திங்கள், 27 மே, 2013

வருண் ஆதித்யா - ஏழாவது பிறந்தநாள்!வலி என்பது துளியும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு ஸ்கேன் எடுத்து மருத்துவர், குழந்தையின் கழுத்துப் பகுதியில் மட்டும் நீர் உள்ளது, உடனடியாக சிசேரியன் செய்தாக வேண்டும் என்றார். முதுகை வளைக்க சொல்லி, நடுவில் உள்ள நீளமான எலும்பின் மத்தியில் ஊசி குத்திய பொழுது ஒரு பெரிய 'ஆ' சத்தம், சில நிமிடங்களில் இரண்டாவது ஊசியை அதற்கும் கீழே குத்தும் பொழுது, பென்சிலால் அழுத்திய உணர்வு. நொடிகள் கரைய கரைய....  தலை, கைகள் தவிர எல்லா பாகங்களுமே மரத்துப் போனது போல இருந்தது. சிறிது நேரத்திலேயே, குழந்தை அழுகிற சத்தம், எதிரில் இருந்த காலண்டரில், 28.05.2006, கடிகாரத்தில் நேரம், அதிகாலை 2.33. பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, பவுடர் எல்லாம் பூசி, புது சட்டை அணிந்த வருணை கைகளில் ஏந்தி, வந்த மருத்துவர் ' உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான், நல்லா இருக்கான்', என்றார். குட்டிக் குட்டிக் கை கால்களுடன், மருத்துவரின் கைகளுக்குள், அழகாக படுத்திருந்த வருணைப் பார்க்க, சுகமான பத்து மாத காத்திருப்பின் பலனை நேரில் கண்ட தாள முடியாத மகிழ்ச்சியில், உள்ளே ஊசி மூலம் ஏற்றப்பட்ட மருந்தில் நிம்மதியுடன் கண் அயர்ந்தேன்.

அந்த நாள் முழுவதுமே, அதிகமாக எடை கூடி இருந்ததால், எழவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாமலும், கால் எங்கே இருக்கிறது என்பதை உணர முடியாமலும், சீரான இடைவெளிகளில் கொடுக்கப்பட்ட திரவ உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருந்தேன். இதன் ஊடே, குழந்தைப் பார்க்க வந்த உறவுகளும், நட்புகளுக்கும் புன்சிரிப்பை பதிலாக அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தேன். ஒரே மாதிரி கேள்விகள், ஒரே மாதிரி பதில்கள் தான் பெரும்பாலும், இருப்பினும், அலுக்கவில்லை.

வலியை மறக்க செய்வதற்காக போடப்பட்ட ஊசி, 24 மணி நேரம் மட்டும் வேலை செய்யும் போல. மெது மெதுவாக, அடி வயிற்றில், தையல் போடப்பட்ட இடத்தில் வலி தெரிய ஆரம்பித்தது. இப்பொழுதாவது கால்களை உணர முடிகிறதா என்று அசைத்துப் பார்த்தப் பொழுது, லேசாக அசைந்தன. வலி குறைய மீண்டும், ஊசி குத்தப்பட்டது. இதில், அந்த நேரத்தில் சளி, இருமலால் வேறு பாதிக்கப்பட்டு இருந்ததால், லேசாக இருமினாலே, தையல் பிரிந்து போவது மாதிரி, உயிர் போகும் வலி ஒரு புறம். எப்போ, இருமல் வருமோ என்று பயந்து கொண்டே இருந்ததாலோ என்னவோ, அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தேன். இரண்டாம் நாளில் தான், உட்கார முடிந்தது. மூன்றாம் நாளில், 7,8 அடிகள் எடுத்து வைத்து, நடக்க முடிந்தது. நான்காம் நாளில், யார் உதவியுமின்றியும், சுயமாக குழந்தையைத் தூக்க முடிந்தது. ஐந்தாம் நாள் வீட்டுக்கு வந்தாகிவிட்டது. படிப்படியாக குறைந்த வலி, மறைந்து போனாலும், அந்த ஒரு மாதத்தில், லேசான, இருமலோ, தும்மலோ வந்தால், அப்பப்பா......
ம்ம்... இவ்வளவையும் கடந்தால், உயிரின் ஒரு பகுதி  தனியாய் உருவெடுத்து புன்னகைப்பதைப் பார்க்க முடியும்!  :)

நான் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தால் பின்னால் வந்து ஊஞ்சலை தள்ளி விடுவதாகட்டும்,
அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தால், நீங்களே பாருங்கம்மா என்று ரிமோட்ஐ என் கைகளில் திணிப்பதாகட்டும், சக மாணவர்களிடம், புதிய பென்சில்க்கு பதிலாக, இத்துனூண்டு ரப்பரை எக்ஸ்சேஞ் என்று பெற்று கொள்வதாகட்டும், பென்டென், படம் போட்ட ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் சாமான்களைத் தவிர வேறு எதற்கும் மெலிதாக கூட அடம் பிடிக்காமல் இருப்பதாகட்டும், பல விஷயங்களில், 1950 இல், இருந்த குழந்தைகளைப் போல வெகுளியாக இருக்கிறானோ என்ற வருத்தம் உண்டு. படிப்பில் கெட்டி தான். ஆனாலும்,  இந்த காலப் பிள்ளைகள் மாதிரி ஓரளவாவது சுயநலத்துடன் இருந்தால் தானே, இங்கு போட்டி போடவே முடியும் என்ற ஒரு தாய்க்குரிய இயல்பான ஆற்றாமை ஒரு புறம் இருக்க தான் செய்கிறது.


இன்று வருணுக்கு ஏழாவது பிறந்த நாள்! நாட்கள் ஓடியதே தெரியவில்லை...
எனக்கு இந்த நாளில் சொல்லிக்கொள்வது இன்னும் பொறுப்புடன், பொறுமையுடனும் வருணை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே! :)

ஞாயிறு, 26 மே, 2013

TN - 72

உள்ளேயும், வெளியேயும் அதிகரித்த புழுக்கத்தை தீர்த்து வைக்க ஒரே ஒரு அருவி தேவைப்பட்டது.அதனை செயல் படுத்த, முந்தாநாள், காலையிலேயே திருநெல்வேலி சென்றடைந்தோம். அங்கிருந்து, ஐம்பதாவது கிலோமீட்டரில் பாபநாசத்தில், அகஸ்தியர் அருவியில் இல்லை என்று சொல்ல முடியாதவாறு எப்பொழுதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் என்று கிடைத்த தகவல், மெய் என்பதை, நேரில் பார்த்து மகிழ்ச்சியுடன் உறுதி செய்து கொண்டோம்.

சீசன் நேரங்களில், மதுரையில் மாலை ஐந்தேகால் மணிக்கு கிளம்பும் செங்கோட்டை பாசெஞ்சர் வண்டியை பிடித்தால், எட்டே முக்காலுக்கு தென்காசி சென்று விடுவோம். பின்பு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து குற்றாலத்தை அடைந்து, விடுதி அறையில் துணிமணிகளைப் போட்டுவிட்டு, மெயின் அருவிக்கு, பத்து மணிக்கு செல்வோம். இரவு வேளைகளில் கூட்டம் குறைவாக இருப்பதால் பேச்சு சத்தமும் குறைவாக இருக்கும்..
விருப்பம் போல, எந்த தொந்தரவுமில்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், நிற்கலாம். அருவியின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, எதைப்பற்றியும் சிந்திக்காமல், ஒரு தியானம் போல நின்று கொண்டிருப்பதில், உள்ளே உள்ள, கசடுகள் அனைத்தும் வெளியேறிக் கொண்டே இருக்கும். இரண்டு மணி நேர குளியலில், உள்ளே செல்வதற்கு முன் இருந்த எனக்கும், வெளியே வந்த எனக்கும், நல்ல ஒரு மாற்றத்தை உணர்ந்துள்ளேன். அதன் காரணமாகவே இப்பொழுதும், அகஸ்தியர் அருவி நோக்கிப்  பயணம்....

அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், ஐந்தடி அகலத்தில் விழ ஆரம்பித்து, சில அடிகளில் பதினைத்து அடியாகப் பிரிந்து விழுகிறது. குளிக்கிறவர்களுக்கும் நிழல் தருவதற்காகவோ என்னவோ, பாறை இடுக்குகளில், புங்கை, உட்பட பல செடி, மர வகைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. கீழே விழுந்து கொண்டிருந்த நீர் சில இடங்களில் சாதாரண டம்ளரில் இருந்து கொட்டுவது போலவும், சில இடங்களில் வாளியில் இருந்து கொட்டுவது மாதிரியும், ஓரிரு இடங்களில் அண்டா நீரைக் கவிழ்த்தது போலவும் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது. கூட்டமான நேரங்களில் அருவிக்கென்று உள்ள கிளினிக் பிளஸ் ஷாம்பூ வாசத்தை நுகர்ந்துகொண்டே
அரை மணி நேரமாவது நின்றே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு நுழைந்தேன். ஆனால், அந்த சபதமே தேவை இல்லை என்பது போல, அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும், ஐந்து நிமிடங்களில், தலையைக் காட்டினோமோ, நேர்த்திக் கடனை முடித்தோமோ என்கிற வகையில் கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில், இதுக்கு நீங்கல்லாம், உங்க வீட்டு ஷவர் லேயே, குளிச்சிருக்கலாம்ல என்று கேட்க தோன்றியது.

லேசாக நீர் விழுந்த இடங்களில் தலையை மட்டும் காட்டிவிட்டு, உள்ளே புகுந்து, வாளி நீர் கொட்டும் அளவு வேகத்துடன் விழுந்த இடத்தில் நன்றாக நின்று கொண்டேன். தலையை சற்றுக் கவிழ்த்து கண்களை மூடிக்கொண்டு, பெரும் ஓசையுடன் விழும் அருவியின் மொழி, புரியாமல், தூய்மைப்படுத்தும், குளிர்ச்சியூட்டும் அதன் தன்மையை முழுவதுமாக உணர முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒரு மிடறு நீரைத் தீர்த்தமாக விழுங்கிக்கொண்டேன். அருவிக்கென்று, இவ்வளவு சுவை எங்கிருந்து வருகிறதோ, திரும்ப திரும்ப பல முறை நீரைக் குடித்துக் கொண்டே இருக்க செய்தது. மெதுவாக கண்களை திறந்து பார்க்கையில் சுற்றி விழுந்து ஓடும், அதன் வெள்ளை நிறம், காலுக்கு கீழே செல்கையில் நிறம் மாறுவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. மீண்டும், கண்களை மூடி,சற்றே தலையை தூக்கும் பொழுது, காதுகளில், சங்கை காதில் வைத்தால் கேட்குமே அது போல ஒரு ஓசை. அதையும் ரசித்து விட்டு, விழுந்து கொண்டிருந்த நீரின் வேகம் இன்னும் கூடுதலாக வேண்டும் என்று, இருப்பதில் அதிக அளவு வேகத்துடன் விழும் இடத்தில் நகர்ந்து நின்றேன். டொம் டொம் மென்று விழுகிற நீர், இலேசாகவாவது உடலை அசைத்துக் கொண்டே இருந்தது. என்னவோ, அந்த அடி, இந்த, அடித்துத் துவைப்பது போல, இன்னும் இன்னும் மனதை இலேசாக்குவது போன்ற உணர்வு. அனுபவித்துக் கொண்டிருந்த சற்று நேரத்தில், அதே டொம், வலி தருவது போல உணர்வு. மிக வேகமாக கூடுதலாகிக் கொண்டே சென்ற வலியை உணர்ந்து, போதும் என்று வெளியே வந்து, அருவிக்கு, மனதார நன்றி சொல்லி, நேரத்தைப் பார்த்த பொழுது, நாற்பது நிமிடங்கள் கடந்து இருந்தன. புதிதான உற்சாகம் உள்ளே எங்கும் பரவிக் கிடக்க, மகிழ்ச்சியான துள்ளலுடன், கிளம்பினேன்.
அங்கு இருந்து, மேலே, எட்டாவது கிலோமீட்டரில், சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. அங்கு உள்ள விக்கிரங்கள் எல்லாமே, காவல் தெய்வங்கள் என்று சொல்லப்படுவை. குலதெய்வம் என்று இல்லாதவர்கள், இவரை கும்பிடலாம், என்ற தகவலைப் பெற்றுக்கொண்டு,  காரையாறு அணையில் நீர் இல்லாததால், மேலே செல்வது வீண் என்று சொல்லிய ஓட்டுனரின் பேச்சைக் கேட்டு, கீழே இறங்கி வந்தோம்.

திருநெல்வேலி...........
காந்திமதி, நெல்லையப்பர் கோவில்........ நேர்த்தியான அழகான சிற்பங்கள் பொலிவுடன் இருந்தன. பல தூண்களிலும் பார்க்கலாம் செங்குத்தான கோடுகளை , அந்த காலத்தில் சிற்பங்களை அமைத்தவர் கோடுகளின் பிரியராக இருந்திருப்பார் போல.
எவ்வளவு பெரிய பிரகாரம். ஊர் முழுவதும், ஒரே நேரத்தில் வலம் வந்தாலும், போதுமான இடம் இருக்கும். :)

தாமிரபரணி ... ஓடிக் கொண்டே இருக்கிறது. வைகையை பார்த்து நொந்து போன கண்களுக்கு, பாலங்களில் கடந்த சில இடங்களில், ஆறு என்று ஒப்புக்கொள்ளும் வகையில், அதன் ஓட்டம் இருந்தது. அதே போல, தூய்மையும் இருந்தது.

உணவு : தின்னே தீக்கலாம் கொண்டு போன காசெல்லாம். அவ்வளவு விலை, பெரும்பாலான  ஹோட்டல் களில், விலை, மதுரையோடு ஒப்பிடும் பொழுது மிக அதிகம். சாப்பாடு இன்னும், இன்னும் கேட்டு வாங்கி சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும், சுவை. நிச்சயம், சாப்பிட்ட இடங்களில் எல்லாமே காரம் மட்டும் சற்று குறைவாகவே இருந்தது, மதுரையோடு ஒப்பிடும் பொழுது.
இதுனால தெரிய வர்றது, காரத்துக்கும், கோவத்துக்கும் சம்பந்தமில்லை.  :)

சயின்ஸ் சென்டர் : பத்தரை மணிக்கு திறக்கும் என்று இருந்த பெயர் பலகைக்கு முன்னால், பத்தே காலுக்கு, 7,8 பேர் தான் நின்று கொண்டிருந்தாலும், உள்ளே கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பொருட்களையும் துடைத்துக் கொண்டிருந்த பெண், எத்தனை பேர் நின்றாலும், எனக்கென்ன என்று சரியாக பத்தரை மணிக்கே டிக்கெட் கொடுத்தார். (இம்புட்டு பங்க்சுவலா ?  ) வெளியில் நிற்கும் பொழுதே, வண்டியின் பின்னே சமோசா நிறைந்த பெரிய பிளாஸ்டிக் பெட்டியைக்கட்டி, அதன் மேலே காகிதத்தைப் பரப்பி, அந்த காகிதம் பறக்காமல் இருக்க, மூலைக்கு ரெண்டு ரெண்டு சமோசாவை வைத்து உள்ளே சென்ற கேண்டீன் காரரிடம், எப்படி இப்படி எல்லாம் கேக்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தது. நாம தான் இங்கே எதுவும் சாப்பிடப் போறதில்லை அப்புறம் என்ன என்று, அப்படியே உள்ளே சென்று வேடிக்கை பார்த்து விட்டு, 3D படம் பார்க்க சென்றோம். மேலை நாட்டு வட்டார வழக்கில் இருந்த ஆங்கிலம் ஒரு எழவும் புரியவில்லை எனக்கு. ஆனால், கார்ட்டூன் நெட்வொர்க் உட்பட, பல சேனல்கள் பார்த்து பழகிய குழந்தைகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ( முடிந்தால், சப் டைட்டில் அல்லது, மொழி பெயர்த்து வெளியிடலாம், அந்த பதினைந்து நிமிடங்கள் ஓடக் கூடியப் படங்களை, எங்களை மாதிரி பெரிய குழந்தைகளுக்காகவும்.... அப்புறம், அந்த கண்ணாடியின், தரத்தை இன்னும் உயர்த்தினால், திருப்தியாக இருக்கும்) மற்றபடி அங்கு இருந்த ஒவ்வொரு அம்சமும், அருமை. ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல அறிவியல் மையங்கள் குழந்தைகளுக்காக கொண்டு வந்தால், உறுதியாக உபயோகமாக இருக்கும்.

அப்புறம்.... எங்க ஊர்ல, அங்க, அங்க கடைகளில மட்டும் கேட்கும் அண்ணாச்சிகள்  உச்சரிக்கும் பிரத்யேக திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியை , ஊரெங்கும் கேட்க முடிந்தது. 

அதிக அளவில் காணப்படும் பரோட்டக் கடைகள், எல்லா ஊர்களும், இந்த விஷயத்தில் ஒரே மாதிரி தான் மாறி இருக்கின்றன என எண்ண வைத்தது.

திருநெல்வேலில, மினரல் வாட்டர் வாங்க வேண்டாம். நீங்க, எங்க தண்ணி குடிச்சாலும், தீர்த்தம் மாதிரி தான் இருக்கும். அப்புறம், எதுக்கு காசை வீணாக்கிட்டு...

நல்லா, இருக்கு.... இந்த வெயிலுக்கு....
முடிஞ்சா........  ஒரு எட்டு போய்ட்டு வாங்க....  :)​

வியாழன், 23 மே, 2013

சமையல் - எளிது!

பத்து வருடங்களுக்கு முன்பு, இணையத்தில் நுழைந்த புதிதில் விதவிதமாக சமையல் செய்து அசத்த வேண்டும் என்ற ஆர்வத்தில், தேடு தேடென்று கூகுளில் ஒவ்வொரு உணவுப்பதார்த்தையும் தேடிக் குறிப்பு எடுத்துக் கொள்வது வழக்கம். மிளகாய் சட்னி என்றால், அதன் கீழ் இருபது முதல் முப்பது வகையான செய்முறை விளக்கங்களில், பிடித்தது என்பதையும் விட எளிதாக இருக்கும் ஐந்து விளக்கங்களை எழுதி வைத்துக் கொள்வேன். அதில், ஏதாவது ஒன்றிரண்டை முயற்சி செய்து பார்க்கும் பொழுதெல்லாம், குறிப்பிட்ட பதார்த்தத்தை பார்த்தப் படங்களுக்கும், சட்டியில் வந்து சேர்ந்த இறுதி முடிவுக்கும் அறுபது வித்தியாசங்களை எளிதாகக் கண்டுபிடிக்கும்படி இருக்கும்.

ஆனாலும், சோர்ந்து போவதில்லை. சாப்பாடு என்ற ஒன்றிற்காக இன்னொருவரை நம்பியே எத்தனைக் காலம் தான் கழிப்பது. எனக்கு ஆரம்ப பாடம் சமையலில் கற்றுக் கொடுத்த ராமமூர்த்தி க்கோ, சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு, ஆம்லெட், போன்றவற்றை தவிர வேறு எதுவும் சமைக்க தெரிந்திருக்கவில்லை. காலமெல்லாம், இதையே சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியுமா ஒரு மனுஷி ? அதுவும், பிடித்த உருளைக்கிழங்கிலாவது, ஒரு பத்து வகைகளை செய்து பார்த்து, தேர்ச்சிப் பெறாமல் இருப்பது, அந்த கிழங்கிற்கு செய்யும் அவமரியாதை அல்லவா? வகுத்துக் கொண்ட குறிக்கோளில் வழியெல்லாம், நான்  அறிந்து கொண்ட மிக முக்கியப் பாடம், உருளைக்கிழங்கை எவ்வளவு மோசமாக சமைத்தாலும், என்னால் சாப்பிட முடியும் என்பதே! :)பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், எந்த ஒரு சமையல் பற்றிய விஷயங்களையும் ஒதுக்காமல் பார்த்துக் குறிப்பெடுத்த நோட்டுகளின் எண்ணிக்கை எட்டு. அதுவும் எனக்கே பல நேரங்களில் புரியாத சுருக்கெழுத்து முறையில் எழுதப்பட்டு, இருக்கும். நன்றாக சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம், தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி,  என்ற எந்த மொழியில் யார் பேசிக்கொண்டே, சட்டியை வைத்து, பொடிகளைக் கொட்டியபடி கிண்டிக் கொண்டிருந்தாலும், சேனலை மாற்றாமல் பார்த்து, யூகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்வதோடு, கூடுதலாக சில மொழிகளில் உணவுப் பொருட்களின் பேர்களை அறிந்து கொண்டதை எல்லாம், பாராட்ட யாருமே முன்வராததால் நானே என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்!  :P

மெதுவாக சமையலை பொறுப்பெடுத்து முழுவதும் செய்ய ஆரம்பிக்கும் பொழுதுகளிலும் சரி, அதன் பின்னரும் சரி, வீட்டில் என்றுமே குறை என்று யாரும் சொல்லாமல் இருந்ததே, எந்த ஒரு குழம்போ, கூட்டோ, பல வகைகளிலும் முயற்சி செய்து பார்க்கும் தைரியத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. இனிப்பு பண்டங்கள் என்றாலே, பொதுவாக கூடுதல் நேரம், கவனம் தேவைப்படும் என்பதாலும், எப்படி செய்தாலும், ஓரளவு திருப்தி கூட வராததாலும், இதே பண்டத்தை, செலவளித்தத் தொகையை விட, குறைவானத் தொகையில், நிறைய கடையிலேயே வாங்கி இருக்கலாம் என்றே இறுதியில் 100% தோன்றுவதால், அந்த ஏரியா வில், கை வைக்கவில்லை. ஏதோ ஏழெட்டு வகை பாயசம், கேசரி, கேரட் அல்வா, என்பதோடு நின்று போனது, இனிப்பு பலபரீட்சை.

வறுவல், பொரியல், அவியல், கூட்டு, குழம்பு, கலவை சாதம், இவற்றோடு, ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சாப்பிட்டு வந்த அசைவ உணவு வகைகள், இவை ஒவ்வொன்றின் கீழ், பல விதங்களில் சமைத்து, எத்தனை அதில் தேறும், தேறாது என்று முடிவுக்கு வந்து, ஓரளவு குறை இல்லாமல் சமைக்கத் தெரிந்தவளாக, இன்று மாறி இருக்கிறேன். அதெப்படி, நீயா சொல்லலாம் என்று கேட்பவர்களுக்கு, எங்க அம்மா, ஏதேனும் சமையலில் சந்தேகம் என்றால் என்னிடம் கேட்டு பதில் பெறுவது போன்ற மனத்திரையில் பதிவு செய்த பல காட்சிகளை உங்கள் பார்வைக்கு ஒளிபரப்ப முடியாமைக்கு வருந்துகிறேன் என்பதை மட்டும் பதிலாக தர முடியும்.

சமீபமாக பார்க்கும் பல சமையல் பற்றிய வலைப்பதிவுகள், புத்தகங்கள் , மிகவும் முன்னேற்றமடைந்து............   நம் நாட்டில் எளிதில் கிடைக்காத காய்கறிகளை, பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், ஓவன் உதவியோடு செய்யக்கூடிய பேக்கரி வகைககளால் நிரப்பபட்டுள்ளததால், மிகவும் அந்நியப்பட்டுப் போய் விட்டதாக ஒரு உணர்வு. அதோடு, இந்த நூடில்ஸ் வகைகள், பட்டினியாக கூட இருக்க முடியுமே தவிர, எத்தனை சாஸ், பொடி வகைகள், அஜினமோட்டோ என்று கலந்தாலும், மூக்கை மூடிக்கொண்டு, வேடிக்கை பார்க்கக்கூட பிடித்ததில்லை. ஒரு வேளை, நான் தான் அப்டேட் ஆகாம இருக்கிறேனோ? 

இதனுடன், போனால், போகிறதென்று நம்மூர் காய்கறிகளை வைத்து சொல்லப்பட்டு இருக்கும் சமையல் குறிப்புகளைப் பார்க்கும் பொழுதே, நானே திருத்தம் சொல்லலாம் போல, அந்த அளவு, சுவை குறைந்த விளக்கங்களையே, மிக மிக அழகான படங்களுடன், பார்ப்பதற்கு தருகின்றனர். விதிவிலக்காக சில அட்டகாசமான சமையல் செய்முறை விளக்கங்களைத் தரும் வலைப்பதிவுகளும்,  உள்ளன. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவை கண்ணுக்குத் தட்டுப்படும்.

இதுனால, சொல்ல வர்றது என்ன???
ஆரம்பத்தில உயர்த்திற புருவம், ஓரளவு தெரிஞ்சதுக்கப்புறம், கண்ணை சுருக்கிட்டு, அடுத்து அடுத்துன்னு முன்னேறி போயிடுது. இந்த, அடுத்தது எதுன்னு இலக்கில்லாமல் போற வரை........................ எதுவுமே சுவாரசியமே!

வியாழன், 16 மே, 2013

முதல்வர் ஜெயலலிதா

பள்ளியில் படிக்கும் பொழுது முதன்முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றதும், மகிழ்ச்சி அடைந்த பல பெண்களில் நானும் ஒருத்தி.

ஆட்சி ஏற்ற புதிதில் நினைப்பேன், ஏன் இப்படி, யாரையும் அருகில் நெருங்க விடாமல், தள்ளியே  வைத்திருக்கிறார் என்று. அதற்கான விடை பேஸ்புக் வந்ததற்கு அப்புறம் கிடைத்தது. ஏதோ ஒரு காலத்தில், அவர் ஒரு நடிகருக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பதிவு செய்து அதன் கீழ், தனிப்பட்ட அவரின் வாழ்க்கையை  விமர்சித்து சில வரிகள் இருக்கும். அவரின் முதல்வர் பதவியின் கீழ் உள்ள செயல்பாடுகளை விமர்சிக்க வாக்களித்த எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்குள், என்ன உரிமையில் உள்ளே சென்று நோண்டுகிறார்கள் என்று தெரியவில்லை?

இந்த அம்மா பாட்டுக்கு, யாரிடமாவது அருகில் இருந்து பேசுவது போல ஒரு படம் வெளிவந்தால், பலரின் வாய்க்கும் அவல் தான். அதற்காக காலில் விழும் கேவலத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், எனக்குள் எங்கேயோ இருக்கும் ஒரு குரூர புத்தி, 'யப்பா, என்னம்மா, எல்லாரையும் சுத்துல விடறாங்க, நல்லா வேணும்",  என்று எப்பொழுதேனும் குத்தாட்டம் போடுவதையும், நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்.

"சாதனை பேசும் ஈராண்டு
சரித்திரம் பேசும் பல்லாண்டு", என்று எழுதித் தரும் குழுக்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, செயல்களில் காட்டுங்கள், உங்கள் சாதனைகளை.

சரித்திரத்தை விடுங்கள்... வாழ்கின்ற பொழுதே நாங்கள் பேச வேண்டும் ம்மா.

ஏகப்பட்ட வழக்குகள், அவமானங்கள் இவற்றை எல்லாம் ஒரு ஆணுக்கு நிகராக எதிர் கொள்ளும் திறன் உங்களைக் குறித்து மலைக்க வைக்கையில், இலவசம் என்று போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்த தேவையற்ற சலுகைகள், புகழ்ச்சியான உரைகளைக் கண்டு இன்னுமும் மகிழ்ந்து கொண்டு இருப்பது இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அதே மாதிரி, நான் செய்தேன், நான் கொண்டு வந்தேன், என்னால் அமைக்கப்பட்டது, நல்லவற்றுக்கும் மட்டும் தன்னை முதன்மைப் படுத்துவதை முழுமையாக விட வேண்டும்.

ஒரு பெண் முதல்வராக இருந்த கால கட்டத்தில்
இத்தனை அணைகள் கட்டப்பட்டன
மின்சார உற்பத்திக்கு பல புதிய திட்டங்கள் போடப்பட்டன
சென்னையைப் போல பிற மாவட்டங்களுக்கும், எல்லா வசதிகளும் சமமாக பிரித்துத் தரப்பட்டன
பக்குவமான மாணவர்களை உருவாக்கும் கல்வி முறை கொண்டு வரப்பட்டது
விலைவாசி கட்டுக்குள் இருந்தது
வேலைவாய்ப்பு பெருகி இருந்தது
நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கூறி மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழித்தது
மக்கள் நலத்திட்டங்கள் முழுவதுமாக மக்களை சென்றடைய ஆவன செய்யப்பட்ட அரசாக இருந்தது
.................... இது போன்ற அத்தியாவசியமான மாற்றங்களை நிகழ்த்தி, அடுத்து வருகிற முதல்வர்களுக்கு முன் மாதிரியாக இருங்களேன்.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேசும் திறன் பெற்ற முதல்வருக்கு
மக்களின் மொழி முழுதாகப் புரிந்தால் நன்றாக இருக்கும்.

நீ கொண்டு வந்த அதுனால மட்டுமே இது வேணாம்
நீ மட்டும் தண்டமா செலவு செஞ்ச, நான் இதுக்கு மேல செய்வேன்
நீ எனக்கு எவ்ளோ தண்ணி காட்டின, நான் உனக்கு காட்டு காட்டுன்னு காட்றேன் பாரு, என்று
போட்டி போட்டிக்கொண்டு செயல்படுத்தும் வெட்டியான நடவடிக்கைகளைப் பார்க்கையில்
உங்களை துதித்தவர்கள் மட்டுமே, பார்ரா, எங்க அம்மாவை என்று ரசிக்கலாம்.
மற்றவர்களுக்கு?
ஏன்த்தா இதுக்கா, உன்னைய, அங்கன உக்காரவச்சோம்னு தானே தோனும்.

நடத்தியே காட்ட வேண்டும், என்று நீங்கள் பிடிக்கும் அடம், பல தேவையற்ற செயல்களில் மின்னுகிறது.
இதே வீம்பை, நீங்க ஏன், மக்கள் நன்றாக இருக்க வேண்டும்... அதற்காக என்ன வேண்டுமானால் செய்வேன் என்பதில் காட்டக்கூடாது.

என்னென்ன செய்தார் என்று சாதகமாகவும், பாதகமாகவும் பட்டியலிட, ரமணா ஸ்டைலில் இரண்டு பக்கமும், தினந்தோறும் செய்திகளை மூளைக்கு ஏற்றி  போற்றிக்கொண்டும்... தூற்றிக்கொண்டும்.... உள்ள தொண்டர்கள் உள்ளனர். நீங்கள், என்ன செய்தாலும், அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.
அவர்களைத் தாண்டி, உள்ள மக்களாகிய எங்களைப் பாருங்கள்.
கருணை கொண்டெல்லாம் பார்க்க சொல்லவில்லை. நியாயமாக என்ன நோக்கத்திற்காக, இந்தப் பதவி என்று மட்டும் யோசித்து, அதற்குரிய வேலைகளை சரிவர செய்யுங்கள்.


ஈராண்டு சாதனையை நாளிதழ்கள் விளம்பரம் மூலமாக தெரியப்படுத்துவதை விட.......
செய்தியாகவே வெளியிட்டால்............................
எவ்வளவு நன்றாக இருக்கும்! 


இந்த தலைமுறையே வாழ்த்தும்படி, திறமையாக நிர்வாகம் செய்யுங்கள்.
வாழ்த்துகள்!
புதன், 15 மே, 2013

எல்லாருக்கும் தெரிந்த இறுதிக்காட்சி!


நாளிதழ்களைப் புரட்டுகையில் கண்ணில் படும் கண்ணீர் அஞ்சலிப் பகுதிகளைக் காணும் நேரங்களில், சில நிமிடங்கள் கண்கள் நகர மறுத்து, குட்டி குட்டிக் கணக்குகள் போடும். வயதை அறிந்த பிறகு, என்னை விட, எத்தனை வயது மூத்தவர் அல்லது இளையவர் என்றும் பார்க்கப்படும். இந்த, 35 வயதில், இருப்பவர்களும், இதை விட கூடுதல் வயதில் இருப்பவர்களும், இந்த வயதிற்கு கீழே இருப்பவர்களை விட எண்ணிக்கையில் குறைவு என பொதுவாகவே தோன்றும். அப்படி எனில், நாம் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவள் ஆகிறோம். நாள் பட, அது குறுகிக் கொண்டே செல்லும் என்று தேவையில்லாமல் சிந்தனைப் போகும்.


இன்னமும், இறுதி மூச்சு நின்றவுடன் எங்கே போகிறது உள்ளே இருக்கும் உயிர் என்று தெரியவில்லை. எப்பொழுது போகும் என்றும் கூட தெரியாது. இறுதிக் காட்சி இது தான் என்று தெளிவாக தெரிந்தும், புரிந்தும், அறிந்தும் கூட, மீதி உள்ளக் காட்சிகளை சிக்கலாக்கி ஓட்டி, வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம் நம்மில் அநேகர்.

மரணம் என்ற ஒன்றை பூச்செண்டு கொடுத்து மகிழ்ச்சியுடன் யாருக்கும் வரவேற்பதற்கு மனதில்லை.
தன்னையே மாய்த்துக் கொள்பவர்களும் கூட, தாள முடியாத கவலையில், சோகத்தில் தான் அத்தகைய துயர முடிவை மேற்கொள்கின்றனர். ( புதிதாகப் போன உலகம் இதை விட இம்சை தந்தால் என்ன செய்வார்கள் என்று கேட்க வேண்டும் அவர்களிடம்....  )

தத்துவப் பாடல்களில் மரணம் குறித்து வரும் வரிகள்,
விவேகானந்தரின், மரணத்திற்கு அப்பால் போன்ற புத்தகங்கள்,
கண்ணெதிரே காணும் மரணங்களின் மர்மங்களை உருவுவதில்லை.

பள்ளியின் இறுதி வகுப்புக் காலங்களில் அருகில் அமர்ந்து, ஒரேக்  கல்லூரிக்கு போவோம், வாழ்நாள் முழுவதும் இணை பிரியாதத்  தோழிகளாக இருப்போம் என்று என் கையைப் பிடித்து உறுதி கூறிய வித்யா, ஐந்து வயதில் ஒரு திருமணக் கூட்டத்தில் வழியை தவறவிட்டு டீ கடையில் அழுது கொண்டிருந்த என்னை கண்டுபிடித்து அம்மாவிடம் சேர்ப்பித்த  மணி மாமா, வீட்டின் உள்ளே நுழைகையில் எல்லாம் மலர்ந்த முகத்துடன் தலையை ஆட்டி வரவேற்று நான் விரும்பியதை சமைத்துப் பரிமாறும் கிருஷ்ணவேணி அத்தை, இவர்கள் யாருமே தாங்களே தங்கள் முடிவை நிர்ணயித்துக் கொள்வார்கள், என்று ஒரு நாளும் எண்ணியதில்லை.

அதே நேரம், 
துரோகத்தின் உச்சத்தில், இயலாமையின் உச்சத்தில், ஏமாற்றத்தின் உச்சத்தில் கவர்ச்சியாய் சிரிக்கிறது மரணம், என்பதை மறுப்பதற்கில்லை.

போதும் இந்த வாழ்க்கை என்று வெறுத்து நொடியில் தவறான முடிவெடுக்க, தோல்வியை, கஷ்டத்தை விரும்பாத, பலவீனமான மனதே முக்கியக் காரணம்.


விபத்து, வயோதிகம், நோய், என்று பல காரணங்களால், பழகியவர்களின் எண்ணிக்கை அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்து கொண்டே வருகையில், என் மன நிலையைப் பொறுத்து அந்த செய்தி, அச்சமூட்டுவதாகவும், சாதாரண செய்தியாகவும், வேதனையை உண்டாக்குவதாகவும், பலவீனப்படுத்துவதாகவும்,  அபூர்வமாக பொறாமையாகவும் இருக்கிறது.

வயதானவர் இருக்கையில், நிகழும் இளையவர் மரணம், அந்த வீடுகளில் உள்ளப் பெரியவர்களை, கொஞ்சமும் நியாயம் இல்லாமல் கரித்துக்கொட்டும் போலி சுற்றங்களையும், நட்பையும் நம்மை பார்க்க வைத்திருக்கும்.சாவு வீடுகளில், அதற்கென்று உள்ள ஊதுபத்தி மணம், ரோஜா, சம்பங்கி மாலைகளின் வாசத்தோடு கூடிய கலவையான ஒரு நெடி, வெளியே வந்தும் கூட நாசியில் சில மணி நேரங்கள் ஒட்டிக்கொண்டு சற்றே பீதி அடையவும் வைக்கும். ஒப்பாரி வைப்பவர்களுக்கு இடையே அமர்ந்து, எத்தகைய நெருக்கமான உறவு என்பதைப் பொறுத்து வெளியில் கிளம்பும் நேரம் முடிவு செய்யப்படுகிறது. அத்துடன், போய் சேர்ந்தவர் என்று உள்ளே பதிந்து கொள்வதோடு முடிந்து போகிறது, எந்தப் பெரிய மனிதரின் மரணமும்.

இப்பொழுதெல்லாம் குளிர் பதன வசதி செய்யப்பட்டக் கண்ணாடிப் பெட்டியில் உடலை வைத்திருப்பதை அதிகம் காண முடிகிறது. பிரிட்ஜ் குள்ள வச்ச மாதிரி இம்புட்டு குளிரிலயா நம்மையும் வைப்பாங்க என்று  அதே மாதிரி, மின் மயானத்தைப் பார்க்கையில் இந்த சூட்டுக்குள்ள, கடைசில கொண்டு போனா என்னத்துக்கு ஆவோம் என்று கேனத்தனமாக எண்ணுவதும் உண்டு.

எல்லாருக்குமே பயண முடிவு தெரியும்..... ரொம்ப நல்லாவே.....

இதில என்னத்த, இருக்கிற நாளில கூட இருக்கவங்களை,அது இப்படி இது அப்படின்னு குறை சொல்லிக்கிட்டு  முடிந்தால், சமாதானமா போவோம், இல்லாட்டி, விரிந்து கிடக்கிற எத்தனையோ ஒரு வழில போய்க்கிட்டே இருப்போம்.

இனி, சண்டை போடவோ, முகத்தைத் திருப்பவோக் கூடாது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கு போஸ் கொடுக்கிற மாதிரியே எப்பவும் இருக்கணும்னு எடுக்கிற சங்கல்பம் எல்லாம்....
அடுத்து எதாவது பாவப்பட்ட ஒரு ஜீவன் நம் பொறுமையை லேசாகத் தொடும் வரையிலே  தாக்குப்பிடிக்கிறது.
அதுக்கப்புறம், வடிவேலு சொல்ற மாதிரி, அது வேற வாய்... இது நாற வாய்........  ன்னு... நாம  எடுக்கிற விஸ்வரூபம் தான் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக கதையை கொண்டு சொல்ல உதவுகிறது ...  :)

திங்கள், 13 மே, 2013

Good day!

எப்படித் தொத்திக் கொண்டது எனத் தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு காலையில் நல்ல நாளாக இருக்கட்டும் என்று வாழ்த்தி எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம். வாழ்த்துவதால் அந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு, தினமும் பழகியதால், அனுப்பாமல் இருக்க முடியவில்லை என்பதே முதன்மை காரணமாக அமைந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்..

இதில் காலையில் வாழ்த்துவது போலவே இரவில் goodnight என்று அனுப்ப மனது வருவதில்லை.
ஒரு நாளின் துவக்கத்தில், நல்ல ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொண்டு, அழகாக இருக்கட்டும் அந்த நாள் என்று வாழ்த்துவதில் உள்ள நிறைவு, தூங்குவதற்கு முன் எங்கும் போய் இருப்பைக் காட்டிக் கொள்ளத்  தோன்றியதில்லை. ( என்னவோ, இப்படி சிக்கலாக தான் இதில் என் சிந்தனை இன்று வரை இருக்கிறது )

ஒவ்வொரு நாளின் விடியலிலும் உள்ள வேலைகளை எல்லாம் ஓரளவு முடித்து விட்டு, இணையத்தில் நுழைந்து, புதிதாக ஒரு வாசகத்தைத் தேடுவேன். தேர்ந்தெடுத்த சில பக்கங்களில் மேய்ந்து, பின்  அதன் உள்ளேயே ஒருப் பக்கத்திலிருந்து, வேறொரு பக்கத்திற்கு தாவி, புத்தம்புதியப் பக்கத்தை கண்டடைந்து, பிறகு அதில் இருந்துப் பலப் பக்கங்களை விரித்து, அன்றைய மனநிலைக்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்து, அத்துடன் goodday என்று சேர்த்து அனுப்புவது வழக்கம். ஒரு சில நேரங்களில் பத்து நிமிடத்திற்குள் முடிந்து விடும் இந்த வேட்டை, சில நாட்கள் அரை மணி நேரம் செலவு செய்தும், கிடைத்தத் திமிங்கலம் பிடிக்காமல், மத்தி மீனுக்காக காத்திருந்து கவர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சரியான வாசகம் எதுவும் கிடைக்காத நாட்களில், ஏதேனும் கணித சூத்திரங்கள் அல்லது வணிக நிறுவனங்களின் சலுகைகளோடு, தங்கு தடையின்றி குட் டே sms செல்லும். ஏனென்றால் நமக்கு நோக்கம், காலையில் அலைபேசியின் வழியே நுழைந்து வணக்கம் சொல்லி, தினமும் நூறு sms அனுப்பப் பிடித்தத் தொகைக்கு, இருபதையாவது காலி செய்ய வேண்டும் என்பதே. :P

மனது சரி இல்லை என்றால், பெரும்பாலும் முன்னறிவிப்போடும், எப்பொழுதேனும் எந்த தகவலின்றியும் சேவை நிறுத்தப்படும்.

எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கும் நாட்களில், மிகவும் மகிழ்ந்து போய், ' நாட்டில பொன்மொழி தீர்ந்து போயிடுச்சா' என்று கேள்வியோடு வரும் குறுந்தகவல்கள்,
'போன வருஷம் இரண்டு மாசம் லீவ் விட்ட, இப்போ இன்னும் எங்கயும் கிளம்பி போகலையா' என்று உள்குத்தோடு வரும்  sms கள், மெனக்கெட்டு அழைப்பு விடுத்து, 'காலையில உனக்கு பதில் அனுப்பிற வேலை இல்லாம நிம்மதியா போயிட்டு இருக்கு நாள்', என்று கலாய்க்கும் நட்புகள், என்று எதுவும் என்னைத் தடுக்காமல், பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறது அனுப்பி, அனுப்பி அடிமையாகிப் போய் கிடக்கும் மனது.

சில நாட்கள் முன்னர் இந்த மாதிரி ஒரு 20 பேருக்கு தினமும் குறுந்தகவல் அனுப்புகிறேன் என்று இங்கு பகிர்ந்த ஒரு தகவலைப் பார்த்து, மிக அருமையாக எழுதும் ஒரு  தோழர், இன்று, துணிந்து, என்னையும் சேர்த்துக்கோங்க உங்க sms லிஸ்ட் ல என்றவரை நினைத்த மாத்திரத்தில்......
உள்ளே எழுந்தப் பாடல்.......

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.........
.
.
.
...................... மீதிப் பாட்டு சரியா தெரியல நீங்களே பாடி  முடிச்சிடுங்க :P

ஞாயிறு, 12 மே, 2013

சமாளிக்கிறோமாம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு வானொலிப் பண்பலை (FM) நேரலையில், தொலைபேசியில் சமையல் குறிப்புகளை கேட்டுக்கொண்டு பதிலுக்குப் பாட்டை வழங்கும் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் பேசியப் பெண்மணியிடம், சென்னா மசாலா எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டவுடன், ஓ, தெரியுமே, சொல்கிறேன் என்றவர்,
'அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, மஞ்சள் தூள் உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்துக்  கொதித்தப் பிறகு, வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால், சென்னா மசாலா தயார்', என்றார். அதிர்ச்சியில் உறைந்துப்  போன நிகழ்ச்சித் தொகுப்பாளர், இதில், சென்னாவே வரவில்லை என்றார். கொஞ்சமும் சளைக்காத அந்தப் பெண்மணியோ, எங்க ஊர்ல இதை தாங்க சென்னா மசாலா என்று சொல்வோம் என்று, ஊர் பேரை வேறு குறிப்பிட்டு தொடர்பை துண்டித்தார்.

கட்டுக்கடங்காமல் பொங்கிய சிரிப்புடன், அந்தப் பெண் சொன்ன ஊரின் திசைக்குப் பெரிய வணக்கத்தை வைத்தேன். பின்னே, என் இனமல்லாவா அவர்?! 

எப்படின்னு, தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலும் வாசிக்கவும்!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, சுதந்திர தினவிழாப் பற்றி, ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக என்று வினாத்தாளில் பார்த்த எனக்கு, மற்ற மாணவர்களைப் போலவே குழப்பம், ஏனென்றால், ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை, கட்டுரை எழுதுவதைப் பற்றி. ஆனாலும், யோசித்து,

" ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். அன்று பள்ளியில் கொடி ஏற்றி மிட்டாய்க் கொடுப்பார்கள். இதுவே, சுதந்திரதின விழா ஆகும். இதுவே, ஒரு பக்க அளவில் நீங்க கேட்ட ஒரு கட்டுரையும் ஆகும்."

என்று ஒரு முழுத் தாளிலும், மிகப் பெரிய்ய்ய்ய எழுத்துக்களில் இந்த வரிகளை வரைந்து நிரப்பி விட்டேன். பேப்பரைத் திருத்திக் கொடுக்கும் பொழுது, நன்றாக சிரித்துக் கொண்டே ஆசிரியர் கொடுத்த ஞாபகம் நேற்று நடந்தது போல தெளிவாக இருக்கிறது.
(சேட்டை செய்தாலும், திட்டாத ஆசிரியர்களே இப்பொழுது வரை எனக்கு வாய்த்திருக்கிறார்கள்!)

எப்பொழுது நினைத்தாலும், சிரிப்பு வரும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!

சமாளிக்கின்றோமோ, உள்ளதை உள்ளபடி உரைக்கின்றோமோ, எதற்கும் கவலைப்படாமல் வெளிப்படுத்தும் மன உணர்வுகள், எதிர்ப்புகளை சம்பாதிப்பதை ஒரு புறம் செய்தாலும், இன்னொரு புறம், நமக்கும், நம்மைப் பிடித்தவர்களுக்கும், அசை போட்டு ரசிக்கத்தக்கவையாக மாறி விடும் திறன் பெற்றவை!
சனி, 11 மே, 2013

வலி பொதுவானது!

ஊசியால் உள்ளே இருந்து குத்திக் கிளறுவது போல புருவங்களின் உட்புறம் ஆரம்பித்த வலி, மெதுவாகப்  பரவி நெற்றிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து அப்படியே, காதோரங்களின் பின்னே இறங்கி பிடணி வரை பரப்பியிருந்தது அதன் சாம்ராஜ்ஜியத்தை. நொடிகள் கரைந்து கொண்டிருக்கையில், தலையில்  அங்கங்கே ஓங்கி அடித்தது போல இருந்த வலியை கவனித்துக் கொண்டிருந்தாள் நிலா. ஒரு பக்கம், மூக்கிலிருந்து  வழிந்து கொண்டிருந்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே இருந்தது வலது கை. முன்பு இருந்த சைனஸ் தொந்தரவு, நன்கு தூசு தட்டி, கூடுதல் மெருகுடன் மறு ஒளிபரப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்த வெளிநாட்டுத் தைலத்தைப்  பாதி காலி செய்தும், மருந்துக் கடையில் வாங்கிப் போட்டுக் கொண்ட மாத்திரைகளை விழுங்கியும், வந்துப் பார் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தது வலி.

சரி, தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுத்தால், வலிக்கு சற்றும் குறையாமல் கடினமானப் போட்டி கொடுத்துக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது தூக்கம். மீதமிருந்த தைலத்தை நெற்றியில் தேய்த்துக் கொண்டிருந்த பொழுது, இரண்டு நாட்கள் நண்பரின் உறவினர் வீட்டின் விஷேசத்திற்கு வெளியூர் செல்ல வேண்டும் என்று சொன்ன கணவனை,
'அவ்ளோ தூரம் போகணுமா, அதுவும் நண்பர் திருமணம் என்றால் கூட பரவாயில்லை', என்று நிலா சொன்னது தான் தாமதம், போனது, வந்தது என்று இருக்கிற எல்லாத்தையும் இழுத்து,
 ' எப்ப, பாரு நீ இப்படித்தான், உனக்குனா மட்டும் ஆடுவ உன் இஷ்டம் போல', என்றவனை, எதுவும் எதிர்த்து பேசவோ, தன்னிலை விளக்கமோ கொடுக்க விடாமல்  வேடிக்கை மட்டும் பார்க்க செய்து பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தது வலி.

புதிதாக வந்த ஒரு வலி, ஏற்கனவே உள்ள வலியின் வீரியத்தை சற்றுக் குறைக்கலாம், ஆனால் சுத்தமாக மறைய செய்ய திறன் எல்லாம் அதற்கு கிடையாது. இமைகளை மூடக் கூடப்பிடிக்காமல், எத்தனை நேரம் படுக்கையில் கிடப்பது என்று எழுந்து, மாடிக்கு வந்தால், அத்தனைப் பெரிய வானம், நட்சத்திரங்கள், மிதமானக் காற்று, உறங்கும் தெருவின் அமைதி என்று எதிர் வினையாற்றாத இயற்கையின் அற்புதங்கள் இவளின் கரங்களை பற்றிக்கொண்டன. நடக்கவும், மாடியில் உள்ள சுவற்றில் அமரவும் என்று சில மணி நேரங்கள் மறைந்த நிலையில், வலி பழகிப் போய் இருந்தது. காயத்தில் மாறுதல் ஏற்படவில்லை என்றாலும், பழகி விட்டால், கண்ணீரை, கண்கள் கீழே இறங்க செய்வதில்லை.

தாளிட்டுப் படுக்கையில் விழுந்த பொழுது, இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடியப் போகிறது, மீண்டும் களத்தில் இறங்க வேண்டும். மறக்காமல், நாளை மருத்துவரைப் பார்க்க வேண்டும். தெம்பில்லாமல், ஆடி சோர்ந்து போவதை விட, புத்துணர்ச்சியை மட்டும் இழக்காமல், வருவதை எதிர்கொண்டு தோற்று போவது மேல் என்று தனக்குள் சொல்லியபடியே தூங்கிப்போனாள்.

இது வரை, வாசித்தது, நம்மிடையே வசிக்கும் ஒரு நிலாவின் கதை.

இவனுக்கா கஷ்டம் என்றெல்லாம் எளிதாக எண்ண வேண்டாம். ஏனென்றால், கஷ்டத்திற்கு கண் தெரியாது.

இவனுக்கு தானே, நன்றாக வேண்டும் என்று குதூகலிக்கவும் வேண்டாம், கண் தெரியாத அதே கஷ்டம், நம்மை  எந்த நொடியும் தாவிக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ளலாம்.

ஆறுதலான வார்த்தைகள், சரியான நேரத்தில், சரியான நபருக்கு தரப்படுமானால், அதுவே பாதி மருந்திற்கு சமம். அதே நேரத்தில், வருகின்ற எல்லா ஆறுதல்களையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நம் மனம். ஒரு வேளை, நம்மை பலவீனமானவராக எண்ணி விடுவரோ என்ற அச்சத்தின் காரணமாகவும் மறுக்கலாம்.

பிரியத்துக்கு உரியவர்களிடம், தன் குறைகளை, பலவீனங்களை, வருத்தங்களைப் பட்டியலிடத் தயங்குவதில்லை நம் மனது. ஆறுதல் தேவைப்படினும் அதைப் பொருட்படுத்தாதப் பெருவாழ்வு ஞானிகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம்.

வலியை குறைக்க முடியாவிட்டாலும், அதிகரிக்க செய்யாமலும், உருவாக்காமலும் இருக்கவாவது முயல்வோம்.

முடிந்த அளவு மருந்தாய் இருப்போம்.வியாழன், 9 மே, 2013

பதினெட்டு வருட இடைவெளி...


பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான இந்நாளுக்கும், பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான எளிதாக மனக்கண்ணில் கொண்டு  வரும் அந்த நாளுக்கும் இடையே, மாற்றங்கள் நினைத்தே பார்த்திராத அளவில் நிகழ்ந்துள்ளன.

அன்று, தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாள் தேறியவர்கள் விவரம் அடங்கிய நாளிதழ்களில், தங்களுக்குத் தெரிந்தவர்கள் எண்களைப் போட்டிப்  போட்டுக்கொண்டுத் தேடி, எண்களைக் கண்டால், அவன் பாஸ், இவன் பெயில் என்று அந்த அந்தப்பகுதிகளில் சிறிய அளவில் தகவல் ஒளிபரப்பை செய்து கொண்டு ஒரு குழு இருக்கும்.

தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் புத்தகத்தை உருட்டிக் கொண்டிருந்தாலும் கூட, தேறிவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்பொழுதும் இருந்தது எனக்கு. அடுத்த நாள் வெளியாகும்  மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும்  இருக்கும். அதுவும் கூட, அதற்கு முன்னர் பலர் பகிர்ந்ததைப் போல, நாமும் பெருமையுடன் மதிப்பெண்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவே இருந்திருக்கலாம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறு நாள், பள்ளிக்கு சென்று நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்த தோழிகளை, நலம் விசாரித்து மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மொத்த மதிப்பெண்கள் அடங்கியப்  பட்டியலின் நகல் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் . கூட்டத்தில் முண்டி அடித்து பசையின் ஈரம் முற்றிலும் உலராத காகிதத்தில், நமக்கான மதிப்பெண்களைத் தெரிந்துக்  கொள்ள, எண் வரிசையைத் தேடி, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும், சரியாக பார்க்கிறோமா என்று ஒன்றிற்கு இரண்டு முறை சோதித்து, பெயருக்குப்  பக்கத்தில் உள்ள மதிப்பெண்களை மனனம் செய்வதோடு, பாட வாரியாகப்  பெற்ற மதிப்பெண்களையும் வேகவேகமாக கண்களால் பதிவு செய்து கொண்டே, நெருங்கிய தோழிகளின் மதிப்பெண்களையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு திரும்பும் த்ரில் அனுபவம், இணையத்தில் எளிதாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் மதிப்பெண்களில், குறைவு தான் என்றே தோன்றுகிறது.

அதே போல, தோல்வியுற்றவர்கள் அடுத்துப் போக வேண்டிய டுட்டோரியல் காலேஜ் க்கு, படை எடுப்பதும், அவளுக்கு நாலில போயிடுச்சு, பரவாயில்ல எனக்கு மூணு தான் என்று சகஜமாக எடுத்துக் கொண்டு கடந்து செல்வதையும் அதிகம் காணலாம். உறுதி ஆக சொல்ல முடியும், அன்றைய நாட்களில் தேர்வு முடிவுகளின் தோல்வி கண்டு, வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவே.

உடனுக்குடன் கிடைக்கும் வசதிகள்,
ஆசிரியரின் ஒரு சொல்லையோ, சின்ன அடியையோ கௌரவத்தோடு ஒப்பீடு செய்து கொள்ளும் குழம்பிய மனப்பான்மை,
கற்பிக்கப்பட்ட கல்வியை சரிவர படிக்காமல் இருந்தாலும், வெற்றியைத் தவிர வேறு எதோடும் சமரசம் செய்து கொள்ளாத பலவீனமான மனது,
சேவை என்பதை விட, தொழிலாக மட்டுமே கற்பிக்கும் பல ஆசிரியர்கள்,
எதையும் எளிதாகவும், வலிமையோடும் ஏற்றுக்கொண்டு நடைபோட பழகிக் கொடுக்காத கல்வி முறை,
சம்பாதிக்க வேண்டும், அதுவும் சமூகம் எந்தெந்தப் பணிகளை உச்சத்தில் வைத்துப் பார்க்கிறதோ அந்த ஒன்றில் நுழைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உயரிய லட்சியமும் தராதப்  பள்ளிகள்......
சைக்கிள், லேப் டாப் போன்ற முதன்மை முக்கியத்துவம் இல்லாதவற்றை வழங்கி,
அதி முக்கியத்தேவையான, பண் பட்ட மனதுடன் கூடிய கல்வியை வழங்க ஆவன செய்யாத அரசு,
நம்மோட படித்தவர்களில், பெரிய அளவில் மதிப்பெண்களோடு வெற்றி பெற்றவர்கள் மிக சாதாரணமாக நாட்களை நகர்த்திக்கொண்டும், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், பல் வேறு துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பதை அறிந்தும் ,  மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விரட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்,
இவை போன்ற பல காரணங்களால் மனதளவில் திடமில்லாத, சுயநலம் மிகுந்த ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது  என்பதை வருத்ததோடு ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

எத்தனையோ நவீன வசதிகளை எளிதாக இவர்கள் அனுபவித்தாலும், அதன் ஊடே நாங்கள் ஆற, அமர நிதானமாக அனுபவித்து மகிழ்ந்தது என்று எண்ணியவற்றை எல்லாம் இழந்து, வெகு வேகமாகப் பயணிக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் பொழுது சில நேரங்களில் பரிதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


செவ்வாய், 7 மே, 2013

பப்பாளி!

திட்டமிட்டு விதைப் போடாமல் வீட்டின் பின்னால்
தானே துளிர்த்து வளர்ந்தது பப்பாளிக் கன்று
இலைகளையும் பூக்களையும் கண்டு நீர் விட்ட கூடுதல் கவனிப்பில்
மாம்பழத்துடன் போட்டியிடக்கூடிய சுவையில் நிறையப் பழங்களை தந்தது
சற்று முன் பெய்த காற்றுடன் கூடிய மழையைப்  பொறுக்க மாட்டாமல்
துணி காயப்போடும் கம்பியில் சாய்ந்து ஆயுளை முடித்திருந்தது
இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று வெட்டி முழுதாய் சாய்த்ததில்
மரத்தின் சிதறிய பாகங்களின் காட்சியும்
இதே இடத்தை நிரப்பும் நாளைய வெறுமையையும் எண்ணி
சோகம் அப்பிய மனதுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து உள்ளே வந்தும்
பப்பாளியின் மணம் நாசியின் வழியாகவும் மனதை அடைகிறது... அடைக்கிறது! 

ஞாயிறு, 5 மே, 2013

ஈர்த்த மனிதன், எனக்குப் பிடித்த காபி, எனக்குப் பிடித்த ஊஞ்சல்..

அக்டோபர் 10, 2012, அன்று  ஃபேஸ்புக் பரண் இல், "சாளரம்", என்ற பகுதிக்காக எழுதப்பட்டது.எழுத்துலகின், பல ஜாம்பவான்கள் குடியிருக்கும் இங்கு...
எனக்கென்று சிறிய அளவில் கூட எழுத்துப் பின்னணி இல்லாத போதும்,
இரண்டு வருடங்களுக்கு முன்பு, எழுதுவதற்கென்று நேரம் ஒதுக்கி,
ஆரம்பப் பாடத்தை ஆரம்பித்தேன்.
இன்று இந்த சாளரம் பகுதிக்காக
என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து,பிடித்ததை கேட்டு, எழுத செய்து,
வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பரணிற்கு
கை கொள்ளாத காட்டுப் பூக்களுடன் கூடிய
குளிர்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த உயரிய விருதாக எண்ணி பெருமிதம் கொள்கிறேன்!
பரணின் புதிய பகுதியான
~சாளரம்~ நமது ஃபேஸ்புக் பதிவர்களின்
ரசனைகள் குறித்து பேசுகிறது

இந்தவார சாளரத்துக்காக தீபா நாகராணி..

ஆதரிப்போம் இப்புதிய முயற்சியை..

    

 ஈர்த்த மனிதன் -  வாசிம் அக்ரம்.
==========================

    பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், தெரிய வந்த, வாசிம், 
நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தை அதிகப் படுத்தியவன். ஊரெல்லாம், டெண்டுல்கர் புராணம், பாடிக் கொண்டிருந்த அந்த நாட்களிலும், எனக்கு அவனைப் பிடிக்கும். 

துல்லியமான, பிரமிக்க வைக்கும் வேகப் பந்து வீச்சால், பேட்ஸ்மென்களை, மிரட்டி ரசிகர்களை மகிழ்ச்சியுறச் செய்தவன். தேவைப்படுமென்றால், ரன் அடித்தும் அணியின், வெற்றிக்கு உதவியவன். மைதானத்தில், உடன் விளையாடுபவர்களைத் தோழமையுடன் நடத்துவதாகட்டும், திட்டமிட்டபடி வெற்றியைப் பறிப்பதாகட்டும், ஆக்ரோஷத்துடன் பந்தை வீசுவதாகட்டும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகட்டும், எதிலுமே ஒரு கம்பீரம் மிளிரும். 

உலக கோப்பை கிரிக்கெட்டில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம், தோற்ற பின், மைக்கில் பேசும் பொழுது, தன் மனைவி உட்பட ஒவ்வொரு வருக்கும், நன்றி சொல்லி, அமைதியாக அந்தத் தோல்வியை, ஏற்றுக் கொண்டு பேசிய காட்சி இன்னும் என் மனதில் உள்ளது. 

கடுமையான நீரிழிவு நோயால் அவதிப்பட்ட பொழுது, தொடர் சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து வெளியே வந்து, மீண்டும் தனது, பந்து வீச்சை மேம்படுத்திய திறன் எப்பொழுதும் என்னை மலைக்கச் செய்யும். எப்பொழுதும், மனைவியைப் பெருமையாகவே பேசும... பலரின் உள்ளத்தை கொள்ளை கொண்ட, வாசிமின் பிரியமான மனைவி இங்கு சென்னையில்தான் காலமானார்..என்பது கூடுதல் செய்தி..

 கேப்டன் என்றால், இப்படித் தான் இருக்க வேண்டும், என்று ஒரு முன்மாதிரியான வாக்கு, செயலின் காரணமாக தோற்றமும் ரசிக்கும்படி ஆகிப் போனவன். 

வாசிமுக்காகவே, இந்த பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று கூட எண்ணுவதுண்டு.....

----------------------------------------------------------------------
  

    எனக்குப் பிடித்த காபி.....
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    நினைவு தெரிந்த நாளில், என் அம்மா, நரசுஸ் காப்பி பொடியை பாலில், சர்க்கரையுடன் கலந்து பின் வடி கட்டி தருவார். இயன்ற அளவு இனிப்பை அதிகம் சேர்க்கச் சொல்லி குடிப்பேன். 
அதன், பின், ப்ரு (இன்ஸ்டன்ட் காப்பி), கலப்பது எளிதாகவும், சுவை கூடுதலாகவும் இருப்பதால், குடும்பத்தோடு ப்ருவிற்கு மாறினோம். 

எந்த ராஜா, எந்த ஊர் போனாலும், எனக்கு இரு வேளை, காப்பி குடித்தே ஆக வேண்டும்.


    கடந்த பத்து வருடங்களாக, சமையல் செய்முறைகளில் முதலில் கட்டாயத்தின் பேரிலும், பின், விருப்பத்தின் பேரிலும் ஈடுபட்டதால், வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டேன். ஏகப்பட்ட ஃபில்ட்டர் காப்பி பொடிகள், வாங்கி, அடர்த்தியான பாலில் கம்மியான சர்க்கரை கலந்து, முயற்சி செய்து, ஓரளவு வெற்றியும் பெற்றேன்.

    சன் ரைஸ், நெஸ்கஃபே , என்று மாற்றி, மாற்றி குடித்தாலும், சென்னையில், ஹாட் சிப்ஸில் குடித்த பிறகு இதற்கு மிஞ்சி ஒரு சுவை சொர்க்கத்தில் கூட இருக்க முடியாது என்று மனதார சான்றளித்தேன். அங்கு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், ஒரே நேரத்தில் இரண்டு காப்பி எல்லாம் வாங்கி சுவைத்தது உண்டு.

    முதன் முதலில் ஹாட் சிப்ஸ் காப்பியை சுவைக்கும் பொழுது, நாவில், துளி துளியாகப் பட்டு, உள்ளே இறங்கும் பொழுது, அதிகாரம் இருந்தால், சென்னையையே அந்தக் காப்பி போட்ட கைகளுக்கு எழுதி வைத்து விடலாம் போல உணர்வு எனக்கு.

    ஒவ்வொரு மிடறாக உள்ளே இறங்கும், காப்பி, உடலின் எல்லா பாகங்களையும் புத்துணர்வாக்கி, மனதையும் நிறைக்கும் தருணத்தில், நானே காப்பியாக ஆகியிருக்கிறேன். இனிப்பை பெயரளவிற்கு சேர்த்துக் கொண்டு, அதிகமான காப்பி பொடியை நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் கலந்து, சூடு கொஞ்சமும் குறையாமல் பருகும் ஒவ்வொரு துளியிலும் உள்ள கசப்பு, பிடித்த ஒரு கசப்பாகவே மாறிவிட்டது.

    திரும்பிப் பார்க்கும், எந்த ஒரு நாளிலும் உணவை கூட ஒதுக்க முடிந்த என்னால், காப்பியை ஒதுக்கி விட்டிருக்க முடியவில்லை. சமீபத்தில், எத்தனையோ பேர் சொல்லிவிட்டனர், இவ்வளவு காபி எல்லாம் குடித்தால் விரைவில் முக சுருக்கம் வந்து, வயதானது போல தோற்றம் வந்து விடும் என்று. " ஒளவையார் ரொம்ப கஷ்டப்பட்டு பாட்டெல்லாம் பாடி வயதானவராக மாறியது போல எனக்கு காப்பியாலே கிடைத்தால் பரவாயில்லை" என்று, இப்பொழுதும், காப்பியை அருந்திக் கொண்டேதான் சொல்கிறேன்.
------------------------------------------------------------------------

    எனக்குப் பிடித்த ஊஞ்சல்...
=================================

    என்னுடைய சிறுவயதில், வீட்டின் அருகே இருந்த உறவினர் ஒருவரின், மரத்தில் இரும்பு சங்கிலியைக் கொண்டு, மரப் பலகையுடன் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சல் பார்க்கவே அம்சமாக இருக்கும். அதில், ஆடும் சுகத்திற்காக, நான்கு பேர் எப்பொழுதும் போட்டி போட்டிக் கொண்டே இருப்போம். இதில் உள்ள சிறப்பு, நல்ல அலை நீளத்தில், ஆடக் கூடியதாக இருந்தது. 

எத்தனையோ நாட்கள், நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், பின்னால் யாரவது தள்ளி விட்டு ஒதுங்கி கொள்ள, ஆடிய நாட்களில் அதிக பட்ச ஆனந்தத்தை வழங்கியது அந்த வேப்ப மரத்து ஊஞ்சல். எந்நேரமும் எனக்கே ஊஞ்சல் வேண்டும் என நான் படுத்திய பாட்டில், என் பாட்டி இவ்வாறு கூறுவார்... இவ ஊஞ்சலுக்காகப் புருஷனைக் கூட வித்துடுவா என்று... ( எங்கள் ஊர்ப் பக்கம், இது போன்று ஒரு சொலவடை இருக்கிறது.)

    இப்பொழுது நவீன ஊஞ்சல் வீட்டின் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கிறது...ஒரு ஆள் உள்ளே நன்கு சாய்ந்து அமரும் வண்ணம் பெரிதாக இருந்தாலும், குறைவான தூரத்தில் தான் ஆடித் திரும்ப முடியும். ஆனாலும், ஆடுவது ஒன்றே பிரதானமாக உள்ளதால், இதுவும் பிடித்திருக்கிறது.


    மனம் முழுவதும் உற்சாகம் பொங்கும் நேரங்களில், வேகமாகக் கால்களால், தள்ளி ஆடுவதும், சோகம் அப்பிப் போய் இருக்கும் கணங்களில் சும்மா அதில் உட்கார்ந்திருப்பதும், தினசரி வாடிக்கை தான். 

#அப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் நேரங்களில் மேலே உள்ள சங்கிலி லேசாக அசைந்து கொடுத்து மெதுவாக என்னைத் தாலாட்டிக் கொண்டே இருப்பதாலேயே எனக்கு விருப்பமான மடியாகிவிட்டது. #


இன்வேர்ட்டர் பொருத்தப்படாமல் இருந்த நாட்களில், நள்ளிரவில் மின்சாரம் போகும் பொழுதெல்லாம், அதிகமான புழுக்கத்தால், ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் இதில் அமர்ந்து ஆடிக் கொண்டே காற்றை வாங்கி கொண்டிருப்பேன். 

பின்னால் சாய்ந்து கொண்டு.., 
கால்களை மடக்கியவண்ணம் உட்கார்ந்து கொண்டு.., இதிலமர்ந்து அலைபேசிக் கொண்டிருப்பேன்..

 பெரும்பாலான என் அலை பேசி பேச்சுக்களையும், என் மன உணர்வுகளையும் பார்த்துக் கொண்டே 
..கேட்டுக் கொண்டே..,
எதையுமே வெளிக்காட்டாமல், 
ஒரு ஞானியைப் போல அதன் கடமையான ஆட்டுவித்தலை மட்டுமே செய்யும்.அது..

    அதிகமான நேரம் இதில் அமர்ந்திருப்பதாலேயே எந்த ஊர் சென்றாலும், அதிகம் நான் தவறவிடுவது ஊஞ்சலே. 

பார்த்த மாத்திரத்திலேயே, ஊஞ்சல், உள்ள வீடுகள் எல்லாம் கூடுதல் நெருக்கமாகிவிடுகின்றன. செல்லும் வீடுகளில் சற்றும் தயங்காமல், ஊஞ்சல் கண்ட இடத்தில், மனம் விரும்பும் வரை ஆடும் நேரங்களில், நான் நானாகவே இருப்பதாக உணர்கிறேன்..நம்புகிறேன்.


-பரண் சாளரத்துக்ககாக தீபா நாகராணி
பரணின் புதிய பகுதியான
~சாளரம்~ நமது ஃபேஸ்புக் பதிவர்களின்
ரசனைகள் குறித்து பேசுகிறது

இந்தவார சாளரத்துக்காக தீபா நாகராணி..

ஆதரிப்போம் இப்புதிய முயற்சியை..ஈர்த்த மனிதன் - வாசிம் அக்ரம்.
==========================

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், தெரிய வந்த, வாசிம்,
நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தை அதிகப் படுத்தியவன். ஊரெல்லாம், டெண்டுல்கர் புராணம், பாடிக் கொண்டிருந்த அந்த நாட்களிலும், எனக்கு அவனைப் பிடிக்கும்.

துல்லியமான, பிரமிக்க வைக்கும் வேகப் பந்து வீச்சால், பேட்ஸ்மென்களை, மிரட்டி ரசிகர்களை மகிழ்ச்சியுறச் செய்தவன். தேவைப்படுமென்றால், ரன் அடித்தும் அணியின், வெற்றிக்கு உதவியவன். மைதானத்தில், உடன் விளையாடுபவர்களைத் தோழமையுடன் நடத்துவதாகட்டும், திட்டமிட்டபடி வெற்றியைப் பறிப்பதாகட்டும், ஆக்ரோஷத்துடன் பந்தை வீசுவதாகட்டும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகட்டும், எதிலுமே ஒரு கம்பீரம் மிளிரும்.

உலக கோப்பை கிரிக்கெட்டில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம், தோற்ற பின், மைக்கில் பேசும் பொழுது, தன் மனைவி உட்பட ஒவ்வொரு வருக்கும், நன்றி சொல்லி, அமைதியாக அந்தத் தோல்வியை, ஏற்றுக் கொண்டு பேசிய காட்சி இன்னும் என் மனதில் உள்ளது.

கடுமையான நீரிழிவு நோயால் அவதிப்பட்ட பொழுது, தொடர் சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து வெளியே வந்து, மீண்டும் தனது, பந்து வீச்சை மேம்படுத்திய திறன் எப்பொழுதும் என்னை மலைக்கச் செய்யும். எப்பொழுதும், மனைவியைப் பெருமையாகவே பேசும... பலரின் உள்ளத்தை கொள்ளை கொண்ட, வாசிமின் பிரியமான மனைவி இங்கு சென்னையில்தான் காலமானார்..என்பது கூடுதல் செய்தி..

கேப்டன் என்றால், இப்படித் தான் இருக்க வேண்டும், என்று ஒரு முன்மாதிரியான வாக்கு, செயலின் காரணமாக தோற்றமும் ரசிக்கும்படி ஆகிப் போனவன்.

வாசிமுக்காகவே, இந்த பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று கூட எண்ணுவதுண்டு.....----------------------------------------------------------------------


எனக்குப் பிடித்த காபி.....
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நினைவு தெரிந்த நாளில், என் அம்மா, நரசுஸ் காப்பி பொடியை பாலில், சர்க்கரையுடன் கலந்து பின் வடி கட்டி தருவார். இயன்ற அளவு இனிப்பை அதிகம் சேர்க்கச் சொல்லி குடிப்பேன்.
அதன், பின், ப்ரு (இன்ஸ்டன்ட் காப்பி), கலப்பது எளிதாகவும், சுவை கூடுதலாகவும் இருப்பதால், குடும்பத்தோடு ப்ருவிற்கு மாறினோம்.

எந்த ராஜா, எந்த ஊர் போனாலும், எனக்கு இரு வேளை, காப்பி குடித்தே ஆக வேண்டும்.


கடந்த பத்து வருடங்களாக, சமையல் செய்முறைகளில் முதலில் கட்டாயத்தின் பேரிலும், பின், விருப்பத்தின் பேரிலும் ஈடுபட்டதால், வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டேன். ஏகப்பட்ட ஃபில்ட்டர் காப்பி பொடிகள், வாங்கி, அடர்த்தியான பாலில் கம்மியான சர்க்கரை கலந்து, முயற்சி செய்து, ஓரளவு வெற்றியும் பெற்றேன்.

சன் ரைஸ், நெஸ்கஃபே , என்று மாற்றி, மாற்றி குடித்தாலும், சென்னையில், ஹாட் சிப்ஸில் குடித்த பிறகு இதற்கு மிஞ்சி ஒரு சுவை சொர்க்கத்தில் கூட இருக்க முடியாது என்று மனதார சான்றளித்தேன். அங்கு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், ஒரே நேரத்தில் இரண்டு காப்பி எல்லாம் வாங்கி சுவைத்தது உண்டு.

முதன் முதலில் ஹாட் சிப்ஸ் காப்பியை சுவைக்கும் பொழுது, நாவில், துளி துளியாகப் பட்டு, உள்ளே இறங்கும் பொழுது, அதிகாரம் இருந்தால், சென்னையையே அந்தக் காப்பி போட்ட கைகளுக்கு எழுதி வைத்து விடலாம் போல உணர்வு எனக்கு.

ஒவ்வொரு மிடறாக உள்ளே இறங்கும், காப்பி, உடலின் எல்லா பாகங்களையும் புத்துணர்வாக்கி, மனதையும் நிறைக்கும் தருணத்தில், நானே காப்பியாக ஆகியிருக்கிறேன். இனிப்பை பெயரளவிற்கு சேர்த்துக் கொண்டு, அதிகமான காப்பி பொடியை நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் கலந்து, சூடு கொஞ்சமும் குறையாமல் பருகும் ஒவ்வொரு துளியிலும் உள்ள கசப்பு, பிடித்த ஒரு கசப்பாகவே மாறிவிட்டது.

திரும்பிப் பார்க்கும், எந்த ஒரு நாளிலும் உணவை கூட ஒதுக்க முடிந்த என்னால், காப்பியை ஒதுக்கி விட்டிருக்க முடியவில்லை. சமீபத்தில், எத்தனையோ பேர் சொல்லிவிட்டனர், இவ்வளவு காபி எல்லாம் குடித்தால் விரைவில் முக சுருக்கம் வந்து, வயதானது போல தோற்றம் வந்து விடும் என்று. " ஒளவையார் ரொம்ப கஷ்டப்பட்டு பாட்டெல்லாம் பாடி வயதானவராக மாறியது போல எனக்கு காப்பியாலே கிடைத்தால் பரவாயில்லை" என்று, இப்பொழுதும், காப்பியை அருந்திக் கொண்டேதான் சொல்கிறேன்.------------------------------------------------------------------------

எனக்குப் பிடித்த ஊஞ்சல்...
=================================

என்னுடைய சிறுவயதில், வீட்டின் அருகே இருந்த உறவினர் ஒருவரின், மரத்தில் இரும்பு சங்கிலியைக் கொண்டு, மரப் பலகையுடன் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சல் பார்க்கவே அம்சமாக இருக்கும். அதில், ஆடும் சுகத்திற்காக, நான்கு பேர் எப்பொழுதும் போட்டி போட்டிக் கொண்டே இருப்போம். இதில் உள்ள சிறப்பு, நல்ல அலை நீளத்தில், ஆடக் கூடியதாக இருந்தது.

எத்தனையோ நாட்கள், நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், பின்னால் யாரவது தள்ளி விட்டு ஒதுங்கி கொள்ள, ஆடிய நாட்களில் அதிக பட்ச ஆனந்தத்தை வழங்கியது அந்த வேப்ப மரத்து ஊஞ்சல். எந்நேரமும் எனக்கே ஊஞ்சல் வேண்டும் என நான் படுத்திய பாட்டில், என் பாட்டி இவ்வாறு கூறுவார்... இவ ஊஞ்சலுக்காகப் புருஷனைக் கூட வித்துடுவா என்று... ( எங்கள் ஊர்ப் பக்கம், இது போன்று ஒரு சொலவடை இருக்கிறது.)

இப்பொழுது நவீன ஊஞ்சல் வீட்டின் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கிறது...ஒரு ஆள் உள்ளே நன்கு சாய்ந்து அமரும் வண்ணம் பெரிதாக இருந்தாலும், குறைவான தூரத்தில் தான் ஆடித் திரும்ப முடியும். ஆனாலும், ஆடுவது ஒன்றே பிரதானமாக உள்ளதால், இதுவும் பிடித்திருக்கிறது.


மனம் முழுவதும் உற்சாகம் பொங்கும் நேரங்களில், வேகமாகக் கால்களால், தள்ளி ஆடுவதும், சோகம் அப்பிப் போய் இருக்கும் கணங்களில் சும்மா அதில் உட்கார்ந்திருப்பதும், தினசரி வாடிக்கை தான்.

#அப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் நேரங்களில் மேலே உள்ள சங்கிலி லேசாக அசைந்து கொடுத்து மெதுவாக என்னைத் தாலாட்டிக் கொண்டே இருப்பதாலேயே எனக்கு விருப்பமான மடியாகிவிட்டது. #


இன்வேர்ட்டர் பொருத்தப்படாமல் இருந்த நாட்களில், நள்ளிரவில் மின்சாரம் போகும் பொழுதெல்லாம், அதிகமான புழுக்கத்தால், ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் இதில் அமர்ந்து ஆடிக் கொண்டே காற்றை வாங்கி கொண்டிருப்பேன்.

பின்னால் சாய்ந்து கொண்டு..,
கால்களை மடக்கியவண்ணம் உட்கார்ந்து கொண்டு.., இதிலமர்ந்து அலைபேசிக் கொண்டிருப்பேன்..

பெரும்பாலான என் அலை பேசி பேச்சுக்களையும், என் மன உணர்வுகளையும் பார்த்துக் கொண்டே
..கேட்டுக் கொண்டே..,
எதையுமே வெளிக்காட்டாமல்,
ஒரு ஞானியைப் போல அதன் கடமையான ஆட்டுவித்தலை மட்டுமே செய்யும்.அது..

அதிகமான நேரம் இதில் அமர்ந்திருப்பதாலேயே எந்த ஊர் சென்றாலும், அதிகம் நான் தவறவிடுவது ஊஞ்சலே.

பார்த்த மாத்திரத்திலேயே, ஊஞ்சல், உள்ள வீடுகள் எல்லாம் கூடுதல் நெருக்கமாகிவிடுகின்றன. செல்லும் வீடுகளில் சற்றும் தயங்காமல், ஊஞ்சல் கண்ட இடத்தில், மனம் விரும்பும் வரை ஆடும் நேரங்களில், நான் நானாகவே இருப்பதாக உணர்கிறேன்..நம்புகிறேன்.


சனி, 4 மே, 2013

குமரேசன் அசாக்

 (ஜனவரி 22, 2013 அன்று முகநூலில் பதிந்தது.)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்பு நண்பர் ராஜ் ப்ரின்ஸ் , மூலமாக ஒரு நாள் கான்பெரென்ஸ் கால் மூலம், முதன் முறையாக தீக்கதிர் நாளிதழின் பொறுப்பு ஆசிரியராக இருக்கும் குமரேசன் அசாக் அவர்களிடம் பேசினேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், மிக எளிமையாக, நகைச்சுவையாக, சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொல்வதில் வல்லவர் என்பதை அறிந்தேன்.

அதன் பிறகு, குறிப்பிட்ட இடைவெளியில், அலைபேசியில் தொடர்பு கொள்வதும், மதுரை வரும் பொழுது வீட்டிற்கு வர முடியாத நேரங்களில், ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சென்று சந்தித்து விட்டு வருவதும், பிறந்த நாள் மட்டுமில்லாமல், எல்லாப் பண்டிகை நாட்களிலும் மறக்காமல் வாழ்த்துவதும் என்று எங்கள் பேரன்புக்கு உரிய நண்பராகி விட்டார்.

இதில் காலையில் நான் அனுப்பும், sms ஐ பிரித்து, மேய்ந்து வேறொரு கோணத்தில் அதையே பதில் good day, குறுந்தகவலாக அனுப்புவார். இங்கு என்னுடைய பெரும்பான்மையான நிலைத்தகவல்களில் அவருடைய கமெண்ட் கண்டிப்பாக இருக்கும். என்னுடைய மாத்தி யோசிக்கும் பார்வையை இன்னும் கூர்மைப்படுத்த செய்பவரில் ஒருவர். இங்கு, நான் எழுதிய 'அப்பாவின் இளவரசி', 'முதன் முறை செய்த ரத்த தானம்', இரண்டையும் வண்ணக்கதிரில் வெளியிட்டதோடு, 'தீபாவளி வெடி சத்தம் மங்கியது ஏன்?' என்ற கட்டுரையை எழுத வைத்தும் வெளியிட்டவர். ( எழுதுவதில், நான் எவ்வளவு சோம்பேறி என்று என் நண்பர்கள் அறிவர்)

சென்ற முறை சென்னை சென்ற பொழுது, தீக்கதிர் அலுவலகத்தை சுற்றி காண்பித்து, அங்கு உள்ளவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து, எங்களின் சின்ன சின்னக் கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதில் அளித்தவர்.

ஒரு நாள் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசும் பொழுது, திறமையான எழுத்தாளரான ராகுல் ஜி, யை அறிமுகப்படுத்தியவர்.

எப்பொழுது பேசினாலும், ஏதாவது ஒரு உபயோகமானத் தகவலை, பேச்சின் ஊடே விட்டு செல்பவர்.

இத்தனை நாட்களில், என்றும், தான் சார்ந்து இருக்கும் கட்சியின் கொள்கைகளை எங்கள் மீது திணிக்காதவர். மற்ற பேச்சுக்களைப் போல தான், கட்சிப் பேச்சும், சில வரிகளில் கடந்து செல்லும்.

காமராஜர், கக்கன் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இவருடன் பேசும் பொழுது, இவரின், எளிமையும், ஆற்றலும், கடும் உழைப்பும், சேவை மனப்பான்மையும், அந்தத் தலைவர்களுடன் பழகி இருந்தால் இப்படி தான் இருந்து இருக்கும் என எண்ணியதுண்டு.
'அன்பே சிவம்' , விரும்பி ரசித்துப் பார்த்தப் படம். அதில், கமல்ஹாசன், பாத்திரம், இவரை காப்பி அடிக்கப்பட்டது போல தோன்றும் எனக்கு.

ஏகலைவனைத் தேடி குரு வரும் காலம் இது.
என் குருக்களில் ஒருவர் நீங்கள். நன்றி!

கற்றுக் கொள்ளவேண்டும் .... உங்களிடம் உள்ள நல்லப் பண்புகளை...
என்றும் உங்களை மதிக்கின்றோம் ... :)

நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடனும் வாழ வாழ்த்துகிறோம்!

(நிறைய நாட்களாக எழுத வேண்டும் என நினைத்தது, இன்று இறக்கி வைத்து விட்டேன்.

எதுவும் மிகைப்படுத்தி எழுதவில்லை. சொல்லப்போனால், இன்னும் சில விடுபட்டு இருக்கின்றன. ஏனென்றால் அவருக்குப் புகழ்ச்சியும் பிடிக்காது. எனக்கும் புகழ வராது. ஒரு அளவுக்கு மேல் போகும் பொழுது அப்படி ஒரு தோற்றத்தை தந்து விடலாம், என்பதால்......... full stop. 


ரசனை...


by Deepa Nagarani (Notes) on Tuesday, February 5, 2013 at 11:46am ( facebook )

              நான் பிறந்து சில மாதங்களில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, டெல்லி சென்றிருந்த என் தந்தை, தொட்டிலின் மேலே கட்டித் தொங்க விடுவதற்கு ஏற்றார் போல, வரிசையாக அமர்ந்திருக்கும் குருவி பொம்மையை வாங்கி வந்து தொட்டிலின் மேலே கட்டி விட்டதாகவும், அடுத்த நாள் காலையில், ஒரு குருவி கூட மீதம் இல்லாமல், அனைத்தும் பிரிக்கப்பட்டு, பஞ்சு பஞ்சாக தொட்டிலில் கிடந்ததாகவும் சொல்வார். இன்று வரை அவருக்கு உள்ள ஆச்சர்யம், எப்படி அந்த பொம்மை கீழே விழுந்து இருக்கும், அதுவும் எப்படி குப்பைக்கு செல்லும் அளவிற்கு சேதாரம் ஆகி இருக்கும் என்று. பல முறை சொல்லி இருக்கிறார், "அது அவ்ளோ அழகா இருக்கும், ஒரு நாள் முழுசா கூட ரசிக்கல தொட்டிலில கட்டி...  நீ பிச்சுப் போட்டுட்ட " என்று...

இது என் மனதில் தங்கிப் போனது. முதன் முறையாக சென்ற மே மாதம் டெல்லி சென்ற பொழுது, நான் பார்த்து இருக்காத குருவி பொம்மையைத் தேடினேன்,  மனதுக்குப் பிடித்த மாதிரி இல்லாததால், வேறு சில பொம்மைகளுடன், மரத்தில் தொங்கி விளையாடுவதைப் போல இருந்த அழகான குரங்கு பொம்மையை வாங்கி வந்தேன். மதுரை வந்ததும், முதல் வேலையாக, அந்த குரங்கு பொம்மையை எடுத்துக் கொண்டு போய், அப்பாவிடம் கொடுத்தேன். "குருவி பொம்மை கிடைக்கல" என்று சொன்னதற்கு, "இது நல்லா இருக்கு", என்று ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தவர்  டெல்லியில் தான் இது மாதிரி தரமாகவும், அழகாகவும் கிடைக்கும் என்றார்.அன்றைய தினம் மாலை வேளையில் அம்மாவின்  வீட்டை  எட்டிப் பார்த்த பொழுது, அவர் அறையின்  கதவின் வலது ஓரத்தில், மேலே அந்த குரங்கு பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது. மேலே ஓர் ஆணியில் இருந்து ஏதேதோ கம்பிகள் இணைத்து, சின்ன சின்ன வேலைகள் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

அடுத்த நாள் காலையில் பார்த்தால் மிகவும் இறங்கி, கதவின் நடுப்பகுதியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது பொம்மை.
"என்ன ஆச்சும்மா", என்று கேட்டதற்கு,
"வருண் பிடிச்சு இழுத்து விட்டுட்டான். ஸ்ப்ரிங் லூஸ் ஆயிடுச்சு". என்றார் அம்மா.

அன்று மதியம், ஏதேது வைத்து மீண்டும் சரி செய்து,  பழைய உயரத்தில் பொம்மை தொங்க விட்டப் பிறகு தான், மதிய உணவை எடுத்துக் கொண்டார் அப்பா. பள்ளிவிட்டு வந்த, வருண், பொம்மையை இழுக்க வரும் பொழுதெல்லாம், "தொடாதடா", என்று பதமாகவும், இதமாகவும், சில நேரங்களில் மிரட்டியும் சொல்லிக் கொண்டே வந்தேன். அவனும் எத்தனையோ விளையாட்டு சாமான்கள் இருந்தாலும், இது மட்டும், உருப்படியாக எப்படி இருக்கலாம் என்று, அப்பா வேறு பக்கம் சென்ற நேரங்களில் இழுக்க முயற்சித்த நேரங்களில் நானோ, அம்மாவோ பொம்மையைக் காப்பாற்றிக்  கொண்டே வந்தோம்.

ஆனால், விதி வலியது. ஓரிரு நாளில், வழக்கம் போல பையன் தன் கை வரிசையைக் காட்ட, இந்த முறை, தரையில் கிடந்தது குரங்கு பொம்மை. எங்க அப்பாவிற்கோ அவ்வளவு கோபம், வேகமாக வந்த நான் வருணை இழுத்து அவன் முதுகில் ஒரு அடி வைக்க, "அவனை விடு",  என்றவர்....
மீண்டும், அந்த பொம்மையை சரி செய்யத் தொடங்கினார்...

சிறிது நேரத்தில், பழையபடி தயாரானது பொம்மை. இந்த முறை, கதவின் மேல் வருமாறு தொங்க விடாமல், வருண் ஸ்டூல் போட்டாலும், தொட முடியாத உயரத்தில் அதை தொங்கவிட்டார். அந்த கணம் அவர் முகத்தில் சொல்லில் வடிக்க முடியாத நிம்மதியைக் கண்டேன்.

குறிப்பு: எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இன்று வரை, என் அப்பா, விரும்பி ரசித்த பொருள்களில் அந்த குருவி பொம்மைக்கு அடுத்து இந்த குரங்கு பொம்மை... யோசித்தால், வியப்பாக இருக்கிறது...
நம்மை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆர்வம், ரசனை, விருப்பம், கணிக்க முடியாத படி இருக்கிறது சில நேரங்களில்...  :)


முதன் முதலில் செய்த ரத்த தானம்!


by Deepa Nagarani (Notes) on Tuesday, December 4, 2012 at 12:53pm ( facebook )

முதன் முதலில் செய்த ரத்த தானம்...

1995-96
நான் B.A , முதல் வருடம்  சேர்ந்தப் புதிது.
அன்று கல்லூரியில் ரத்த தான முகாம்.

எனக்கு அது வரை, என்னுடைய ரத்தம் எந்த வகையைச் சேர்ந்தது என்று கூட தெரியாது.
அங்கே,கொடுக்கப்பட்டப் படிவத்தை நிரப்புவதற்காக, ரத்தத்தைப்  பரிசோதனை செய்தேன்.
A 1 பாஸிடிவ், என்று தெரிந்ததும், ஒரு குட்டி மகிழ்ச்சி, ஏனெனில், எப்பொழுதோ, அப்பா ரத்த தானம் செய்த சான்றிதழில்  பார்த்த ஞாபகம், அவருடையதும்  A 1 பாஸிடிவ் என்று.

கல்லூரி விடுதியில் உள்ள பெரிய வரவேற்பறை உள்ளே நுழைந்தால், வரிசையாக, மாணவிகள்  கையை நீட்டி ரத்தத்தைக் கொடுத்துக்கொண்டேப் படுத்து இருந்தனர். குட்டி குட்டிப் பாலிதீன் பைகளில்  சேகரமாய்க் கொண்டே  இருந்தது ரத்தம்.

நானும், தயாரானேன்.

வலது கையில், கஷ்டப்பட்டு நரம்பை தேடிக் கண்டுபிடித்து, நறுக் என்று ஊசியை குத்தி, ஏற்றி, பக்கத்தில் ஒரு பாலிதீன் பையை வைத்துவிட்டு சற்று தள்ளி சென்று விட்டார் அந்த நர்ஸ். கையை விரித்து விரித்து மூட சொன்னதை, விடாமல் செய்து கொண்டே இருந்தேன். எனக்கு, எதுவும், குறையும் உணர்வெல்லாம் இல்லை. அந்தப்  பாக்கெட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே,
"இது யாருக்குப்  போகும்,  இதே சினிமாவா இருந்தா, இத வச்சு ஸ்பெஷல் ஸீன் பண்ணி இருக்கலாமே," என்று யோசித்துக் கொண்டே இருந்த பொழுது, ஊசியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில்  பஞ்சை வைத்து, கையை  மடக்கி வைத்திருக்க சொன்னபடி செய்தேன்.

அதே நேரத்தில் ரத்தம் எல்லாம் கொடுத்திருக்கோம் நாம தான் ஹீரோயின் என்ற  நினைப்பில் வேகமாக எழுந்து துள்ளிக் குதித்து இறங்கினேன்.  அதே வேகத்தில், நடந்து வெளியில் வந்து, எங்களுக்காக சிறப்பாக தயார் செய்திருந்த ஆரஞ்சு பழச்சாற்றைக் குடித்துவிட்டு, அதற்குள் ஏற்பட்ட அனுபவத்தை தோழிகளுக்கு விரிவாக விளக்கிக் கொண்டே, கேண்டீன் அருகில் அமர்ந்தேன்.
(கூட இருந்தததில வேற ஒரு ஜீவனும் ரத்தம் அன்னைக்கு தரல ),


ஏகப்பட்டக்  கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருந்தேன்...


.


.

.

.

.

.

.

.

.


என்னை சுற்றிப்  பெரிய கூட்டம் நிற்கிறது.
அதில் என் தோழியரும்  இருக்கின்றனர்.
"வீட்டில நல்ல தூக்கத்தில, கனவு கண்டா, அங்கயும், இதுக தான" னு, சலிப்பில்,
கண்ணை விழித்து எழுவோம் என்று, முயற்சி செய்கிறேன், முடியவில்லை. :(

அப்போது  தான் கவனிக்கிறேன், எதிரே ஒரு சீனியர் அக்கா, என் கால்களை மேல தூக்கவும், கீழே இறக்க்கவுமாக தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய தலை, வேற ஒருத்தி மடியில் இருக்கிறது.

எங்கள் பேராசிரியை மற்றும், சற்று நேரம் முன்பு ரத்த தானம் செய்த போது  உடன் இருந்த செவிலியர்கள், மருத்துவர் ஒருவர், எல்லாம் அருகிலே பதட்டத்தோட  அமர்ந்து இருக்கிறார்கள்.

ஏகத்துக்கும் வெளிறிப்  போய் இருக்கும்  அந்த முகங்களைப்  பார்த்ததும்,
"நான் காலேஜ் ல தான் இருக்கேன்னு தெரியுது,
ஆனா என்ன ஆச்சுன்னு மட்டும் தெரியலயே? " என்று கேட்டதும்,

" ஒண்ணுமில்ல (உலகமே அழிந்தாலும், இந்த ஒன்னுமில்லைன்னு சொல்லி ஆரம்பித்தால் தான் ஒரு திருப்தி), நீ பேசிட்டு இருந்திட்டே மயங்கி விழுந்திட்ட", என்றார் மருத்துவர்.

( பேசிட்டே, அப்படியே பின்னால விழுந்துட்டேனாம், இது, பின்னர், உடன் இருந்தோர் சொன்னது)


ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டே  இருந்த மருத்துவர்
ஒரு ஊசியை என் இடது கையில் குத்திக் கொண்டே,

"நீங்க ப்ளட் டொனேட் பண்ணி, நீடில் ரிமூவ் செய்த நொடில வேகமா எழுந்து வந்ததில, கீழ ப்ளட் சர்குலேட் ஆகாம இருந்ததால இப்படி ஆகி இருக்கு.  இப்போ சரி ஆயிடுச்சு..."
"என்ன, பயந்துடீங்களா?" என்று  கேட்டதும்,

"அடுத்த கேம்ப் எப்போ இங்க", என்ற பதில் கேள்விக்குப் புன்னகைத்தார்.

அவர்கள் அனைவரும் வற்புறுத்தியதால் அன்று மதிய உணவு அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். :)

அதன் பிறகு, அடுத்த வருடம் வந்தார்கள் அதே குழுவினர்.
முதல் ஆளாக, நான் தான் ரத்த தானம் செய்தேன்.
இந்த முறை, மெதுவாக, எழுந்து உட்கார்ந்து, பிறகு தான் கீழே இறங்கினேன்.

இன்றும் ரத்த தான முகாம் பற்றிய விளம்பரம் காணும் பொழுதெல்லாம்,
நினைவுக்கு வரும் நான் மயங்கி விழுந்த இந்த நிகழ்வு!

சில திரைப்படங்களில், இறுதியில் காட்டப்படும், விடுபட்ட காட்சிகள் போல, இங்கும் எழுத வேண்டும் என ஆசை... :P

1. எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு, அப்போவோட அம்மால இருந்து , அம்மாவோட அம்மா வரை, நெறைய பேர் விடாம, துக்கம் விசாரிச்சு, இனி இந்த தப்ப செய்யாத னு "அறிவுரை" வழங்கினப்புறம், சொல்லாம சினிமாக்கு போற வகையில செய்ய ஆரம்பிச்சது தான் அடுத்து ரத்தம் கொடுத்தது...  :)

2. மயக்கம் முதலும், கடைசியும் அதுதான், என் வாழ்க்கையில... இப்படிதான், கடைசிலயும் இருக்குமோ னு பல விதமா யோசிச்சு இருக்கேன். ஆனாலும், கீழ விழுந்த நொடியைக் கூட என்னால ஞாபகத்துக்கு கொண்டு வர முடியல. :) )

வெடிச்சத்தம் மங்கியது ஏன்?


by Deepa Nagarani (Notes) on Sunday, November 25, 2012 at 5:42pm ( facebook)

இன்றைய(25.11.2012) வண்ணக்கதிர் (தீக்கதிர்) இதழில் வெளி வந்துள்ள எனது கட்டுரை.

வெடிச்சத்தம் மங்கியது ஏன்?

தீபாவளி நாள் பொதுவாக அதிகாலையிலேயே  வெடிச் சத்தங்களுடன் விடியும். வீட்டில் எது பேசினாலும் சத்தமாகப் பேச வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியில் எவ்வளவு சத்தம் கூட்டி வைத்தாலும் வெடிச் சத்தத்தில் விட்டு விட்டுக் கேட்கும். தொலைபேசியில் பேசுவதோ பெரும் திண்டாட்டம். அந்த அளவு தொடர்ச்சி யாக வெடிச் சத்தம் காதைப்  பதம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதி, விருதுநகரில், எந்த ஒரு சத்தமும் இல்லா மல் ஆறு மணிக்கு விடிந்தது. அம்மாவுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த வேளையிலும் எந்த ஒரு வெடிச் சத்தமும் இல்லாமல், நாளை மதுரைக்கு வருவதாக தெரிவித்தபோது, அவரும் ஆச்சரியத்து டன் சொன்னதும் இதே விஷயம்தான். “தீபாவளி மாதிரியே இல்ல, அவ்ளோ அமைதியா இருக்கு ஊரு.”

தொடர்ச்சியான மின்வெட்டால், தினமும் 18 மணி நேரம் அவதிப்படும் எங்களைப் போன்ற சென்னை தாண்டிய பிற மாவட்டக்காரர்களுக்கே உரிய அனுபவம் இது. இன்வெர்ட்டர் இருந்தும், அதற்கான சார்ஜ் ஏற்றும் அளவுக்கு மின்சாரம் வரா மல், பாகுபாடற்று ஒரு தாய் மக்களாக நிம் மதியற்ற தூக்கத்தால் பல நாட்கள் தவித்த, நோயுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தை கள் என அனைவரும் பண்டிகைக்கு முதல் நாள், இரவு எட்டு மணியிலிருந்து தொடர்ச்சியாக விடப்பட்ட மின்சாரத் தால் நிம்மதியாகத் தூங்கினர்.

பல வீடுகளிலும் காலை ஏழு மணிக்கு மேல் தான் வாசல் தெளித்தனர். பார்த்த முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு நிம்ம தியை வழங்கி இருந்தது முந்தைய இரவுத் தூக்கம். இப்படி நிம்மதியான தூக்கமே தேவையான ஒன்றாக இருந்தது அன்று. அதுக் கிடைத்த மகிழ்ச்சியில் வெடியாவது பட்டாசாவது!
என்னுடைய பத்து வயதில், எனக்கும் என் தம்பிக்கும் சம அளவில் பணம் கொடுத்து, வேண்டிய வெடிகளை வாங்கிக் கொள்ளச் சொல்வர் பெற்றோர். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, முதன் முதலில் திரியைக் கிள்ளி, எரிகின்ற பத்தியை திரியின்  நுனியில் பயத்துடன் வைத்த பின் வெடித்த சீனி வெடி தந்த மகிழ்ச்சியை, வேறு எதுவும் தந்ததில்லை. அடுத்தடுத்த வகுப்புகள் செல்ல செல்ல, குனிந்து பற்ற வைத்து அதன் பின் வெடிப் பது பெரிய வேலையாகிப் போனது, நானும், சோம்பேரியாகிப்போனேன். வெடி களுக்கு பதில், கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டாசுகளை மட்டுமே மனம் ரசிக்க ஆரம்பித்தது.

தீபாவளியையொட்டி, சாலைகளில், பத்து பட்டாசுக் கடைகளாவது முளைக் கும் இடங்களில் இந்த வருடம் ஓரிரு கடைகள் மட்டுமே இருந்தன. அவற்றிலும் குறைவான அளவே வெடிகள் இருந்தன. வாங்குவோரும், ஆர்வமில்லாமல், பெயரள வில், பைகளை நிறைத்துக்  கொண்டிருந் தனர். விலைவாசி உயர்வின் காரணமாக ஏற் பட்டிருக்கும் வியாபார மந்தம் பட்டாசி லும் எதிரொலித்தது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் கருகும் மனிதர்கள் பற்றிய உறுத்தலுணர்வு நம்மிடையே பரவிவரு வது இன்னொரு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்.

காலை ஒன்பது மணிக்கு மேல் அவ்வப் போது, வெடிச் சத்தம் கேட்டது. மாலை ஏழு மணிக்கு மேல, மாடிக்குச் சென்ற போது, நிறைய வீடுகளில், புஸ்வானம், சங்குச்சக்கரம், கம்பி மத்தாப்பு, சாட்டை, போன்றவற்றுடன் ராக்கெட், செவென் சாட் போன்ற வான வேடிக்கைகள்  நிகழ்த் துவதை காண முடிந்தது. இதே ஒரு சில தீபாவளிகளுக்கு  முன்பு, இந்தப் பக்கம் பார்ப் பதா அந்தப் பக்கம் பார்ப்பதா என்று குழம்பச் செய்யும் வண்ணம் சுற்றி சுற்றி, வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இம்முறை, ஒரு பக்கம் ஒன்றிரண்டு வர்ணங் களுடன், மத்தாப்புக்  கொட்டினால், சற்று இடைவெளி விட்டு வேறொரு புறம், மத்தாப்பு மழை.

ஓரளவு, எதையும் தவற விடாமல் அந்தப் பகுதியில் உள்ளோர் அனுபவித்த பட்டாசுக் கொண்டாட்டத்தை நானும் ரசித்தேன். இதில் சிலவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டும்.மேலே எழும்பும் சில வெடிகள், அதிகமாக சத்தம் கொடுத்துக் கொண்டே வரும், சரி, என்ன கலர் வருமோ என்று ஆவலுடன் பார்த் தால், அது சாதாரண ராக்கெட் ஆக திரும்பி விடும். சத்தம் கொடுக்காமல், லேசான வெளிச் சத்துடன், மேலே செல்பவை, அசத்தும் கலரில் பூப்பூவாக கொட்டும்.
ஒன்று முடியும் தருணத்தில் காத்திருக்க விடாமல், மற்றொன்று நம் கண்ணுக்கு விருந் தளிப்பது, அருமை. வேறு சில, மேலே சென்று டப் டப் சத்தத்துடன், நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே, அப்படியே  படர்ந்து மஞ்சள் வண்ணத்தில் மனதை நிறைத்தன.

இன்னும் ஒரு வகை வான வேடிக்கை பற்றி யும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த முறை தான், நான் அதனைப் பார்த்தேன். கீழே இருந்து உயர்கிறபோது, பெரிதாக கவனத்தை ஈர்க்காமல், மேல சென்றதும் ஒன்று வெடித்து அதன் ஒளியை ரசித்துக் கொண்டே இருக்கும் பொழுது, இஷ்டம் போல தொடர்ச்சியாக ஒவ்வொரு புறத்திலும் ஒன்றாக ஒழுங்கில்லா மல், வெடித்து, உங்களுக்கு வெளிச்சம்தானே வேணும் என்பது போல பெயரளவில் வெடித்த அந்தப் பட்டாசின் பெயர் தெரிய வில்லை... :

எல்லாம் இருக்க, தொடர்ச்சியான மின் சாரம் இனி அடுத்த தீபாவளிக்குத்தானா என்று உள்ளே கேள்வி எழுந்தபோது, ரசித்த பட்டாசுகளின் வண்ணங்கள் மங்கத் தொடங்கின.

உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி - ஆவணப்பட விமர்சனம்


by Deepa Nagarani (Notes) on Wednesday, October 3, 2012 at 2:03pm ( facebook )


உண்மையை, உலகம் உணரும் பொருட்டு மேற்கொண்ட போராட்டங்கள்.
இறுதியில் கிடைத்த வெற்றியின் ஆவணம் இந்தப் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில்...
அமைந்த கிராமம் வாச்சாத்தி.

அழகான, பாடலுடன் ஆரம்பமாகும் பாடல்,
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு இருந்த கிராமத்தின் மகிழ்ச்சியை நம் மீதும் தெளிக்கிறது.
"மூச்சு காத்து பொறந்த மண்ணில் பொறந்தவங்க நாங்க
மூடிப் போட்டு மனசை பூட்ட மறந்தவங்க தாங்க
வயித்தை தாண்டி கொஞ்சம் கூட சேர்த்தது இல்லீங்க
வனத்தை தாண்டி நாங்க வணங்க சாமி இல்லீங்க...."
இரா. பிரபாகர் இசையில்... கவிஞர் தனி கொடியின் வரிகளில்  மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.


1992, ஜூன் , 20  ஆம் தேதி  சம்பவம் நிகழ்ந்தது, ஆனால்,
1992 ஜூலை  7ஆம் தேதி தான் மலை வாழ் மக்கள் இயக்கத்திடம், தெரியப்படுத்த கூடிய சூழல்  ஊர் மக்களுக்கு.

ஒரு வேளை, இந்த மலை வாழ் மக்கள் சங்கத்தின் காதுகளுக்கு இந்த சம்பவம்  பற்றி தெரிய வராமல் போய் இருந்தால்....
காணாமலே போய் இருக்குமோ இந்த கிராமம், என்ற பதைபதைப்பு எழுகிறது.

