வெள்ளி, 29 டிசம்பர், 2017

2017

2017... எழுத்து மட்டுமல்ல, நட்பு வட்டத்தில் பேச்சும் கூட மிகக் குறைந்து போனது. மறுபுறம் புத்தகங்களைப் போலவே மனிதர்களைப் பற்றிய வாசிப்பும் கூடுதலானது.
இந்த வருட சுதந்திரதின விழாவில், நெஸ்ட் மழலையர் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்வில் முதன்முறையாகக் கொடியேற்றியது தித்திப்பான அனுபவம். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி மெல்லியக் கூச்சத்துடன் புன்னகைத்தேன் .
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் சிறுநீரகப் பிரச்சனையால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அம்மாவுடன் பத்து நாட்கள் இருந்ததை, இந்த வருடத்தின் உருப்படியான செயல்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்.
அதே மாத இறுதியில், மலேஷியா, சிங்கப்பூர் சுற்றுலா. கிளம்புவதற்கு சில நாட்கள் முன் சைனஸ் தொந்தரவிற்காக எடுத்துக் கொண்ட மருந்து கிளம்பும் நாளின் காலையிலிருந்து மூக்கின் வழியாக நீராக வெளியேறத் துவங்கியது. மாலை ஏர்போர்ட்டில் சளியை நிறுத்துவதற்காக மாத்திரையை விழுங்கிப், போர்த்திக் கொண்டு விமானத்தில் ஏறியாகி விட்டது. மூன்றரை மணி நேரப் பயணம். உள்ளே கடும் குளிரால் நடுங்கிக் கொண்டே, நாவறட்சியால் அவ்வப்போது குடித்த குடிநீரை விட, வெளியேறிய நீர் இரண்டு மடங்கானது. ஒரு கட்டத்தில் ஓய்வறைக்கு சென்று திரும்பிய என்னால் நிற்க முடியாமல் சரிய, பதறி ஓடி வந்த விமானப் பணிப்பெண்கள் முதலுதவி செய்தனர். வானத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் தனியாகப் போகப் போகிறோம் என்றெல்லாம் அந்த கணத்தில் தோன்றியது. உடனடியாகக் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் விரைவில் சுய உணர்வு வந்தது. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குப் போறது வாஸ்தவம் தான். இதுக்காக நாமம் இங்கு சிகிச்சைப் பெறத்தான் வரணுமா என எனக்குள்ளே சுய பகடி செய்தேன். ஓய்வுக்கு இடையே ஊர் சுற்றியும் பார்த்தேன்.
இது வரை எட்டு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. புத்தகம் வெளியிட்டே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அவசரமும் இல்லை. இன்னும் இன்னும் எழுத்து நடை மேம்பட்டு எனக்கே திருப்தி தரும் ஒரு நாளில், புத்தக வெளியீடு இருக்கும்.
வாசிப்பிற்கு நிகராக படங்கள் பார்ப்பதும் வழக்கம். இவ்வருட மத்தியில் அகிரா குரசேவா படங்களை பார்க்கத் துவங்கினேன். ஆனால் ஈர்த்தது Toshiro mifune. முகம், தோற்றம், பார்வை, நடை, நடிப்பு என எல்லாமே தனித்துவம் நிரம்பியது. சோர்வுறும் போதெல்லாம் இன்றும் அவர் நடித்தப் பாடங்களை பார்க்கிறேன்.
மறைந்த என் தாத்தாவை விட மூன்று வயது இளையவரான Mifune 1997இல் காலமானார். என் குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர இது வரை நேசமுடன் பழகிய, பழகிக் கொண்டிருக்கிற
மனிதர்களின் சாயல்களால் நிரம்பி வழிகிறார் என் பிரிய Toshiro mifune,
தரமான மனிதர்கள் நம் நிறைகளை பிறரிடம் சொல்லி, குறைகளை நம்மிடம் சொல்வர். அத்தகைய அபூர்வ மனிதர்களின் நட்பு எனக்குக் கிடைத்தப் பொக்கிஷம்.
என்னளவில் அப்படித்தான் நானும் இருக்கிறேன்.
அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த வெகு சில வெண்ணிலாக்களைக் கொண்டிருக்கிறது என் வானம்.
ராகுல் சங்கிருத்தியாயன் காட்டிய வழியில் தனியாக சென்ற வாரம் மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணம் பெரும் ஆசுவாசத்தை அளித்தது.
யாரையும் பொய்யாக குளிர்விக்கவோ, மெய்யாக நோகடிக்கவோ செய்யாத சூழலை அமைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
இருப்பைக் காட்டிக் கொள்ள, மதிக்காத மனிதர்களிடம் பற்களைக் காட்டாதப் பழக்கம் இடுகாடு வரைத் தொடரும்.
ஓங்கி வளர்ந்த பனை மரத்தைப் போல, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பழகும் சிலராலே இங்கு மழை பொழிகிறது.
எனக்குள்ளே இப்போது பெய்து கொண்டிருப்பதைப் போல!
2018 ... வேறெப்படி எல்லாம் செதுக்கப்போகிறது என்கிற ஆவலுடன் காத்திருக்கிறேன்.