து கொண்டிருக்கலாம்!

திங்கள், 2 டிசம்பர், 2013

எங்க ஊரு ஆறு! :(

நவம்பர் 24, பசுமை நடைக்காக சோழவந்தான்க்கு அருகில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் கோவிலுக்கும், அதன் இன்னொரு புறத்தில் வைகை ஓடிய ஆற்றுமணலுக்கும் சென்றோம். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோவிலை விரிவாக்கமும், புனரமைப்பும் செய்தார்கள். இக்கோவிலில் உள்ள 13 கல்வெட்டுகள் பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை.  அதில் ஒன்று விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலத்தது. திருஞான சம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு, அவர் "வன்னியும்மத்தமும்", என்னும் பதிகம் பாடியவுடன் ஏடு எதிரேறி ஒதுங்கி நின்றத்தலம். (சமணர்களுக்கும், சைவர்களுக்கும் தங்கள் மதமே சிறந்தது என்று எழுந்த சர்ச்சையில் ஏட்டில் தாங்கள் எழுதியப் பாடல்களை ஆற்றில் விட்டு, திரும்பி வரும் ஏட்டிற்கு உரிய மதமே சிறந்தது என்ற முடிவிற்கு வருவராம். இதன் பெயர் புனல்வாதம். அனல்வாதம் என்பது நெருப்பில் இட்டு முடிவு செய்வது.)

மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் வைகை, இந்த ஊரின் அருகிலே வடதெற்காக திரும்பி மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இதன் காரணமாக இறந்து போனவர்களுக்காக செய்கின்ற காரியங்கள், காசியில் செய்ததற்கு ஒப்பான பலனை அளிப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். சரி நாம் ஆற்றுக்கு வருவோம்.

இலக்கியங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற வைகை, நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் இருந்த ஆறு இந்த நவம்பர் மாதத்திலும் வெறும் மணலாகவே காட்சி அளிக்கிறது. இத்தனைக்கும், சித்திரைத் திருவிழாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வைகை, அந்த மாதத்தின் குறிப்பிட்ட அழகர் ஆற்றில் இறங்கும் நாட்களை ஒட்டி சுத்தப்படுத்தப்படுவதோடு, வேலை முடிந்ததாக நினைக்கும் மக்களையும் அரசையும் கொண்டே இருக்கிறது மதுரை.

ஆற்றின் ஓரங்களில் போடப்பட்டுள்ள தார்சாலைகளை உபயோகப்படுத்தி எளிதாகக் குப்பைகளை கொட்டிச்செல்லும் பல்வேறு வாகனங்கள். ஊருக்குள்ளேயே PTR, ஆல்பர்ட் விக்டர் போன்ற முக்கியப் பாலங்களில் ஏறி இறங்கும் பொழுதே இரண்டு பக்கங்களும் சிறிய குட்டையாகத் தேங்கிய கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், நிறைய செடிகளும், கூடவே மண் தரையையுமே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு, ஊருக்கு சற்று முன்பே உள்ள இடத்திலாவது, பாடல்கள் பலவற்றிலும் கண்ட வைகையை நீருடன் கண்டுவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் சென்றது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

ஆற்றின் கரையில் அமரலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு, ஆற்றின் உள்ளேயே மணல் தான் உள்ளது என்று வரவேற்ற வைகையின் ஓரங்களில் இருந்த பசுமையான மரங்களே சற்று ஆறுதல் அளித்தன.

என்ன ஒரு வேறுபாடு என்றால், நகரின் உள்பக்கத்தில் ஆற்றின் உள்ளே கொட்டப்படும், கலக்கும் கழிவுகளுடன் ஒப்பிடுகையில், கிராமங்களின் பங்கு கொஞ்சமே கொஞ்சம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, எளிதில் மட்கிப்போகும், நிலத்தை மாசுபடுத்தாதக் கழிவுகளை மட்டுமே ஆற்றிற்கு அளிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு ஆற்றை மாசுபடுத்தி, கிட்டத்தட்ட தொலைத்துவிட்டு திருவிழாக் காலங்களில் மட்டும் மெனக்கெட்டு நீரை வரவழைக்கும் குற்றவுணர்வு அற்றவர்களாகவே இருக்கின்றோம்.

தாமிரபரணியோ, காவிரியோ அவ்வூர் மக்களின் தெய்வமாக கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் பாலங்களை கடக்கையில் இத்தனை கழிவுகளைத்  தாங்கிய அவலக் காட்சியைக் கண்டதில்லை. நம்மூரிலும், அழகர் இறங்குகிறார் என்கிற போது, அந்தக் காரணத்திற்காகவாவது, சுத்தமாக வைத்திருக்கலாம். ஊர் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், நம் வைகைக்காக என்ன செய்தோம்? குறைந்தபட்சம் கழிவுகளைக் கலக்க விடாமல் செய்யக்கூட இயலவில்லை.

என் வீடு சுத்தமாக இருக்கிறது. போதுமான அளவில் நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கிறது, என்பதனையே  போதுமானதாக எண்ணுகிறோம். பாடங்களில் படித்த நம் ஆறு, மழை அதிகமாகப் பெய்கையில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து, மறுபடி குப்பைகள், கழிவுகள் என்று வழக்கமான முகத்திற்கு திரும்புகிறது.

என்னென்னவோ புயல்கள் வந்து போனதென்று சொன்னாலும், கடந்த சில நாட்களாக மழை வருவதற்கான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு சொட்டு மழையையும் காணோம் எங்கள் ஊரில். மழை தொடர்ச்சியாகப் பெய்து ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடாவிட்டாலும், ஆறு என்றால் இது தான் என்கின்ற அளவிலாவது தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அதைப்போலவே ஆற்றை அசுத்தப்படுத்துதல், தன் வீட்டை அசிங்கப் படுத்துவதற்கு சமம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்ற ஆசை  எழுகிறது........

எதனையும் தீர்வாக சொல்ல முடியவில்லை....
என்ன செய்யலாம் இதற்கு என்பதே கேள்விக்குறியாக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.....
எங்கேயாவது, யாராவது இதற்கான பதிலை செயலாகவே நடைமுறைப்படுத்தலாம் என்ற பேராவலின் ஊடே......... இந்தக் கேள்வியை இந்த சின்னஞ்சிறியப்பதிவில் அடக்கி இருக்கிறேன்.


வெள்ளி, 29 நவம்பர், 2013

தேங்காய் பப்ஸ் கூடவே என்னோட தோழியும்!

நேற்றையப் பதிவின் நீட்சியாக தொடர்ந்த எண்ணங்களை வரிசைப்படுத்தி உள்ளேன். ஓரளவு என்னைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட ஓரிருவரில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பள்ளிவகுப்பு வரை உடன் வந்த நட்பு தமிழரசி. ( அதன் பிறகு லதா....... லதா பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுத வேண்டும்) நான் வாங்கினேன் என்பதற்காக அதே மெரூன் வண்ணத்தில் BSA SLR சைக்கிள் வாங்கியவள்.


93 - 95, மேல்நிலை வகுப்பு படிக்கும் காலங்களில், பள்ளிக்கு செல்கையில், தினமும் ஐம்பது பைசா கிடைக்கும். இதை சேர்த்து வைத்து, அதற்குள் சஞ்சாயிகா சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து, சைக்கிள்க்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்தோடு, எங்கள் சத்துக்கு நாங்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளுக்கும் இதிலிருந்தே செலவு செய்ய வேண்டும். கொஞ்சம் பெரிய அளவில் தேவை என்றால் மட்டுமே பாட்டியிடம் செல்வது, மற்றபடி, வீட்டில் கூடுதலாக கேட்பது கிடையாது.


இப்படி மிச்சம் பிடித்து மிச்சம் பிடித்து மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை பள்ளியில் உள்ள கேண்டீனில் தேங்காய் பப்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இந்த பப்ஸ், சின்ன வட்டமாக, உள்ளே அளவான தேங்காய்த் துருவலுடன், சுட்டெடுக்கப்பட்டு ஆங்காங்கே மெலிதாகக் கருகி, உச்சியில் ட்யூட்டி ப்ரூட்டியில் உள்ள சின்ன சிவப்பு சதுரம் பதிக்கப்பட்டு இருக்கும். அன்றைய விலை எழுபத்தைந்து காசு. இன்றைக்கும் மதுரையில் பல டீ கடைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேக்கரி வகையறாக்களில் இதுவும் இருக்கும். இதே பப்ஸ் பெரிய பேக்கரிகளில் கூடுதல் தேங்காயுடன், எந்த கருகலும் இல்லாமல், உச்சியில் செர்ரிப் பழத்தை தாங்கிக்கொண்டு கிடைக்கும், ஆனால் சுவை அதில் பாதி கூட இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலும் திகட்டி விடும். சரி மேட்டர்க்கு வருகிறேன்.


வகுப்புகள் மூன்றரை மணிக்கு முடிந்தாலும், ஐந்து மணி வரை ஸ்டடி என்று எல்லோரும் வகுப்பில் உட்கார்ந்திருக்க, விளையாட்டில் இருப்பவர்கள் மட்டும் மைதானத்திற்கு சென்று விடுவோம். ஐந்தரை மணி வரை பயிற்சி எடுத்தப் பிறகு வீட்டிற்கு கிளம்புவோம். தமிழரசி ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்து எனக்காக மைதானத்தின் அருகே காத்திருப்பாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வாங்கி சாப்பிடுவதற்கு, முதல் நாளே திட்டமிடுவோம். சமயங்களில் பழச்சாறும் சேர்த்து வாங்குவோம்.



ஐந்தரை மணிக்கு மேல் மிகமிகக் குறைவான மாணவியரே இருப்பர். தேங்காய் பப்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு, வழக்கம் போல உட்காரும் மரத்தடியில் அமர்ந்து, பல கதைகளை பேசிக்கொண்டே இருப்பது எங்களுக்கு அடுத்த பல நாட்களுக்கான உற்சாகத்தை தருவதாக எண்ணியிருக்கிறேன். இதில் மற்றைய உணவுகளைப் போலவே, ருசியை உணர்ந்து கொண்டே, வேகவேகமாக காலி செய்துவிடுவேன் பப்ஸை, அவளோ எலிக் கருமுவது போல, மிக மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். ' அங்க பாரு ஹாஸ்டல் பிள்ளைக வர்றாங்க, அவங்களுக்காக தான் இம்புட்டு மெதுவா சாப்பிடறியா,' என்றால், 'என்னதை தரமாட்டேன், நாம ஷேர் பண்ணி இன்னொன்னு வாங்கிக் கொடுக்கலாம்', என்பாள்.


இதில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சண்டை என்று சில நாட்கள் பேசாமல் இருப்போம். அப்பொழுதும் சேர்ந்து சைக்கிளில் செல்வதற்காக காத்திருப்பாள். எனது வீட்டிற்கான திருப்பத்தில் வளைவது வரை எதுவும் பேசிக்கொள்ளாமலே சேர்ந்தே ஓட்டிக் கொண்டு வருவோம். :P

இன்னொன்று..... பாட்டு. சில விருப்பமான பாடல்களை பாடுகிறேன் பேர்வழி என்று வாசிப்பும் இல்லாமல், பாட்டாகவும் இல்லாமல் என்னுடன் போட்டிப்போடும் அளவிற்கு கத்திக் குவிப்பாள். சில நேரங்களில், 'ப்ளீஸ் இது என் பேவ்ரட் பாட்டு, கொலை பண்ணாதே, நானும் உனக்குப் பிடிச்சப் பாட்டை கொலை பண்ணல', என்ற டீலிங் பரஸ்பரம் எங்கள் காதுகளை காப்பாற்றி இருக்கிறது. :P


இன்று காவல் துறை அதிகாரியின் மனைவியாக, சராசரி குடும்பத்தலைவியாக இருக்கும் தமிழரசி, தேங்காய் பப்ஸை பேக்கரி செல்லும் நேரங்களில் எல்லாம்  கேட்டு வாங்குவதாக சொன்னாள், அடுத்த தடவை டீ கடைகளில் தேடு. அதே சுவையோடு கிடைக்கும் என்றேன்.



அன்றைய நாட்களில், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் தரப்படாமல், எளிதில் காசு கிடைத்ததில்லை. கல்லூரி சென்றவுடன் வீட்டில் ட்யூசன் எடுக்க ஆரம்பித்தப் பிறகு ஓரளவு மாதவருமானம் வந்து கொண்டிருந்தது. ஐந்தரை வருடங்களில் அந்தப் பணத்தை சேமிப்பது போக, மனது சரி என்று சொல்பவைக்கு கொடுத்தது போக, தனிப்பட்ட முறையில் எனக்கென்று எதுவும் சிறப்பாக வாங்கிக்கொண்டது இல்லை. அப்படி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, அனாவசியம் என்று நினைப்பதற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனது வருவதில்லை.


எதுவும் அபூர்வமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு கூடுதல். காணும் இடங்களில் எல்லாம் தாராளமாகக் கிடைத்தாலும், எப்பொழுதேனும் வாங்கிக் கொள்ளும் நேரங்களில், அதன் மதிப்பை தொடர செய்யலாம். எல்லாவற்றையும் எளிதாக கிடைக்கும் என்ற அட்டவணையின் கீழ் உட்படுத்தும் பொழுது, அலுப்பும் சலிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றன. ஒன்றிரண்டையாவது, கொண்டாடுவதற்கு என்று விட்டு வைக்கும் மனநிலை, என்னை கூடுதல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.




வெள்ளி, 15 நவம்பர், 2013

பெயர் வரலாறு!

அம்மா அப்பாவின் கைகளைப் பிடித்தபடி ஆடிக்கொண்டே மலர்ச்சியுடன் பள்ளிக்கு முதல் நாளில் அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு தெரியாது தன் பெயர் மாற்றப்போகும் சம்பவம் நிகழப் போகின்ற நாள் அது என்று. பிறந்த ஆறு மாதம் வரை, ஜாதகப் படி வைத்தப் பெயர் என்று சர்மிளாவாக பல் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அம்மாவிற்கு அந்தப் பெயர் அவ்வளவாக ஒட்டாமலே இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் புகழ் பெறத் தொடங்கியிருந்த ஒரு நடிகையின் பெயர் பிடித்துப் போய் அதையே, தன் மகளுக்கு புதிதாக சூட்டி அழைக்கத்தொடங்கி இருக்கிறார். நான்கு வயது வரை வெறும் தீபா வாகவே இருந்த அந்த குழந்தையே நான் தான். :P

இப்போது, மீண்டும் நர்சரி பள்ளி, 1981,ஜூன்.....
விண்ணப்பம் நிரப்புபவரிடம் தீபா என்று அப்பா சொல்ல, ஒரு நிமிடம் என்று சொல்லி அப்பாவிடம், 'நம்ம குடும்பத்தில மூத்தப் பிள்ளைகளுக்கு எல்லாம் குல தெய்வம் பேரை சேர்த்து வைக்கணும், இவளுக்கும் அது மாதிரி பேரை வைக்கணும்', என்று சொல்வதை கேட்கிறேன், அவ்வளவு விவரம் இல்லாததால், எதிர்க்காமல் வேடிக்கைப் பார்க்கிறேன். நாக என்று ஆரம்பித்து ஏழு, எட்டுப் பெயர்கள் வரை ஆலோசித்து, இந்த ராணி மட்டும் பிற்சேர்க்கையாக சேர்த்து உள்ள பெயர் கொஞ்சம் தள்ளி உள்ள சொந்தத்தில் உள்ளதால், இதுவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, என்னிடம், இனி உன் பெயர் ஸ்கூல் ல இது தான் என்பதை,'ஐ எனக்கு ரெண்டு பெயர்', என்று சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டேன்.
 
