எழுத்துக்களை கண்கள் உள்வாங்க, உள்ளே விரிந்து கொண்டே செல்லும் காட்சிகளுக்கு இணையாக எந்த
அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லை. வாசிக்கும் பொழுதே நொடிப்பொழுதில்
நம்மையும் உடன் அழைத்து செல்லும் வல்லமை கொண்டவை எழுத்துகள்.
அ ம் மா என்று எழுத்துக் கூட்டி குழந்தை சரியாக வாசித்த
நாளில், பசு பால் தரும் என்ற வாக்கியத்தை அர்த்தம் புரிந்து வாசிக்கையில்,
ஒரு சிறுகதையை புரிந்து கொண்டபடி நம் குழந்தை நமக்கு விவரித்து சொன்ன
நாளில் எத்தனை பூரிப்பு பெற்றோர்களாகிய நமக்கு.
மெதுமெதுவாக எழுத்தின் வசீகர சுவை உணர்ந்து, கதைகளைத்
தேடத் துவங்கிய நாட்களில், "ரத்னா பாலா", என்ற சிறுவர்களுக்கான மாத இதழை
வீட்டில் வாங்க ஆரம்பித்தனர். மூன்றாம் வகுப்பு தமிழ் பாட வழியில்
படித்ததால், இந்த புத்தகத்தில் உள்ள வண்ணங்களும், படங்களும், கதைகளும்
வகுப்புப் பாடங்களை ஓரம் தள்ளிவிட்டு ஈர்த்தன. அப்பொழுது வாசித்த 'இஞ்சி
தின்ன குரங்கு', என்ற கதையை இப்பொழுதும் நினைவு படுத்த முடிகிறது.
அருகில் உள்ள நூலகத்தில் ஆறாம் வகுப்பில், தாத்தாவிற்கான
உறுப்பினர் அட்டையை உபயோகித்து, விடுமுறை நாட்களில் பல சிறுவர்கதைகளை
வாசித்துள்ளேன். அந்த கால கட்டத்தில் தான், தெனாலி ராமன், பீர்பால், பஞ்ச
தந்திர கதைகள் அறிமுகமாயின.
அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, சிறுவர்மலர் என்று
துரத்திதுரத்திப் படித்த நாட்களில் தெரிந்து கொண்ட ஒற்றை வரி... "ராஜா
எவ்ளோ முட்டாளா இருந்தாலும், மந்திரி புத்தியோட இருந்தால் ராஜ்ஜியம்
பொழச்சுக்கும்"... என்பது. :)
பள்ளிக்கூடத்தில் நூலகம் என்று ஒன்று இருக்கும்.
அழகாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்ல அனுமதி
கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை, நூலக அலுவலர்களே, ஒவ்வொரு வகுப்பறைக்கும்
வந்து, மொத்த மாணவிகளுக்கும் கொடுக்கும் புத்தகங்களின் பெயரை எழுதி
வைத்துக் கொண்டு வழங்குவர். இரண்டே நாளில் மீண்டும், புத்தகங்களை எந்த
சேதாரமும் இல்லாமல் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் அந்த
வழங்குதலில் இருக்கும். தொலைந்த நூல்களுக்கு நூலகர்களின் சம்பளத்திலிருந்து
பணத்தைப் பிடிப்பதால், அவர்களின் கவலை அவர்களுக்கு. கொஞ்சமும்
யோசிக்காமல், படக்கதை புத்தகங்களை ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவது
போல தான், ஏனைய புத்தகங்களும் இருக்கும்.
எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அறிமுகமான ராஜேஷ்
குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர்களின் காரணமாக கிரைம் நாவல்களில்
அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதென்னவோ, வன்முறையை, நேர்மையில்லாத கொடூரமான
செயல்களை புத்திசாலித்தனமாக எதிர் கொள்வது போல தோன்றியதால் பிடித்து போய்
இருக்கலாம். விறுவிறுப்பு தன்மை காரணமாக வேகவேகமாக பக்கங்களை புரட்ட வைக்கும் கிரைம் நாவல்கள் இப்பொழுதும் ஈர்க்கவே செய்கின்றன.
அதற்கு அடுத்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக, அனுராதா ரமணன்,
இந்துமதி, சிவசங்கரி, என்று வாசித்து குறிப்பாக ரமணி சந்திரனின் ஒரு
புத்தகத்தைக் கூட விடாமல் படித்து, ஒரு கட்டத்தில் ஒரே மாதிரி உணர்வுகளே
அத்தனைப் பக்கங்களிலும் விரவியிருப்பதாக தோன்றி இருக்கிறது.
பொதுவாக புத்தகங்களில், சில நேரங்களில் நாமே
எளிதில் கணித்துவிடும் படி இருக்கும் அடுத்தடுத்த வரிகள் சோர்வை
உண்டாக்கும்.
அடுத்து கல்லூரி வந்த பொழுது, நா.பார்த்தசாரதி, மு.வ, என்று
சிலர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், விரைவில் அயற்சி ஒட்டிக் கொள்ளும்
வகையிலேயே என்னுடைய வாசிக்கும் திறன் இருந்தது. ஆனால், உவமைகள், நேர்த்தியான வரிகள் என்று கற்று கொள்ள நிறைய
விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் இருக்கும்.
மிக நீண்ட காலத்திற்கு ஒருவரின் எழுத்தைத் தேடித் தேடிப் படிக்க
முடிந்தது என்றால் அது கல்கியின் எழுத்துகளை தான். அவரின் பல சிறு கதைகளில்
உபயோகிப்பட்ட சொற்றொடர்களை சமீபத்திய தமிழ் சினிமாக்களில் நகைச்சுவைக்
காட்சிகளில் பயன்படுத்தியதைப் பார்க்கலாம். ('ஆபரேஷன் சக்சஸ், பேசன்ட்
டைட்' மாதிரி... )
பொன்னியின் செல்வன், தியாக பூமி, இரண்டுமே நாவல்களின் ஊடே பறந்து
சென்று பார்த்து ரசித்து கொண்டாட செய்தவை. மெலிதான நகைச்சுவை, சுவாரஸ்யமாக வாசிக்க செய்யும்
வரிகளின் தொடர்ச்சி, உடன் இழுத்துச்செல்லும் கதை அமைப்பு என்று சகலமும்
ஈர்க்கும். அதிலும், பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், குந்தவை, வந்தியத்தேவன்,
ஆழ்வார்க்கடியன், நந்தினி, சேந்தன் அமுதன் உட்பட அனைத்து
கதாப்பாத்திரங்களுக்கு பக்கத்தில் நின்று நடப்பவற்றை எல்லாம் நேரடியாக
பார்த்து மகிழ்ந்து, வருத்தமுற்று, கலங்கி, சமாதானமாகி என வாசித்த அந்த
ஒரு வாரமும் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை வேறு எந்த படைப்பும்
தந்ததில்லை. அவர் எழுதி உள்ள கதைகளில், காதல், அரவணைப்பு, போன்ற
வார்த்தைகளைக் கூட பார்த்து, வெட்கப்பட்டு, யோசித்து, பயன்படுத்தி
இருப்பாரோ என்று யோசிக்கும் அளவிலேயே அவற்றின் பயன்பாடு இருக்கும்.
அடுத்து தி.ஜானகிராமன் எழுத்துகளும், ஓரளவு தவறவிடாமல் சேகரித்து
வாசித்துள்ளேன். "அம்மா வந்தாள்", வாசித்த காலத்தில் எத்தனைத் துணிவுடன்
அந்தக் காலத்தில் எழுதியிருக்கிறார் என அதிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு படித்த "செம்பருத்தி", வலிய இழுத்து சென்ற மெகா தொடர் போல
தோன்றியதால் அவ்வளவு வசீகரிக்கவில்லை. அவரின் பல கதைகளில் வரும் எளிய
கதாப்பாத்திரங்கள், அவர்களின் வாயிலாக வெளிப்படும் அந்தக் கால யதார்த்த சமூகம்
(இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது) துணிந்து கையிலெடுத்து எழுதிய பல
கதைக் கருக்கள், எங்கேயும் போதிக்காமல், அவர் பார்வையை முழுதாக நம் கண்ணில்
பார்க்க செய்யும் திறன் ரசிக்க வைக்கும்.
