நேற்று இரவும் பெய்த மழை காற்றிலும் தக்க வைத்திருந்த குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பினோம். மணி ஏழைத் தொட்டிருந்தது.தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் பயணிப்பது வழக்கம் போல பிடித்தமான விஷயம். வலது புறத்தில் மனம் போல விரையும் வண்டிகள், இடது பக்கம் பசுமையின் ஊடே சில ஊர்களின் நுழைவுப் பாதை, அபூர்வமாக தென்படும் குட்டிக் கோவில்கள், சில இடங்களில் தேநீர்க்கடைகள்...... இறுக்கமாக ஒட்டிக் கொண்டது உற்சாகம். வெள்ளை நிறக்கோடு பளீரிட்டு முன்னே இழுக்க, கோட்டில் ஏற்றி செல்வதும், சில நொடிகள் கோட்டுக்குள்ளே செல்வதுமாக மாறி மாறி தொடர்ந்தது. இது மாதிரி சாலையில் சற்று கூடுதல் வேகத்தில் சீராக பயணித்ததில், பெட்ரோல் மிச்சம் பிடித்துவிட்டோம் என அல்ப சந்தோசம் ஏற்படும். :)
டோல் கேட் வருவதற்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 10 கிமீ க்கு அப்பால், ஏறிச் சென்ற ஒரு பாலத்தின் இடது புறம் சென்று ஓரத்தில் நின்றோம். தனித்தனியாக வந்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் பின் அங்கிருந்து இடது புற சாலையில் திரும்பினோம். மழையின் கனிவால் சூரியனும் இதமாய் ஸ்பரிசித்தது. முன்னே விரிந்த சாலையில், இரண்டு பக்கங்களும் பசுமையான வயல்வெளி மலைப் பின்னணியில் கம்பளம் விரித்து வரவேற்றது. எதிரில் வண்டி எதுவும் வராமல் இருக்க எளிதாக முன்னேறி சென்று கொண்டே இருந்தோம். 3,4 கி மீ க்கு பிறகு வலதுபுறம் திரும்பினோம். உள்ளே நீண்ட மண் சாலை தண்ணீர்த் தேங்கிய ஏகப்பட்ட பள்ளங்களுடன் அழைத்தது. வேகத்தைக் குறைத்து, மெது மெதுவாக சென்றோம். இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது. தண்ணீரையும், மரம், செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே, பள்ளங்களுக்கு ஏற்ப வேகத்தையும் மிக மெதுவாக சென்றதில், மிச்சம் பிடித்த பெட்ரோலை சமன் செய்திருப்போம். :)
கிட்டத்தட்ட 3 கிமீ கழித்து பிரிந்த இரண்டு சாலைகளில், இடது புறம் திரும்பி ஒரு கோவிலின் முன் கிடைத்த இடங்களில் வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் மலை, கொடுப்பது என்னவோ ஒரே விதமான ஆனந்தத்தை மட்டுமே. ஊருக்குள் சில தெருக்களைக் கடந்து, சிறு வெளியையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டே நடந்த சில நிமிடங்களில் செடிகள் சூழ பிரம்மாண்டமாக நின்ற மலையில் கால் வைத்தோம்................ மழைக்காலத்தில் பாறையின் அழகு கூடி, குளிர்ச்சி ஏறி இருந்த மலை எங்கள் பாதங்களை இழுத்து ஏற செய்தது.
மலையில், சுக்குநாறி என்ற ஒரு விதமான புல் காணும் இடத்தில் எல்லாம் முளைத்து இருந்தது. ஒன்றை பிய்த்து முகர்ந்தால் சுக்கும், எலுமிச்சையும் கலந்த அற்புத மணம். நடக்கும் இடங்களிலும் முளைத்த புற்களில், எங்களின் பாதங்கள் அழுத்தியதால் உருவான விஷேச மணம் பயணம் முழுவதும் உடன் இருந்தது. இது தான் இப்படி தான் என்றில்லாமல், பெரிதும், சிறிதுமாக, உனக்கென்ன, எனக்கென்ன என்பது போல இருந்த குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள் பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. பாறைகளின் குணமும், நிறமும் இந்த ஒன்றரை வருட பசுமை நடையில், பாதங்களுக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்திருக்கிறது. மலையைக் கண்டு பிரமித்தாலும், நடக்கும் பொழுது மலைக்காமல் ஏறி இறங்க முடிகின்ற அளவு மலையுடன் நட்பு வலுவடைந்திருக்கிறது. :)
நடந்து, ஏறி... ஏறி, நடந்து என வந்து சேர்கிறது முதல் படுகை. இங்கு ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. முதலில் சென்ற தளத்தில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை மழை பெய்தாலும், உள்ளே இருந்த சமண துறவிகள் பாதுகாப்பாக இருக்க எத்தனை அருமையான ஏற்பாடு செய்துள்ளனர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் ஆறு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.
கணிய் நந்தஅ ஸிரிய் இ குல் அன்கே
தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்
கடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய் . என்பது முதல் கல்வெட்டில் கூறப்படும் செய்தி. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுகைகளையும் வெட்டிக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. - இது போன்ற பல தகவல்களை பேராசிரியர் கண்ணன் பகிர்ந்து கொண்டார்.
திறந்த வெளி வகுப்பறை - பசுமை நடையின் ஒவ்வொரு நடையிலும் மலைகளில் அமர்ந்தபடி, ஆகாயம், சூரியன், சற்று தொலைவில் நீர்நிலை, மரம் செடிகள் பார்க்க, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுவாரசியமாக காதில் கேட்க வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பாடமாக மனதில் பதிகிறது. வகுப்பு முடிந்து கீழே இறங்க ஆரம்பிக்கையில் கூடுதல் கவனத்துடன் நடக்க செய்தன பாறைகள். ஆங்கங்கே பதித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், நடையை எளிதாக்கவும், ஓரத்தில் நின்றபடியே பாதுக்காப்பாக பிடித்துக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரசிக்கவும் உதவின. . வாட்டர் வாஷ் செய்தது போல கூடுதலாக பளிச்சிட்ட இயற்கையை சலிக்க சலிக்க கண்களுக்கு விருந்தாக்கி இறங்கினோம்.
3 கருத்துகள்:
மழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்) = இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது = குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள் பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன = அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani.
மழைக்காலத்தில் பசுமை நடை - மாங்குளம்... ஆஹா அருமையானதொரு பயணம்...
அழகான எழுத்து...
ஒவ்வொருமுறையும் பசுமை நடை பற்றிய உங்கள் பதிவு மனதில் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். இன்றைய கால சூழல் என் போன்ற நடைப் பிரியனுக்கு நடக்கும் இடம் பற்றிய விளக்கம் தரும் தகுதியான ஒருவருடன் செல்வது எட்டாக் கனியாகவே உள்ளது. இருப்பினும் அந்த ஏக்கத்தை மட்டுப் படுத்தும் விதமாக உங்கள் எழுத்து எனக்கான இலுப்பைப்பூ சர்க்கரை. அனுபவித்ததை வார்த்தைகளால் என் போன்றோருக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் பல. நன்றி தீபா :)
கருத்துரையிடுக