புதன், 23 ஜூலை, 2014

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!



குறிப்பிட்ட ஊரில் உள்ள கோவில், கடவுளை மையப்படுத்திக் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பலதரப்பட்ட மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்றவை என்றே சொல்லலாம். ஒரே திருவிழாவில் நமக்கு பிடித்தமானவர்களை காண்பதைப் போல, பேச்சுவார்த்தை நின்று போன உறவுகளையும், நட்புகளையும்  பார்க்கலாம்.

பொதுவாகவே அன்பிற்கு உரியவர்களிடம் விரைவாக தோன்றும் கோபம், வெறுப்பு போன்றவை வந்த  வேகத்தில் ஆவியாகி காணாமல் போக பாசம் மட்டும் எஞ்சி நிற்கும்.  முதலில் சென்று யார் பேசுவது என்பதில் விட்டுக் கொடுக்காத வீராப்பிற்கு சொந்தக்காரர்கள் தான் நம்மிடையே பலர். இவர்கள் உட்பட நாம் அனைவரும், நம் கடந்த காலத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவி செய்பவைகளில் ஒன்றாக திருவிழாக்களும் இருக்கின்றன என்றே தாராளமாக சொல்லலாம்.

மழை என்ற அர்த்தத்தில் வரும் மாரி, அம்மனாக வீற்று இருக்காதே ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். முன்னால் சேர்ந்து கொள்ளும் பெயர் மட்டும், சந்தனம், முத்து, சமயபுரம் என்று இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக இந்தக் கோவில்களில் எல்லாம் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். ( கொளுத்தும் கோடையில் மழை வேண்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் இந்தத் திருவிழாக்கள் என்று யூகிக்கிறேன்)

மதுரையில் ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பில் இருக்கின்ற மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் நடக்கும் பங்குனித் திருவிழா, எனக்கு நினைவு தெரிந்து  பார்த்த முதல் கோவில் விழா. திருவிழா என்றால் இப்படிதான் இருக்கும் என்று புத்திக்கு தெரியத் தொடங்கியப் பிறகு, திரைப்படங்களில் திருவிழாக் காட்சிகள் காட்டுப்படும் பொழுது ஒப்பிட்டு பார்த்துள்ளேன்.

ரிசர்வ் லைன் மாரியம்மன்  கோவிலிலும் அம்மன் கோவில்களுக்கே உள்ள இலக்கணப்படி திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்படும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வரும் பொழுதும், மீண்டும் அழகர் கோவிலுக்கு செல்லும் பொழுதும், இந்தக் கோவிலில் தலையைக் காட்டி செல்லும் அவரின் வருகையைக் காணக் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருக்கும்.

இந்தக் கோவில் ஓரளவு பெரிய கோவில். பங்குனித் திருவிழா ஆரம்பமானதின் அடையாளமாக முதல் நாளில் காப்பு கட்டப்படும். அங்கங்கே வேப்பிலைகள் கயிற்றில் சீரான இடைவெளிகளில் முடிச்சிடப்பட்டு, வீதிகளின் இரண்டு பக்கங்களையும் இணைத்து தோரணமாக தொங்க விடப்படும். அன்று மாலையே பிரசாதமாக,  தாராளமாக மோர் விட்டு, வெங்காயம் கலந்து வழங்கப்படும் கேப்பைக் கூழுக்கென்று உள்ள அலாதி சுவை இன்று வரை மாறவில்லை. அதற்கடுத்த நாட்களில் மாலை வேளைகளில் பிரசாதமாக வழங்குவதற்கென்றே பொங்கல் பிரியர்களுக்கு பிடித்த சுவையிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் பொங்கல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

விழாக்காலங்களில் கோவிலின்  முன்புறம் விரிந்திருக்கும் பந்தல், வேலைப்பாடு நிறைந்த பந்தலின் உள், வெளி அலங்காரங்கள், இலை, பழங்களாலான தோரணங்கள், தென்னம்பாளைகள்,  பக்கவாட்டில் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் சீரியல் பல்புகள், பாடல்களை அதிரவிட்டுக் கொண்டிருக்கும் ஒலிப் பெருக்கிகள், திடீரென முளைத்தக் கடைகள், கோவிலின் நேரெதிரே பந்தலுக்கு அப்பால், சற்று தொலைவில் சின்னஞ்சிறிய இடைவெளிகளில் பொங்கலைக் கிண்டிகொண்டிருக்கும் எண்ணிக்கையற்றக் குடும்பங்கள், திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி அல்லது அமைதி பூத்த முகங்கள் என்று ஒட்டு மொத்த இடமே வண்ணமயமாக மயக்கும்.

பத்து நாட்களுமே மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் பாட்டுக் கச்சேரி, பட்டி மன்றம், நடனம், நாடகங்கள் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாவது நாள் நடைபெறும் "வள்ளி திருமணம்", நாடகம் மட்டும்  இன்று வரை மாறாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மற்ற மாரியம்மன் கோவில்களைப் போலவே முளைப்பாரி எடுத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல், அங்கப்ரதட்சணம் உட்பட சகலப் பிரார்த்தனைகளும், பிரார்த்தித்தவர்களால் நிறைவேற்றப்படும். நவதானியங்களைத் தொட்டிகளில் பதித்து, நீர் விட்டுப்  பாதுகாத்து, மாலை நேரங்களில் காப்புக் கட்டி முளைப்பாரி சுமப்பவர்கள் கும்மியடித்து, தானானே பாட்டுப்பாட செடிகள் ஒரு பக்கம் முளைத்து வளர ஆரம்பிக்கும். (சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் வரும் அதே ரக தானானேப் பாட்டு தான் பெரும்பாலும்  இங்கும் கேட்டிருக்கிறேன்)

எட்டாவது நாள் மாலை வேளையில் வைகை ஆற்றுக்கு சென்று சக்திக் கரகம் எடுத்து வந்து ஒவ்வொரு தெருவின் வழியாக மேள தாளத்துடன் வருபவரை அந்த தெய்வமே நேரில் வந்தது போன்று பயபக்தியுடன் கூடிய மரியாதையை அளிப்பர் குடியிருப்பு மக்கள். மாலை நேரத்தில் வாசல் தெளித்து வண்ணங்களால் நிரம்பிய பெரிய கோலங்கள் இட்டு காத்திருப்பர். அத்தனை தூரம் நடந்து சென்று திரும்பி வந்த கால்களுக்கு பலரின் வீட்டு வாசலில் தயாராக இருக்கும் மஞ்சள்பொடி, வேப்பிலை கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி, அவர் அளிக்கும் விபூதியைப் பெற்றுக் கொள்வர். அதற்கடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலம் வரும். பத்தாவது நாள் மீண்டும் அவரவர் தொட்டிச் செடிகள் அவரவர் தலைகளில் சுமந்து வரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்படும்.

கரகம் எடுத்து வரும் அன்று மாலையில், எங்கள் பகுதியில் ஊற வைத்த பச்சரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குத்தி, எடுத்த மாவை, சல்லடையிலிட்டு சலிப்பர். சற்று ஈரமாக இருக்கும் அந்த சலித்த மாவுடன், மண்டவெல்லம், ஏலக்காய்,சுக்கு பொடி  கலந்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைப்பர். மறுநாள் காலையில் இந்த மாவில் ஒரு பகுதியை எடுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி நடுவில் சிறிதாக உண்டாக்கியப் பள்ளத்தை நெய்யால் நிரப்பி திரியை இட்டு மற்றவர்களைப் போல நாங்களும் கோவிலுக்கு எடுத்து செல்வோம்.  நீண்டு கொண்டிருக்கும் வரிசையில், வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே எப்பொழுது உள்ளே சென்று விளக்கை ஏற்றி அம்மனை வழிபட்டு திரும்புவோம் என்று அம்மா, பாட்டி நிற்க, நானோ எப்பொழுது மாவிளக்கை சுவைப்போம் என்றிருந்திருக்கிறேன்.

மாவிளக்கு...... மிகக் குறைவான பொருட்களின் சேர்மானத்தில், அடுப்பில் வைத்து பார்க்கும் எந்த வேலையும் இன்றி, தேங்காய்ச்சில்லுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அற்புதமான சுவையாக மாறிவிடுவதை, சாப்பிட்டவர்கள் அனைவரும் அறிவர். "பொங்க வைக்கப்போறோம்", என்று அக்கம் பக்கத்தில் உள்ளோர் கோவிலுக்கு போகும் பொழுது, பதிலுக்கு "மாவிளக்கு வைக்கப் போறோம் நாங்க", என்று மிகப் பெருமையாக சின்ன வயதில் சொன்ன ஞாபகம் இருக்கிறது.

பெரிய பாத்திரத்திலிருக்கும் மாவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு, தேங்காய், வாழைப்பழத்துடன், அருகில் பொங்கல் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் தந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டுக் கொடுக்கப்படும். பசிக்கும் பொழுதெல்லாம், ஒரு சிறிய தட்டில் மாவிளக்கை கை கொள்ளாமல் அள்ளி எடுத்துத் கடித்துக்கொள்ள தேங்காய் சில்கள், என்று மாவு தீர்ந்து போகும் வரை சப்புக்கொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.

திருவிழாக்காலங்களில் வீதிக்கு வீதி கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் வழியாக மாலை நேரங்களில் வீடுகளை வந்தடையும், தானேன்னே, பாடல்களுக்கு  முன்பாக, ஏற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள், கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா செல்ல மாரியாத்தா, தீர்த்தக்கரை மாரியம்மா போன்ற பல அம்மன் பாடல்கள் ஒலிக்கும். எட்டு நாட்களில் பக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடல் வரிகள் தப்பித்தவறி கூட காதுக்கு கேட்காது. ஒன்பதாவது, பத்தாவது நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பக்திப் பாடல்களில் இருந்து விடுபட்ட உடன் திரைப்படங்களில் வெளியாகி புகழ் பெற்ற அம்மன், கோவில் திருவிழா சம்பந்தப் பட்ட பாடல்களில் சிலவற்றை ஊரெல்லாம் கேட்க செய்து ஒரு சமநிலைக்கு கொண்டு வந்த பிறகு மற்ற பாடல்களுக்குள் செல்லும் ஒலிபெருக்கிக்காரார் எங்களையும் அதே வரிசையில் எதிர் பார்த்துக் கேட்கும்படி பழக்கி இருந்தார்.

குடியிருப்பில் கட்டிடங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, முப்பது வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய பலரும் ஓய்வு பெற்று வேறுவேறு இடங்களுக்கு சென்றிருக்க, இப்பொழுதெல்லாம் திருவிழாவில் தெரிந்த முகங்கள் தட்டுப்படுவதே அரிதாக உள்ளது. கோவில் இன்னும் விரிவு படுத்தப்பட்டு, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பாக சமீபத்திய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்குள் சென்று, கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் நகர்ந்து செல்வதற்கு பதிலாக கோவிலை மட்டும் சுற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, அரிதாக தெரிந்த முகங்கள்  ஒன்றிரண்டை  அடையாளப்படுத்தி, வீட்டிற்கு வரும் பொழுது வடிந்து விடுகிறது இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய அளவிலான திருவிழா ஆர்வம். அம்மாவை மட்டும் அனத்தி எப்படியேனும் மாவிளக்கு செய்ய சொல்லி சாப்பிட்டால் முடிந்து விடுகிறது திருவிழா!

கூட்டத்துடன் கொண்டாடிக் கும்பிட்டது கடந்த காலமாக மாறி, ஓரிருவருடன் அமைதியாக கோவில் பிரகாரம் இருப்பதைப் பார்க்கும் பொழுதில் மனதில் பொங்குகிறது கொண்டாட்டம்.

