ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சாவி - முதல் சிறுகதை

( என்னுடைய முதல் சிறுகதையான  'சாவி', இன்று வெளியிடுகின்ற 'மேடை' காலாண்டிதழில் வந்துள்ளது. க.சீ. சிவகுமார், அப்பணசாமி, ம.காமுத்துரை, குமாரநந்தன், ஆதிரன் இவர்களின் கதைகளுடன் என்னுடைய சிறுகதை வந்திருப்பதில் பெருமிதம் கலந்த மகிழ்ச்சி. :)
மேடை இதழ் பற்றிய விவரங்களுக்கு விசாகன் தேனியைத் தொடர்பு கொள்ளவும். ) 

ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பால்யத்தில், தெருவின் குறுக்கேயும் நெடுக்கேயும் நகர்ந்து கொண்டிருக்கும் மிதிவண்டி எப்போதுமே கண்களை ஈர்க்கும். விளையாட்டை நிறுத்திவிட்டு, பெடலை மிதிக்க மிதிக்க இரண்டு சக்கரங்களும் முன்னோக்கி சுழல்வதை ஆசையுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு பக்கமும் உள்ள ஹேண்டில் பாரை அழுத்திப் பிடித்தவுடன், ஓட்டம் நின்று போய் நிற்கும் சைக்கிளின் மீதான பிரியம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. வீட்டிலோ உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது வாங்கிக்கொள்ளலாம் என உறுதியாக தெரிவித்துவிட்டனர். பள்ளிக்குப் பேருந்தில் உடன் வரும் மாலாவிடம் பார்க்கின்ற சைக்கிளை எல்லாம் ரசித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். அவளுக்கும் சைக்கிள் வாங்க வேண்டும் என கொள்ளைப்பிரியம். புதிதாக வந்திருக்கும் சைக்கிள்கள் அவற்றுக்கான விளம்பரங்கள் என சுற்றி சுற்றி வரும் எங்கள் பேச்சு. குறிப்பாக, ஈலு, ஈலு ( ilu ) என தொடங்கும் விளம்பரப்பாட்டு, ஈலுக்கா மத்லப் ஐ லவ் யூ... பி எஸ் ஏ எஸ் எல் ஆர் ... ஐ லவ் யூ', என முடியும் அந்த விளம்பரத்தை, ஏதோ மனப்பாட செய்யுளை கேட்பது போலான மரியாதையுடன் ஒளிபரப்பும் நேரத்திலெல்லாம் மிக கவனமாக ரசித்துக் கேட்போம்.