 
 


 
உயர்நிலைப் பள்ளிக்கு சென்று ஓரிரு வருடங்களிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை. வெளியே யார் பெயர் கேட்டாலும், வீட்டில், சொந்தத்தில், அக்கம்பக்கம் அழைக்கும் பெயரை சொல்வதா அல்லது, பள்ளியில் கூப்பிடும் பெயரை சொல்வதா என்று. இதில் நாளாக ஆக, உடன் படிப்போர் கிண்டல் செய்ய, நான் என்ன பாம்புக்கு எல்லாம் ராணியா எதுக்கு இந்த பேர் வச்சீங்க என்று அவ்வப்பொழுது சண்டை போடுவேன். தம்பியிடம், 'டேய், நீ முதல பிறந்து இருந்தா நீ மாட்டிருப்ப', என்று சொல்லிக்கொண்டே, 'தெரிஞ்சுக்கோ, குடும்பத்தில மூத்தப் பிள்ளைக்குனு எல்லாம் பண்றாங்கன்னா, இது மாதிரி தியாகம் எல்லாம் நாங்க செய்றோம்', என்று புலம்பித் தள்ளி இருக்கிறேன்.

ஏதேனும் பத்திரிக்கையில் அல்லது தொலைக்காட்சியில் ஒரு பெயரைப் பார்த்தவுடன், 'இந்த பேர் நல்லா இருக்குல', என்று என் அம்மா சொல்லும் பொழுது, 'அப்புறம் உங்களை மாதிரி எனக்கென்னான்னு பேர் வைப்பாங்க', என்று எகிறுவேன். 'ஏம்மா, உங்க பேர்ல தம்பிப் பேர் வரை எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு மட்டும் ஏன் இப்படி பேர் வச்சீங்க', என்று கேட்டால், 'விரலை சூப்பிட்டு வேடிக்கை பார்த்த நீ இப்படியெல்லாம் பேசுவேன்னு தெரியாம வச்சிட்டேன். இப்போ கூட மாத்து', என்று சொல்லும் பொழுது மேல்நிலைப்பள்ளி வகுப்பை முடித்திருந்தேன்.
கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதில் இருந்து, வீட்டில் இருப்பவர்கள் தப்பித்தனர். :P

கல்லூரி முடித்தப் பிறகு, எப்படியும் வேறு எந்தப் பெயரையும் முன்னாலோ, பின்னாலோ சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. எனவே நீளப் பெயராக இருக்கட்டும் என்று இரண்டு பெயர்களையும் சேர்த்து உபயோகிக்கத் தொடங்கிவிட்டேன்.


நாம், அதிகம் உபயோகிக்காமல் இருந்தாலும், ஒருவரின்  பெயர் அவரின் குணம் அறியப்படாத வரை, அவர்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது என்பது ஓரளவு உண்மையே. சில நேரம், சிலரால்,  நம் பெயர் அழைக்கப்படும் விதமே, கடினமான சூழலையும் இலகுவாக்கும். பெயர் என்பது பெயரளவிற்கு நிச்சயமாக இல்லை......... பிறருக்கு அறிமுகமாகி, வாழ்ந்து, மறைகையில் விட்டு செல்லும் உயிரை சுமந்திருக்கும் உடலுக்கு இணையாகவே பெயர் இருக்கிறது!


ஞாயிறு, 10 நவம்பர், 2013

கொஞ்சம் வெளியில் வலியும் + கொஞ்சம் உள்ளுக்குள் வலியும் ........

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே இது வரை காரணம் அறியப்படாமல் உள்ள முன்னங்காலில் ஏற்பட்ட ரத்தக்கட்டிற்கு தினமும் இரண்டு முறை வெந்நீர் ஒத்தடம் வைத்ததில், வலி கொஞ்சம் குறைந்து, கட்டியின் அளவும் சற்று குறைந்தது போல இருக்கவே, விரைவில் குணமாகும் ஆவலில் மூன்றாவது நாளில், நான்குமுறை ஒத்தடம் கொடுக்க திட்டமிட்டேன். நான்காவது முறை பொறுக்கும் சூட்டில் சிறிய துணியில் வெந்நீரை வைத்து ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டே இருக்கும் பொழுதே கூடுதலாக அழுத்தம் கொடுத்து அழுத்தினேன். உள்ளே இருக்கும் ரத்தக்கட்டு கரைந்து மாயமாகும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு அழுத்தியதில், ஐம்பது காசு அளவிற்கு உஷ்ணம் தாங்காமல் உரிந்து வந்தது தோலின் மேல் பகுதி. போட்ட சத்தத்தில் சில்வெரெக்ஸ் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதை மெதுவாக நானே சுட்டுக் கொண்ட புண்ணில் தடவும் பொழுது எல்லாம் நாங்க சாதாரண காயமில்லை தீக்காயம் என்று உதார் விட்டுக்கொண்டு வந்த எரிச்சல், இரண்டு நாள் இருந்தே மறைந்தது. ஐந்தாம் நாள் புண் ஆறி விட்டது. ஒன்று(ரத்தக் கட்டு) வெறும் வலி, மற்றொன்று(தீக்காயம்) எரிச்சல். எரிச்சலை வலி என்று சொல்லலாமா? அல்லது வலியை தான் எரிச்சல் என்று சொல்வது சரியா என்றெல்லாம் தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தால், இன்னும் இரண்டு நாளில் தீபாவளி.


கொஞ்சம் கால்களுக்கு ஓய்வு கொடுக்க விருதுநகர்க்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என்று குடும்பமே கேட்டுக் கொண்டதால், திருமங்கலம் வரை உள்ளூர் பஸ், அங்கிருந்து விருதுநகர் க்கு இன்னொரு பேருந்து, உட்கார்ந்து செல்வதில் பிரச்சனை ஏற்படாவண்ணம், டெர்மினஸ் சென்று ஏறி, பண்டிகைக்கு முடிந்த அளவு ஒத்தாசை செய்து, கொண்டாடிவிட்டு தீபாவளிக்கு மறுநாள் விருதுநகரில் இருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

பயணங்களில் அரசு பேருந்தை தேர்வு செய்யக் காரணம், ஏதேனும் ஆகிவிட்டால் நஷ்ட ஈடு கிடைக்கும் என்பதற்காக அல்ல, பலரும் நேரத்தை மிச்சப்படுத்தி தங்கள் சாதனை கோட்டை தொட்டு, பதக்கம் பெறப் போவதற்காக தனியார் பேருந்துகளையே அதிகம் பயணிக்க பயன்படுத்துவதால், அரசு பேருந்துகளில் காற்றாட உட்கார்ந்து போகலாம். பத்து, இருபது  நிமிடங்கள் தாமதமாக சென்றாலும் குறைவான அலுப்பை மட்டுமே பெற்று கொண்டு இறங்கலாம் என்பதாலேயே அரசு பேருந்துகளே முதல் தேர்வாக இருக்கும்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பேருந்தில் ஏறிய பிறகு பதினைந்தாவது நிமிடத்தில் வண்டி புறப்பட்டது. வலது புறத்தில் ஓட்டுனரின் இருக்கைக்குப் பின்னால், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தோம். அதற்கு பின்னால், நான்கு வரிசைகள் தாண்டி, நேரடியாக டாஸ்மாக்கில் இருந்து வந்து அமர்ந்து இருந்தனர் இருவர். முகம் சுளித்தபடி, முந்தைய இருக்கையில் வந்து அமர்ந்த பெண்ணாலேயே, அந்த இருவர் கவனத்திற்கு வந்தனர். இருபது பேர் வரை இருந்தும், எவரும் அதை பொருட்படுத்தவில்லை. வழியில் இருந்த PRC டெப்போவில் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த  பொழுதே ஒருவன் வெளியே தலையை நீட்டி, வாந்தி எடுத்தான். டீசல் நிரப்பியவர் திட்டியதை, அவன் பொருட்படுத்தவே இல்லை. பக்கத்தில் இருந்தவன் மட்டும் சாரி கேட்டான். நான்கு வழிச்சாலையில் பயணத்தை ஆரம்பித்தது பஸ். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஒரு சத்தம் மீண்டும் அவனே கீழே குனிந்து இருக்கைக்கு முன்பு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். டீசல் நிரப்புகையில், அது வேறு இடம், நிதானமாக தலையை வெளியே நீட்டியும், இப்பொழுது தலையை நீட்டினால் முந்தி செல்லும் ஏதேனும் பேருந்து அடித்து விடலாம் என்று சர்வஜாக்கிரதையாக உள்ளேயும் அசிங்கப்படுத்தியவனின் அறிவு, இந்த நேரத்தில் பயணிக்காமலும் இருக்க சொல்லி இருக்கலாம். நடத்துனர் சாதாரண முகபாவத்தில், ' கீழே இறங்கினதும் மண்ண அள்ளி போட்டுட்டு போங்க' என்று சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை. அருகில் வந்த நடத்துனரிடம், ஓட்டுனர், ' என்ன பஸ் குள்ளேயும் எடுத்திட்டானா?' என்று மிக சாதாரணமாக விசாரித்ததில், எப்படியோ தன் அருகில் அசுத்தம் செய்யவில்லை என்று தப்பித்த உணர்வே மேலோங்கி இருந்தது.

பதினைந்தாவது நிமிடத்தில் கள்ளிக்குடி வந்துவிட்டது. ஏறிய ஐவரில் இருவர் உளறிக் கொண்டேயும், ஒருவர் தடுமாறியபடி உள்ளே ஏறியும், மிகவும் கஷ்டப்பட்டு இமைகளை திறந்து எங்கே நிற்பது என்று இடத்தை தேடிக்கொண்டு இருந்தார். மட்டமான நாற்றம் சில நிமிடங்களில் கடந்து பேருந்தின் கடைசி இருக்கைகளை அடைந்து இருந்தது.
விரைவாக கடந்து செல்ல விரும்பிய மணித்துளிகள் மெதுவாகவே கரையத்தொடங்கின.

அதற்கடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் திருமங்கலம் வர, பெரிய விடுதலை உணர்வுடன் இறங்கி, வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.


அரைமணி நேரம் நரகத்தின் வாசலில் கொஞ்சம் உலாத்திய உணர்வு, அங்கங்கே ஒட்டி இருந்த சின்ன சின்ன சந்தோஷங்களையும் துடைத்து விட்டிருந்தது.

அந்த நேரத்தில் பல எண்ணங்கள்...........
1. யாரிடம் போய் இதை முறையிடுவது? இது மாதிரி எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆட்களிடம் வாங்கிக்கட்டி கொள்ளாமல் தப்பிக்கும் ஓட்டுனர், நடத்துனர்களை எப்படி குறை சொல்வது?
2. கால் குணமாகாமல் இருந்திருந்தால், இந்த பிரயாணத்தையே தவிர்த்திருந்திருக்கலாம்.
3. அமைதியான பயணத்தை கெடுத்தவர்களின் மேலிருந்த கோபத்திற்கு சமமான கோபம் பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் அரசின் மீதும் வந்தது.
4. ஒரு வகையில் பார்த்தால், கேடு என்று தெரிந்தும் விற்பவனின் பேருந்திலேயே பயணம் செய்தால், இது மாதிரி இம்சைகளை அனுபவிக்க வேண்டும் போல.


வெள்ளி, 25 அக்டோபர், 2013

நமக்கு சரின்னு பட்டா சரி தான்!


வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பலசரக்குக் கடைக்கு தோழியுடன் நடந்து சென்றேன். அவள் கடையின் உள்ளே சாமான்களை வாங்கிக்கொண்டு இருந்தாள். அந்த சாலையின் அருகிலேயே இடது ஓரத்தில் ஒரு கரும்பு சாறு கடை இருந்தது. கரும்புகளை இரண்டாக, மூன்றாக ஒடித்து, அதன் உள்ளேயே இஞ்சி, எலுமிச்சைத் துண்டுகளை வைத்து சாறு பிழியும் இயந்திரத்தின் உள்ளே கொடுத்து விட்டு, வலது புறம் சுழற்றுவதற்காக இருந்த கைப்பிடியை அழுத்திப் பிடித்து சுற்ற சுற்ற, சாறு முதலில் ஐஸ் கட்டிகள் சிதறிக் கிடந்த ஒரு தட்டில் வந்து விழுந்து, அதன் பின்னர் ஒரு குடுவையில் சேகரமானது. மீண்டும், மீண்டும் உருளை வடிவ சக்கரங்களுக்கு இடையே கரும்பைக்கொடுத்து, ஒரு துளி கூட வீணாகி விடக்கூடாது என்ற நோக்கில் கர்ம சிரத்தையாக பிழிந்து எடுத்தப் பின், வடி கட்டியில் வடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, எதிரில் நின்று இருந்த இரு பெண்களுக்கும் கொடுத்தார் கடைக்காரர்.

மழைக்காலம், ஆனாலும், குடிக்க வேண்டும் என்ற உந்துதல், உள்ளே இருக்கும் தோழியோ இதெல்லாம் விரும்ப மாட்டாள்.  'எனக்கு ஒரு கரும்புச்சாறு ஐஸ் இல்லாம கொடுங்க',  என்று சொன்னதும், தட்டில் இருந்த ஐஸ் கட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் பிழிந்து நேரடியாக டம்ளரில் விழும்படி செய்து, வேறொரு டம்ளரில் வடிகட்டிக் கொடுத்தார். திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவை யோசித்துக்கொண்டே, கேட்ட காசைக் கொடுத்தேன்.


அங்கிருந்து  நகர எத்தனிக்கையில், வாழை இலையின் மேல் ஓரிரு உதிரிப் பூக்கள் சிதறிக் கிடக்கும் மூங்கில் கூடையை இடுப்பில் சுமந்து கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி தத்தளிக்கும் கண்ணீருடன் என் முன் வந்து நின்றார். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற பொழுதே, ' பூவெல்லாம் வித்த காசு சுருக்குப் பையில இருந்துச்சு, பஸ் ஏறுறதுக்காக நின்னுகிட்டு இருக்கிறப்போ தான் பார்க்கிறேன், சுருக்குப் பையைக் காணோம், இப்ப வீட்டுக்கு போவனும், காசு வேணும்' என்றார். முற்றிலும் வெண்மைக்கு மாறி இருந்த தலை முடியை இழுத்து உச்சியில் கொண்டை போட்டு இருந்தார். பெயரளவில் கூட எந்த ஒரு அணிகலனும் அணிந்திருக்கவில்லை. ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்பட்ட சேலைகளில் ஒன்றை சுற்றி, அதற்கு சற்றும் பொருத்தமில்லாத சட்டையுடன் இருந்தார். மனதிற்கு சரி என்று படாவிட்டால், ஐந்து பைசா கூட எடுத்துக்கொடுக்கும் பழக்கமில்லை. பெரிதாக இழந்த துக்கம் மட்டுமே கண்கள் உட்பட அந்தப் பெண்ணின் முழு முகத்திலும் அப்பி இருந்தது. கைப்பையின் ஜிப்பைத் திறந்து கொஞ்சம் கூடுதலான பணத்தைஎடுத்து, அவரின் கைகளில் கொடுத்தேன். பதிலுக்கு எதுவுமே சொல்லாமல் அப்படியே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே, இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அருகில் இருந்த பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பி இருந்த என் தோழி,
' பூவெல்லாம் வாங்குற போல, அதான் மழை பெய்யுது', என்றவாறே பூவாசம் கூட இல்லாத என் கைப்பையை பார்த்து விட்டு,
'கையில பூவைக் காணோம், பூக்கார அம்மா கிட்ட பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு,' என்றாள். அவள் கையில் இருந்த இரண்டு பைகளில் எடை குறைவான பையாக தேர்ந்தெடுத்து, வலது கையின் விரல்களுக்கு கொடுத்து விட்டு, நடந்து கொண்டே, விவரத்தை சுருக்கமாக கூறினேன்.



