வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நானும் கேமராவும் மற்றும் பலரும்! :)

புகைப்படம் என்றாலே பலரையும் போலவே  சிறுவயதில் அதிகப் பிரியம். இத்தனைக்கும் நூறு போட்டோக்களில் ஒன்றில் தான் எனக்கே பிடிப்பது போல இருப்பேன். விஷேச வீடுகளில் புகைப்படக்காரர் பெரிய கதாநாயகனாக கருதப்பட்ட காலங்களில், போட்டோ எடுப்பதை அபூர்வமான வித்தை என்று நினைத்திருந்தேன். அட்டென்சனில் நின்று, சிரிப்பை அடக்கிக் கொண்டு, பெருமை பொங்க பல வீட்டு விஷேசங்களின் பழைய புகைப்பட ஆல்பங்களில் இன்றும் இருக்கிறேன். :)

பனிரெண்டாம் வகுப்பில் பேர்வெல் அன்று காலையிலேயே ஆரம்ப வகுப்பிலிருந்தே உடன் படித்த தோழி தமிழரசி கொண்டு வந்த கேமராவே, முதன் முதலில் நான் உபயோகித்தது. எங்கள் தோழிகளுக்கு நம்மை நம்பி கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற நினைப்பே, பிரிவுக்கு பதில் மகிழ்ச்சியை அளித்தது.

 'உள்ளே பிலிம் எல்லாம் இருக்குமாம் ல, போட்டியா?', என்றதற்கு, 'ம்ம், ப்ளாஷ் மட்டும் அண்ணன், அப்புறம் கொண்டு வர்றேனுச்சு', என்றாள்.
'என்னாது ப்ளாஷ் தனியாவா?? நெனச்சேன், உன்னை நம்பி கேமரா கொடுத்தப்போவே, கடைசில டப்பா கேமராவா?', என்றதற்கு சற்று ரோஷத்துடன் 'அதெல்லாம் நல்லா விழும்', என்றவள், திருப்பி திருப்பி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினோரு மணி வாக்கில் அவள் அண்ணன் வந்து ப்ளாஷ் பொருத்தி, இரண்டு புகைப்படங்கள் எடுத்து விட்டதாக சொன்னாள்.

குறிப்பிட்டக்  கட்டத்துக்குள் உருவங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு,'அப்படி நில்லு இப்படி நில்லு, கையை சேர்த்து வை', என்றெல்லாம் சொல்லிக் கொண்டே மாறி மாறிப் புகைப்படங்கள் எடுத்து தள்ளினோம்.

மற்ற தோழிகள், ஆசிரியைகள், வகுப்பறை, மைதானம், தோட்டம் என்று சுற்றி சுற்றி 38 பிலிம் களையும் காலி செய்தோம்.
அடுத்த நாள் டெவெலப் செய்த பிறகு பார்த்ததில் பத்து போட்டோக்கள் வரை மட்டும் ஓரளவு தெளிவுடன், மீதி அனைத்தும் என்ன என்றே சொல்லமுடியாதபடியும் இருந்த லட்சணத்தைக் கண்டு, அந்த பத்தை மட்டும் பிரிண்ட் போட சொன்னோம். வாங்கிப் பார்த்தால், நான் எடுத்ததில் ஒன்றிரண்டில் முழுமையாக விழுந்திருந்தன உருவங்கள். அவள் என்னை விட கில்லாடி ஆதலால், உருவங்களை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மனம் போல  துண்டாக்கி, கட்டிடங்களையும், தோட்டத்தையும் கவர் செய்திருந்தாள். மூன்று பேர் மட்டும் எடுத்த புகைப்படத்தை கூட கழுத்துக்கு மேலே வெட்டியும், பக்கவாட்டில் மூன்றாவதாக நிற்பவளை காணாமல் போக செய்தும் 'இனி போட்டோன்னு நினைத்துப் பார்ப்பீங்க' என்று புகுந்து விளையாடி இருந்தாள். அதோடு, எங்களுக்கு சுயமாக புகைப்படம் எடுக்கும் ஆசை அடங்கிப் போனது.


நமக்கெல்லாம் வராத திறமை என்று சற்று ஒதுங்கி இருந்தப் பிறகு...... மூன்று ஆண்டுகள் கழித்து கேமரா கைக்கு வந்தது....

கல்லூரியில் இறுதி ஆண்டு , நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்காக, மேலூர் அருகில் உள்ள கிராமத்தில் பத்து நாட்கள் கூடி இருந்தோம். தினமும் மாலையில் ஊர் மக்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு நாள் மட்டும், அருகில் முகாமிட்டிருந்த மாணவர்களில் சிலரை மட்டும் அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒருங்கிணைப்பாளர் கூறி இருந்தார். 
 
 
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க காத்துக் கொண்டிருக்கையில்,
ஜீவா என்ற ஜூனியர் மாணவி கேமரா வை, கையோடு எடுத்து வந்திருந்தாள். எதுக்கு என்றதற்கு
'பிலிம் இல்ல, ப்ளாஷ் மட்டும் அடிக்கும், சும்மா ஒரு கெத்துக்கு ',
'அப்படிங்கிற....... ம்ம்...' என்று பெரிய மடத்தனத்திற்கு சம்மதித்தேன்.

பத்து மாணவிகள் தள்ளி பேராசிரியை அமர்ந்ததால், இவள் கவரை விட்டு, கேமராவை எடுக்கவே இல்லை. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. யாரெனப் பார்த்தால், சில நாட்களுக்கு முன்பு எங்கள் நிகழ்ச்சியை கிண்டல் செய்த ஒருவன் தான் பிரதானமாக செயல்பட்டுக் கொண்டிருந்தான், 'எடு கேமரா வை', என்று அவள் யோசித்தும் வலுக்கட்டாயமாக  எடுக்க செய்தேன்.

அவன் வந்த காட்சியில், ஒரே நிமிடத்தில் ஏழெட்டு  ப்ளாஷ் கள் அடித்த குரூர திருப்தியுடன் இருக்கையில், பக்கத்திலிருந்து எனக்கு கொடு, என்று கேட்கும் குரல்களின் எண்ணிக்கை அதிகரித்தன. ஒரு மணி நேரத்தில், ப்ளாஷ்  போய் விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இருபது மாணவிகள் வரை அடித்துத் தீர்த்தனர்.

இரவு உணவு முடிந்ததும், அனைத்து மாணவிகளும் உறங்குவதற்கு சென்ற பிறகு, எனக்கு சற்று அருகில் தனது விரிப்பில் அமர்ந்த பேராசிரியை, இன்னொரு பேராசிரியை 'அந்த பசங்க பொலம்பிட்டு போறாங்க, இத்தனை ப்ளாஷ் அடிச்சதுக்கு நாலு போட்டோவாச்சும் எங்களை எடுத்திருக்கலாம்னு', வருத்தப்பட்டு தெரிவித்துக் கொண்டிருக்கையில், 'இதில என்ன இருக்கு', என்று எண்ணியவாறே  உறங்கிவிட்டேன்.
 

அடுத்த நாள் காலை உணவிற்கு பிறகு கூடும் கூட்டத்தில் அன்றைய தினத்திற்கான எங்களின் பணி தெரிவிக்கப்படும். அதற்காக காத்திருந்தால், மிகுந்த கோபமான பார்வையுடன் வந்து அமர்ந்தார் பேராசிரியை .......வாயைத் திறந்ததும் சரவெடி தான்....... ' பத்து பசங்களை பார்த்திட்டா என்ன செய்றோம்னே தெரியாதா? இவ்ளோ அசிங்கமாவா நடந்துக்குவீங்க?, இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் எல்லாம் கேம்ப் க்கு வேணாம், இப்போவே வீட்டுக்கு போயிடுங்க', என்று தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வாட்டி எடுத்து விட்டார்.


எனக்கோ உள்ளே போயும் போயும் இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்காகவா தண்டனை என்று ஓடிக் கொண்டு இருந்தாலும், எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போற மேடம், சமயங்களில் அவர் இருந்தாக வேண்டிய இடத்திற்கும் என்னை நம்பி அனுப்புபவர் இடம், இனி எனக்கு கெட்ட பெயர் தானோ என்று பயமும் ஒட்டி இருந்தது. 'யார் யார் எந்திரிங்க', என்று இரண்டாவது முறை எச்சரித்ததும், கேமரா சொந்தக்காரி உடன் நான்கு பேர் நிற்க, மீண்டும் வசவை ஆரம்பித்தார்.

 தாங்க முடியாமல் எழுந்தேன், 'உனக்கு கொடுத்த வேலைக்கு இன்னுமா கிளம்பாம இங்க இருக்க ....', என்று என்னை நோக்கி தொடர்ந்தவரிடம் இருநூறு மாணவிகள் கூடி இருந்த கூட்டத்தில் வழக்கம் போல கடைசியில் இருந்த நான் அருகில் சென்றேன், குரலைத் தாழ்த்தி அவரின் காதுகளில் 'கேமராவை எடுக்க சொல்லி, முதலில பத்து ப்ளாஷ் அடிச்சது நானே தான், விளையாட்டுத் தனமா தான் செய்தேன், அதையே இவங்களும் பாலோ செய்தாங்க. இவ்ளோ சீரியஸ் ஆகும்னு தெரியாது, மத்தபடி அவெங்கள எல்லாம் பிடிச்சிருந்தா பிலிம் போட்டு தானே எடுத்திருக்கணும்?  என்றேன்.


முகத்தில் இருந்த கடுமை குறைந்தது. 'சரி, நீ கிளம்பு', என்றாவறே, மூன்று அணிகளுக்கும் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லியவாறே, அவருடைய வேலைகளில் மூழ்கிப் போனார்.

ஜீவா பின்னாலே வந்து, 'என்ன சொன்னீங்க மேடம் கிட்ட', என்றாள்
'உண்மையை சொன்னேன்'. என்றேன்.

நீதி: 1. சரி எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதில்லை. 2. துணிஞ்சு ஏதாவது செய்தால், எதிர் வருவதை ஏற்றுக் கொள்ளும் திறன் வேண்டும், அப்படி இல்லை என்றால், நம்மை பற்றிய மாறாத நல்ல அபிப்ராயம் உள்ளவர்களிடம் மட்டும் சேட்டை செய்யலாம் :P


புதன், 21 ஆகஸ்ட், 2013

நேற்றில் வாழ்வோருக்காக!பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல நிலைகளை நாம் கடக்கிறோம், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு செல்லும் பொழுதும், சமயங்களில் அந்த நிலைகளில் முழு ஈடுபாடு இல்லாத பொழுதும், வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த இடைவெளியை நிரப்புபவர்கள் இன்பத்தாலும், துன்பத்தாலும் வரைந்து செல்கிறார்கள்.

தனியே எழுதி வகைப்படுத்தினால், துன்பத்திற்கு, இணையான அளவு இன்பத்தை கடந்து வந்திருப்போம். இயற்கை சமமாகவே நமக்கு பகிர்ந்து அளிக்கிறது.

இதோ, கடந்து கொண்டிருக்கின்ற இந்த காலமும் கூட நாளை திரும்பி பார்க்கும் பொழுது தவற விட்ட ஒன்றாக இருக்கலாம்.
இன்பம் என்ற பகுதியே, கடந்த காலத்தில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. திரும்ப வராததாலேயே முடிந்த நாட்கள் சிறப்பு பெற்றவை.

தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டுக் கொண்டும், பிறரை திட்டிக் கொண்டும் காலத்தை கடத்துபவர்கள் பெரும்பாலும் கடந்த காலத்தில் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் மகிழ்ச்சி அங்கேயே தேங்கியிருப்பதாக நம்புகிறார்கள்.

இன்றைய உணவின் சின்ன சொதப்பலில் கூட நேற்றைய அசத்தல் உணவின் நினைவில் வாழ்கிறோம்.


நிகழ் காலத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பவர்கள் யாரென பார்த்தால், இவர்களில் பலரும், ஏதேனும் ஒரு செயலிலோ அல்லது ஒரு மனிதரிடமோ முழுமையாக தம்மை ஒப்புவித்து தற்காலிகமான மகிழ்ச்சியில் இருப்பவர்கள். விரைவில் அவர்களும் அடிவாங்கி, கடந்த காலத்தை ரசிக்கின்ற கூட்டத்தினருடன் இணைந்து கூட்டணியை வலுப்படுத்துவர். 


நிகழ்ந்து கொண்டிருப்பதை, ஏற்று கொள்ளுதல்... வருவதை புலம்பாமல் அனுபவித்தல் என்று இருப்போமேயானால் எதையும் எதிர் கொள்ளலாம். நம்மை நோக்கிக் கற்களை வீசும் பொழுது, கவசம் அணிந்து கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முடியாததாலேயே பலரும் ஆன்மிகம் பக்கம் சாய்கின்றனர். இங்கு ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். மதம் என்பது வேறு. ஆன்மீகம் என்பது வேறு. மதவாதிகள் ஆன்மீகத்தை போதிக்கின்ற நேரங்களில் எல்லாம் நம்மை குழப்பி விடுகின்றனர். மதவாதிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடு, விதி முறைகளோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். ( இந்த மதவாதிகள் ஆன்மீகத்தை போதிப்பதற்கு பதில், மதம் சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பரப்பினால் நல்லது)

ஆன்மீகவாதிகளுக்கு என்று பெரிய கட்டுப்பாடோ, விதி முறைகளோ இருப்பதில்லை. வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள், ஆதலால் புலம்பல் இல்லாமல், எளிதாக, நடக்கின்ற எதையும் கடந்து செல்லும் திறன் பெற்றவர்கள். வருகின்ற பாதையில் வரும்
இன்பத்தைப் போலவே துன்பத்தையும் ஒரே மாதிரியாக எதிர் கொள்ளும் திறன் பெற்றவர்கள். வாழ்க்கையைப் பற்றி புரிதல் இருப்பதின் காரணமாக, சோகமோ, கவலையோ எரிச்சலோ, எதனையுமே எளிதாக கையாண்டு கொண்டே, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரிந்த வல்லமை பெற்றவர்களே ஆன்மீகவாதிகள். இந்த வகையில் பார்த்தால், பகுத்தறிவுவாதிகளும் ஆன்மீகவாதிகளே!

ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்று உண்மையை கடினமான முறையில் தராமல், எளிமைப்படுத்தி தரும் ஆன்மீகவாதிகளின் பேச்சும், எழுத்தும் எளிதில் பிடித்துப் போகின்றவையாக இருக்கின்றன.

பகுத்தறியும் பேச்சினை, கேட்பது, படிப்பது போன்றவை அந்தந்த நேரங்களில் மனதை மேம்போக்காக சுத்தம் செய்ததோடு நின்றுவிடும். உகந்தது/உசிதம் என்று முடிவு செய்தவற்றை, மிகக் கடினம் என்ற பொழுதிலும், தேவைப்படும் இடங்களில் பின்பற்றினால், நமக்கு உள்ளே மட்டமின்றி பின்னாலும் ஒரு ஒளி வட்டமிடும்! :)புதன், 14 ஆகஸ்ட், 2013

அவ்வா!

'இந்த பொம்பளை பிள்ளையை பெறுரதுக்கா இத்தனை ஆஸ்பத்திரி ஏறி இறங்கினா', என்று நான் பிறந்த அன்று எனது பாட்டி சலித்துக் கொண்டதாக இன்றும் சொல்லும் சொந்தங்கள் உண்டு.

ஒரு வயதில், இடுப்பில் என்னை தூக்கி வைத்துக்கொண்டு, இட்லியை ஊட்டிவிடும் நேரங்களில் தேங்காய் சட்னியுடன் என்றால் துப்பி விடுவதும், காரமான சட்னி கலந்து என்றால் மென்று முழுங்குவதுமான காட்சிகளை, சமீபத்தில் சந்தித்த எங்கள் பக்கத்து வீட்டில் குடி இருந்த ஒரு அம்மா நினைவு வைத்து சொன்னார்.
 
தாத்தா காவல் துறையில் பணி புரிந்தாலும், மாடுகளை வைத்து சற்று சிறிய அளவில் பண்ணையை பராமரித்து, சுயமாக சம்பாதித்து சேர்த்து வைத்ததாலோ என்னவோ, மிரட்டும் பேச்சும், மிடுக்கான பார்வையும் தான் பாட்டியின் அடையாளம்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் காலங்களில் வலு கட்டாயமாக என்னை தூக்க சொல்லி, கடைக்கு அழைத்து சென்ற நாட்களிலிருந்தே பாட்டியின் முகம் நினைவில் இருக்கிறது. அந்த நாட்களில் தூங்க செய்வதற்காக பாட்டி சொன்ன சில கதைகளை மட்டுமே, இன்றும் எப்பொழுதாவது வருணுக்கு சொல்கிறேன்.

பல வருடங்கள், எங்கள் இருவருக்கும் பொதுவான அறையே இருந்தது. பள்ளியில் விளையாடி களைத்து வரும் நாட்களில் எல்லாம் காலை இதமாக பிடித்து விடுவார்.

எண்பது வயதிலும் தாத்தாவிற்கும், பாட்டிக்கும் தனியே சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு உடலில் தெம்பு இருந்தது. அசத்தலான சமையலை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் பாட்டியின் சாமர்த்தியம், என் ஆச்சர்யங்களில் ஒன்று. தீவிரமாக சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் பொழுது, ஜீனியை எடுத்து மாவில் கொட்டி, சேர்த்து பிசைய சொல்லி பூரி போட்டு தர சொல்லும் என் கொடுமையை சகித்துக் கொண்ட ஜீவன்.

ஒரு முழு ஆண்டு தேர்வு விடுமுறையின் ஆரம்ப நாளில் பெரியவளானதை அறிந்து, வீட்டில் சொன்னால், இரண்டு மாதமும் சிறை பட வேண்டும் என்று புரிந்து, இயன்ற அளவு, ஊரெல்லாம் சுற்றி, ஓடி ஆடி விளையாடிவிட்டு, ஓய்ந்த வேளையில் பாட்டியிடம் வந்து தான் முதலில் சொன்னேன். அந்த நாட்களில் அம்மாவை விட பாட்டியிடம் பல மடங்கு ஒட்டுதல் அதிகம்.


பைசா தேவைப்படும் நேரங்களில் எல்லாம், எந்த அட்டையும், பாஸ்வேர்ட் ம் கேட்காத  ATM ஆகவும் இருந்தார்.

பொழுது போகாத நேரங்களில் இழுத்து உட்கார வைத்து, முற்றிலும் வெள்ளிக் கம்பிகளாக சுருண்டிருக்கும் பாட்டியின் கூந்தலை வகிடு எடுத்து, இரண்டாகப் பிரித்து, இரட்டை சடை போட்டு கிளிப் எல்லாம் மாட்டி விட்டு அழகு பார்ப்பேன். அப்படி ஒரு நாள் வாசலில் உட்கார்ந்து  தலை அலங்காரம் செய்து கொண்டிருந்த ஒரு நாளில்,
' இதென்ன, இந்த கிறுக்குபய அங்க இருந்து இங்கயே பார்த்துட்டே போறான்' என்றதும், நிமிர்ந்து பார்த்தேன், ஒருவன்  சைக்கிளில் கடந்து போயிருந்தான். ' இது கூடவா தெரியல? இரட்டை சடை போட்டு, இம்புட்டு அழகா ஒரு புது பொண்ணுன்னு உன்னை தான் பார்த்திருப்பான்', என்று நான் சொன்ன நொடியில், என்னை விரட்டி விரட்டி அடிக்க வந்தது தனிக் கதை.

கல்லூரியில் படிக்கும் பொழுது தவறாமல் பத்து நாட்கள் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்களில் கலந்து கொள்வேன். திரும்பி வரும் பொழுது, 'இந்தக் கழுத இல்லாம வீடே விரீர்னு இருக்கு', என்று அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளில் சொல்லும் நேரங்களில், வெளிக்காட்ட தெரியாத முகபாவனைகளால் மையமாக சிரித்து விட்டு சென்றிருக்கிறேன்.

பொதுவாக 'அவ்வா' என்று அழைத்தாலும், மிகவும் சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் 'அழகம்மா' என்று பெயரைசொல்லி அழைக்கும் சிறப்புரிமை எனக்கு மட்டுமிருந்தது. (மொத்தம் பதினாறு பேரன், பேத்திகள் )

மூன்று மாதங்கள் தொடர்ந்து படுக்கையில் கிடந்த பொழுது தாத்தாவும், நானுமே முழுமையாக பாட்டியைக் கவனித்துக்கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு குறைந்து, பேச்சுக் குறைந்து, சம்பந்தமில்லாமால் உளறி, ஒரு கட்டத்தில் அதுவும் நின்று, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு, தைப்பூசம் அன்று அதிகாலையில் எனது கைகளில் தரப்பட்ட இரண்டாவது ஸ்பூன் தண்ணீரை தொண்டைக்குழியிலேயே நிறுத்திவிட்டு, இயற்கையுடன் கலந்தார்.
 
சொல்ல முடியாத பெருந்துயரத்தை சுமந்து திரிந்த நாட்களின் ஆரம்பத்தில், மனதை இலகுவாக்குவதற்காக முதன் முறையாக இணையத்திற்கு வந்தேன்.

இன்றும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பாலும், அக்கறையாலும் நிரம்பிய நல்ல இதயங்களை சந்திக்க நேர்கையில் எல்லாம், என் பாட்டி அவருடைய பணியை சிலருக்கு பிரித்துக் கொடுத்து விட்டே சென்றிருக்கிறாரோ என நினைப்பது உண்டு. :)

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பசுமை நடை... (GREEN WALK)

பேஸ்புக், பிரபல பத்திரிக்கைகள், விஜய் டிவி என்று ஊடகங்கள் மூலம் அறியப்பட்டாலும், கடந்த 21.07.2013, அன்றே  பசுமை நடைக்கு (Green walk) செல்லும், சந்தர்ப்பம் எங்களால் உருவாக்கப்பட்டது. 

மாதம் ஒரு முறை, ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, மதுரையை சுற்றி உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, சிறுவர்கள் உட்பட நூறிலிருந்து, இருநூறு பேர் வரை வாகனத்தில் அழைத்து சென்று, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை பற்றி பேராசிரியர்கள், வரலாறு நன்கு அறிந்தவர்கள், தொல்லியல் நிபுணர்கள் மூலமாக விளக்க செய்து, நாம் நம்மை சுற்றி உள்ளவற்றின் சிறப்பை அறிந்து கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதே இந்த நடையின் நோக்கம். வெற்றிகரமான இந்த நிகழ்வின், இருபத்து நான்காவது நடையில் கலந்து கொண்டோம்.

இந்த நடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடம், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி என்னும் சிற்றூர். மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது.


அதிகாலையில் எங்களை பேருந்து உட்பட, நான்கு வண்டிகள் திணித்துக்கொண்டு சென்றன. மேலூர் செல்லும் வழியில் வரும் பாலத்தில், ஏறுவதை தவிர்த்து, கீழ் வழியாக சென்றால், அரிட்டாபட்டி என்ற பெயர் தாங்கியப் பலகை இடது நோக்கிய அம்புக்குறியிட்டு பாதை காட்டுகிறது. அதன் வழியே சென்றால், சில நிமிடங்களில் ஊர் வருகிறது. மிக குறுகலான சாலை, அதை ஒட்டியே அமைந்திருந்த வீடுகளின் முன்புறம், பாத்திரங்களை கழுவிக்கொண்டும், அடுப்பை ஊதிக் கொண்டும் பெண்கள், பல் துலக்கி கொண்டிருந்த சில சிறுவர்கள், கையில் பையோடு நடந்து கொண்டிருந்த சில ஆண்கள் என்று  இயல்பான காட்சிகளில் வரவேற்றது கிராமம். ஓரிரு தெருக்களின் வழியே ஊர்ந்து சென்ற பேருந்து, சில நிமிடங்களில், கண்மாயை ஒட்டிய இடத்தில் நின்றது. வழியெல்லாம் மரங்களுக்கு இடையே அரைகுறையாக பார்த்துக்கொண்டே வந்த மலையை பேருந்திலிருந்து இறங்கி, ஒரே பார்வையில் நோக்கும் பொழுதே உடனடியாக ஒட்டிக்கொண்டது ஒரு பிரியம்.

சமமான நிலத்தில் சில நூறு மீட்டர்கள் நடைக்குப்பின்பு, பிடித்துக் கொண்டு எளிதாக நடக்க  வேண்டும் என்பதற்காக இரண்டு புறமும் கம்பிகள் ஊண்டப்பட்டு, கீழேயும் கூட படி போல செதுக்கப்பட்டு, தான் எப்படி இருக்கிறோம் என்பதற்கான முன்னோட்டத்தை காட்டிவிடுகிறது மலையின் முகப்பு. உள்ளே சென்றதும் தொடரும் பாதை, ஆங்காங்கே செடிகள், மரங்கள், பாறைகள் என்று நீள்கிறது. பத்துநிமிட பயணத்தில் இருபது படிகளை ஏறி கடந்தால்,  கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பேரமைதியுடன் நமக்காக காத்திருக்கிறது. (இடைச்சி மண்டபம் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.) இந்த கோவில் சிறிய சதுரமான கருவறையில், லிங்க வடிவிலான சிவன் சிற்பத்துடன், சிறிய முன்மண்டபத்துடனும் அழகாக அமைந்துள்ளது. இரண்டு வாயிற்காவலர்கள் சிற்பங்களும், பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மாடங்களில், வலப்புறம் இலகுலீசர், சிற்பமும், இடப்புறம் விநாயகர் சிற்பமும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்துமே எழுத்து வடிவில் அதன் அருகிலேயே உள்ளன.

உட்காருவதற்கு ஏதுவாக இருந்த இடத்தில் ஒலிப்பெருக்கியின் துணையுடன், தெளிவாக அந்த இடத்தைப் பற்றின குறிப்புகளை சுவாரசியமான முறையில் எங்களுக்கு நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

அதன் பிறகு மெதுவாக படிகளில் இறங்கி மீண்டும் வேகத்தைக் கூட்டி மண்ணும், பாறைகளும் கலந்த பாதையில் கவனமாக ஏறி சென்று கொண்டே இருந்தால், வலது பக்கம் திரும்பியதும் வரும் பெரிய ஆலமரத்தையும் கடந்த பின், இயற்கையாக அமைந்த குகையில் சமணர் உறைவிடம், உருவாக்கப்பட்டு இருப்பதையும், அதன் நெற்றியில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். இங்கு, சமணர்கள் தவம் செய்திருப்பதையும் தவிர, வேறு எப்படி எல்லாம் அவர்கள் பொழுது போய் இருக்கும் என்று சிந்தனை பறந்ததை தவிர்க்க முடியவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நம் பாதங்களும் தற்பொழுது படிந்துள்ளது என்ற பெருமிதம் உள்ளே பரவுவதை உணர முடிந்தது. பொது மக்கள், இக்கற்படுகைகள் கொண்ட குகையைப் பஞ்ச பாண்டவர் படுக்கை என அழைக்கின்றனர்.

1. நெல் வெளிஇய் கிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்
2. இலஞ்சிய்எளம் பேராதன் மகன் எமயவன் இவ் முழ உகை கொடுபிதவன்

இவை இரண்டும், இங்கு மேலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளவை. சங்ககாலப் பாண்டியர்களின் பேராதரவில் இக்கற்படுக்கைகள் கொடையளிக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்குகைக்கு வலப்புறத்தில் சுமார் இருபது அடி தொலைவிலேயே பாறையில் மகாவீரர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

ஸ்ரீ திருப்பிணையன் மலைப் பொற் கோட்டுக் கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக் குடியார் ரக்ஷை
- என்ற இவ்வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் இந்த ஊரின் பெயர் பாதிரிக்குடி என்பதும், இம்மலை திருப்பிணையன் மலை என பெயர் பெற்றிருந்தது என்பது நமக்கு தெரிய வருகிறது. மதுரைப் பகுதியில், கி.பி. 9 -10 ஆம் நூற்றாண்டில் சமணம் மறுமலர்ச்சி பெற்று எழக் காரணமாக இருந்த அச்சணந்தி என்னும் துறவியே இச்சிற்பத்தை உருவாக்கி இருக்கலாம்.

இடது புறத்தில் தெரியும், தற்பொழுது தண்ணீர் இல்லாமல், வறண்டு கிடக்கும் ஆனைக்கொண்டான் கண்மாயில் சமீபத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ள தகவல் முக்கியமான ஒன்றாகும்.

வந்த வழியே திரும்பி வந்து, ஒரு சிறிய வெளியைக் கடந்தால், ஆங்காங்கே உச்சியில் தனியாக நின்று கொண்டு  மிரட்டும் வெவ்வேறு வடிவிலானப் பாறைகள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றன.

சற்று, சரிவாக உள்ள நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், திரும்பி பார்க்காமல், சில இடங்களில் நான்கு கால்களாக்கிக் கொண்டு ஏறினால், வேகவேகமாக மூச்சை விட்டுக்கொண்டே, ஓரளவு நன்றாக நின்று கொண்டு கீழே ஏறிக் கொண்டிருப்பவர்களுக்கு குறிப்புகள் கொடுக்கலாம்.

மெதுவாக நடக்க, நடக்க..... சற்று சரிந்து, சில இடங்களில் இயற்கையிலே பிளந்து, திரும்பும் இடங்களில் எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது தொடர்ந்து வந்து கொண்டே இருந்த பாறை. ஏறும் பொழுதே  நெருக்கமாக பேசும் பாறையின் மொழியை பாதங்கள் முழுவதும் உள்வாங்கிக் கொண்டே வர இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டேன் காலணியை. எப்பொழுதும் பேசிக்கொண்டே தான் இருக்கிறது இயற்கை. வெயில், மழை, பனி என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. நமக்கு தான் நேரமும், மனதும் வாய்ப்பதில்லை. :)
எண்ணற்ற காலங்களாக, எத்தனையோ வகையான மனிதர்களை சந்தித்து உறுதியோடு  நீண்டு கொண்டே செல்லும் மலைத்தொடரில், ஊற்று நீர் வடிந்து சென்ற தடங்கள் பல இடங்களில் உள்ளன. (ஊற்று நீர் பாசனம் அவ்வூரில் முன்பு இருந்தது)

மேலே நடந்து கொண்டே சென்ற பொழுது இடது புறத்தில் தூரத்தில் தெரிந்தது, சற்று முன் சென்ற குடவரைக் கோவில். இரண்டு புறங்களும் இயற்கைக் காட்சிகளை தரிசித்துக் கொண்டே காலாற நடக்க, நடக்க, பெரும் புத்துணர்வு காற்று ஐம்புலன்களின் வழியாக உள்ளே கலந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

எங்களை உற்று நோக்கிக் கொண்டே நின்ற சில பனைமரங்களை ஒட்டி தென்பட்ட பாறையில் மெது மெதுவாக,  கீழே இறங்கி, பெரிய வெளியை மிக கவனமாக நடந்து முடித்தால், நாம் உள்ளே நுழைந்த பொழுது கைபிடிக் கம்பிகளுடன் இழுத்துக் கொண்ட படிகள், இனி, உங்களுக்கு எங்கள் வசதி தேவையில்லை என்பது போல பார்த்தன.

குழந்தைகளை மால்களுக்கு அழைத்து சென்று செலவிடும் நேரத்தை விட, மலைகளுக்கு அழைத்து சென்று, வரலாற்றை நேரடியாக அறிய  செய்வது, பள்ளியில் சொல்லித்தராத அவசியமானப் பாடங்களை சொல்லித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

நிறைவான நடையுடன், செறிவான தகவல்களுடன், எளிமையான மனிதர்களுடன் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுது, மதுரையிலேயே இத்தனை ரம்மியமாக கழிந்தது கண்டு பெரும் மகிழ்ச்சியுடன், தொடர்ந்து, இனி வரும் பசுமை நடையில், தவறாமல் கலந்து கொள்வேன் என்று விடை பெற்றேன்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 25 ஆவது பசுமை நடை, கீழக்குயில்குடியில், அரைநாள் கொண்டாட்டமாக நடை பெற உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.

பசுமை நடையில் நீங்களும் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பசுமை நடை,
3 / 351, கார்த்திகா நகர், தணக்கன்குளம், திருநகர்,
மதுரை - 625 006
மின் அஞ்சல் : greenwalkmdu@gmail.com
அலைபேசி : 97897 25202, 97897 80105