வியாழன், 22 மே, 2014

:)

விடுமுறைக்காக விருதுநகரில் தாத்தா வீட்டிலிருந்த வருணை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். 25 நாட்கள்... மொபைலில் கூட பேசவில்லை. எட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பையனுக்கு, பிரிந்திருந்த நாட்களில் அம்மாவை பார்க்கனும் என சொல்ல வேண்டாம், பேசனும் என கூடவா சொல்லத் தோன்றாது. இதெல்லாம் பெருமை என்று எண்ணியிருந்ததால், இந்த நாட்களில் வீம்பாக நானும் பேச முயற்சிக்கவில்லை. ஆனால், நேற்று என்னவோ தாங்கிக் கொள்ளவே முடியாததால், கோபத்தில் ஏதேதோ திட்டினேன். ஏதோ விளக்கம் சொல்ல வாயெடுத்தவனை, பேசாதே என்று கோபத்துடன் அதட்டி விட்டு, கைப்பையில் இருந்த பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பேருந்து ஏதோ அக்னிக் கடலில் மிதப்பது போல சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் நெருங்கிக் கொண்டிருக்கையில், எனது வலது முழங்கையை அவனது இரு விரல்களால் தட்டினான். வருண் பக்கம் திரும்பி என்னவென்பது போல பார்த்தேன். முகம் கொள்ளாதப் புன்னகையுடன் இருந்தான். அவனது வலது கையின் ஆள்காட்டி விரல் ஜன்னலுக்கு வெளியே சுட்டிக் காட்டிய திசையில், சில நூறு அடிகள் தள்ளி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மெலிதாகப் புன்னகை படர்ந்த முகத்துடன், வருண் முகத்தைப் பார்க்க, சமாதானப்படுத்தி விட்டோம் என்று  பலத்த சிரிப்புடன், என் வலது கையைப் பிடித்துகொண்டு, மீண்டும் ரயிலைப் பார்க்க ஆரம்பித்தான். சிறிது தூரம் வரை ரயிலுடன் வெயிலை மீறி குதூகலத்துடன் பயணித்தோம்.

திங்கள், 12 மே, 2014

பாலுக்கு அடுத்து இட்லி - பாலுக்கு முன்பும் இட்லி



பிறந்தக் குழந்தை பாலிற்கு பிறகு திட உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கையில் முதலில் சாப்பிட சகலரும் உண்ணக் கொடுக்கும் உணவு இட்லி. ஆவியில் வேக வைத்து, எளிதில் ஜீரணமாவதாலேயே, திரவ ஆகாரம் மட்டுமே எடுத்துக் கொள்ள நேரும் முதுமை அல்லது நோயினால் அவதிப்படும் காலங்களில், திரவ உணவிற்கு முன்பாக கடைசியாக எடுத்துக் கொண்ட திட உணவாகவும் இட்லியே இருக்கிறது.( பாலுக்கு அடுத்து இட்லி - பாலுக்கு முன்பும் இட்லி... என்ன ஒரு கண்டுபிடிப்பு...! ) விருந்து, விடுதி, வீடு, உணவகம் என்று எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி தன்னை நுழைத்துக் கொள்ளும் வெள்ளைக்காரன். சிற்றுண்டி என்று காணப்படும் பட்டியலில் முதல் இடத்தை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இட்லியின் இடம் எளிதில் அசைக்க முடியாதது. உடன் வைக்கப்படும் விதவிதமான சட்டினி, சாம்பார், பொடி அத்தனையும் கொடுக்கும் விலைக்கு ஏற்றார் போல கூடவோ, குறையவோ இருக்கும்.



எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மதிய உணவாக என் டிபன் பாக்சை பல நாட்கள் அலங்கரித்திருக்கிறது  இட்லி. காலை உணவாகவும், மதியம் கொடுத்து விடவும், எளிமையான ஒன்றாக இருந்ததால் வாரம், மூன்று அல்லது நான்கு முறை இரண்டு வேளைகளிலும் , அதுவும் பெரும்பாலும் தேங்காய் சட்னியுடன் உள்ளே செல்லும் ஒன்று. மதிய உணவு, மதிய நேரத்தில் சமைக்கப்படும் வீடுகளில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் காலை உணவையே, மதியத்திற்கும் எடுத்து சென்றதில் நானும் ஒருத்தி. எத்தனையோ முறை, "பழைய சோற்றை தாளிச்சு வைங்க, இல்லாட்டி வெறும் கஞ்சிப் பிழிஞ்சு மோர் ஊத்தி வைங்க, அது அமிர்தம், இந்த  இட்லி வேணாம்" என்று சொல்லியும், எப்போதும் கேட்டதில்லை என் அம்மா.
மகள் சொல்லை கேட்காத தாய் :P
ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளியில் படிக்கும் பொழுதெல்லாம் வீட்டில் கிரைண்டர் இருக்காது. வாரத்திற்கு மூன்று முறை, ஊற வைத்த அரிசியையும், உளுந்தம்பருப்பையும், கழுவி சுத்தம் செய்து, மாலை நேரங்களில் உரலில் ஆட்டி எடுக்கும் அம்மா, அமர்வதற்கென்றே, உரலின் உயரத்திற்கு ஏற்றார் போல ஒரு பலகை இருக்கும். ஒரு பக்கம் ரேடியோ பாடிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் மரத்தடியில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் வாசல் அருகில் கிடந்த உரலில், மாவு ஆட்டிக் கொண்டிருக்கும் அம்மா, இந்தக் காட்சிப் பல வருடங்கள் தொடர்ந்தது. நான் எதிர்த்துப் பேசும் பொழுது, சேட்டை செய்வதாக நினைக்கும் நேரங்களில், என்னையும் தண்டனையாக மாவாட்ட சொல்வார் அம்மா. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, அரைத்தது போதுமா, போதுமா என்று முழங்கை வரை மாவை கையில் ஒழுக விட்டுக் கொண்டே எடுத்து சென்று கேட்பதற்கு, பதில் சொல்ல எரிச்சலுறும் நேரங்களில், இரண்டு திட்டுத் திட்டி விட்டு என்னிடம் இருந்து ஆட்டு உரலை அவரே வாங்கிக் கொள்வார். எப்பொழுதாவது உளுந்து அதன் தன்மைக்கு ஏற்ப அதிகமாகப் பொங்கும், அந்த நேரங்களில் அரிசி மாவுடன் கரைக்க எடுத்துக் கொண்டது போக மீதி உள்ள உளுந்தம்மாவில், வெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி எல்லாம் கலந்து குழைய வைத்துக் கொடுக்கும் உளுந்தங்கஞ்சி, அதன் சர்க்கரைப் பொங்கலைப் போன்ற இனிப்பின் காரணமாகவே, இரண்டு வாய்க்கு மேல் இறங்க மறுக்கும். ( இந்த மாவை இப்படி மாற்றுவதற்கு பதில், மிளகு, வெங்காயம், உப்பு  போட்டு வடையாகத் தட்டித் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் இப்பொழுது ஏற்படுகிறது.)

இதே, வெயில் காலத்தில் ஏதேனும் பகல் பொழுதில், கஞ்சியைப் பிழிந்து, அத்துடன் உப்பு, மிளகாய்ப்பொடி, சீரகம் கலந்து உரலில் இட்டு வடகத்திற்கு ஆட்டும் பொழுது, வலிய சென்று அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்வேன். ஆட்டும் பொழுதே வாயில் உப்பு இருக்கா என்று சுவைத்துப் பார்த்து சோதிக்கும் பொழுதெல்லாமே விதவிதமான ருசியைக் கொடுக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இருப்பதற்காக மட்டுமே விரும்பி அந்தப் பலகையில் அமர்ந்துள்ளேன்.
முதல் நாள் ஆட்டிய மாவு காலையில் வேகவைத்து எடுக்கப்படும் இட்டிலி காலை, மற்றும் மதிய உணவாக இருந்து, அதற்கடுத்த நாள் காலையில், தோசையாக மாறும். எனக்கு, இந்த கம்பளிப்புழு, வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போல இருக்கும், ஒரே மாவில் தயாரான பிடிக்காத இட்லி, அடுத்த நாளே நாவை சுண்டி இழுக்கும் சற்று புளித்த சுவையுடன் தோசைக்கு மாறுவது.
அந்த நாட்களில், கொடுமைக்கு என்றே, மதிய நேரத்தில் உடன் பயில்வோர் கொண்டு வரும் லெமன் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, போன்ற எதுவுமே அழகாக தெரியும் இட்லியின் அருகில். ஏழு, எட்டாம் வகுப்புகள் செல்ல செல்ல, உடன் இருக்கும் தோழியருடன் கொஞ்சம் என்னுடயதைக் கொடுத்து, அவர்களுடையதை எடுத்து என்று கொஞ்சம் மாற்றிக் கொள்வேன். கல்லூரி நாட்களில், காலையில் இட்லி என்றால் காலையில் சாப்பிடுவதோடு சரி,  மதிய நேரங்களில் உடன் சாப்பிடுபவர்களிடம், வலுக்கட்டாயமாக கூட மாற்றி, வேறு உணவை சாப்பிட்டு இருக்கிறேன்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் என்று பத்து நாட்கள் ஏதேனும் கிராமத்தில் தங்க நேர்கையில் , காலை உணவாக இட்லி பரிமாறப்படும் பொழுதெல்லாம், விரதம் என்று சாப்பிடாமலே இருந்திருக்கிறேன்.

விஷேச வீடுகளில் இலையில் வைக்கும் முன்பே கை நீட்டித் தவிர்க்கும் உணவாகவும், உணவகங்களில், தவறியும் ஆர்டர் செய்யாத ஒரே பதார்த்தம் இட்லி.

திருமணத்திற்குப் பின், அந்தப் பாத்திரத்தை உபயோகிக்கவே இல்லை. மகனிற்கு  திட உணவு ஊட்டுவதற்காக இட்லிப் பாத்திரத்தை சுத்தம் செய்து, அதன் இரண்டு தட்டுகளில் பரத்துவதற்காக வெள்ளைத்துணியை அளவெடுத்து வெட்டி, சுத்தம் செய்து, அரைத்த மாவை ஊற்றி, வெந்த இட்லி திருப்தியாக வராததால், திரும்பவும், பாத்திரம் மேலே போனது. அவனுக்கு மட்டும் கடைகளில் வாங்கிக் கொடுப்பதோடு சரி. பழையபடி இட்லி வாசமற்ற சமையலறை ஆனது.

பல முறை எடைக் குறைக்கும் வழிகளில், ஆவியில் வேக வைத்த இட்லி நல்லது என்பதை வாசித்தாலும், வேப்ப இலையைக் கூட தின்னத் தயார். இட்லி ..ம்ம்ம்ஹ்ம்ம்.... இதற்கு பதிலாக இரண்டு கிலோ எடை கூடுதலாக கூட இருந்துவிட்டுப் போகிறேன் என்று தான் இருந்து வருகிறேன்.

காய்ச்சல், போன்று எந்த ஒரு வியாதி வந்தாலும், எழுதிக் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுடன் மருத்துவர் தவறாது இட்லியை உண்ண சொல்லும் பொழுது, வியாதியை விட கொடுமையாக தோன்றி இருக்கிறது, அதை உண்ண வேண்டும் என்று நினைவு.

 தற்பொழுது எளிதில் அரைத்து எடுக்க நவீன கிரைண்டர் உள்ளது. அரைக்க முடியாத நேரங்களில் வாங்கி உபயோகிக்கக் கிட்டத்தட்ட ஒவ்வொரு தெருவிலும் யாரேனும் ஒருவராவது இன்ஸ்டன்ட் இட்லி மாவு என்று அரைத்து விற்பனை செய்கிறார். இதுவும் இல்லை என்றால், பலசரக்குக் கடை உட்பட பல கடைகளிலும் கிடைக்கிறது, தயாரித்த தேதி குறிப்பிட்ட பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மாவு என்று எளிதில் நம் கை எட்டும் இடங்களில் தாராளமாகக் கிடைக்கிறது. இணையத்தில் பார்த்தால்,எண்ணற்ற வகைகளில் செய்முறை விளக்கங்களுடன் காணப்படும் படங்கள், இட்லியை இப்படி எல்லாம் மாற்ற முடியுமா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எப்படி இருந்தாலும், பிடிக்காததை என்ன செய்தால் என்ன என்று போய் விடுவேன். காலத்திற்கு ஏற்றபடி, நவீனமாக நுழைந்து, எளிதாக எட்டும் உயரத்தில் புன்னகைத்துக் கொண்டே தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது  இட்லி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 எத்தனை தினுசு தினுசாக தொட்டுக் கொள்வதற்கென்று செய்து, சுவையாக இட்லியை வேகவைத்து ஆவிப் பறக்க பரிமாறினாலும், தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்ட நாட்களில் மூக்கில் ஒட்டிக் கொண்ட வெறுப்பு வாசம், இன்னுமும்  உள்ளே நுழைய விசா கொடுக்க மறுக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு மூன்றாம் வகுப்பு படிக்கும் வருண்  " அம்மா ப்ளீஸ் பிரெண்ட்ஸ் எல்லாம் இட்லி எல்லாம் கொண்டு வர்றாங்க,  எனக்கும் ஒரு நாளாச்சும் இட்லி வச்சு விடுங்க..... "  .............................. என்றதும்
.................................
தலையில் வைத்திருந்த கையை எடுத்து விட்டு, இட்லி பாத்திரத்தை எடுத்து சுத்தப்படுத்தத் தொடங்கினேன்
என் பிரியம், ஆசை, விருப்பம் எல்லாம் பிள்ளைக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காமல் இருக்கும் ஒன்று எனக்கு ஆகப் பிடித்ததாக இருக்கலாம். என் குழந்தை என்று வருகையில், அவனின் மீதிருக்கும் அதீதப் பிரியம் காரணமாக, உணவு என்ற விஷயம் மட்டுமில்லை, எத்தகைய முரண்பாடுகளையும் எளிதில் தள்ளி வைத்து விட்டு, எல்லா நொடிகளிலும் நேசத்துடன் மட்டுமே இருக்க முடிகிறது.
நாம் விரும்பாததையும், நாம் விரும்புகிறவர்களுக்காக செய்வது மகிழ்ச்சியே!