'அதெப்படி நம்பி பணம் எடுத்துக் கொடுத்த? ஏமாத்தி இருக்கவும் வாய்ப்பிருக்கு ', என்றாள்.

'ம்ம்........ அந்தப் பார்வை உள்ளே எதோ செஞ்சது......... அப்படியே ஏமாத்தி இருந்தாலும், அது அந்த அம்மாவோட தேர்ந்த நடிப்புக்கான பரிசா இருந்திட்டு போகட்டும்', என்றேன்.

அதற்கு பிறகு எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.



திங்கள், 14 அக்டோபர், 2013

1 1/4 மணி நேரப்பயணம்!

நேற்று காலை ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் செல்லவேண்டி இருந்தது. பண்டிக்கைக்காலமாக இருப்பதால், நிரம்பி வழியும் பஸ், ரயிலில் பயணிக்க மலைப்பாக இருந்தது. 55 கிலோமீட்டர் தூரம். விரும்பியே இரு சக்கர வாகனத்தை கிளப்பினேன். வாங்கிக் கொள்ளவேண்டிய சில பொருட்களை பெரியார் பேருந்து நிலையம் அருகிலேயே வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்த பொழுது மணி காலை பத்து. என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அதிகாலை ஆறுமணிக்கே உரிய வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும் வழி எங்கும் நிரப்பி இருந்தது. திருப்பரங்குன்றம் அருகில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, மிதமான வேகத்தில் தொடர்ந்தேன்.

திருநகர் தாண்டியபின், வீடுகள், கடைகளின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே செல்லும். பின், திருமங்கலத்தில் மட்டும் நெருக்கமாக இருக்கும்.

இந்த டோல் கேட் ஐ, பாராட்டியே ஆகணும். கப்பம் எல்லாம் கட்டாமலேயே, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கின்றன. (இந்த பயம் இருக்கட்டும்!  :P )

நான்கு வழிச்சாலையில், நடுவில் வம்படியாக நட்டு வைக்கப்பட்டதில் ஆங்காங்கே பூத்திருந்த அரளிப் பூக்களை விட, வழியில் எருக்கம் பூக்களும், ஆவாரம் பூக்களும் கண்களுக்கு இதம் அளித்தன.


விருதுநகர் நோக்கி செல்லும் சாலையின் ஓரங்களில் ஆரம்பத்தில் இருபுறங்களிலும் மரங்களும் அதன் பிறகு வெட்ட வெளியுமாக தொடர்ந்து சென்றது பாதை. அபூர்வமாக பசுமை தொடர்ச்சியாக கண்ணை நிறைக்க, மற்றபடி காலி இடமுமாக இருந்தது. சீமைக்கருவேல மரங்கள் தான் அதிகமாக தட்டுப்பட்டன.


மின்சாரத்தை எடுத்து செல்லும் உயர் மின் அழுத்த கோபுரங்கள், தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ராட்சத பொம்மைகள் இடுப்பில் கைகளை  வைத்தபடி இருப்பது போல தெரிந்தன. 
 

நீண்டு கொண்டே செல்லும் சாலையின் எதிரே நோக்கினால், முடிவாக வானம் உள்ளது போல தெரிந்தது. அதிக வெள்ளை நிறத்தில் குறைவான நீலம் கலந்து வேக வேகமாக அடிக்கப்பட்ட வண்ணப்படத்தை விட, வலது புறத்தில் நீலம் அதிகமாக, வெள்ளை குறைவாகவும் தெரிந்த வானம் வசீகரித்தது.

நான்கு வழிச்சாலைகளின் ஓரத்தில் இரண்டரை அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோட்டிற்குள் வண்டியை நிதானமான வேகத்தில், முந்தி செல்லக்கூட யாருமில்லாமல், ஆக்சிலேட்டரை மாற்றாமல், பிரேக் பிடிக்க வேண்டிய அவசியமுமின்றி, தொடர்ச்சியாக சற்று பலமாக உடலின் பல பாகங்களின் வழியாகவும் பேசிக்கொண்டிருந்த காற்றுடன் மட்டும் பயணிப்பது சுகானுபவம்.

சில இடங்களில் கோட்டின் மேலேயே எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடிகிறது என்று சென்று பார்த்து, அப்படி செல்ல முடிந்த தூரத்தை முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கி மகிழ்வது என்று சிறு சிறு விளையாட்டுடன் தொடர்ந்தது பயணம்.


மனிதர்கள் தான் குறைந்து போனார்கள் என்று, ஒவ்வொரு ஊரின் உள்ளே நுழைகையிலும், வெளியேறுகையிலும் வரவேற்று, நன்றி சொல்லி வழி அனுப்பும் பலகைகள், ஊரின் எல்லையை அறிந்து கொள்ள உதவுவதற்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். :)


விரும்பிய நேரங்களில் சர்வீஸ் ரோட் ஐ பயன்படுத்தியும், மற்றபடி இரண்டரை அடி சாலையிலும் தொடர்ந்தது பயணம்.
சரியாக ஒன்னேகால் மணி நேரத்தில், விருதுநகர் உள்ளே நுழைந்தாயிற்று!  

மிகக் குறைவான வாகனங்கள் பயணிக்கும் நேரத்தில், விரைந்து செல்லும் வாகனங்களை கொஞ்சம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டே, மனம் போல ஓட்டிச் செல்ல ஒரு வாகனத்தில் ரசித்து பயணிக்கையில் கிடைக்கும் புத்துணர்விற்கான ஆயுள் சற்று கூடுதல்! :)




செவ்வாய், 8 அக்டோபர், 2013

மாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று!



பொதுவாக அதிக ரசாயனம் கலந்த சோப்புக்கட்டி பயன் படுத்தும் பொழுது, தோலின் வெளிப்புறத்தில், வெடிப்புகள் ஏற்படும் நிரந்தரப் பிரச்சனையை வைத்துக் கொண்டடே, அவசரம் என்று கையில் கிடைத்த சோப்பினைப் பயன்படுத்தி ஓரிரு துணிகளைத் துவைத்தேன். சிறிது நேரத்தில் வலது கை விரல்களின் இடுக்குகளிலும், மோதிர விரல் மற்றும் நடு விரல்களிலும் சின்ன சின்ன வெடிப்புகள் தோன்றின. விரல்களை எளிதாக மடக்கவோ, விரிக்கவோ முடியவில்லை. இலேசாக நீர் வேறு கசிந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பொறுத்துக் கொள்ளக் கூடிய வலி தான் என்றாலும், சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை ஒரு அளவுக்கு தான், உடன் குப்பை கொட்டுபவருக்கு பகிர்ந்து அளிக்க முடியும். நேற்று முன்தினம் எனக்கு சமைத்து அளிக்கப்பட்ட உணவு, அன்று மாலையே மருத்துவரை நோக்கி ஓட வைத்தது. ( பின்னர் தான் தெரிந்து கொண்டேன், மருத்துவமனைக்கு செல்ல வைப்பதற்காகவே குடும்பமே சேர்ந்து செய்த தந்திரம் என்று)


அப்படி என்ன ஆஸ்பத்திரி பிடிக்காமல் போனது என்றால்......எத்தனை நவீன வசதி செய்யப்பட்டு இருந்தாலும்,  அறைகளில், ஏதோ ஒரு வாசனை சுற்றி சுற்றி வந்து இம்சிப்பதாலேயே, கூடிய வரையில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடுவேன். அதிலும், ஊசி, கூட பரவாயில்லை,  பிடித்த பல வண்ணங்களில் இருந்தாலும், இந்த மாத்திரையை விழுங்குவது எளிது தான், ஆனால் குறைந்தது, இரண்டு நாட்களாவது தேவையே இல்லாமல் ஒரு கசப்பு சுவையுடன், தடித்துப் போனது போல இருக்கும் நாக்கை எப்பொழுதும் பிடிப்பதில்லை. எதற்காக மாத்திரை சாப்பிடுகிறோமோ அந்த வலி மறைந்தாலும், பாடாய்ப்படுத்தும் வாய்க்காகவே மாத்திரை சாப்பிடாமல் வலியைப் பொறுத்துக் கொள்வேன்.
ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு, துணிச்சலைத் திரட்டி கிளம்பினேன்.
ஞாயிற்றுக் கிழமையில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்த எளிய ஒரு மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு தோல் சிகிச்சை மருத்துவரை சந்திக்க வந்தாயிற்று. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்று இருந்தேன் அங்கு. நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. ஒரே மாதிரி வண்ணமயமான சீருடை அணிந்தப் பெண்களில், சிலர், வரிசையாக இருந்த கணினிகளின் முன்னால் அமர்ந்தவாறே, என்னைப்பற்றிய விவரங்களை ஒருத்தி பதிவு செய்ய, இன்னொருத்தி,'ஸ்பெஷல் ஆ, ஆர்டினரி யா', என்று கேட்டாள். 'என்ன வித்யாசம்', என்றேன். 'ஸ்பெஷல் ன்னா , கன்சல்டிங் பீஸ் 250 ரூபாய் ஒரு மணி நேரத்தில டாக்டரை பாக்கலாம் . ஆர்டினரி ன்னா, 100 ரூபாய் கட்டணத்தில் மருத்துவரை பாக்க மூணு மணி நேரம் கூட ஆகும் ', என்றார். இடத்தை விட்டு கிளம்புவதே முதன்மை நோக்கமாக இருந்ததால், 250 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். 'ரொம்பதான், நம்ம ஊரு முன்னேறிடுச்சு', என்று மனதுக்குள் நினைத்தவாறே, மருத்துவரை சந்திப்பதற்காக காத்திருப்போருக்கு மத்தியில் அமர்ந்தேன்.

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் முன்னால், சற்றே உயரத்தில் முன்பு பாட்டாக பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் திரையில், ரயில்வே ஜங்கஷனில் பார்ப்பது போல, நோயாளிகளை  இரண்டு குழுக்களாகப் பிரித்து எண்களின் வரிசை இருந்தது. முதல் வரிசையில் இருந்தது எனது பெயர். அதன் பிரகாரம்,  நான் மூன்றாவதாக உள்ளே செல்ல வேண்டும். பக்கத்தில் உள்ள வரிசையில் வெறும் பத்து பேர்கள் தான் இருந்தனர். அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும், புதிதாக ஆட்கள் வரவர பத்து இருபதாகலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சீருடையில் இருந்தவர்களில் ஒருவர், என்னை அழைத்து எடையையும், இரத்த அழுத்தத்தையும் சோதித்து குறித்துக் கொண்டார் ... எடை தான் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்குமே தவிர, இந்த BP எப்பொழுதும் 110/80...
கடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. கோபப்படுவதற்கும் இரத்தஅழுத்தத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது என் அனுபவம்....

பத்து நிமிடங்களில், பெயரை சொல்லி அழைத்ததும் உள்ளே சென்றேன். இருக்கையில் அமர்ந்ததும் ஒரு பெரிய, பளிச் வெள்ளை விளக்கிற்குப் பின்னால் கொஞ்சம் டல்லாக தெரிந்த மருத்துவரிடம், வரிசையாக நடந்ததை எல்லாம் சொன்னேன். விரல்களைப் பார்த்தார். அப்போ, 'அந்த சோப் தான் எல்லாத்துக்கும் காரணம்', என்றார். (அந்த நேரத்தில் சோப்பை எதுவுமே செய்ய முடியாத என் மனநிலையை கஷடப்பட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன் ) ' நீங்க இனி ரெண்டு வாரத்துக்கு கெமிக்கல் கலந்ததை யூஸ் பண்ணாதீங்க' என்றாவாறே யோசித்து சில மருந்து வகைகளின் பெயரை சொல்ல சொல்ல, குறித்துக் கொண்டே வந்தார் ஒரு நர்ஸ். காலமெல்லாம் நான் அப்படி தான் இருந்துவருவதாக கூறியவாறே எழுந்த என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவரிடம், ' தேங்க் யூ டாக்டர்', என்றவாறே நகர்ந்தேன். 




















வெளியே வந்து மருந்துக் கடையில் கேட்டால், ப்ரிஸ்க்ரிப்சன் சீட்டில் இரண்டு வாரத்திற்கு மாத்திரைகள் எழுதப்பட்டு உள்ளன என்றனர். ஒரு வாரத்திற்கு தேவையானதை மட்டும்  தரும்படி கேட்டு வாங்கிய பின், பார்த்தால், அதுவே 300ரூபாயைத் தாண்டி இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு, இரண்டு மாத்திரைகளை விழுங்கியதும், மின்னல் வேகத்தில் ஒட்டிக்கொண்டது கசப்பு. தூக்கம் கண்களை அழுத்த, மீதி மாத்திரைகளைப் பார்த்தேன். பைசா போனாலும், பரவாயில்லை என்று தள்ளி வைக்க இது வரை என்னால் முடிந்த ஒன்றே ஒன்று இந்த மாத்திரைகள். நாளைக்கு என்னை விட்டு போயிடனும் என்று அவற்றிடம் பேசிவிட்டு, கொடுத்த ஆயின்மெண்ட் ஐ விரல்களில் தடவியவாறே, தூங்கி விட்டேன். நேற்று காலையில் வெடிப்புகள் ஓரளவு மறைந்து இருந்தன, தொடர்ந்து ஆயின்மெண்ட் மட்டும் தடவி வர, மாலையில் முற்றிலும் காணாமல் போய் பழையபடி விரல்களை எளிதில் விரிக்க மடக்க முடிந்தது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்ட மாத்திரைக் கசப்போ, சற்று முன் தான் வெளியேறியது. இப்போ... நலம்! :)

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பாவம்!



காலாண்டுத் தேர்வில் இன்று சமூக அறிவியல் தேர்வை எழுதி முடித்துக் காத்துக் கொண்டிருந்த வருணை பள்ளியில் அழைக்க செல்கையில் மணி 12.
' எப்பட்றா எழுதின?'
' சூப்பர்... பர்ஸ்ட்டா எழுதிக் கொடுத்திட்டேன்ல'.


' சரி,  அந்த டயக்ராம் வரைய சொல்லிக் கேட்டு இருந்ததா?' என காலையில் மீண்டும் மீண்டும் வரைய வைத்த பாடப்பகுதியைக் கேட்டேன்.
'ஆமாமா, லாஸ்ட் ல கேட்டு இருந்தாங்க... அந்த ஃடிராபிக் சிக்னல் ஐ வரஞ்சேன், பர்ஸ்ட்டா கொடுக்கணும்னு, பக்கத்தில எது, எதுக்காகன்னு எழுதாம கொடுத்திட்டேன் மா', என்கிறான் சர்வ சாதாரணமாக.

வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,
' சரி, காலைல கூட சொன்னேனே, வரிசையா வரஞ்ச மூணு வட்டத்தில, மேல, ஆரஞ்சு கலர் அடிக்க கூடாது, சிவப்பு கலர் தான் அடிக்கணும்னு, சரியாதானே அடிச்சே...'
' கலர் பென்சில் இல்லம்மா, அதுனால அடிக்கல'.
'காலைல பேக் ல வச்சுவிட்டேனே' என்று அவன் பையை சோதிக்க முற்படுகையில்...
' நான் எக்ஸாம் ஹால்க்கு உள்ளே எடுத்திட்டு போக மறந்திட்டேன் ம்மா'  என்றான் பாவமாக........

நடந்து செல்லும் வழியிலேயே ஒரே ஒரு அடியாவது அவன் முதுகில் பொறுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு... மூன்றாவது படிக்கிறான், நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் எதற்கும் கவலை இல்லாமல் இருக்கிறானே என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே நடந்தேன்.

' ம்மா, இந்த பேர்ட் புதுசா இருக்கு, இது பேரு என்ன?'
அவன் கை காட்டிய திசையில் ஒரு மைனா அமர்ந்திருந்தது.
' மைனா' என்றேன்.
' மைனா, மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுது ன்னு ஒரு பாட்டு வருமே, அந்த மைனாவா? ......... என்ற கேள்வியை கேட்ட உடன்,
' இதெல்லாம் நல்லா கேளு ... இந்த பறவையோட பேர் வச்சு இருந்த ஒரு அக்கா அவங்க ... இது வெறும் பறவை......',  என்று வேகமாக நடக்க தொடங்கினேன்.

' ம்மா... '
'இன்னும் என்னடா...'
'வீட்டுக்கு யாரு பர்ஸ்ட்டா போவோம்னு பாப்போமா? ' என்றவனிடம்.....
மீண்டும் உச்சத்தில் ஏறத் துவங்கியிருந்த எரிச்சலில்.......
' பாவம்.......' என்று வாய் அழுத்தமாக சொன்னது.
' யாரும்மா பாவம்? என்று ஆவலுடன் விசாரித்த வருணிடம்
' நாந்தான் .........................' என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன்.


திங்கள், 2 செப்டம்பர், 2013

ஜி. நாகராஜன் - அபூர்வ எழுத்தாளர்!

மிக சமீபத்தில் காலச்சுவடு வெளியீடான, ஜி.நாகராஜன் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில் வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது.

அதே வேகத்தில் 'குறத்தி முடுக்கு', வாசித்தேன். ஐம்பது வருடங்களுக்கு முன்பே பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அவர்களின் கோணத்தில் எழுதிய நேர்மையுடன் கூடிய ஜி. என், னின் துணிச்சலை அதில் பார்க்கலாம்.

                     
ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள், போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன் கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.

ஜனசக்தி, தாமரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, போன்ற பல சிற்றிதழ்களில் வெளியான ஜி. நாகராஜனின் சிறுகதைகள் பெரும்பாலும், அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும், நாம் பொது வெளியில் பேச தயங்கும் நபர்களின் வாழ்க்கையையும், எளிய மனிதர்களின் இயல்புகளையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

'வெகுமதி' என்ற சிறுகதையில், செய்யாத தவறுக்காக, இன்னும் சொன்னால், பேருதவி செய்த கந்தன் என்ற வேலைக்காரனுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் சிறைவாசம், அந்த துறையில் பணிபுரிகிறவர்கள் அல்லது அவர்களின் வீட்டார்களோ ஒன்றிப் போய் படிக்க நேர்ந்தால், நிச்சயம் சில நிமிட குற்ற உணர்வுக்கு ஆள் ஆவார்கள்.
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய திரைப்படங்கள் கொண்டாடப்பட்டு வரும் இந்த நாட்களில், இன்றும் எழுதத் தயங்கும் பல விஷயங்களை, 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே போகிற போக்கில், அழுத்தந்திருத்தமாக தம் கதைகளின் வாயிலாக பதிய வைத்தவர் ஜி. என்.

ஒரு இடத்தில் ஜி. நாகராஜன் சொல்கிறார், " நாட்டில் நடப்பதைச் சொல்லி இருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால், "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்?" என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும்".

சுந்தர ராமசாமி க்கு, அவர் எழுதிய கடிதத்தில், "நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிப்பகங்கள் எல்லாம் துடைப்பத்தால் கூட என் எழுத்துகளை தீண்டாதவை" என்கிறார்.
இதிலிருந்தே தெரிகிறது, அவர் வீட்டிலும் எத்தகையப் புறக்கணிப்பு நிகழ்ந்திருக்கும் என்று. அவரின் மரணத்தின் பொழுது வெறும் ஐந்து பேர் மட்டும் உடன் இருந்ததை, அவரின் நண்பர் கர்ணன் சொல்லக் கேட்ட பொழுது, மாமனிதர்களின் மறைவிற்கு விரல் விடும் எண்ணிக்கையில் தான் கூட்டம் இருக்கும் என்று தோன்றியது. அதுவும், அவரின் மகனைக் கூட இறுதி சடங்கிற்கு அவரது மனைவி அனுப்பவில்லை என்று கேள்விப்பட்டதும், அந்த குடும்பத்தின் இடத்தில் இருந்து பார்த்தால், அவர்களும் பாவம் என்றே தோன்றுகிறது.

அவருக்குப் பின் இத்தகைய துணிச்சலான எழுத்தாளர்கள் நடந்து செல்வதற்கு மாதிரி சாலையை அமைத்து தந்தவர் ஜி.என்.
மனம், வாக்கு, சொல், செயல் அத்தனையும் ஒன்றாகவே இருக்கும் அபூர்வப் பிறவிகளில் ஒருவர்.

ஆங்கிலத்திலும் நாவல், சிறுகதைகள் எழுதிய, கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிய ஜி, என், எந்த சமரசமும் எவருடனும் செய்து கொள்ளாமல், அவர் மனது சரி என்று சொல்வதை மட்டுமே கடைசி வரை செய்து, தன் ராஜாங்கத்தில் ராஜாவாகவே வாழ்ந்தார். இறுதிக் காலத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டவர்.

கடைசி நாட்களில், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் குளிர்கிறது என்று அவர் சொன்னதும், போர்வைகளை போர்த்தியவர்களிடம், ' இந்தக் குளிர் சிதைக்குள் வெந்தால் தான் அடங்கும்', என்றாராம்.
எங்கள் மதுரை மண்ணில், பிறந்து, வாழ்ந்து உரிய அங்கீகாரத்தைப் பெறாமலே, இன்னும் சொன்னால், அது பற்றிய துளிக் கவலையும் இன்றியே மறைந்தாலும், இன்று அவரது குடும்பம், அவரின் பெருமைகளை உணர்கிறது, இதன் வாயிலாக நாம் அறிவது என்று சொல்லி எதையும் எழுதுவதை ஜி. நாகராஜன் விரும்பமாட்டார் என்பதால், முற்றிபுள்ளி வைத்துக் கொள்கிறேன்.



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நானும் கேமராவும் மற்றும் பலரும்! :)

புகைப்படம் என்றாலே பலரையும் போலவே  சிறுவயதில் அதிகப் பிரியம். இத்தனைக்கும் நூறு போட்டோக்களில் ஒன்றில் தான் எனக்கே பிடிப்பது போல இருப்பேன். விஷேச வீடுகளில் புகைப்படக்காரர் பெரிய கதாநாயகனாக கருதப்பட்ட காலங்களில், போட்டோ எடுப்பதை அபூர்வமான வித்தை என்று நினைத்திருந்தேன். அட்டென்சனில் நின்று, சிரிப்பை அடக்கிக் கொண்டு, பெருமை பொங்க பல வீட்டு விஷேசங்களின் பழைய புகைப்பட ஆல்பங்களில் இன்றும் இருக்கிறேன். :)

பனிரெண்டாம் வகுப்பில் பேர்வெல் அன்று காலையிலேயே ஆரம்ப வகுப்பிலிருந்தே உடன் படித்த தோழி தமிழரசி கொண்டு வந்த கேமராவே, முதன் முதலில் நான் உபயோகித்தது. எங்கள் தோழிகளுக்கு நம்மை நம்பி கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற நினைப்பே, பிரிவுக்கு பதில் மகிழ்ச்சியை அளித்தது.

 'உள்ளே பிலிம் எல்லாம் இருக்குமாம் ல, போட்டியா?', என்றதற்கு, 'ம்ம், ப்ளாஷ் மட்டும் அண்ணன், அப்புறம் கொண்டு வர்றேனுச்சு', என்றாள்.
'என்னாது ப்ளாஷ் தனியாவா?? நெனச்சேன், உன்னை நம்பி கேமரா கொடுத்தப்போவே, கடைசில டப்பா கேமராவா?', என்றதற்கு சற்று ரோஷத்துடன் 'அதெல்லாம் நல்லா விழும்', என்றவள், திருப்பி திருப்பி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினோரு மணி வாக்கில் அவள் அண்ணன் வந்து ப்ளாஷ் பொருத்தி, இரண்டு புகைப்படங்கள் எடுத்து விட்டதாக சொன்னாள்.

குறிப்பிட்டக்  கட்டத்துக்குள் உருவங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு,'அப்படி நில்லு இப்படி நில்லு, கையை சேர்த்து வை', என்றெல்லாம் சொல்லிக் கொண்டே மாறி மாறிப் புகைப்படங்கள் எடுத்து தள்ளினோம்.

மற்ற தோழிகள், ஆசிரியைகள், வகுப்பறை, மைதானம், தோட்டம் என்று சுற்றி சுற்றி 38 பிலிம் களையும் காலி செய்தோம்.
அடுத்த நாள் டெவெலப் செய்த பிறகு பார்த்ததில் பத்து போட்டோக்கள் வரை மட்டும் ஓரளவு தெளிவுடன், மீதி அனைத்தும் என்ன என்றே சொல்லமுடியாதபடியும் இருந்த லட்சணத்தைக் கண்டு, அந்த பத்தை மட்டும் பிரிண்ட் போட சொன்னோம். வாங்கிப் பார்த்தால், நான் எடுத்ததில் ஒன்றிரண்டில் முழுமையாக விழுந்திருந்தன உருவங்கள். அவள் என்னை விட கில்லாடி ஆதலால், உருவங்களை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மனம் போல  துண்டாக்கி, கட்டிடங்களையும், தோட்டத்தையும் கவர் செய்திருந்தாள். மூன்று பேர் மட்டும் எடுத்த புகைப்படத்தை கூட கழுத்துக்கு மேலே வெட்டியும், பக்கவாட்டில் மூன்றாவதாக நிற்பவளை காணாமல் போக செய்தும் 'இனி போட்டோன்னு நினைத்துப் பார்ப்பீங்க' என்று புகுந்து விளையாடி இருந்தாள். அதோடு, எங்களுக்கு சுயமாக புகைப்படம் எடுக்கும் ஆசை அடங்கிப் போனது.


நமக்கெல்லாம் வராத திறமை என்று சற்று ஒதுங்கி இருந்தப் பிறகு...... மூன்று ஆண்டுகள் கழித்து கேமரா கைக்கு வந்தது....

கல்லூரியில் இறுதி ஆண்டு , நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்காக, மேலூர் அருகில் உள்ள கிராமத்தில் பத்து நாட்கள் கூடி இருந்தோம். தினமும் மாலையில் ஊர் மக்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு நாள் மட்டும், அருகில் முகாமிட்டிருந்த மாணவர்களில் சிலரை மட்டும் அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒருங்கிணைப்பாளர் கூறி இருந்தார். 
 
 
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க காத்துக் கொண்டிருக்கையில்,
ஜீவா என்ற ஜூனியர் மாணவி கேமரா வை, கையோடு எடுத்து வந்திருந்தாள். எதுக்கு என்றதற்கு
'பிலிம் இல்ல, ப்ளாஷ் மட்டும் அடிக்கும், சும்மா ஒரு கெத்துக்கு ',
'அப்படிங்கிற....... ம்ம்...' என்று பெரிய மடத்தனத்திற்கு சம்மதித்தேன்.

பத்து மாணவிகள் தள்ளி பேராசிரியை அமர்ந்ததால், இவள் கவரை விட்டு, கேமராவை எடுக்கவே இல்லை. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. யாரெனப் பார்த்தால், சில நாட்களுக்கு முன்பு எங்கள் நிகழ்ச்சியை கிண்டல் செய்த ஒருவன் தான் பிரதானமாக செயல்பட்டுக் கொண்டிருந்தான், 'எடு கேமரா வை', என்று அவள் யோசித்தும் வலுக்கட்டாயமாக  எடுக்க செய்தேன்.

அவன் வந்த காட்சியில், ஒரே நிமிடத்தில் ஏழெட்டு  ப்ளாஷ் கள் அடித்த குரூர திருப்தியுடன் இருக்கையில், பக்கத்திலிருந்து எனக்கு கொடு, என்று கேட்கும் குரல்களின் எண்ணிக்கை அதிகரித்தன. ஒரு மணி நேரத்தில், ப்ளாஷ்  போய் விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இருபது மாணவிகள் வரை அடித்துத் தீர்த்தனர்.

இரவு உணவு முடிந்ததும், அனைத்து மாணவிகளும் உறங்குவதற்கு சென்ற பிறகு, எனக்கு சற்று அருகில் தனது விரிப்பில் அமர்ந்த பேராசிரியை, இன்னொரு பேராசிரியை 'அந்த பசங்க பொலம்பிட்டு போறாங்க, இத்தனை ப்ளாஷ் அடிச்சதுக்கு நாலு போட்டோவாச்சும் எங்களை எடுத்திருக்கலாம்னு', வருத்தப்பட்டு தெரிவித்துக் கொண்டிருக்கையில், 'இதில என்ன இருக்கு', என்று எண்ணியவாறே  உறங்கிவிட்டேன்.
 

அடுத்த நாள் காலை உணவிற்கு பிறகு கூடும் கூட்டத்தில் அன்றைய தினத்திற்கான எங்களின் பணி தெரிவிக்கப்படும். அதற்காக காத்திருந்தால், மிகுந்த கோபமான பார்வையுடன் வந்து அமர்ந்தார் பேராசிரியை .......வாயைத் திறந்ததும் சரவெடி தான்....... ' பத்து பசங்களை பார்த்திட்டா என்ன செய்றோம்னே தெரியாதா? இவ்ளோ அசிங்கமாவா நடந்துக்குவீங்க?, இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் எல்லாம் கேம்ப் க்கு வேணாம், இப்போவே வீட்டுக்கு போயிடுங்க', என்று தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வாட்டி எடுத்து விட்டார்.


எனக்கோ உள்ளே போயும் போயும் இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்காகவா தண்டனை என்று ஓடிக் கொண்டு இருந்தாலும், எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போற மேடம், சமயங்களில் அவர் இருந்தாக வேண்டிய இடத்திற்கும் என்னை நம்பி அனுப்புபவர் இடம், இனி எனக்கு கெட்ட பெயர் தானோ என்று பயமும் ஒட்டி இருந்தது. 'யார் யார் எந்திரிங்க', என்று இரண்டாவது முறை எச்சரித்ததும், கேமரா சொந்தக்காரி உடன் நான்கு பேர் நிற்க, மீண்டும் வசவை ஆரம்பித்தார்.

 தாங்க முடியாமல் எழுந்தேன், 'உனக்கு கொடுத்த வேலைக்கு இன்னுமா கிளம்பாம இங்க இருக்க ....', என்று என்னை நோக்கி தொடர்ந்தவரிடம் இருநூறு மாணவிகள் கூடி இருந்த கூட்டத்தில் வழக்கம் போல கடைசியில் இருந்த நான் அருகில் சென்றேன், குரலைத் தாழ்த்தி அவரின் காதுகளில் 'கேமராவை எடுக்க சொல்லி, முதலில பத்து ப்ளாஷ் அடிச்சது நானே தான், விளையாட்டுத் தனமா தான் செய்தேன், அதையே இவங்களும் பாலோ செய்தாங்க. இவ்ளோ சீரியஸ் ஆகும்னு தெரியாது, மத்தபடி அவெங்கள எல்லாம் பிடிச்சிருந்தா பிலிம் போட்டு தானே எடுத்திருக்கணும்?  என்றேன்.


முகத்தில் இருந்த கடுமை குறைந்தது. 'சரி, நீ கிளம்பு', என்றாவறே, மூன்று அணிகளுக்கும் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லியவாறே, அவருடைய வேலைகளில் மூழ்கிப் போனார்.

ஜீவா பின்னாலே வந்து, 'என்ன சொன்னீங்க மேடம் கிட்ட', என்றாள்
'உண்மையை சொன்னேன்'. என்றேன்.

நீதி: 1. சரி எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதில்லை. 2. துணிஞ்சு ஏதாவது செய்தால், எதிர் வருவதை ஏற்றுக் கொள்ளும் திறன் வேண்டும், அப்படி இல்லை என்றால், நம்மை பற்றிய மாறாத நல்ல அபிப்ராயம் உள்ளவர்களிடம் மட்டும் சேட்டை செய்யலாம் :P














புதன், 21 ஆகஸ்ட், 2013

நேற்றில் வாழ்வோருக்காக!



பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல நிலைகளை நாம் கடக்கிறோம், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு செல்லும் பொழுதும், சமயங்களில் அந்த நிலைகளில் முழு ஈடுபாடு இல்லாத பொழுதும், வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த இடைவெளியை நிரப்புபவர்கள் இன்பத்தாலும், துன்பத்தாலும் வரைந்து செல்கிறார்கள்.

தனியே எழுதி வகைப்படுத்தினால், துன்பத்திற்கு, இணையான அளவு இன்பத்தை கடந்து வந்திருப்போம். இயற்கை சமமாகவே நமக்கு பகிர்ந்து அளிக்கிறது.

இதோ, கடந்து கொண்டிருக்கின்ற இந்த காலமும் கூட நாளை திரும்பி பார்க்கும் பொழுது தவற விட்ட ஒன்றாக இருக்கலாம்.
இன்பம் என்ற பகுதியே, கடந்த காலத்தில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. திரும்ப வராததாலேயே முடிந்த நாட்கள் சிறப்பு பெற்றவை.

தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டுக் கொண்டும், பிறரை திட்டிக் கொண்டும் காலத்தை கடத்துபவர்கள் பெரும்பாலும் கடந்த காலத்தில் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் மகிழ்ச்சி அங்கேயே தேங்கியிருப்பதாக நம்புகிறார்கள்.

இன்றைய உணவின் சின்ன சொதப்பலில் கூட நேற்றைய அசத்தல் உணவின் நினைவில் வாழ்கிறோம்.


நிகழ் காலத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பவர்கள் யாரென பார்த்தால், இவர்களில் பலரும், ஏதேனும் ஒரு செயலிலோ அல்லது ஒரு மனிதரிடமோ முழுமையாக தம்மை ஒப்புவித்து தற்காலிகமான மகிழ்ச்சியில் இருப்பவர்கள். விரைவில் அவர்களும் அடிவாங்கி, கடந்த காலத்தை ரசிக்கின்ற கூட்டத்தினருடன் இணைந்து கூட்டணியை வலுப்படுத்துவர். 


நிகழ்ந்து கொண்டிருப்பதை, ஏற்று கொள்ளுதல்... வருவதை புலம்பாமல் அனுபவித்தல் என்று இருப்போமேயானால் எதையும் எதிர் கொள்ளலாம். நம்மை நோக்கிக் கற்களை வீசும் பொழுது, கவசம் அணிந்து கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முடியாததாலேயே பலரும் ஆன்மிகம் பக்கம் சாய்கின்றனர். இங்கு ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். மதம் என்பது வேறு. ஆன்மீகம் என்பது வேறு. மதவாதிகள் ஆன்மீகத்தை போதிக்கின்ற நேரங்களில் எல்லாம் நம்மை குழப்பி விடுகின்றனர். மதவாதிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடு, விதி முறைகளோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். ( இந்த மதவாதிகள் ஆன்மீகத்தை போதிப்பதற்கு பதில், மதம் சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பரப்பினால் நல்லது)

ஆன்மீகவாதிகளுக்கு என்று பெரிய கட்டுப்பாடோ, விதி முறைகளோ இருப்பதில்லை. வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள், ஆதலால் புலம்பல் இல்லாமல், எளிதாக, நடக்கின்ற எதையும் கடந்து செல்லும் திறன் பெற்றவர்கள். வருகின்ற பாதையில் வரும்
இன்பத்தைப் போலவே துன்பத்தையும் ஒரே மாதிரியாக எதிர் கொள்ளும் திறன் பெற்றவர்கள். வாழ்க்கையைப் பற்றி புரிதல் இருப்பதின் காரணமாக, சோகமோ, கவலையோ எரிச்சலோ, எதனையுமே எளிதாக கையாண்டு கொண்டே, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரிந்த வல்லமை பெற்றவர்களே ஆன்மீகவாதிகள். இந்த வகையில் பார்த்தால், பகுத்தறிவுவாதிகளும் ஆன்மீகவாதிகளே!

ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்று உண்மையை கடினமான முறையில் தராமல், எளிமைப்படுத்தி தரும் ஆன்மீகவாதிகளின் பேச்சும், எழுத்தும் எளிதில் பிடித்துப் போகின்றவையாக இருக்கின்றன.

பகுத்தறியும் பேச்சினை, கேட்பது, படிப்பது போன்றவை அந்தந்த நேரங்களில் மனதை மேம்போக்காக சுத்தம் செய்ததோடு நின்றுவிடும். உகந்தது/உசிதம் என்று முடிவு செய்தவற்றை, மிகக் கடினம் என்ற பொழுதிலும், தேவைப்படும் இடங்களில் பின்பற்றினால், நமக்கு உள்ளே மட்டமின்றி பின்னாலும் ஒரு ஒளி வட்டமிடும்! :)







புதன், 14 ஆகஸ்ட், 2013

அவ்வா!

'இந்த பொம்பளை பிள்ளையை பெறுரதுக்கா இத்தனை ஆஸ்பத்திரி ஏறி இறங்கினா', என்று நான் பிறந்த அன்று எனது பாட்டி சலித்துக் கொண்டதாக இன்றும் சொல்லும் சொந்தங்கள் உண்டு.

ஒரு வயதில், இடுப்பில் என்னை தூக்கி வைத்துக்கொண்டு, இட்லியை ஊட்டிவிடும் நேரங்களில் தேங்காய் சட்னியுடன் என்றால் துப்பி விடுவதும், காரமான சட்னி கலந்து என்றால் மென்று முழுங்குவதுமான காட்சிகளை, சமீபத்தில் சந்தித்த எங்கள் பக்கத்து வீட்டில் குடி இருந்த ஒரு அம்மா நினைவு வைத்து சொன்னார்.
 
தாத்தா காவல் துறையில் பணி புரிந்தாலும், மாடுகளை வைத்து சற்று சிறிய அளவில் பண்ணையை பராமரித்து, சுயமாக சம்பாதித்து சேர்த்து வைத்ததாலோ என்னவோ, மிரட்டும் பேச்சும், மிடுக்கான பார்வையும் தான் பாட்டியின் அடையாளம்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் காலங்களில் வலு கட்டாயமாக என்னை தூக்க சொல்லி, கடைக்கு அழைத்து சென்ற நாட்களிலிருந்தே பாட்டியின் முகம் நினைவில் இருக்கிறது. அந்த நாட்களில் தூங்க செய்வதற்காக பாட்டி சொன்ன சில கதைகளை மட்டுமே, இன்றும் எப்பொழுதாவது வருணுக்கு சொல்கிறேன்.

பல வருடங்கள், எங்கள் இருவருக்கும் பொதுவான அறையே இருந்தது. பள்ளியில் விளையாடி களைத்து வரும் நாட்களில் எல்லாம் காலை இதமாக பிடித்து விடுவார்.

எண்பது வயதிலும் தாத்தாவிற்கும், பாட்டிக்கும் தனியே சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு உடலில் தெம்பு இருந்தது. அசத்தலான சமையலை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் பாட்டியின் சாமர்த்தியம், என் ஆச்சர்யங்களில் ஒன்று. தீவிரமாக சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் பொழுது, ஜீனியை எடுத்து மாவில் கொட்டி, சேர்த்து பிசைய சொல்லி பூரி போட்டு தர சொல்லும் என் கொடுமையை சகித்துக் கொண்ட ஜீவன்.

ஒரு முழு ஆண்டு தேர்வு விடுமுறையின் ஆரம்ப நாளில் பெரியவளானதை அறிந்து, வீட்டில் சொன்னால், இரண்டு மாதமும் சிறை பட வேண்டும் என்று புரிந்து, இயன்ற அளவு, ஊரெல்லாம் சுற்றி, ஓடி ஆடி விளையாடிவிட்டு, ஓய்ந்த வேளையில் பாட்டியிடம் வந்து தான் முதலில் சொன்னேன். அந்த நாட்களில் அம்மாவை விட பாட்டியிடம் பல மடங்கு ஒட்டுதல் அதிகம்.


பைசா தேவைப்படும் நேரங்களில் எல்லாம், எந்த அட்டையும், பாஸ்வேர்ட் ம் கேட்காத  ATM ஆகவும் இருந்தார்.

பொழுது போகாத நேரங்களில் இழுத்து உட்கார வைத்து, முற்றிலும் வெள்ளிக் கம்பிகளாக சுருண்டிருக்கும் பாட்டியின் கூந்தலை வகிடு எடுத்து, இரண்டாகப் பிரித்து, இரட்டை சடை போட்டு கிளிப் எல்லாம் மாட்டி விட்டு அழகு பார்ப்பேன். அப்படி ஒரு நாள் வாசலில் உட்கார்ந்து  தலை அலங்காரம் செய்து கொண்டிருந்த ஒரு நாளில்,
' இதென்ன, இந்த கிறுக்குபய அங்க இருந்து இங்கயே பார்த்துட்டே போறான்' என்றதும், நிமிர்ந்து பார்த்தேன், ஒருவன்  சைக்கிளில் கடந்து போயிருந்தான். ' இது கூடவா தெரியல? இரட்டை சடை போட்டு, இம்புட்டு அழகா ஒரு புது பொண்ணுன்னு உன்னை தான் பார்த்திருப்பான்', என்று நான் சொன்ன நொடியில், என்னை விரட்டி விரட்டி அடிக்க வந்தது தனிக் கதை.

கல்லூரியில் படிக்கும் பொழுது தவறாமல் பத்து நாட்கள் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்களில் கலந்து கொள்வேன். திரும்பி வரும் பொழுது, 'இந்தக் கழுத இல்லாம வீடே விரீர்னு இருக்கு', என்று அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளில் சொல்லும் நேரங்களில், வெளிக்காட்ட தெரியாத முகபாவனைகளால் மையமாக சிரித்து விட்டு சென்றிருக்கிறேன்.

பொதுவாக 'அவ்வா' என்று அழைத்தாலும், மிகவும் சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் 'அழகம்மா' என்று பெயரைசொல்லி அழைக்கும் சிறப்புரிமை எனக்கு மட்டுமிருந்தது. (மொத்தம் பதினாறு பேரன், பேத்திகள் )

மூன்று மாதங்கள் தொடர்ந்து படுக்கையில் கிடந்த பொழுது தாத்தாவும், நானுமே முழுமையாக பாட்டியைக் கவனித்துக்கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு குறைந்து, பேச்சுக் குறைந்து, சம்பந்தமில்லாமால் உளறி, ஒரு கட்டத்தில் அதுவும் நின்று, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு, தைப்பூசம் அன்று அதிகாலையில் எனது கைகளில் தரப்பட்ட இரண்டாவது ஸ்பூன் தண்ணீரை தொண்டைக்குழியிலேயே நிறுத்திவிட்டு, இயற்கையுடன் கலந்தார்.
 
சொல்ல முடியாத பெருந்துயரத்தை சுமந்து திரிந்த நாட்களின் ஆரம்பத்தில், மனதை இலகுவாக்குவதற்காக முதன் முறையாக இணையத்திற்கு வந்தேன்.

இன்றும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பாலும், அக்கறையாலும் நிரம்பிய நல்ல இதயங்களை சந்திக்க நேர்கையில் எல்லாம், என் பாட்டி அவருடைய பணியை சிலருக்கு பிரித்துக் கொடுத்து விட்டே சென்றிருக்கிறாரோ என நினைப்பது உண்டு. :)

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பசுமை நடை... (GREEN WALK)

பேஸ்புக், பிரபல பத்திரிக்கைகள், விஜய் டிவி என்று ஊடகங்கள் மூலம் அறியப்பட்டாலும், கடந்த 21.07.2013, அன்றே  பசுமை நடைக்கு (Green walk) செல்லும், சந்தர்ப்பம் எங்களால் உருவாக்கப்பட்டது. 

மாதம் ஒரு முறை, ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, மதுரையை சுற்றி உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, சிறுவர்கள் உட்பட நூறிலிருந்து, இருநூறு பேர் வரை வாகனத்தில் அழைத்து சென்று, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை பற்றி பேராசிரியர்கள், வரலாறு நன்கு அறிந்தவர்கள், தொல்லியல் நிபுணர்கள் மூலமாக விளக்க செய்து, நாம் நம்மை சுற்றி உள்ளவற்றின் சிறப்பை அறிந்து கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதே இந்த நடையின் நோக்கம். வெற்றிகரமான இந்த நிகழ்வின், இருபத்து நான்காவது நடையில் கலந்து கொண்டோம்.

இந்த நடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடம், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி என்னும் சிற்றூர். மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது.


அதிகாலையில் எங்களை பேருந்து உட்பட, நான்கு வண்டிகள் திணித்துக்கொண்டு சென்றன. மேலூர் செல்லும் வழியில் வரும் பாலத்தில், ஏறுவதை தவிர்த்து, கீழ் வழியாக சென்றால், அரிட்டாபட்டி என்ற பெயர் தாங்கியப் பலகை இடது நோக்கிய அம்புக்குறியிட்டு பாதை காட்டுகிறது. அதன் வழியே சென்றால், சில நிமிடங்களில் ஊர் வருகிறது. மிக குறுகலான சாலை, அதை ஒட்டியே அமைந்திருந்த வீடுகளின் முன்புறம், பாத்திரங்களை கழுவிக்கொண்டும், அடுப்பை ஊதிக் கொண்டும் பெண்கள், பல் துலக்கி கொண்டிருந்த சில சிறுவர்கள், கையில் பையோடு நடந்து கொண்டிருந்த சில ஆண்கள் என்று  இயல்பான காட்சிகளில் வரவேற்றது கிராமம். ஓரிரு தெருக்களின் வழியே ஊர்ந்து சென்ற பேருந்து, சில நிமிடங்களில், கண்மாயை ஒட்டிய இடத்தில் நின்றது. வழியெல்லாம் மரங்களுக்கு இடையே அரைகுறையாக பார்த்துக்கொண்டே வந்த மலையை பேருந்திலிருந்து இறங்கி, ஒரே பார்வையில் நோக்கும் பொழுதே உடனடியாக ஒட்டிக்கொண்டது ஒரு பிரியம்.

சமமான நிலத்தில் சில நூறு மீட்டர்கள் நடைக்குப்பின்பு, பிடித்துக் கொண்டு எளிதாக நடக்க  வேண்டும் என்பதற்காக இரண்டு புறமும் கம்பிகள் ஊண்டப்பட்டு, கீழேயும் கூட படி போல செதுக்கப்பட்டு, தான் எப்படி இருக்கிறோம் என்பதற்கான முன்னோட்டத்தை காட்டிவிடுகிறது மலையின் முகப்பு. உள்ளே சென்றதும் தொடரும் பாதை, ஆங்காங்கே செடிகள், மரங்கள், பாறைகள் என்று நீள்கிறது. பத்துநிமிட பயணத்தில் இருபது படிகளை ஏறி கடந்தால்,  கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பேரமைதியுடன் நமக்காக காத்திருக்கிறது. (இடைச்சி மண்டபம் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.) இந்த கோவில் சிறிய சதுரமான கருவறையில், லிங்க வடிவிலான சிவன் சிற்பத்துடன், சிறிய முன்மண்டபத்துடனும் அழகாக அமைந்துள்ளது. இரண்டு வாயிற்காவலர்கள் சிற்பங்களும், பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மாடங்களில், வலப்புறம் இலகுலீசர், சிற்பமும், இடப்புறம் விநாயகர் சிற்பமும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்துமே எழுத்து வடிவில் அதன் அருகிலேயே உள்ளன.

உட்காருவதற்கு ஏதுவாக இருந்த இடத்தில் ஒலிப்பெருக்கியின் துணையுடன், தெளிவாக அந்த இடத்தைப் பற்றின குறிப்புகளை சுவாரசியமான முறையில் எங்களுக்கு நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

அதன் பிறகு மெதுவாக படிகளில் இறங்கி மீண்டும் வேகத்தைக் கூட்டி மண்ணும், பாறைகளும் கலந்த பாதையில் கவனமாக ஏறி சென்று கொண்டே இருந்தால், வலது பக்கம் திரும்பியதும் வரும் பெரிய ஆலமரத்தையும் கடந்த பின், இயற்கையாக அமைந்த குகையில் சமணர் உறைவிடம், உருவாக்கப்பட்டு இருப்பதையும், அதன் நெற்றியில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். இங்கு, சமணர்கள் தவம் செய்திருப்பதையும் தவிர, வேறு எப்படி எல்லாம் அவர்கள் பொழுது போய் இருக்கும் என்று சிந்தனை பறந்ததை தவிர்க்க முடியவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நம் பாதங்களும் தற்பொழுது படிந்துள்ளது என்ற பெருமிதம் உள்ளே பரவுவதை உணர முடிந்தது. பொது மக்கள், இக்கற்படுகைகள் கொண்ட குகையைப் பஞ்ச பாண்டவர் படுக்கை என அழைக்கின்றனர்.

1. நெல் வெளிஇய் கிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்
2. இலஞ்சிய்எளம் பேராதன் மகன் எமயவன் இவ் முழ உகை கொடுபிதவன்

இவை இரண்டும், இங்கு மேலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளவை. சங்ககாலப் பாண்டியர்களின் பேராதரவில் இக்கற்படுக்கைகள் கொடையளிக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்குகைக்கு வலப்புறத்தில் சுமார் இருபது அடி தொலைவிலேயே பாறையில் மகாவீரர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

ஸ்ரீ திருப்பிணையன் மலைப் பொற் கோட்டுக் கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக் குடியார் ரக்ஷை
- என்ற இவ்வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் இந்த ஊரின் பெயர் பாதிரிக்குடி என்பதும், இம்மலை திருப்பிணையன் மலை என பெயர் பெற்றிருந்தது என்பது நமக்கு தெரிய வருகிறது. மதுரைப் பகுதியில், கி.பி. 9 -10 ஆம் நூற்றாண்டில் சமணம் மறுமலர்ச்சி பெற்று எழக் காரணமாக இருந்த அச்சணந்தி என்னும் துறவியே இச்சிற்பத்தை உருவாக்கி இருக்கலாம்.

இடது புறத்தில் தெரியும், தற்பொழுது தண்ணீர் இல்லாமல், வறண்டு கிடக்கும் ஆனைக்கொண்டான் கண்மாயில் சமீபத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ள தகவல் முக்கியமான ஒன்றாகும்.

வந்த வழியே திரும்பி வந்து, ஒரு சிறிய வெளியைக் கடந்தால், ஆங்காங்கே உச்சியில் தனியாக நின்று கொண்டு  மிரட்டும் வெவ்வேறு வடிவிலானப் பாறைகள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றன.

சற்று, சரிவாக உள்ள நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், திரும்பி பார்க்காமல், சில இடங்களில் நான்கு கால்களாக்கிக் கொண்டு ஏறினால், வேகவேகமாக மூச்சை விட்டுக்கொண்டே, ஓரளவு நன்றாக நின்று கொண்டு கீழே ஏறிக் கொண்டிருப்பவர்களுக்கு குறிப்புகள் கொடுக்கலாம்.

மெதுவாக நடக்க, நடக்க..... சற்று சரிந்து, சில இடங்களில் இயற்கையிலே பிளந்து, திரும்பும் இடங்களில் எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது தொடர்ந்து வந்து கொண்டே இருந்த பாறை. ஏறும் பொழுதே  நெருக்கமாக பேசும் பாறையின் மொழியை பாதங்கள் முழுவதும் உள்வாங்கிக் கொண்டே வர இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டேன் காலணியை. எப்பொழுதும் பேசிக்கொண்டே தான் இருக்கிறது இயற்கை. வெயில், மழை, பனி என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. நமக்கு தான் நேரமும், மனதும் வாய்ப்பதில்லை. :)




எண்ணற்ற காலங்களாக, எத்தனையோ வகையான மனிதர்களை சந்தித்து உறுதியோடு  நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், ஊற்று நீர் வடிந்து சென்ற தடங்கள் பல இடங்களில் உள்ளன. (ஊற்று நீர் பாசனம் அவ்வூரில் முன்பு இருந்தது)

மேலே நடந்து கொண்டே சென்ற பொழுது இடது புறத்தில் தூரத்தில் தெரிந்தது, சற்று முன் சென்ற குடவரைக் கோவில். இரண்டு புறங்களும் இயற்கைக் காட்சிகளை தரிசித்துக் கொண்டே காலாற நடக்க, நடக்க, பெரும் புத்துணர்வு காற்று ஐம்புலன்களின் வழியாக உள்ளே கலந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

எங்களை உற்று நோக்கிக் கொண்டே நின்ற சில பனைமரங்களை ஒட்டி தென்பட்ட பாறையில் மெது மெதுவாக,  கீழே இறங்கி, பெரிய வெளியை மிக கவனமாக நடந்து முடித்தால், நாம் உள்ளே நுழைந்த பொழுது கைபிடிக் கம்பிகளுடன் இழுத்துக் கொண்ட படிகள், இனி, உங்களுக்கு எங்கள் வசதி தேவையில்லை என்பது போல பார்த்தன.

குழந்தைகளை மால்களுக்கு அழைத்து சென்று செலவிடும் நேரத்தை விட, மலைகளுக்கு அழைத்து சென்று, வரலாற்றை நேரடியாக அறிய  செய்வது, பள்ளியில் சொல்லித்தராத அவசியமானப் பாடங்களை சொல்லித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

நிறைவான நடையுடன், செறிவான தகவல்களுடன், எளிமையான மனிதர்களுடன் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுது, மதுரையிலேயே இத்தனை ரம்மியமாக கழிந்தது கண்டு பெரும் மகிழ்ச்சியுடன், தொடர்ந்து, இனி வரும் பசுமை நடையில், தவறாமல் கலந்து கொள்வேன் என்று விடை பெற்றேன்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 25 ஆவது பசுமை நடை, கீழக்குயில்குடியில், அரைநாள் கொண்டாட்டமாக நடை பெற உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.

பசுமை நடையில் நீங்களும் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பசுமை நடை,
3 / 351, கார்த்திகா நகர், தணக்கன்குளம், திருநகர்,
மதுரை - 625 006
மின் அஞ்சல் : greenwalkmdu@gmail.com
அலைபேசி : 97897 25202, 97897 80105

திங்கள், 29 ஜூலை, 2013

மூழ்கிப்போதலும், வெளியேறுதலும்.......



ஏதேனும் ஒன்றில் மூழ்கி போய் வெளியே வர திணறும் நாட்களை கடக்காதவர்கள் என ஒருவருமே இல்லை எனலாம். அந்த ஏதோ ஒன்று, நட்பாகவோ, பழக்கமாகவோ, ஏன்........ பேஸ்புக் காக கூட இருக்கலாம். எனது அறிவுக்கு எட்டிய இது பற்றிய மிக சிறிய அலசல்.

நாம் கரைந்து போவதற்கென்று எத்தனையோ செயல்கள் இருந்தாலும், அந்த 'ஏதோ ஒன்று', மிச்சம் இருக்கும் இடைவெளியை நிரப்புவதோடு அல்லாமல் அதன் எல்லையை நீட்டித்துக்கொண்டே செல்கிற பொழுது, நம் இயல்பு வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.

முன்னறிவிப்பின்றி வந்து நிற்கும் அந்த 'ஒன்றுடன்' பயணிக்கும் நேரமானது, ஒரு நாளின் வெறும் ஒரு மணி நேரமாக இருக்கலாம். அதே அளவிலான நேரம் தினந்தோறும் தொடரவும் செய்யலாம். மீதி இருபத்து மூன்று மணி நேரங்களும் அந்த ஒரு மணி நேரத்தைப் பற்றியே சிந்திப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மட்டுமே என்று மாறிக் கொண்டே வரும் மோசமான நிலையில், பிரச்சனை வேர் ஊன்ற தொடங்கி விட்டது என உறுதியாக நம்பலாம். சமயங்களில், இந்த ஒன்றை விட, பல மடங்கு உபயோகம் தரும் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஒரு மணி நேரமே பெரும் பிரியத்திற்கு ஒன்றாக மாறிப் போய் நிற்பதையும், அதற்கென நேரம் ஒதுக்க முடியாமல் தடுதல் செய்ததாக நினைத்த சகலத்தையும் திட்டுத் தீர்ப்பதை, இந்த பிரச்சனையின் உச்சம் எனலாம்.

வண்டி சீராக போகும் வரை, எல்லாம் சுகமயம்.

இந்தப்பயணத்தில், விரைவாகவோ அல்லது மிக விரைவாகவோ சரி செய்ய முயன்று தோற்றுப் போகும் பிரச்சனைகள் நம்மை நிலை தடுமாற வைக்கும். முரண் ஏற்படும் நேரங்களில் வெளியேற எத்தனிக்கையில் சந்திக்கிற வலி, அடுத்த வேறு ஏதேனும் ஒன்றுடன் சிக்கிக் கொள்வது வரை தொடரலாம். :)

வயது கூடியவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கு என்று, ஒரு உதாரணம் முன்னமே இருக்கலாம். பொதுவாக ஒப்பீட்டில், சோகமாக இருக்கும் பொழுது கடந்தே சிறந்தது என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கடந்து கொண்டிருப்பதே சிறந்தது என்றும் தோன்றலாம். :)

சற்று உற்று நோக்கினால்.......... மிகச்சரியானவை என்று எதுவுமே இல்லை, என்று தெரிய வரலாம்.

முயற்சிகள் தோல்வியடைந்து சரியாக கையாள தெரியாமல் உடனடியாக வெளியேறியே ஆக வேண்டுமென்றால், இனி வருவது, எத்தகைய பெரிய லாபமாக இருந்தாலும்  தேவையேயில்லை என்று, இது வரை பட்ட கஷ்ட, நஷ்டத்துடன் போதும் என்று விடை கொடுப்பதே, சிறந்த நிவாரணம் என தோன்றுகிறது.


நேரத்தை கடத்த ஏதேதோ போர்வையில் நம்மை இழுத்துப் போட்டுக் கொள்ள வரும் கரங்களை, தகுதிப்படுத்தியே உள் நுழைய அனுமதிக்கிறோம். பலவற்றை ஆரம்பகட்டத்திலேயும்,  மிக சிலவற்றை, பாதியிலேயும் ஒதுக்கித் தள்ள முடிகிறது. தேர்ந்தெடுத்த அந்த ஒன்றிரண்டின் மீதும் முட்டிக் கொண்டு வெளியேறுகையில் .............. நம் சுயத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கிற நிம்மதி ஏற்படுகிறது.
( நாமே நம்மளை மதிக்காட்டி, வேற யாரு மதிப்பா?  :)  )

ஒரே ஒரு முறை தான் வாழ்க்கை. இருக்கும் வரை எதற்கும் கட்டுப்படாமல் இருக்கும், சுதந்திர உணர்வே சுய அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே என்னின் ஆகப் பெரும் விருப்பம். அதற்கான பயணத்தின் முயற்சியில் இருக்கிறேன்...









வெள்ளி, 19 ஜூலை, 2013

கொஞ்சம் ஒரு ஈரானியப்படமும்... கொஞ்சம் நாங்க விளையாடின ஹாக்கியும்...


பெண்கள் மைதானத்திற்கு சென்று கால்பந்து போட்டிகளைக் காண்பது குற்றம் என்ற நாட்டில், சில பெண்கள் போட்டியைக் காண முயற்சித்து, பிடிபட்ட பிறகும் என்ன செய்கின்றனர் என்பதே ஜாஃபர் பனாஹி யின்,  ஆஃப் சைட் ( Off Side) என்ற ஈரானியப் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே விளையாட்டு ரசிகர்களால் களைகட்டியுள்ள மைதானம், நம் கிரிக்கெட் போட்டிகளின் பொழுது காணும் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. ஆண்கள் போல வேடமிட்டிருந்தும், ஒவ்வொரு பெண்ணாக , மாட்டிக்கொள்ள, போட்டியைக் காண முடியாதவாறு, மைதானத்தின் மேற்பகுதியில் இந்தப் பெண்களை குற்றவாளிகளைப் போல நிற்க வைக்கின்றனர் காவலர்கள்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் தீவிர ஆர்வத்துடன் நேரில் பார்க்க வந்தப் பெண்கள், போட்டி ஆரம்பித்ததும், வர்ணனை செய்யும்படி, காவலர்களிடம் கேட்க, தெரிகின்ற இடைவெளி வழியே பார்த்து சொல்லுகின்ற காவலரை, லோக்கல் ஆட்களை ப்ரமோட் செய்ற வேலை எல்லாம் வேணாம், உள்ளது உள்ளபடி சொல்லு', என்று மிரட்டுவதாகட்டும், அடைபட்டு இருக்கும் சிறிய தடுப்புக் கம்பிக்கு உள்ளே ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்வதாகட்டும், விளையாட்டின் போக்கிற்கு ஏற்ப மாறும் முகங்கள் ஆகட்டும் , போட்டி முடிவதற்கு முன்பே வண்டியில் அழைத்து செல்கையில் முடிவை தெரிந்து கொள்ள தவிப்பதாகட்டும், விளையாடுவதிலும், ரசிப்பதிலும் பால்பேதம் இல்லை என்பதை உணரலாம்.




அதிலும், காவலர் ஒருவர், 'என்ன ஆச்சு ஈரானிய பெண்களுக்கு, இதென்ன வாழ்வா, சாவா போராட்டமா, வீட்டில இருந்து பார்க்க வேண்டியது தானே?', என்ற கேள்வியிலிருந்து, அக்கறையோ என்றும் எண்ணும் வகையில் தொடரும் கேள்விகளுக்கு இந்தப் பெண்கள் கொடுக்கும் பதில்கள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். முடிவில், விறுவிறுப்பான கால்பந்து போட்டியை, அந்தப் பெண்களைப் போலவே நாமும் கண்டு முடித்த திருப்தி எழுகிறது.

தமிழில் கில்லி படத்தை, தெலுங்கு ஒக்கடு வில் இருந்து ரீமேக் செய்திருந்தாலும், அந்தப் படத்தின் இயக்குனர் குணசேகர் கூட, 'பெண்ட் இட் லைக் பெக்காம்' ( Bend it like Beckham) என்ற ஆங்கிலப்படத்தின் மையக்கருவை எடுத்தே இயக்கி இருக்கக் கூடும். அந்தப்படத்தில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த ஒரு குடும்பத்திலுள்ள பெண் கால்பந்து விளையாட, எப்படி எல்லாம் போராடி வெற்றி  பெறுகிறாள் என்பதே கதை.

நல்ல வேளை, விளையாடுவதற்கு நமக்கெல்லாம் இந்த மாதிரி பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும், அப்பொழுதே விளையாட மறுக்கப்பட்ட சில மாணவிகள் முகங்கள் பரிதாபமாக வந்து போகின்றன. ஹ்ம்ம்...
இப்பொழுதும் ஒரு ஹாக்கி மட்டையைப் பார்த்த மாத்திரத்தில், மின்னும் உற்சாகம், ஆடிய அத்தனை தருணங்களையும் வரிசைப்படுத்தும். ஒரே குழுவாக, சகலத்தையும் மறந்து விளையாடின நாட்கள், கடந்த காலத்தில் கூடுதல் வண்ணத்தை சேர்த்திருந்தன.

எட்டாவது வகுப்பில் பள்ளி முடிந்து, குரூப் ஸ்டடி என்று கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து படிக்கின்ற தொல்லை இல்லாமல், விளையாட்டு மைதானத்திற்கு ஹாக்கி ஸ்டிக் எடுத்து சென்று, ஒரு மணி நேரம் வரை விளையாடி விட்டு செல்வது தினசரி வழக்கமாக இருந்தது. தினமும் பயிற்சியாளர் வந்து, நிறைய குறிப்புகள் கொடுக்க, தொடரும் எங்கள் பயிற்சி நாள்தோறும். தொடர்ந்து இரண்டு முறை மாவட்ட அளவில் தோற்றாலும், பத்தாவது படிக்கையில், இறுதிப்போட்டியில் டிரா ஆன பிறகு, tie break இல், ஒரு கோல் அடித்து, முதன் முறையாக பள்ளிக்கு பெற்று தந்த கோப்பையில் திருப்தி ஆனது எங்கள் மூன்று வருடக் கனவு. அதற்கடுத்த இரண்டு வருடங்களுமே, தொடர்ந்து மாவட்ட சாம்பியன்களாக வலம் வந்தாலும், பள்ளிப்படிப்பை முடிக்கும் நேரத்தில், இங்கு இவ்விளையாட்டு எந்த கல்லூரியிலும் இல்லாததால், விசில் ஊதாமலே முற்று பெற்று விட்டது ஹாக்கி அத்தியாயம்.

பெரிய மைதானத்தின் ஒரு முனையில் இருந்து அதனடுத்த முனைக்கு ஒரே அடியில் பந்தை கடத்தும் திறன் பெற்ற மாணவிகள் பலர் இருந்தனர். ஆட்டத்தின் பொழுது விழிப்புணர்வோடு இருப்பது, வருகிற பந்தை தடுத்து எடுத்து அடிப்பது, சரியான படி எங்களுக்குள் பாஸ் செய்வது, முடிந்த அளவு காலில் வாங்காமல் ஆடுவது, 'D' உள்ளே செல்கையில் பரபரப்புடன் கோல் ஆக்க முனைவது என்று எல்லா நொடிகளிலும், சுறுசுறுப்புடன் விளையாடுவோம். அநேகமாக விளையாடிய அத்தனை பேருக்கும் மைதானத்தில் கீழே விழுந்த, அடிபட்ட தழும்பு இருக்கும்.

இன்றும் வருத்தப்படும் வைக்கும் ஒரு நிகழ்வும் வந்து இம்சிக்கிறது, ஒரு போட்டியில் எங்கள் அணி மாணவிக்கு பல் உடைந்து இரத்தம் வந்ததும் கிடைத்த இடைவேளையில், கூடி, பந்தை எடுக்க முயற்சிக்கும் சாக்கில், கிடைக்கின்ற எதிர் அணியினரின் காலில் ஒரு போடு போடுவது என்று எங்களின் மோசமான திட்டத்தை சிலர் செயல் படுத்த, அம்பயரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டோம். ஹ்ம்ம்.....  :(

முடிவை அறிய அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், விளையாடும் நேரம் முழுக்க, அதனுள் நம்மை எடுத்துக்கொண்டு, பதிலாக ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதால் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் என்றென்றும் எனது விருப்பதிற்குரிய விளையாட்டுகள்!
















திங்கள், 15 ஜூலை, 2013

தந்தி


எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்ற அல்லது எதிர் பாராத அதி முக்கியத்தகவலை, வெகு விரைவில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதே தந்தி.
தினமும், இதே ரீதியில் செய்திகளை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தினத்தந்தி நாளிதழுக்கு இந்த பெயர் வைத்திருப்பர் என்றே எண்ணுகிறேன்.

சிறிய வயதில் ரயில் பயணங்களின் பொழுது ஓரத்தில் தொடர்ந்து காணப்படும்   தூண்களை பற்றி தாத்தாவிடம் கேட்ட பொழுது, இதன் வழியே தான் தந்தி அனுப்புவர் என்ற தகவலைப் பெற்றேன்.
" இதில போய்  எப்படி தாத்தா அனுப்ப முடியும்?", என்ற கேள்வியை,
நல்ல வேளையாக அந்த கம்பி கையில் சிக்காததால் பிய்த்து போடாமல் கேட்டேன்...... :P

அப்பொழுது பெற்ற தகவல் தான், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வகையான குறியீடு இருக்கும். வரிசையாக அனுப்பப்படுவதை இன்னொரு முனையில் பெற்று சேர வேண்டிய இடத்திற்கு உடனடியாக  அனுப்புவர் என்று.

வார்த்தைகளை சுருக்கி எழுதும் SMS க்கு, வாக்கியங்களை சுருக்கி எழுத கற்று தந்த தந்தியே முன்னோடி!

நிர்ணயிக்கப்பட அளவிற்கு மேல் கூடுதலாக அடிக்கும் வார்த்தைகள் அதன் அளவைப் பொறுத்தே , SMS மொத்தக் கணக்கில் இருந்து கழிக்கப்படும். தந்தி கூட அப்படி தான், கூடுதல் எழுத்துக்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்றும், இன்றும், தொலை தொடர்பு வசதிகள்,  நம் பையிலிருந்து பணத்தை தேவைக்கு எடுத்தாலும், சிக்கனமாகவும் இருந்து பிழைப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றனவோ என்னவோ!




எட்டாவது வகுப்பு படிக்கும் பொழுது, ஆங்கிலத்தில் ஐந்து மதிப்பெண்கள் உள்ள வினாவாக தந்தி அடிப்பது எப்படி என்ற ஒரு கேள்வி.... ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, இந்த நேரத்தில் எப்படி தந்தி இருக்க வேண்டும் என்று இருக்கும்.
எழுதியதில் தற்பொழுது நினைவில் இருப்பவை.
பெண்/ஆண் குழந்தை பிறந்து விட்டது.
தாய் சேய் நலம்.
அவசரம். கிளம்பி உடனே வரவும்.
வாழ்த்துகள்!

சில வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டாலே போதும், எளிதில் இதில் மதிப்பெண் பெற்று விடலாம். எழுதுவதற்கு சோம்பேறியான என்னை போன்றோருக்கு மிகக் குறைவான எழுத்துக்களில், உரிய மதிப்பெண் பெறக் கூடிய பகுதி. அதுவும், புரிந்தால் போதும் இலக்கணம் மிக சரியாக பின்பற்றப்பட தேவையில்லை என்பதாலேயே இன்னும் எளிமையான, விருப்பத்திற்குரிய பகுதி. ஆனாலும், கற்றுக் கொண்டதைப் பயன்படுத்தி என் வாழ்க்கையில் இது வரை ஒரு தந்தியும் அடித்ததும் இல்லை, பெற்றதுமில்லை என்பது சோகமே. 

இனி தந்தியை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் பற்றி, போட்டித் தேர்வுகளில் கேள்வி எழுப்பி பதில் பெறும் முறையில் ஞாபகப்படுத்திக் கொள்வதைக் கூட மறந்து  விடுவோம் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு அடியாக முன்னேற முன் தள்ளியவை, தேவையில்லை என்று காணாமல் மறைந்து போனாலும், இப்பொழுது வந்தடைந்திருக்கும் இடத்திற்கு அவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது!







வியாழன், 4 ஜூலை, 2013

DDLJ

இன்று காலையில் பார்த்தப் படங்களில் பிடித்தவற்றை தேர்வு செய்து  பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டே வந்த பொழுது வந்து நின்றது....
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே...

தியேட்டருக்கு சென்று மூன்று முறை பார்க்க வைத்த ஒரே படம். முதல் மூன்று காரணம்.....
1. ஷாரூக்
2. ஷாரூக்
3. ஷாரூக்
தூர்தர்ஷனில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுதே அதிக துறுதுறுப்பின் காரணமாகவே வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் இவரை. அதே இயல்பில் கலக்கி இருக்கும் ஷாரூக்கின் குறும்பு, கிண்டல் பார்வை, சேட்டைகள் மிகுந்து மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியாக இருக்கும் இந்தப் படத்தில். அதே நேரத்தில், காதல் என்று வரும் பொழுது ( பாருங்க, யார்னாலும், இங்க மட்டும் ஒரே மாதிரி இருக்காங்க :P)  உருகும் இடங்களிலும், முழுதாக தன்னை அர்பணித்துக் கொள்ளும் இடத்திலும் நம்மையும் ரசிக்க வைத்து பார்க்க செய்வதே இவரின் சிறப்பு.

அடுத்து, இசை.... இன்றும் பலமுறை சலிப்படையாமல் கேட்க செய்யும் பாடல்கள் நிறைந்த படம்.


ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எல்லாம் நல்லா இல்லாமலா படம் ஓடி இருக்கும். ஹிஹி ,அவங்க பேரெல்லாம் மறந்து போயிடுச்சு.
அது சரி, தெரிஞ்சவங்களை தான் திட்டி விமர்சனம் பண்றோம். இதை படிக்கவே போகாத படத்தில சம்பந்தப்பட்டவங்களைப் பத்தி, நாலு வார்த்தை நல்லா தான் எழுதுவோமே :)  

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். எது எப்படி என்றாலும், மாதத்திற்கு இரண்டு படங்கள் பார்ப்பது அப்பொழுதைய விருப்பத்திற்குரிய பொழுது போக்கில் ஒன்று. அந்த வகையில், ஒரு சனிக்கிழமையில் மதுரை, ராம் விக்டோரியா தியேட்டரில், உடன் படித்த ஒரு மாணவி கூட மிஸ் ஆகாமல் கவனித்த, மன்னிக்கவும், பார்த்த ஒரே படம் இது. :)

கதை என்று பார்த்தால், ஏற்கனவே  திருமணம் நிச்சயிக்கப்பட்டப் பெண், வேறொரு ஆணை திருமணம் செய்வது தான். இதற்கு பிறகு வந்த பர்தேஷ்
  படத்தில் அண்ணியாய் வரப்போகிற பெண்ணை, காதலித்து திருமணம் செய்வார். வரிசையாக, இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்ட இயக்குனர்களின் தேர்வு ஷாரூக் ஆக இருக்கலாம் என தோன்றுகிறது. (இதேஆரம்பத்தின், பல் வேறு அபாய முனைகளையும் தொடுவதோடு உள்ளே புகுந்து சாதனை செய்த தமிழ் இயக்குனர்கள் சிலர் இருக்கின்றனர், அது தனிக் கதை)

இதற்கு முன்பாக வந்து சக்கை போடு போட்ட, 'ஹம் ஆப்கே ஹைன் கௌன்', திரைப்படம் மாதிரி, பாதி நேரங்களில் திரை முழுவதும் குடும்ப உறுப்பினர்கள், வேலை வெட்டி இல்லாமல் ஏதாவது பண்டிகையைக் கொண்டாடுவதும், அடிக்கடி சிரித்துக்கொண்டே இருப்பதும், எதையாவது தின்று கொண்டே இருப்பதுமாக, படம் போகும். அதே ரீதியிலான, சில வழக்கமான காட்சிகள் இதிலும் உண்டு.

கல்லூரியில் பட்டம் பெறும் விழாவில் தேர்வில் தோல்வியடைந்த ஷாரூக் கலந்து கொள்வது, கஜோல், ஷாரூக் முதன்முதலில் பேசிகொள்வது போன்ற காட்சிகள் அப்போவே, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது உண்டு.

தொடர்ந்து அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும் பொழுது நடக்கிற சின்ன சின்ன சம்பாஷனைகள், நிகழ்கிற சம்பவங்கள் ஆர்வத்தோடு அவர்களுடன் நம்மையும் பயணிக்க வைக்கும். எந்த இடத்திலும் நடிக்கின்றனரோ என கொஞ்சமும் யோசிக்க முடியாத அளவு கஜோலின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். இந்தியாவிற்கு கஜோலை தேடி வந்து, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே நகரும் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தவை போல இருந்தாலும், எப்படியாவது, இவர்கள் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மொழி தெரியாதவர்களுக்கும் அதிகரிக்கும். மிகப் பெரிய பட்ஜெட் படத்தில், இறுதி காட்சியில், நான்கில் ஒரு சினிமாவில் வருவது போலவே , ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருப்பதை தவிர்த்து ஏர்போர்ட்டில் வைத்திருக்கலாம். :P

17 வருடங்களுக்குப் பிறகும், லதா மங்கேஸ்கர் - குமார் சானு வின், குரலில், 'துஜே, தேக்கா, தோ யே ஜானா சனம், .........', கேட்கும் பொழுது முதல் முறை ஏற்படுத்திய அதே சிலிர்ப்பு இப்பொழுதும் கூட. மனசெல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் கூட்டம் கூட்டமாக, நொடியில் மலர்வதைப் போல இருக்கிறது. :)
( இன்று எத்தனை முறை இந்தப் பாட்டை தொடர்ந்து கேட்க போகிறேன் என்று தெரியவில்லை )

பிடித்தவர்களால் நடிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள், இப்படி எல்லாம் நடக்குமா என்ற ஆர்வமும், நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமுமே இந்தப் படத்தின் வெற்றி என நினைக்கிறேன்.













