எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்ற அல்லது எதிர் பாராத அதி முக்கியத்தகவலை, வெகு விரைவில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதே தந்தி.
தினமும், இதே ரீதியில் செய்திகளை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தினத்தந்தி நாளிதழுக்கு இந்த பெயர் வைத்திருப்பர் என்றே எண்ணுகிறேன்.
சிறிய வயதில் ரயில் பயணங்களின் பொழுது ஓரத்தில் தொடர்ந்து காணப்படும் தூண்களை பற்றி தாத்தாவிடம் கேட்ட பொழுது, இதன் வழியே தான் தந்தி அனுப்புவர் என்ற தகவலைப் பெற்றேன்.
" இதில போய் எப்படி தாத்தா அனுப்ப முடியும்?", என்ற கேள்வியை,
நல்ல வேளையாக அந்த கம்பி கையில் சிக்காததால் பிய்த்து போடாமல் கேட்டேன்...... :P
அப்பொழுது பெற்ற தகவல் தான், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வகையான குறியீடு இருக்கும். வரிசையாக அனுப்பப்படுவதை இன்னொரு முனையில் பெற்று சேர வேண்டிய இடத்திற்கு உடனடியாக அனுப்புவர் என்று.
வார்த்தைகளை சுருக்கி எழுதும் SMS க்கு, வாக்கியங்களை சுருக்கி எழுத கற்று தந்த தந்தியே முன்னோடி!
நிர்ணயிக்கப்பட அளவிற்கு மேல் கூடுதலாக அடிக்கும் வார்த்தைகள் அதன் அளவைப் பொறுத்தே , SMS மொத்தக் கணக்கில் இருந்து கழிக்கப்படும். தந்தி கூட அப்படி தான், கூடுதல் எழுத்துக்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்றும், இன்றும், தொலை தொடர்பு வசதிகள், நம் பையிலிருந்து பணத்தை தேவைக்கு எடுத்தாலும், சிக்கனமாகவும் இருந்து பிழைப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றனவோ என்னவோ!
எட்டாவது வகுப்பு படிக்கும் பொழுது, ஆங்கிலத்தில் ஐந்து மதிப்பெண்கள் உள்ள வினாவாக தந்தி அடிப்பது எப்படி என்ற ஒரு கேள்வி.... ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, இந்த நேரத்தில் எப்படி தந்தி இருக்க வேண்டும் என்று இருக்கும்.
எழுதியதில் தற்பொழுது நினைவில் இருப்பவை.
பெண்/ஆண் குழந்தை பிறந்து விட்டது.
தாய் சேய் நலம்.
அவசரம். கிளம்பி உடனே வரவும்.
வாழ்த்துகள்!
சில வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டாலே போதும், எளிதில் இதில் மதிப்பெண் பெற்று விடலாம். எழுதுவதற்கு சோம்பேறியான என்னை போன்றோருக்கு மிகக் குறைவான எழுத்துக்களில், உரிய மதிப்பெண் பெறக் கூடிய பகுதி. அதுவும், புரிந்தால் போதும் இலக்கணம் மிக சரியாக பின்பற்றப்பட தேவையில்லை என்பதாலேயே இன்னும் எளிமையான, விருப்பத்திற்குரிய பகுதி. ஆனாலும், கற்றுக் கொண்டதைப் பயன்படுத்தி என் வாழ்க்கையில் இது வரை ஒரு தந்தியும் அடித்ததும் இல்லை, பெற்றதுமில்லை என்பது சோகமே.
இனி தந்தியை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் பற்றி, போட்டித் தேர்வுகளில் கேள்வி எழுப்பி பதில் பெறும் முறையில் ஞாபகப்படுத்திக் கொள்வதைக் கூட மறந்து விடுவோம் என்றே நினைக்கிறேன்.
ஒவ்வொரு அடியாக முன்னேற முன் தள்ளியவை, தேவையில்லை என்று காணாமல் மறைந்து போனாலும், இப்பொழுது வந்தடைந்திருக்கும் இடத்திற்கு அவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக