புதன், 3 ஜூலை, 2013

ஆறு சிக்னல்கள் - இருபது நிமிடங்கள்!

இரத்தக் கொதிப்பிற்காக ராம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையை அக்குபஞ்சர்க்கு மாற்றி சில வாரங்கள் ஆகிறது. கோமதிபுரம் கடைசியில் இருக்கும் மருத்துவர் வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பார். மாலை வேளையில் அதிக பட்சம் ஆறரை  மணி வரையே இருப்பார். விடுப்பு, சிறப்பு அனுமதி எடுத்து என சில வாரங்கள் சிகிச்சைப் பெற்ற நிலையில், அக்குபஞ்சர் சிகிச்சையின் பக்க விளைவாக கடும் காய்ச்சலுடன் கல்லூரிக்கு சென்றிருந்த தன்னை, நேற்று மாலை ஆறு மணிக்கு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அழைத்து சென்றால், மருத்துவரை உறுதியாக பார்த்து விடலாம் என்று மொபைலில் சொன்னதும், சாதாரண நாளிலே அரை மணி நேரம் கடக்க எடுத்துக் கொள்ளும் தூரத்தை, இருபது நிமிடங்களில் கடந்தே ஆக வேண்டும், அதுவும் இந்த கடுமையான போக்குவரத்து இருக்கும் நேரத்தில் என்று எண்ணிக்கொண்டே இரு சக்கர வாகனத்தை எடுத்தேன்.

காத்துக் கொண்டிருந்த இரண்டாவது நிமிடத்திலே வந்து நின்ற கல்லூரி பேருந்தை ' சவால் ஆரம்பமாகிவிட்டது', என்று ஆர்வத்துடன் பார்த்தால், வேறு யாரோ இரண்டு பேர் இறங்கி செல்ல மெதுவாக புறப்பட்ட வண்டியின், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியர்,
'சார், அடுத்த பஸ்ஸில வர்றார் மேடம் ', என்ற தகவலை வேகவேகமாக சொன்னவுடன்,
'பஸ் ல ஏன் வர்றார்?', என்று பதில் கேள்வியில் குழம்பிய அவரின் முகத்தை பார்த்த திருப்தியில், தொடர்ந்து காத்துக் கொண்டு இருந்தேன். அதற்குள், அவர் செல்லில் கூப்பிட்டு, தகவலை சொல்லி இருக்கிறார் என்று அடுத்த பஸ் வந்து சேர்ந்ததும் தெரிந்தது. எப்பவும் போல, 'நீ திருந்தவே மாட்ட', என்று விளையாட்டாய் கடிந்து கொண்ட ராமை, பின்னால், அமர செய்து கிளப்பினேன் வண்டியை.

மொத்தம் ஆறு சிக்னல்கள், அதிகமான எண்ணிக்கையில், அவதி அவதியாக விரையும் வாகனங்கள். மழை பருவத்தில் பொழிய தப்பினாலும், தவறாமல் மண்ணை அள்ளி வீசும் காற்று காலத்தில், பயணிப்பது பெரிய சவால் தான்.

'தொடர்ந்து பல வண்டிகளும் அடுத்தடுத்து ஓவர் டேக் செய்து முந்துவதால் ஏற்படுவதே டிராபிக் ஜாம்'. (அடடா, ஒரு ஸ்டேடஸ் தேறிடுச்சே என்று உள்ளே ஓடிக்கொண்டிருந்தது) சில இடங்களில் முந்தி, சில இடங்களில் பின் தங்கி, பாலத்தில் ஏறி இறங்கி, சிக்னலைக் கடந்த வண்டியை கோரிப்பாளையத்தில் வரவேற்றது சிவப்பு சிக்னல். கிங் மெட்ரோ ஹோட்டல் பக்கத்திலிருந்த வண்டிகள் செல்ல ஆரம்பித்திருந்தன. அடுத்து மற்றொரு பக்கத்திலும் வாகனங்கள் புறப்பட ஆரம்பித்து, அவற்றின் எண்ணிக்கை ஒன்றிரண்டு என குறையும் நேரத்தில், வண்டியை ஸ்டார்ட் செய்தால் போதுமானது என்று அமர்த்தி வைத்தேன்.



