வெள்ளி, 25 அக்டோபர், 2013

நமக்கு சரின்னு பட்டா சரி தான்!


வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பலசரக்குக் கடைக்கு தோழியுடன் நடந்து சென்றேன். அவள் கடையின் உள்ளே சாமான்களை வாங்கிக்கொண்டு இருந்தாள். அந்த சாலையின் அருகிலேயே இடது ஓரத்தில் ஒரு கரும்பு சாறு கடை இருந்தது. கரும்புகளை இரண்டாக, மூன்றாக ஒடித்து, அதன் உள்ளேயே இஞ்சி, எலுமிச்சைத் துண்டுகளை வைத்து சாறு பிழியும் இயந்திரத்தின் உள்ளே கொடுத்து விட்டு, வலது புறம் சுழற்றுவதற்காக இருந்த கைப்பிடியை அழுத்திப் பிடித்து சுற்ற சுற்ற, சாறு முதலில் ஐஸ் கட்டிகள் சிதறிக் கிடந்த ஒரு தட்டில் வந்து விழுந்து, அதன் பின்னர் ஒரு குடுவையில் சேகரமானது. மீண்டும், மீண்டும் உருளை வடிவ சக்கரங்களுக்கு இடையே கரும்பைக்கொடுத்து, ஒரு துளி கூட வீணாகி விடக்கூடாது என்ற நோக்கில் கர்ம சிரத்தையாக பிழிந்து எடுத்தப் பின், வடி கட்டியில் வடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, எதிரில் நின்று இருந்த இரு பெண்களுக்கும் கொடுத்தார் கடைக்காரர்.

மழைக்காலம், ஆனாலும், குடிக்க வேண்டும் என்ற உந்துதல், உள்ளே இருக்கும் தோழியோ இதெல்லாம் விரும்ப மாட்டாள்.  'எனக்கு ஒரு கரும்புச்சாறு ஐஸ் இல்லாம கொடுங்க',  என்று சொன்னதும், தட்டில் இருந்த ஐஸ் கட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் பிழிந்து நேரடியாக டம்ளரில் விழும்படி செய்து, வேறொரு டம்ளரில் வடிகட்டிக் கொடுத்தார். திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவை யோசித்துக்கொண்டே, கேட்ட காசைக் கொடுத்தேன்.


அங்கிருந்து  நகர எத்தனிக்கையில், வாழை இலையின் மேல் ஓரிரு உதிரிப் பூக்கள் சிதறிக் கிடக்கும் மூங்கில் கூடையை இடுப்பில் சுமந்து கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி தத்தளிக்கும் கண்ணீருடன் என் முன் வந்து நின்றார். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற பொழுதே, ' பூவெல்லாம் வித்த காசு சுருக்குப் பையில இருந்துச்சு, பஸ் ஏறுறதுக்காக நின்னுகிட்டு இருக்கிறப்போ தான் பார்க்கிறேன், சுருக்குப் பையைக் காணோம், இப்ப வீட்டுக்கு போவனும், காசு வேணும்' என்றார். முற்றிலும் வெண்மைக்கு மாறி இருந்த தலை முடியை இழுத்து உச்சியில் கொண்டை போட்டு இருந்தார். பெயரளவில் கூட எந்த ஒரு அணிகலனும் அணிந்திருக்கவில்லை. ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்பட்ட சேலைகளில் ஒன்றை சுற்றி, அதற்கு சற்றும் பொருத்தமில்லாத சட்டையுடன் இருந்தார். மனதிற்கு சரி என்று படாவிட்டால், ஐந்து பைசா கூட எடுத்துக்கொடுக்கும் பழக்கமில்லை. பெரிதாக இழந்த துக்கம் மட்டுமே கண்கள் உட்பட அந்தப் பெண்ணின் முழு முகத்திலும் அப்பி இருந்தது. கைப்பையின் ஜிப்பைத் திறந்து கொஞ்சம் கூடுதலான பணத்தைஎடுத்து, அவரின் கைகளில் கொடுத்தேன். பதிலுக்கு எதுவுமே சொல்லாமல் அப்படியே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே, இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அருகில் இருந்த பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பி இருந்த என் தோழி,
' பூவெல்லாம் வாங்குற போல, அதான் மழை பெய்யுது', என்றவாறே பூவாசம் கூட இல்லாத என் கைப்பையை பார்த்து விட்டு,
'கையில பூவைக் காணோம், பூக்கார அம்மா கிட்ட பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு,' என்றாள். அவள் கையில் இருந்த இரண்டு பைகளில் எடை குறைவான பையாக தேர்ந்தெடுத்து, வலது கையின் விரல்களுக்கு கொடுத்து விட்டு, நடந்து கொண்டே, விவரத்தை சுருக்கமாக கூறினேன்.



'அதெப்படி நம்பி பணம் எடுத்துக் கொடுத்த? ஏமாத்தி இருக்கவும் வாய்ப்பிருக்கு ', என்றாள்.

'ம்ம்........ அந்தப் பார்வை உள்ளே எதோ செஞ்சது......... அப்படியே ஏமாத்தி இருந்தாலும், அது அந்த அம்மாவோட தேர்ந்த நடிப்புக்கான பரிசா இருந்திட்டு போகட்டும்', என்றேன்.

அதற்கு பிறகு எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.



4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது...

வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

thambu சொன்னது…

பொதுவாக கொடுத்த பின் அதைப் பற்றி யோசிக்காதவர்களே கொடுக்கத் தகுதியானவர்.சில முகங்கள் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கத் தூண்டும். கொடுக்காதிருந்தால் அதன் நினைவு இம்சைப்படுத்தும் . அதற்கு முன் குடித்த நிறைவான பானமும் மனம் கனிய ஒரு காரணியாக இருக்கலாம். அனால் இவ்வளவுக்கும் நடுவில் எடைக் குறைவான பையை பார்த்து வாங்கிய மனதை என்னவென்று சொல்வது . சாதாரண நிகழ்வையும் சுவாரசியம் ஆக்கிவிட்டது உங்கள் எழுத்து. தொடருங்கள் :)

Rathnavel Natarajan சொன்னது…

திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவை யோசித்துக்கொண்டே, கேட்ட காசைக் கொடுத்தேன். = அருமை. = முற்றிலும் வெண்மைக்கு மாறி இருந்த தலை முடியை இழுத்து உச்சியில் கொண்டை போட்டு இருந்தார். பெயரளவில் கூட எந்த ஒரு அணிகலனும் அணிந்திருக்கவில்லை. ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்பட்ட சேலைகளில் ஒன்றை சுற்றி, அதற்கு சற்றும் பொருத்தமில்லாத சட்டையுடன் இருந்தார் = What a keen observation - நாங்களும் பார்க்கிறோம், அதே நிகழ்வுகளை நீங்களும் பார்க்கிறீர்கள், பார்வைகள் ஒன்று, கோணங்கள் வேறு - சாதாரண நிகழ்வுகள், கரும்புச் சாறு குடித்தது, அவசரத்திற்கு உதவியது - எழுதப்பட்ட நடை அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு மனமார்ந்த வாழ்த்துகள். நிறைய எழுதுங்கள். உங்களிடம் நல்ல பார்வை (observation capacity), எழுதும் அற்புதமான ஆற்றல் இருக்கின்றன.