' இந்த ஃபிப்டி ருபீஸ் நோட்டில வொயிட்டா இருக்க ஏரியா ல, 50 னு எழுதலயாம், வேற நோட்டு கேட்டாங்க', என்றபடி வந்தான் வருண். அருகில் இருந்த வீட்டிற்கு மாவு வாங்கி வருவதற்காக கொடுத்தனுப்பிய பணம் அது. அவன் நீட்டிய தாளை வாங்கி, சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தேன். தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் நம் தலையில் கட்டிவிட்டு சென்றது தெரிந்தது. தாளின் இடது ஓரத்தில் சிறிய அளவில் காந்தி மட்டுமே தெரிந்தார், 50 என்ற எண் தெரியவில்லை. தாள் வழக்கத்தை விட சற்று மெலிதாக, நடுவில் இடைவெளி விட்டுத் தெரியும் RBI வெள்ளிக் கோடுகள் இல்லாமல் இருந்தது. அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நடுவில் பெரிதாக தெரியும் 50 என்ற எண்ணிற்கு அருகே வரையப்பட்டுள்ள எளிமையான பூக்கோலத்திற்கு பதிலாக சற்று சிக்கலான பூ வரையப்பட்டு இருந்தது. வரைந்த உள்ளம், "நீங்க என்னடா பூ வரைஞ்சிருக்கீங்க, நான் வரையறேன் பாரு", என்று சவாலாக எடுத்து வரைந்ததோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கவனமாக தெரிந்து கொண்டு தவிர்ப்பதற்காக வரைந்ததோ என தெரியவில்லை. ஐம்பது ரூபாய் தாளில் கள்ள நோட்டு அடித்து, புழக்கத்தில் விட்டதன் மூலமாக 50 ரூபாய் அந்த மனிதரின் வாழ்க்கையில் எத்தனை முக்கியம் பெற்ற ஒன்றாக இருந்திருக்கலாம் என நீண்டது எண்ணம். மக்கள் பலரும் சோதனை செய்து வாங்காமல், பணப்பையின் உள்ளே வைத்து விடுவர் என்ற பலத்த யோசிப்பிற்கு பிறகு அச்சடித்து இருக்கலாம். எத்தனையோ கைகள் மாறி வந்ததின் அடையாளமாக இலேசாக அழுக்கு ஏறியிருந்த தாள், மதிப்பிழந்து நிற்பதை, பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் மாவு தீர்ந்துவிடும். வேறொரு தாளை வருணிடம் கொடுத்தனுப்பினேன்.அந்த புதிதாக பார்த்த பூவை மட்டும் கோலம் போடுவதற்காக வரைந்து பத்திரப்படுத்திக் கொண்டு, போலித் தாளை கிழித்து போட்டேன்.
1 கருத்து:
ஒரு நிகழ்வு, அதை ஒட்டிய மன ஓட்டம், அதனை பதிவு செய்யும் பாங்கு என சாதாரண நிகழ்வையும் ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பதிவே சாட்சி. ரசிக்கும் மனம் வாய்த்தவர்களுக்கு எந்த சூழ்நிலையும் ரசனைக்கான ஒன்றை தந்தே செல்கிறது என்பதை சேகரித்து வைத்த பூவின் படம் உணர்த்தியது.
கருத்துரையிடுக