ஓடுதளத்திலிருந்து மிக மெதுவாக கிளம்பி, நினைத்துப் பார்த்திராத வேகத்தைக் கூட்டி ஓட ஆரம்பித்த விமானம், தரையை விட்டு மேல் நோக்கி சற்று சாய்வாக ஏற ஆரம்பித்தது. அதுவரை இருந்த விமானப் பயணம் குறித்த பயம், திகில் கலந்த வியப்பாக மாறிய நொடியில், உற்சாகம் பொங்க 'ஹே' என உரக்கக் கூச்சலிட்ட நாங்கள், சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முதல் பயணத்தை நினைவு கூர்ந்திருக்கலாம். மேலே எழும்பிக்கொண்டிருந்த விமானத்தின் உள்ளிருந்து, கீழே தெரிய ஆரம்பித்த சென்னையில் இருந்த கட்டிடங்கள், வீதிகள் எல்லாம் சிறியதாகிக் கொண்டே வர, சில நிமிடங்களில் கண்களுக்கு தெரிந்தது அழகான சாட்டிலைட் வியூ. சிறிது நேரம் காதுகள் அடைப்பது போலவும், நாக்கு வித்யாசமான சுவையை உணர்வது போலவும் இருந்தது.
சில மாதங்களுக்கு முன், சென்னையிலிருந்து கொல்கத்தா, பின் கொல்கத்தாவிலிருந்து பாக்தோரா வரை முதன் முறையாக விமானப் பயணம் செய்ய பதிவு செய்திருந்தோம். அன்றே அங்கிருந்து கேங்டாக் வரை தரை வழியாகப் பயணம், இரண்டாவது நாளும் சிக்கிம், மூன்றாவது நாள் டார்ஜிலிங், நான்காவது நாள் மீண்டும் பாக்தோரா, கொல்கத்தா வழியாக சென்னைக்கு விமானப்பயணம். நேற்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கிளம்பி, இன்று காலை மதுரை.
விமானத்தின் உள்ளே அருந்தத்தரப்பட்ட குடிநீரை, பழச்சாறு இல்லை என்பதால் மறுத்து வேடிக்கைப்பார்த்தபடி வந்த கொஞ்ச நேரத்தில் மேகங்கள் கீழேயும், மிக அருகேயும் இருப்பதை பார்க்க முடிந்தும் தொட்டுப் பார்க்கவே முடியாத சூழல். இலேசான, சிறிய, அடர் வெண்மை, உருவமற்ற, மிகப்பெரிய, தொடர்ச்சியாக நீளும் என விதவிதமான மேகங்களின் அருகிலேயே சென்றோம். கணக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மேகக்கூட்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, சில நேரங்களில் ஒரே இடத்தில் விமானம் நிற்கிறதோ என சந்தேகப்படும்படியான உணர்வு இருந்தது. மேகங்கள் மறைய, சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது நிலப்பரப்பு.
விமானத்தின் உள்ளே பலரும் கண்கள் மூடி அமர்ந்திருந்தனர். பாட்டு கேட்கலாம் என ஐபாட் ஐ இயக்கிக் காதில் வைத்தால், முன் தினம் வரை பல முறைக் கேட்ட, 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா' பாட்டு. எத்தனையாவது முறையோ கேட்டபடி, ஜன்னலோரம் பார்த்தால், கடல் கீழே இருப்பது தெரிந்தது. கடலை ஒட்டி நீண்டக் கோட்டை பல நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பார்த்தேன். பிரிக்கும் கோட்டின் ஒரு பக்கம் கடல், இன்னொரு பக்கம் நிலம். பள்ளி நாட்களில், அந்த வகிட்டின் மேலே நீல ஸ்கெட்ச் உபயோகித்து வரைந்த கோடு, வங்காள விரிகுடா மீது பென்சிலால் நிரப்பிய வண்ணம் என நினைவில் வந்தது. அதனை ஒட்டிய நிலப்பரப்பு வயலட் நிறத்தில் சிறிதளவு மட்டுமே தெரிய அங்கே நீண்டு சென்ற வெண்மையை ஒத்த நிறமுடைய மிகச்சிறிய பரப்பைத் தாண்டி கடல் நீலத்திலேயே விரிந்த வானத்தின் பிரம்மாண்டம் மிரட்டியது.
பாடபுத்தகத்தில்,செய்திகளில், இணையத்தில் வரைபடமாக பார்த்த நிலப்பரப்பை நேரில் பார்க்கும் போது அனுபவித்ததை, விவரிக்க இயலாத மகிழ்ச்சியில் மனம் ஆழ்ந்திருந்தது. ஒரு மணி நேரம் கடந்த பிறகு அங்கங்கே கீழே மிதந்து கொண்டிருந்த சிறிய மீன்கள் போன்றவை கப்பல்கள் என புரிந்தது.
மீண்டும், சீட் பெல்ட் அணிந்து தயாராக அறிவுறுத்தப்பட்டோம். கீழே கட்டிடங்களுக்கு இணையாக பசுமையான நிலப்பகுதி, அது வரை நீல வண்ணத்தை அதிகமாக உள் வாங்கிக்கொண்டே வந்த கண்களுக்கு, மாற்றாக இதமளித்தது. விமானம் கீழே இறங்க, நகரம் பெரிதாகிக் கொண்டே வர, கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் மரங்கள் இருப்பது தெரிந்தது. அதிகமாக தென்பட்டது தென்னை மரங்கள்.
ஏறும் போது தெரியவில்லை. ஏதோ ஒரு உயரத்திலிருந்து பொத்தென்று படுவேகத்தில் இறக்கப்பட்டதாக உணர்ந்த நொடியில், ஏற்பட்ட கலக்கத்தின் ஆயுள் சில நிமிடங்கள் மட்டுமே. மிக மெதுவாக இறங்கி, தரையைத்தொட்டு, சிறிது தூரம் சென்று நிற்க இரண்டு மணி நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்திருந்தோம்.
விமானப்பயணம் குறித்து அதுவரை உள்ளே இருந்த உதறல், உதிர்ந்து விட்டிருந்தது. :)
4 கருத்துகள்:
உதிர்ந்த உதறல் = விமானப்பயணம் குறித்து அதுவரை உள்ளே இருந்த உதறல், உதிர்ந்து விட்டிருந்தது = அருமையான பயண அனுபவம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani
உதிர்ந்த உதறல் = விமானப்பயணம் குறித்து அதுவரை உள்ளே இருந்த உதறல், உதிர்ந்து விட்டிருந்தது = அருமையான பயண அனுபவம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani
ஒரு விமானப் பயணத்தையே அழகான சிறுகதை போல எழுதும் ஆற்றல் பெற்ற நீங்கள் அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே சகோதரி? தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நன்றி
முதல் முறையாக நான் இது வரை அனுபவிக்காத ஒரு உணர்வை ( விமானத்தில் பறக்கும் அவசியம் இது வரை ஏற்ப்படவில்லை) உங்கள் பதிவு உணர வேண்டும் என்ற நினைப்பைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. உணரும் காலத்தில் இந்த எழுத்துக்கள் மனதில் ஓடும் வகையில் மிகையில்லாத, இயல்பான விவரிப்பு. கொல்கத்தா தாண்டிய வட கிழக்கு மாநிலங்களைப் பற்றி எவருக்கும் பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை. பதிவரின் எழுத்து வெகு விரைவில் அந்த குறையை போக்கும் ( சிம்லா சென்று வந்ததைப் பற்றிய பதிவு இன்றும் நினைவில்) என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்புடன் இந்த வாசகன் :)
கருத்துரையிடுக