சனி, 30 மார்ச், 2013

வெயிலோடுப் போராடி ............

வெளியே செல்லவே அஞ்ச வைக்கும் வெக்கை. குளித்த சில நொடிகளில் வழியத் துவங்கும் வியர்வை, டெர்மி கூல், நைசில், பவுடர் போட்டாலும், வந்து வந்துப் போகும் வியர்க்குரு.வேலைக்கு, அவசியத்திற்கு,  என்று சென்று திரும்பி வீட்டின் உள்ளே செல்லும் நேரங்களில், உஷ்ணத்திற்கு கொடுத்ததுப் போக எஞ்சிய சக்தியோடு, தண்ணீரைக் குடித்து சற்றுத் தவிப்பாறுகிறோம்.

எந்த தேவாமிர்தமும் தீர்ப்பதில்லை தண்ணீருக்கான தேவையை.

இரவு எட்டு மணிக்கும் உஷ்ணத்தோட ஒழுகும் குழாய் நீர். இன்வெர்ட்டர் இருந்தும், இரண்டு காற்றாடிகளுக்கும் சேமித்த மின்சாரத்தைப்  பாய்ச்சினால், விரைவில் இரண்டுமே நின்று விடும் என்பதால்,
வீட்டில் உள்ளோரை ஒரே அறையில் தூங்க செய்கிறது மின்சாரத்தின் இருப்பு. மேலிருந்து வீசுகின்றக் காற்று கக்கும் அனலில், சிரமப்பட்டு வருகிறது உறக்கம். சில நிமிடங்களில், காற்று நேரடியாகப் படாத  பாகங்களில் உள்ள கசகசப்பை உணர்ந்தவுடன், சிறிய விழிப்பு. அதற்கேற்றார் போல, புரண்டுப் படுத்தால், மீண்டும், அதேத் தொடர்கதை, விடிய, விடிய.
கண் எரிச்சலோடு, பொழுது ஆரம்பமாகிறது.
அக்கினி நட்சத்திர வெயிலோ என்று அஞ்சும் அளவு, சதா உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது சூரியன் மறைந்த பிறகும் வெளுத்து வாங்கும்  பகல் நேர வெயிலின் தாக்கம்.அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள மரங்களும், அசைய தெம்பில்லாத சிலை போல  பகல், இரவு என்ற பாரபட்சம் இல்லாமல் நிற்கின்றன.

வெகு முன்னதாகவே வந்த வெயில் காலம், அதேப் போல முன்னதாகவேப்  போயும் விடும், மழையும் பெய்யும் என்ற நம்பிக்கை மட்டுமே வெயிலால் வாடாமல், வதங்காமல் உள்ளது; ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறது.


4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

வெகு முன்னதாகவே வந்த வெயில் காலம், அதேப் போல முன்னதாகவேப் போயும் விடும், மழையும் பெய்யும் என்ற நம்பிக்கை மட்டுமே வெயிலால் வாடாமல், வதங்காமல் உள்ளது; ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறது.

அருமை. எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வாழ்த்துகள்.

எல் கே சொன்னது…

YEs summer is bit harsher this time

பெயரில்லா சொன்னது…

hmm nice one :)

லோகன் சொன்னது…

வாசிக்கும் பொழுது குளிரிலும் வியர்க்கின்றது