வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சைக்கிள் ஓட்டப் பழகிய நாள்...


மூன்றாம் வகுப்பு, முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமான நாளிலேயே சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. பெற்றோரிடம், தெரிவித்த பொழுது, மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம், என்று சொன்னதைக் கேட்காமல், பாட்டியின் சுருக்குப் பையை உருவி, ஐம்பது பைசாவை மட்டும் எடுத்துக் கொண்டு, காதில் விழுந்த திட்டுக்களைப் பொருட்படுத்தாமல் வெளியே ஓடினேன். உதவிக்கு, என்னை விட பெரியப்  பிள்ளைகள் இரண்டு பேரை, அழைத்துக் கொண்டு வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் கடைக்கு சென்றோம். ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது பைசா, என்று எழுதப்பட்ட சுவரை வாசித்துக்கொண்டே, அங்கு இருந்த நோட்டில், சைக்கிள் எடுக்கும் நேரத்தை பதிவு செய்ததும், இரண்டு பக்கமும் கால் எட்டும் படி உள்ள குட்டி சைக்கிளை உருட்டிக் கொண்டே வெளியே வந்தேன். ஒரு மணி நேரம், உடன் இருக்க போகிற வண்டி என்ற மகிழ்ச்சியுடன் இருக்கையில் உட்கார்ந்தேன்.

ஒரு காலால் பெடலை மிதிக்க, மறு கால் தரையில் ஊன்ற என்று, இருக்கிற தெருவை எல்லாம் இருவருடனும் சுற்றி வந்ததில், ஒரு மணி நேரம் ஓடிப் போய் இருந்தது. மீண்டும், வீட்டுக்கு ஓடி வந்ததும், சுருக்குப் பையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த பாட்டியிடம், கெஞ்சி, கொஞ்சிக் கூத்தாடி ஒரு ரூபாயை வெற்றி கரமாக பெற்றுக் கொண்டு, ஓடினேன்.

திரும்பவும், அதே சைக்கிள், தோழியர்கள், இரண்டு பக்கமும் சைக்கிளை பிடித்துக் கொண்டு ஓடி வர, நான் மெது மெதுவாக, ஒரு காலை தரையில் ஊன்றும், நேரத்தை குறைத்துக் கொண்டு, சில நொடிகள் வரை பெடலிலே கால்களை வைக்கப் பழகி இருந்தேன். பக்கத்திலே ஓடி வந்ததை தவிர, அவர்கள் இருவரும் செய்த முக்கியமான வேலை, மாறி, மாறி, என் முதுகில் அடித்து, 'இடுப்பை வளைக்காத, இடுப்பை வளைக்காத', என்று திரும்ப திரும்ப மந்திரம் போல சொல்லிக் கொண்டே ஓடி வந்தது.

ஓடி வந்தக் களைப்பில், அவர்கள் இளைப்பாற அமரும் நேரத்தில், சைக்கிளை சில நொடிகள் வரை பெடலில் இருந்து கால் எடுக்காமல் ஓட்டப்  பழகி இருந்தேன். ஆனால், இந்த ஹாண்டில் பார், மட்டும், எப்படி வளைத்தும், கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் ஒரு வீட்டு வாசலில் வளைந்து போய் என்னை கொண்டு போய் நிறுத்தும். மீண்டும், அவர்கள் பக்கவாட்டில் ஓடிவர, வீதியில் ஓட்டுவதும், யார் வீட்டின் வாசலிலாவது போய் நிற்பதும் என்று மாற்றி மாற்றி தொடர்ந்து நடக்க, இரண்டு சக்கரங்களும் கொஞ்சம், கொஞ்சமாக சொல்பேச்சு கேட்க ஆரம்பித்தன.

இரண்டாவது மணி நேர முடிவில், இவர்கள் இருவரின் உதவியின்றி, நிமிடக் கணக்கில், ஓரளவு தெருவிலேயே சரியாக ஓட்ட முடிந்திருந்தது. அப்படியே, வீட்டிற்கு சென்று, மூன்று மணி நேரத்தில் கற்று கொண்ட சாதனையை, சைக்கிளை ஓட்டிக் கொண்டே பகிர்ந்த நொடி, நினைவில் கணீர் என்ற மணி சத்தத்துடன் தெளிவாக உள்ளது.

அதன் பிறகு வந்த நாட்கள், அதை விடப்  பெரிய சைக்கிள் எடுப்பதும், சுற்றுவதும், சில முறை கீழே விழுந்து, பெற்ற காயங்களுமாகப்  போனது. அடுத்து, நான், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, தம்பிக்கு பழகிக் கொடு என்று, வீட்டில் சொன்ன பொழுது, இன்னும் பெருமிதம். எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட அதே விதி முறைகளின் படி, அவன் இடுப்பிலே, இருக்கிற கடுப்பை எல்லாம் காட்டி,  'இடுப்பை வளைக்காத, வளைக்காத', என்று கத்திக் கொண்டே, ஓடி ஓடிக் கற்றுக் கொடுத்தேன்.

விருப்பப்பட்டு கற்றுக் கொள்ளும் நேரங்களும், பாடங்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.

கருத்துகள் இல்லை: