செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வெறுமையும் பரிசே!


கல்லூரிப்  படிப்பை முடித்தவுடன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் கற்றுக் கொள்வதற்காக சென்ற வகுப்பில் பரிச்சயமான தோழிகளில், சம வயதில் இருந்ததாலோ என்னவோ,சுதாவிடம் மட்டும், தொடர்ந்தது நட்பு. அன்றைய நாட்களில், அதிகம் அரட்டை அடித்துப் பொழுது போக்கிய இடங்களில் அவள் வீட்டு மொட்டை மாடியும் ஒன்று. இருவருக்கும் ஏதேனும் வாக்குவாதம் வரும் நேரங்களில் எல்லாம், விஷயத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு எனக்கு மட்டுமே ஆதரவளிக்கும், சுதாவின் அக்கா ராதாவை, பார்க்கும் எவருக்கும் பிடித்துப் போகும். களையான முகத்துடன், பார்க்கும் எல்லா நேரங்களிலும் புன்னகை பூத்து இருப்பாள். இதில், பிடித்த இனிப்பென்றால், அவளுக்கு உரிய பங்கினை எடுத்து வைத்து, சுதாவிடம் எனக்கு கொடுத்தனுப்புவாள்.

ஒரு நாள் திருமணப்பத்திரிக்கையை கொடுப்பதற்காக மாலை வேளையில் அவள் வீட்டிற்கு சென்று இருந்தேன். சுதாவின் அப்பா சற்று கூடுதலாகவே வெகுளி. அவர், ' பரவாயில்லயே, பொண்ணுகளே கல்யாணப் பத்திரிக்கை எல்லாம் கொடுக்கிற அளவு முன்னேறிட்டீங்க', என்று சொன்ன நொடியில் தாள முடியாமல் நான் சிரித்ததன் காரணம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். பக்கத்திலிருந்து என்னைக் கிள்ளிய சுதாவிற்கு தெரியும். ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன்பே, வீட்டிற்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்தவள். அவளின் அக்காவின் திருமணம் முடிந்த உடன் வீட்டில் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அந்த ஆண்டிலேயே நடைபெற்ற ராதாவின் திருமணத்திற்கு சென்னையில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு ஓரிரு முறை ஊருக்கு வந்தும், சுதா வீட்டிற்கு செல்ல முடியவில்லை. பல மாதங்கள் கழிந்த நிலையில், மதுரை வந்த அன்றே, சுதா வலுக்கட்டாயமாக அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றாள். வழியிலேயே தெரிவித்ததன் சாராம்சம், ராதா கருவுற்று ஏழு மாதங்கள் சென்ற பிறகே, அவளுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தாமதமாக தெரிய வந்தும், விடாப்பிடியாக அதற்கடுத்த மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் பின் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே.

எதுவுமே செய்ய இயலாமல் போகும் இதுமாதிரி நேரங்களைக் கடப்பது என்பது, அந்த நோயின் தீவிரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

வீட்டிற்குள் சென்ற பொழுது, ராதாவின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற அவரின் அம்மா, வலிந்து உருவாக்கினப் புன்னகையுடன் வரவேற்றாள். வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையில் திரைச்சீலையை ஒதுக்கி விட்டு உள்ளே சென்ற பொழுது மொட்டைத் தலையுடன், வித்யாசமான தோற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ராதாவைக் கண்டதும், உள்ளே ஏதேதோ ஓட, திரள துவங்கியது கண்ணீர்.

'வீட்டில இருக்கவங்க தான் இப்படி இருக்காங்கன்னா, நீயாவது வழக்கம் போல பேசு', என்றாள்

சரியாக சொன்னால், இந்த வார்த்தைகளை குழறிக் குழறி துப்பினாள். சரளமாக, சிரமில்லாமல் அவள் பேசுவது போல இருந்தாலும், சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது உச்சரிப்பு.

