புதன், 18 மார்ச், 2015

பெங்காலி மாதிரியா தெரியுது?

கடந்த சில நாட்களுக்கு முன் சென்ற சுற்றுலாவில், கேங்டாக்கிலும், டார்ஜீலிங்கிலும், கடைகளில் ஏதேனும் பேச ஆரம்பிக்கும் போது, ஹிந்தி ஆங்கிலத்தை தவிர்த்து நேரடியாக பெங்காலியில் என்னிடம் பதில் சொல்லவோ, விளக்கவோ ஆரம்பித்தனர். என் பதிலைக் கேட்ட பின்னர் தான் பொதுவாக, ஆங்கிலத்திற்கோ, ஹிந்திக்கோ மாறும் உரையாடல் தொடர்ந்தது. இது போன்ற ஓரிரண்டு நிகழ்வுகள், சென்னையில் நாங்கள் இருந்த பொழுதும் நிகழ்ந்தது உண்டு.  அதிலும் சிக்கிமில் ஒரு உணவு விடுதியில் வங்காள மொழியில் பேசிய மேலாளர் நான் மதுரை என சொல்லியதை சந்தேகம் முழுக்க அகலாத விழிகளுடன் இறுதியில் ஏற்றுக் கொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கொல்கத்தா விமான நிலையத்தில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றேன். முகம் அலம்பியபடி மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த வாஷ் பேசின்களில் இருந்து சில அடிகள் தொலைவில் இருந்த கதவை நோக்கி சென்ற பொழுது, அதன் அருகே தரையை துடைத்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணி, புன்னகை பூத்த முகத்துடன் என்னவோ சொன்னார். அரையடிக்கும் மேலே ஆரம்பித்த அக்கதவின் கீழே சோப்பு நுரையாக இருந்தது. ஒரு வார்த்தை கூட புரியாத அந்த வசனத்தில், நானாக யூகித்தது, அதன் உள்ளேயும் கழுவி விட்டுவிடுகிறேன், சற்று பொறுக்கவும் என. ஓரிரு நிமிடத்தில் மீண்டும் அந்தப் பெண்மணி, உள்ளேயும் சுத்தம் செய்துவிட்டு அதே பெங்காலியில் ஏதோ என்னிடம் சொன்னாள். இப்பொழுது போகலாம் என அவள் சொல்வதாக சுயமாக மொழி பெயர்த்து உள்ளே சென்ற நொடியில், முகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தமிழில், ' பார்த்தியா, தெரியாம நாம உள்ள போனதும், நம்ம கிட்ட இந்த பொம்பளை என்னா கத்து கத்துச்சு, இவங்க ஆளுகனதும் எப்படி அமைதியா பேசுது, என்று தொடர்ந்தவளுக்கு 'அவங்கவங்க ஊர்ல இருந்தா அவங்கவங்களுக்கு கிடைக்கிற மரியாதை தனி தான்', என இன்னொருத்தி சொல்லிக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே வெளியே வந்தவுடன், ' நான் மதுரைக்காரி', என சொல்ல நினைத்து அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். பதிலுக்கு குழப்பத்துடன் புன்னகைத்தபடி, முகத்தை சரி செய்தவரை போதும் என வேகமாக கிளம்பி வெளியேறினர். சற்று பெரிய கண்கள், எடுப்பற்ற மூக்கு, படர்ந்த முகம் இவர்களை குழப்பி, என்னிடம் வங்காளத்தில் உரையாட வைத்திருக்கலாமோ... என்னவோ... :)

செவ்வாய், 3 மார்ச், 2015

உதிர்ந்த உதறல்

ஓடுதளத்திலிருந்து மிக மெதுவாக கிளம்பி, நினைத்துப் பார்த்திராத வேகத்தைக் கூட்டி ஓட ஆரம்பித்த விமானம், தரையை விட்டு மேல் நோக்கி சற்று சாய்வாக ஏற ஆரம்பித்தது. அதுவரை இருந்த விமானப் பயணம் குறித்த பயம், திகில் கலந்த வியப்பாக மாறிய நொடியில், உற்சாகம் பொங்க 'ஹே' என உரக்கக் கூச்சலிட்ட நாங்கள், சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முதல் பயணத்தை நினைவு கூர்ந்திருக்கலாம். மேலே எழும்பிக்கொண்டிருந்த விமானத்தின் உள்ளிருந்து,  கீழே தெரிய ஆரம்பித்த சென்னையில் இருந்த கட்டிடங்கள், வீதிகள் எல்லாம் சிறியதாகிக் கொண்டே வர, சில நிமிடங்களில் கண்களுக்கு தெரிந்தது அழகான சாட்டிலைட் வியூ. சிறிது நேரம் காதுகள் அடைப்பது போலவும், நாக்கு வித்யாசமான சுவையை உணர்வது போலவும் இருந்தது. 

சில மாதங்களுக்கு முன், சென்னையிலிருந்து கொல்கத்தா, பின் கொல்கத்தாவிலிருந்து பாக்தோரா வரை முதன் முறையாக விமானப் பயணம் செய்ய பதிவு செய்திருந்தோம். அன்றே அங்கிருந்து கேங்டாக் வரை தரை வழியாகப் பயணம், இரண்டாவது நாளும் சிக்கிம், மூன்றாவது நாள் டார்ஜிலிங், நான்காவது நாள் மீண்டும் பாக்தோரா, கொல்கத்தா வழியாக சென்னைக்கு  விமானப்பயணம். நேற்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கிளம்பி, இன்று காலை மதுரை.

விமானத்தின் உள்ளே அருந்தத்தரப்பட்ட குடிநீரை, பழச்சாறு இல்லை என்பதால் மறுத்து வேடிக்கைப்பார்த்தபடி வந்த கொஞ்ச நேரத்தில் மேகங்கள் கீழேயும், மிக அருகேயும் இருப்பதை பார்க்க முடிந்தும் தொட்டுப் பார்க்கவே முடியாத சூழல். இலேசான, சிறிய, அடர் வெண்மை, உருவமற்ற, மிகப்பெரிய, தொடர்ச்சியாக நீளும் என விதவிதமான மேகங்களின் அருகிலேயே சென்றோம். கணக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மேகக்கூட்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, சில நேரங்களில் ஒரே இடத்தில் விமானம் நிற்கிறதோ என சந்தேகப்படும்படியான உணர்வு இருந்தது. மேகங்கள் மறைய, சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது நிலப்பரப்பு.

விமானத்தின் உள்ளே பலரும் கண்கள் மூடி அமர்ந்திருந்தனர். பாட்டு கேட்கலாம் என ஐபாட் ஐ இயக்கிக் காதில் வைத்தால், முன் தினம் வரை பல முறைக் கேட்ட, 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா' பாட்டு. எத்தனையாவது முறையோ கேட்டபடி, ஜன்னலோரம் பார்த்தால், கடல் கீழே இருப்பது தெரிந்தது. கடலை ஒட்டி நீண்டக் கோட்டை பல நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பார்த்தேன். பிரிக்கும் கோட்டின் ஒரு பக்கம் கடல், இன்னொரு பக்கம் நிலம்.  பள்ளி நாட்களில், அந்த வகிட்டின் மேலே நீல ஸ்கெட்ச் உபயோகித்து வரைந்த கோடு, வங்காள விரிகுடா மீது பென்சிலால் நிரப்பிய வண்ணம் என நினைவில் வந்தது. அதனை ஒட்டிய நிலப்பரப்பு வயலட் நிறத்தில் சிறிதளவு மட்டுமே தெரிய அங்கே நீண்டு சென்ற வெண்மையை ஒத்த நிறமுடைய மிகச்சிறிய பரப்பைத் தாண்டி கடல் நீலத்திலேயே விரிந்த வானத்தின் பிரம்மாண்டம் மிரட்டியது. 

பாடபுத்தகத்தில்,செய்திகளில், இணையத்தில் வரைபடமாக பார்த்த நிலப்பரப்பை நேரில் பார்க்கும் போது அனுபவித்ததை, விவரிக்க இயலாத மகிழ்ச்சியில் மனம் ஆழ்ந்திருந்தது. ஒரு மணி நேரம் கடந்த பிறகு அங்கங்கே கீழே மிதந்து கொண்டிருந்த சிறிய மீன்கள் போன்றவை கப்பல்கள் என புரிந்தது. 

மீண்டும், சீட் பெல்ட் அணிந்து தயாராக அறிவுறுத்தப்பட்டோம். கீழே கட்டிடங்களுக்கு இணையாக பசுமையான நிலப்பகுதி, அது வரை நீல வண்ணத்தை அதிகமாக உள் வாங்கிக்கொண்டே வந்த கண்களுக்கு, மாற்றாக இதமளித்தது. விமானம் கீழே இறங்க, நகரம் பெரிதாகிக் கொண்டே வர, கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் மரங்கள் இருப்பது தெரிந்தது. அதிகமாக தென்பட்டது தென்னை மரங்கள். 

ஏறும் போது தெரியவில்லை. ஏதோ ஒரு உயரத்திலிருந்து பொத்தென்று படுவேகத்தில் இறக்கப்பட்டதாக உணர்ந்த நொடியில், ஏற்பட்ட கலக்கத்தின் ஆயுள் சில நிமிடங்கள் மட்டுமே. மிக மெதுவாக இறங்கி, தரையைத்தொட்டு, சிறிது தூரம் சென்று நிற்க இரண்டு மணி நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்திருந்தோம்.

விமானப்பயணம் குறித்து அதுவரை உள்ளே இருந்த உதறல், உதிர்ந்து விட்டிருந்தது. :)