எந்த ஒரு கட்சியை சார்ந்தவராகவோ, சாரதவராகவோ இருந்தாலும், படத்தைப் பார்த்து முடித்து உடனே கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் கை குவித்து வணக்கம் சொல்ல வைக்கும். இது போன்று, மக்கள் பிரச்சனைகளுக்காக, லாபத்தை கணக்கு பார்க்காமல் ஒரு கட்சி நம்மிடையே இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்ததை,  விவரிக்கும் பொழுதே கண்ணீர் கொட்டி கொண்டே, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுவது, இன்னும் அவர்களின் காயம் உலராமல் இருப்பதையே காட்டுகிறது.

ஒரு பெண், இவர்கள் செய்த கொடுமைகளை வரிசையாக சொல்லும் பொழுது, அங்கே வரும் ஒரு பாட்டில், "காவ காக்கும், கடவுளுக்கும் கண் அவிஞ்சு போச்சா ".... என்ற வரிகளில் உள்ள கோபம், அவர்களின் தாள முடியாத வேதனையை நம்மையும்  உணர செய்வதாக உள்ளது.

அங்கு பணிபுரிந்த வனத்துறையினர், வீரப்பனை பிடிப்பதற்காக சென்ற காவல் துறையினரின் கோர தாண்டவத்திற்கு பின்,  எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகிறது இருபது வருடங்களுக்கு பின்னால் இருந்த கிராமத்தின்  நிலை...

அந்த காலத்தில், மன்னர்கள் படை எடுத்து சென்று வெற்றி பெற்ற பின், இது மாதிரியாக தான், வெற்றி கொள்ளப்பட்ட இடங்கள் இருந்திருக்குமோ என்று எண்ணும் பொழுதே, போங்கடா, நீங்களும், உங்க வெற்றியும் என்று வசைபாட தோன்றுகிறது.

ஒரு வீடு கூட உருப்படியாக இல்லாத படிக்கு, சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கப்பட்டிருந்த ஓட்டு வீடுகள், உடைத்து நொறுக்கப்பட்டிருந்த பாத்திர பண்டங்கள், பணம், ஆடு, மாடு, கோழிகளை கூட விட்டு வைக்காமல், அனைத்தையுமே திருடி சென்றதோடு, அங்கு இருந்த மக்களை அடித்து உதைத்து, மிரட்டி, கொடுமைப்படுத்தி, பதினெட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அங்கு இருந்த கிணற்றில், எண்ணையை ஊற்றி , குடிக்க கூட நீரில்லாமல், ஒரு சுடுகாட்டைப் போல காட்சி அளித்தது அந்த படங்களில் அன்றைய வாச்சாத்தி. வரிசையாக இது போன்ற கொடுமைகளை அடுக்கிகொண்டே போகும் பொழுது, முள்ளி வாய்க்கால் நினைவுக்கு வந்து ஒரு புறம் மனதை முள்ளாக குத்துகிறது.

ஒரு பக்கம் மட்டும், எடுக்காமல், இன்னொரு புறமும், குற்றவாளிகளையும் பேச வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

எந்த அரசு வந்தாலும், இதில் மட்டும், ஒற்றுமையாக...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதற்கான, ஒரே காரணம், இருவருக்குமே இதில் பங்கு உண்டு, மேலும், உள்துறை என்பது முதல்வர் பதில் அளிக்க வேண்டிய ஒன்று என்பதாலும், இந்த தப்பித்தல் நடவடிக்கை இருந்திருக்கும். எப்பொழுதும் போலவே பெருமையாக நடந்த விஷயம் என்றால், தன் சாமர்த்தியம் என்றும், இழிவை தேடி தருவதாக இருந்தால், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதோடு, அப்படி ஒன்றே நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொள்வதாகவே தற்கால முதல்வர்களின் செயல்பாடு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சரியான, நேரத்தில், இந்த கொடுமைகள், சரியான இயக்கத்திடமும், கொண்டு செல்லப்பட்டு, காலம் தாழ்த்தி என்றாலும், நியாயத்திற்கு கிடைத்த வெற்றியை காட்டுகிறது இப்படம்.

இந்த ஆவணப்படம்,
அவலமான சம்பவம், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், மலை வாழ் மக்கள் இயக்கத்திடம் தங்கள் குறைகளை கொட்டி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், இவ்வளவு பேரும் மக்களுடன் இணைந்து போராடியதால் தான்,
அங்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டி கொள்ளாத மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியாளர்களை, ஆட்டுவித்த அரசை எதிர்த்து பெறப்பட்ட வெற்றியானது அசாதாரண வெற்றி என்பதை விளக்குகிறது.

இருபது வருடங்களில், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும்,
அது சென்ற விதம், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு,
ஒவ்வொரு தடையையும் தாண்டி சென்றது,
இதற்காக, இதனை முன்னெடுத்து நடத்திய, மலை வாழ் மக்கள் இயக்க தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் டில்லி பாபு, வழக்கறிஞர் சம்கி ராஜா, இன்னும், பல பேர், இந்த வழக்கு எந்த அளவு தங்களை பாதித்தது என்றும், வழியில் தாங்கள் சந்தித்த பல இன்னல்களையும், வழக்கின் போக்கினையும், அடையாள அணி வகுப்பு என்று 1500 பேர்களை நிறுத்தி குழப்பியதையும்,   உச்ச நீதி மன்றமே, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விசாரணைக்கு உட்படுத்த சொல்லியும், மாறி மாறி ஆண்டு வரும் எந்த ஒரு அரசும் இதற்கு தயாராக இல்லாத நிலையையும், படம் நெடுக விவரித்துக் கொண்டே செல்கின்றனர்.

இந்த ஆவணப்படத்தில் ஒருவர் கூறியது போல,
படிப்பிற்கும், மன உறுதிக்கும் சம்பந்தம் இல்லை, என்பதற்கு சரியான உதாரணம்,
பணத்தாசை காட்டியும், மிரட்டியும் பணிய வைக்க முடியாத வாச்சாத்தி மக்கள்,  கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.

காற்று, நதி, பறவை காடுகள், தாவரம், இவற்றை உங்கள் குழந்தையின் குழந்தைகள் காண வேண்டும் என்றால் காடுகளை மலை வாழ் மக்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள், பாதுகாப்பார்கள் என்று ஒருவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து நம் அரசு, மலை வாழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து காடு என்று செல்வத்தை பாதுகாக்க வேண்டும்  என்று ஆவலாக உள்ளது.

அநீதியுடன், சமரசம் செய்ய வேண்டியதில்லை, போராடுவதற்கான, எல்லா நியாயங்களும், இங்கே இருக்கிறது என்று கூறிய பிருந்தா காரத்தின், சொற்கள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

தீர்ப்பிற்கு பின் ஆவணப்படத்தின் இறுதியில் வருகிற பாடல் வரிகளில்,
பிறக்கும் பொழுது தாய் மடி
"வளரும் பொழுது ஊர்மடி
தாயும் ஊரும் தள்ளும் பொழுது தாங்கும் இந்த செங்கொடி... "
என்ற மூன்றே வரிகளில் இந்த வெற்றிக்கு உதவியவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறது வாச்சாத்தி.

ஆவணப்படமானது, எதையும் மிச்சம் வைக்காமல், அனைத்து கோணங்களிலும் பார்க்கப்பட்ட  தொகுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக கண் முன்னே இருக்கிறது, பாரதி கிருஷ்ணகுமாரின், உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி.
எது ஒன்றையும், விட்டு விடாமல், மிக நேர்த்தியாக, அனைத்தையுமே அடுக்கி, வருகிற தலை முறைக்கும், வாச்சாத்தி பற்றிய  தெளிவான பார்வையை அளித்துள்ளார் இயக்குனர்.

என் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்!


by Deepa Nagarani (Notes) on Wednesday, September 5, 2012 at 9:36am ( facebook )
 
 
அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர் தின விழா அன்று, அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அவற்றில் பணி புரியும் சிறந்த ஆசிரியர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை.


இன்று...
மதுரை வடமலையான் மருத்துவமனை, மதுரையில் வெகு சில சிறந்த ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது வழங்குகிறது. இருநூறுக்கும், மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் தனியார்  பள்ளியில் மேல்நிலை வகுப்பிற்கு ஆசிரியராகப்  பணியாற்றும், என்னுடன் பிறந்த தம்பி பிரகாஷ் ராஜசேகர் க்கும் இந்த விருது  வழங்கப்படுகிறது. ஒரு அக்காவாக இதில் பெருமை அடைவதை விடவும், ஒரு தனியார் மருத்துவமனை இது போன்ற ஊக்கமளிக்கும் விஷயத்தில் ஈடுபடுவதை மனமாரப் பாராட்டுகிறேன்.

மூன்றரை வருடங்கள் எனக்கு பிறகு பிறந்த என் தம்பி பற்றி மனதில் இந்த கணத்தில் தோன்றுவதை எல்லாம் பதிவு செய்கிறேன். :)

என் தம்பி பிறந்த அன்று மருத்துவமனைக்கு அப்பா, என்னை  அழைத்துச் சென்ற பொழுது, அவன் கால் லேசாக மேல பட்டவுடன், "தம்பி என்னை மிதிச்சிட்டான்", என்று ஆர்ப்பாட்டம் செய்ததாக இன்றும் சொல்வார்.

அவனுக்கு மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நாள், என் பின்னால் வந்து,
 " என்னது மண்ண திங்குற," என்றவனை, " உன் வாயிலேயும் ஏதோ இருக்குனு" சொல்லி திறந்து பார்த்ததில், பொடிப் பொடியாக இருந்த செங்கற்களை அதக்கி வைத்திருந்தான்.
"அம்மா கிட்ட நீயும் சொல்லாத, நானும் சொல்ல மாட்டேன்", என்ற டீலிங் இன்று வரை பல விசயங்களில்  தொடர்கிறது. :P 

ஐந்து வயதில், பள்ளிக்கு செல்லும் பொழுது, தாத்தாவின் சைக்கிள் முன்னால் உட்கார்ந்து செல்லும் பொழுதே, பல முறை கீழே குதித்து வேறு பக்கம் ஓடி இருக்கிறான்.

ஒரு நாள், பள்ளி செல்லும் நேரத்திற்கு இவனைக் காணவில்லை என்று தேடினால், குளிக்காமல் வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு, இவனது டயர் வண்டியை குச்சி வைத்து தள்ளிக் கொண்டே போய் உட்கார்ந்திருந்தான் பள்ளிக் கூடத்தில்.

பள்ளிப் பருவத்தில், சராசரி மாணவனாகவே இருந்தான். ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம்,  ஆண்டு இறுதித் தேர்வு முடிவைத்  தாங்கி வரும், கடிதத்தை திறக்கும் முன்பு கூட,
' எல்லாம் நல்லா எழுதி இருக்கேன், ஆனா அந்த சயின்ஸ் தான் ', என்று பதறிக் கொண்டே தான் பார்ப்பான். ஆனால், இதுவரை எந்த வகுப்பிலோ, பாடத்திலோ தோற்றதில்லை.

வீட்டிற்கு வரும் விருந்தினர் வாங்கி வரும் ஏதேனும் விளையாட்டு சாமான், அல்லது தின்பண்டம், ஒன்று மட்டும்  இருக்கும் பட்சத்தில் நான் வேண்டாம் என்று சொன்னால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்வான்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது , இவனது கணித ஆசிரியரிடம்,
"இரண்டு குயர் நோட்டு தான் கொடுத்து விடணும் னு சொன்னீங்களாம், எனக்கு இனி தேவையேப்  படாத, ஒரு குயர் நோட்டை வீணடிக்காம கொண்டு போடான்னு சொன்னா, நீங்க திட்டுவீங்கனுனு சொன்னதால தான் நான் வந்தேன்" என்றேன்.
ஆசிரியர் அவனை திரும்பி பார்த்த நொடி, கண் எல்லாம் கலங்கி,
"இல்லை சார், எங்க அக்கா தான் சார்... நான் வேணாம்னு தான் சார் சொன்னேன் ",  என்று முடிப்பதற்குள்,
"பரவாயில்லை இருக்கட்டும்", என்று அவர் சொன்ன காட்சியை  நினைவுபடுத்தி,
விருது பற்றி செய்தி சொன்ன அவனிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்.

பத்தாம் வகுப்பில், மதிப்பெண் வாங்கப் போகும் பொழுது, 78 % மதிப்பெண்கள் இவன் பெற்றிருப்பதாக உள்ளே நுழையும் பொழுதே இவன் நண்பன் சொன்னதும்,
"என்னடா இது", என்று அவனை உற்று நோக்க,
"அவெங்க சும்மா சொல்றாங்க, நம்ம போய் பார்ப்போம் வா" என்றான். அறிவிப்பு பலகையில் திரும்ப திரும்ப, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஐந்தாறு முறை சரி பார்த்த பிறகு, நண்பர்கள் சொன்னது உண்மை தான் என தெரிந்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்.

கல்லூரியில் சேரும் பொழுது, ஒரே நாளில் தியாகராசர் கல்லூரி, மன்னர் கல்லூரி, யாதவர் கல்லூரி , இந்த மூன்று கல்லூரிகளுக்கும், அவனுடன் சென்று விண்ணப்பங்கள் வாங்கி, பூர்த்தி செய்து அளித்த காட்சி நினைவில் நிற்கிறது இன்னும். கல்லூரி, அதன் பின் சேர்ந்த நட்பு வட்டம், அவன் வாழ்க்கையை மாற்றி அமைத்து ஆசிரியராக ஆக்கியது.

அப்பொழுது எல்லாம், என்னிடம், என் தம்பி பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். இத்தனைக்கும், ஒரு அரை மணி நேரம் சண்டை போடாமல், நாங்கள் பேசினாலே அதிசயம். சண்டைக்கெல்லாம்  பெரும்பாலும், காரணம் நானாக தான் இருக்கும், என் தம்பியின் பதில் வினை எனக்கு சாபம் கொடுப்பது மட்டும்  தான், "அதிகமா பாவம் பண்ணின, ஒருத்தனுக்கு அதிக பட்ச தண்டனையாக தான், உன்னைக் கல்யாணம் பண்ண கடவுள் அனுப்புவார் ", என்பதெல்லாம் மிக சாதாரணமாக அவன் வாயில் வந்த வசனம்.

திருமணம் முடிந்த பிறகு, முற்றிலும் மாறிப் போனான். அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொழுதே,  "அக்கா சொல்ற பொண்ணை, தான் கல்யாணாம் பண்ணிப்பேன்" என்று அவன் விரும்பியபடியே  இருவருடங்களுக்கு முன்பு அவனது திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

என் தம்பி திறமையான நல்லாசிரியனாக வலம் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு!

ம்ம்...  :)

மீண்டும்...

மதுரை வடமலையான் மருத்துவமனைக்குப் பாராட்டுகள்! சிம்லா ஸ்பெஷல்!


by Deepa Nagarani (Notes) on Wednesday, June 6, 2012 at 8:37pm ( facebook)
 
 
" ஊர் சுற்றிகளாலேயே புதிய இடங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன " -   ராகுல்ஜி யின், ஊர்சுற்றி நூலில் வரும் வாசகம்.
ஒரு வகையில் நானும் ஒரு ஊர் சுற்றி தான். :)

டெல்லி, சிம்லா  உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பத்து நாட்கள் சுற்றுலா செல்லும் வாய்ப்பு சென்ற மாதத்தின் இறுதியில்  கிடைத்தது.  நம் நாட்டின் தலை நகர் பற்றி, ஓரளவு தெரிந்திருக்கும் என்பதால், சிம்லா வில் ஏற்பட்ட, பயண அனுபவங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

டெல்லியில் சரல் ரோஹிலா ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறுமணிக்கு கிளம்பி ஐந்து மணி நேர பயணத்திற்கு பின் ஹரியானாவில் உள்ள கால்கா என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து பனிரெண்டரை மணிக்கு சிம்லா விற்கு மலை ரயில்.
கால்கா வில் வெயில் இல்லாமல், லேசாக வீசிக்கொண்டிருந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜினுடன் மொத்தமே ஏழு  பெட்டிகள் தான் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பெட்டியில் நாற்பது பேர் வரை அமரலாம். இரு புறங்களிலும், கம்பிகளற்ற கண்ணாடி ஜன்னல்கள், வேடிக்கை பார்ப்பதற்காக.

கால்காவிலிருந்து சிம்லா, 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்தில் சென்றால், மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் அடைந்து விடலாம். ரயிலில் செல்வதற்கு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஆகிறது. ஆனால், அவசரமில்லாமல், இரு புறமும், வேடிக்கை பார்த்துக் கொண்டே சீரான வேகத்தில் செல்வதில் தான் ஊர் சுற்றி பார்த்த திருப்தி வரும். ( போக வர, பதிநான்கு  மணி நேரமும், மலையை  சுற்றி சுற்றி வரும் ரயில்)

ஆங்கிலேயர்கள், நம் நாட்டின் வெயில் பொறுக்க மாட்டாமல், ஓய்வெடுக்க, உருவாக்கிய மாநிலமே இமாச்சல பிரதேசம். மலைப் பகுதியை  சீரமைத்து, பாதைகளை உருவாக்கி,  முடிந்த அளவு மரங்களை வெட்டாமல், கட்டிடங்களை கட்டி உள்ளனர். ஆங்காங்கே சில மரங்களின் வேர்ப்பகுதி சாலையின் ஓரங்களில் தெரியும்.

ரயில் செல்லும் பாதையில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட  சுரங்க வழிகள் மட்டும் நூற்றி இரண்டு உள்ளன, இதைத்  தவிர ஏகப்பட்ட  பாலங்கள், வளைவுகள் இருக்கின்றன. இருப்பதிலேயே அதிக நீளம் உள்ள சுரங்க பாதையின் பெயர்  பரோக் ( Barog ) 1143 மீட்டர் நீளமானது. ஒவ்வொரு சுரங்கத்தின்  உள்ளேயும் ரயில் செல்லும் பொழுது இருட்டின் காரணமாக குழந்தைகள் ஆரவாரக் கூச்சலிடுவது ரயில் வெளிய வரும் வரை தொடரும்.
மலை மேல் ரயில் செல்ல செல்ல முதல் இரண்டு மணி நேரங்களுக்கு, கோடை காலமாய் இருப்பதால், பார்வையில் பட்ட முக்கால்வாசி மரங்கள், காய்ந்து போய் இருந்தன. "அடடா, இப்போ போய்யா வரணும்" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுது சிறிது சிறிதாக மாறிய பச்சை வண்ணம், தரம்பூர் ஸ்டேஷன் வந்த பொழுது முழுதும், பசுமையாக மாறியது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதை ரசிக்கத் தொடங்கினோம்.

ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும், இறங்கும் ஆட்கள் எப்படி போகிறார்கள் என்றே தெரியாது அந்த அளவு எல்லா பக்கமும், மலை, மரம் மட்டும் தான்.
ஆங்காங்கே முளைத்தது போல இருந்த வீடுகள் எப்படி கட்டி இருப்பார்களோ என்று யோசிக்கும் வண்ணத்தில் இருந்தன.

 ஊசி இலை காடுகள் பற்றி, பள்ளியில் படித்தது. அவற்றை நேரில் கண்ட பொழுது ஏதோ, நீண்ட நாள் பழகிய முக நூல் நண்பரை நேரில் காண்பது போல மகிழ்ச்சி ஆரவாரம் உள்ளே ஏற்பட்டது.   சவுக்கு மர இலைகள் போல ஊசி இலைகளைக் கொண்ட மரங்கள் பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போன்று இருந்தன. ஓங்கி உயர்ந்த மரங்கள், வழி நெடுக நம்மை வரவேற்கின்றன குளிர்ச்சியாக.

  சம்மர்  ஹில் ஸ்டேஷன் வருவதற்கு முன்பு இருந்தே, ரயில் செல்லும் பாதையின் ஓரங்களில், இங்கு பொக்கே யில், செருகப்பட்டிருக்கும், வெள்ளை நிறப் பூக்கள், ஊடே சிவப்பு, மஞ்சள், நீலவண்ணப்பூக்களும் பெரிது பெரிதாக எண்ணற்று மலர்ந்திருகின்றன.
ஊரின் உள்ளே பார்த்தாலும், சாதாரண செடியாக இது மாதிரி பூக்களே காணும் இடம் எல்லாம் சிரிக்கின்றன.
கட்டப்படாத பூங்கொத்தாக போகும்  வழி எங்கும் காட்சி அளிக்கின்றன.


இரவு ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, சூரியனின் வெளிச்சம் பளிச்சென்று இருந்ததுடன், குளிரின் அளவும்  அதிகமாக இருந்தது வித்யாசமாகப்பட்டது.  ஆட்டோவில் சென்று இறங்கினால், அங்கு இருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் தான், நாங்கள் தங்கி இருந்த சமன் பாலஸ் ஹோட்டல் வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தங்கும் விடுதிகளுக்குமே இது மாதிரி நடந்து தான் செல்ல வேண்டும், ஏனென்றால், குறுகிய பாதையில் வாகனங்கள் செல்லாது. கடும் கோடைகாலத்தில் சென்றாதாலேயே குளுகுளு என்று மொத்த ஊரும் ஏ.சி, போட்டது போல ஒரு உணர்வு.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பளிச்சென்று விடிந்து விட்டது. படு சுத்தமாக இருக்கும் ஊரின், சாலை ஓரங்களில், அங்கு கிடைக்கும், பிளம்ஸ், செர்ரி மற்றும் பல விதமான பழ வகைகளை  விற்றுக் கொண்டிருந்தனர்.  ஒரு சிறிய உணவகத்தில், ஆலு பராத்தா சாப்பிட்டோம், உருளைகிழங்கை வேகவைத்து மசித்து அத்துடன், வெங்காயம், கொத்தமல்லி இழை, உப்பு சேர்த்து  பிசைந்து வைத்த மாவின் உள்ளே வைத்து மூடி தேய்க்கின்றனர். தொட்டுக் கொள்வதற்கு அந்த ஊர் ஊறுகாய்   பல விதமான  காய்கறிகளுடன் சோம்பு, பெயரளவிற்கு  மிளகாய் தூள், உப்பு   கலக்கப்பட்டிருக்கும். இதன் விலை வெறும் பனிரெண்டு ருபாய். ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இதற்கு தால் (பருப்பு) வகைகள் தனியாக வாங்கிக்கொள்ளலாம் . ஒரு சிறிய கிண்ணத்தின் அளவே நூறு ரூபாய்.

ஊரை சுற்றிப் பார்ப்பதற்கு முந்தைய  நாள் பேசிய வண்டியை வர சொல்லி இருந்தோம். அதில், அமர்ந்து முதலில்,நாங்கள் சென்றது ஜாக்கு கோவில்( அனுமார் ). சஞ்சீவி மலையை எடுத்து கொடுத்து , இலட்சுமணன் குணமாகிய பின்,  எடுத்த இடத்தில், மலையை வைத்து விட்டு, சிறிது காலம் அனுமார் இந்த மலையில் ஓய்வெடுத்ததாக சொல்கின்றனர். நீங்க பூஜைக்கு சாமான் வாங்குகிறீர்களோ  இல்லையோ, ஒரு கம்பு ஐந்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

அளவற்ற குரங்குகள், அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கும். தடியால் தரையில் தட்டினால், சற்று விலகி செல்லும். நம்மூரில் உள்ள குரங்குகளை விட முகத்தில் அதிக ரோமங்களுடன் இருந்தன. இந்த கோவில் தான் சிம்லா வில் மிக உயர்ந்த இடத்தில் அமைந்து உள்ளது. மிக உயரமான இந்த சிலையை வைத்தே, ஊரின் எந்த பகுதியில் இருந்தாலும்  நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அம்மா, அப்பா, என்று சொல்லி கொண்டே மலை ஏறினால் ஐந்தாவது நிமிடத்தில், நீங்கள், பிரமாண்டமான நூற்றி எட்டு அடி உயரத்தில், செந்தூர வண்ணத்தில் உள்ள அனுமனை தரிசிக்கலாம். பின்பு அங்கிருந்து மூச்சு வாங்கிக் கொண்டே சென்றால், இரண்டாவது நிமிடத்தில், இருபது பேர் அமரக் கூடிய கோவில் உள்ளது. அதில் உள்ளே இருப்பதும் அனுமார்  தான்.
மெது மெதுவாக இறங்கி வந்தால் வண்டி நிற்கும் இடம். நடக்கவே இந்த பாடு, ஏகப்பட்ட ரிவர்ஸ் எடுத்து வர்ற அளவு, மிக குறுகலான,சிக்கலான பாதை, பழக்கத்தினால், லாவகமாக வண்டியை ஓட்டினார் அங்குல் ( ஓட்டுனர்).

இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும், பெரும்பாலான வண்டிகள், சாலை ஓரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சாலையின் ஒரு பக்கம் மலை , இன்னொரு பக்கத்தில், தடுப்பு சுவர்கள் கூட இல்லை. ஆங்காங்கே சில கற்கள் மைல் கற்களை போல. இதில் சீரான பயணம். நான் பார்த்த வரை, யாரும் யாருடைய வாகனத்தையும் முந்தி செல்ல முயல வில்லை. ஒரு வண்டியின் மீது மற்றொரு வண்டி இடிக்கிறார் போல் வந்தால், இருவரம் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்கின்றனர். நம்மூரிலும், இந்த முன்னா பாய் MBBS , முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

விருதுநகரில், விடுமுறையில்  இருந்த பொழுதே பத்து நாட்கள் ஹிந்தி பேசுவதற்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றேன். ஓரளவாவது சமாளிக்க வேண்டும் என்று. வண்டியை ஓட்டி வந்தவர், ஹிந்தி நீங்கள் பேசுவது புரிகிறது, ஆனால், கொச்சையாக இருக்கிறது என்றார். உங்கள் ஊர்க்காரர்கள், நம்மள் போறான், நிம்மல் வர்றான்  என்று எங்களை படுத்துகிறதுக்கு பதில் மரியாதை என்று நகைச்சுவைக்காக சொன்னேன். ( ஒழுங்கா கத்துக்கணும், சரியா பேச.... :)  )

சிம்லா வில் எச்சில் துப்பினால், ஐநூறு ருபாய் , குப்பை போட்டால், ஐயாயிரம் ரூபாய் அபராதம் என்பதாலோ என்னவோ, சாலைகள் சுத்தமாக இருந்தன.

கூடவே பயணித்த அவ்வூர் மாணவன் ஒருவனிடம் பேச்சு கொடுத்ததில் அவன் சொன்னது, மரங்களை வெட்டுதல் அங்கு குற்றம். ஆனால்,சில  மக்கள், தங்கள் வீட்டின் எல்லையை பெருக்கிக்கொள்ள, அருகில் உள்ள மரங்களின் வேர்களில் அமிலம் ஊற்றுகின்றனர். சில நாட்களில் பட்டுப்போன பின்பு, அவர்கள்  விருப்பம் போல செய்து கொள்கின்றனர்.  :(

ஒவ்வொரு கட்டிடமும், ஒரு  கதை சொல்லும். அவ்வளவு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.

காளிபரி என்ற இடத்திலிருந்து சற்று தூரம் சென்றால், லால் பகதூர் சாஸ்த்ரி சிலை இருக்கிறது. அங்கு இருந்து நூறு மீட்டர் தொலைவுக்கு அப்பால், வண்டிகள் எதுவும் செல்லாது. ஓரளவு அகலமான சாலை தான் என்றாலும் மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் நடந்து தான் செல்ல வேண்டும். பத்து கட்டிடங்கள் கடந்ததும், மால் ரோடில், இரண்டாக பிரிகிறது சாலை. பிரிகிற இடத்தில் லாலா லஜபதி ராயின்சிலை கம்பீரமாக இருக்கிறது. இடது புறம் சென்றால் நகராட்சி கட்டிடம் உள்ளது.
இரண்டும் சந்திக்கும் இடத்தில் நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் எம்.ஜி.ஆர், புதிய வானம் புதிய பூமி என்று பாடிய பாட்டு படமாக்கப்பட்டுள்ளது. வலது புறம் சென்றால்,  வரிசையாக கடைகள். இங்கு கிடைக்காத சாமான்களே கிடையாது .
உலக தரத்தில், சாமான்கள் இருக்கிறதோ என்னவோ, விலை இருக்கிறது . :P 
அடுத்தடுத்த கடைகள் தான் என்ற பொழுதும்,ஒவ்வொன்றும், ஒவ்வொரு தளத்தில் இருந்தன.

அங்கு உள்ள  இன்டியானா காபி ஹவுஸ் இல்  இட்லி கிடைக்கும் என்றதால் சென்றோம். ஒரு இட்லி பதினாறு ரூபாய். இங்கிருந்து அவ்ளோ தூரம் நம்மூர் ரேஷன் அரிசியை அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை. பரிதாபமான  வெள்ளை நிறத்தில் இருந்தது. அதற்கு ஒரு கிண்ணம்  சாம்பார் இருபது ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும். காரமில்லாமல் இருந்த சாம்பார் இரண்டு கிண்ணங்கள் , இட்லி ஒன்று வாங்கி குடித்தேன்.நடக்கின்ற பாதையில், இடது புறம் படிக்கட்டு செல்லும், அதில் இறங்கினால், அங்கு ஒரு தெரு. வலது புறத்தில், மேலே படிக்கட்டு செல்லும், அதில் ஏறினால், அங்கு சில கடைகள். நெட்டுகுத்தலான மலைப் பகுதியில் நடப்பது கூட திகிலாக இருந்தது.

இடது புறம், வலது புறம் என்று சொல்லும் பொழுதெல்லாம், படியில்லாமல், சரிவாக போடப்பட்டுள்ள மாடிக்கும் செல்லும் சற்றே செங்குத்தான வழியில், ஏறுவதாகவோ, இறங்குவதாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள். சாலையில் நாங்கள் நடக்கும் அழகைப் பார்த்த உள்ளூர்காரர், நேரா நடக்கதீங்க, குறுக்கும், நெடுக்குமா நடந்தால், களைப்பு தெரியாது என்று குறிப்பு வழங்கினார். அது போல நடக்கத் தொடங்கியதும் வித்தியாசத்தை உணர முடிந்தது.

வாழ்க்கையை வெறுத்தவங்க மட்டும் யோசிச்சு போகணும் சிம்லா விற்கு.
ஏனா, நீங்க எங்க நடந்தாலும், கீழே குதிக்கிறதுக்கு வசதியா தான், சாலையின்  மறுபக்கம்  இருக்கும். :P

முதலில் சென்ற இடம் , பசுமைப் பள்ளத்தாக்கு... கடுகு அளவு இடம் பாக்கி இல்லாது, காணும் இடம் எங்கும் பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கு. வண்டியை நிறுத்தி விட்டு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கலாம்.

அதன் பின், சற்று தூரத்தில், பத்து பேர் சிலருக்கு சிம்லா வாசிகளின் உடை அணிகலன்கள் அணிந்து புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தனர். எல்லா ஒட்டுனர்களுமே அங்கே வண்டியை நிறுத்துகின்றனர். ( இதற்கு கமிஷன் இருக்கும் போல )
முதலில் தயங்கும் பலரும், இவனே போட்டு இருக்கான், நாமளும், அணிந்து பார்க்கலாம் என்று உடைக்கு மேலேயே அவர்களால் அணிவிக்கப்படும் அலங்காரங்களை செய்து கொண்டு எடுக்குப்படுகின்ற, புகைப்படங்களை, மாலை அதே வழியில் திரும்பும் பொழுது பெற்று கொள்ளலாம்.

புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்த கொழுத்த   யாக் எருமையை  நேரில் பார்த்தோம். நம்ம ஊர் பூம் பூம் மாடு மாதிரி அலங்காரம் செய்து நிறுத்தியிருந்தனர்.

அரை மணி நேர பயணத்திற்கு பின், சிம்லா வரும் அனைவரும் தவறாமல் செல்லும் இடத்திற்கு சென்றோம் . குஃப்ரி சென்று குதிரை சவாரி போகாமல் இருந்தால், கடற்கரை சென்று கால் நனைக்காமல் வருவதற்கு சமம்....
வாழ்க்கையில் முதன் முறையாக குதிரை மீது ஏறி அமர்ந்ததும், அது நடக்க நடக்க விக்ரமாதித்யன் நாற்காலியில் அமர்ந்தது போல ஒரு கர்வம் ஏற்பட்டது ஏனென்று தெரியவில்லை.  ஆனால், போகும் பாதை எல்லாம் கற்களும் புழுதியும் நிறைந்த சற்றே செங்குத்தானதுதான், அதே போல, திரும்பி இடது புறம், கீழே பார்த்தால் பள்ளத்தாக்கு, குதிரைக்காரர் அழைத்துச் செல்ல, பின்னாலே சென்றது. பின் ஓரிடத்தில், நிறுத்தி எங்களை இறங்கும்படி சொன்னார்.  மெதுவாக இறங்கி சிறிது தூரம் நடந்தால், வேடிக்கை விளையாட்டுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. துப்பாக்கியால் சுடுவது, காற்றடைத்த பெரிய பலூனில் உள்ளே வேறு வழியின் மூலம் செல்வது மாதிரி, பின்னர், மரப்பாலம், இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால், குட்டி குட்டியாக பச்சை நிறத்தில் காய்த்த ஆப்பிள்கள் நிறைந்த மரங்கள் இருந்தன. அங்கயே சில உணவகங்களும் இருந்ததன. இரண்டு மணி நேரம் கழித்து வர சொல்லி விட்ட சென்ற குதிரைக்காரர் வந்ததும், மீண்டும் குதிரையில் அமர்ந்து, இறங்க தொடங்கினோம். நடப்பதே இந்த பாடாக இருக்கிறதே. குதிரையை வைத்துக் கொண்டு படை அமைத்து சண்டை போட்டவர்கள் மீது மரியாதை வந்தது. தூக்கிட்டு போறது குதிரை என்றாலும், தூக்கி தூக்கி நம்மை போட்டு சவாரி செய்ததால் படு அலுப்பாக இருந்தது.
இதே போல, பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த, சற்று கூடுதல் தொலைவில்,  நல்தேரா என்ற இடம்  இருக்கிறது. அடுத்த நாள் சென்றோம். நாங்கள் போகும் பொழுது கூட, சினிமா ஷூட்டிங் நடை பெற்றுகொண்டிருந்தது.

மிருகக்காட்சி சாலை. ஒரு கிலோமீட்டர் தூரத்தை உள்ளே  வேடிக்கைப் பார்த்து கொண்டே நடக்கவேண்டும். நடைபாதையின் இரு புறமும், வேலி அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
நாங்கள் பார்த்தது  ஐந்து  மான்கள், இமய மலையில் வசிக்கும், இரண்டு கருப்பு கரடிகள், ஒரு பிரவுன் கரடி. இறுதியில் பறவைகள் கொஞ்சம் இருந்தன.
வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் உருவாக்கப்பட்ட ஜூ :P 


மேற்புற கூரை இரு புறமும் சரிவாக அமைந்த அழகழகான கட்டிடங்கள் நிறைந்த சிம்லா மலைப்ரதேசங்களுக்கே  உரிய மனதைக் கொள்ளை கொள்ளும் அமைதியுடனும், அழகுடனும் இருக்கிறது.
சிம்லாவிற்கு  தட்பவெப்ப நிலையை அனுபவிப்பதற்கும், அமைதியாக ஓய்வெடுப்பதற்கும், குழந்தைகள் குதுகலமாக பொழுதை கழிப்பதற்கும் செல்லலாம்.

மலை ஏறும் பொழுது, மாறிய வண்ணம் தலை கீழாக
பசுமையிலிருந்து மாறி, சிறிது சிறிதாக காய்ந்த மரங்கள் தெரிய தொடங்கியது.
ஒரு நீள் கனவு முடிந்தது போல வெப்பம்  இருந்தாலும்
சிம்லா நினைவுகள் என்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்னுள்.