ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

My mother, The mermaid - கொரிய திரைப்படம்



அப்பாவை குற்றம் சொல்லிக்கொண்டே, எதற்கெடுத்தாலும் கத்தும், பணத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் அம்மா யான் சூன், ஏதேனும் தவறாக செய்துவிட்டு திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பாவப்பட்ட அப்பா, இவர்களின் மகள் நா யங். ஒரு நாள் அப்பா காணாமல் போகிறார்... தன்  காதலனிடம்  தாங்களும் திருமணம் செய்துகொண்டால் இப்படிதான் சண்டையிட்டுக் கொள்வோம், நான் தனியாகவே இருக்கப் போகிறேன் என்று கோபத்தில்  நா யங் கத்த, இடத்தை விட்டு நகர்கிறான் அவன். வேலை விஷயமாக நியூசிலாந்து செல்ல வேண்டிய தினத்தில், காணாமல் போன தந்தையைத் தேடி, தனது பெற்றோர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு செல்கிறாள் நா யங்.

யா கிராமம் - கடல் அருகில், வித்தியாசமான மலைப் பாதைகள், சுவற்றிற்கு பதிலாக நேர்த்தியாக அடுக்கப்பட்ட கருங்கற்கள், தள்ளித்தள்ளி அமைந்துள்ள வீடுகள், மரம், செடி கொடிகள் என்று பளிச்சென இருக்கிறது. இவள் அம்மா வசித்த வீட்டின் முன்னே வந்து அம்மாவின் பெயரை சொல்லவும், திருமணத்திற்கு முன்பு இருந்த, கிட்டத்தட்ட இவள் வயதை ஒத்த அம்மா வந்து நிற்கிறாள்.  (குறிப்பு: இளம் வயது அம்மாவாகவும் நடித்திருப்பது நா யங் பாத்திரத்தில் நடித்திருப்பவரே.. டபுள் ஆக்ட்... )


டைரெக்டர், அவர் படம், அவர் உரிமை... பிடித்திருந்தால் ரசித்து செல்ல வேண்டியது தான்... ஆனாலும், எந்த கால இயந்திரத்திலும் ஏறாமல், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து சென்று, அந்த கால மனிதர்களுடன் வாழ்ந்து விட்டு திரும்புதலை, எதிர் கேள்வி கேட்க முடியாமல், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம்மையும் கிராமத்திற்குள் உலவ விடுகிறார்.... :) 

கடலில் முங்கி அடியில் கிடைப்பவற்றை சேகரிக்கும் பணியை செய்து வருகிறாள் யான் சூன். பதினைந்து வயது பெண்ணாக, இரட்டை ஜடையுடன், எளிமையான ஆடைகள் அணிந்து, துறுதுறுவென வீட்டு வேலைகளை செய்வது, தம்பிக்கு வேண்டியதை செய்து கொடுப்பது, தான் படித்திருக்காவிட்டாலும், அவனை படிக்க வைப்பது, அதே நேரம் அவனுடன் சண்டையிடுவது, மின்னல் வேகத்தில் தெருக்களில் ஓடி செல்வது என்று புன்னகையுடன் அத்தனை பாந்தமாக இருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் மகள் நா யங்.

அந்த ஊருக்கு கடிதங்களைக் கொண்டு வரும் போஸ்ட்மேன் , தினந்தோறும் அம்மாவுக்கு கடிதத்தை தருகிறார். தனக்கும் கடிதம் வரவேண்டும் என்று தன் சகோதரனால் தினந்தோறும் அனுப்ப சொல்லி, அதன் படி வந்து சேரும் கடிதம் அது.


ஒரு நாள், அருகில் இருக்கும் பெண்மணிக்காக தந்தி அடிக்க வேண்டிய அவசர சூழலில், முகவரியையும், தந்தியில் இருக்க வேண்டிய தகவலையும் மறக்காமல் இருப்பதற்காக வழி எல்லாம் சிறு குழந்தை போல சொல்லிக் கொண்டே செல்கிறாள். ஆனால், தந்தி அடிக்க நிரப்ப வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்பொழுது அந்த போஸ்ட்மேன் உதவுகிறார். பிறகு, தன் சைக்கிளின் பின்னால் அமர சொல்லி, அவளின் கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, அவள் பெயர் எழுதக் கற்று கொள்ளும் வரை தான் கற்பிப்பதாக சொல்கிறார்.