'சரியாகிடும் க்கா', என்ற என்னை, சிரித்துக் கொண்டே, 'உங்க யாருக்கும் தெரியாது எப்போ, என்னன்னு........ எனக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி, அதுக்குள்ள உன்னிஷ்டபடி இருனு ஆண்டவன் சொல்லி இருக்கப்போ, சந்தோஷமா இருக்கேன். பையனுக்கு என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு முடிச்சிட்டேன். அம்மா, சுதா எல்லாம் என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க......... அப்புறம் சொல்லு சென்னை எப்படி இருக்கு', என்று தொடர்ந்தவளிடம், துயரத்தை முழுக்க சுமந்து கொண்டிருந்த அந்த நொடியில் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

என்ன பேசுவது என்று தெரியாமலேயே, அவளின் பரிதாபா தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் நொடிகள், யுகங்கள் போல கடந்து கொண்டிருந்தன.

மீண்டும் ராதாவே, ' எவ்ளோ நேரமாச்சு தீபா வந்து, காபி கொடுக்க முடியாது?' என்று அதட்டலுடன் தங்கையைப் பார்த்து சொன்னாள்.

ராதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மெலிதாகத் தட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது என்னால். அவளோ என் தலையைத் தடவிக் கொண்டே, 'வர்றப்போ, போறப்போ, என் பையனை ஒரு பார்வை பார்த்துக்கோ', என்றதும், கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் தளும்பியது எனக்கு. வெகு இயல்பாக என்னைத் தேற்றிக் கொண்டே, 'காபியைக் குடி', என்றாள்.

இது மாதிரியான சமயத்தில் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுக் குடித்த காபியின் ஒவ்வொரு சொட்டும், நாக்கின் நுனியிலிருந்து வயிற்றின் உள்ளே கொடிய விஷம் இறங்குவது போல இருந்தது.

கடந்த நாட்களில் நாங்கள் மூவரும் பேசி மகிழ்ந்த ஓரிரு சம்பவங்களை மிகவும் ரசனையுடன் நினைவு படுத்தினாள். கனத்த அமைதி சில நிமிடங்கள் தொடர்ந்தது. 'கிளம்புறேன்', என்று மீண்டும் அவளின் கைகளைப் பற்றி விடுவித்தேன். புன்னகையுடன் கை அசைத்தாள்.

வலிமையைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டாத ராதாவின் வார்த்தைகளைப் போலவே, உள்ளேயும் அதே வலிமை இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அந்த நொடிப் பிரார்த்தனையாக இருந்தது.

வெறுமையால் நிரம்பிய வித்யாசமான மனநிலையோடு வீடு வந்தடைந்தேன்.

அதன் பிறகு சில மாதங்களில் ராதா இறந்த பொழுது சென்னையில் இருந்தேன். எட்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. தற்பொழுது அந்த குடும்பம் மதுரையில் இல்லை.

இன்றும் வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகளின் பொழுது, சிரித்துக் கொண்டிருக்கும் ராதாவின் முகம் மனதில் வந்து சொல்லும் செய்திகள் பலவற்றை மொழி பெயர்க்கத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.

அபூர்வமாக என்னை பாதிக்கும் ஏதேனும் சம்பவத்தின் பொழுது சூன்யத்தின் மத்தியில் இருப்பதாகவே தோன்றும். அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலாகவே இருந்தாலும், வெற்றி பெறப்போவது நான் தான் என்ற நினைப்பில் எதிர் கொள்வதால், போராட்டம் பழக்கப்பட்டதுடன் மோதுவது போல் இருக்கும். சமயங்களில், 'வெறுமை', மற்றைய உணர்வுகளை விட தொடர்ந்து நீடித்தால், எதையுமே கண்டு கொள்ளாமல் எளிதாகப் பயணிக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு.

வெறுமையை நமக்குப் பரிசளிப்பவர்கள் பெரும்பாலும், நம் பிரியத்துக்கு உரியவர்களாகவே இருக்கிறார்கள்.
( ஏப்ரல் 16 - 30...குங்குமம் தோழியில் வெளியானது)

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உச்சி வெயிலுடன், கடந்து சென்ற ஒரு கொடுமை!

சற்று நேரத்திற்கு முன்பு, ராமகிருஷ்ணர் மடத்திற்கு எதிரில் இருந்த பள்ளியில், சில விவரங்கள் கேட்பதற்காக சென்றிருந்தேன். தகவல்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது,  மரநிழலில் நிறுத்தியிருந்த வண்டியின் மிக அருகே இன்னொரு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. ஒருவன் அந்த வண்டியில் உட்கார்ந்த படியும், இன்னொருவன் சற்று தள்ளியும் நின்றபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இருபத்தைந்து வயதிற்குள் இருக்கலாம். நேரத்தை பார்த்தபடி, வேகமாக எட்டுவைக்கையில், உட்கார்ந்திருந்தவன் கீழே எச்சிலைத் துப்பினான். ஏதோ சரியில்லாதது போல எனக்குத் தோன்றியது. வெயில் துரத்தியதில், சில வினாடிகளில் வண்டியின் அருகே வந்து நின்றதும், இருவரும் எழுந்து வழிவிட்டனர்.


நான் பயந்தபடியே நடந்திருந்தது, அவன் துப்பியதில் சில துளிகள் சீட்டில் படிந்திருந்தது. கோபத்தில் எதுவும் திட்டிவிட்டால், எதிர் கேள்வியாக , "இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா", என்று வரும்,
" ரோட் இல்ல, ஆனா, வண்டி என் அப்பன் வீட்டு வண்டிதான்", என்று சொல்லி தேவையில்லாமல் வெயில் குடித்து மீதி இருந்த எனது சக்தியை வீணடிக்க விரும்பவில்லை.

சற்று என்னை அமைதிபடுத்திக்கொண்டு, வலிய தருவித்தப் புன்னகையுடன், "கர்சீப் இருக்கா தம்பி?" என்று கேட்டேன். சற்று யோசித்தவாறே " இருக்கு" என்றான். " வர்றப்போவே பார்த்தேன், துடைச்சிடு ", என்றதும், மறு வார்த்தை பேசாமல் சுத்தமாக இருக்கையைத் துடைத்தான். அதன் பிறகு என் வண்டியிலுருந்த சிறியதுணியை எடுத்து இலேசாக இருக்கையை, உதறியபடி தட்டிவிட்டேன். ஓரளவு திருப்தியான பிறகு வண்டியைக் கிளப்பிக் கொண்டே, " உன்னை பார்க்கிற இடத்தில எல்லாம் துப்பாதனு சொன்னா நீ கேக்கவா போற, அடுத்தவங்களுக்கு தொந்தரவா இல்லாம எங்கனாலும் போய் துப்பு", என்று சொன்னதை அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மீள்தல் நல்லது... தொலைதல் அதனினும் நல்லது...!




நான்கைந்து வயதுகளில் திருமணம், திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது என்பது, எதெது எதெதற்காக என்ற அறிவுத் தெளிவோ, சமுதாயப் பார்வையோ இல்லாமல் வெறும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் என்பதற்காகவே குழந்தைகள் கலந்து கொள்ள விரும்புவர். தங்கள் வயதை ஒத்த குழந்தைகளுடன் விளையாடுவதும், வேடிக்கைப் பார்ப்பதும், பலூன், பொம்மை, பீப்பி, கன்னத்தில் சின்னத்துண்டை பிய்த்து ஓட்டியதுடன் கையில் கடிகாரமாகக் காட்டப்படும் சவ்வு மிட்டாய், போன்றவற்றில் சிலவற்றையாவது அம்மாவை அனத்தி வாங்கிக் கொள்வது போன்ற இன்ப நிகழ்வுகளுக்காகவே கொண்டாட்டங்கள் கூடுதல் வண்ணங்களை அளிக்கும்.

மதுரை மதனகோபால சுவாமி கோவிலில் நெருங்கிய உறவினரின் திருமணத்திற்காக கைக்குழந்தையான என் தம்பியுடன், நான்கரை வயதான என்னையும் அழைத்து சென்றிருந்தார் அம்மா. நான் வழக்கம் போல, பெரியம்மா, அத்தை மகள்களுடன் கூட்டமாக இருந்த இடத்தை விட்டுத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்தக் கோவிலில் உள்ள யானை சிற்பத்தின் மேலேறி உட்கார்வது, தூண்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஓடிப்பிடித்து விளையாடுவது என்று இருந்தது சிறிது நேரத்தில் அலுப்பைத் தந்தது. அம்மா இருக்கும் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்களா என்பதை மட்டும் சோதித்துக்கொண்டு, கோவிலின் முன்புறத்திற்கு சுதா, ஜோதி உடன் வந்தேன். அது ஒரு பிரதான சாலை. அப்படியே மெதுவாக நடந்து கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நகர்ந்ததில், ஒரு இடத்தில் மணமகன், மணமகள் அமர்ந்து ஊர்வலம் சென்ற வண்டியைப்பார்த்தோம். 'ஏய் இந்தாப் போறாங்க பொண்ணு, மாப்பிள்ளை', என்று ஏதோ புதிதாக கண்டுபிடித்ததைப் போல கத்திக் கொண்டே அந்த வண்டியின் பின்னால் சென்ற கூட்டத்தில் முண்டியடித்து வெற்றிகரமாக மணமக்களின் முகத்தைப் பார்த்த பொழுது தோற்றுப் போயிருந்தேன். அந்நியமான முகங்களைக் கண்ட நொடியில், அனைவரையும் இடித்துக் கொண்டு போராடிக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தால், அவர்கள் இருவரையும் காணவில்லை. ஊர்வலத்துடன் வந்ததில், எங்கு இருக்கிறேன் என்பது கூட தெரியாமல் விழிக்கிறேன். முடிந்த அளவு நான்கு திசைகளிலும் ஓடி, ஓடி ஓரளவு தூரம் வரை சென்று தெரிந்த முகம் அல்லது அந்தக் கோவில் ஏதாவது தென்படுகிறதா என்று தேடுகிறேன். பத்து பதினைந்து நிமிடத்தில் சம்பந்தமே இல்லாத பிரதேசத்தில் மாட்டிக்கொண்டது போன்ற பீதி. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது நான் நின்று கொண்டிருக்கும் சாலை, காலையில் கிளம்பிய இடத்தில் இருந்த சாலை அல்ல அது என்பது மட்டும் தெரிகிறது. பயத்தில் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பிக்கின்றது. அவ்வளவு தான், இனி வீட்டுக்கே போக முடியாது, யாரையும் பார்க்க முடியாது என்றெல்லாம் உள்ளேயும் ஓடத்தொடங்க,  அம்மா,அம்மா என்று தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருக்கிறேன்.

ஏழு, எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஏதோ கூடையுடன் சென்று கொண்டிருந்தவள், 'ஏன் அழுகிற?' என்றாள். ' இங்க கல்யாணத்துக்கு வந்தேன், காணாம போயிட்டேன், அம்மாட்ட போணும்', என்று கண்ணீரின் ஊடே சொல்லியதைக் கேட்டவள். 'பக்கத்தில யாராவது போலீஸைப் பார்த்து சொல்லு, அவங்க கூட்டிட்டு போய் விட்டுருவாங்க', என்கிறாள். அந்தக் காலை நேரத்தில் யார் யாரோ நடந்தும், கடந்தும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  'எனக்குத் தெரியாது, நீதான் போலிஸ் கிட்ட கூட்டிட்டு போகணும்', என்றவாறே அவள் அணிந்திருந்தப் பாவாடையை இறுக்கப் பிடித்துக் கொண்டேன். பயந்து போன அவள், 'விடு, விடு, எங்க வீட்டுக்குப் பால் வாங்கிட்டுப் போகனும்', என்று கத்திப் போராடுகிறாள். அவள் பால் வாங்கிக்கொண்டு செல்வதை விடவும், எனக்கு என் அம்மாவைப் பார்ப்பதே பெரியதாகவும், தீவிரமாகவும் இருந்ததால், எவ்வளவோ அவள் முயற்சித்தும், அவளை விட பாதி வயதேயான என் கைகளின் பிடியை தட்டி விட்டு, அவளின் பாவாடையை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில், அவள் அழுகின்ற நிலைமைக்குப் போன பொழுதே, சற்று தள்ளி இருந்த டீக்கடையில் ஒருவர் அருகில் வந்து, 'என்ன ஆச்சு, யார் நீங்க', என்றார். அவள் அரைகுறையாக நான் சொன்ன விவரத்தோடு, கூடுதலாக அவளை நான் விட மறுப்பதையும் கண்ணீரோடு கூறினாள். கல்யாணமண்டபம் பெயரைக் கேட்ட அவரிடம், 'தெரியாது', என்றேன். 'சரி, நான் கூட்டிட்டுப் போகிறேன், அவளை விடு', என்றதும், கைகளை அவளின் பாவாடையிலிருந்து எடுத்து விட்டு, டீக்கடைக்குள் சென்றேன்.

