புதன், 1 ஜனவரி, 2014

கடந்த சில நாட்களின், சில பக்கங்கள்...!

எது ஒன்றுடனும் இணைந்திருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, அந்த ஒன்று இல்லாமலும் இயல்பாக நம்மால் இருக்க முடிகின்ற பொழுது அடையும் மகிழ்ச்சியின் அளவு முன்னதை விட அதிகம். அந்த வகையில், பேஸ்புக் இல்லாமல் இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்பதை நடைமுறைப்படுத்திப் பார்க்க அவ்வப்பொழுது விடுப்பு எடுப்பது உண்டு. இந்த முறை எடுத்த நீள் விடுப்பில், குறுகிய வேகத்தில் நாட்கள் கடந்த சென்றது போல இருக்கிறது. கூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பும், யானைமலைக்கு சென்ற பசுமை நடையும் ஒரே ஞாயிற்றுக்கிழமையில் அமைய, இரண்டிலும் கலந்து கொண்டே ஆரம்பமானது தற்காலிக விடுப்பு.

ஓரளவு நடைபயிற்சி, தேங்கிப்போய் இருந்த வீட்டு வேலைகள், பிடித்தப் பாடல்களைக் கேட்டல், கொஞ்சம் வாசிப்பு, வருடக்கணக்கில் பேசாமல் இருந்த சில உறவுகள் மற்றும் நட்புகள் உடன் மொபைல் உரையாடல்கள் மற்றும் நேரில் சந்தித்தல், கொஞ்சம் கோவில், கூடுதலாக வேடிக்கைப் பார்த்தக் கடைவீதி என்று நகர்ந்த நாட்களின் இறுதியில் மனதில் பின்னணி இசையாக கடந்த சில மாதங்களாக சோககீதம் இசைத்துக் கொண்டிருந்த குறுந்தகடுகளை, பல காகிதங்களை சுற்றி எளிதில் எட்டி எடுக்க முடியாத உயரத்தில் வைக்க முடிந்தது.

நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் சமையல் பதார்த்தங்களை விரும்பி செய்தேன். பழைய கோல நோட்டுகளை தூசி தட்டி எடுத்து, பெரியக் கோலங்களை வண்ணப்பொடிகளால் வாசலில்  வரைந்தேன். தொலைக்காட்சியில் நகைச்சுவை சானல்களை அதிசயமாகப் பார்த்தேன். ரசித்துப் பார்த்ததில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்திலிருந்து ஒளிபரப்பிய நகைச்சுவைக் காட்சி ஒன்றில், வகுப்பறையின் மேலிருந்து பார்க்கும் ஆசிரியையை கீழே தேநீர்க் கோப்பையுடன் திரும்பி சிவகார்த்திகேயன் பார்க்கையில் .... ஏ, தந்தானே தந்தானே தந்தானேனா தந்தானனா....... என்று குறுகிய நேரத்தில் ஒலித்த அந்தக் குரலும், இசையும் அப்படியே உள்ளே ஒட்டிக்கொண்டுவிட்டது. ( விஜய் சேதுபதி நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். :)  )

எங்கள் ஊரில் பொதுவாக எந்தப் பொருள் வாங்க வேண்டுமென்றாலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வீதிகளிலேயே வாங்க வேண்டி இருக்கும். டவுன் ஹால் ரோடு போன்ற சற்று அகலமான வீதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் பிடித்து விட்டால் போதும், நிதானமாக ஒவ்வொரு வீதியாக வலம் வரலாம். ஆனால் அது அத்தனை எளிதல்ல. பார்க்கிங்க்காக இடத்தைத் தேடும் நேரங்களில், இந்த நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஊருக்குள்ளே ஷாப்பிங் செய்ய கிளம்புபவர்கள் நிலைமையை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
பெரும்பாலும், அதிக அளவு தங்கும் விடுதிகள் அமைந்திருப்பதாலும், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருப்பதாலும், டவுன் ஹால் சாலையிலிருந்து, மேலக் கோபுர வாசல் வழியாக கோவிலுக்கு  செல்பவர்களின் எண்ணிக்கை, மற்ற கோபுர வாசல்களின் வழியாக செல்பவர்களை விட சற்று கூடுதலாக இருக்கும். ஒரு வேளை மிகக் குறுகலான அந்த வீதியும் அப்படி ஒரு தோற்றத்தைத் தந்திருக்கலாம். அதிலும் அத்தனை வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. எதிரில் வருபவர்களை இடிக்காமல் சென்றால் பெரிய ஆச்சர்யம் தான். கோவிலை சுற்றி உள்ள நான்கு சித்திரை வீதிகளில் அனைத்து வாகனங்களையும் தடை செய்தது போல, மேல கோபுர வாசல் போல முக்கிய அதே நேரம் குறுகலான வீதிகளிலும் வாகனப் போக்குவரத்தை தடை செய்யலாம், முடியாதபட்சத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மட்டுமாவது தடை செய்யலாம். அவ்வளவாக அதிகம் புழங்காத வீதிகளை வாகனங்களை நிறுத்துவதற்கான பகுதியாக முற்றிலும் மாற்றலாம். (மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை கவனத்திற்கு... )

மேலக் கோபுர வீதியில் பாப்லி பிரதர்ஸ் என்ற விளையாட்டு சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது. சற்று விலை கூடுதலாக இருந்தாலும், தரமானவையாக இருக்கும் என்பதற்காக எப்பொழுதேனும் அங்கு செல்வதுண்டு. சென்ற வருடம் வாங்கிய கூடைப் பந்து விளையாடுவதற்காக சுவற்றிலேயே பொருத்திக் கொள்ள கூடையுடன் கூடிய பந்தும், பெரிய அளவில் சேதாரமில்லாமல் இன்று வரை நன்றாக இருக்கிறது. வருண் வீட்டில் தனியாக விளையாட இது போன்ற பொருட்களை விரும்பியே வாங்கித் தருவதுண்டு. அந்த வகையில் பாக்ஸிங் கிட் முன்னமே கேட்டு இருந்தான். உள்ளே ஏதேதோ வைத்து அடைக்கப் பட்ட மூட்டையை, க்ளாம்ப் அடித்து தொங்க விட்டு, கை உறைகளை மாட்டிக் கொண்டு இருக்கிற, வருகிற கோபத்தை எல்லாம் முறுக்கிய கைகளுக்கு கொண்டு வந்து, அந்த மூட்டைக்கு வேகவேகமாக ஓங்கிக் கடத்த வேண்டும். கூடுதல் டிப், இப்படி பெரியவர்களும் கோபத்தைக் கடத்தி ரிலாக்ஸ் ஆகலாமாம்.

கடந்த சில நாட்களாக பிடித்தப் பாடல்களை அலறவிடாமல் கேட்பதும், மற்றவர்கள் எத்தனை சத்தமாக தொலைக்காட்சியைப் பார்த்தாலும் எந்த எதிர் குரலும் எழுப்பாமல் இருப்பதுவும், சாலையில் பயணிக்கையில் மிக நிதானமான வேகத்தில் யாரிடமும் திட்டு வாங்காமல், யாரையும் திட்டாமல் பயணித்ததும், அமைதியாக இருந்த என்னை முற்றிலும் மாறிப்போனவளாக எண்ண வைத்திருக்கும் போலும். 


தொடர்ச்சியாக வந்த இருமலைக் கட்டுப் படுத்த முடியாமல் சத்தமாக அடிவயிற்றிலிருந்து எடுத்து இருமிக் கொண்டிருந்ததைப் பார்த்த ராம், 'இப்படி சத்தமா இருமக்கூடாது, அப்படி இருமல் வந்தா வாயை மூடிட்டு இருமனும்', என்றதும் அப்போ நமக்கு இருமல் இருப்பது பிரச்சனை இல்லை, ஆனால் அது வெளியே தெரிவது தான் பிரச்சனை என்ற ஸ்டேடசை நேற்று  உடனடியாக இங்கு பதிய முடியாமல், என்னால் என்ன செய்ய முடியும் என்று மூச்சை ஆழ்ந்து இழுத்து யோசித்தேன். சைகையில் அருகில் வரும்படி சொல்லி, சற்று குனிய சொல்லி காதின் அருகிலே இயன்ற அளவு பலமாக சத்தமாக இருமினேன். திரும்பி முறைத்த முறைப்பை திருப்தியாக ரசித்துவிட்டு வலது கை கட்டை விரலைத் தூக்கி காட்டிவிட்டு கடைக்கு வெளியில் வந்து நின்றேன். எங்கே சென்றாலும் திரும்பும் வீடாக....... எத்தனை உணர்வுகள் வந்து சென்றாலும் மீண்டும் நமக்கே உரிய இயல்பு நிலைக்குத் திரும்புதல் சௌகர்யமாக இருக்கிறது

கலவையானப் பக்கங்களாக சென்ற இந்த நாட்கள், என்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவின. மிக இலகுவான மனதுடன், புத்துணர்வுடன், உங்கள் கரங்களைக் குலுக்கி, முழுமையான மனதுடன் இந்த 2014, அனைவருக்கும் நிம்மதியாக  அமைய  வாழ்த்துகிறேன்!5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DD

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் தீபா. அது யார் ராம்? அவர் காதில் போய் இரும்பி முறைப்பு வாங்கிக்கொண்டீர்களே.!? குறும்புதான். நல்லவேளை ராமுக்கு ஒண்ணும் ஆகல. :)

thambu சொன்னது…

இனிய ஆரம்பம் எங்களுக்கு பதிவு கண்டதால் . இனிய ஆரம்பம் உங்களுக்கு அவசியமான விடுப்பு முடிந்து மீண்டும் புதுத் தெம்புடன் களம் இறங்குவதால்.
நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள விடுப்பின் அவசியத்தை மிக எளிய ,இயல்பான நடையில் வழக்கம் பதிந்துவிட்டீர்கள் . இதில் //எங்கள் ஊரில் பொதுவாக எந்தப் பொருள் வாங்க வேண்டுமென்றாலும் // இந்த பகுதி ஏனோ எனக்கு ஒரு தனிப் பதிவாக இருந்தால் நன்றாய் அமைந்திருக்குமோ என்று ஒரு எண்ணம்.

இந்த வருடத்தின் பனிக்காலம் சற்றுக் கடுமையாக உள்ளதால் வீட்டில் அனைவரின் உடல் நலத்திலும் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள் . அப்புறம் முக்கியமாக காதில் எல்லாம் இருமக்கூடாது .பிறகு நான் சொல்வதைக் காதில் வாங்குவதே இல்லை என்று குமுறக்கூடாது :)

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோ
வலைச்சர அறிமுகத்திற்கு எனது இனிய வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ezhil சொன்னது…

சில நேரங்களில் முக நூலில் இருந்து விலகி நிற்பதும் ஒரு புதுப்பித்தலைத் தருகிறது என்பது புரிகிறது...எனக்கு முக நூல்தான் ஒரு புதுப்பித்தலைக் கொடுத்தது.பகிர்விற்கு நன்றி