புதன், 15 அக்டோபர், 2014

ஐம்பது ரூபாய் தாள்!

' இந்த ஃபிப்டி ருபீஸ்  நோட்டில வொயிட்டா இருக்க ஏரியா ல, 50 னு எழுதலயாம், வேற நோட்டு கேட்டாங்க', என்றபடி வந்தான் வருண். அருகில் இருந்த வீட்டிற்கு மாவு வாங்கி வருவதற்காக கொடுத்தனுப்பிய பணம் அது. அவன் நீட்டிய தாளை வாங்கி, சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தேன். தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் நம் தலையில் கட்டிவிட்டு சென்றது தெரிந்தது. தாளின் இடது ஓரத்தில் சிறிய அளவில் காந்தி மட்டுமே தெரிந்தார், 50 என்ற எண் தெரியவில்லை. தாள் வழக்கத்தை விட சற்று மெலிதாக, நடுவில் இடைவெளி விட்டுத் தெரியும் RBI வெள்ளிக் கோடுகள் இல்லாமல் இருந்தது. அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நடுவில் பெரிதாக தெரியும்  50 என்ற எண்ணிற்கு அருகே வரையப்பட்டுள்ள எளிமையான பூக்கோலத்திற்கு பதிலாக சற்று சிக்கலான பூ வரையப்பட்டு இருந்தது. வரைந்த உள்ளம், "நீங்க என்னடா பூ வரைஞ்சிருக்கீங்க, நான் வரையறேன் பாரு",  என்று சவாலாக எடுத்து வரைந்ததோ  அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கவனமாக தெரிந்து கொண்டு தவிர்ப்பதற்காக வரைந்ததோ என தெரியவில்லை. ஐம்பது ரூபாய் தாளில் கள்ள நோட்டு அடித்து, புழக்கத்தில் விட்டதன் மூலமாக 50 ரூபாய் அந்த மனிதரின் வாழ்க்கையில் எத்தனை முக்கியம் பெற்ற ஒன்றாக இருந்திருக்கலாம் என நீண்டது எண்ணம். மக்கள் பலரும் சோதனை செய்து வாங்காமல், பணப்பையின் உள்ளே வைத்து விடுவர் என்ற பலத்த யோசிப்பிற்கு பிறகு அச்சடித்து இருக்கலாம். எத்தனையோ கைகள் மாறி வந்ததின் அடையாளமாக இலேசாக அழுக்கு ஏறியிருந்த தாள், மதிப்பிழந்து நிற்பதை, பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் மாவு தீர்ந்துவிடும். வேறொரு தாளை வருணிடம் கொடுத்தனுப்பினேன்.அந்த புதிதாக பார்த்த பூவை மட்டும் கோலம் போடுவதற்காக வரைந்து பத்திரப்படுத்திக் கொண்டு, போலித் தாளை கிழித்து போட்டேன்.  

புதன், 8 அக்டோபர், 2014

மதுரை to சென்னை


மாட்டுத்தாவணியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பேருந்தில் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்திருந்தேன். கால்களை நீட்டியும் அசௌகர்யமாக இருந்ததால்  மடக்கி உட்கார்ந்திருந்த நிலையில் கண்ணாடி ஜன்னல் வெளியே தெரிந்த சாலையை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். குளிர்சாதன வசதி இருந்ததால், ஜன்னல் ஓரம் கிடைத்தும் அதனை திறக்க முடியாத சூழல் கடுப்படித்தது. மெதுமெதுவாக வேகமெடுத்து ஓடத்துவங்கிய வண்டி மேலூரில் சில நிமிடங்கள் நின்றது. செமி ஸ்லீப்பராக இருந்தாலும், இரவில் பேருந்துப் பயணம் பழக்கமின்மையால் இமைகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. பக்கத்தில் இருந்த மார்வாடிப் பெண் என் இருக்கைக்கு நேராக மேலே இருந்த சுவிட்சை சரி பார்த்தபடி, ஏசி சரியா வேலை செய்யவில்லை என்ற தகவலை வருத்தத்துடன் பகிர்ந்தாள். எனக்கெல்லாம் சரியாக வேலை செய்தால் தான் நடுங்கிக் கொண்டே இருக்கும் என்று பதிலுக்கு சொல்லாமல் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆமோதித்தேன். நான்கு வழி சாலையில் விரைந்து கொண்டிருந்த பல்வேறு பதிவு எண்களைக் கொண்டிருந்த பேருந்துகள் சென்னையை நோக்கியே சென்று கொண்டிருந்ததை பேருந்தின் பின்புறம் எழுதி இருந்ததின் உதவியால் தெரிந்து கொண்டு அவைகள் எந்த நேரத்தில் அந்தந்த ஊர்களில் இருந்து கிளம்பியிருக்கும் என அனாவசிய கணக்கு உள்ளே ஓடியது . 

அதிசயமாக யாரும் பேருந்தில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்கவில்லை. உள்ளே இருட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை விட, நீண்டு கொண்டே செல்லும் சாலை தன்னை நோக்க செய்தது. மழைச்சாரல் காரணமாக ஏற்பட்ட ஈரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அழகாக மின்ன எதிர் வரிசையிலும் அவ்வப்பொழுது வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஊர்களைக் கடக்கையில் தென்பட்ட பலவகை மரங்களும் ஒரே மாதிரி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தன. பார்க்கும்  சாலையும் ஊரும் வேறுபாடில்லாமல் விரிந்து கொண்டே சென்றது. அவ்வப்பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுதுகளில் கூடுதல் விழிப்புடன் பராக்குப் பார்ப்பது தொடர்ந்தது. அடங்கி இருக்க ஊரால் முடியலாம், நெடுஞ்சாலையால் பரபரப்பாகவே இருக்கவே முடியும் போல :)

அலாரம் வைத்த மொபைல் தேவைப்படாது என தெரிந்ததும் கீழே இருந்த பையில் வைத்தேன். சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் கட்டி வைத்திருக்கும் சாமான்கள் என்னவாக இருக்கும் என நீண்டது யோசனை. ஒன்றரை மணிக்கு பெயர் தெரியாத ஊரில் நிறுத்தியவுடன், பத்து நிமிடங்கள் நிற்கும் என்று ஒரு பையன் பலத்த குரலில் அறிவிப்பு செய்தான். நல்ல உறக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கைப் பெண்ணை தட்டி எழுப்பிய பிறகே வெளியே வர முடிந்தது. கொஞ்சம் வெளிக்காற்றை வாங்கவே இறங்கினேன். அங்கிருந்த கழிப்பறை அருகில் நின்ற சில வண்டிகளில் வந்த பிரயாணிகளுக்கும் உபயோகப்பட்டது.

 பேருந்தின் உள்ளே இருந்த பெயரளவு குளிர்ச்சியை விட வெளியில் மழை நின்ற ஈரம் தந்த குளிர்ச்சி அதிகமாக இருந்ததை உணர்ந்ததும், உள்ளே போய் உடன் அமர்ந்திருந்த பெண்ணை வெளியே போக சொல்லலாம் என நினைத்தால், பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இலேசாக கண் சுழலும் போதெல்லாம் ஏதாவது ஒரு டோல்கேட்டில் நின்ற பேருந்து 5,6 வாகனங்களைக் கடந்த பிறகே கண்ணாடிக் கூண்டின் அருகே நின்றது. அந்த நேரத்திலும் அத்தனை பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக அத்தனை அதிக சம்பளம் கிடைக்காது என்று ஓரத்தில் ஓடியது. வேகமெடுத்து சீறிப் பாயத்தொடங்கிய பேருந்தின் வேகத்தை வெளியில் வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடிந்ததை சீரான சாலைகள் செய்தன. ஏதோ ஓர் ஊரில் இரண்டு மணிக்கு ட்யூப் லைட் வெளிச்சத்தில் திறந்திருந்த டீக்கடைக்கு வெளியே கிடந்த இருக்கையில் கால் நீட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவர் கமிஷன் கொடுக்கும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கலாம். நான்கு மணியைத் தாண்டும் பொழுது ஆவின் பால் வண்டிகள், தண்ணீர் கேன் ஏற்றி செல்லும் வண்டிகள் எங்கள் உடன் பயணிக்க ஆரம்பித்தன. தாம்பரத்தை தாண்டும் பொழுது ஆட்களை நிறைத்துக் கொண்டு செல்லும் பேருந்துகள், சாலையை கடக்கும் மக்கள் என வழக்கமான ஒரு நாள் விடிய ஆரம்பித்திருந்தது. 

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எனக்கு சௌகர்யமான உடை !

ஜீன்ஸ் வலுக்கட்டாயமாக அணிய சொன்னாலும், பிடிக்காத ஒரு உடை. எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு கிளம்பினாலும், சேலை உடுத்து என அம்மா சொல்வதை கேட்க பிடிக்காததற்கு ஒப்பானதே 'ஜீன்ஸ் போடு'  என்று சொல்வதும். ( நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில் மட்டும் சில மணி நேரங்கள் புடவை அணிவதே பெரும்பாடாக இருக்கிறது ) சற்று பின்னால் பார்த்தால், ஷார்ட்ஸ் அணிந்து பள்ளி நாட்களில் மைதானத்தில் ஹாக்கி விளையாடியது அந்த நேரங்களில் எளிதான ஆடையாக இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை டீஷர்ட் + (முக்கால்) பாவாடை அணிவதே வழக்கம். கடந்த பல வருடங்களாக சௌகர்யமான உடையாக சுடிதார் மட்டுமே இருக்கிறது. பிடித்த விதத்தில் தைத்து அணிந்து கொள்ளும் சுடிதார் என்னை என் இயல்பில் வைத்திருப்பதாக உணர்கிறேன். ( என் அம்மாவிற்கு அவர் சேலையில் இருக்கும் பொழுது இந்த உணர்வு எழலாம்) கடையில் சென்று விரும்பி வாங்கவும், அணியவும்,  பிடித்த உடை சுடிதார் மட்டுமே. ஒரு வேளை சுடிதார் அணியக்கூடாது என்று எதிர்மறையாக கடவுளே சொன்னாலும், என் அளவில் கண்ணியமான உடையாக பாவிப்பதால் தொடர்ந்து சுடிதாரையே அணிவேன். ஜீன்ஸ் சில பெண்களின் உடல்வாகிற்கு பாந்தமாக பொருந்துவதைப் பார்த்திருக்கிறேன். சிலருக்கு சேலை பொருந்துவதாகவும் தோன்றும். முன்னாள் முதல்வர் சேலையில் மட்டுமே கம்பீரமாக இருக்கிறார். என் அம்மாவுக்கு கிடைத்திடாத கல்லூரி படிப்பு, சுதந்திரமான ஆடைத்தேர்வு, சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு என பல உரிமைகள் எனக்கு கிடைத்திருப்பதற்கு பின்னால் எண்ணற்ற நல்லவர்களின் கடும் போராட்டங்கள்   இருக்கின்றன என்பதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.