 (மே 1 - 15 ... குங்குமம் தோழியில் வெளியானது)


செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வெறுமையும் பரிசே!


கல்லூரிப்  படிப்பை முடித்தவுடன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் கற்றுக் கொள்வதற்காக சென்ற வகுப்பில் பரிச்சயமான தோழிகளில், சம வயதில் இருந்ததாலோ என்னவோ,சுதாவிடம் மட்டும், தொடர்ந்தது நட்பு. அன்றைய நாட்களில், அதிகம் அரட்டை அடித்துப் பொழுது போக்கிய இடங்களில் அவள் வீட்டு மொட்டை மாடியும் ஒன்று. இருவருக்கும் ஏதேனும் வாக்குவாதம் வரும் நேரங்களில் எல்லாம், விஷயத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு எனக்கு மட்டுமே ஆதரவளிக்கும், சுதாவின் அக்கா ராதாவை, பார்க்கும் எவருக்கும் பிடித்துப் போகும். களையான முகத்துடன், பார்க்கும் எல்லா நேரங்களிலும் புன்னகை பூத்து இருப்பாள். இதில், பிடித்த இனிப்பென்றால், அவளுக்கு உரிய பங்கினை எடுத்து வைத்து, சுதாவிடம் எனக்கு கொடுத்தனுப்புவாள்.

ஒரு நாள் திருமணப்பத்திரிக்கையை கொடுப்பதற்காக மாலை வேளையில் அவள் வீட்டிற்கு சென்று இருந்தேன். சுதாவின் அப்பா சற்று கூடுதலாகவே வெகுளி. அவர், ' பரவாயில்லயே, பொண்ணுகளே கல்யாணப் பத்திரிக்கை எல்லாம் கொடுக்கிற அளவு முன்னேறிட்டீங்க', என்று சொன்ன நொடியில் தாள முடியாமல் நான் சிரித்ததன் காரணம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். பக்கத்திலிருந்து என்னைக் கிள்ளிய சுதாவிற்கு தெரியும். ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன்பே, வீட்டிற்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்தவள். அவளின் அக்காவின் திருமணம் முடிந்த உடன் வீட்டில் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அந்த ஆண்டிலேயே நடைபெற்ற ராதாவின் திருமணத்திற்கு சென்னையில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு ஓரிரு முறை ஊருக்கு வந்தும், சுதா வீட்டிற்கு செல்ல முடியவில்லை. பல மாதங்கள் கழிந்த நிலையில், மதுரை வந்த அன்றே, சுதா வலுக்கட்டாயமாக அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றாள். வழியிலேயே தெரிவித்ததன் சாராம்சம், ராதா கருவுற்று ஏழு மாதங்கள் சென்ற பிறகே, அவளுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தாமதமாக தெரிய வந்தும், விடாப்பிடியாக அதற்கடுத்த மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் பின் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே.

எதுவுமே செய்ய இயலாமல் போகும் இதுமாதிரி நேரங்களைக் கடப்பது என்பது, அந்த நோயின் தீவிரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

வீட்டிற்குள் சென்ற பொழுது, ராதாவின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற அவரின் அம்மா, வலிந்து உருவாக்கினப் புன்னகையுடன் வரவேற்றாள். வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையில் திரைச்சீலையை ஒதுக்கி விட்டு உள்ளே சென்ற பொழுது மொட்டைத் தலையுடன், வித்யாசமான தோற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ராதாவைக் கண்டதும், உள்ளே ஏதேதோ ஓட, திரள துவங்கியது கண்ணீர்.

