வியாழன், 23 மே, 2013

சமையல் - எளிது!

பத்து வருடங்களுக்கு முன்பு, இணையத்தில் நுழைந்த புதிதில் விதவிதமாக சமையல் செய்து அசத்த வேண்டும் என்ற ஆர்வத்தில், தேடு தேடென்று கூகுளில் ஒவ்வொரு உணவுப்பதார்த்தையும் தேடிக் குறிப்பு எடுத்துக் கொள்வது வழக்கம். மிளகாய் சட்னி என்றால், அதன் கீழ் இருபது முதல் முப்பது வகையான செய்முறை விளக்கங்களில், பிடித்தது என்பதையும் விட எளிதாக இருக்கும் ஐந்து விளக்கங்களை எழுதி வைத்துக் கொள்வேன். அதில், ஏதாவது ஒன்றிரண்டை முயற்சி செய்து பார்க்கும் பொழுதெல்லாம், குறிப்பிட்ட பதார்த்தத்தை பார்த்தப் படங்களுக்கும், சட்டியில் வந்து சேர்ந்த இறுதி முடிவுக்கும் அறுபது வித்தியாசங்களை எளிதாகக் கண்டுபிடிக்கும்படி இருக்கும்.

ஆனாலும், சோர்ந்து போவதில்லை. சாப்பாடு என்ற ஒன்றிற்காக இன்னொருவரை நம்பியே எத்தனைக் காலம் தான் கழிப்பது. எனக்கு ஆரம்ப பாடம் சமையலில் கற்றுக் கொடுத்த ராமமூர்த்தி க்கோ, சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு, ஆம்லெட், போன்றவற்றை தவிர வேறு எதுவும் சமைக்க தெரிந்திருக்கவில்லை. காலமெல்லாம், இதையே சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியுமா ஒரு மனுஷி ? அதுவும், பிடித்த உருளைக்கிழங்கிலாவது, ஒரு பத்து வகைகளை செய்து பார்த்து, தேர்ச்சிப் பெறாமல் இருப்பது, அந்த கிழங்கிற்கு செய்யும் அவமரியாதை அல்லவா? வகுத்துக் கொண்ட குறிக்கோளில் வழியெல்லாம், நான்  அறிந்து கொண்ட மிக முக்கியப் பாடம், உருளைக்கிழங்கை எவ்வளவு மோசமாக சமைத்தாலும், என்னால் சாப்பிட முடியும் என்பதே! :)



பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், எந்த ஒரு சமையல் பற்றிய விஷயங்களையும் ஒதுக்காமல் பார்த்துக் குறிப்பெடுத்த நோட்டுகளின் எண்ணிக்கை எட்டு. அதுவும் எனக்கே பல நேரங்களில் புரியாத சுருக்கெழுத்து முறையில் எழுதப்பட்டு, இருக்கும். நன்றாக சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம், தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி,  என்ற எந்த மொழியில் யார் பேசிக்கொண்டே, சட்டியை வைத்து, பொடிகளைக் கொட்டியபடி கிண்டிக் கொண்டிருந்தாலும், சேனலை மாற்றாமல் பார்த்து, யூகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்வதோடு, கூடுதலாக சில மொழிகளில் உணவுப் பொருட்களின் பேர்களை அறிந்து கொண்டதை எல்லாம், பாராட்ட யாருமே முன்வராததால் நானே என்னைப் பாராட்டிக் கொள்கிறேன்!  :P

மெதுவாக சமையலை பொறுப்பெடுத்து முழுவதும் செய்ய ஆரம்பிக்கும் பொழுதுகளிலும் சரி, அதன் பின்னரும் சரி, வீட்டில் என்றுமே குறை என்று யாரும் சொல்லாமல் இருந்ததே, எந்த ஒரு குழம்போ, கூட்டோ, பல வகைகளிலும் முயற்சி செய்து பார்க்கும் தைரியத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. இனிப்பு பண்டங்கள் என்றாலே, பொதுவாக கூடுதல் நேரம், கவனம் தேவைப்படும் என்பதாலும், எப்படி செய்தாலும், ஓரளவு திருப்தி கூட வராததாலும், இதே பண்டத்தை, செலவளித்தத் தொகையை விட, குறைவானத் தொகையில், நிறைய கடையிலேயே வாங்கி இருக்கலாம் என்றே இறுதியில் 100% தோன்றுவதால், அந்த ஏரியா வில், கை வைக்கவில்லை. ஏதோ ஏழெட்டு வகை பாயசம், கேசரி, கேரட் அல்வா, என்பதோடு நின்று போனது, இனிப்பு பலபரீட்சை.

வறுவல், பொரியல், அவியல், கூட்டு, குழம்பு, கலவை சாதம், இவற்றோடு, ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சாப்பிட்டு வந்த அசைவ உணவு வகைகள், இவை ஒவ்வொன்றின் கீழ், பல விதங்களில் சமைத்து, எத்தனை அதில் தேறும், தேறாது என்று முடிவுக்கு வந்து, ஓரளவு குறை இல்லாமல் சமைக்கத் தெரிந்தவளாக, இன்று மாறி இருக்கிறேன். அதெப்படி, நீயா சொல்லலாம் என்று கேட்பவர்களுக்கு, எங்க அம்மா, ஏதேனும் சமையலில் சந்தேகம் என்றால் என்னிடம் கேட்டு பதில் பெறுவது போன்ற மனத்திரையில் பதிவு செய்த பல காட்சிகளை உங்கள் பார்வைக்கு ஒளிபரப்ப முடியாமைக்கு வருந்துகிறேன் என்பதை மட்டும் பதிலாக தர முடியும்.

சமீபமாக பார்க்கும் பல சமையல் பற்றிய வலைப்பதிவுகள், புத்தகங்கள் , மிகவும் முன்னேற்றமடைந்து............   நம் நாட்டில் எளிதில் கிடைக்காத காய்கறிகளை, பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், ஓவன் உதவியோடு செய்யக்கூடிய பேக்கரி வகைககளால் நிரப்பபட்டுள்ளததால், மிகவும் அந்நியப்பட்டுப் போய் விட்டதாக ஒரு உணர்வு. அதோடு, இந்த நூடில்ஸ் வகைகள், பட்டினியாக கூட இருக்க முடியுமே தவிர, எத்தனை சாஸ், பொடி வகைகள், அஜினமோட்டோ என்று கலந்தாலும், மூக்கை மூடிக்கொண்டு, வேடிக்கை பார்க்கக்கூட பிடித்ததில்லை. ஒரு வேளை, நான் தான் அப்டேட் ஆகாம இருக்கிறேனோ? 

இதனுடன், போனால், போகிறதென்று நம்மூர் காய்கறிகளை வைத்து சொல்லப்பட்டு இருக்கும் சமையல் குறிப்புகளைப் பார்க்கும் பொழுதே, நானே திருத்தம் சொல்லலாம் போல, அந்த அளவு, சுவை குறைந்த விளக்கங்களையே, மிக மிக அழகான படங்களுடன், பார்ப்பதற்கு தருகின்றனர். விதிவிலக்காக சில அட்டகாசமான சமையல் செய்முறை விளக்கங்களைத் தரும் வலைப்பதிவுகளும்,  உள்ளன. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவை கண்ணுக்குத் தட்டுப்படும்.

இதுனால, சொல்ல வர்றது என்ன???
ஆரம்பத்தில உயர்த்திற புருவம், ஓரளவு தெரிஞ்சதுக்கப்புறம், கண்ணை சுருக்கிட்டு, அடுத்து அடுத்துன்னு முன்னேறி போயிடுது. இந்த, அடுத்தது எதுன்னு இலக்கில்லாமல் போற வரை........................ எதுவுமே சுவாரசியமே!

2 கருத்துகள்:

perumal karur சொன்னது…

ஹோட்டல் ஆரம்பிக்கலாம்

Unknown சொன்னது…

நல்ல பதிவு நன்றி..