சைக்கிளைப் பற்றி பேசினால் நேரம் செல்வதே தெரியாத அளவு போய்க் கொண்டே இருக்கும் பேச்சு. நமக்கே நமக்கு என ஒரு சைக்கிள். அதன் பின்னால் உள்ள கேரியரை இழுத்துப் புத்தகப்பையை பாதுகாப்பாக வைத்து, ஹேண்டில் பார்க்கு மத்தியில் டிபன் பாக்ஸ், தண்ணீர் போத்தல் அடங்கிய மதிய உணவுக் கூடையை தொங்கவிட வேண்டும். ஏறி உட்கார்ந்து, பிடித்தமான வேகத்தில், அவசியம் ஏற்படின் மணி அடித்துக் கொண்டே பள்ளிக்கு செல்ல வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில், நிழல் தேடி நிறுத்தி, பத்திரமாகப் பூட்டி சாவியை பக்கவாட்டில் உள்ள பையில் போட்டுக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாளும் சைக்கிள் மீதான விருப்பம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அரக்கு வண்ணத்தில் நிற்கின்ற பெண்கள் விடும் சைக்கிள்களைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பேன். அந்த வயதில் எப்படியாவது ஒரு சைக்கிளை சொந்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஆகப் பெரும் கனவாக இருந்தது.
பாட நோட்டு, புத்தகங்களில் மட்டுமின்றி கிடைக்கின்ற தாள்களில் எல்லாம் அனிச்சையாக கைகள் சைக்கிளை வரைய ஆரம்பித்தன. வாசலில் சைக்கிளை கோலமாக வரையப் பிரயத்தனப்படுவதைப் பார்த்து வீட்டில் ஏதேனும் பேச்சுவார்த்தை நிகழ்ந்ததா என தெரியவில்லை.
அதற்கடுத்த சில நாட்களிலேயே நீண்ட நாள் கனவு மெய்யானது. 'இந்தா சாவி', என அப்பா கொடுத்தவுடன், வாங்கிய வேகத்தில் வெளியே நிற்கின்ற சைக்கிளை பார்த்த கண்களின் வெளிச்சத்தை இன்று வரை எந்த ஒரு பொருளும் வழங்கியதில்லை. சாவியால் திறந்த வண்டியின் மீது ஏறி, எனக்கே எனக்கான சொந்த வண்டி என்ற பெருமிதத்துடன் முழுத் தெருவையும் சில முறை சுற்றி வந்தேன். அன்றைய தினத்தில் பலமுறை துடைத்து, மேலே தூசி அடையாமல் இருக்க ஒரு துணியால் போர்த்திய சைக்கிளை நினைத்தபடி மிகத் தாமதமாக தூங்கி, அதிகாலையில் எழுந்து ஆசை தீர பார்த்தபடியே பல் துலக்கி, பாடம் படித்து, எழுதி, உணவு உண்டு, ஒரு வழியாகப் பள்ளிக்கு கிளம்பினேன். உடன் படித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம், மதிய உணவு இடைவேளையில் அழைத்துக் கொண்டுவந்து காண்பித்த என் பெருமிதம் அவர்களில் சிலருக்கு பொறாமையை கூட உண்டு பண்ணியிருக்கலாம்.
மாலை பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, உள்ளே இருந்த மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சி முடிந்த பின்னர் வீடு திரும்புவது வழக்கம். உடன் விளையாடிய மாலாவை, ' என் பின்னால உக்கார்ந்துக்கோ, உங்க வீட்டில இறக்கி விடறேன்', என்றேன். அவளோ,' வேணாம், வேணாம், எனக்கு பஸ் பாஸ் இன்னும் முடியல', என்றாள். கிளம்பும் போது மணியை அடித்துப் பார்த்த மாலா, ' இதே மாடல், இதே கலர்ல நானும் வாங்கப்போறேன் மீரா', என்றாள். சீக்கிரம் வாங்கினால், இருவருக்குமே நல்லது என எண்ணியபடி பெடலை அழுத்தினேன். தனியாகப் பள்ளிக்கு செல்வது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பள்ளியில், மைதானத்தில் நடந்ததை அசை போட்டு பேசி மகிழ மாலா இல்லாதது மனதை வருத்த ஆரம்பித்தது.

ஒரு மாதம் கூட ஆகி இருக்காத நிலையில், ஒரு நாள் காலையில், அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்கையில், சைக்கிளின் பின்னால் உள்ள டயர் பஞ்சர் ஆகி இருந்தது. கிட்டத்தட்ட கண்கள் கலங்க, அருகில் உள்ள சைக்கிள் கடைக்கு பதட்டத்துடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே வேகமாக சென்றேன். ' புது சைக்கிள், புது டயர், யாரோ வேணும்னே ஊசி வச்சு குத்தி இருக்க மாதிரி இருக்கு', என்றபடி பஞ்சர் ஒட்டித் தந்தார் கடைக்காரர். மிக வேகமாக அழுத்தியபடி, சற்று தாமதமாக பள்ளிக்கு சென்றேன் அன்று. அதற்கடுத்த சில நாட்களில் பள்ளியில் இருந்து கிளம்பும் போது, சாவியைத் துழாவினால், பக்கவாட்டுப் பையில் அகப்படவில்லை. மொத்த நோட்டு புத்தகங்களையும் கொட்டி, பிரித்துப் பார்த்து, தேடியும் சாவியைக் காணோம். கண்களில் தேங்க ஆரம்பித்தது நீர். 'சாவியை பொறுப்பா வச்சுக்காம இப்படியா தொலைப்பாங்க, உங்க வீட்டில சாத்து வாங்க போற', என என்னைத் திட்டியபடி மீண்டும், மீண்டும் பையை சோதனை போட்டாள் மாலா.
' என்னது எதுவும் தொலையாது, அவ்வளவு பத்திரமா வச்சுக்குவேன், இப்போ நான் உயிரா நினைக்கிற சைக்கிள் சாவியை காணாம போட்டத நானே தாங்க முடியாம இருக்கேன் ', என விரக்தியில் சொன்னேன். அதிகரித்த என் முகவாட்டம் அவளுக்குள் பரிவை உண்டாக்கி இருக்கக்கூடும். ' கவலைப்படாதே மீரா, சாவி எப்படியும் கெடச்சிடும்', என்ற அவளின் வார்த்தைகள் வெகு நேரத்திற்கு என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. வாடிய முகத்துடன், புலம்பியபடி வகுப்பறையிலும், மைதானத்திலும், நடந்து வரும் வழியெல்லாம், தேடியும் விசாரித்தும் கிடைக்காமலே போனது சாவி. என்னுடன் தேடிய மாலா, ஐந்து மணியானதும், கேண்டீனில் காபி வாங்கி குடிக்க செய்து, வீட்டிற்கு செல்ல பயணச்சீட்டிற்குரிய காசை கொடுத்து உதவினாள்.
மாலாவுடன் பேருந்தில் வீட்டிற்கு சென்று மாற்று சாவியை பெற்றுக் கொண்டு, மீண்டும் பள்ளிக்கு வந்து சைக்கிளை எடுத்து சென்றேன். அதன் பிறகு சாவியை மிக கவனமாக பத்திரப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது மாலாவும் சாவி பத்திரமாக இருக்கிறதா எனக் கேட்டபடி பையை சோதனையிட சொல்வாள். அந்த ஆண்டு முடிவதற்குள் மாலாவும், என்னுடையதைப் போலவே ஒரு சைக்கிள் வாங்கி விட்டாள். அதீத உற்சாகத்துடன், இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினோம். எங்களுடைய பெரும் கனவான சொந்த சைக்கிள், கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில், ஊரெல்லாம் சுற்றத் தொடங்கினோம். சாலையில் யார் முதலில் செல்வதில் தொடங்கி, இரண்டு கைகளை விட்டுவிட்டு எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடியும் வரை விதவிதமானப் போட்டிகளை எங்களுக்குள் நடத்திக் கொள்வது, ரசனையாக சென்றன பொழுதுகள். சில நாட்களில் வீட்டிற்கு தெரியாமலே சென்ற சினிமா தியேட்டர், தொலைவில் இருந்த தோழிகளின் வீடுகள், சர்க்கஸ் என நீண்டது எங்கள் சைக்கிள் சக்கரங்கள் உருண்ட பாதைகள். இன்றும் சேமித்து அசைபோடும் பல்வேறு நிகழ்வுகளை சாத்தியப்படுத்தியத்தில் சைக்கிளின் பங்கு முதன்மையானது.

அதற்கடுத்த சில மாதங்கள் கழித்து... ஒரு நாள் மாலா வீட்டில், காபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருப்பதாக சொல்லியபடி அவளின் அறைக்குள் சென்ற மாலா, கையில் ஒரு சைக்கிள் சாவியுடன் வந்தாள். ' இது நேத்து கோவிலுக்கு போற வழில கெடச்சது மீரா, உன் காணாம போன சாவிக்கு பதிலா இது பூட்டோட பொருந்துனாலும், பொருந்தலாம்னு எடுத்து வச்சேன்', என்றதும், வேகமாக சாவியை வாங்கி வெளியில் நின்ற சைக்கிளின் பூட்டில் நுழைத்துப் பார்த்தால், கச்சிதமாகப் பொருந்தியது சாவி. தொலைந்த சாவி வேறொரு வடிவத்தில் கிடைத்ததைக் கண்டு பொங்கிய மகிழ்ச்சியில், அவள் கைகளைப் பிடித்து பல முறை நன்றி சொல்லியபடி வீட்டிற்கு திரும்பினேன். என்னுடைய அறையில் புதிதாகக் கிடைத்த சாவிக்கு என ஒரு சாவிக்கொத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். மாலா கண்டுபிடித்த சாவியை எடுத்து அதில் ஏற்கனவே இருந்த சிறிய வளையத்திலிருந்து தனியாக கழற்ற ஆரம்பித்தேன். ஏதோ சரியில்லாதது போல ஓர் உணர்வு உள்ளே உதைக்க, சிறிய வளையத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாவியுடன், அடையாளத்திற்கு என நான் முன்னர் மாட்டியிருந்த மிகச்சிறிய இரும்பு வளையமும் அப்படியே இருந்தது.

புதன், 16 செப்டம்பர், 2015

போக வர ஒன்பது கிமீ...!
போக வர ஒன்பது கிமீ. எடுத்துக்கொள்ளும் தூரத்தை பகல் மற்றும் மாலை நேரங்களில் கடப்பது போலான சூழல் அதிகாலை ஐந்து மணிக்கு இல்லை. வாகன இரைச்சலற்ற சாலை, போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டே உடன் வரும் சுத்தமான காற்று, மஞ்சள் ஒளியைஅங்கங்கே பூசியபடி வழி காட்டும் சாலை, திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிரு கடைகள், நாளின் முதல் பயணத்தை அமைதியாக துவங்கி நகரும் சில வாகனங்கள் என பிரமாதமாகக் கழிந்தன 25 நிமிடங்கள்.
நிதான வேகத்தில் இருபுறமும் பார்வையை பொறுமையாக ஓடவிட்டு செல்லும் அவசரமற்ற பயணம் தான், பயணம் செய்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.
எப்போதாவது, மாலையில், மேகம் கூடி வரும் சமயங்களில், அதிக இடங்களில் மரங்கள் அடர்ந்து வரவேற்கும், நத்தம் சாலையில் சில கிமீ தூரம் வரை சென்று திரும்பவது மனதை பொறுத்து அவ்வப்போது நிகழும். ஆனால் அதிகாலையில் கிடைத்த இந்தப் பயணம், வேறொரு பரிமாணத்தில், எதிர் பாராத மகிழ்ச்சியை அளித்தது.
ஆங்காங்கே ஓரிரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தாலும், கோர்ட்டிலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் வண்டிகளின் எண்ணிக்கை சொல்லும்படி இருந்தன. முதலில் வரும் பூ மார்கெட்டிற்கு அருகில் பகல் போலவே ஆட்களின் எண்ணிக்கை. சற்று தள்ளி இருந்த தேநீர் கடையில் இருந்த கடையின் விளக்குகள், பின்புறம் இருந்த இருட்டால் பளிச்சென்று தெரிந்தன. பேச்சரவமின்றி தங்களுடைய பைகளையும், கூடைகளையும் கக்கத்திலும், பக்கத்திலும் வைத்தபடி சில பெண்களும் தேநீர் சுவைத்துக் கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு முன்புறம், வெளியூர் செல்லும் உடன்பிறப்பை இறக்கிவிட்டுத் திரும்பும் போது ஒரு காபி குடிக்க தோன்றிய விருப்பம், வீட்டில் காத்துக் கொண்டிருந்த சமையல் வேலையால் உடனடியாக ஒத்திப்போடப்பட்டது.
மீண்டும் வந்த வழியே உருண்டு கொண்டிருந்தன சக்கரங்கள்.
குறைவான போக்குவரத்தால், இன்டிகேட்டர், ஹார்ன் எழுப்பிய கைகளுக்குரிய வண்டி விநோதமாக பார்க்கப்பட்டது போன்ற உணர்வு. (அத்தனை ஒழுங்காக வேலை செய்யும் கைகளாம் :P)
சொல்லியே ஆக வேண்டும்... 300-350 மீட்டர்க்குள், தோராயமாக 20 + 20 கட்டிடங்களின் மத்தியில் நீளும் ஜவஹர் சாலை - நடப்பதற்கோ, வண்டியில் செல்வதற்கோ மிகப் பிடித்தமான சாலை. நான்குவழிப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளின் தரத்தில் இருக்கும். சாலை ஆரம்பத்திலும், முடிவிலும் இரண்டு வேகத்தடைகள், கொஞ்ச தூரத்தில் சின்ன அளவில் சீரற்ற மேற்பரப்பு, இவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. அதில் இன்னும் மெதுவாக ஓட்டியபடி, நகர்ந்தது வீட்டை நோக்கிய பயணம். சிலர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.அங்கிருந்து பீபீகுளம் தொட்டு செல்லும் வழக்கமான சாலையில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது வண்டி. வீசிக்கொண்டிருந்த காற்றை ஏகபோகமாக ரசித்துக் கொண்டிருந்த சிலருடன் நானும் இருந்ததில் ஏனோ ஒரு பெருமிதம். வீட்டை அடைவதற்கு சில நூறு மீட்டர் தொலைவிற்கு முன் ஒட்டிக்கொண்டது நிசப்தம். அதன் பிறகு, வளைந்து இடது புறம் திரும்பிய போது ஓரிருவர் வாசலைப் பெருக்க ஆரம்பித்திருந்தனர். வண்டியை நிறுத்தி பூட்டிடும்போது, மனதில் பரவியிருந்த நிறைவை உணர முடிந்தது. உடன் வந்த காற்றின் புத்துணர்வு உள்ளுக்குள்ளும் நிரம்பி இருந்தது. மலர்ந்த அகத்துடனும் தொடங்கிய நாளின் உற்சாகம் நாள் முழுவதும் தொடரும். :)