சில வருட இடைவேளைக்கு  பிறகு மீண்டும் தற்பொழுது...  வண்டியிலோ, நடந்தோ அடிக்கடி காலை நேரங்களில் மாரியம்மன் கோவிலை கடந்து செல்ல வேண்டும். எங்கோ ஒரு சிலர் இருப்பதே தெரியாமல் நின்றிருப்பர். விரிந்த வாசலிலிருந்து சில அடிகள் தொலைவில் உள்ள கருவறையில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அம்மனை, சில வினாடிகளில் நலம் விசாரித்தபடி கடந்து செல்வதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.  :)


பிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...
நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப் போவது...
இப்படியான மகிழ்ச்சியான சூழ்நிலையும், மனநிலையும் அமையும் நாளெல்லாம்  திருவிழாவே! :)

 ( குங்குமம் தோழி ஜூலை  16- 31 )

செவ்வாய், 8 ஜூலை, 2014

மனதுக்கும் கூடுதல் வலிமை அளிக்கும் உதிரம்!

முதல் நாள் வரை எங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அக்காவை, திடீரென ஒரு நாள், அவளது வீட்டிற்குள் உலக்கையை கிடத்தி எல்லைக் கோடு வகுத்து, பெரியவளாகி விட்டாள் என பிரித்து வைத்தனர். தனித் தட்டு, டம்ளர் உடன், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஓரமாக ஒதுங்கி சொந்தபந்தங்கள் கொண்டு வந்த, சிறப்பான உணவு வகைகளை சாப்பிடுவதைப் பார்த்த பொழுது, இந்தப் பிரத்யேக கவனிப்பிற்காக நாமும் எப்பொழுது பெரியவளாவோம் என்று எண்ணியிருக்கிறேன்.

ஆரம்பப்பள்ளியில் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று, சடங்காகி விட்டாள் என்று சொல்லி, உடன் இருந்த ஒருத்திக்கு பூவெல்லாம் அணிவித்து, எங்களுக்கு நடுவில் உட்கார வைத்தது  ஞாபகத்தில் வருகிறது.  சடங்கு ஆகிவிட்டாள், ஆளாகிவிட்டாள், வயதுக்கு வந்து விட்டாள், பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என பூப்பெய்துவதைக் குறிக்க மேற்கூறியதைப் போன்ற சில வாக்கியங்களைப் பயன்படுத்துகின்றோம் .

ஆறு, ஏழாம் வகுப்புப் படிக்கையில், உடையில் கறை இருந்தால், வீட்டில் சொல்ல வேண்டும். அது தான் பெரியவளானதற்கு அடையாளம் என்று மட்டுமே மாணவிகள் மூலம் அறிந்திருந்தேன். ஏழாம் வகுப்பில் மட்டுமே, வகுப்பில் பாதி மாணவிகளுக்கு மேல், பூப்பெய்தியதைக் காரணம் காட்டி சிலநாட்கள் விடுப்பு எடுத்தனர். அதிலும், வகுப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே, சில மாணவிகளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டறிந்த உடன் அவர்களை, பள்ளியிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியைகள் துணையுடன் வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். இப்படியாவது வகுப்பிலிருந்து சில நாட்கள் தப்பிக்கும் வாய்ப்பு எப்பொழுது வரும் என்று எங்களுக்குள் பேசி இருக்கிறோம்.

எட்டாம் வகுப்பில் ஆர்வத்துடன் இது சம்பந்தமான பல செய்திகளை பள்ளியில் மானவிகளுக்குள் பகிர்ந்துள்ளோம். ஒற்றைப்படையில் வரும்படி, ஐந்தாம் நாள் அல்லது ஏழாம் நாள் தலைக்கு ஊற்றுவார்கள்... இடுப்பு எலும்பை வலுப்படுத்துவதற்காக உளுந்தங்களி, முட்டை, எல்லாம் நிறைய தருவார்கள். இனிப்பு, பலகார வகைகள், அசைவ உணவு வகைகள் என்று பல நாட்கள் கழியும் என்றெல்லாம் எனக்கு சொல்லப்பட்டு இருந்தது. இதெற்கெல்லாம் விலையாக மனம் போல ஓடி,ஆடி, சுற்றித் திரியும் சுதந்திரம் குறையும் என்பதுவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளித்து, மாலை போடுவதற்கு இணையாக கற்பனை செய்துள்ளேன். பெண்ணாகப் பிறந்த எல்லோரும் கடந்து கொண்டிருக்கின்ற தடம் என்ற வகையில், என்னென்ன நடக்கும், எப்படியெல்லாம் கவனிக்கப்படுவோம் என்ற மெலிதான ஆர்வமிருந்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் இந்தத் தேதியை மனதில் குறித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கையுடன் கைப்பையில் சிறிய அளவிலான துணி எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே, மிரட்டியது. அதுவும் சில தடவை அந்தத்  தேதிக்கு முன்னால் வரும், சில தடவை பின்னாலும் வரும். வரும் வரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய பொழுது, 'கழுதை, வருஷத்துக்கு ஒரு வாட்டி  வந்தா என்ன, இப்படியா மாசமாசம்?, அதுவும் இந்த கலர்ல தான் வரணுமா வேற கலர்ல வரக்கூடாது ', என்பதை மட்டுமே என்னளவில் பிரச்சனையாக யோசித்துள்ளேன்.

பூப்புனித நீராட்டு விழா என்ற வைபவம் மகிழ்ச்சிகரமான விஷயமாக பகிரப்பட்டு கொண்டாடப்பட்டாலும், சில இடங்களில் இந்தப் பெண் பிள்ளைகள் அழுது, அவர்களைப் பெற்ற அம்மாக்களும் அழுது, தாங்க முடியாத பெரிய பொறுப்பு வந்து விட்டது என்று புலம்புவதையும் கேட்டு இருக்கிறேன். மணமுடித்து பிரிந்து செல்வதையும், அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்தலையுமே பெரிய சுமையாக அவர்கள் எண்ணி இருந்தது தாமதமாகவே புரிந்தது.

எனக்கு ஏற்பட்ட மாதிரியான சோதனை யாருக்கும் ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். பள்ளிநாட்களில் ஏதோ ஒரு வாரம் விடுப்பில் வீட்டில், விரும்பியதை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாடலாம் என்ற கனவு, கனவாகவே போனது. சரியாக எட்டாவது வகுப்பில் ஆண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த முதல் நாள், ஞாயிற்றுக் கிழமை காலையில் பெரியவளாகிவிட்டேன் என்று தெரிந்தது.  மீதி விடுமுறை நாட்களெல்லாம் வீட்டில் உலக்கைக்குப் பின்னால் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும் அச்சம் தந்தது. எவரையும், எதனையும் தொடக்கூடாது என்று வேறு  சொல்வார்களே என்ற கடுப்பும் வந்தது.
தீவிரமாக யோசித்து செயல்படுத்திய திட்டத்தின் படி, யாரிடமும் உடனே சொல்லாமல் ஆசையாக பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி, அது பிசைந்து கொண்டிருந்த மாவில் ஜீனியைக் கொட்டி பூரி செய்ய சொல்லி சாப்பிட்டேன். சலிக்க சலிக்கக் காலையிலிருந்து விளையாடிவிட்டு, ஓய்வெடுக்க ஆரம்பித்த மதியப் பொழுதில் வீட்டில் விஷயத்தை சொன்னேன். தொடர்ச்சியாக சில கேள்விகளை சந்தித்தப்பின், மூலையில் சாய்க்கப்பட்டிருந்த உலக்கையை, எல்லையாகப் பிரித்து, அதற்கு அப்பால் என்னை அமர செய்தனர். தொடர்ந்த சில நாட்கள் சரியான கவனிப்பு. ஆனாலும் அந்த குறுகிய எல்லையை விடுத்து எப்பொழுது வெளியே வருவோம்  என்ற ஆவல் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில், தலையில் நல்லெண்ணை தடவி, சீயக்காய்த் தேய்த்து, தண்ணீர் ஊற்றியதில் தீட்டு என்று கருதியவை கரைந்து விட்டதாக எண்ணி, பட்டுப்புடவையை கட்டி விட்டனர் அத்தைகள்.

மாம்பழவண்ணத்தில் அரக்குசிவப்புக் கரை வைத்து உடுத்தி இருந்த புடவை,  ஈரக்கூந்தலை லேசாக மட்டுமே உலர செய்து பின்னிய ஜடை, தலை கொள்ளாமல் வைத்த மல்லிகை, கனகாம்பரப் பூக்கள், கழுத்தில் விழுந்திருந்த ரோஜா மாலை, கை நிறைய வளையல்கள், புதிதாக அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், கன்னங்களில், நெற்றியில் அப்பியிருந்த சந்தனம், குங்குமம் எல்லாமே வேறொரு கதாப்பாத்திரத்திற்கு நான் மாற்றப்பட்டுவிட்டதைப் போன்ற மெலிதான மகிழ்ச்சி கலந்த பயத்தை கொடுத்தன.