'வீட்டில இருக்கவங்க தான் இப்படி இருக்காங்கன்னா, நீயாவது வழக்கம் போல பேசு', என்றாள்

சரியாக சொன்னால், இந்த வார்த்தைகளை குழறிக் குழறி துப்பினாள். சரளமாக, சிரமில்லாமல் அவள் பேசுவது போல இருந்தாலும், சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது உச்சரிப்பு.

'சரியாகிடும் க்கா', என்ற என்னை, சிரித்துக் கொண்டே, 'உங்க யாருக்கும் தெரியாது எப்போ, என்னன்னு........ எனக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி, அதுக்குள்ள உன்னிஷ்டபடி இருனு ஆண்டவன் சொல்லி இருக்கப்போ, சந்தோஷமா இருக்கேன். பையனுக்கு என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு முடிச்சிட்டேன். அம்மா, சுதா எல்லாம் என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க......... அப்புறம் சொல்லு சென்னை எப்படி இருக்கு', என்று தொடர்ந்தவளிடம், துயரத்தை முழுக்க சுமந்து கொண்டிருந்த அந்த நொடியில் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

என்ன பேசுவது என்று தெரியாமலேயே, அவளின் பரிதாபா தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் நொடிகள், யுகங்கள் போல கடந்து கொண்டிருந்தன.

மீண்டும் ராதாவே, ' எவ்ளோ நேரமாச்சு தீபா வந்து, காபி கொடுக்க முடியாது?' என்று அதட்டலுடன் தங்கையைப் பார்த்து சொன்னாள்.

ராதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மெலிதாகத் தட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது என்னால். அவளோ என் தலையைத் தடவிக் கொண்டே, 'வர்றப்போ, போறப்போ, என் பையனை ஒரு பார்வை பார்த்துக்கோ', என்றதும், கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் தளும்பியது எனக்கு. வெகு இயல்பாக என்னைத் தேற்றிக் கொண்டே, 'காபியைக் குடி', என்றாள்.

இது மாதிரியான சமயத்தில் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுக் குடித்த காபியின் ஒவ்வொரு சொட்டும், நாக்கின் நுனியிலிருந்து வயிற்றின் உள்ளே கொடிய விஷம் இறங்குவது போல இருந்தது.

கடந்த நாட்களில் நாங்கள் மூவரும் பேசி மகிழ்ந்த ஓரிரு சம்பவங்களை மிகவும் ரசனையுடன் நினைவு படுத்தினாள். கனத்த அமைதி சில நிமிடங்கள் தொடர்ந்தது. 'கிளம்புறேன்', என்று மீண்டும் அவளின் கைகளைப் பற்றி விடுவித்தேன். புன்னகையுடன் கை அசைத்தாள்.

வலிமையைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டாத ராதாவின் வார்த்தைகளைப் போலவே, உள்ளேயும் அதே வலிமை இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அந்த நொடிப் பிரார்த்தனையாக இருந்தது.

வெறுமையால் நிரம்பிய வித்யாசமான மனநிலையோடு வீடு வந்தடைந்தேன்.

அதன் பிறகு சில மாதங்களில் ராதா இறந்த பொழுது சென்னையில் இருந்தேன். எட்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. தற்பொழுது அந்த குடும்பம் மதுரையில் இல்லை.

இன்றும் வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகளின் பொழுது, சிரித்துக் கொண்டிருக்கும் ராதாவின் முகம் மனதில் வந்து சொல்லும் செய்திகள் பலவற்றை மொழி பெயர்க்கத்தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.

அபூர்வமாக என்னை பாதிக்கும் ஏதேனும் சம்பவத்தின் பொழுது சூன்யத்தின் மத்தியில் இருப்பதாகவே தோன்றும். அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலாகவே இருந்தாலும், வெற்றி பெறப்போவது நான் தான் என்ற நினைப்பில் எதிர் கொள்வதால், போராட்டம் பழக்கப்பட்டதுடன் மோதுவது போல் இருக்கும். சமயங்களில், 'வெறுமை', மற்றைய உணர்வுகளை விட தொடர்ந்து நீடித்தால், எதையுமே கண்டு கொள்ளாமல் எளிதாகப் பயணிக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு.

வெறுமையை நமக்குப் பரிசளிப்பவர்கள் பெரும்பாலும், நம் பிரியத்துக்கு உரியவர்களாகவே இருக்கிறார்கள்.
( ஏப்ரல் 16 - 30...குங்குமம் தோழியில் வெளியானது)