பித்தளையில் செய்யப்பட்ட செவ்வகமானத் தட்டின் ஒரு முனையில் டீ, காபி ஆற்றிக் கொடுத்துக் கொண்டே, என்னை இன்னொரு முனையில் உட்கார வைத்தார். நான் அந்த வீதியில் செல்லும் முகங்களை எல்லாம் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையே கடையில் கேட்ட சிலரிடம் வீட்டின் முகவரி, அப்பா பணிபுரியும் இடம் என்று அனைத்தையும் தெளிவாகவே சொன்னேன். மாலை வரை, யாரும் வராவிட்டால் அருகில் உள்ள போலிஸ் ஸ்டேஷனில் விட்டுவிடுமாறு சிலர் டீக்கடைக்காரரிடம் ஆலோசனை வழங்கினர். நன்கு ஆற்றிக் கொடுத்தக் காபியை சூடாக தான் நான் குடிப்பேன் என்று சொன்னதைக் கேட்டு, முடிந்த அளவு என்னை சீக்கிரமாக சேர்ப்பிக்க வேண்டியவர்களிடம் சேர்த்து விட வேண்டும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். நேரம் சென்று கொண்டே இருந்தது. ஓரளவு தைரியம் அவர்கள் பேசியதில் வந்து விட்டாலும், உடனே அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்த நேரத்தில் சைக்கிளில் கடந்துக் கொண்டிருக்கின்ற முகம் பரிச்சயமான ஒன்றாக தோன்றியது. சாலையை மட்டுமே கர்ம சிரத்தையாக பார்த்து ஓட்டிக் கொண்டு சென்ற அந்த நபர், மணி மாமா.( அம்மாவின் சின்னம்மா மகன்) உடனே அத்தனை சக்தியையும் திரட்டி 'மணிமாமா', என்று கத்தியக் கத்தலில் உடனே திரும்பிப் பார்த்து, சைக்கிளை அப்படியே நிறுத்தி விட்டு அருகில் வந்தார். ' நீ இங்கயா இருக்க, அங்க எல்லாரும் உன்னைக் காணாம தேடிட்டு இருக்காங்க', என்றவரிடம், உயிர்ப் பிழைத்தப் புன்னகையுடன் 'விளையாடிட்டே வந்ததில சுதாவும்,ஜோதியும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க', என்பதைக் கேட்டுக் கொண்டே, டீக்கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு, சைக்கிளின் முன் பக்கத்தில் உட்கார வைத்தார் மாமா. இரண்டு தெரு சுற்றி விட்டு, கோவிலின் அருகே வந்த பொழுது, தம்பியை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த அம்மாவின் கண்களும், முகமும் அழுதழுது சிவந்திருந்தன. உடன், அம்மாவின் அம்மா, பாட்டி, அத்தை, மற்றும் பல உறவினர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டனர். ' எங்க போன, ஏன் இந்த இடத்தை விட்டுட்டுப் போன, இவ்ளோ நேரம் யார் பத்திரமா பார்த்து இருந்தா ,,,,, இது போக வேறொரு உறவுக்கார பெண், 'போட்டு இருந்த தங்க நகை பத்திரமா இருக்கா பாருங்க', என்றெல்லாம் பேசிக்கொண்டே இருந்தனர். நல்ல அடி கிடைக்கப் போகிறது அம்மாவிடம் என்று பயந்ததிற்கு மாறாக, 'நல்ல வேளை கிடச்சுட்ட', என்ற திருப்தியில் கையை இறுகப் பற்றிக் கொண்டார் அம்மா.

அம்மாவின் அம்மாவும், பாட்டியும், ' நீ பாட்டுக்கு காணாம போயிட்ட, உங்க அப்பாவுக்கும், பாட்டிக்கும் (அப்பாவை பெற்றவர்) யார் பதில் சொல்றது', என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். 'அடடா, கடைசில இங்க இருக்கிற ரெண்டு பேருக்காக தான் என்னை கண்டுபிடிச்சதை சந்தோஷமா சொல்றாங்க', என்று எண்ணி உள்ளேன். இப்பொழுது யோசிக்கும் பொழுது அவர்கள் கவலை எல்லாம் அவர்களின் வீட்டுப்பெண் கஷ்டப்படக்கூடாது என்பதே முதன்மையாக இருந்தது தெரிகிறது.

 கடந்த சில வருடங்களாக அந்தக் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம், அதன் அருகே உள்ளே தெருக்களில், காலாற ஒரு நடை நடந்து விட்டு, அழுதுக் கொண்டு நின்ற இடங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன். நான்கைந்து வயது பெரியவளான, சம்பந்தமே இல்லாமல் என்னிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்ட அந்த அக்கா இதே மதுரையில் வசிக்கக் கூடும். அக்கறையுடன் நன்றாகவே ஆற்றிக்கொடுத்த காபிக்கு நன்றி சொல்ல, முகம் முற்றிலும் மறந்து போன அந்த டீக்கடைக்காரரைத் தேடுகிறேன். டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை புதிதாய் வேறேதும் கடைகள் அந்த இடத்தில் வந்திருக்கலாம்.

கொண்டாட்டங்களில் இது போன்று நடைபெறும் சங்கடங்களை மட்டுமே சுமந்த நிமிடங்கள், அந்தக் குறிப்பிட்ட திருமணத்தை, திருவிழாவை, நம் மனதிற்குள் பிரத்யேக இடம் பெற்று அமர்த்தி வைக்கின்றன. எதையுமே எதிர்பாராமல் விழாவிற்கு சென்றாலும் கூட வெறும் மகிழ்ச்சியை மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பவையாக விழாக்கள் இருப்பதில்லை. சின்ன சின்னக் குறைகளிலிருந்து, பொருட்கள் தொலைதலிலிருந்து, சமயங்களில் காணாமல் போதல் வரை எதிர் பார்ப்பிற்கு நேர்மாறான வித விதமான வலிகளும் கலந்தே நிரப்புகின்றன விஷேச நாட்களை. எஞ்சிய சாதாரண நிகழ்வுகள் எல்லாம் ஆவியாகிப் போக மகிழ்ச்சியுடன் கூடிய வலி, வலியுடன் கூடிய மகிழ்ச்சி அடைந்த நிலைகள் மட்டுமே உப்புப் பாறைகளாக விதவிதமான வடிவங்களுடனும், குறிப்பகளுடனும், நமக்கானப் பக்கங்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

தொலைதல் என்பது விரும்பித் தொலைகின்ற பொழுதும், தெரியாமல் தொலைகின்ற பொழுதும், மீண்டும் கண்டடையும்/கண்டெடுக்கும் வரை அபூர்வமாகவும், சமயங்களில் அற்புதமாகவும்  அனுபவங்களை நம்மில் விட்டு செல்லும். தொலைந்து மீள்தலில், புதிதாய்ப் பெறப்படுபவை எந்த ஏட்டுக்கல்வியும் போதிக்காததாய் இருக்கும்.

 (மார்ச் 1 - 15...குங்குமம் தோழியில் வெளியானது)