ஒரு வழியாக பச்சை விளக்கு ஒளிர்ந்த நொடியில் வண்டியை ராஜாஜி மருத்துவமனை உள்ள சாலையில் விட்டால், மதுரையில் உள்ள அத்தனை வண்டிகளும் ஒரே நேரத்தில் வெளியே வந்து ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு செல்வது போன்ற பிரம்மை. இங்கு, 20-30 கி.மீ. வேகத்தில், செல்வதே பெரிய வித்தை புரிவது போன்று. இந்த நேரத்தில், இந்த சாலையில் ஓவர் டேக் செய்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும் வேறு வேறு இல்லை. சீரான வேகத்தில் சென்று கொண்டே இருந்தாலும், அவ்வப்பொழுது மணியைப் பார்த்துக்கொண்டே சென்றேன்.

நல்ல வேளையாக, ஆவின் பால்பண்ணை அருகில் சிக்னலைக் கடக்கையில் மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தது. ஓரளவு அகலமான, சீரான சாலையில் சில நிமிடங்கள் பயணிக்க, மேலமடை அருகில் உள்ள சிக்னல், வழக்கம் போல சில நிமிடங்களைத் தின்று தீர்த்து விட்டே வழி விட்டது. அதிலும், சிவகங்கை சாலையில் உள்ள கோமதிபுரத்திற்கு செல்லும் இந்த நேரங்களில், எதிரில் பயணிப்பவர்கள், பொதுவாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பல முகங்களை நிதானமாக பார்த்துக்கொண்டே, சிறிது சிறிதாக நகர முடியும். (ஒன்றிரண்டைத் தவிர, அனைத்து முகங்களும் சோர்ந்து, வாடி இருப்பது போல பட்டது)

அங்கங்கே தட்டுப்படும் சிறிய பள்ளங்கள், ஓரங்களில் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் மண், குறுகலான வழி,  இவற்றை கடந்து சென்றால்   பல மீட்டர் தூரத்திற்கு பிறகே அகலமாகும்  சாலை. சில நிமிடங்களிலே ஊர்ந்து செல்லும் வேகத்தை சற்று அதிகப்படுத்தும் வண்ணம், முன்னே உள்ளே வண்டி சென்றது. இதில் முன்னே செல்லும் வண்டியை, அப்படியே பின்பற்றினால், நாமும் அதே வகையான வண்டியில் பயணிக்க வேண்டும். ஒரு வேளை, அந்த வண்டி நான்கு சக்கரமாக இருந்தால், அது பள்ளத்தில் தப்பிக்க சற்று ஓதுங்கி பாதுகாப்பாக செல்லும் பொழுது, நிச்சயம் அந்த பள்ளத்தில் நம் இரு சக்கர வாகனம் இறங்கி ஏறும். (அடடா, இரண்டாவது ஸ்டேடஸ் தேறிடுச்சே :P )

அதிலும், இந்த சின்ன சின்ன பள்ளங்களை எல்லாம் கவனித்து சுற்றி வளைத்து வர முடிகின்ற பலரும், பெரிய திறமைசாலிகள் என்று அகம்பாவம் கொண்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அங்கங்கே இருக்கின்ற பெரிய பள்ளங்கள், தங்களுக்குள் இறங்க வைத்து அவர்களின் பெருமையை வாங்கிய பின்னரே வெளியே விடும்.

இப்படியாக.....
வேகமாகவும், பாதுகாப்பாகவும், பயணித்து.......
சரியாக, இருபதாவது நிமிடத்தில் இலக்கான, கோமதிபுரம் ஒன்பதாவது தெருவில் வளைத்து, மருத்துவமனைக்கு முன் வண்டியை நிறுத்தி விட்டு,  உள்ளே இருந்த மருத்துவரை பார்த்து விட்டு,
வெளியே வந்து வெற்றி புன்னகையுடன் பார்த்தால், கரவொலி எழுப்பவோ, விருது வழங்கவோ யாருமில்லை!  :P




கருத்துகள் இல்லை: