சனி, 23 மார்ச், 2013

யார் குற்றவாளி?

                                              


                                         ஏழு, எட்டாம் வகுப்பு படிக்கும் கால கட்டங்களில், என் தம்பி உடன் விளையாடுபவர்களில் ஒருவனாக எனக்கு அரசுவை' தெரியும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கே உரிய துருதுருப்புடன், படு வேகமாக பந்தை எறிந்து விளையாடுவான். நான் கல்லூரி படிப்பை முடித்து, வீட்டில் இருந்த ஒரு நாளில், வாசித்த செய்தி தாளில், அரசின் புகைப்படத்துடன், பல வீடுகளில் அவன் திருடுவதை வழக்கமாகக் கொண்டு, அதில் கிடைத்தவற்றில், என்னென்னவோ வாங்கியதாக நீண்டு கொண்டு போனது அந்த செய்தி. அடுத்தத்  தெருவில் இருக்கும், அதுவும், காவல் துறையில் பணிபுரியும் தந்தை, நேற்று வரை, இதே வீதியில் சிரித்துக் கொண்டே நடமாடியவன், இன்று செய்தித்தாளில், அவன் மீது சுமத்தப்பட்டக் குற்றங்களோடு, பார்த்து அதிர்ச்சிக்குள்ளாயினர்  எங்கள் பகுதி மக்கள். வழக்கம் போல, தொடர்ந்து, அவரவர் பங்குக்கு, அவனின் அந்தரங்களை தோரணம் கட்டித் தொங்கவிட்டு  கிடைத்தப் பொழுதுகளை தின்று கொண்டிருந்தனர்.


 வெளியில் வந்த அரசு, சிறிது நாளில் மீண்டும் தன் வேலையைக்' காட்ட, அவ்வப்பொழுது உள்ளே போவதும், வெளியே வருவதுமாய் இருந்தான். இந்நிலையில், மூன்று வருடங்களுக்கு முன்பு, மதுரையில் என்கவுண்டரில், போட்டுத்தள்ளப்பட்ட ரவுடிகளில் இவனும் ஒருவன். சில நாட்களுக்கு முன்பு, ஒட்டப்பட்டு இருந்த மூன்றாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இவன் படத்துடன் இருந்த வாசகங்களில் ஒன்று "வாழ்ந்தால் இவனைப் போல சிங்கம் மாதிரி வாழவேண்டும்". போனவன் போய் விட்டாலும், இன்றும் அவனை பெரிய சாகசக்காரன் அளவிற்கு புகழ்ந்து தள்ளப்பட்டிருக்கும் எழுத்துக்களில், அவன் மீது கொண்டிருக்கும் நண்பர்களின் அபரிமிதப்  பிரியம் தெரிந்தாலும், அதையும் விட எவனோ ஒருவன் மிதமிஞ்சி ரசிக்க ஆரம்பித்துவிடுவானோ இந்த வரிகளை என்ற பதட்டமும் தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.


ஒருவர் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது, எனக்கு அவரை அப்பவே தெரியும் என்பதை பார்க்கும் நேரங்களில், இது போன்ற குற்றவாளிகளைத் தெரிந்தவர்கள், பிறரிடம்  பகிர்ந்து கொள்வது அரிது.
மேலும், எழுத ஆரம்பித்த உடன், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எந்த சிக்கலுக்குள்ளும் மாட்டிக்கொள்ள விரும்பாததாலும், இதனை முதலில் எடுத்துள்ளேன்.


என்னுடைய சில கேள்விகள்:

1. திருட்டு வழக்குகளுக்காக என்கவுண்டர், என்றால், இவனை விட பல்லாயிரம் மடங்குகளில் கொள்ளை அடித்தவர்களில், எத்தனை பேரை மேலே அனுப்பி இருக்கின்றனர்?

2. தவறு செய்பவர்கள் திருந்தி வாழும் வகையில் சட்டம் இல்லையா?
முதன் முறை செய்யும் தவறு, அடுத்தடுத்து செய்யப் போகும் தவறுகளுக்கான விசிட்டிங் கார்ட் ஆக இருக்கிறதா?

3. திரைப்படங்களில், நாம் ரசித்துக் கொண்டாடும், ஆன்டி-ஹீரோக்கள், அவன் மீது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்றும், இது போன்று பல படங்களை இயக்குபவர்கள், பார்ப்பவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில், அரசு போன்றவர்கள் உருவாவதில் பங்கு வகிக்கிறார்கள். சரிதானே?

12 கருத்துகள்:

Unknown சொன்னது…

முதல் பதிவு..நன்றாக உள்ளது..தொடர்ந்து எழுதவும்..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

தொடருங்கள்.. பதிவுகளை. வாழ்த்துகள்.

cheena (சீனா) சொன்னது…

488அன்பின் தீபா நாகராணி

வலைத்தளத்திற்கு வரவேற்கிறேன் - முதல் பதிவு நன்று - தொடர்க - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பெயரில்லா சொன்னது…

hmm superb

kumaresan சொன்னது…

காவல்துறையைச் சேர்ந்த உங்கள் தந்தையிடமே கேட்டறியலாமே... எப்படிப்பட்ட நிலைமைகளில் என்கவுன்டர் முடிவு செய்யப்படுகிறது என்று. மனித உரிமை அமைப்புகளைச் சேர்நத்வர்கள் இது வரையில் நடத்திய ஆய்வுகளில் கூறப்படுவது: ஆகப் பெரும்பாலும் நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாத வழக்குகள், காவல்துறை உள்ளிட்ட மேலிடத் தொடர்புகள் அம்பலமாகக்கூடிய பின்னணிகள், புதிய அரசு அல்லது புதிய அதிகாரி பொறுப்பேற்கிறபோது தன்னால் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று காட்டிக்கொள்வதற்கான முனைப்புகள் என்பன போன்ற நிலைமைகளில்தான் என்கவுன்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்யப்படுகிறது.

முன்பொருமுறை திரைப்படங்கள் பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்: "இன்று தமிழ் சினிமா கோடிகளின் கையிலும் கேடிகளின் கையிலும் சிக்கிக்கொண்டிருக்கிறது.” யாரிடமிருந்து படம் எடுப்பதற்கான பணமும், மற்ற அடியாள் உதவிகளும் கிடைக்கப் பெறுகிறதோ அவர்களை நாயகர்களாக்குகிற போக்கு தொடங்கியிருக்கிறது. தனது சமூகவிரோதச் செயல்களுக்குக் கேடயமாக மக்களைப் பயன்படுத்தி, அதற்காக அவர்களுக்கு சில பல உதவிகளையும் செய்கிற தாதாக்களை, ஏதோ மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தாதாக்களாக அவதாரம் எடுத்தவர்களாகக் காட்டுகிற ‘நாயகன்’ போன்ற படங்களின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கிறவர்கள் உங்கள் தம்பியின் நண்பன் போல் இன்னொரு அடியாளாக அல்லது அடியாள் கும்பல் தலைவனாகத்தான் வர வேண்டும் என்பதில்லை. தான் செய்கிற எந்தவொரு குற்றச் செயலுக்கும் (லஞ்சம் வாங்குவது, கலப்படம் செய்வது, பதுக்கல், வழிப்பறி ...) இப்படிபப்பட்ட “நியாயமான” காரணங்களை இட்டுக்கட்டுகிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் இப்படிப்பட்ட படங்கள் உதவக்கூடும்.

kumaresan சொன்னது…

வலைப்பூ உலகில் உங்கள் பதிவுகள் காட்டுப்பூக்களாய் செழிக்கட்டும்.

விச்சு சொன்னது…

வலைப்பதிவிற்கு வந்ததற்கு முதலில் வாழ்த்துக்கள் தீபா. முதல்பதிவும் நல்ல கருத்துள்ள பதிவுதான். சிறுவயதிலேயே சில விசயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம்.

விச்சு சொன்னது…

http://alaiyallasunami.blogspot.com/2011/12/blog-post_31.html
இந்த இணைப்பை கிளிக் செய்து தங்கள் பிளாக்கினை கொஞ்சம் மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும். கருத்து இடும்போது வரும் word verification நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும். மேலும் தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10 போன்றவற்றில் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டால் இன்னும் பல வாசகர்களுக்கு சென்றடையும்.

Unknown சொன்னது…

வாங்கோ அக்கா, வலைபக்கமும் கலக்க கலக்கல் வாழ்த்துகள் உங்களுக்கு... பாலோவர் விட்ஜெட் வையுங்க அக்கா, உங்கள் பதிவுகளைத்தொடர வசதியாய் இருக்கும், அதோட வேர்ட் வெரிபிகேஷன ரீமூவ் பண்ணுங்க, கமெண்ட் கொடுக்க வசதியா இருக்கும்...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை மகளுக்கு வாழ்த்துகள். நன்கு எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.
மிக்க மகிழ்ச்சி.
Please avoid Word Verification in Comment Side.

Vaanavill வானவில்! Sign of subtle! சொன்னது…

http://m.artofliving.org/prison-program-home

நநதகுமார் சொன்னது…

நீங்கள் குறி்ப்பிடுவது உசிலம்பட்டி அருகே உள்ள ஆர்.வி.பட்டியைச் சேர்ந்த கவியரசுவை என நினைக்கிறேன். ஏட்டு மச்சக்களையின் மகன் கவியரசு முதல் முறை திருடும் போது அவனுடைய வயது 15 முதல் முறை திருடும் போது அவர் தந்தையினால் வழக்கு பதிவு செய்யப்படாமல் காப்பற்றப்பட்டார். அவர் என்கொளண்டர் செய்யப்பட்டு இறந்தவரை அவர் மீது மதுரை, மதுரை புறநகர் பகுதியில் சுமார் 180 வழக்குகள் இருந்தது. கஞ்சா, போதை பொருள்பழக்கங்கள், சிறையில் தன்னுடன் பழகிய கூடல்நகர் பகுதியைச் சேர்ந்தவரது வீட்டுக்கு அடிக்கடி சென்ற கவியரசு நண்பரது மனைவியை 2 குழந்தைகளுடன் தன்னோடு வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டது.
முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணை அடிக்கடி தேனி பகுதியில் உள்ள வீட்டுக்கு மிரட்டி அழைத்துச் சென்று வாழ்க்கை நடத்தியது. மும்பையில் ஒரு ஆயுதபடை காவலரை கொலை செய்தது. இன்னும் பல குற்றங்கள்... இறுதியில் என்கொளண்டர்.... முடிவு சரிதான் என நான் நினைக்கிறேன்.

இதில் குற்றாவாளி.. குற்றம் செய்த மகனை கண்டிக்காமல் தப்பவிட்ட அவரது தந்தைதான் என நினைக்கிறேன்.

முதல் பதிவிலேயே எதிர்கருத்தா என நினைக்க வேண்டாம்.. நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள்


https://www.facebook.com/iamnandhaa