நோட்டுகள், புத்தகங்கள், பென்சில்,ரப்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து தினந்தோறும் எழுத பயிற்றுவிக்கிறார். யான் சூன், கடலுக்குள் மூழ்கி கிடைப்பவற்றை சேகரிப்பதோடு, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அத்தனை ஆர்வத்துடன் எழுதிப் பழகுகிறாள். இளம் வயது அப்பாவாக உள்ள போஸ்ட்மேன்  தேர்வு என்று சொல்லும் பொழுதெல்லாம், எப்படியும் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்று அவள் செலுத்தும் உழைப்பு, ஒரு கட்டத்தில் கண்ணில் தட்டுப்படுகின்ற எழுத்துகளை எல்லாம் பிழையின்றி வாசிக்க செய்கிறது.

கண்களிலும், முகத்திலும் உடனுக்குடன் யான் சூன் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள், நம் பிரியத்துக்கு உரியவளாக, மனதிற்கு நெருக்கமானவளாக அவளை காட்டுகின்றன.

ஒரு நாள் தேர்வில், வாக்கியத்தை அவன் சொல்ல சொல்ல மலர்ச்சியுடன் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, ' நான், உன்னை மிஸ் பண்ண போறேன், வேற ஊருக்கு மாத்திட்டாங்க', என்று சொல்வதை கேட்டவுடன் எழுதியதை பாதியில் நிறுத்தி, ' உடனே கிளம்படுவீங்ளா ?', என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பவளை, மெளனமாக தலை அசைத்து ஆம் என்கிறான்.


அவள் வயதை ஒத்திருந்த அம்மாவுடன் இருக்கும் பொழுது, அம்மாவின் எதிர்பார்ப்பு, வருத்தங்கள், விருப்பங்கள், கொண்டாட்ட மனநிலை, என்று சகலத்தையும் புரிந்து கொண்டு, நிகழ் காலத்திற்கு திரும்புகிறாள் நா யங்.

-- இதற்கு அடுத்த காட்சியில், நிகழ்காலத்தில், வேறொரு நண்பர், நா யங் - கின் அம்மா, காதலன் உடன் கிராமத்திற்கு வருகிறார். அங்கு கோபித்துக் கொள்ளும் அம்மாவை சமாதானப்படுத்தி, உடல் நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் அப்பாவிடம் அழைத்து செல்கிறாள்.


இறுதிக் காட்சியில் இவள் குழந்தைக்கு புகைப்பட ஆல்பத்தை காட்டி, ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வரும்பொழுது, அந்த கிராமத்தில் முதன் முறையாக பேருந்து விடப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், அப்பா தான் என உறுதி படுத்திக் கொள்வதற்காக, அம்மாவை மொபைலில் அழைக்கிறாள். வழக்கம் போல சிடுசிடுப்புடன் பதிலளிக்கிறாள் அம்மா, புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறாள் மகள்.

கிராமத்தில் இளம் வயதில், ஒருவரை ஒருவர் சந்திப்பதில் கூட அளவில்லாத மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த அம்மாவும், அப்பாவும், அப்படியே இருந்திருக்கலாம் என்று பேராசை எழுகிறது.

பார்த்து பார்த்து வரையப்பட்ட கோலம் போல, உருவாக்கப்பட்டப் பாத்திரம் இளம் வயது அம்மா பாத்திரம்..........
பட்டாம்பூச்சியாகப் பறந்து திரிகின்ற பருவம் - நாம் அனைவரும் கடக்கின்ற ஒன்றே.
அந்தப் பருவத்தின் இயல்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிலர், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.


இயக்குனர் :  Park Heung-shik


















2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான படம். அற்புதமான விமர்சனம். நமது தமிழ் திரைப்படத் துறையினர் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறார்கள். கதை பற்றி சிந்திப்பதேயில்லை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani

thambu சொன்னது…

காலம் ஒரு கண்டிப்பான வாத்தியார். அவருக்கு ஆண் ,பெண்,நல்லவன்,கேட்டவன் ,ஏழை ,பணக்காரன் இப்படி எந்தப் பாகுபாடும் இல்லை. கனத்துப் போன மனதுடன், களைத்துப் போன நினைவுடன் நம்மை வெளியே அனுப்பும் ஒரு படத்தைப் பற்றிய அருமையான விமர்சனம் . நன்றி தீபா .