அக்கம் பக்கம், உறவுகள் நட்புகள், வாங்கி வந்த முட்டைகள், பால், இனிப்பு வகைகள், பூக்கள் என்று வீடு ஒரு புது மாதிரியான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த மாதங்களில்,  அந்த நாட்களின் தேதியை அடுத்த மாதத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்காக, காலண்டரில் பென்சிலால் எனக்கு மட்டும் புரியும்படியாக குறித்துக் கொள்வதை வழக்கமாக்கி இருந்தேன். எல்லா நாட்களைப் போல தான் இந்த நாட்களும் என்று கொஞ்சம் கொஞ்சமாக எளிதாக கடந்து போக பழகிக் கொண்டிருந்த காலம் அது.

கல்லூரிக்கு செல்லும் வரை கடையில் விற்கும் நாப்கினை உபயோகிப்பது குறித்து கூட தெளிவற்று இருந்தேன். பருத்தியாலான துணிகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று போதிக்கப்பட்டு இருந்ததால், அசௌகர்யமாக இருந்தாலும், காட்டன் சேலைத் துணிகளையே பயன்படுத்தியிருக்கிறேன். மாலை நேரங்களில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில், சந்தேகம் வந்துவிடும். இன்னும் ஒரு மணி நேரத்தை கடத்த வேண்டும். பின்னால் எதுவும் கறை பட்டிருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலும் இருக்கும். பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம் தான் என்றாலும், சைக்கிள் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டுமே என்ற பதட்டம் இருக்கும். அப்படி சந்தேகம் எழும் நேரங்களில், எங்களுக்குள் ' தெரியுதா பின்னால, நல்லா பார்த்து சொல்லு', என்ற கேட்டு திருப்தியான பதிலைப் பெற்றே வீட்டிற்கு கிளம்புவோம். 5000 மாணவிகள் படித்தப் பள்ளிக்கூடம்  என்றாலும், மிகக் குறைவான எண்ணிக்கையிலே கழிப்பறைகள் இருந்தன. அசுத்தமான சூழல் காரணமாக, எங்களில் பலரும் கூடுமானவரை கழிப்பறைக்கு செல்வதை தவிர்த்திருக்கிறோம். அதுவும், இது போன்ற சூழல்களில், துணியை மாற்றும் நேரங்கள் நரகத்திற்கு ஒப்பானது.

டூர், கேம்ப், விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள், உறவினர்களின் விஷேசங்கள் என்று வெளியே செல்ல திட்டமிடும் நாட்களில் இந்த மூன்று நாட்கள் வரக்கூடாது என்பது பிரார்த்தனையாகவே இருக்கும்.

கல்லூரியில் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஸ்டே ஃப்ரீ நாப்கின், அந்த நாட்களை சற்று எளிதாக்கத் தொடங்கி இருந்தது. எப்பொழுதாவது எழும் தவிர்க்க முடியாத அடி வயிற்று வலி, அந்த நேரங்களில் மனதையும் சோர்ந்து போக செய்யும் உடல்நிலை, என்று பழகிவிட்டேன் மற்றவர்களைப் போல.

ஒரு வருடம் முன்பு கீதா இளங்கோவன் அக்கா,  இயக்கியிருந்த "மாதவிடாய்" ஆவணப்படம் பார்த்தேன். மாதவிலக்குப் பற்றிய அடிப்படை சந்தேகங்களிலிருந்து, இந்த விஷயத்தில் பெண்களின் குறைந்தபட்ச தேவைகளை அழகாக விளக்கியது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து  விவாதிக்க இருந்த தேவையற்றத் தயக்கங்களை உடைத்தெறிய உதவியப்படம் இது. சரிபாதியாக இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட  மாதவிடாய் விஷயத்தில், எத்தனை அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் மக்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. நவீன வசதி உள்ள கழிப்பறைகளில் கூட உபயோகித்த நாப்கினை எறிவதற்கென்று எந்த தொட்டியோ, கூடையோ இல்லை. பயண நேரங்களில் படும் சிரமமோ சொல்லி மாளாது. எத்தனையோ அசௌகர்யங்களுடன் தங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, இந்த சமுதாயம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பான பார்வை தேவை  என்பதை அழகாக வெளிப்படுத்திய படம். அத்தனை மக்களும் அவசியம் பார்த்தே ஆக வேண்டிய ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறுகின்ற கழிவை உறிஞ்சும் மேற்பரப்பு உலர்ந்தே இருக்கும், என பேசும்  நாப்கின் விளம்பரங்கள் நம் கூடத்தின் நடுவில் ஒளிபரப்புவதை ஓரளவு எளிதாகவே கடந்த போக பழகி இருக்கின்றன நம் குடும்பங்கள். கடைகளில் நாப்கினை பேப்பரிலோ, கருப்பு கவரிலோ வைத்து சுற்றிக்கொடுக்கும் வழக்கம் குறைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட மற்றும் பெரிய கடைகளில், மற்ற பொருட்களுடன் ஒன்றாகவே கலந்து கேட்கவும், கொடுக்கவும் படுகிறது நாப்கின். ஆனால், இன்னும் திரைப்படங்களில் வயிற்றைப் பிடித்துக்கொண்டே உட்காரும் கதாநாயகி வயதுக்கு வந்துவிட்டாள் என்பது இன்னுமும் மாறாத காட்சிகளில் ஒன்றாக உள்ளது. :P

உதிரம் வெளியேற ஆரம்பிக்கின்ற பனிரெண்டு, பதிமூன்று வயதிலிருந்து மெனோபாஸ் வரை தொடர்கின்ற இந்த காலகட்டத்தில் தான், பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்ற ரத்தப்போக்கு, வருடங்கள் அதிகரிக்க,அதிகரிக்க, மனதிற்கு கூடுதல் வலிமை தந்து, பெண்களை மனரீதியாக முதிர்ச்சி அடைய செய்கிறதோ என்று கூட தோன்றும். :)

பயம், திகில் கலந்து, சந்தேகம் எழுப்பும் பொழுதெல்லாம் , இதெல்லாம் உனக்கெதுக்கு என்று கேட்ட மூத்தவர்களுக்கு மத்தியிலேயே ஆரம்பித்தன எங்களுடைய அந்த மூன்று நாட்கள். தற்பொழுது பெரும்பாலும், ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே போதிய தெளிவை ஊட்டும் அம்மாக்களும், மூத்தவர்களும் நிறைந்திருக்கின்றனர். எங்களை விட ஓரளவு முதிர்ச்சியுடன் இந்தப் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றனர் இந்தக் கால பெண் குழந்தைகள் என்பதில் சந்தேகமில்லை.  தீட்டு என்ற பெயரில் நடந்த ஒதுக்கி வைத்தல் என்பதெல்லாம் நிறைய இடங்களில் குறைந்து வருவதுடன், அத்தனை சிறிய வயதில் சேலையை சுற்றி தன்னிலிருந்து அன்னியப்படுவதை பார்க்கும் சடங்கு வைபவங்களும் குறைந்து வருகின்றன. வயதிற்கு வந்து விட்டோம் என்பதை கூடுதல் பாரமாக சுமக்காமல், ஒரு பெரிய பூங்கொத்தை பெற்று பயணிப்பது போல எளிதாக கடந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கையில் மனம் நிறைந்து போகின்றது.

என்னவென்றே தெரியாமல் இருந்தது. சிறிது நாட்களில் அரைகுறையாக தெரிய வந்தது. அச்சத்தை மீறிய சுவாரசியத்துடன் அதை எதிர் நோக்கியது. வந்த பிறகு, அதற்கேற்றார் போல நம்மை பழக்கிக்கொண்ட பிறகு, எளிதில் கடக்கும் வழக்கமான ஒன்றாகிப் போனது மாதவிடாய்!
(குங்குமம் தோழி ஜூன் 16 -30 )