ஞாயிறு, 14 டிசம்பர், 2014

டிசம்பர் ஆறு - இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை

கடந்த டிசம்பர் ஆறு, இரவு ஒரு மணியிலிருந்து காலை வரை மருத்துவமனையில் இருந்த சில மணி நேரங்கள்... 

பகல் நேரத்தைப் போலவே உரையாடியபடி சென்றனர் மருத்துவமனை ஊழியர்கள். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எந்த சுணக்கமுமின்றி அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். வெளிநோயாளிகள் இல்லாததால் சற்று வெறிச்சிட்டிருந்தது மருத்துவமனை. பீ.பீ. குளம், வலது புற திருப்பத்திலிருந்து PTR வீடு வரையிலான அந்த சாலை முழுவதும் சீரான வெளிச்சத்துடன், மாலைப் பொழுதைப் போலவே காட்சியளித்தது.  சாலையின் எதிர்புறத்தில் இருந்த வடமலையான் மருத்துவமனையின் இன்னொரு பிரிவின் வாசலின் முன்னே  இருந்த சின்னக்கடையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன். உள்ளே தொடர்ச்சியாக அமர்ந்திருந்த இருக்கை, சௌகர்யமாக இருந்தாலும், எழுந்து நிற்பதும், நடப்பதும், அந்த நேரத்தில் பெரிய இளைப்பாறலாக இருந்தது. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்து காம்பௌண்ட் சுவர் அருகே நின்ற பொழுது உள்ளே செல்லும் பனியின் வேகம், நர்ஸிடம் வாங்கிய பஞ்சை காதில் அடைத்துக் கொள்ள செய்தது. 

இரவை பெரிய அளவில் துளையிட்டு மிதமான வெளிச்சத்தை மின் விளக்குகள் அந்தப் பகுதி முழுவதும் பரப்பி இருந்தன. முன்னால் நின்றிருந்த காவலாளிகள் தங்களுக்குள் ஏதோ தகவலைப் பகிர்ந்த நிமிடத்தில் அவரவர் இடத்திற்கு திரும்பி இருந்தனர். அருகில் இருந்த ATM காவலாளி பத்தடிகளுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அவரது தூக்கத்தை தொலைப்பதற்காக இருக்கலாம். கூர்க்காக்கள் தவிர்க்கின்ற சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். என்னுடைய ஆச்சரியம் இரவில் சரியான தூக்கம் இல்லாதது தான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பல்வேறு பட்ட வயதினர் வெகு சாதாரணமாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்ததை பார்த்ததும், இவர்களின் உடல்வாகு எப்படி ஏற்றுக்கொள்கிறது என்ற சந்தேகம் எழுந்தது.
காபி குடிக்கும் இடத்தில், ஒரு முறை, டீ குடித்துக் கொண்டிருந்தவர் மிகச்சிறிய ஒலியில், மொபைலில் கேட்டுக்கொண்டிருந்த பிடித்தப் பாடலை, ரசிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. மஞ்சள் விளக்கின் ஒளியில் தெரிந்த மரங்களின் அழகோ, வானத்தில் மிதந்த நிலாவோ, கை, முகம் என உள்ளே ஊடுருவிக்கொண்டிருந்த பனியோ வசீகரிக்கவே இல்லை. சால்வையை இறுக்கப் போர்த்திக்கொண்டு, பகலில் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையின் பேரமைதியுடன் நின்று கொண்டிருந்தேன், சில மணி நேரங்களுக்கு முன்பு கடந்த நிமிடங்கள் உள்ளே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. 

# இப்போ... யாவும்; யாவரும் நலம். :)  

ஞாயிறு, 23 நவம்பர், 2014

மழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்)

நேற்று இரவும் பெய்த மழை காற்றிலும் தக்க வைத்திருந்த குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பினோம். மணி ஏழைத் தொட்டிருந்தது.தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் பயணிப்பது வழக்கம் போல பிடித்தமான விஷயம். வலது புறத்தில் மனம் போல விரையும் வண்டிகள், இடது பக்கம் பசுமையின் ஊடே சில ஊர்களின் நுழைவுப் பாதை, அபூர்வமாக தென்படும் குட்டிக் கோவில்கள், சில இடங்களில் தேநீர்க்கடைகள்...... இறுக்கமாக ஒட்டிக் கொண்டது உற்சாகம். வெள்ளை நிறக்கோடு பளீரிட்டு முன்னே இழுக்க, கோட்டில் ஏற்றி செல்வதும், சில நொடிகள் கோட்டுக்குள்ளே செல்வதுமாக மாறி மாறி தொடர்ந்தது. இது மாதிரி சாலையில் சற்று கூடுதல் வேகத்தில் சீராக பயணித்ததில், பெட்ரோல் மிச்சம் பிடித்துவிட்டோம் என அல்ப சந்தோசம் ஏற்படும். :) 

டோல் கேட் வருவதற்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 10 கிமீ க்கு அப்பால், ஏறிச் சென்ற ஒரு பாலத்தின் இடது புறம் சென்று ஓரத்தில் நின்றோம்.  தனித்தனியாக வந்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் பின் அங்கிருந்து இடது புற சாலையில் திரும்பினோம். மழையின் கனிவால் சூரியனும் இதமாய் ஸ்பரிசித்தது. முன்னே விரிந்த சாலையில், இரண்டு பக்கங்களும் பசுமையான வயல்வெளி மலைப் பின்னணியில் கம்பளம் விரித்து வரவேற்றது. எதிரில் வண்டி எதுவும் வராமல் இருக்க  எளிதாக முன்னேறி சென்று கொண்டே இருந்தோம். 3,4 கி மீ க்கு பிறகு வலதுபுறம் திரும்பினோம். உள்ளே நீண்ட மண் சாலை தண்ணீர்த் தேங்கிய ஏகப்பட்ட பள்ளங்களுடன் அழைத்தது. வேகத்தைக் குறைத்து, மெது மெதுவாக சென்றோம். இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது. தண்ணீரையும், மரம், செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே, பள்ளங்களுக்கு ஏற்ப வேகத்தையும் மிக மெதுவாக சென்றதில், மிச்சம் பிடித்த பெட்ரோலை சமன் செய்திருப்போம். :)  

கிட்டத்தட்ட 3 கிமீ கழித்து பிரிந்த இரண்டு சாலைகளில், இடது புறம் திரும்பி ஒரு கோவிலின் முன் கிடைத்த இடங்களில் வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் மலை, கொடுப்பது என்னவோ ஒரே விதமான ஆனந்தத்தை மட்டுமே. ஊருக்குள் சில தெருக்களைக் கடந்து, சிறு வெளியையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டே நடந்த சில நிமிடங்களில் செடிகள் சூழ பிரம்மாண்டமாக நின்ற மலையில் கால் வைத்தோம்................ மழைக்காலத்தில் பாறையின் அழகு கூடி, குளிர்ச்சி ஏறி இருந்த மலை எங்கள் பாதங்களை இழுத்து ஏற செய்தது. 

மலையில், சுக்குநாறி என்ற ஒரு விதமான புல் காணும் இடத்தில் எல்லாம் முளைத்து இருந்தது. ஒன்றை பிய்த்து முகர்ந்தால் சுக்கும், எலுமிச்சையும் கலந்த அற்புத மணம். நடக்கும் இடங்களிலும் முளைத்த புற்களில், எங்களின் பாதங்கள் அழுத்தியதால் உருவான விஷேச மணம் பயணம் முழுவதும் உடன் இருந்தது. இது தான் இப்படி தான் என்றில்லாமல், பெரிதும், சிறிதுமாக, உனக்கென்ன, எனக்கென்ன என்பது போல இருந்த குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள்  பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. பாறைகளின் குணமும், நிறமும் இந்த ஒன்றரை வருட பசுமை நடையில், பாதங்களுக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்திருக்கிறது. மலையைக் கண்டு பிரமித்தாலும், நடக்கும் பொழுது மலைக்காமல் ஏறி இறங்க முடிகின்ற அளவு மலையுடன் நட்பு வலுவடைந்திருக்கிறது. :) 

நடந்து, ஏறி... ஏறி, நடந்து என வந்து சேர்கிறது முதல் படுகை. இங்கு ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. முதலில் சென்ற தளத்தில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை மழை பெய்தாலும், உள்ளே இருந்த சமண துறவிகள் பாதுகாப்பாக இருக்க எத்தனை அருமையான ஏற்பாடு செய்துள்ளனர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் ஆறு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. 

கணிய் நந்தஅ ஸிரிய் இ குல் அன்கே 
தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன் 
கடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய் . என்பது முதல் கல்வெட்டில் கூறப்படும் செய்தி. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுகைகளையும் வெட்டிக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. - இது போன்ற பல தகவல்களை பேராசிரியர் கண்ணன் பகிர்ந்து கொண்டார். 

திறந்த வெளி வகுப்பறை - பசுமை நடையின் ஒவ்வொரு நடையிலும் மலைகளில் அமர்ந்தபடி, ஆகாயம், சூரியன், சற்று தொலைவில் நீர்நிலை, மரம் செடிகள் பார்க்க, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுவாரசியமாக காதில் கேட்க வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பாடமாக மனதில் பதிகிறது. வகுப்பு முடிந்து கீழே இறங்க ஆரம்பிக்கையில் கூடுதல் கவனத்துடன் நடக்க செய்தன பாறைகள். ஆங்கங்கே பதித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், நடையை எளிதாக்கவும், ஓரத்தில் நின்றபடியே பாதுக்காப்பாக பிடித்துக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரசிக்கவும் உதவின. . வாட்டர் வாஷ் செய்தது போல கூடுதலாக பளிச்சிட்ட இயற்கையை சலிக்க சலிக்க கண்களுக்கு விருந்தாக்கி இறங்கினோம்.


வியாழன், 20 நவம்பர், 2014

மழை வருவதற்கு சற்று முன் ஓர் அரிசிக்கடையில்...

நேற்று மாலை அரிசிக்கடையில் கூட்டம் குறையாமல் இருந்தது. ஏழெட்டு பேர் வாங்கிய பிறகே என் முறை வரும். ஏதேதோ யோசனையுடன் காத்துக் கொண்டிருந்தேன். இருபதுக்கு பத்து என உள்ள அறையில், சொருகி வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளுடன் அரிசி மூடைகள், பிரித்து வைக்கப்பட்டிருந்தன. உள்ளே தெரிந்த அறையிலும் பல மூடைகள் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்தன. கடையின் முகப்பில் ஐந்தாறு பேர்கள் தான் நிற்க முடியும். கேட்கும் ரகங்களை சின்னக் கிண்ணத்தில் அள்ளிக்கொண்டு வந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே கடை எங்கும் தூசியுடன் சிந்தி சிதறிக் கிடக்கும் இரண்டு கிலோவிற்கு மேற்பட்ட அரிசியில் எல்லாம் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தேன். 

ஆரம்ப காலத்தில் 25 கிலோ எடையை தாங்கிய அரிசிப்பை தான் வாங்கிக்கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களை நெருங்குகிற போதே அரிசியில் வண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பழைய அரிசி என கேட்டே வாங்கியும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வண்டின் வருகை தவிர்க்க முடியாததாய் இருக்கும். இதைத்தவிர்க்கவே, பத்துகிலோ அரிசி தீரத்தீர வாங்குவது வழக்கம் . 

சில நிபுணர்கள் காண்பிக்கப்படும் அரிசி வகைகளை உள்ளங்கையில் அள்ளி வாயில் போட்டு, தேர்ந்தெடுப்பதை பார்த்தேன் . வெறுமனே மெல்கின்ற அரிசியில் என்ன வேறுபாடு தெரியப்போகிறது, சும்மா வாய் அரவை போட அரிசியை மெல்பவர்கள் பால்யத்தில் தாங்கள் அரிசி தின்ற காலத்தை மீட்டெடுப்பதற்காக இருக்குலாம். :P 

வெளியே மழை வரும் போல இருந்தது. பத்திரமாக அரிசியை கொண்டு போக வேண்டும் என யோசித்தப்படி அரிசியைத் தேர்ந்தெடுத்தேன்.கொண்டு போன கட்டைப்பையைக் கொடுத்து கர்நாடகா பொன்னி அரிசியை போட சொல்லிவிட்டு, தனியாக பச்சரிசி வெண்பொங்கல் வைக்க வாங்கலாமா இல்லை பழைய அரிசியே போதுமா என யோசித்துக் கொண்டிருக்கையில், 'யம்மா, கொஞ்சம் தள்ளுங்க', என்ற குரல். அவ்வளவு நேரம் இருந்த பொறுமை காணாமல் போக சற்று குரலை உயர்த்தி, ' எவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா?  நான் வாங்கிட்டு போனப்புறம் நீங்க இங்கிட்டு வந்து வாங்குங்க', என்றேன். அந்த நபரோ பொறுமையாக, ' நான் இந்த கடை ஓனர்ம்மா', என்றார். அப்பொழுது தான் கவனித்தேன், கழுத்திலும், கைகளிலும் கூடுதல் எடையில் மினுமினுத்துக் கொண்டிருந்த தங்கத்தை. கல்லாவில் இருந்தப் பையனை கவனித்த பொழுது, ' என் பையன் தான்', என்றார் புன்னகையுடன். ' இன்னைக்கு தான் இந்த கடைக்கு வர்றேன், ஆனாலும் நீங்க மொதலயே ஓனர்னு சொல்லியிருக்கலாம்', என்றதும், ' இனி சொல்றேன்', என்றார் அதே புன்னகை மாறாமல். அரிசிக்கு உரிய பணத்தை கொடுத்து, கட்டைப்பையை வண்டியின் முன்னால் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்தேன். சில துளிகள் கைகளை நனைக்க அண்ணாந்து பார்த்தேன். முகத்திலும் இரண்டு துளிகள் விழுந்தன. கண்களை மூடி ஓரிரு நொடி அனுபவித்து விட்டு, ' இந்த அரிசிக்கடை அண்ணனுக்கு தானே இது, கொஞ்சம் பொறு, அஞ்சே நிமிஷம் எங்க பேர் எழுதின அரிசியை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போயிருவேன்,  அதுக்கப்புறம் ஆரம்பி', என்று என் குறுகிய ஒப்பந்தத்தை மதித்த மழை வீட்டை அடையும் வரை அமைதி காத்தது. :) 

புதன், 15 அக்டோபர், 2014

ஐம்பது ரூபாய் தாள்!

' இந்த ஃபிப்டி ருபீஸ்  நோட்டில வொயிட்டா இருக்க ஏரியா ல, 50 னு எழுதலயாம், வேற நோட்டு கேட்டாங்க', என்றபடி வந்தான் வருண். அருகில் இருந்த வீட்டிற்கு மாவு வாங்கி வருவதற்காக கொடுத்தனுப்பிய பணம் அது. அவன் நீட்டிய தாளை வாங்கி, சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தேன். தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் நம் தலையில் கட்டிவிட்டு சென்றது தெரிந்தது. தாளின் இடது ஓரத்தில் சிறிய அளவில் காந்தி மட்டுமே தெரிந்தார், 50 என்ற எண் தெரியவில்லை. தாள் வழக்கத்தை விட சற்று மெலிதாக, நடுவில் இடைவெளி விட்டுத் தெரியும் RBI வெள்ளிக் கோடுகள் இல்லாமல் இருந்தது. அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நடுவில் பெரிதாக தெரியும்  50 என்ற எண்ணிற்கு அருகே வரையப்பட்டுள்ள எளிமையான பூக்கோலத்திற்கு பதிலாக சற்று சிக்கலான பூ வரையப்பட்டு இருந்தது. வரைந்த உள்ளம், "நீங்க என்னடா பூ வரைஞ்சிருக்கீங்க, நான் வரையறேன் பாரு",  என்று சவாலாக எடுத்து வரைந்ததோ  அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கவனமாக தெரிந்து கொண்டு தவிர்ப்பதற்காக வரைந்ததோ என தெரியவில்லை. ஐம்பது ரூபாய் தாளில் கள்ள நோட்டு அடித்து, புழக்கத்தில் விட்டதன் மூலமாக 50 ரூபாய் அந்த மனிதரின் வாழ்க்கையில் எத்தனை முக்கியம் பெற்ற ஒன்றாக இருந்திருக்கலாம் என நீண்டது எண்ணம். மக்கள் பலரும் சோதனை செய்து வாங்காமல், பணப்பையின் உள்ளே வைத்து விடுவர் என்ற பலத்த யோசிப்பிற்கு பிறகு அச்சடித்து இருக்கலாம். எத்தனையோ கைகள் மாறி வந்ததின் அடையாளமாக இலேசாக அழுக்கு ஏறியிருந்த தாள், மதிப்பிழந்து நிற்பதை, பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் மாவு தீர்ந்துவிடும். வேறொரு தாளை வருணிடம் கொடுத்தனுப்பினேன்.அந்த புதிதாக பார்த்த பூவை மட்டும் கோலம் போடுவதற்காக வரைந்து பத்திரப்படுத்திக் கொண்டு, போலித் தாளை கிழித்து போட்டேன்.  

புதன், 8 அக்டோபர், 2014

மதுரை to சென்னை


மாட்டுத்தாவணியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பேருந்தில் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்திருந்தேன். கால்களை நீட்டியும் அசௌகர்யமாக இருந்ததால்  மடக்கி உட்கார்ந்திருந்த நிலையில் கண்ணாடி ஜன்னல் வெளியே தெரிந்த சாலையை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். குளிர்சாதன வசதி இருந்ததால், ஜன்னல் ஓரம் கிடைத்தும் அதனை திறக்க முடியாத சூழல் கடுப்படித்தது. மெதுமெதுவாக வேகமெடுத்து ஓடத்துவங்கிய வண்டி மேலூரில் சில நிமிடங்கள் நின்றது. செமி ஸ்லீப்பராக இருந்தாலும், இரவில் பேருந்துப் பயணம் பழக்கமின்மையால் இமைகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. பக்கத்தில் இருந்த மார்வாடிப் பெண் என் இருக்கைக்கு நேராக மேலே இருந்த சுவிட்சை சரி பார்த்தபடி, ஏசி சரியா வேலை செய்யவில்லை என்ற தகவலை வருத்தத்துடன் பகிர்ந்தாள். எனக்கெல்லாம் சரியாக வேலை செய்தால் தான் நடுங்கிக் கொண்டே இருக்கும் என்று பதிலுக்கு சொல்லாமல் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆமோதித்தேன். நான்கு வழி சாலையில் விரைந்து கொண்டிருந்த பல்வேறு பதிவு எண்களைக் கொண்டிருந்த பேருந்துகள் சென்னையை நோக்கியே சென்று கொண்டிருந்ததை பேருந்தின் பின்புறம் எழுதி இருந்ததின் உதவியால் தெரிந்து கொண்டு அவைகள் எந்த நேரத்தில் அந்தந்த ஊர்களில் இருந்து கிளம்பியிருக்கும் என அனாவசிய கணக்கு உள்ளே ஓடியது . 

அதிசயமாக யாரும் பேருந்தில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்கவில்லை. உள்ளே இருட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை விட, நீண்டு கொண்டே செல்லும் சாலை தன்னை நோக்க செய்தது. மழைச்சாரல் காரணமாக ஏற்பட்ட ஈரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அழகாக மின்ன எதிர் வரிசையிலும் அவ்வப்பொழுது வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஊர்களைக் கடக்கையில் தென்பட்ட பலவகை மரங்களும் ஒரே மாதிரி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தன. பார்க்கும்  சாலையும் ஊரும் வேறுபாடில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. அவ்வப்பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுதுகளில் கூடுதல் விழிப்புடன் பராக்குப் பார்ப்பது தொடர்ந்தது. அடங்கி இருக்க ஊரால் முடியலாம், நெடுஞ்சாலையால் பரபரப்பாகவே இருக்கவே முடியும் போல :)

அலாரம் வைத்த மொபைல் தேவைப்படாது என தெரிந்ததும் கீழே இருந்த பையில் வைத்தேன். சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் கட்டி வைத்திருக்கும் சாமான்கள் என்னவாக இருக்கும் என நீண்டது யோசனை. ஒன்றரை மணிக்கு பெயர் தெரியாத ஊரில் நிறுத்தியவுடன், பத்து நிமிடங்கள் நிற்கும் என்று ஒரு பையன் பலத்த குரலில் அறிவிப்பு செய்தான். நல்ல உறக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கைப் பெண்ணை தட்டி எழுப்பிய பிறகே வெளியே வர முடிந்தது. கொஞ்சம் வெளிக்காற்றை வாங்கவே இறங்கினேன். அங்கிருந்த கழிப்பறை அருகில் நின்ற சில வண்டிகளில் வந்த பிரயாணிகளுக்கும் உபயோகப்பட்டது.

 பேருந்தின் உள்ளே இருந்த பெயரளவு குளிர்ச்சியை விட வெளியில் மழை நின்ற ஈரம் தந்த குளிர்ச்சி அதிகமாக இருந்ததை உணர்ந்ததும், உள்ளே போய் உடன் அமர்ந்திருந்த பெண்ணை வெளியே போக சொல்லலாம் என நினைத்தால், பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இலேசாக கண் சுழலும் போதெல்லாம் ஏதாவது ஒரு டோல்கேட்டில் நின்ற பேருந்து 5,6 வாகனங்களைக் கடந்த பிறகே கண்ணாடிக் கூண்டின் அருகே நின்றது. அந்த நேரத்திலும் அத்தனை பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக அத்தனை அதிக சம்பளம் கிடைக்காது என்று ஓரத்தில் ஓடியது. வேகமெடுத்து சீறிப் பாயத்தொடங்கிய பேருந்தின் வேகத்தை வெளியில் வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடிந்ததை சீரான சாலைகள் செய்தன. ஏதோ ஓர் ஊரில் இரண்டு மணிக்கு ட்யூப் லைட் வெளிச்சத்தில் திறந்திருந்த டீக்கடைக்கு வெளியே கிடந்த இருக்கையில் கால் நீட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவர் கமிஷன் கொடுக்கும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நான்கு மணியைத் தாண்டும் பொழுது ஆவின் பால் வண்டிகள், தண்ணீர் கேன் ஏற்றி செல்லும் வண்டிகள் எங்கள் உடன் பயணிக்க ஆரம்பித்தன. தாம்பரத்தை தாண்டும் பொழுது ஆட்களை நிறைத்துக் கொண்டு செல்லும் பேருந்துகள், சாலையை கடக்கும் மக்கள் என வழக்கமான ஒரு நாள் விடிய ஆரம்பித்திருந்தது. 

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எனக்கு சௌகர்யமான உடை !

ஜீன்ஸ் வலுக்கட்டாயமாக அணிய சொன்னாலும், பிடிக்காத ஒரு உடை. எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு கிளம்பினாலும், சேலை உடுத்து என அம்மா சொல்வதை கேட்க பிடிக்காததற்கு ஒப்பானதே 'ஜீன்ஸ் போடு'  என்று சொல்வதும். ( நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில் மட்டும் சில மணி நேரங்கள் புடவை அணிவதே பெரும்பாடாக இருக்கிறது ) சற்று பின்னால் பார்த்தால், ஷார்ட்ஸ் அணிந்து பள்ளி நாட்களில் மைதானத்தில் ஹாக்கி விளையாடியது அந்த நேரங்களில் எளிதான ஆடையாக இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை டீஷர்ட் + (முக்கால்) பாவாடை அணிவதே வழக்கம். கடந்த பல வருடங்களாக சௌகர்யமான உடையாக சுடிதார் மட்டுமே இருக்கிறது. பிடித்த விதத்தில் தைத்து அணிந்து கொள்ளும் சுடிதார் என்னை என் இயல்பில் வைத்திருப்பதாக உணர்கிறேன். ( என் அம்மாவிற்கு அவர் சேலையில் இருக்கும் பொழுது இந்த உணர்வு எழலாம்) கடையில் சென்று விரும்பி வாங்கவும், அணியவும்,  பிடித்த உடை சுடிதார் மட்டுமே. ஒரு வேளை சுடிதார் அணியக்கூடாது என்று எதிர்மறையாக கடவுளே சொன்னாலும், என் அளவில் கண்ணியமான உடையாக பாவிப்பதால் தொடர்ந்து சுடிதாரையே அணிவேன். ஜீன்ஸ் சில பெண்களின் உடல்வாகிற்கு பாந்தமாக பொருந்துவதைப் பார்த்திருக்கிறேன். சிலருக்கு சேலை பொருந்துவதாகவும் தோன்றும். முன்னாள் முதல்வர் சேலையில் மட்டுமே கம்பீரமாக இருக்கிறார். என் அம்மாவுக்கு கிடைத்திடாத கல்லூரி படிப்பு, சுதந்திரமான ஆடைத்தேர்வு, சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு என பல உரிமைகள் எனக்கு கிடைத்திருப்பதற்கு பின்னால் எண்ணற்ற நல்லவர்களின் கடும் போராட்டங்கள்   இருக்கின்றன என்பதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நேசித்து வாசிப்போம்... வாசித்து நேசிப்போம்...சுவாசம் உள்ள வரை...!

எழுத்துக்களை கண்கள் உள்வாங்க, உள்ளே விரிந்து கொண்டே செல்லும் காட்சிகளுக்கு இணையாக எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லை. வாசிக்கும் பொழுதே நொடிப்பொழுதில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் வல்லமை கொண்டவை எழுத்துகள்.
அ ம் மா என்று எழுத்துக் கூட்டி குழந்தை சரியாக வாசித்த நாளில்,  பசு பால் தரும் என்ற வாக்கியத்தை அர்த்தம் புரிந்து வாசிக்கையில், ஒரு சிறுகதையை புரிந்து கொண்டபடி நம் குழந்தை நமக்கு விவரித்து சொன்ன நாளில் எத்தனை பூரிப்பு பெற்றோர்களாகிய நமக்கு.

மெதுமெதுவாக எழுத்தின் வசீகர சுவை உணர்ந்து, கதைகளைத் தேடத் துவங்கிய நாட்களில், "ரத்னா பாலா",  என்ற சிறுவர்களுக்கான மாத இதழை வீட்டில் வாங்க ஆரம்பித்தனர். மூன்றாம் வகுப்பு தமிழ் பாட வழியில் படித்ததால், இந்த புத்தகத்தில் உள்ள வண்ணங்களும், படங்களும், கதைகளும் வகுப்புப் பாடங்களை ஓரம் தள்ளிவிட்டு ஈர்த்தன. அப்பொழுது வாசித்த 'இஞ்சி தின்ன குரங்கு', என்ற கதையை இப்பொழுதும் நினைவு படுத்த முடிகிறது.
அருகில் உள்ள நூலகத்தில் ஆறாம் வகுப்பில், தாத்தாவிற்கான உறுப்பினர் அட்டையை உபயோகித்து, விடுமுறை நாட்களில் பல சிறுவர்கதைகளை வாசித்துள்ளேன். அந்த கால கட்டத்தில் தான், தெனாலி ராமன், பீர்பால், பஞ்ச தந்திர கதைகள் அறிமுகமாயின.
அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, சிறுவர்மலர் என்று துரத்திதுரத்திப் படித்த நாட்களில் தெரிந்து கொண்ட ஒற்றை வரி... "ராஜா எவ்ளோ முட்டாளா இருந்தாலும், மந்திரி புத்தியோட இருந்தால் ராஜ்ஜியம் பொழச்சுக்கும்"... என்பது. :)

பள்ளிக்கூடத்தில் நூலகம் என்று ஒன்று இருக்கும். அழகாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்ல அனுமதி கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை, நூலக அலுவலர்களே, ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து, மொத்த மாணவிகளுக்கும் கொடுக்கும் புத்தகங்களின் பெயரை எழுதி வைத்துக் கொண்டு வழங்குவர். இரண்டே நாளில் மீண்டும், புத்தகங்களை எந்த சேதாரமும் இல்லாமல் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் அந்த வழங்குதலில் இருக்கும். தொலைந்த நூல்களுக்கு நூலகர்களின் சம்பளத்திலிருந்து பணத்தைப் பிடிப்பதால், அவர்களின் கவலை அவர்களுக்கு. கொஞ்சமும் யோசிக்காமல், படக்கதை புத்தகங்களை ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவது போல தான், ஏனைய புத்தகங்களும் இருக்கும்.
எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அறிமுகமான ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர்களின் காரணமாக கிரைம் நாவல்களில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதென்னவோ, வன்முறையை, நேர்மையில்லாத கொடூரமான  செயல்களை புத்திசாலித்தனமாக எதிர் கொள்வது போல தோன்றியதால் பிடித்து போய் இருக்கலாம். விறுவிறுப்பு தன்மை காரணமாக வேகவேகமாக பக்கங்களை புரட்ட வைக்கும் கிரைம் நாவல்கள் இப்பொழுதும் ஈர்க்கவே செய்கின்றன.
அதற்கு அடுத்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக, அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி, என்று வாசித்து குறிப்பாக ரமணி சந்திரனின் ஒரு புத்தகத்தைக் கூட விடாமல் படித்து, ஒரு கட்டத்தில் ஒரே மாதிரி உணர்வுகளே அத்தனைப் பக்கங்களிலும் விரவியிருப்பதாக தோன்றி இருக்கிறது.

பொதுவாக புத்தகங்களில், சில நேரங்களில் நாமே எளிதில் கணித்துவிடும் படி இருக்கும் அடுத்தடுத்த வரிகள் சோர்வை உண்டாக்கும்.
அடுத்து கல்லூரி வந்த பொழுது, நா.பார்த்தசாரதி, மு.வ, என்று சிலர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், விரைவில் அயற்சி ஒட்டிக் கொள்ளும் வகையிலேயே என்னுடைய வாசிக்கும் திறன் இருந்தது. ஆனால், உவமைகள், நேர்த்தியான வரிகள் என்று கற்று கொள்ள நிறைய விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் இருக்கும்.
மிக நீண்ட காலத்திற்கு ஒருவரின் எழுத்தைத் தேடித் தேடிப் படிக்க முடிந்தது என்றால் அது கல்கியின் எழுத்துகளை தான். அவரின் பல சிறு கதைகளில் உபயோகிப்பட்ட சொற்றொடர்களை சமீபத்திய தமிழ் சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படுத்தியதைப் பார்க்கலாம். ('ஆபரேஷன் சக்சஸ், பேசன்ட் டைட்' மாதிரி... )

பொன்னியின் செல்வன், தியாக பூமி, இரண்டுமே நாவல்களின் ஊடே பறந்து சென்று பார்த்து ரசித்து கொண்டாட செய்தவை. மெலிதான நகைச்சுவை, சுவாரஸ்யமாக  வாசிக்க செய்யும் வரிகளின் தொடர்ச்சி, உடன் இழுத்துச்செல்லும் கதை அமைப்பு என்று சகலமும் ஈர்க்கும். அதிலும், பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், குந்தவை, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியன், நந்தினி, சேந்தன் அமுதன் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு பக்கத்தில் நின்று நடப்பவற்றை எல்லாம் நேரடியாக பார்த்து மகிழ்ந்து, வருத்தமுற்று, கலங்கி, சமாதானமாகி என வாசித்த அந்த ஒரு வாரமும் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை வேறு எந்த படைப்பும் தந்ததில்லை. அவர் எழுதி உள்ள கதைகளில், காதல், அரவணைப்பு, போன்ற வார்த்தைகளைக் கூட பார்த்து, வெட்கப்பட்டு, யோசித்து, பயன்படுத்தி இருப்பாரோ என்று யோசிக்கும் அளவிலேயே அவற்றின் பயன்பாடு இருக்கும்.

அடுத்து தி.ஜானகிராமன் எழுத்துகளும், ஓரளவு தவறவிடாமல் சேகரித்து வாசித்துள்ளேன். "அம்மா வந்தாள்", வாசித்த காலத்தில் எத்தனைத் துணிவுடன் அந்தக் காலத்தில் எழுதியிருக்கிறார் என அதிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு படித்த "செம்பருத்தி", வலிய இழுத்து சென்ற மெகா தொடர் போல தோன்றியதால் அவ்வளவு வசீகரிக்கவில்லை. அவரின் பல கதைகளில் வரும் எளிய கதாப்பாத்திரங்கள், அவர்களின் வாயிலாக வெளிப்படும் அந்தக் கால யதார்த்த சமூகம் (இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது) துணிந்து கையிலெடுத்து எழுதிய பல கதைக் கருக்கள், எங்கேயும் போதிக்காமல், அவர் பார்வையை முழுதாக நம் கண்ணில் பார்க்க செய்யும் திறன் ரசிக்க வைக்கும்.

ஜி.நாகராஜன். - 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில் வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள், போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன் கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.
அங்கே ஒரு இடைவெளி விட்டு, அப்படியே ஆன்மீக பக்கம் சாய்ந்து, விவேகானந்தர், ரமணர், ஓஷோ, வேதாத்திரி மகரிஷி என்று ஒரு சுற்று அரைகுறையாக சுற்றியதில், இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேலே வாசித்து முன்னேறி செல்ல விட முடியாத கடின முறையில் எளிய உண்மையைக் கூறிய ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் வாசிக்க எனக்கு கடினம் என்பதையும் சொல்ல வேண்டும்.
கடந்த சில வருடங்களில், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, லா.ச.ரா., சுஜாதா, நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், தவிர சமீபத்தில் வண்ணதாசனும் வரிசையாக அறிமுகமாயினர். இதில், எஸ். ரா வுக்கும், நாஞ்சில் நாடனுக்கும் கூடுதல் இடம் புத்தக அலமாரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தான் படித்து உள்வாங்குதலா என்றால் நிச்சயம் இல்லை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவ அலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பது தான் புத்தகக் கடல். எடுத்த உடனேயே ஆன் ரான்ட் கதைகளை உருகிப் படிப்பவர்களும் உள்ளனர். நாம் நான்காம் வகுப்பில் படிக்கும் பொழுதோ அல்லது நமது நாற்பதாவது வயதிலோ, நம்மை மாற்றக் கூடிய புத்தகம் நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்.
சென்ற வருடம் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் வந்து குவிந்த புத்தகங்களை வாங்கிய  மக்கள் பலரும் சொன்ன ஒரே குறை "இருக்கிற புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை, ஆனாலும்.............. வந்துவிட்டோம், இருக்கட்டும் என்று சிலவற்றை வாங்குகிறோம்", என்ற இந்த  பதிலுக்குப் பின்னே ஒளிந்திருப்பதை தேடிய பொழுது கிடைத்தவை............
1. நமக்கு விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில், அதன் தலைப்போ ஆசிரியரோ நிமிடங்களில் தீர்மானிக்க செய்தாலும், தொடர்ந்து நம்மை வாசிக்க செய்வதில் சமயங்களில் பெரிய ஜாம்பவான்களே தோற்றுப் போகின்றனர்.
2. தொட்டதுக்கெல்லாம் அலுத்தும், சலித்தும் கொள்ளும் நமக்கு புத்தம் புதியதாக ஏதோ புதிதாக ஒன்றோ அல்லது பழையதே மாறுபட்ட  கோணத்தில் அளிக்கப்படும் பொழுதோ விறுவிறுப்புடன் வாசிக்கிறோம்.
3. தனிப்பட்ட தேர்வு என்று உண்டு. நானெல்லாம் வார,மாத இதழ்களில் கவிதைகளைக் கண்டால் கூட அந்த பக்கத்தை புரட்டி விட்டு அடுத்த பக்கத்தை பார்ப்பவள. இப்படிப்பட்டவள், ஏதோ எழுதிப் பழக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் பெரிய பெரிய கவிதைப் புத்தகங்களை வாங்கி அடுக்கினால், அந்த அடுக்கு மாறமால் அப்படியே பத்திரமாக இருக்கும் அலமாரியில். ( தேவையற்ற சொற்களை எடுத்துவிட்டு, சொல்வதை சுருங்க அழகாக சொன்னால் அதுதான் கவிதை - பேஸ்புக் கில் வாசித்து கற்ற கவிதை இலக்கணம்... :)  )
4. நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், உரையாடலை செம்மைப் படுத்த அதிக விஷய ஞானம் வேண்டும் என்பவர்கள், மேற்கூறியவை தொடர்பானவற்றையும், அவரவர்கள் பணிபுரியும்  துறையில் அல்லது எதில் அதிக விருப்பமோ அந்த தலைப்பு சம்பந்தமான நூல்களையும்  வாங்கலாம்.
5. பலரும் வாசித்த நூல் என்பதெல்லாம், ஒரு புத்தகத்தை வாங்குவதற்கான அளவுகோல் இல்லை.

ஆசை ஆசையாய் வாங்கி வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் குரலை அவ்வப்பொழுது கேளுங்கள். அதுவும் முடியாவிட்டால், கேட்க விரும்புபவர்களுக்காவது கொடுங்கள்.

 வாசிப்பு...
என்ன செய்யும்?
தெரிந்து கொள்ள, தெளிய வைக்க, பொழுதைப் போக்க, மனதை நெகிழ செய்ய, ஒப்பிட்டு ரசித்து அசைபோட, அறிவை விசாலப்படுத்த, உற்சாகம் பொங்க என இன்னும் இன்னும் பல விந்தைகளை செய்யும் வாசிப்பு. கையடக்க புத்தகம் இத்தனையும் வழங்குமென்றால், வேறு என்ன வேண்டும்?
நேசித்து வாசிப்போம்...!  :)

 (குங்குமம் தோழியில் வெளியானது - ஆகஸ்ட் 16-31)

சனி, 2 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் பசுமை... கொஞ்சும் பசுமை...!மனதை அழுத்துகின்ற எந்த ஒரு விஷயத்திலிருந்தும் எளிதில் விடுபட கொஞ்சம் தனிமையும், கொஞ்சம் பசுமையும் உதவும் என்பது என் நம்பிக்கை.

ஒவ்வொரு விதையும், அதன் தன்மைக்கு ஏற்றபடி விதவிதமான இலை, கிளை, பூ, காய், பழங்கள் என அத்தனையையும் தன்னுள்ளே அடக்கி உறங்கிக் கொண்டு இருப்பது இயற்கையின்  பிரமிப்புகளில் ஒன்று. உறக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, விதை செழிப்பாக வளர தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி, என அனைத்துமே நமக்கும் அடிப்படைத் தேவை.
உயிர்ப்புள்ள அனைத்திற்கும் தேவைகள் பொதுவானவையே... :)
விளையாட, ஓய்வெடுக்க என்று ஊஞ்சல் கட்டிய ஒரு வேப்ப மரம், ஒரு புங்கமரம், நிழலுக்காக எங்கள் வீட்டின் முன் நின்றிருந்தன பல வருடங்கள். உதிர்கின்ற வேப்பம் பூக்கள், காய், பழங்கள், இலைகள் என்று அத்தனையும் சிறு வயதில் கடை விளையாட்டு விளையாடும் பொழுது உபயோகித்து இருக்கிறோம். உதிர்ந்த வேப்பம் பூக்கள், வேப்பிலை வாசம் கலந்து நாசியின் வழியாக மனதை அடைந்துள்ள நாட்களில் உணர்ந்த குளிர்ச்சி, இன்றும் மாசுபடாமல்,  நினைவடுக்கில் சுகமாக அமர்ந்துள்ளது. ஏதேனும் வேப்பமரத்தை கடக்கின்ற பொழுதெல்லாம், ' இது நம்ம மரம்', என்று மகிழ்ச்சி எப்பொழுதும்  எட்டிப்பார்க்கும்.

நெருக்கமான இலைகள் கொண்ட புங்கைமரத்திலிருந்து கிடைக்கும் நிழலில் நிற்க, உட்கார அத்தனை குளிர்ச்சியாக, இதமாக இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை பூத்து, காய்த்து, இலைகள் அத்தனையும் உதிர்த்து நிற்கும் பொழுது சில நாட்கள் பார்க்க பரிதாபமாக இருக்கும். குறுகிய நாட்களிலேயே சிவப்பாக துளிர்க்கின்ற இலைகளின் உள்ளே இரத்தம் இருக்குமோ என்று சிறுவயதில் சந்தேகப்பட்டிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக, மரம் முழுவதிலும் உள்ள இலைகள் மெது மெதுவாக வெளிறிய பச்சையிலிருந்து, குளுமையானப் பச்சை வண்ணத்துக்கு மாறும் நாட்களில் பார்க்க அத்தனை அழகாய் இருக்கும். பூத்து, காய்த்து, இலைகளின் வண்ணம் மாறி, உதிர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி நம்மை சிந்திக்க வைப்பதற்கோ என்று பின்னால் யோசித்திருக்கிறேன்.
சில காரணங்களால் வீட்டை சுற்றி சுற்றுசுவர் எடுக்கப்படாமல் இருந்தது . காலி இடத்தின் அளவு அதிகமாக இருந்தும், இரண்டு தெருக்கள்  இணையும் இடத்தில் வீடு  இருந்ததால்,  அந்த நாட்களில் காலை நேரங்களில், வீட்டின் முன்பாக ஓட்டி செல்லப்படும் ஆடுகளுக்காக,  இரண்டு மரங்களும் மட்டும், வேறு மரங்களின் துணையின்றி  இருந்தன.  தரையில் மழை பெய்தால் முளைக்கும் செடிகள் மட்டும் ஆடு,மாடு  மேய்ந்தது போக அங்கங்கே இருக்கும்.
உயர்நிலை வகுப்பில் நாமும் செடி வளர்க்க வேண்டும் என மிக ஆசைப்பட்டு, வீட்டின் முன்புறம் மண்ணைத் தோண்டி பல வண்ணங்களில் டேபிள் ரோஸ் செடிகளை நட்டு வைத்தேன். மொட்டுக்களோடு வைக்கப்பட்டதால் இரண்டே நாட்களில் பூத்ததில் மனதும் மகிழ்ச்சியில் பூத்தது. ஐந்தாவது நாள் பள்ளி விட்டு வந்து பார்த்தால், செடி இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. விசாரித்ததில் யாரோ ஒரு புண்ணியவதி பூ வாசத்திற்கு பாம்பு வந்துவிடும் என்று அம்மாவை பயமுறுத்தி சென்றிருக்கிறாள் என்பது தெரிந்தது. அந்த டேபிள் ரோஸ் வாசத்திற்கா பாம்பு வரும் என்று ஆர்ப்பாட்டம் செய்து தாழம்பூவை தேடிக் கொண்டு வந்து நட்டு வைப்பதாக எடுத்த உறுதி இன்று வரை நிறைவேறவில்லை.  :P
புது வீடு சுற்று  சுவருடன் கட்டியபிறகு நிறைய செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்று பாட்டி சமாதானப்படுத்தினார்.
நிழல் தர இருக்கின்ற இரு மரங்கள் போக,  ஒரே ஒரு முருங்கை மரம் அவசியமாக தேவைப்பட்டது. முக்கிய காரணம் என்னவென்றால், சாம்பார், புளிக்குழம்பு, கறிக்குழம்பு என்று அத்தனையிலும் எங்கள் வீட்டில் முருங்கைக்காய் மிதக்கும். அருகில் மரம் உள்ளவர்களின் வீடுகளில் சென்று காய் வாங்கி வரும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு முருங்கை மரம் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். ஒரு நாள், எதிர் வீட்டில் பெரிதாகிக் கொண்டே சென்ற முருங்கை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். காய்கள் மட்டும் காசு கொடுத்து பெற்ற கைகள், அதை விட மதிப்பு மிக்க முருங்கைக் கட்டையை இனாமாக பெற்று வந்தன. :)

வீட்டின் முன்னே இரண்டு மரங்கள் உட்பட காலி இடம் இருந்தாலும், பக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு இருந்த பேஸ்மென்ட் நடுவில் இருந்த இடத்தில் குழியைத் தோண்டி,மூன்றடி உயரமான குச்சியை ஊன்றி வைத்த பொழுது, வீட்டில் குடியிருந்த மாமி, பக்கத்திலிருந்த மண்ணை அவர் பங்கிற்கு பேசிக்கொண்டே தள்ளிவிட்டார். கடந்து செல்லும் ஆடுமாடுகளிடமிருந்து தப்பித்து காய் வந்தால்,  உடல் நிலை சரியில்லாத என் பாட்டி, அந்தக் காய்களை நறுக்கி குழம்பு வைத்து கொடுப்பார் என்று வேடிக்கைப் பார்த்த என் தாத்தா கிண்டல் செய்தார்.
அது வரை எங்கெங்கோ ஊன்றி வைக்கப்பட்ட கட்டைகளை பார்த்த அறிவின் படி, நட்டு வைத்த முருங்கைக் கட்டையின் நுனிகளில், பசு சாணத்தை அப்பி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி ஆராய்ச்சி செய்ததில் சில நாட்களிலேயே நான்கைந்து இடங்களில் இலைகளை இளம் பச்சை நிறத்தில் நீட்டத் தொடங்கி இருந்தது முருங்கை. ஆனாலும், எங்கள்  கண்காணிப்பையும் மீறி, அதிகாலையில் நடந்து போகும் ஆடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு தொடர்ந்து இரையாகிக் கொண்டே வந்தது முருங்கையின் இலைகள். மரத்தை சுற்றி சாக்கு, கம்பு என்று ஏதேதோ பாதுகாப்புக்கு வைத்தாலும், கூட்டணி அமைத்தாவது, இலைகள் வளர வளர மொட்டையாக்கிக் கொண்டே இருந்தன ஆடுகள். அவ்வப்பொழுது ஏமாந்து கொண்டிருந்த என் நிலைமையை பார்த்த அப்பா, எங்கிருந்தோ கருவேல முள்களை வெட்டி, வண்டியில் வைத்துக் கொண்டு வந்து, முருங்கை கட்டையை சுற்றி ஆள் உயரத்திற்கு ஊன்றி வைத்தார். அத்தோடு அடங்கிப் போயின ஆடுகள். எனக்கு முன்பாகவே தினந்தோறும் தாத்தாவும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரே வளர்ச்சி மயம் தான். வேகவேகமாக கிளைகளைப் பரப்பி பூக்கள் பூத்து காய்க்கத் தொடங்கிய பொழுது, குடியிருந்த மாமி, தாத்தா என்று சகலரும் தங்களால் தான் அந்த முருங்கை மரம் காய்க்கத் தொடங்கியதாக சொல்லியது என்னை சீண்டுவதற்காக இருந்திருக்கலாம்.
கசப்புத் தன்மையற்ற சுவையான முருங்கை இலை, மெலிதானத் தோலை கொண்ட  பருத்தக் காயின் சுவையான உட்பகுதி என்று அபூர்வ ரகமாக இருந்தது அந்த முருங்கை. பூக்கின்ற காய்கள் எல்லாம் காய்க்குமோ என்று சந்தேகம் கொள்ளும்படி, அத்தனை காய்கள் தொங்கும். இலை உதிர் காலத்தில் ஒரு பக்கம் உதிர்ந்து கொண்டிருந்தாலும், சமையலுக்கு இல்லை என்றில்லாமல்  ஏதேனும் ஒரு பக்கத்தில் சில காய்கள் இருந்து கொண்டே இருக்கும். சுற்றமும், நட்பும் ஆசையுடன் கேட்டு வாங்கிச் சென்று சமைக்கும். தற்பொழுது இருக்கும் வீடு கட்டப்படுவதற்காக அந்த மரம் சில வருடங்கள் முன்பு வெட்டப்பட்டுவிட்டது. :(
ஒரே ஒரு பிடிக்காத விஷயம் முருங்கை மரத்தில் என்னவென்றால், குளிர் காலத்தில் புழுக்கள் அதிகமாக மரத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் மொத்தமாக வசிப்பதும், சமயங்களில் வீட்டிற்கு உள்ளே ஊர்வதும் மட்டுமே.
 தற்பொழுது வீட்டை சுற்றி வளர்ந்த வாழை, பப்பாளி, கொய்யா மரங்களுடன், புதிதாய் வைக்கப்பட்ட நெல்லிக்காய், மருதாணியும் வளர்கின்றன. துணைக்கு பசலை, முடக்கத்தான், துளசி, கற்றாழை போன்றவை மீதி இடத்தை நிறைத்து பசுமையாக்கும் பணியை அழகாக செய்கின்றன. :)

சில மாதங்கள் முன்பு ஊன்றி வைக்கப்பட்ட வாழைக்கிழங்கு ஒரு அதிகாலையில் மண்ணை முட்டி மேலே தலையைக் காட்டிய நாளில் குடும்பமே குதூகலித்தோம். வாழைக்கன்று, மெதுமெதுவாக இலைகளின் எண்ணிக்கையை கூட்டி செல்வதை ஒவ்வொரு நாளும்  ரசித்தோம். சுருட்டி இருக்கும் இலை விரிகின்ற பொழுது பளிச்சிடும் சற்றே வெளிறியப் பச்சை வண்ணத்தின் குளிர்ச்சியை கண்கள் வாங்கிக்கொள்ளும் நேரங்களில் மனமும் குளிர்ச்சியால் நிரம்பியது. மேலே இலைகளின் எண்ணிக்கைக் கூடக்கூட இளம்பச்சையிலிருந்து கரும்பச்சை பச்சை வரை பச்சையின் அனைத்து நிறப்பிரிவுகளுடன், நேர்த்தியான கோடுகளால் நிறைந்த வாழையிலைகளை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருப்பது தினசரி பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மரத்தை சுற்றி நான்கைந்து கன்றுகள் மரத்திற்கு பாதுகாப்பாக(?!) வளர ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு நாள் கிழக்கு திசையில் குலை தள்ளியிருந்தது. அத்தனைப் பெரிய வாழைப்பூவை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் விறுவிறுவென தானாகவே ஒவ்வொரு அடுக்கின் தோலும் உரிந்து கீழே விழே விழ, ஒவ்வொரு பூவும் காயாக மாறுவதை வெளியில் தெரியும் மாற்றத்தை வைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. வாழைப்பூவை சமையலுக்காக சுத்தம் செய்யும் பொழுது நீக்கும், நீண்ட நரம்பு உட்பட மெல்வதற்கு கடினமான இரண்டு  பகுதிகளையும் மரமே வெளியே தள்ளி, தன் காய்களின் உருவத்தை பெரிது படுத்திக் கொள்ளும் அழகை தினமும் பார்ப்பேன்.
சக மனிதர்களிடம் எழும் கோபம், வருத்தம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்த, உயிர்ப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் தாவரங்களே என் தேர்வு. தன் வண்ணம், அசைவு, வளர்ச்சி, ஸ்பரிசம் மூலமாக எளிதில் தேற்றி, அமைதி, மகிழ்ச்சி போன்ற நேர்மறை எண்ணங்களை எத்தனையோ முறை புகுத்தியிருக்கிறது.
தான் பூத்து, நம் மனதை பூக்க செய்யும் ஒவ்வொரு செடியும் நமக்கான இலவச மருத்துவர்...!
(குங்குமம் தோழி : ஆகஸ்ட் 1- 15)

புதன், 23 ஜூலை, 2014

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!குறிப்பிட்ட ஊரில் உள்ள கோவில், கடவுளை மையப்படுத்திக் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பலதரப்பட்ட மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்றவை என்றே சொல்லலாம். ஒரே திருவிழாவில் நமக்கு பிடித்தமானவர்களை காண்பதைப் போல, பேச்சுவார்த்தை நின்று போன உறவுகளையும், நட்புகளையும்  பார்க்கலாம்.

பொதுவாகவே அன்பிற்கு உரியவர்களிடம் விரைவாக தோன்றும் கோபம், வெறுப்பு போன்றவை வந்த  வேகத்தில் ஆவியாகி காணாமல் போக பாசம் மட்டும் எஞ்சி நிற்கும்.  முதலில் சென்று யார் பேசுவது என்பதில் விட்டுக் கொடுக்காத வீராப்பிற்கு சொந்தக்காரர்கள் தான் நம்மிடையே பலர். இவர்கள் உட்பட நாம் அனைவரும், நம் கடந்த காலத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவி செய்பவைகளில் ஒன்றாக திருவிழாக்களும் இருக்கின்றன என்றே தாராளமாக சொல்லலாம்.

மழை என்ற அர்த்தத்தில் வரும் மாரி, அம்மனாக வீற்று இருக்காதே ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். முன்னால் சேர்ந்து கொள்ளும் பெயர் மட்டும், சந்தனம், முத்து, சமயபுரம் என்று இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக இந்தக் கோவில்களில் எல்லாம் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். ( கொளுத்தும் கோடையில் மழை வேண்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் இந்தத் திருவிழாக்கள் என்று யூகிக்கிறேன்)

மதுரையில் ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பில் இருக்கின்ற மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் நடக்கும் பங்குனித் திருவிழா, எனக்கு நினைவு தெரிந்து  பார்த்த முதல் கோவில் விழா. திருவிழா என்றால் இப்படிதான் இருக்கும் என்று புத்திக்கு தெரியத் தொடங்கியப் பிறகு, திரைப்படங்களில் திருவிழாக் காட்சிகள் காட்டுப்படும் பொழுது ஒப்பிட்டு பார்த்துள்ளேன்.

ரிசர்வ் லைன் மாரியம்மன்  கோவிலிலும் அம்மன் கோவில்களுக்கே உள்ள இலக்கணப்படி திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்படும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வரும் பொழுதும், மீண்டும் அழகர் கோவிலுக்கு செல்லும் பொழுதும், இந்தக் கோவிலில் தலையைக் காட்டி செல்லும் அவரின் வருகையைக் காணக் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருக்கும்.

இந்தக் கோவில் ஓரளவு பெரிய கோவில். பங்குனித் திருவிழா ஆரம்பமானதின் அடையாளமாக முதல் நாளில் காப்பு கட்டப்படும். அங்கங்கே வேப்பிலைகள் கயிற்றில் சீரான இடைவெளிகளில் முடிச்சிடப்பட்டு, வீதிகளின் இரண்டு பக்கங்களையும் இணைத்து தோரணமாக தொங்க விடப்படும். அன்று மாலையே பிரசாதமாக,  தாராளமாக மோர் விட்டு, வெங்காயம் கலந்து வழங்கப்படும் கேப்பைக் கூழுக்கென்று உள்ள அலாதி சுவை இன்று வரை மாறவில்லை. அதற்கடுத்த நாட்களில் மாலை வேளைகளில் பிரசாதமாக வழங்குவதற்கென்றே பொங்கல் பிரியர்களுக்கு பிடித்த சுவையிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் பொங்கல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

விழாக்காலங்களில் கோவிலின்  முன்புறம் விரிந்திருக்கும் பந்தல், வேலைப்பாடு நிறைந்த பந்தலின் உள், வெளி அலங்காரங்கள், இலை, பழங்களாலான தோரணங்கள், தென்னம்பாளைகள்,  பக்கவாட்டில் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் சீரியல் பல்புகள், பாடல்களை அதிரவிட்டுக் கொண்டிருக்கும் ஒலிப் பெருக்கிகள், திடீரென முளைத்தக் கடைகள், கோவிலின் நேரெதிரே பந்தலுக்கு அப்பால், சற்று தொலைவில் சின்னஞ்சிறிய இடைவெளிகளில் பொங்கலைக் கிண்டிகொண்டிருக்கும் எண்ணிக்கையற்றக் குடும்பங்கள், திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி அல்லது அமைதி பூத்த முகங்கள் என்று ஒட்டு மொத்த இடமே வண்ணமயமாக மயக்கும்.

பத்து நாட்களுமே மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் பாட்டுக் கச்சேரி, பட்டி மன்றம், நடனம், நாடகங்கள் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாவது நாள் நடைபெறும் "வள்ளி திருமணம்", நாடகம் மட்டும்  இன்று வரை மாறாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மற்ற மாரியம்மன் கோவில்களைப் போலவே முளைப்பாரி எடுத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல், அங்கப்ரதட்சணம் உட்பட சகலப் பிரார்த்தனைகளும், பிரார்த்தித்தவர்களால் நிறைவேற்றப்படும். நவதானியங்களைத் தொட்டிகளில் பதித்து, நீர் விட்டுப்  பாதுகாத்து, மாலை நேரங்களில் காப்புக் கட்டி முளைப்பாரி சுமப்பவர்கள் கும்மியடித்து, தானானே பாட்டுப்பாட செடிகள் ஒரு பக்கம் முளைத்து வளர ஆரம்பிக்கும். (சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் வரும் அதே ரக தானானேப் பாட்டு தான் பெரும்பாலும்  இங்கும் கேட்டிருக்கிறேன்)

எட்டாவது நாள் மாலை வேளையில் வைகை ஆற்றுக்கு சென்று சக்திக் கரகம் எடுத்து வந்து ஒவ்வொரு தெருவின் வழியாக மேள தாளத்துடன் வருபவரை அந்த தெய்வமே நேரில் வந்தது போன்று பயபக்தியுடன் கூடிய மரியாதையை அளிப்பர் குடியிருப்பு மக்கள். மாலை நேரத்தில் வாசல் தெளித்து வண்ணங்களால் நிரம்பிய பெரிய கோலங்கள் இட்டு காத்திருப்பர். அத்தனை தூரம் நடந்து சென்று திரும்பி வந்த கால்களுக்கு பலரின் வீட்டு வாசலில் தயாராக இருக்கும் மஞ்சள்பொடி, வேப்பிலை கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி, அவர் அளிக்கும் விபூதியைப் பெற்றுக் கொள்வர். அதற்கடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலம் வரும். பத்தாவது நாள் மீண்டும் அவரவர் தொட்டிச் செடிகள் அவரவர் தலைகளில் சுமந்து வரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்படும்.

கரகம் எடுத்து வரும் அன்று மாலையில், எங்கள் பகுதியில் ஊற வைத்த பச்சரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குத்தி, எடுத்த மாவை, சல்லடையிலிட்டு சலிப்பர். சற்று ஈரமாக இருக்கும் அந்த சலித்த மாவுடன், மண்டவெல்லம், ஏலக்காய்,சுக்கு பொடி  கலந்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைப்பர். மறுநாள் காலையில் இந்த மாவில் ஒரு பகுதியை எடுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி நடுவில் சிறிதாக உண்டாக்கியப் பள்ளத்தை நெய்யால் நிரப்பி திரியை இட்டு மற்றவர்களைப் போல நாங்களும் கோவிலுக்கு எடுத்து செல்வோம்.  நீண்டு கொண்டிருக்கும் வரிசையில், வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே எப்பொழுது உள்ளே சென்று விளக்கை ஏற்றி அம்மனை வழிபட்டு திரும்புவோம் என்று அம்மா, பாட்டி நிற்க, நானோ எப்பொழுது மாவிளக்கை சுவைப்போம் என்றிருந்திருக்கிறேன்.

மாவிளக்கு...... மிகக் குறைவான பொருட்களின் சேர்மானத்தில், அடுப்பில் வைத்து பார்க்கும் எந்த வேலையும் இன்றி, தேங்காய்ச்சில்லுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அற்புதமான சுவையாக மாறிவிடுவதை, சாப்பிட்டவர்கள் அனைவரும் அறிவர். "பொங்க வைக்கப்போறோம்", என்று அக்கம் பக்கத்தில் உள்ளோர் கோவிலுக்கு போகும் பொழுது, பதிலுக்கு "மாவிளக்கு வைக்கப் போறோம் நாங்க", என்று மிகப் பெருமையாக சின்ன வயதில் சொன்ன ஞாபகம் இருக்கிறது.

பெரிய பாத்திரத்திலிருக்கும் மாவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு, தேங்காய், வாழைப்பழத்துடன், அருகில் பொங்கல் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் தந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டுக் கொடுக்கப்படும். பசிக்கும் பொழுதெல்லாம், ஒரு சிறிய தட்டில் மாவிளக்கை கை கொள்ளாமல் அள்ளி எடுத்துத் கடித்துக்கொள்ள தேங்காய் சில்கள், என்று மாவு தீர்ந்து போகும் வரை சப்புக்கொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.

திருவிழாக்காலங்களில் வீதிக்கு வீதி கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் வழியாக மாலை நேரங்களில் வீடுகளை வந்தடையும், தானேன்னே, பாடல்களுக்கு  முன்பாக, ஏற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள், கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா செல்ல மாரியாத்தா, தீர்த்தக்கரை மாரியம்மா போன்ற பல அம்மன் பாடல்கள் ஒலிக்கும். எட்டு நாட்களில் பக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடல் வரிகள் தப்பித்தவறி கூட காதுக்கு கேட்காது. ஒன்பதாவது, பத்தாவது நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பக்திப் பாடல்களில் இருந்து விடுபட்ட உடன் திரைப்படங்களில் வெளியாகி புகழ் பெற்ற அம்மன், கோவில் திருவிழா சம்பந்தப் பட்ட பாடல்களில் சிலவற்றை ஊரெல்லாம் கேட்க செய்து ஒரு சமநிலைக்கு கொண்டு வந்த பிறகு மற்ற பாடல்களுக்குள் செல்லும் ஒலிபெருக்கிக்காரார் எங்களையும் அதே வரிசையில் எதிர் பார்த்துக் கேட்கும்படி பழக்கி இருந்தார்.

குடியிருப்பில் கட்டிடங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, முப்பது வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய பலரும் ஓய்வு பெற்று வேறுவேறு இடங்களுக்கு சென்றிருக்க, இப்பொழுதெல்லாம் திருவிழாவில் தெரிந்த முகங்கள் தட்டுப்படுவதே அரிதாக உள்ளது. கோவில் இன்னும் விரிவு படுத்தப்பட்டு, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பாக சமீபத்திய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்குள் சென்று, கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் நகர்ந்து செல்வதற்கு பதிலாக கோவிலை மட்டும் சுற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, அரிதாக தெரிந்த முகங்கள்  ஒன்றிரண்டை  அடையாளப்படுத்தி, வீட்டிற்கு வரும் பொழுது வடிந்து விடுகிறது இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய அளவிலான திருவிழா ஆர்வம். அம்மாவை மட்டும் அனத்தி எப்படியேனும் மாவிளக்கு செய்ய சொல்லி சாப்பிட்டால் முடிந்து விடுகிறது திருவிழா!

கூட்டத்துடன் கொண்டாடிக் கும்பிட்டது கடந்த காலமாக மாறி, ஓரிருவருடன் அமைதியாக கோவில் பிரகாரம் இருப்பதைப் பார்க்கும் பொழுதில் மனதில் பொங்குகிறது கொண்டாட்டம்.

சில வருட இடைவேளைக்கு  பிறகு மீண்டும் தற்பொழுது...  வண்டியிலோ, நடந்தோ அடிக்கடி காலை நேரங்களில் மாரியம்மன் கோவிலை கடந்து செல்ல வேண்டும். எங்கோ ஒரு சிலர் இருப்பதே தெரியாமல் நின்றிருப்பர். விரிந்த வாசலிலிருந்து சில அடிகள் தொலைவில் உள்ள கருவறையில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அம்மனை, சில வினாடிகளில் நலம் விசாரித்தபடி கடந்து செல்வதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.  :)


பிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...
நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப் போவது...
இப்படியான மகிழ்ச்சியான சூழ்நிலையும், மனநிலையும் அமையும் நாளெல்லாம்  திருவிழாவே! :)

 ( குங்குமம் தோழி ஜூலை  16- 31 )

செவ்வாய், 8 ஜூலை, 2014

மனதுக்கும் கூடுதல் வலிமை அளிக்கும் உதிரம்!

முதல் நாள் வரை எங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அக்காவை, திடீரென ஒரு நாள், அவளது வீட்டிற்குள் உலக்கையை கிடத்தி எல்லைக் கோடு வகுத்து, பெரியவளாகி விட்டாள் என பிரித்து வைத்தனர். தனித் தட்டு, டம்ளர் உடன், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஓரமாக ஒதுங்கி சொந்தபந்தங்கள் கொண்டு வந்த, சிறப்பான உணவு வகைகளை சாப்பிடுவதைப் பார்த்த பொழுது, இந்தப் பிரத்யேக கவனிப்பிற்காக நாமும் எப்பொழுது பெரியவளாவோம் என்று எண்ணியிருக்கிறேன்.

ஆரம்பப்பள்ளியில் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று, சடங்காகி விட்டாள் என்று சொல்லி, உடன் இருந்த ஒருத்திக்கு பூவெல்லாம் அணிவித்து, எங்களுக்கு நடுவில் உட்கார வைத்தது  ஞாபகத்தில் வருகிறது.  சடங்கு ஆகிவிட்டாள், ஆளாகிவிட்டாள், வயதுக்கு வந்து விட்டாள், பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என பூப்பெய்துவதைக் குறிக்க மேற்கூறியதைப் போன்ற சில வாக்கியங்களைப் பயன்படுத்துகின்றோம் .

ஆறு, ஏழாம் வகுப்புப் படிக்கையில், உடையில் கறை இருந்தால், வீட்டில் சொல்ல வேண்டும். அது தான் பெரியவளானதற்கு அடையாளம் என்று மட்டுமே மாணவிகள் மூலம் அறிந்திருந்தேன். ஏழாம் வகுப்பில் மட்டுமே, வகுப்பில் பாதி மாணவிகளுக்கு மேல், பூப்பெய்தியதைக் காரணம் காட்டி சிலநாட்கள் விடுப்பு எடுத்தனர். அதிலும், வகுப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே, சில மாணவிகளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டறிந்த உடன் அவர்களை, பள்ளியிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியைகள் துணையுடன் வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். இப்படியாவது வகுப்பிலிருந்து சில நாட்கள் தப்பிக்கும் வாய்ப்பு எப்பொழுது வரும் என்று எங்களுக்குள் பேசி இருக்கிறோம்.

எட்டாம் வகுப்பில் ஆர்வத்துடன் இது சம்பந்தமான பல செய்திகளை பள்ளியில் மானவிகளுக்குள் பகிர்ந்துள்ளோம். ஒற்றைப்படையில் வரும்படி, ஐந்தாம் நாள் அல்லது ஏழாம் நாள் தலைக்கு ஊற்றுவார்கள்... இடுப்பு எலும்பை வலுப்படுத்துவதற்காக உளுந்தங்களி, முட்டை, எல்லாம் நிறைய தருவார்கள். இனிப்பு, பலகார வகைகள், அசைவ உணவு வகைகள் என்று பல நாட்கள் கழியும் என்றெல்லாம் எனக்கு சொல்லப்பட்டு இருந்தது. இதெற்கெல்லாம் விலையாக மனம் போல ஓடி,ஆடி, சுற்றித் திரியும் சுதந்திரம் குறையும் என்பதுவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளித்து, மாலை போடுவதற்கு இணையாக கற்பனை செய்துள்ளேன். பெண்ணாகப் பிறந்த எல்லோரும் கடந்து கொண்டிருக்கின்ற தடம் என்ற வகையில், என்னென்ன நடக்கும், எப்படியெல்லாம் கவனிக்கப்படுவோம் என்ற மெலிதான ஆர்வமிருந்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் இந்தத் தேதியை மனதில் குறித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கையுடன் கைப்பையில் சிறிய அளவிலான துணி எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே, மிரட்டியது. அதுவும் சில தடவை அந்தத்  தேதிக்கு முன்னால் வரும், சில தடவை பின்னாலும் வரும். வரும் வரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய பொழுது, 'கழுதை, வருஷத்துக்கு ஒரு வாட்டி  வந்தா என்ன, இப்படியா மாசமாசம்?, அதுவும் இந்த கலர்ல தான் வரணுமா வேற கலர்ல வரக்கூடாது ', என்பதை மட்டுமே என்னளவில் பிரச்சனையாக யோசித்துள்ளேன்.

பூப்புனித நீராட்டு விழா என்ற வைபவம் மகிழ்ச்சிகரமான விஷயமாக பகிரப்பட்டு கொண்டாடப்பட்டாலும், சில இடங்களில் இந்தப் பெண் பிள்ளைகள் அழுது, அவர்களைப் பெற்ற அம்மாக்களும் அழுது, தாங்க முடியாத பெரிய பொறுப்பு வந்து விட்டது என்று புலம்புவதையும் கேட்டு இருக்கிறேன். மணமுடித்து பிரிந்து செல்வதையும், அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்தலையுமே பெரிய சுமையாக அவர்கள் எண்ணி இருந்தது தாமதமாகவே புரிந்தது.

எனக்கு ஏற்பட்ட மாதிரியான சோதனை யாருக்கும் ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். பள்ளிநாட்களில் ஏதோ ஒரு வாரம் விடுப்பில் வீட்டில், விரும்பியதை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாடலாம் என்ற கனவு, கனவாகவே போனது. சரியாக எட்டாவது வகுப்பில் ஆண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த முதல் நாள், ஞாயிற்றுக் கிழமை காலையில் பெரியவளாகிவிட்டேன் என்று தெரிந்தது.  மீதி விடுமுறை நாட்களெல்லாம் வீட்டில் உலக்கைக்குப் பின்னால் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும் அச்சம் தந்தது. எவரையும், எதனையும் தொடக்கூடாது என்று வேறு  சொல்வார்களே என்ற கடுப்பும் வந்தது.
தீவிரமாக யோசித்து செயல்படுத்திய திட்டத்தின் படி, யாரிடமும் உடனே சொல்லாமல் ஆசையாக பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி, அது பிசைந்து கொண்டிருந்த மாவில் ஜீனியைக் கொட்டி பூரி செய்ய சொல்லி சாப்பிட்டேன். சலிக்க சலிக்கக் காலையிலிருந்து விளையாடிவிட்டு, ஓய்வெடுக்க ஆரம்பித்த மதியப் பொழுதில் வீட்டில் விஷயத்தை சொன்னேன். தொடர்ச்சியாக சில கேள்விகளை சந்தித்தப்பின், மூலையில் சாய்க்கப்பட்டிருந்த உலக்கையை, எல்லையாகப் பிரித்து, அதற்கு அப்பால் என்னை அமர செய்தனர். தொடர்ந்த சில நாட்கள் சரியான கவனிப்பு. ஆனாலும் அந்த குறுகிய எல்லையை விடுத்து எப்பொழுது வெளியே வருவோம்  என்ற ஆவல் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில், தலையில் நல்லெண்ணை தடவி, சீயக்காய்த் தேய்த்து, தண்ணீர் ஊற்றியதில் தீட்டு என்று கருதியவை கரைந்து விட்டதாக எண்ணி, பட்டுப்புடவையை கட்டி விட்டனர் அத்தைகள்.

மாம்பழவண்ணத்தில் அரக்குசிவப்புக் கரை வைத்து உடுத்தி இருந்த புடவை,  ஈரக்கூந்தலை லேசாக மட்டுமே உலர செய்து பின்னிய ஜடை, தலை கொள்ளாமல் வைத்த மல்லிகை, கனகாம்பரப் பூக்கள், கழுத்தில் விழுந்திருந்த ரோஜா மாலை, கை நிறைய வளையல்கள், புதிதாக அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், கன்னங்களில், நெற்றியில் அப்பியிருந்த சந்தனம், குங்குமம் எல்லாமே வேறொரு கதாப்பாத்திரத்திற்கு நான் மாற்றப்பட்டுவிட்டதைப் போன்ற மெலிதான மகிழ்ச்சி கலந்த பயத்தை கொடுத்தன.

அக்கம் பக்கம், உறவுகள் நட்புகள், வாங்கி வந்த முட்டைகள், பால், இனிப்பு வகைகள், பூக்கள் என்று வீடு ஒரு புது மாதிரியான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த மாதங்களில்,  அந்த நாட்களின் தேதியை அடுத்த மாதத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்காக, காலண்டரில் பென்சிலால் எனக்கு மட்டும் புரியும்படியாக குறித்துக் கொள்வதை வழக்கமாக்கி இருந்தேன். எல்லா நாட்களைப் போல தான் இந்த நாட்களும் என்று கொஞ்சம் கொஞ்சமாக எளிதாக கடந்து போக பழகிக் கொண்டிருந்த காலம் அது.

கல்லூரிக்கு செல்லும் வரை கடையில் விற்கும் நாப்கினை உபயோகிப்பது குறித்து கூட தெளிவற்று இருந்தேன். பருத்தியாலான துணிகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று போதிக்கப்பட்டு இருந்ததால், அசௌகர்யமாக இருந்தாலும், காட்டன் சேலைத் துணிகளையே பயன்படுத்தியிருக்கிறேன். மாலை நேரங்களில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில், சந்தேகம் வந்துவிடும். இன்னும் ஒரு மணி நேரத்தை கடத்த வேண்டும். பின்னால் எதுவும் கறை பட்டிருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலும் இருக்கும். பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் தான் என்றாலும், சைக்கிள் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டுமே என்ற பதட்டம் இருக்கும். அப்படி சந்தேகம் எழும் நேரங்களில், எங்களுக்குள் ' தெரியுதா பின்னால, நல்லா பார்த்து சொல்லு', என்ற கேட்டு திருப்தியான பதிலைப் பெற்றே வீட்டிற்கு கிளம்புவோம். 5000 மாணவிகள் படித்தப் பள்ளிக்கூடம்  என்றாலும், மிகக் குறைவான எண்ணிக்கையிலே கழிப்பறைகள் இருந்தன. அசுத்தமான சூழல் காரணமாக, எங்களில் பலரும் கூடுமானவரை கழிப்பறைக்கு செல்வதை தவிர்த்திருக்கிறோம். அதுவும், இது போன்ற சூழல்களில், துணியை மாற்றும் நேரங்கள் நரகத்திற்கு ஒப்பானது.

டூர், கேம்ப், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள், உறவினர்களின் விஷேசங்கள் என்று வெளியே செல்ல திட்டமிடும் நாட்களில் இந்த மூன்று நாட்கள் வரக்கூடாது என்பது பிரார்த்தனையாகவே இருக்கும்.

கல்லூரியில் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஸ்டே ஃப்ரீ நாப்கின், அந்த நாட்களை சற்று எளிதாக்கத் தொடங்கி இருந்தது. எப்பொழுதாவது எழும் தவிர்க்க முடியாத அடி வயிற்று வலி, அந்த நேரங்களில் மனதையும் சோர்ந்து போக செய்யும் உடல்நிலை, என்று பழகிவிட்டேன் மற்றவர்களைப் போல.

ஒரு வருடம் முன்பு கீதா இளங்கோவன் அக்கா,  இயக்கியிருந்த "மாதவிடாய்" ஆவணப்படம் பார்த்தேன். மாதவிலக்குப் பற்றிய அடிப்படை சந்தேகங்களிலிருந்து, இந்த விஷயத்தில் பெண்களின் குறைந்தபட்ச தேவைகளை அழகாக விளக்கியது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து  விவாதிக்க இருந்த தேவையற்றத் தயக்கங்களை உடைத்தெறிய உதவியப்படம் இது. சரிபாதியாக இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட  மாதவிடாய் விஷயத்தில், எத்தனை அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் மக்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. நவீன வசதி உள்ள கழிப்பறைகளில் கூட உபயோகித்த நாப்கினை எறிவதற்கென்று எந்த தொட்டியோ, கூடையோ இல்லை. பயண நேரங்களில் படும் சிரமமோ சொல்லி மாளாது. எத்தனையோ அசௌகர்யங்களுடன் தங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, இந்த சமுதாயம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பான பார்வை தேவை  என்பதை அழகாக வெளிப்படுத்திய படம். அத்தனை மக்களும் அவசியம் பார்த்தே ஆக வேண்டிய ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறுகின்ற கழிவை உறிஞ்சும் மேற்பரப்பு உலர்ந்தே இருக்கும், என பேசும்  நாப்கின் விளம்பரங்கள் நம் கூடத்தின் நடுவில் ஒளிபரப்புவதை ஓரளவு எளிதாகவே கடந்த போக பழகி இருக்கின்றன நம் குடும்பங்கள். கடைகளில் நாப்கினை பேப்பரிலோ, கருப்பு கவரிலோ வைத்து சுற்றிக்கொடுக்கும் வழக்கம் குறைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட மற்றும் பெரிய கடைகளில், மற்ற பொருட்களுடன் ஒன்றாகவே கலந்து கேட்கவும், கொடுக்கவும் படுகிறது நாப்கின். ஆனால், இன்னும் திரைப்படங்களில் வயிற்றைப் பிடித்துக்கொண்டே உட்காரும் கதாநாயகி வயதுக்கு வந்துவிட்டாள் என்பது இன்னுமும் மாறாத காட்சிகளில் ஒன்றாக உள்ளது. :P

உதிரம் வெளியேற ஆரம்பிக்கின்ற பனிரெண்டு, பதிமூன்று வயதிலிருந்து மெனோபாஸ் வரை தொடர்கின்ற இந்த காலகட்டத்தில் தான், பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்ற ரத்தப்போக்கு, வருடங்கள் அதிகரிக்க,அதிகரிக்க, மனதிற்கு கூடுதல் வலிமை தந்து, பெண்களை மனரீதியாக முதிர்ச்சி அடைய செய்கிறதோ என்று கூட தோன்றும். :)

பயம், திகில் கலந்து, சந்தேகம் எழுப்பும் பொழுதெல்லாம் , இதெல்லாம் உனக்கெதுக்கு என்று கேட்ட மூத்தவர்களுக்கு மத்தியிலேயே ஆரம்பித்தன எங்களுடைய அந்த மூன்று நாட்கள். தற்பொழுது பெரும்பாலும், ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே போதிய தெளிவை ஊட்டும் அம்மாக்களும், மூத்தவர்களும் நிறைந்திருக்கின்றனர். எங்களை விட ஓரளவு முதிர்ச்சியுடன் இந்தப் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றனர் இந்தக் கால பெண் குழந்தைகள் என்பதில் சந்தேகமில்லை.  தீட்டு என்ற பெயரில் நடந்த ஒதுக்கி வைத்தல் என்பதெல்லாம் நிறைய இடங்களில் குறைந்து வருவதுடன், அத்தனை சிறிய வயதில் சேலையை சுற்றி தன்னிலிருந்து அன்னியப்படுவதை பார்க்கும் சடங்கு வைபவங்களும் குறைந்து வருகின்றன. வயதிற்கு வந்து விட்டோம் என்பதை கூடுதல் பாரமாக சுமக்காமல், ஒரு பெரிய பூங்கொத்தை பெற்று பயணிப்பது போல எளிதாக கடந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கையில் மனம் நிறைந்து போகின்றது.

என்னவென்றே தெரியாமல் இருந்தது. சிறிது நாட்களில் அரைகுறையாக தெரிய வந்தது. அச்சத்தை மீறிய சுவாரசியத்துடன் அதை எதிர் நோக்கியது. வந்த பிறகு, அதற்கேற்றார் போல நம்மை பழக்கிக்கொண்ட பிறகு, எளிதில் கடக்கும் வழக்கமான ஒன்றாகிப் போனது மாதவிடாய்!
(குங்குமம் தோழி ஜூன் 16 -30 )

திங்கள், 23 ஜூன், 2014

ஒரு வார்த்தை - ஒவ்வொரு காலத்திலும் அர்த்தம் மாறும் விசித்திரம்!ஒரு சில வார்த்தைகள், பலவித உணர்வுகளையும், செயல்களையும், அனுபவங்களையும், நம் நினைவுப் பரப்பில் சேமித்து வைத்திருக்கும். அவ்வார்த்தைகளை, விளக்கி எழுதினாலோ, பேசினாலோ எளிதில் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும். அப்படிப்பட்ட வார்த்தைகளில், கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒரு வார்த்தை காதல்.ஐந்தாம் வகுப்பில் வரும் ஆங்கிலப் பாடத்தை ஆசிரியையின் ஆணைக்கு இணங்க வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது இருந்த உற்சாகம், இரண்டாவது பத்தியில் இருந்த love என்ற சொல்லை உச்சரிக்க வேண்டி இருக்குமே என்று சரியாக அந்த வார்த்தைக்கு முன்பு பதட்டமாகி, அந்த சொல்லை மட்டும் விட்டுவிட்டு அதற்கடுத்த சொல்லில் இருந்து வாசிக்க, வகுப்பறையில் பலத்த சத்தம். ஒரு வார்த்தையை விட்டுவிட்டு வாசிக்கிறாள் என்று மற்ற மாணவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியை அப்பொழுது தான் கையிலிருந்த புத்தகத்தை நோட்டமிட்டார்.
எந்த சொல்லை விட்டாள் என்று கேட்டபடி வகுப்பைப் பார்த்தார். அதுவரை தயங்கி நின்று கொண்டிருந்த நான், எங்கே நீங்களே சொல்லுங்க பார்ப்போம் என்றேன். மெலிதான சிரிப்புகளும், குசுகுசு வென்று பேச்சுகளும் நீடித்த தொடர்ச்சியான நொடிகளை, ஆசிரியையின் அதட்டல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்படி என்ன வார்த்தை அது என்று மீண்டும் புத்தகத்தைப் பார்த்த பொழுது, ஒரு மாணவி மட்டும் எழுத்துகளை உச்சரித்தாள். இதுக்காகவா இவ்ளோ சத்தம், லவ் னு சொன்னா என்ன? அது அம்மா, அப்பா மேல நமக்கு இருக்கிற அன்புன்னு அர்த்தம் வர்ற இடத்தில இருந்து எல்லா இடத்துக்கும் பொருந்தும். என்று நீண்ட விளக்கம் அளித்தார். அத்தனை நெளிந்து தவிர்க்க வேண்டிய சொல் இல்லை என்ற எண்ணம் அந்த கணம் ஏற்பட்டது என்னவோ உண்மையே.

வீட்டில் இது போன்ற சொற்களுக்கு விளக்கம் கேட்டால், தெரிய வேண்டிய வயதில் தெரிந்து கொள் என்பது மட்டுமே பதிலாக  இருக்கும் என்பதால், இது சார்ந்த கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். அந்த வயதில் மிக அபூர்வமாக வீதிகளில் விழிகளால் பேசிக்கொள்ளும் ஒரு சில காதல் கதைகளை, சம்பந்தப்பட்டவர்களை விட அத்தனை வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வேடிக்கைப் பார்த்துள்ளோம். இவை பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்தலே அந்த நாட்களில் பெரிய  சுவாரசியத்தை அளிக்கும் ரகசியங்களாய் இருந்துள்ளன.
ஏழு, எட்டாவது படிக்கும் பொழுது, சித்ரகார், சித்ரமாலா என்று இரவு எட்டு மணிவாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சில பாடல்களைப் பார்த்து விட்டு, ' அதெப்படி இத்தனை பேர் இருக்கிற இந்த பார்க்ல யாரையும் கண்டுக்காம ஹீரோ, ஹீரோயின் பாட்டெல்லாம் பாடி கை எல்லாம் பிடிச்சுக்கிறாங்க , நம்புறமாதிரியே இல்லியே ', என்றெல்லாம் பேசி உள்ளோம்.

பத்தாவது படிக்கையில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவியைத் தனியாக அழைத்த ஆசிரியை பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்தது, அவள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பது. "சீ, அவள் மோசமானவ அதான் லவ் எல்லாம் பண்றா", என்று வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் அவளை ஒதுக்கி வைத்த பொழுது, நானும் அந்தக் கூட்டணியில் இருந்திருக்கிறேன்.

பதினோராம் வகுப்பின் ஆண்டு இறுதித் தேர்வு நேரத்தில் எனது வகுப்பை சேர்ந்திராத, ஹாக்கி விளையாட்டில் உடன் விளையாடிய தோழியான சத்யா, மாலை பயிற்சி முடிந்த நேரத்தில் தனியாகக் கூப்பிட்டு, தான் ஒருவனைக் காதலிப்பதாகக் கூறிய பொழுது, கோபம்  வருவதற்கு பதிலாக ஆள் சரியானவனா என்று மட்டும் பார்த்துக் கொள் என்பதை மட்டுமே நீண்ட நேர யோசிப்பிற்கு பின் பதிலாக சொல்ல முடிந்தது. மெது மெதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் இது போன்று சில மாணவிகள் இருந்ததை, அவர்கள் தாங்கள் காதலிக்கிறோம்/ காதலிக்கப்படுகிறோம் என்பது குறித்துப் பெருமையுடன் திரிந்ததை  பயமும், ஆர்வமும், கொஞ்சம் பொறாமையும் கலந்து வேடிக்கைப் பார்க்கிற பெரும்பான்மைக்  கூட்டத்திலேயே இருந்திருக்கிறேன்.


பனிரெண்டாம் வகுப்பில் ஆண்டுத்  தேர்வு நெருகிக் கொண்டிருக்கின்ற வேளையில், இருக்கின்ற சில முக்கிய  வீதிகள் மற்றும் ஒன்றிரண்டு சந்திக்கும் இடங்களை மட்டுமே கொண்ட மதுரையில் சுற்றிக் கொண்டிருந்த சத்யா, ஒரு நாள், அவள் காதலனுடன் வண்டியில் பயணிக்கையில் அவளது பெற்றோரால் நேரடியாக பார்க்கப்பட்டாள். அதற்கடுத்த நாள், கை, கால் என்று உடலின் பல பாகங்களிலும் ரத்தம் கன்றிப் போய் இருக்கும் அளவு அடிபட்டு, மதிய உணவு இடைவேளையில் தேடி வந்து, தேம்பியபடி கதை சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.

வீட்டில் உள்ளோர் தன்னை அதிகப்படியாகக் கண்காணிப்பதையும், தான் மிரட்டிக் கொண்டிருந்த தங்கை எல்லாம் ஏளனமாக தன்னைப் பேசுவதாகவும் சொல்லி அழுதவள், ' என்ன இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா ஒன்னு அவன் விட்டுருப்பான் இல்லாட்டி நானே விட்டிருப்பேன், அதுக்குள்ளே பெரிசா கண்டுபிடிச்ச மாதிரி இவிய்ங்க கொடுக்கிற டார்ச்சர் தாங்க முடியல', என்ற பொழுது என்னால் அதிர்ச்சியைக் கண்களில் காட்டாமல் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் அதிகமாக நடத்தப்பட்ட வகுப்புத் தேர்வுகளில், திருத்தித் தரப்பட்ட பரீட்சைத் தாள்களுக்கு இடையே மறைத்து பைலில் அவளுக்கு வந்திருந்த காதல் கடிதங்கள் இருந்தன. ட்வைன் நூலால் கட்டப்பட்ட தேர்வு விடைத் தாள்களை விட கூடுதல் பக்கங்களைக் கொண்ட,  எழுத்துக்களின் ஆயுள் அத்தனைக் குறைவானதா என்று எனக்குள் மட்டும் கேள்வி எழுப்பிக் கொண்டேன்.

கல்லூரியில் சேர்ந்த பொழுது இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் உள்ள மாணவியர் இதில் விழுந்திருந்தனர். இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது, நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கலந்து கொள்ள வந்த வேறொரு கல்லூரியை சேர்ந்த சுப்பிரமணி ஏதேனும் விவாதம் என்று வந்தால், அத்தனை விரக்தியாக தொடர்ந்து எதிர்த்துப் பேசுவான். என் உடன் படித்த தோழி கோகிலா மிக சாதாரண எளிய தோற்றம் உடையவள். சமயங்களில் தன் தோற்றம் குறித்துத் தாழ்வு மனப்பான்மையையும் பகிர்ந்துள்ளாள். அவளின் முகவரியை பதிவேட்டில் இருந்து குறித்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் வீதியில் தினந்தோறும் முகத்தைக் காட்டுவதை, தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக மாற்றி இருந்தான் சுப்பிரமணி. கோகிலா ஒவ்வொரு தினமும் பதட்டத்துடன், அவன் வந்து போனதை விவரிப்பாள். மெலிதாக உண்டான மகிழ்ச்சியை, அவள் கவனமாக, தவிர்ப்பது தெரிந்தது. ஒரு நாள் வழியை மறைத்து சுப்பிரமணி கொடுத்தான் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து காண்பித்தாள். அழகாக அட்டைப் போட்டு முதல் பக்கத்தில் வண்ண வண்ணப் பூக்கள் வரையப்பட்டு அன்பு கோகிலாவிற்கு என்று இருந்தது.....
அடுத்தடுத்த பக்கங்களில் பெரிய பெரிய எழுத்துகளில் கவிதை என்ற பெயரில் எழுதித் தள்ளி இருந்தான்...

ஒன்றிரண்டு மட்டும் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது.....
' எல்லா விதமான உடைகளும் பொருந்தும் ஒரே பெண் இந்த உலகத்திலேயே இவள் தான் என்று தொடங்கும் ஒரு கவிதையாவது மன்னித்து விடலாம்...... ஆனால்,
மதுரையின் புகழ் பெற்றக் கோவிலை சொல்லி....
கும்பிடுவதற்காக சென்றேன்
அங்கு தெய்வமில்லை
என்று ஆரம்பித்து
கோகிலா வீட்டின் எண், தெருவைக் குறிப்பிட்டு,
தெய்வம் இங்கு இடம் மாறி இருக்கிறது ....
என்பதை படித்து அனைவரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தாலும், என்ன தைரியம் இருந்தால்  இவன் நம் கடவுளை எல்லாம் இழுப்பான் என்று லேசாக கோபமும் வந்தது.
கடைசியாக எழுதி இருந்த கவிதையில்
இவள் தான் தேவதை........ தேவதை தான் இவள் என்று முடித்திருந்த பொழுது..................
தேவதைகளுக்கான இலக்கணம் மெலிதாக புரியத் தொடங்கி இருந்தது. ஏதோ ஒரு நாளில் காதலிக்கத் தொடங்கியவர்கள், சேராமல் பிரிந்து போன பெருங்கூட்டத்தில் கடைசியில் சேர்ந்து போனார்கள்.
கல்லூரிக்குப்  பின் சில நாட்கள் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பொழுது அஸ்வினி பக்கத்திலிருந்து வகுப்பிற்கு ஆசிரியையாக இருந்தாள். காலை இடைவேளை, மதிய உணவு இடைவேளையின் பொழுது, குழந்தைகளை கவனித்துக் கொண்டே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவளின் தலை தரையை நோக்கியே இருக்கும். நிமிர்ந்திருக்கும் முகத்தைப் பார்க்கையில், வருத்தம், கவலை, எரிச்சல், இவற்றை எல்லாம் இவள் ஒருத்தி மட்டுமே இந்த உலகத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பது போல இருக்கும். ஒரு நாள் அஸ்வினியின் மதிய உணவு டப்பாவில் இருந்த உணவு கீழே கொட்டியிருந்ததை, அவள் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, ' என் லஞ்ச் ஷேர் பண்ணிக்றீங்ளா?", என்று கேட்டதும், '  நோ, தேங்க்ஸ்', என்று லேசாக புன்னகைத்தாள். சில நாட்கள் கடந்து நட்பாகிய பிறகு அவள் பகிர்ந்தது, "அந்தமானில் குடியிருக்கையில் பக்கத்து வீட்டில் குடியிருந்த வட இந்தியனை காதலித்து இருக்கிறாள். அவன் வேலை விஷயமாக மும்பை சென்றிருக்கையில், அஸ்வினியை மிரட்டி, மதுரையில் உள்ள அத்தை, மாமா இருக்கும் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சென்ற அவளது பெற்றோர், இன்னும், சில மாதங்களில் நிரந்தரமாக இங்கு வந்துவிடுவர். இந்தப் பள்ளிகூடத்திற்கும் கொண்டுவந்து விடுவது, பிறகு அழைத்து செல்வது அவளின் மாமா தான். மும்பையில் அவன் எங்கு இருக்கிறான் என்பதுவும் தெரியாமல், அவனின் அந்தமான் வீட்டிற்கு அழைத்த பொழுது, அவனுடைய அம்மா இனி தொடர்பு கொள்ளக் கூடாது என்று திட்டியதையும் அழுகையினூடே சொல்லி முடித்தாள். " 2,3 மாசம் தானே ஆகுது பிரிஞ்சு, இன்னும் 4,5 மாசம் போகட்டும், நீ வேணும்னு உறுதியா இருந்தா அந்தப் பையன் தேடி வருவான், இல்லாட்டி காலம் சரிப்படுத்திடும் உன்னை", என்றேன். சில நாட்களிலேயே வேலையை விட்டு விலகி விட்டேன். இரண்டு வருடங்கள் கழித்து அஸ்வினி அவளது திருமணப் பத்திரிகையை கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தாள். பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளை பற்றி பெருமையாக ஓரிரு விஷயங்களை சொல்லிவிட்டு, மெலிதாக புன்னகைத்து விடைபெற்றாள். அழுது, புலம்பி குணமாகிய காயத்தின் வடுவை மறைக்க செய்த முயற்சி அந்தப் புன்னகையில் ஒளிந்திருந்து இருக்கலாம்.

இன்று பள்ளிக்கு செல்லும்  குழந்தைகள் கூட வெகு சாதாரணமாக புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாக லவ் என்ற சொல் மாறிவிட்டது. தெளிவான நிலையிலோ தெளிவற்ற நிலையிலோ  மனதில், உடலில் தோன்றும் மாற்றங்களை ஏற்று காதலாகி கசிந்து உருகியதெல்லாம், ஏதோ ஒன்றை அடைந்தபின், மெல்லிய முரண்பாடுகளைக் கூட சகிக்காமல் விலகியோ, சுற்றத்தில் எதிர்ப்பு வந்ததும்  பிரிந்து செல்வதையும்  நிறையப் பார்க்கிறோம். காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்த பின், அவர்களுக்குள் இருந்த காதலை தொலைத்தவர்களையும் பார்க்கிறோம். கூடுதல் புரிதலுக்கு இணையாக, சுயநலம் தூக்கலாக இருக்கும் இந்த தலைமுறையினருக்கு கூடுதல் விரைவாக அலுத்துப் போய் விடுகின்ற ஒன்றாக இந்த காதல் மாறி வருகிறதோ என்றும் தோன்றும்.

எது எப்படி எனினும்......
இரு புறங்களிலும்
ஒரே நேரத்தில் மலர்ந்து
ஒரே நேரத்தில் உதிரும்
பூக்களால்
துன்பங்கள் குறைவு .... என்பதை மறுக்க முடியாது.
சொல்வதை விட செயலில் காதலை நிரூபிக்கும் அரிய நல்லவர்கள், தங்கள் செயல்களின் மூலமாக முன்னுதாரணமாக வாழ்கின்றார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

ஏதேனும் இது போன்று ஒரு வார்த்தை தயங்கி உச்சரித்து, ஒரு கட்டத்தில் இயல்பாக உபயோகப்படுத்தப்படும் காலத்தில், சாதாரண வார்த்தையாகிவிடலாம். அத்தனை வேகமாக பிரியமான வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்தி, சாதாரண சொற்களாக்கி, களைத்துப் போய் அமர்ந்து இருக்கும் பொழுது, வேறொரு சொல்லுக்காக காத்திருக்கிறோமா என்றும் தெரியவில்லை.

ஒரே ஒரு வார்த்தை......
ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான அனுபவங்களை இன்று வரை என்னுள் நிறைத்துக் கொண்டே வருகிறது.

  (ஜூன் 1 - 15 ... குங்குமம் தோழியில் வெளியானது )

வியாழன், 12 ஜூன், 2014

"அரிதானது - அபாரமானது" - கிடைக்கும் வரையில் மட்டுமே!எல்லா காலங்களிலும் ஒரு பொருள் தன் மீதான ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதென்பது கடினமே. நேற்றைக்குப் பிடித்தது, இன்றைக்குப் பிடிக்காமல் போகிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஏதேதோ காரணங்களால் கொண்டாடிய மனிதர்களை எளிதில் புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது, பொருட்கள் முக்கியத்துவம் இழந்து போதல் தேவலை என்றே தோன்றுகிறது. கண்களை அகல விரித்து காட்டிய ஆச்சர்யம், வேறொரு பொருளால் ஈர்க்கப்பட்ட பிறகு, அங்கு தாவுகிறது. கிடைப்பதற்கு அரிதாய் இருக்கும் வரையில் மட்டுமே பிரமிப்புகள், பிரமிக்க வைக்கின்றன.

ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், தமிழில் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது என்ற செய்தியே எங்கள் பகுதியில் இருந்தவர்களுக்குப் பெரிய அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனினும் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை.

ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்து பார்த்தப் படங்களின் வரிசை இன்னும் நினைவில் உள்ளது. முதலில் ஒளிபரப்பானப்படம் "ஆயிரத்தில் ஒருவன்", அடுத்து, "நான், சாந்தா சக்குபாய்", போன்ற படங்கள் என நினைக்கிறேன். அப்படியே வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியும், கொஞ்சம் கொஞ்சமாக நாடகங்கள், வயலும் வாழ்வும், காண்போம் கற்போம், சிறுவர் பூங்கா என்று நம் கண் முன்னே வளரத்தொடங்கியக் குழந்தையைப் போல வளர்ச்சியடைந்தது சென்னைத் தொலைகாட்சி நிலையம். ஞாயிற்றுக் கிழமை மதியவேளைகளில் ஒளிபரப்பப்படும் விருதுபெற்றத் திரைப்படங்களே, மற்ற மாநிலத்தின் திரைப்படங்களை முதன்முதலில் கண்களுக்கு அறிமுகப்படுத்தியது. சனிக்கிழமை மாலை நேரத்தில் ஹிந்தித் திரைப்படத்திற்கு முன்பே தமிழில் கதைச் சுருக்கம் சொல்லியது எல்லாம் ஏதோ பழங்கதை போல நினைவில் தங்கி உள்ளது.

 எங்கள் தெருவில், முதன் முதலாக தொலைக்காட்சி வாங்கிய வரலாற்றில் இடம் பெற்றவர் எதிர் வீட்டு லக்ஷ்மி அம்மா. ஆரம்ப நாட்களில், ஞாயிற்றுக் கிழமை படத்தின் இடையே செய்திகளும் இடம் பெற்றன. அவரோடு இணக்கமாக இருக்கும், யாருக்கும், வாரம் ஒரு முறை ஒரு திரைப்படம் முழுவதும்  காண  இவர் வீட்டில் இடம் உண்டு. இந்தக் காரணத்திற்காகவே எங்கள் தெருவில் உள்ள பலரும், அந்த அம்மா என்ன சொன்னாலும் ஆமோதிப்பர். திரைப்படத்தில் வருகின்ற வில்லன்களை, கதாநாயகிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ஏசுகின்றனரோ  இல்லையோ இந்த அம்மாவின் வாயில் இருந்து சகட்டுமேனிக்கு திட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். செய்திக்குப் பின் திரைப்படம் தொடரும் என்று போட்ட நொடியில், 'டிவி ய அமத்து, டிவிய அமத்து  கரண்ட் பில் கூட வந்துடும்',  என்று கத்துவார். அதன் பின், நான்கு மாதங்கள் கழித்து எங்கள் வீட்டிலும் தொலைக்காட்சி வந்த பிறகு தான், "செய்தி", என்ற ஒன்றை முதன்முதலில் முழுவதுமாக பார்த்துக் கேட்டேன்.
நாட்கள் செல்லச் செல்ல, தொலைக்காட்சி என்பதே அந்தஸ்தோட தொடர்பு படுத்தி பார்க்கப்பட்ட அவசியமான ஒரு சாதனமாக பெரும்பாலானோருக்கு பட ஆரம்பித்தது. அம்மா பிறந்த அனுப்பானடியில் எங்கள் மாமா வசித்த தெருவில், அங்கு முதன் முதலில் தொலைக்காட்சி வாங்கியப் பெருமையை, மாமா வீட்டினர் பெற்றனர். நல்ல நீள, அகலத்தில் அமைந்திருந்த முற்றம் உட்பட்ட வராண்டாவில் உட்கார்ந்து,  ஞாயிறு காலையில் " யஹ் ஹை மஹாபாரத் கதா" என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் மகாபாரதத்தையும், ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படத்தையும், ரசித்து விட்டு வெளியேறும் சொந்த பந்தங்களைப் பார்ப்பது ஏதோ தியேட்டரில் இருந்து வெளியேறும் கூட்டத்தைப் பார்ப்பது போல இருக்கும்.


அன்றெல்லாம், ஆன்டெனா இல்லாத கூரை அழகில்லாதக் கூரையாகவே பார்க்கப்பட்டது. நிறுத்தப்பட்டிருக்கும் கம்பியின் உச்சியில் வரிசையாக உள்ள ஏழெட்டு கம்பிகளில் இரண்டாவது உள்ள ஒரு கம்பி மட்டும் சற்று வளைந்து நீண்டிருக்கும். அத்தனைத் துல்லியமாகப் படங்களை வாங்கிய  இந்தக் கம்பி, கருப்பு நிற பட்டையான வயரால், பெட்டிக்கு பத்திரமாகக் கடத்தி, அதை எப்படி நம்மால்  பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்துடனே இருந்திருக்கிறேன். சில நேரங்களில் அக்கம் பக்கம் வீடுகளில் சரியாக தொலைக்காட்சி தெரியவில்லை என்றால், இந்த ஆன்டெனாவை பிடித்து ஆட்டி, திருப்பி ஏதேதோ செய்து, கீழே டிவி தெரியுதா என்று கேட்பதை அந்த நாட்களில் அடிக்கடிக் கேட்டு இருப்போம். சமயங்களில் காகம் இந்தக் கம்பிகளில் அமரும் பொழுது, கம்பிகளில் ஏற்படும் அதிர்வால் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்கள் கூட சரியாக தொலைக்காட்சித் தெரியாமல் போக காரணமாக இருக்கலாம் என்று ஒவ்வொரு வீட்டிலும் இருந்த யாராவது ஒரு விஞ்ஞானி சொல்வர். ஒரு வேளை காகங்களிடம் கேட்டு இருந்தால், இருக்கிற மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறவர்கள், அவற்றைப் போன்ற பறவைகள் வந்து அமர ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் வைத்த இயந்திர மரம் என்று எண்ணினோம், என்று அவைகள் சொல்லியிருக்குமோ?!. :)

அப்பொழுதெல்லாம், திரைப்படமும், ஒளியும் ஒலியும் ஒளிபரப்பாகும் நேரங்களில் சாலைகளில் போக்குவரத்துக் குறைவாக இருக்கும். கடைகளில் கூட்டமில்லாமல் இருக்கும். முடிந்த அளவு அந்த நேரங்களில் தங்களுக்கென்று எந்த ஒரு வேலையும் வைத்துக் கொள்ளாமல், முழு மனதுடன் தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருக்க அனைவருமே பிரியப்படுவார்கள்.
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கியப் புதிதில், பாட்டிக்கு ஆர்வம் அதிகம்.
பகலிலேயே
 ' தீவா....டிவியை போடு', என்பார். '
' இந்தில யாராச்சும் பேசுவாங்க, உனக்கென்ன புரியப்போவுது, நீ சாயங்காலம் பாரு',
' பரவாயில்ல, டிவி போடு', என்று விடாப்பிடியாக கேட்பார்.

தொலைக்காட்சியை இயக்கி எதுவும் வராமல் வெள்ளைப் பின்னணியில், கறுப்புப் புள்ளிகள் ஒரு வித இரைச்சலுடன் தெரியும்.
'இதென்ன புள்ளிபுள்ளியா ஆயுது'
' நாந்தேன் சொன்னேன்ல அவ்வா, கேட்டியா நீ ',
'ஹ்ம்ம்.. இருக்கட்டும் கொஞ்ச நேரம் பொறு', என்று தளராத உறுதியுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கையில், சில,பல நிமிடங்கள் கழித்து, கறுப்பு வெள்ளைக் கட்டங்கள் சூழ நடுவில் வண்ண,வண்ணக்கட்டங்கள், "ங்", என்ற ஒரே வித சத்தத்தோடு மாறும் சின்னத்திரை ஒளிரும்.
'சொன்னேன்ல, வந்திருச்சு, பார்த்தியா', என்று வெற்றிப் புன்னகையோடு காத்திருப்பார். அதன் பிறகு, அரைமணி நேரம் கழித்து ஒளிபரப்பாகும் UGC நிகழ்ச்சியை ஹிந்தியில் பார்க்க ஆரம்பித்த உடனேயே கண்கள் சொருக அப்படியே தூங்கி விடுவார் பாட்டி.
புரிகிறது, புரியவில்லை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நம் வீட்டில் இருந்தபடியே , எங்கேயோ நடப்பதை எளிதில் பார்க்க முடிகிறது என்பதே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும், என நினைக்கிறேன்.

போட்டிப் போட்டுக் கொண்டு மாறி மாறி செய்தி வாசிப்பவர்கள் தரும் செய்திகள், ரயில் சிநேகம் போன்ற மறக்க முடியாத நாடகங்கள் என பலவற்றைத் தந்திருக்கிறது சென்னைத் தொலைக்காட்சி நிலையம். சற்று பின்னர் ஒளிபரப்பான சன் சேனலில் வாரமொரு முறை ஒளிபரப்பான மர்மதேசம் போன்ற தொடர்கள், ஒலிக்கின்ற தொலைபேசியை கூட எடுக்கவிடாமல் செய்திருக்கின்றன. அடுத்த நாள் பள்ளி/கல்லூரி/அக்கம்பக்கம் ரசித்து பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்களில் மெதுமெதுவாக முக்கியமான இடத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடித்தன. செய்தித்தாள்களும் இவற்றின் நிகழ்ச்சிநிரலை வெளியிடுவதற்காக தனிப் பகுதியை ஒதுக்க ஆரம்பித்தன. பத்திரிக்கைகள் கூடுதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி விமர்சனமும் எழுத ஆரம்பித்தன.
தொலைக்காட்சிப் பார்ப்பதால் படிப்பில் கவனம் சிதறுகிறது என்று திட்டு வாங்கிய முதல் தலைமுறை நாங்கள் தான் என நினைக்கிறேன்.
கிரிக்கெட் என்ற விளையாட்டை பட்டித்தொட்டிக்கெல்லாம் கொண்டு சேர்த்து, பெரிய அளவிலான ரசிகர்களை பெற்று தந்ததில் மிக முக்கிய இடத்தைப் பெற்ற தொலைக்காட்சியை இந்த விளையாட்டு விஷயத்தில் வரம்,என்பதா சாபம் என்பதா, எனத் தெரியவில்லை.

பலவருடங்கள் அசைக்க முடியாத தூர்தர்ஷனை, படிப்படியாக வந்த தமிழ் சேனல்கள், பிற மொழி சேனல்கள், அதிலும் இன்று எண்ணிக்கைக்குள் எளிதில் அடக்க முடியாத அளவு உள்ள விதவிதமான சேனல்கள் பின்னுக்கு தள்ளிவிட்டன. திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை, விளையாட்டு, செய்தி, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், ஆன்மீகம், விலங்குகள், என்று கிட்டத்தட்ட எல்லாவற்றையும், ரசனைக்கேற்றபடித் தனித்தனியாகப் பார்ப்பதற்கென்று பல்வேறுபட்ட மொழிகளில், வரிசையாக பல சேனல்கள் உள்ளன. இவை அனைத்தையுமே கைக்குள் கட்டுப்படுத்திப் பார்க்க இருக்கும் ரிமோட், என தொலைக்காட்சி விஸ்வரூப வளர்ச்சியடைந்து இருந்தாலும்  தொடர்ச்சியாக அரை மணி நேரம் ஒதுக்கி ஒரே சேனலைப் பார்க்கும் பொறுமை நம்மிடம் குறைந்து வருவது உண்மையே.

குட்டிக்குட்டிக் கதைகளை அடக்கிய விளம்பரங்களை ஆவலுடன் ரசித்துப் பார்த்த காலம் நினைவில் மங்கியிருக்கையில், விளம்பரம் வந்த நொடியில் சேனலை மாற்றிக் கொண்டிருக்கின்றன விரல்கள். பேஸ்புக் கில், விளையாட்டாக ஒரு முறை நிலைத்தகவலாக நான் பதிந்தது, "தொலைக்காட்சியில்  சுவாரசியமான நிகழ்ச்சிகளின் பொழுது அடிக்கடி வரும் ஒரே விளம்பரத்தைக் கண்டால்,  இந்தப் பொருளை, எக்காலத்திலும் வாங்கவே கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்".  :P
உலகின் பல் வேறு மூலைகளில் நடை பெறும் விளையாட்டு நிகழ்சிகளை நேரடியாக கண்டு களிக்க, அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை  உடனுக்குடன் கூர்ந்து கவனிக்க, பொழுதை போக்க பாடல், திரைப்படம் பார்க்க, சமைத்தும் பார்க்க, என நம்மில் பலரும் சும்மாவே இருக்க இயலாத கட்டை விரலால் சில நிமிட இடைவெளியில் அழுத்தி, அழுத்தி கண்ணாடித் திரையைப் பார்க்கிறோம் . குட்டித்திரையிலிருந்து, LCD, LED, என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளை உபயோகிக்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், தொலைக்காட்சி சரியாக தெரியாவிட்டால் ஆன்டெனாவிற்கு பதிலாக இப்பொழுது  ரிமோட் அடி வாங்குகிறது.

ஒருவர் பார்க்கும் நிகழ்ச்சியையே இன்னொருவரும் பார்க்கும் பொறுமை குறைந்து வருவதால், இன்று சில இடங்களில் ஒரு வீட்டிலேயே ஒன்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.

புகைப்பிடிப்பது, மது அருந்தும் காட்சிகளின் பொழுது உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரித்து கீழே வாசகங்கள் ஓட, திரையில் ஏதேனும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளின் பொழுது இது போல ஒரு ஆலோசனை, அறிவுரை வாசகம் வருவதில்லை என்று நினைப்பேன். அட்டையின் மேற்புறத்தில் அறிவுறுத்தி இருந்தாலும், அதனை சட்டை செய்யாமல், புகைக்கும், மது அருந்தும் கூட்டம், இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று பெண்கள் விஷயத்தில் சொல்வதை மட்டும் கேட்டு விடுமா என்ன என்று எனக்குள்ளேயே பதில் சொல்லிக் கொள்வேன்.

கேபிள் டிவி, DTH, ஏதாவது ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, சின்னத்திரை, வரிசையாக, வகைவகையாக கொண்டு வந்து கொட்டும் நிகழ்சிகளை நாம் பார்க்கிறோமோ, இல்லையோ, அமைதியாகவாவது நம் உடன் இருந்தே ஆக வேண்டிய பொருட்களில் ஒன்றாகி விட்டது தொலைக்காட்சி .

அரிதான ஒன்று, கொண்டாடப்பட்ட ஒன்று, மலிந்து கிடைக்கும் நிலையில், முக்கியத்துவம் குறைந்து போவது தவிர்க்க முடியாதது. விரும்பிக் கிடைப்பவற்றை சிறிது சிறிதாக அனுபவிப்பதின் மூலமாக சுவாரசியத்தை நீட்டிக்கலாம்.

 (  மே 16 - 31 ... குங்குமம் தோழியில் வெளியானது )

வியாழன், 22 மே, 2014

:)

விடுமுறைக்காக விருதுநகரில் தாத்தா வீட்டிலிருந்த வருணை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். 25 நாட்கள்... மொபைலில் கூட பேசவில்லை. எட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பையனுக்கு, பிரிந்திருந்த நாட்களில் அம்மாவை பார்க்கனும் என சொல்ல வேண்டாம், பேசனும் என கூடவா சொல்லத் தோன்றாது. இதெல்லாம் பெருமை என்று எண்ணியிருந்ததால், இந்த நாட்களில் வீம்பாக நானும் பேச முயற்சிக்கவில்லை. ஆனால், நேற்று என்னவோ தாங்கிக் கொள்ளவே முடியாததால், கோபத்தில் ஏதேதோ திட்டினேன். ஏதோ விளக்கம் சொல்ல வாயெடுத்தவனை, பேசாதே என்று கோபத்துடன் அதட்டி விட்டு, கைப்பையில் இருந்த பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பேருந்து ஏதோ அக்னிக் கடலில் மிதப்பது போல சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் நெருங்கிக் கொண்டிருக்கையில், எனது வலது முழங்கையை அவனது இரு விரல்களால் தட்டினான். வருண் பக்கம் திரும்பி என்னவென்பது போல பார்த்தேன். முகம் கொள்ளாதப் புன்னகையுடன் இருந்தான். அவனது வலது கையின் ஆள்காட்டி விரல் ஜன்னலுக்கு வெளியே சுட்டிக் காட்டிய திசையில், சில நூறு அடிகள் தள்ளி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மெலிதாகப் புன்னகை படர்ந்த முகத்துடன், வருண் முகத்தைப் பார்க்க, சமாதானப்படுத்தி விட்டோம் என்று  பலத்த சிரிப்புடன், என் வலது கையைப் பிடித்துகொண்டு, மீண்டும் ரயிலைப் பார்க்க ஆரம்பித்தான். சிறிது தூரம் வரை ரயிலுடன் வெயிலை மீறி குதூகலத்துடன் பயணித்தோம்.

திங்கள், 12 மே, 2014

பாலுக்கு அடுத்து இட்லி - பாலுக்கு முன்பும் இட்லிபிறந்தக் குழந்தை பாலிற்கு பிறகு திட உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கையில் முதலில் சாப்பிட சகலரும் உண்ணக் கொடுக்கும் உணவு இட்லி. ஆவியில் வேக வைத்து, எளிதில் ஜீரணமாவதாலேயே, திரவ ஆகாரம் மட்டுமே எடுத்துக் கொள்ள நேரும் முதுமை அல்லது நோயினால் அவதிப்படும் காலங்களில், திரவ உணவிற்கு முன்பாக கடைசியாக எடுத்துக் கொண்ட திட உணவாகவும் இட்லியே இருக்கிறது.( பாலுக்கு அடுத்து இட்லி - பாலுக்கு முன்பும் இட்லி... என்ன ஒரு கண்டுபிடிப்பு...! ) விருந்து, விடுதி, வீடு, உணவகம் என்று எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி தன்னை நுழைத்துக் கொள்ளும் வெள்ளைக்காரன். சிற்றுண்டி என்று காணப்படும் பட்டியலில் முதல் இடத்தை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இட்லியின் இடம் எளிதில் அசைக்க முடியாதது. உடன் வைக்கப்படும் விதவிதமான சட்டினி, சாம்பார், பொடி அத்தனையும் கொடுக்கும் விலைக்கு ஏற்றார் போல கூடவோ, குறையவோ இருக்கும்.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மதிய உணவாக என் டிபன் பாக்சை பல நாட்கள் அலங்கரித்திருக்கிறது  இட்லி. காலை உணவாகவும், மதியம் கொடுத்து விடவும், எளிமையான ஒன்றாக இருந்ததால் வாரம், மூன்று அல்லது நான்கு முறை இரண்டு வேளைகளிலும் , அதுவும் பெரும்பாலும் தேங்காய் சட்னியுடன் உள்ளே செல்லும் ஒன்று. மதிய உணவு, மதிய நேரத்தில் சமைக்கப்படும் வீடுகளில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் காலை உணவையே, மதியத்திற்கும் எடுத்து சென்றதில் நானும் ஒருத்தி. எத்தனையோ முறை, "பழைய சோற்றை தாளிச்சு வைங்க, இல்லாட்டி வெறும் கஞ்சிப் பிழிஞ்சு மோர் ஊத்தி வைங்க, அது அமிர்தம், இந்த  இட்லி வேணாம்" என்று சொல்லியும், எப்போதும் கேட்டதில்லை என் அம்மா.
மகள் சொல்லை கேட்காத தாய் :P
ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளியில் படிக்கும் பொழுதெல்லாம் வீட்டில் கிரைண்டர் இருக்காது. வாரத்திற்கு மூன்று முறை, ஊற வைத்த அரிசியையும், உளுந்தம்பருப்பையும், கழுவி சுத்தம் செய்து, மாலை நேரங்களில் உரலில் ஆட்டி எடுக்கும் அம்மா, அமர்வதற்கென்றே, உரலின் உயரத்திற்கு ஏற்றார் போல ஒரு பலகை இருக்கும். ஒரு பக்கம் ரேடியோ பாடிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் மரத்தடியில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் வாசல் அருகில் கிடந்த உரலில், மாவு ஆட்டிக் கொண்டிருக்கும் அம்மா, இந்தக் காட்சிப் பல வருடங்கள் தொடர்ந்தது. நான் எதிர்த்துப் பேசும் பொழுது, சேட்டை செய்வதாக நினைக்கும் நேரங்களில், என்னையும் தண்டனையாக மாவாட்ட சொல்வார் அம்மா. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, அரைத்தது போதுமா, போதுமா என்று முழங்கை வரை மாவை கையில் ஒழுக விட்டுக் கொண்டே எடுத்து சென்று கேட்பதற்கு, பதில் சொல்ல எரிச்சலுறும் நேரங்களில், இரண்டு திட்டுத் திட்டி விட்டு என்னிடம் இருந்து ஆட்டு உரலை அவரே வாங்கிக் கொள்வார். எப்பொழுதாவது உளுந்து அதன் தன்மைக்கு ஏற்ப அதிகமாகப் பொங்கும், அந்த நேரங்களில் அரிசி மாவுடன் கரைக்க எடுத்துக் கொண்டது போக மீதி உள்ள உளுந்தம்மாவில், வெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி எல்லாம் கலந்து குழைய வைத்துக் கொடுக்கும் உளுந்தங்கஞ்சி, அதன் சர்க்கரைப் பொங்கலைப் போன்ற இனிப்பின் காரணமாகவே, இரண்டு வாய்க்கு மேல் இறங்க மறுக்கும். ( இந்த மாவை இப்படி மாற்றுவதற்கு பதில், மிளகு, வெங்காயம், உப்பு  போட்டு வடையாகத் தட்டித் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் இப்பொழுது ஏற்படுகிறது.)

இதே, வெயில் காலத்தில் ஏதேனும் பகல் பொழுதில், கஞ்சியைப் பிழிந்து, அத்துடன் உப்பு, மிளகாய்ப்பொடி, சீரகம் கலந்து உரலில் இட்டு வடகத்திற்கு ஆட்டும் பொழுது, வலிய சென்று அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்வேன். ஆட்டும் பொழுதே வாயில் உப்பு இருக்கா என்று சுவைத்துப் பார்த்து சோதிக்கும் பொழுதெல்லாமே விதவிதமான ருசியைக் கொடுக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இருப்பதற்காக மட்டுமே விரும்பி அந்தப் பலகையில் அமர்ந்துள்ளேன்.
முதல் நாள் ஆட்டிய மாவு காலையில் வேகவைத்து எடுக்கப்படும் இட்டிலி காலை, மற்றும் மதிய உணவாக இருந்து, அதற்கடுத்த நாள் காலையில், தோசையாக மாறும். எனக்கு, இந்த கம்பளிப்புழு, வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போல இருக்கும், ஒரே மாவில் தயாரான பிடிக்காத இட்லி, அடுத்த நாளே நாவை சுண்டி இழுக்கும் சற்று புளித்த சுவையுடன் தோசைக்கு மாறுவது.
அந்த நாட்களில், கொடுமைக்கு என்றே, மதிய நேரத்தில் உடன் பயில்வோர் கொண்டு வரும் லெமன் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, போன்ற எதுவுமே அழகாக தெரியும் இட்லியின் அருகில். ஏழு, எட்டாம் வகுப்புகள் செல்ல செல்ல, உடன் இருக்கும் தோழியருடன் கொஞ்சம் என்னுடயதைக் கொடுத்து, அவர்களுடையதை எடுத்து என்று கொஞ்சம் மாற்றிக் கொள்வேன். கல்லூரி நாட்களில், காலையில் இட்லி என்றால் காலையில் சாப்பிடுவதோடு சரி,  மதிய நேரங்களில் உடன் சாப்பிடுபவர்களிடம், வலுக்கட்டாயமாக கூட மாற்றி, வேறு உணவை சாப்பிட்டு இருக்கிறேன்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் என்று பத்து நாட்கள் ஏதேனும் கிராமத்தில் தங்க நேர்கையில் , காலை உணவாக இட்லி பரிமாறப்படும் பொழுதெல்லாம், விரதம் என்று சாப்பிடாமலே இருந்திருக்கிறேன்.

விஷேச வீடுகளில் இலையில் வைக்கும் முன்பே கை நீட்டித் தவிர்க்கும் உணவாகவும், உணவகங்களில், தவறியும் ஆர்டர் செய்யாத ஒரே பதார்த்தம் இட்லி.

திருமணத்திற்குப் பின், அந்தப் பாத்திரத்தை உபயோகிக்கவே இல்லை. மகனிற்கு  திட உணவு ஊட்டுவதற்காக இட்லிப் பாத்திரத்தை சுத்தம் செய்து, அதன் இரண்டு தட்டுகளில் பரத்துவதற்காக வெள்ளைத்துணியை அளவெடுத்து வெட்டி, சுத்தம் செய்து, அரைத்த மாவை ஊற்றி, வெந்த இட்லி திருப்தியாக வராததால், திரும்பவும், பாத்திரம் மேலே போனது. அவனுக்கு மட்டும் கடைகளில் வாங்கிக் கொடுப்பதோடு சரி. பழையபடி இட்லி வாசமற்ற சமையலறை ஆனது.

பல முறை எடைக் குறைக்கும் வழிகளில், ஆவியில் வேக வைத்த இட்லி நல்லது என்பதை வாசித்தாலும், வேப்ப இலையைக் கூட தின்னத் தயார். இட்லி ..ம்ம்ம்ஹ்ம்ம்.... இதற்கு பதிலாக இரண்டு கிலோ எடை கூடுதலாக கூட இருந்துவிட்டுப் போகிறேன் என்று தான் இருந்து வருகிறேன்.

காய்ச்சல், போன்று எந்த ஒரு வியாதி வந்தாலும், எழுதிக் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுடன் மருத்துவர் தவறாது இட்லியை உண்ண சொல்லும் பொழுது, வியாதியை விட கொடுமையாக தோன்றி இருக்கிறது, அதை உண்ண வேண்டும் என்று நினைவு.

 தற்பொழுது எளிதில் அரைத்து எடுக்க நவீன கிரைண்டர் உள்ளது. அரைக்க முடியாத நேரங்களில் வாங்கி உபயோகிக்கக் கிட்டத்தட்ட ஒவ்வொரு தெருவிலும் யாரேனும் ஒருவராவது இன்ஸ்டன்ட் இட்லி மாவு என்று அரைத்து விற்பனை செய்கிறார். இதுவும் இல்லை என்றால், பலசரக்குக் கடை உட்பட பல கடைகளிலும் கிடைக்கிறது, தயாரித்த தேதி குறிப்பிட்ட பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மாவு என்று எளிதில் நம் கை எட்டும் இடங்களில் தாராளமாகக் கிடைக்கிறது. இணையத்தில் பார்த்தால்,எண்ணற்ற வகைகளில் செய்முறை விளக்கங்களுடன் காணப்படும் படங்கள், இட்லியை இப்படி எல்லாம் மாற்ற முடியுமா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எப்படி இருந்தாலும், பிடிக்காததை என்ன செய்தால் என்ன என்று போய் விடுவேன். காலத்திற்கு ஏற்றபடி, நவீனமாக நுழைந்து, எளிதாக எட்டும் உயரத்தில் புன்னகைத்துக் கொண்டே தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது  இட்லி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 எத்தனை தினுசு தினுசாக தொட்டுக் கொள்வதற்கென்று செய்து, சுவையாக இட்லியை வேகவைத்து ஆவிப் பறக்க பரிமாறினாலும், தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்ட நாட்களில் மூக்கில் ஒட்டிக் கொண்ட வெறுப்பு வாசம், இன்னுமும்  உள்ளே நுழைய விசா கொடுக்க மறுக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு மூன்றாம் வகுப்பு படிக்கும் வருண்  " அம்மா ப்ளீஸ் பிரெண்ட்ஸ் எல்லாம் இட்லி எல்லாம் கொண்டு வர்றாங்க,  எனக்கும் ஒரு நாளாச்சும் இட்லி வச்சு விடுங்க..... "  .............................. என்றதும்
.................................
தலையில் வைத்திருந்த கையை எடுத்து விட்டு, இட்லி பாத்திரத்தை எடுத்து சுத்தப்படுத்தத் தொடங்கினேன்
என் பிரியம், ஆசை, விருப்பம் எல்லாம் பிள்ளைக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காமல் இருக்கும் ஒன்று எனக்கு ஆகப் பிடித்ததாக இருக்கலாம். என் குழந்தை என்று வருகையில், அவனின் மீதிருக்கும் அதீதப் பிரியம் காரணமாக, உணவு என்ற விஷயம் மட்டுமில்லை, எத்தகைய முரண்பாடுகளையும் எளிதில் தள்ளி வைத்து விட்டு, எல்லா நொடிகளிலும் நேசத்துடன் மட்டுமே இருக்க முடிகிறது.
நாம் விரும்பாததையும், நாம் விரும்புகிறவர்களுக்காக செய்வது மகிழ்ச்சியே!

 (மே 1 - 15 ... குங்குமம் தோழியில் வெளியானது)


செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வெறுமையும் பரிசே!


கல்லூரிப்  படிப்பை முடித்தவுடன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் கற்றுக் கொள்வதற்காக சென்ற வகுப்பில் பரிச்சயமான தோழிகளில், சம வயதில் இருந்ததாலோ என்னவோ,சுதாவிடம் மட்டும், தொடர்ந்தது நட்பு. அன்றைய நாட்களில், அதிகம் அரட்டை அடித்துப் பொழுது போக்கிய இடங்களில் அவள் வீட்டு மொட்டை மாடியும் ஒன்று. இருவருக்கும் ஏதேனும் வாக்குவாதம் வரும் நேரங்களில் எல்லாம், விஷயத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு எனக்கு மட்டுமே ஆதரவளிக்கும், சுதாவின் அக்கா ராதாவை, பார்க்கும் எவருக்கும் பிடித்துப் போகும். களையான முகத்துடன், பார்க்கும் எல்லா நேரங்களிலும் புன்னகை பூத்து இருப்பாள். இதில், பிடித்த இனிப்பென்றால், அவளுக்கு உரிய பங்கினை எடுத்து வைத்து, சுதாவிடம் எனக்கு கொடுத்தனுப்புவாள்.

ஒரு நாள் திருமணப்பத்திரிக்கையை கொடுப்பதற்காக மாலை வேளையில் அவள் வீட்டிற்கு சென்று இருந்தேன். சுதாவின் அப்பா சற்று கூடுதலாகவே வெகுளி. அவர், ' பரவாயில்லயே, பொண்ணுகளே கல்யாணப் பத்திரிக்கை எல்லாம் கொடுக்கிற அளவு முன்னேறிட்டீங்க', என்று சொன்ன நொடியில் தாள முடியாமல் நான் சிரித்ததன் காரணம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். பக்கத்திலிருந்து என்னைக் கிள்ளிய சுதாவிற்கு தெரியும். ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன்பே, வீட்டிற்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்தவள். அவளின் அக்காவின் திருமணம் முடிந்த உடன் வீட்டில் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அந்த ஆண்டிலேயே நடைபெற்ற ராதாவின் திருமணத்திற்கு சென்னையில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு ஓரிரு முறை ஊருக்கு வந்தும், சுதா வீட்டிற்கு செல்ல முடியவில்லை. பல மாதங்கள் கழிந்த நிலையில், மதுரை வந்த அன்றே, சுதா வலுக்கட்டாயமாக அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றாள். வழியிலேயே தெரிவித்ததன் சாராம்சம், ராதா கருவுற்று ஏழு மாதங்கள் சென்ற பிறகே, அவளுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தாமதமாக தெரிய வந்தும், விடாப்பிடியாக அதற்கடுத்த மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் பின் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே.

எதுவுமே செய்ய இயலாமல் போகும் இதுமாதிரி நேரங்களைக் கடப்பது என்பது, அந்த நோயின் தீவிரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

வீட்டிற்குள் சென்ற பொழுது, ராதாவின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற அவரின் அம்மா, வலிந்து உருவாக்கினப் புன்னகையுடன் வரவேற்றாள். வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையில் திரைச்சீலையை ஒதுக்கி விட்டு உள்ளே சென்ற பொழுது மொட்டைத் தலையுடன், வித்யாசமான தோற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ராதாவைக் கண்டதும், உள்ளே ஏதேதோ ஓட, திரள துவங்கியது கண்ணீர்.

'வீட்டில இருக்கவங்க தான் இப்படி இருக்காங்கன்னா, நீயாவது வழக்கம் போல பேசு', என்றாள்

சரியாக சொன்னால், இந்த வார்த்தைகளை குழறிக் குழறி துப்பினாள். சரளமாக, சிரமில்லாமல் அவள் பேசுவது போல இருந்தாலும், சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது உச்சரிப்பு.

'சரியாகிடும் க்கா', என்ற என்னை, சிரித்துக் கொண்டே, 'உங்க யாருக்கும் தெரியாது எப்போ, என்னன்னு........ எனக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி, அதுக்குள்ள உன்னிஷ்டபடி இருனு ஆண்டவன் சொல்லி இருக்கப்போ, சந்தோஷமா இருக்கேன். பையனுக்கு என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு முடிச்சிட்டேன். அம்மா, சுதா எல்லாம் என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க......... அப்புறம் சொல்லு சென்னை எப்படி இருக்கு', என்று தொடர்ந்தவளிடம், துயரத்தை முழுக்க சுமந்து கொண்டிருந்த அந்த நொடியில் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

என்ன பேசுவது என்று தெரியாமலேயே, அவளின் பரிதாபா தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் நொடிகள், யுகங்கள் போல கடந்து கொண்டிருந்தன.

மீண்டும் ராதாவே, ' எவ்ளோ நேரமாச்சு தீபா வந்து, காபி கொடுக்க முடியாது?' என்று அதட்டலுடன் தங்கையைப் பார்த்து சொன்னாள்.

ராதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மெலிதாகத் தட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது என்னால். அவளோ என் தலையைத் தடவிக் கொண்டே, 'வர்றப்போ, போறப்போ, என் பையனை ஒரு பார்வை பார்த்துக்கோ', என்றதும், கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் தளும்பியது எனக்கு. வெகு இயல்பாக என்னைத் தேற்றிக் கொண்டே, 'காபியைக் குடி', என்றாள்.

இது மாதிரியான சமயத்தில் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுக் குடித்த காபியின் ஒவ்வொரு சொட்டும், நாக்கின் நுனியிலிருந்து வயிற்றின் உள்ளே கொடிய விஷம் இறங்குவது போல இருந்தது.

கடந்த நாட்களில் நாங்கள் மூவரும் பேசி மகிழ்ந்த ஓரிரு சம்பவங்களை மிகவும் ரசனையுடன் நினைவு படுத்தினாள். கனத்த அமைதி சில நிமிடங்கள் தொடர்ந்தது. 'கிளம்புறேன்', என்று மீண்டும் அவளின் கைகளைப் பற்றி விடுவித்தேன். புன்னகையுடன் கை அசைத்தாள்.

வலிமையைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டாத ராதாவின் வார்த்தைகளைப் போலவே, உள்ளேயும் அதே வலிமை இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அந்த நொடிப் பிரார்த்தனையாக இருந்தது.

வெறுமையால் நிரம்பிய வித்யாசமான மனநிலையோடு வீடு வந்தடைந்தேன்.

அதன் பிறகு சில மாதங்களில் ராதா இறந்த பொழுது சென்னையில் இருந்தேன். எட்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. தற்பொழுது அந்த குடும்பம் மதுரையில் இல்லை.

இன்றும் வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகளின் பொழுது, சிரித்துக் கொண்டிருக்கும் ராதாவின் முகம் மனதில் வந்து சொல்லும் செய்திகள் பலவற்றை மொழி பெயர்க்கத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.

அபூர்வமாக என்னை பாதிக்கும் ஏதேனும் சம்பவத்தின் பொழுது சூன்யத்தின் மத்தியில் இருப்பதாகவே தோன்றும். அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலாகவே இருந்தாலும், வெற்றி பெறப்போவது நான் தான் என்ற நினைப்பில் எதிர் கொள்வதால், போராட்டம் பழக்கப்பட்டதுடன் மோதுவது போல் இருக்கும். சமயங்களில், 'வெறுமை', மற்றைய உணர்வுகளை விட தொடர்ந்து நீடித்தால், எதையுமே கண்டு கொள்ளாமல் எளிதாகப் பயணிக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு.

வெறுமையை நமக்குப் பரிசளிப்பவர்கள் பெரும்பாலும், நம் பிரியத்துக்கு உரியவர்களாகவே இருக்கிறார்கள்.
( ஏப்ரல் 16 - 30...குங்குமம் தோழியில் வெளியானது)