புதன், 3 ஜூலை, 2013

ஆறு சிக்னல்கள் - இருபது நிமிடங்கள்!

இரத்தக் கொதிப்பிற்காக ராம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையை அக்குபஞ்சர்க்கு மாற்றி சில வாரங்கள் ஆகிறது. கோமதிபுரம் கடைசியில் இருக்கும் மருத்துவர் வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பார். மாலை வேளையில் அதிக பட்சம் ஆறரை  மணி வரையே இருப்பார். விடுப்பு, சிறப்பு அனுமதி எடுத்து என சில வாரங்கள் சிகிச்சைப் பெற்ற நிலையில், அக்குபஞ்சர் சிகிச்சையின் பக்க விளைவாக கடும் காய்ச்சலுடன் கல்லூரிக்கு சென்றிருந்த தன்னை, நேற்று மாலை ஆறு மணிக்கு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அழைத்து சென்றால், மருத்துவரை உறுதியாக பார்த்து விடலாம் என்று மொபைலில் சொன்னதும், சாதாரண நாளிலே அரை மணி நேரம் கடக்க எடுத்துக் கொள்ளும் தூரத்தை, இருபது நிமிடங்களில் கடந்தே ஆக வேண்டும், அதுவும் இந்த கடுமையான போக்குவரத்து இருக்கும் நேரத்தில் என்று எண்ணிக்கொண்டே இரு சக்கர வாகனத்தை எடுத்தேன்.

காத்துக் கொண்டிருந்த இரண்டாவது நிமிடத்திலே வந்து நின்ற கல்லூரி பேருந்தை ' சவால் ஆரம்பமாகிவிட்டது', என்று ஆர்வத்துடன் பார்த்தால், வேறு யாரோ இரண்டு பேர் இறங்கி செல்ல மெதுவாக புறப்பட்ட வண்டியின், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியர்,
'சார், அடுத்த பஸ்ஸில வர்றார் மேடம் ', என்ற தகவலை வேகவேகமாக சொன்னவுடன்,
'பஸ் ல ஏன் வர்றார்?', என்று பதில் கேள்வியில் குழம்பிய அவரின் முகத்தை பார்த்த திருப்தியில், தொடர்ந்து காத்துக் கொண்டு இருந்தேன். அதற்குள், அவர் செல்லில் கூப்பிட்டு, தகவலை சொல்லி இருக்கிறார் என்று அடுத்த பஸ் வந்து சேர்ந்ததும் தெரிந்தது. எப்பவும் போல, 'நீ திருந்தவே மாட்ட', என்று விளையாட்டாய் கடிந்து கொண்ட ராமை, பின்னால், அமர செய்து கிளப்பினேன் வண்டியை.

மொத்தம் ஆறு சிக்னல்கள், அதிகமான எண்ணிக்கையில், அவதி அவதியாக விரையும் வாகனங்கள். மழை பருவத்தில் பொழிய தப்பினாலும், தவறாமல் மண்ணை அள்ளி வீசும் காற்று காலத்தில், பயணிப்பது பெரிய சவால் தான்.

'தொடர்ந்து பல வண்டிகளும் அடுத்தடுத்து ஓவர் டேக் செய்து முந்துவதால் ஏற்படுவதே டிராபிக் ஜாம்'. (அடடா, ஒரு ஸ்டேடஸ் தேறிடுச்சே என்று உள்ளே ஓடிக்கொண்டிருந்தது) சில இடங்களில் முந்தி, சில இடங்களில் பின் தங்கி, பாலத்தில் ஏறி இறங்கி, சிக்னலைக் கடந்த வண்டியை கோரிப்பாளையத்தில் வரவேற்றது சிவப்பு சிக்னல். கிங் மெட்ரோ ஹோட்டல் பக்கத்திலிருந்த வண்டிகள் செல்ல ஆரம்பித்திருந்தன. அடுத்து மற்றொரு பக்கத்திலும் வாகனங்கள் புறப்பட ஆரம்பித்து, அவற்றின் எண்ணிக்கை ஒன்றிரண்டு என குறையும் நேரத்தில், வண்டியை ஸ்டார்ட் செய்தால் போதுமானது என்று அமர்த்தி வைத்தேன்.



ஒரு வழியாக பச்சை விளக்கு ஒளிர்ந்த நொடியில் வண்டியை ராஜாஜி மருத்துவமனை உள்ள சாலையில் விட்டால், மதுரையில் உள்ள அத்தனை வண்டிகளும் ஒரே நேரத்தில் வெளியே வந்து ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு செல்வது போன்ற பிரம்மை. இங்கு, 20-30 கி.மீ. வேகத்தில், செல்வதே பெரிய வித்தை புரிவது போன்று. இந்த நேரத்தில், இந்த சாலையில் ஓவர் டேக் செய்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும் வேறு வேறு இல்லை. சீரான வேகத்தில் சென்று கொண்டே இருந்தாலும், அவ்வப்பொழுது மணியைப் பார்த்துக்கொண்டே சென்றேன்.

நல்ல வேளையாக, ஆவின் பால்பண்ணை அருகில் சிக்னலைக் கடக்கையில் மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தது. ஓரளவு அகலமான, சீரான சாலையில் சில நிமிடங்கள் பயணிக்க, மேலமடை அருகில் உள்ள சிக்னல், வழக்கம் போல சில நிமிடங்களைத் தின்று தீர்த்து விட்டே வழி விட்டது. அதிலும், சிவகங்கை சாலையில் உள்ள கோமதிபுரத்திற்கு செல்லும் இந்த நேரங்களில், எதிரில் பயணிப்பவர்கள், பொதுவாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பல முகங்களை நிதானமாக பார்த்துக்கொண்டே, சிறிது சிறிதாக நகர முடியும். (ஒன்றிரண்டைத் தவிர, அனைத்து முகங்களும் சோர்ந்து, வாடி இருப்பது போல பட்டது)

அங்கங்கே தட்டுப்படும் சிறிய பள்ளங்கள், ஓரங்களில் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் மண், குறுகலான வழி,  இவற்றை கடந்து சென்றால்   பல மீட்டர் தூரத்திற்கு பிறகே அகலமாகும்  சாலை. சில நிமிடங்களிலே ஊர்ந்து செல்லும் வேகத்தை சற்று அதிகப்படுத்தும் வண்ணம், முன்னே உள்ளே வண்டி சென்றது. இதில் முன்னே செல்லும் வண்டியை, அப்படியே பின்பற்றினால், நாமும் அதே வகையான வண்டியில் பயணிக்க வேண்டும். ஒரு வேளை, அந்த வண்டி நான்கு சக்கரமாக இருந்தால், அது பள்ளத்தில் தப்பிக்க சற்று ஓதுங்கி பாதுகாப்பாக செல்லும் பொழுது, நிச்சயம் அந்த பள்ளத்தில் நம் இரு சக்கர வாகனம் இறங்கி ஏறும். (அடடா, இரண்டாவது ஸ்டேடஸ் தேறிடுச்சே :P )

அதிலும், இந்த சின்ன சின்ன பள்ளங்களை எல்லாம் கவனித்து சுற்றி வளைத்து வர முடிகின்ற பலரும், பெரிய திறமைசாலிகள் என்று அகம்பாவம் கொண்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அங்கங்கே இருக்கின்ற பெரிய பள்ளங்கள், தங்களுக்குள் இறங்க வைத்து அவர்களின் பெருமையை வாங்கிய பின்னரே வெளியே விடும்.

இப்படியாக.....
வேகமாகவும், பாதுகாப்பாகவும், பயணித்து.......
சரியாக, இருபதாவது நிமிடத்தில் இலக்கான, கோமதிபுரம் ஒன்பதாவது தெருவில் வளைத்து, மருத்துவமனைக்கு முன் வண்டியை நிறுத்தி விட்டு,  உள்ளே இருந்த மருத்துவரை பார்த்து விட்டு,
வெளியே வந்து வெற்றி புன்னகையுடன் பார்த்தால், கரவொலி எழுப்பவோ, விருது வழங்கவோ யாருமில்லை!  :P




வெள்ளி, 28 ஜூன், 2013

பேனாவை பின்னுக்கு தள்ளும் பென்சில்! :)

வாசித்துக் கொண்டிருக்கின்ற புத்தகத் தாளின் மூலையில், கூர்மையாக சீவிய பென்சிலால், இதுவரை அதிக அளவில் எழுதப்பட்ட என் பெயரை எத்தனையாவது முறையாகவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். முக்கிய வரிகள் என்று கருதுபவற்றை அடிக்கோடு இடுவது, அப்படியே ஓரங்களில் ஏதாவது சிறிய படங்களை மனம் போல வரைந்து கொண்டே இருப்பது, என்னையும் அறியாமல் அவ்வப்பொழுது நிகழும் செயல்.

முனை மழுங்கிய பென்சிலை ஷார்ப்னர் துணையுடன் கூர்மையாக்கி, மீண்டும் வாசிப்பைத் தொடரும் முன்னர், வழக்கம் போல வழி மறிக்கும் சிந்தனைகளில் ஒன்று பென்சிலில் வந்து நின்றது. பாதை மாறாமல் அதன் போக்கில் பயணித்ததில், அடிக்கோடிடப்பட்டவை கீழே உள்ளவை! :)

பள்ளியில், மூன்று, நான்காம் வகுப்புப் படிக்கும் காலங்களில், ஷார்ப்னர் என்பது மிக அரிதான பொருட்களில் ஒன்று, மேலும், அப்படிக் கிடைப்பவையும் கூட, ஒரு சில முறைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்கும்.

அன்றைய நாட்களில் வீட்டில் சவரம் செய்து ஒதுக்கப்பட்டிருக்கும் ப்ளேட்களில்(Blade)   ஒன்று உறையுடன்  டப்பாவில் எப்பொழுதும் இருக்கும்.  பெருவிரல், ஆட்காட்டி விரல்களுக்கிடையே ப்ளேடைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பிடித்துக் கொண்டிருக்கிற பென்சிலை, மரத்தூள்களை நீக்கி, உள்ளே இருக்கிற உக்கை கொண்டு வருவதென்பதை பெரிய சாதனையாகவே எண்ணி இருக்கிறேன்.

சிறிய அளவில் வெளியேறிய கருப்புக் குச்சியை,  தரையில் தலை கீழாய் வைத்து அதன் முனையை ப்ளேடின் துணையால், மிகக் கூர்மையாக்குவேன். பொதுவாக அந்த நேரங்களில், இரண்டு முறைக்கு ஒரு முறை சீவுகின்ற ஆள்காட்டி விரல் அல்லது பெருவிரலில் ஏற்படும் கீறல்களால் வெளியேறும் சில துளிகள் ரத்தத்தை, வீட்டில் வழங்கப்பட்ட ஆலோசனையின் பேரில் விரலை வாயில் வைத்து தடுத்து நிறுத்துவேன்.

வீட்டில் சாப்பிடும் பொழுது காயத்தில் படும் காரத்தால் எழுப்பும் உஸ்,உஸ் என்ற சத்தத்தை தடுப்பதற்காகவே, பள்ளிக் கிளம்பும் பொழுதே, அவர்களே பென்சிலை கூர்மையாக்கி கொடுத்து விடுவர். அது போக, முடிந்த அளவு, அதிகம் மழுங்கிய முனைகளை உடைய ப்ளேட்களை மட்டும் உபயோகிக்க சொல்வர். இதற்கு தேவைப்படும் அதிக அழுத்தத்தை கொடுத்து சீவும் பொழுது, உறுதியாக ரத்ததுளிகள் ஆர்வத்துடன் வந்து என்னை எட்டிப் பார்க்கும். :P




ஒரு கட்டத்தில், பென்சிலை இரண்டாக ஒடித்து, அதன், இரண்டு + இரண்டு நான்கு முனைகளையும் வீட்டிலேயே தாத்தாவின் மேற்பார்வையின் கீழே குடும்பமே, கூர்மையாக்கி டப்பாவிற்குள் வைத்து விடும்.
என் பாட்டியோ, இன்னும் ஒரு படி மேலே போய், 
' உக்கு இருக்கிற வரை எழுது, அம்புட்டு படிச்சா போதும்', என்று ஆலோசனை வழங்குவார்.


எனக்கோ, எப்பொழுது ஐந்தாவது போவோம், அங்கு போனால் பென்சில்க்கு பதில் பேனா. சீவும் தொல்லை எல்லாம் இருக்காதே என்ற எண்ணம். ஆனால் எந்நேரமும் விரல்களில் மையின் கறை படிந்திருக்க உதவி செய்யும் கசிந்து கொண்டே இருக்கும் பேனாவின் கழுத்து, சமயங்களில் மூடியின் ஓட்டையில் வழிந்து மொத்தப் பையையும், நீல வண்ணமாக்கும் அபாயம், எழுத திமிறும் நேரங்களில், மீண்டும் ப்ளேடை எடுத்து அதன் நிப்பின் மத்தியில் உள்ள பிளவில் அழுத்திக் கீறி, சரியான முறையில் மை இறங்க வழி செய்து கொடுப்பது, எழுதும் நேரத்தில் காலியாகும் மாணவர்களுக்கு பேனாவின் கழுத்தைத் திருகி மையை ஊற்றுவது, தேவைப்படும் பொழுது, இதே ரீதியில் கொடுத்தக் கடனைப் பெற்றுக்கொள்வது, நிப் உடையும் நேரங்களில் எல்லாம் மனதும் உடைந்து போனது, ஹீரோ பென் என்று வாங்கி, அதன் குறைந்த கொள்ளளவு மையை ஏற்ற, போராடியது..........  என்று பல வகைகளிலும் பென்சிலுடன் ஒப்பிடும் பொழுது, பேனா சற்று  பின் தங்கிவிடுகிறது.

இன்றும், என் கைப்பையில் ஒரு பென்சில் இருக்கும்.
பயணக்காலங்களில் தோன்றுபவற்றை, கேட்பவற்றை குறிப்பெடுக்க உதவும்.

எத்தனையோ வகைவகையான பேனாக்கள் இருந்தாலும், ஒரு பென்சிலின் இடத்தை அவற்றால் பறிக்க முடியவில்லை.

கருப்பு, சிவப்புக் கூட்டணியில் செங்குத்துக் கோடுகள் வரையப்பட்ட நடராஜ் பென்சில், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே விருப்பத்திற்குரிய பென்சில் ஆக இன்று வரை இருக்கிறது!

எழுதியதில் தவறானவற்றை அழிப்பது எளிது. தேவையற்ற தடயத்தை விட்டு செல்லாது என்பதாலும் கூட.........  பென்சில், விரல்களுக்கு கூடுதல் நேசமாகிப்போனது.