புதன், 15 மே, 2013

எல்லாருக்கும் தெரிந்த இறுதிக்காட்சி!


நாளிதழ்களைப் புரட்டுகையில் கண்ணில் படும் கண்ணீர் அஞ்சலிப் பகுதிகளைக் காணும் நேரங்களில், சில நிமிடங்கள் கண்கள் நகர மறுத்து, குட்டி குட்டிக் கணக்குகள் போடும். வயதை அறிந்த பிறகு, என்னை விட, எத்தனை வயது மூத்தவர் அல்லது இளையவர் என்றும் பார்க்கப்படும். இந்த, 35 வயதில், இருப்பவர்களும், இதை விட கூடுதல் வயதில் இருப்பவர்களும், இந்த வயதிற்கு கீழே இருப்பவர்களை விட எண்ணிக்கையில் குறைவு என பொதுவாகவே தோன்றும். அப்படி எனில், நாம் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவள் ஆகிறோம். நாள் பட, அது குறுகிக் கொண்டே செல்லும் என்று தேவையில்லாமல் சிந்தனைப் போகும்.


இன்னமும், இறுதி மூச்சு நின்றவுடன் எங்கே போகிறது உள்ளே இருக்கும் உயிர் என்று தெரியவில்லை. எப்பொழுது போகும் என்றும் கூட தெரியாது. இறுதிக் காட்சி இது தான் என்று தெளிவாக தெரிந்தும், புரிந்தும், அறிந்தும் கூட, மீதி உள்ளக் காட்சிகளை சிக்கலாக்கி ஓட்டி, வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம் நம்மில் அநேகர்.

மரணம் என்ற ஒன்றை பூச்செண்டு கொடுத்து மகிழ்ச்சியுடன் யாருக்கும் வரவேற்பதற்கு மனதில்லை.
தன்னையே மாய்த்துக் கொள்பவர்களும் கூட, தாள முடியாத கவலையில், சோகத்தில் தான் அத்தகைய துயர முடிவை மேற்கொள்கின்றனர். ( புதிதாகப் போன உலகம் இதை விட இம்சை தந்தால் என்ன செய்வார்கள் என்று கேட்க வேண்டும் அவர்களிடம்....  )

தத்துவப் பாடல்களில் மரணம் குறித்து வரும் வரிகள்,
விவேகானந்தரின், மரணத்திற்கு அப்பால் போன்ற புத்தகங்கள்,
கண்ணெதிரே காணும் மரணங்களின் மர்மங்களை உருவுவதில்லை.

பள்ளியின் இறுதி வகுப்புக் காலங்களில் அருகில் அமர்ந்து, ஒரேக்  கல்லூரிக்கு போவோம், வாழ்நாள் முழுவதும் இணை பிரியாதத்  தோழிகளாக இருப்போம் என்று என் கையைப் பிடித்து உறுதி கூறிய வித்யா, ஐந்து வயதில் ஒரு திருமணக் கூட்டத்தில் வழியை தவறவிட்டு டீ கடையில் அழுது கொண்டிருந்த என்னை கண்டுபிடித்து அம்மாவிடம் சேர்ப்பித்த  மணி மாமா, வீட்டின் உள்ளே நுழைகையில் எல்லாம் மலர்ந்த முகத்துடன் தலையை ஆட்டி வரவேற்று நான் விரும்பியதை சமைத்துப் பரிமாறும் கிருஷ்ணவேணி அத்தை, இவர்கள் யாருமே தாங்களே தங்கள் முடிவை நிர்ணயித்துக் கொள்வார்கள், என்று ஒரு நாளும் எண்ணியதில்லை.

அதே நேரம், 
துரோகத்தின் உச்சத்தில், இயலாமையின் உச்சத்தில், ஏமாற்றத்தின் உச்சத்தில் கவர்ச்சியாய் சிரிக்கிறது மரணம், என்பதை மறுப்பதற்கில்லை.

போதும் இந்த வாழ்க்கை என்று வெறுத்து நொடியில் தவறான முடிவெடுக்க, தோல்வியை, கஷ்டத்தை விரும்பாத, பலவீனமான மனதே முக்கியக் காரணம்.


விபத்து, வயோதிகம், நோய், என்று பல காரணங்களால், பழகியவர்களின் எண்ணிக்கை அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்து கொண்டே வருகையில், என் மன நிலையைப் பொறுத்து அந்த செய்தி, அச்சமூட்டுவதாகவும், சாதாரண செய்தியாகவும், வேதனையை உண்டாக்குவதாகவும், பலவீனப்படுத்துவதாகவும்,  அபூர்வமாக பொறாமையாகவும் இருக்கிறது.

வயதானவர் இருக்கையில், நிகழும் இளையவர் மரணம், அந்த வீடுகளில் உள்ளப் பெரியவர்களை, கொஞ்சமும் நியாயம் இல்லாமல் கரித்துக்கொட்டும் போலி சுற்றங்களையும், நட்பையும் நம்மை பார்க்க வைத்திருக்கும்.



சாவு வீடுகளில், அதற்கென்று உள்ள ஊதுபத்தி மணம், ரோஜா, சம்பங்கி மாலைகளின் வாசத்தோடு கூடிய கலவையான ஒரு நெடி, வெளியே வந்தும் கூட நாசியில் சில மணி நேரங்கள் ஒட்டிக்கொண்டு சற்றே பீதி அடையவும் வைக்கும். ஒப்பாரி வைப்பவர்களுக்கு இடையே அமர்ந்து, எத்தகைய நெருக்கமான உறவு என்பதைப் பொறுத்து வெளியில் கிளம்பும் நேரம் முடிவு செய்யப்படுகிறது. அத்துடன், போய் சேர்ந்தவர் என்று உள்ளே பதிந்து கொள்வதோடு முடிந்து போகிறது, எந்தப் பெரிய மனிதரின் மரணமும்.

இப்பொழுதெல்லாம் குளிர் பதன வசதி செய்யப்பட்டக் கண்ணாடிப் பெட்டியில் உடலை வைத்திருப்பதை அதிகம் காண முடிகிறது. பிரிட்ஜ் குள்ள வச்ச மாதிரி இம்புட்டு குளிரிலயா நம்மையும் வைப்பாங்க என்று  அதே மாதிரி, மின் மயானத்தைப் பார்க்கையில் இந்த சூட்டுக்குள்ள, கடைசில கொண்டு போனா என்னத்துக்கு ஆவோம் என்று கேனத்தனமாக எண்ணுவதும் உண்டு.

எல்லாருக்குமே பயண முடிவு தெரியும்..... ரொம்ப நல்லாவே.....

இதில என்னத்த, இருக்கிற நாளில கூட இருக்கவங்களை,அது இப்படி இது அப்படின்னு குறை சொல்லிக்கிட்டு  முடிந்தால், சமாதானமா போவோம், இல்லாட்டி, விரிந்து கிடக்கிற எத்தனையோ ஒரு வழில போய்க்கிட்டே இருப்போம்.

இனி, சண்டை போடவோ, முகத்தைத் திருப்பவோக் கூடாது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கு போஸ் கொடுக்கிற மாதிரியே எப்பவும் இருக்கணும்னு எடுக்கிற சங்கல்பம் எல்லாம்....
அடுத்து எதாவது பாவப்பட்ட ஒரு ஜீவன் நம் பொறுமையை லேசாகத் தொடும் வரையிலே  தாக்குப்பிடிக்கிறது.
அதுக்கப்புறம், வடிவேலு சொல்ற மாதிரி, அது வேற வாய்... இது நாற வாய்........  ன்னு... நாம  எடுக்கிற விஸ்வரூபம் தான் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக கதையை கொண்டு சொல்ல உதவுகிறது ...  :)













1 கருத்து:

perumal karur சொன்னது…

~~~~என் மன நிலையைப் பொறுத்து அந்த செய்தி, அச்சமூட்டுவதாகவும், சாதாரண செய்தியாகவும், வேதனையை உண்டாக்குவதாகவும், பலவீனப்படுத்துவதாகவும், அபூர்வமாக பொறாமையாகவும் இருக்கிறது.~~~~~~

என்னுடைய எழுத்து அவ்வளவு நன்றாகவா இருக்கு என்று என்னத்தெ கண்ணைய்யா ஸ்டைலில் கேட்டீர்கள் அல்லவா ???

உங்கள் எழுத்து மிகவும் நன்றாக இருப்பதற்கு உங்கள் மேற்கண்ட வரிகளே சாட்சி ..

தொடர்ந்து இது மாதிரி அவதானிப்பு வரிகளாக எழுதுங்கள்

நன்றி