ஜி.நாகராஜன். - 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன
இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து
முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத
மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில்
வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த
எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள்,
போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை
தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன்
கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.
அங்கே ஒரு இடைவெளி விட்டு, அப்படியே ஆன்மீக பக்கம் சாய்ந்து,
விவேகானந்தர், ரமணர், ஓஷோ, வேதாத்திரி மகரிஷி என்று ஒரு சுற்று அரைகுறையாக
சுற்றியதில், இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேலே வாசித்து முன்னேறி செல்ல
விட முடியாத கடின முறையில் எளிய உண்மையைக் கூறிய ஜெ. கிருஷ்ணமூர்த்தியின்
புத்தகங்கள் வாசிக்க எனக்கு கடினம் என்பதையும் சொல்ல வேண்டும்.
கடந்த சில வருடங்களில், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, லா.ச.ரா.,
சுஜாதா, நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், தவிர சமீபத்தில் வண்ணதாசனும் வரிசையாக
அறிமுகமாயினர். இதில், எஸ். ரா வுக்கும், நாஞ்சில் நாடனுக்கும் கூடுதல்
இடம் புத்தக அலமாரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தான் படித்து உள்வாங்குதலா என்றால் நிச்சயம் இல்லை.
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவ அலைகளை உருவாக்கிக்
கொண்டிருப்பது தான் புத்தகக் கடல். எடுத்த உடனேயே ஆன் ரான்ட் கதைகளை உருகிப்
படிப்பவர்களும் உள்ளனர். நாம் நான்காம் வகுப்பில் படிக்கும் பொழுதோ அல்லது
நமது நாற்பதாவது வயதிலோ, நம்மை மாற்றக் கூடிய புத்தகம் நம்மை
அடையாளம் கண்டு கொள்ளும்.
சென்ற வருடம் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் வந்து
குவிந்த புத்தகங்களை வாங்கிய மக்கள் பலரும் சொன்ன ஒரே குறை
"இருக்கிற புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை, ஆனாலும்..............
வந்துவிட்டோம், இருக்கட்டும் என்று சிலவற்றை வாங்குகிறோம்", என்ற இந்த
பதிலுக்குப் பின்னே ஒளிந்திருப்பதை தேடிய பொழுது கிடைத்தவை............
1. நமக்கு விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில், அதன்
தலைப்போ ஆசிரியரோ நிமிடங்களில் தீர்மானிக்க செய்தாலும், தொடர்ந்து நம்மை
வாசிக்க செய்வதில் சமயங்களில் பெரிய ஜாம்பவான்களே தோற்றுப் போகின்றனர்.
2. தொட்டதுக்கெல்லாம் அலுத்தும், சலித்தும் கொள்ளும் நமக்கு புத்தம்
புதியதாக ஏதோ புதிதாக ஒன்றோ அல்லது பழையதே மாறுபட்ட கோணத்தில்
அளிக்கப்படும் பொழுதோ விறுவிறுப்புடன் வாசிக்கிறோம்.
3. தனிப்பட்ட தேர்வு என்று உண்டு. நானெல்லாம் வார,மாத இதழ்களில் கவிதைகளைக் கண்டால்
கூட அந்த பக்கத்தை புரட்டி விட்டு அடுத்த பக்கத்தை பார்ப்பவள. இப்படிப்பட்டவள், ஏதோ
எழுதிப் பழக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் பெரிய பெரிய கவிதைப்
புத்தகங்களை வாங்கி அடுக்கினால், அந்த அடுக்கு மாறமால் அப்படியே பத்திரமாக
இருக்கும் அலமாரியில். ( தேவையற்ற சொற்களை எடுத்துவிட்டு, சொல்வதை சுருங்க அழகாக
சொன்னால் அதுதான் கவிதை - பேஸ்புக் கில் வாசித்து கற்ற கவிதை இலக்கணம்...
:) )
4. நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், உரையாடலை செம்மைப் படுத்த
அதிக விஷய ஞானம் வேண்டும் என்பவர்கள், மேற்கூறியவை தொடர்பானவற்றையும், அவரவர்கள் பணிபுரியும் துறையில் அல்லது
எதில் அதிக விருப்பமோ அந்த தலைப்பு சம்பந்தமான நூல்களையும் வாங்கலாம்.
5. பலரும் வாசித்த நூல் என்பதெல்லாம், ஒரு புத்தகத்தை வாங்குவதற்கான அளவுகோல் இல்லை.
ஆசை ஆசையாய் வாங்கி வரிசைப்படுத்தி அடுக்கி
வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் குரலை அவ்வப்பொழுது கேளுங்கள். அதுவும்
முடியாவிட்டால், கேட்க விரும்புபவர்களுக்காவது கொடுங்கள்.
வாசிப்பு...
என்ன செய்யும்?
தெரிந்து கொள்ள, தெளிய வைக்க, பொழுதைப் போக்க,
மனதை நெகிழ செய்ய, ஒப்பிட்டு ரசித்து அசைபோட, அறிவை விசாலப்படுத்த,
உற்சாகம் பொங்க என இன்னும் இன்னும் பல விந்தைகளை செய்யும் வாசிப்பு.
கையடக்க புத்தகம் இத்தனையும் வழங்குமென்றால், வேறு என்ன வேண்டும்?
நேசித்து வாசிப்போம்...! :)
(குங்குமம் தோழியில் வெளியானது - ஆகஸ்ட் 16-31)
1 கருத்து:
புத்தகம் இது எனக்கு திறந்து விட்ட உலகை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது. படிப்பவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அதில் வரும் கதாபாத்திரங்களின் சொல்லும்,அசைவும் மனம் உருவகப்படுத்திவிடும் அற்புதம் சலனப் படங்களால் முடியாது.சிறு வயதில் படித்த படக்கதைகளின் நாயக நாயகியரின் படிப்பினைகளை பெற்றோர்களால் கூட பழக்கப் படுத்த முடியாது என்பது என் அனுபவம்( இந்தக் காலக் குழந்தைகளுக்கு இடியட் பாக்ஸ் எனும் தொலைக் காட்சியால் அந்தப் பலனைக் கொடுக்க முடியாது).ஒரு கட்டத்தில் படக் கதைகளைத் தாண்டி படிக்கத் தூண்டிய தமிழ்வாணன்(சங்கர்லால்)சுஜாதா,சாண்டில்யன்,நீதிக்கதைகள்,ஆங்கிலத்தில் பல நாவல்கள்,என படிப்பதில் வரும் இன்பத்தை அணு அணுவாக ரசித்து மனம் விரிந்தது.இதில் ஆன்மீகம் சார்ந்த படிப்புகள் இதிகாசங்களில் ஆரம்பித்து புராணங்களில் வளர்ந்து வாழ்வியல் வரை வந்தது ( இதிலும் ஆங்கிலப் புத்தகங்கள் அடக்கம் ).இன்னும் வாசித்தலைப் பற்றி மணிக்கணக்காக பேசுவேன்:)
காலம் சிரித்தது படிப்பும் நின்றது. பேஸ் புக் மீண்டும் தவித்த வாய்க்கு ஒரு சொம்பு தண்ணீராய் கிடைத்தது உங்களைப் போன்றோரின் பதிவுகளால் என்றால் மிகையில்லை.நிறைய யோசிக்க குறைவாய் படிக்க என மனம் பழகிக் கொண்டது. எழுதியவரின் கருத்தை விட படிப்பவரின் எண்ணத்தை விரிவுபடுத்தும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களால் நேசம் மரிக்காது எழுத்தின் மீதுள்ள காதல் உயிர்ப்புடன் மனதை அசை போட வைக்கிறது. என் மனதுக்குப் பிடித்த என்னுடனே வளர்ந்து என்னை வளர்த்த வாசிக்கும் பழக்கத்தைப் பற்றிய உங்கள் பதிவு simply nostalgic,நன்றி :)
கருத்துரையிடுக