சனி, 4 மே, 2013

அப்பாவின் இளவரசி !


by Deepa Nagarani (Notes) on Monday, April 2, 2012 at 11:11am ( facebook )
 
 
18.12.1977 அன்று ஞாயிற்றுகிழமை. மதுரையில் நான்  பிறந்த பொழுது, என் அப்பா ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக  சென்னைக்கு  சென்றிருந்தார். தொலைபேசி வசதி அபூர்வமாய் இருந்த நாட்கள்  ஆதலால், அம்மா, அன்றைக்கே நான் பிறந்த செய்தியை கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்தி அனுப்ப செய்திருந்தார். ஒரு வாரம் கழித்து வந்த பதிலில், " என் வாழ்கையின் முதல் தோல்வி எனக்குப் பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று எண்ணி இருந்த என்னை ஏமாற்றி விட்டாய் " - என்கிற ரீதியில் தொடரும் அந்த கடிதம் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது. கடிதத்தை வாசித்த அம்மா, அழுது கொண்டிருந்ததை கவனித்த உறவினர் ஒருவர் "தலைப் பிள்ளை பெண் பிறந்ததற்கா இப்படி? நீ கவலைப் படாதம்மா, உன் மகள் பெரியவளானதும் இதை பத்திரப்படுத்தி காட்டு " என்றிருக்கிறார்.

போட்டிகள் எல்லாம் முடிந்து வந்த அப்பா, தொட்டிலில் இருந்த என்னைப் பார்த்து,  எடுத்து கொஞ்சி, அம்மாவை சமாதானப்படுத்தினார். அதன் பின் எத்தனையோ போட்டிகள் என்று பல ஊர்களுக்கு சென்ற பொழுதும்,  அனுப்புகிற கடிதங்களில் எல்லாம், "மக எப்படி இருக்கிறா, என்ன செய்றா, அவளை நல்லா கவனிச்சுக்கோ " என்று தவறாமல் எழுதி இருப்பார்.

எனக்கு மூன்றரை வயதான பொழுது, தம்பி பிறந்தான். அப்போது, அம்மா, சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் அவரது தாய் வீட்டில் இருந்தார், நான் அப்பாவுடனே இருந்தேன். மாலை வேளைகளில் மட்டும், மிதி வண்டியில் என்னை முன்னால் உட்கார வைத்து அம்மாவைப் பார்க்க அழைத்து செல்வார். தம்பியைக் கொஞ்சி விட்டும் திரும்பும் பொழுது இருட்டிவிடும். போக்குவரத்து குறைவான சாலைகளில், முன்னால் உட்கார்ந்து கொண்டே "அந்த வண்டியை முந்துங்க, இந்த வண்டியை, என்று கத்திக் கொண்டே சொல்ல சொல்ல, ஒவ்வொரு வண்டியாக என் சொல்லுக்காக முந்திக் கொண்டே  சென்ற  அதே குருவிக்காரன் சாலையில் சமீபத்தில், அப்பாவை பின்னால் உட்கார வைத்து நான் சென்ற பொழுது, " பார்த்து மெதுவா போ " என்றார் கனிவுடன். :)
நான் சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டதிலிருந்து என் ஒவ்வொரு சின்ன சின்ன கற்றுக் கொள்தலையும்   பெருமையுடன் பாக்கிறார் இன்று வரை.  பள்ளி நாட்களில், நானும், அவரது ஹாக்கி விளையாட்டை விளையாடி மாவட்ட அளவில் வென்ற பொழுது, அளவில்லாத சந்தோஷத்துடன், தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும் பொழுதெல்லாம் அடிதடியில் இறங்கி விடுவோம். (அடி அவன் தான் வாங்குவான், ஆனால், அழுவது மட்டும் நானாக இருக்கும்  )  ஏற்கனவே பரபரப்பான,காவல் துறையில் பணி புரியும் பொழுது, அவர் வீட்டில் இருக்கும் ஓய்வு நேரத்தில், எங்கள் இருவரின் கூச்சல் எரிச்சல் கிளப்ப, மொத்த அடியும் தம்பிக்கு  தான் விழும். பேருக்கு, வலிக்காமல், என் முதுகில் ஒன்று விழும்.

ஒரு நாள், கேட்டேன்,

ஏன், நான் பிறந்த பொழுது அப்படி ஒரு கடிதம் என்று

"இல்லம்மா, அப்போ, பொண்ணு பிறந்தாலே, நீ சேட்டை பண்ணின அதான் பொண்ணு பிறந்திருக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க, எனக்கு அதான் முதலில ஓடுச்சு, அதான் அப்படி எழுதினேன்"  - என்ற பொழுது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இன்று வரை, என் தம்பியையும் என்னையும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் தான் கவனிக்கிறார்.

பள்ளி இறுதி ஆண்டு பயிலும் பொழுது, ஒரு முறை அப்பாவிடம் கேட்டேன் " யாராவது  இது எங்க குழந்தை, மாறி விட்டது என்று சொன்னால், என்ன செய்வீங்க? " , அதற்கு " ஒரு நாள் மட்டும், இங்க இருந்து உன்னை கவனிக்க சொல்வேன், அப்புறம் என்ன அவங்க கிளம்பறப்போ, எவ்ளோ பணம்னாலும், வாங்கிக்கோங்க, எங்களுக்கு வேணாம்னு  ஓடிடுவாங்க " என்று விளையாட்டுக்கு சொன்னாலும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கூட  தினந்தோறும் பள்ளியில் இருந்து நான் திரும்புவதைக் கூட, " என் பொண்ணு  ஸ்கூல் ல இருந்து வந்துட்டா " என்று  மகிழ்ச்சியுடன் பகிர்வதைப் பலர் பொறாமையுடன் கூட பார்த்துள்ளனர்.

பத்தாம் வகுப்பில், எண்பது சதவீத மதிப்பெண் பெற்றிருந்த பொழுதும், கணக்குப் பிடிக்காது என்ற காரணத்திற்காக, மூன்றாவது க்ரூப் எடுத்த பொழுதும், மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எந்த கல்லூரி , என்ன படிப்பு, நாட்டு நலப்பணித்திட்ட முகாம், சுற்றுலா என்று எதையுமே தகவலாக மட்டும் சொல்லும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது. திருமணப் பேச்சு வந்த பொழுது, எனக்கு வெறும் இருபது வயது. இன்னும் இரண்டு வருடம் கழித்து தான், என்று நான் சொன்ன பொழுது, வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்த பொழுதிலும், சரி என்று என் பக்கம் நின்றார்.

இருபத்து மூன்று வயதில், மீண்டும் திருமணப் பேச்சு வந்த பொழுது, வருகின்றவர்களை ஏதேனும் காரணம் சொல்லி  மறுத்து வந்தேன் ஒரு வருடமாக. வெறுத்துப் போன, என் அப்பா,

 " ஏன் வேணாம்னு சொல்ற?...

சரி..என்ன? எந்த மதம், சாதியை, சேர்ந்தவராக இருந்தாலும், சரி, உனக்குப் பிடித்திருந்தால் போதும்..." என்று முழு சுதந்திரம் அளித்தார். (அப்படியும்  ஒரு அப்பாவியும் சிக்காததால், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணமே நடந்தது வேறு கதை ... :P  )

டிசம்பர், 2002  , திருமணம் முடிந்து சென்னையில் புதுக் குடித்தனம் வைப்பதற்காக வந்த பொழுது, ஆவடியில்,  சற்று நேரம் ஒரு நடை போய் விட்டு வந்த பின் வந்த அப்பா , " இந்த தெரு முடியற இடத்தில browisng centre  இருக்கு, நீ பகல் நேரத்தில போர் அடிக்கிறப்போ போய்க்கலாம் " என்றார்.ஏதேனும் விஷேசங்களுக்கு செல்லும் பொழுதும்  உடை பற்றி அவ்வளவு அக்கறை எடுத்து கொள்ளாமல்,  எதையாவது அணிந்து இருப்பதை மாற்றும்படி என் அம்மா எவ்வளவு கூறினாலும் கேட்கமாட்டார்.  நான் நல்லா இல்லை என்று சொன்னால் போதும் உடனே மாற்றிவிடுவார்.

சமீபத்தில், அப்பா, போக்குவரத்துத்துறை  காவல் ஆய்வாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தேனி மாவட்டத்திற்கு ஒரு திருமணத்திற்கு சென்றிந்தோம். வீட்டுக்கு வந்தவுடன், பேருந்து நிறுத்தத்திலிருந்து, சில கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்த மண்டபத்திற்கு ஆட்டோவில் செல்ல  ஐம்பது ரூபாய் கொடுத்தேன் என்று சொன்னதும் என் அப்பா, " ஐம்பது ரொம்ப அதிகம் " என்றார்.

என் தம்பி, " நீ அப்பா அங்க என்ன  வேலை பார்த்தார்னு சொல்லி இருக்கலாம்ல" என்றான்.

நான், " எதுக்கு சொன்னதுக்காகவே, நூறு ரூபாய் கேட்கவா.. " என்று சொல்லவும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புரை ஏறியது சிரித்து சிரித்து. என் எளிய நகைச்சுவைக்குக் கூட அதிக அளவில் சிரிப்பார்.

என் உணர்வுகளை நான் சொல்லாமலே கூட பல நேரங்களில் அறிந்து இன்று வரை என்னை நான் உயர்வாக நினைக்கும் வண்ணம் நடத்தும் என் தந்தை..

என் பையனுக்கு ஆறு வயது ஆன பின்னும் கூட, என்னைக் குழந்தையாக தான் பார்க்கின்றார் .

இங்கு இணையத்தில் அடிக்கடி பார்க்கிற  ஒரு மேற்கோள்,
"அப்பாவுக்கு, மகள் எப்பொழுதுமே  இளவரசி "
எவ்வளவு சரியான வார்த்தைகள் இது...

நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனாலும், என் தந்தைக்கு மகளாக இருப்பதை விட பெரிய பெருமை எதுவும் இல்லை.

ம்ம்...  இப்பொழுது அறுபத்து நான்கு வயதாகும் என் அப்பாவுக்கு நான் என்றுமே இளவரசி தான்!  :)கருத்துகள் இல்லை: